மஞ்சள் மலரே 4

கமழியே செல்ல முடிவெடுத்த பின் கனிமொழியோ கனியமுதனோ அதற்கு தடையாக இல்லை. மாறாக அவளைப் பிரிய போகும் வேதனையில் தான் இருவரும் இருந்தனர்.

கமழி, இதுவரையிலும் அவர்கள் இருவருக்கும் தாயாகத்தான் இருக்கிறாள். காந்திமதியும் யாழ்மாறனும் குடும்ப சூழலுக்காகக்  கடுமையாக உழைக்க, அவர்கள் உடன் இல்லாத ஏக்கத்தை தன் தம்பி தங்கைக்கு கொடுக்காமல், அச்சிறுவயதிலும் அவர்களுக்குத் தாய் தந்தையாக மாறிப் போனாள். தாய் தந்தையைத் தேடாமல் “அக்கா”என்றே அவளைச் சுற்றி வந்தனர். தன் மகளின் பொறுப்புணர்வைக் கண்டு இருவரும் வியக்காத நாளே இல்லை.

அந்தப் பொறுப்புணர்வு அவளுடன் வளர்ந்து இன்று வரைக்கும் தந்தை தாயோடு சேர்ந்து தன் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறாள். ஆனாலும் கமழிக்கு திருமணம் செய்ய வேண்டிய நாள் வெகு விரைவில் இல்லை. அவள் திருமணமாகி வீட்டை விட்டுச் சென்று விட்டால், அந்தக் குடும்பத்திற்கு தன் உடலிலிருந்துமுக்கிய உறுப்பை இழப்பது போல தான் இருக்கும். ஆனாலும் மகளுக்கு ஒரு நல்ல காரியம் செய்யத் தானே வேண்டும் .

போன வருடம் அவளுக்குத் திருமணம் முடிக்க எண்ணி இருந்த வேளையில் தான், நாராயணனின் இழப்பு நேர்ந்தது. வீட்டை மீட்க வேண்டும் என்று கடைசியாக கூறிய வார்த்தைக்காக,  கூடுதல் பொறுப்பு  அவர் தலையில் விழ, வீட்டை மீட்க, பணத்துக்காக அழைந்து திரிந்தார். மகளின் திருமணப் பேச்சு எடுத்ததும் தடைப்படும் காரணத்தைத் தேட,  அது தன் தங்கை, தோழி என இருக்கும் வளருக்கு கொடுத்த சத்தியம் தான் நியாபகத்திற்கு வந்தது.

அது தான் காரணமோ என்று கூட எண்ணிப் பார்த்தார். அடுத்த வாரத்திலே சொந்த ஊர்காரர், தன் நண்பர், அவர் தன் மகனுக்கு சென்னையில் வேலை கிடைத்ததால் முதல் நாள் அவனுடன், அவன் பணிபுரிய போகும் அலுவலகத்திற்குச் செல்ல,  அங்கே வளர் மட்டும் அவளது கணவனின் புகைப்படம்  மாலையின்றி விளக்கின்றி இருந்ததை கண்டு வளரை அடையாளம் கண்டார். 

அவர்களின் புகைப்படத்தைக் கண்ட பின் அவர் மாறானிடம் வந்துச்  சொல்ல. தங்கை எங்கு இருக்கிறாள் என்று தெரியாத மாறனுக்கு தங்கை இருக்குமிடம் தெரிந்தது. நண்பரின் மகன் மூலம் கிடைத்த யாழ்வளவனின் அலுவலக விலாசத்தை வைத்து அங்கே சென்ற கதை நாம் அறிந்தது.

கமழிக்கு கல்யாணம் தட்டிப்போக காரணம் தான் கொடுத்த சத்தியம் தான் என்று எண்ண, தன் மகளுக்கு தங்கையின் மகன் தான் மணாளன் என்று விதி காட்டிய அடுத்தடுத்த நிகழ்வில் அறிந்துக் கொண்டவருக்கு ஆனந்தம் என்றாலும் மகள் மேல் சிறு பயமும் இருந்தது. அவள் ‘என்ன சொல்வாளோ?’ முதல் நாளே யாழ்வளவன் மேல் அவளுக்கு வெறுப்பு வந்ததை அவர் அறியாமலில்லை… ஆனால் கடவுள் போட்ட முடிச்சை என்ன செய்ய முடியும். வளர் குணமாகி வரட்டும் அடுத்து என்ன என்று பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

மகள் கிளம்ப தேவையானதை எடுத்து வைத்தவர், அவளுக்கு பிடித்த வடகமும் பூண்டு ஊர்காயும்  வைத்தவர், வளருக்கு பிடித்த லெமன் ஊர்காயையும் கொண்டு வந்து இது வளருக்கு பிடிக்கும் என்று கொடுத்தார்.

