மஞ்சள் மலரே 5

கை தட்டிக் கொண்டு வந்த மூர்த்தியின் கைகள், வளவனின் முறைப்பில் தட்டுவதை நிறுத்திக் கொண்டன.

“அங்கிள், நீங்க கை தட்ற அளவுக்கு இங்க எதுவும் நடக்கல ! எதுக்கு இந்த கை தட்டு?” எனச் சீறியவனைக் கண்டு சிரித்தவர், ” என்ன பேசற வளவா ! எவ்வளவு அழகா பேசி, நச்சுனு பதில் சொன்ன இந்தப் பிள்ளைய பாராட்ட வேணாமா? இதுக்கு முன்ன உனக்கு யார்னு கொஞ்சமும் அறிமுகம் இல்லாத பொண்ணு, உன்னை பத்தி சரியா சொன்னதும், எனக்கு “சபாஷ்” தான் போட தோணுச்சு… இந்த மாதிரி பொண்ணு தான் வேலைக்கு வேணும் வளவா ” என்று வளவன் முன் அவளை புகழ அவனுக்கு எரிச்சலாக இருந்தது .

“இந்தப் பொண்ண செலக்ட் பண்ணிட்டீங்களா என்ன?” என இருவரையும்  பார்த்துக் கேட்டார்.

“செலக்ட் பண்ணலாமா வேணாமா  யோசிச்சிட்டு இருக்கேன் அங்கிள்” என புருவத்தை கீரிய படி சந்தேகமாகச் சொன்னவனைக் கண்டு வாயைப் பிளந்தாள் கமழி.

‘அடப்பாவி ! பண்ணலாமா? வேணாமா? யோசிக்கிறீயா? உண்மைய தான சொன்னேன். ஒருவேள ஓவரா பேசுறேன் இவள வேலைக்கு வைக்கணுமா வேணாமானு யோசிக்கிறானோ !  பேசியே காரியத்தை கெடுத்திடாத கமழி கொஞ்சம் அடக்கி வாசி !’ தனக்கு தானே எச்சரிக்கைச் செய்து கொண்டாள்.

“என்ன யோசிக்கிறீயா? ஏன் ஏன் இந்தப் பொண்ணுக்கு என்ன?  சரியா  தான பதில் சொன்னாள். அதுவும் உன்னை பத்தி அப்படியே சொன்னாளே.  எதுக்கு இந்தப் பொண்ண வேலைக்கு எடுக்க யோசிக்கிற?  இந்த பொண்ணு தான் அம்மாவ பார்த்துக்க ஏத்தப் பொண்ணு ! இல்ல… இந்தப் பொண்ணு வேணாம் சொன்னாலும் ஓகே தான். ஏன்னா நான் கூட்டிட்டு போய்  என் ஹாஸ்பிட்டல் இருக்க பேசண்ட்ட ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லி கொஞ்சம் காசு சம்பாரிப்பேன் சீக்கிரமா சொல்லுப்பா இவ வேணுமா? வேணாமா?”என வளவனை மடக்க எண்ணி அவ்வாறு பேசியவர்  கேள்வியோடு முடிக்க, அவனோ யோசித்தான். அவனை யோசிக்க விடாமல் , மேலும் மூர்த்தியே அவனிடம்” சரி விடு வளவா  ! உங்க  அம்மாக்கு பெஸ்ட்  அண்ட் காஸ்ட்லி டேக்கேரா பாரு  ! இந்தப் பொண்ண என் ஹாஸ்பிட்டல் வேலைக்கு வச்சிக்கிறேன் நீ வாம்மா” என்று அவள் கைபிடித்து தன் பக்கம் இழுக்க, ஏனோ அவனுக்கு  அது சுர்ரென்று இருந்தது. அவரது குத்தல் பேச்சி, கோபமேற அவருடன் வீம்பு  போராட்டத்தில் அவளது மறு கையை பிடித்து தன் பக்கமிழுத்து,  “இவளை தான் அம்மா பார்த்துக்க டேக்கேரா செலெகட் பண்ணிருக்கேன் நீங்க சம்பாரிக்க வேற ஆள் ரெடி பண்ணிக்கங்க” என்றான் அவளை மேலும் இறுக பிடித்து படி.

அவன் இழுத்த வேகத்தில் அவனது இடது பக்கம் நெஞ்சில் மோதி அவனை உரசி நின்றவள் வெகு அருகில் இருக்கும் அவன் முகத்தை விழியகற்றாமல்  பார்த்தாள். இன்னும் அவன் பிடி வலுவாக, அப்படியே இதயத்திற்குச் செல்லும் நரம்பின் வழியே அவளது இதயத்தை தொட்டு சென்றது ஓர் மெல்லிய வலிய உணர்வு.