“அப்பாஆஆ… இதை எல்லாம் அத்தைக்கு கொடுக்கலாமானு தெரியல. கொடுக்கச் சொன்னா கொடுக்கிறேன் பா” என்று வாங்கி வைத்து கொண்டாள். வளர் என்றாலும் வளருக்கு என்றாலும் தந்தையின் முகம் பிரகாசிக்க, சுறுசுறுப்பாக ஓட, அவளுக்குள் எழுந்த அந்த சந்தேகத்தை கேட்டாள் கமழி “உங்களுக்கு அவங்களை அவ்வளவு பிடிக்குமா பா ! என்னை விட அவங்களை அதிகமா பிடிக்குமா? ” எனக் கேட்க, சிரித்தவர்,”அதை சொன்னா உனக்கு புரியாது, அந்த பாசத்தை உணர்ந்தால் தான் புரியும் கமழிமா.  உனக்கு எப்படி உன் தம்பி , தங்கைனா கொள்ள இஷ்டமோ அதை விட என் வளர் என்னோட உசுரு டா… !”என்றவர் “இரு இரு அப்பா வரேன்”என்று உள்ளே  சென்று இரண்டு நாட்குறிப்புகளுடன் வந்தார்.

“இதை வளர் கிட்ட படிச்சு காட்டு நீயும் படி அப்ப  இந்த அப்பாவோட பாசம் என்னானு புரியும் ” என்றார் கண்ணீர் துளிகளோடு. அவரைக் கனிவோடு பார்த்த கமழி அவர் தோளை அழுத்திவிட்டு உள்ளே,  அதைப் பத்திர படுத்தி வைத்தாள்.

“அப்றம் மருமகளே எங்க கிளம்பிட்ட ?”எனக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் செல்லக்கண்ணு. அவரைக் கண்டதும்  எந்த உணர்வையும் காட்டாது இருந்தனர் அக்குடும்ப உறுப்பினர்கள்.

அவருக்கு தண்ணீர் வந்து கொடுத்தார் காந்திமதி. மொடக் மொடக்  எனக் குடித்தவர், கமழியிடம் பதிலை  எதிர்பார்த்திருக்க, அவளோ விருப்பமின்றிச் சொன்னாள்.

“வேலை கிடைச்சிருக்கு மதுரைக்கு போறேன் மாமா” என்று பொய்யுரைத்தாள். மாறனுக்கு ‘ அப்பாடா ‘ என்று இருந்தது மகள் உண்மையைச் சொல்லாமல் விட்டதற்கு. உண்மையை சொன்னால் அவர் எதுவும் சதி திட்டம் செய்வார் என்ற பயம்.

“நீ எதுக்கு மா வேலைக்கு போயிட்டு?”

“வேலைக்கு போய் கொஞ்சம் உழைச்சாதானே உங்க கிட்ட இருக்க வீட்டை மீட்க முடியும் மாமா” என்றாள் கடுமையாக, ” நீ  மட்டும் ‘ உம் ‘ சொன்னால் அந்த வீட்டையே உன் பேருக்கு எழுதியே கொடுப்பேன். ஆனா நீ தான் வேணாங்கற”  என்று சலித்துக் கொண்டார் செல்லக்கண்ணு.

“அந்த ‘உம்’க்கு  பின்னாடி வெறும் வீட்டை எழுதித் தரும் நோக்கமிருந்தால் பரவாயில்லை, உங்க நோக்கம் வேறால இருக்கு மாமா”  என நக்கலுடன் சொன்னாள், ” என்னம்மா பண்றது, ஆதாயம் இல்லாம  தானம்  செய்ய  நானும் ஒன்னும் கர்ணன இல்லடி மா, சாதாரண மனுஷன். எனக்கு நீ எங்க வீட்டுக்கு மருமகளா வந்தால் , அந்த வீட்டை என் மருமகள் அதாவது உன் பேருல எழுதி வச்சு நான் அழகு பார்ப்பேன். அதுக்கு நீ தான் பிடியே கொடுக்க  மாட்டிறீயே ! ” என்றவரை  கண்டு பெருமூச்சு விட்டவள்.

“எண்ணி ஒரு வருஷத்துல வீட்டை மீட்டுடுவோம் மாமா. இப்போ நீங்க கிளம்புறீங்களா? ” என்றாள் வாசலைக் காட்டி.

“மருமகளே, இது என்ன பழக்கம்  வீட்டுக்கு வந்தவங்கள போகச் சொல்றது. இப்படி எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததும் நடந்துக்க கூடாதுடி மா”  என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

” வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கும் கந்து வட்டிக்காரனுக்கும் எனக்கு வித்யாசம் தெரியும் மாமா. கொடுத்த கடனை கேக்க வந்தவருக்கு என்ன மரியாதை கொடுக்கணுமோ அதை நான் சரியா தான் குடுத்துருக்கேன். ஒரு வருஷத்துல எங்க வீட்ட மீட்டுடுவோம் ! நீங்க நினைக்கிறது  நடக்காது”என்றாள் முடிவாக,

“அதையும் தான் பார்க்கலாம் ” என்று கிளம்பிவிட்டார். மாறனோ கொஞ்சம் மிரண்டு தான் போனார்.  அவர் முகத்தைப் பார்த்து அருகில் வந்த கமழி , “அப்பா, அவர நினைச்சி நீங்க பயப்படாதீங்க , அவர் நினைக்கற காரீயம் என்னைக்கும் நடக்காது” என்றாள்.

“நானும் அதை தான் மா வேண்டுறேன். எப்படியாவது வளர் குணமாகிட்டா போதும் அப்பறம் எல்லாம் சரி ஆகிடும். அந்த வீட்ட மீட்டுடலாம், இந்த செல்லக்கண்ணும்  தொல்லையும் இருக்காது ” என்று புலம்பினார். எல்லார் மனதிலும் அந்த வேண்டுதல் தான்.

செல்லக்கண்ணின் தந்தையும் மாறனின் தந்தைக்கு நிகர் பணக்காரர் தான், இருவருக்குள்ளும் சினேகிதம் இருக்கும் ஆனால் அவ்வளவு நெருக்கம் இல்லை…  நாராயணனின் வீடு ஏழத்துக்கு செல்ல செல்லக்கண்ணே  அதை வாங்கிக் கொண்டார், அவரிடம் இருந்து வீட்டை மீட்க  ஒரு வருடம் காலம் கேட்டார் மாறன். அவரும் கொடுத்தார், இணைப்பாக, ஒருவருடம் தாண்டி விட்டால் வீட்டை நான் என்ன வேண்டுமானாலும்  செய்வேன் என்று சொல்ல, மாறனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,  “வீட்டை இடிக்க கூடாது நீ நினைச்சா, உன் பொண்ண என் பையனுக்கு கட்டிக் கொடு”  என பேரம் பேசினார். செல்லக்கண்ணுக்கும் மாறனுக்கும் உள்ள முன் பகைக் காரணமாக தான் இந்த மிரட்டல். அவரும் வருடத்துக்குள் பணத்தை  திரட்டி மகளையும் மனையும் காப்பாற்ற நினைக்கிறார் நடக்குமா? அவர்  முயற்சி தான் நிறைவேறுமா?

தன் தம்பி தங்கையை அன்னையைக் கட்டி அணைத்து விடைபெற்றவள், மாறனுடன்  பேருந்து நிலையம்  சென்றாள். மாறனுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவரும் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டார். மகளை கண்கலங்கப் பார்த்தவர், நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தார்.

பிரிவு என்பது அவர்களுக்குள் புதிதல்ல தான் . ஆனால் மகள் போருக்கு அல்லவா போய் கொண்டிருக்கிறாள், தன்னை காப்பாத்த, வளரை காப்பாத்த, வீட்டை காப்பாத்த போராடப் போகிறாள். அதில் அவளுக்கு ஆபத்து வரலாம், இருந்தாலும்  மகள் போராடி வெற்றியுடன் திரும்பி வர எண்ணிக் கலங்கினார்.