அவளை கைக்குள் வைத்துக் கொண்டு ‘இவள் என்னவள்  என்பது போல இருந்தது அவன் கூறியது.  கூச்சத்தில்  நெழிந்தவள், “சா…. ர்”என்றழைத்தாள். ஆனால் அவள் வாயிலிருந்து காத்தை  தவிர வேறெதுவும் வரவில்லை. அவனோ ஒரு பெண்ணை கைப்பிடிக்குள் வைத்திருக்கிறோம் என்று கொஞ்சம் கூட உணராமல் மூர்த்தியிடம் உரிமை போராட்டாம் நடத்திக் கொண்டிருந்தான்.

அவரது கேலி சிரிப்பில் தன்னை உணர்ந்தவன், தன் கைச் சிறையில் இருக்கும் அப்பட்டாம் பூச்சியை பார்த்தான். இமைகள் படபடவென  அடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள். அவளது பார்வை அலையில் ஈர்த்துக்கொண்டு போனது போலுணர்ந்தான் அவன்.

இருவரின் ஜோடி பொருத்தத்தை கண்டுண்டவர்  அப்படி ஒரு நிகழ்வு  நிகழ்ந்தால் சந்தோஷம் தான் என்று எண்ணிக் கொண்டு ” வளவா   ” என அழைக்க, அதில் இருவரும் நினைவுக்கு வந்து பிரிந்து தள்ளி நின்றனர்.

“சரிப்பா ! நீயே இந்தப் பொண்ண வேலைக்கு வச்சிக்கப்பா. நான் வேற ஆள பார்த்துகிறேன்” என்று உதட்டை பிதுக்கியவர் கமழியின் புறம் திரும்பி, “உன் பெயர் என்ன மா?” என்றார்.

“கமழி”

“ம்ம்ம்ம் நல்ல பெயர் தான். இங்க பாரு கமழிமா, வளர நீ பார்த்துக்கற பேசண்ட்டானு நினைக்காம, உன் அம்மாவா நினைச்சி பார்த்துக்கணும்… ஏன்னா இங்க சிலர் அம்மாவாவை அம்மாவா பார்க்கிறது இல்ல, பேசண்ட்டா தான் பார்க்கிறாங்க நீயாவது அவளை  உறவா,  பார்க்கணும்மா !” என்றார் ஓர விழியால் அவனை பார்த்தபடி, அதற்கு அவனும் அவரை  தீயாக முறைத்துக் கொண்டு நின்றான். “அவங்க ஆழ்ந்த மயக்கத்துக்கு போயிருக்காங்க, அவங்களால நாம பேசறது கேட்க முடியும் நம்ம தொடுதல்ல  உணர முடியும். ஆனா அதுக்கு ஏத்த எந்த எதிர்வினையையும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் சலிப்படையாம முயற்சி பண்ணிட்டே இருந்தால் கண்டிப்பா பலன் உண்டும்மா. நீயாவது வளரை திரும்ப கொண்டு வருவனு நம்புறேன் மா” அவளுக்கு அறிவுரை வழங்கினார்.

“டாக்டர் சார், வளர அத்… அம்மாவ மீட்டுக் கொண்டு வர வேண்டியதுல என் பங்கு அதிகமாவே இருக்கும். முடிந்த வரை அவங்க நினைவு திரும்ப கிடைக்க முயற்சி பண்ணுவேன். நீங்க கவலையே படாதீங்க, இனி அவங்க என் பொறுப்பு” என்று இருவருக்கும் நம்பிக்கை அளித்தாள் கமழி.

“பொன்னிக்கா…!”  என யாழ்வளவன் குரலை உயர்த்தி அழைக்க,  அடுத்த நொடியே “தம்பி” என்ற அழைப்போடு உள்ளே வந்தார்.

“அக்கா ! இது தான் கமழி, அம்மாவை பார்த்துக்க வந்த கேர்டேகர், இவங்களுக்கு  அம்மா ரூம்ம காட்டுங்க” என்றான், “சரி தம்பி” என்றவர் அவளை கண்டதும் கண்கள் விரிய ஆச்சரியமாகப் பார்த்தார்.  அவளோ அவரைக் கண்டு அதிர்ந்தவள், தவிப்போடு  பார்த்து நின்றவள் ‘எங்கே தன்னை யாரென்று சொல்லி விடுவாரோ ‘ என்று பயந்தாள். ஆனால் அவர் சட்டென முகத்தை மாற்றிக் கொண்டார்.இதை அறியாதவன் கமழியிடம் “நீ எங்க அம்மா  ரூமலே தங்கிக்க”என்றான். அவளும் தலையாட்டி வைத்தாள். பொன்னி அவளை அழைத்துக் கொண்டு வெளியே  வந்தார். தனது  உடைமைகளை எடுத்துக் கொண்டு பின்னே நடந்தாள்.