காலையில் சென்னையில் இறங்கியவள் தோழியின் வீட்டில் தங்கிக் குளித்து உடை மாற்றி காலை உணவை முடித்து கொண்டு அவள் உதவியுடனே வளரின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு தான் இன்டர்வியூ இருந்தது.

இதுவரை பல பேர் வந்து போனார்கள் அவனுக்கு திருப்தியாக இல்லை.  அடுத்த வர இருக்கும் யாரையும் அவனுக்கு  பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனாலும் சரணின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த அறையில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தான்.

கமழியும், அறையின் வெளியே நின்று உள்ளே வர அனுமதி கேட்க, உள்ளே வர சொன்னான் சரண். தன்னைப் பற்றி விவரங்கள் அடங்கிய கோப்பையை நெஞ்சோடு பிடித்த படி உள்ளே வந்தாள்.

அவளை அமரச் சொன்னான். “உங்க  பெயர்?” எனக் கேட்க, “கமழி ” என்றாள். அப்பெயரைக் கேட்கவும், தன்  அன்னைக்கு மிகவும் பிடித்தமான பெயர் என்று உள்ளம் சொன்னது.   அடிக்கடி அவர் வாயில் சொல்லக் கேட்டிருக்கிறான். அதனாலே அவனுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிக்கும். அந்தப் பெயர் கொண்டவள் யாரெனப் பார்க்கும் ஆவால் லேசாகத் துளிர்விட்டாலும் அதற்கு இடம் தாராமல் வேலையில் கவனம் செலுத்தியவன் காதை மட்டும் தீட்டி வைத்தான்.

“உங்க ஃபைல்” என்றதும் அவள் நீட்ட பெற்றுக் கொண்டவன் அதைத் திருப்பிப் பார்த்தவன் புருவங்கள் முடிச்சிட  கேள்வியாக அவளை கண்டு”நீங்க படிச்சது பி.டேக் பூட் டெக்னாலஜி…  சம்பந்தமில்லாத இந்த வேலைக்கு ஏன் வரணும்?”

“மனசுக்கு நிம்மதி தர வேலைய பார்க்கணும்ன்ற எண்ணம் தான். காலேஜ் டேஸ்ல பார்ட் டைம் ஜாப்க்கு நிறைய வயசானவங்களுக்கு டேக் கேரா போயிருக்கேன். உறவுகள் உடன் இல்லாத போது அந்தப் புது உறவு மனசுக்கு இதம் தந்துச்சி. அது போல தான் இதுவும் ” என்றதும் யாழ்வளவன் அவனையும் மீறி அவளைப் பார்த்தான். ஆனால் அவள் அவன் புறம் திரும்பவில்லை.

“ஓகே நான் ரூல்ஸ் முதல்ல  சொல்லிடுறேன். வீட்லே ஸ்டே பண்ணி மேடம பார்த்துக்கணும். அவங்க பக்கத்திலே இருந்து கவனிச்சுக்கணும். வெளியப் போகணும்னா சொல்லிட்டுப் போகணும். அனாவசியமா சொந்தம்னு சொல்லிட்டு யாரையும் வீட்டுக்கு கூடிட்டு வரக் கூடாது. இங்க இருந்து எந்த விஷயமும் வெளியப் போகக் கூடாது. நீங்க எக்ஸ்பேட் பண்றதுக்கும் அதிகமாகவே சாலரி உங்க அக்கெளண்ட் கிரெடிட் ஆகிடும். ஆனால் அதுக்கு தகுந்த மாதிரி வேலையும் நீங்க பார்க்கணும். இந்த வீட்ல வேற எந்த உரிமையும் நீங்க எடுத்துக்கக் கூடாது, குறிப்பாக யார்கிட்டையும் அதிகம் பேசக் கூடாது இதான் ரூல்ஸ்” என்றிட தெளிவாகக் கூறினான் சரண்.

“எல்லா ரூல்ஸூம் ஓகே தான். ஆனா அது என்ன யார் கூடயும் பேச கூடாதுனா என்ன அர்த்தம்?”

“வாய மூடிட்டு வேலைய மட்டும் பார்க்கணும் அர்த்தம் ” என்று இடை புகுந்தான் யாழ்வளவன்.

“வாய மூடிட்டு வேலைப் பார்க்க, நான் மிஷின் இல்ல மிஸ்டர்…  நான் மனுஷி. நீங்க தட்டுன்னு  தட்டுனு தட்டுனாலும் வாய மூடிட்டு சொன்ன வேலைய செய்ற மடிக்கணினியா என்னையும் நினைக்காதீங்க.  நான் உங்கள போல மிஷினே கதினு வாழ்ந்தவ இல்ல… என் வாய அவ்வளவு சீக்கிரம் மூட முடியாது.ஸோ நான் பேசுவேன் இங்க இருக்க எல்லார் கிட்டையும் பேசுவேன்…  முக்கியமா கோமா பேசஷண்ட் கிட்டையும் நிறைய பேசுவேன். சும்மா, உங்களை மாதிரி  வெறிக்க வெறிக்க அவங்கள பார்த்துகிட்டா மட்டும் அவங்களுக்கு நினைவு திரும்ப வந்திடுமா என்ன? அவங்கிட்ட பேசணும். பேசினாத்தான் அவங்களால உணர வைக்க முடியும். அவங்க உணர்வ தூண்ட பேசினாத்தான்  முடியும். அண்ட் அவங்கள பத்தி எனக்கு தெரியாது, ஸோ இங்க வேலை பார்க்கிறவங்க  கிட்ட பேசித் தான் அவங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது எல்லாத்தையும்  தெரிஞ்சக்க முடியும். அதுனால இந்த ரூலஸ என்னால பலோவ் பண்ண முடியாது.  அண்ட் பேசாம இருக்கிறது கூட அவங்க க்யூர் ஆகாம போறதுக்கான ட்ரா பேக் இருக்கலாம்… நீங்க பேசாத கணினியோட காலம் தள்ளுன்னா, எப்படி உங்க அம்மா கோமால இருந்து  வெளியே வருவாங்க… டேக்கேரா வந்த எங்களை நம்பி உங்க அம்மா விடுறீங்க, அது உங்க சிட்டுவேசன். ஆனா நீங்க அவங்க குணமாக எவ்வளவு தூரம் எப்ஃபோர்ட் போட்டீங்க மிஸ்டர்…? அவங்க குணமாகாம இருக்க நீங்களும் தான் முக்கிய காரணம். நீங்க இவ்வளவு தூரம் சம்பாதிக்கறது எதுக்கு? என்னைப் போல கேர்டேக்கருக்கும் ட்ரீட்மெண்ட்க்கும் பணம் குடுக்கத் தான் போல , ஸோ உங்க அம்மா மேலே நீங்க வச்சிருக்க இந்த ஸோ கால்ட் அன்பு அவங்களை பழைய  நிலைமைக்கு திரும்ப விடாது. ஸோ நீங்களும் உங்க அம்மா கோமால இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்யணும்” என்று படபடவென்று  மருத்துவர்  போல சிறிதும் பயமின்றி  மனதிலுள்ள ஆதங்கத்தைக் கொட்டிவிட்டாள்.

சரண் வாயைப்  பிளந்த படி அவளை பார்த்தவன் தன் முதலாளியைப் பார்க்க, அவனோ அவளை விழியாகற்றாமல்  பார்த்தான்.

 வேலையே கதி என்று இருக்கும் யாழ்வளவனுக்கு அவன் அன்னை அவன் மேலுள்ள கோபத்தைக் காட்டி

அவனிடம் பொறிந்து தள்ளின நாட்கள் நினைவுக்கு வர, கண்கள் தானாக கலங்கின.

அவளைப் பார்க்க தன் அன்னையே எழுந்து வந்து தன்னை கடிந்தது போல எண்ணினான். எதுவும் பேசாமல் தன்னையே வெறிக்கும் அவனது  பார்வையைத்  தாளாமல் தலைக் குனிந்து அவள் அமர்ந்திருக்க, இரு வலிய கரம் அவள் பேச்சை கேட்டு கைதட்ட, அதில் சுயம் பெற்றவன் யாரென திரும்பிப் பார்த்துவிட்டு முறைத்தான்.