இருவரும் வளரின் அறையை நோக்கி செல்ல, தன் பக்கத்தில் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்த  கமழியைப் பார்த்து புன்னகையுடன், ” பாப்பா ! நீங்க மறுபடியும் வந்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க நீங்களும் அம்மாவை அப்படியே விட்டுடுவீங்களோ பயந்துட்டேன்… நீங்க வந்ததைக் கண்டதும் நம்பிக்கை வந்துடுச்சி மா அம்மா திரும்பி வந்துடுவாங்கனு” என்று சிரித்து கொண்டே சொன்னார் பொன்னி.

“ரொம்ப நன்றிக்கா ! எங்க நீங்க என்னை பார்த்ததும் உண்மையை சொல்லிடுவீங்களோ பயந்துட்டேன். நல்ல வேளை நீங்க என்னை தெரிஞ்சவளா காட்டிக்கல !” என்றவளை கனிவோடு பார்த்தவர், “வளவன் தம்பி உங்களை கேர்டேக்கரா தானே சொல்லுச்சி அதிலே இருந்தே புரிஞ்சிகிட்டேன் மா நீங்க உண்மைய மறச்சி தான் உள்ள வந்திருக்கீங்க. உங்க  முகம் காட்டின தவிப்பை பார்த்தேன் மா  ! அதான் உங்கள தெரியாது மாதிரி இருந்துட்டேன்” என்றவரை விழிகளை விரித்துப் பார்த்தவள், “ரொம்ப நன்றிக்கா, ஆனா ப்ளீஸ் யார்கிட்டையும் நான் வளர் அத்தையோட அண்ணன் பொண்ணுனு சொல்லிடாதீங்கா !”என்றாள் இறஞ்சுதலாக

“சரிம்மா சொல்ல மாட்டேன்… நீங்க எதாவது காரணத்தோட வந்திருப்பீங்க ! நான் உங்களை நம்புறேன் மா. உங்களுக்கு என்ன உதவி வேணும்ன்னாலும் எங்கிட்ட தயங்காம கேளுங்க” என்றார். அதில் புன்னகைப் பூத்தவள், சட்டென உதிர்த்த தன் சந்தேகத்தை அவரிடம் கேட்டாள்.

“ஆமா அக்கா, அந்தம்மாவ காணோம் எங்க போச்சி? அந்தம்மா நினைச்சி பயந்துட்டே தான் வந்தேன். எங்க என்னை பார்த்ததும் உண்மையை சொல்லி வெளியே துரத்திடுமோனு பயந்தேன் க்கா. ஆனா அவங்க இருக்கிறது போல  தெரியலயே !” சுற்றியும் தேடிய படி வந்தவளை கண்டு சிரித்தவர், “அந்தம்மாவ , தம்பி ஊட்டிக்கு அனுப்பி வச்சிடுச்சி.நீ தைரியமா இரு பாப்பா, அவங்க இனி இங்க வரவே வரமாட்டாங்க” என்றதும் நெஞ்சில் கைவைத்து “அப்பாடா” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்

இருவரும் வளர் அறைக்கு வந்து விட்டனர்.  இருள் சூழ, சிறு வெளிச்சத்தில் கிடந்த வளரைப் பார்க்க கண்கள் அனிச்சையாகக் கலங்க ஆரம்பித்தன..

உடல் மெலிந்து நரம்புகள் தெரிய, உடல் வெளிறி போகக் கிடந்தார் வளர்மதி. அவர் நிலையை கண்டு கொதித்துப்போனவள் வேக வேகமாக கீழ இறங்கி, நேராக மூர்த்தியைக் காணச் சென்றாள்.

இன்னும் வளவனுடன் நின்று பேசிக் கொண்டு தான் இருந்தார் மூர்த்தி. அவரைக் கண்டு அருகினில் வந்தவள், அவரிடம், ” உண்மைய சொல்லுங்க. நீங்க போலி டாக்டர் தானே? அத்… அம்மாவை குணப்படுத்துறேன் சொல்லி இவரை நீங்க ஏமாத்தி காசு பார்த்துட்டு தான இருக்கீங்க… சொல்லுங்க நீங்க போலி டாக்டர் தான” என வளர கிடந்த நிலையைக் கண்ட ஆதங்கத்தில் மூர்த்தியிடம் சண்டைக்குப் போனாள்.ஆனால் சிறிதும் கோபம் கொள்ளாமல்  சிரித்துக் கொண்டு நின்றார். வளவனோ புரியாது மூர்த்தியை தான் பார்த்தான்.