மஞ்சள் மலரே 3

காலை வேளையாக யாழ்மாறன் தேநீருடன் செய்தித்தாள் வாசிப்பது பழக்கம். இன்றும் கூட அந்தச் சுவைநீரைப் பருகிக் கொண்டே செய்திகளை வாசித்தவரின்  கண்ணில் யாழ் குரூப்ஸ் ஆப் கம்பேனி என்ற எழுத்துக்கள் தென்பட,  அச்செய்தியை வாசித்தார்.

அச்செய்தியில்’ வளரைப் பற்றியும் வளரை உடனிருந்து கவனித்துக் கொள்ள நர்ஸ் அல்லது டேக்கேர் தேவை என்றும் வீட்டிலே தங்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று செய்தி இருந்தது. ‘வளரை  உடன் இருந்து பார்த்துக் கொள்ள  கூட அங்கே ஆள்  இல்லை’ என்றவர் வருந்த, காந்திமதி கணவனின் வதனம் வாடி இருப்பதைக் கண்டு அவர் அருகே வந்து விசாரித்தார்.

” என்னங்க விடிஞ்சதும் அதுவுமா உங்க முகம் வாடி கிடக்கு ? என்னாச்சிங்க?” என்று அவரை உலுக்கிட, அவரிடம் செய்தித்தாளை நீட்டினார்.அவரும் அந்தச் செய்தியை படித்து கண்ணீர் வடித்தார்.

“என்னங்க இதெல்லாம் நம்ம வளர பார்க்க கூட ஆள் இல்லையா அங்க ? அவளுக்கு  சொந்தம் சொல்லிக்க நாம எல்லாரும் இருந்தும் இந்தக் கதியா அவளுக்கு? எனக்கு அவளை பத்தின விவரம் தெரிஞ்சதுல இருந்து வளர பார்க்கணும் கூட இருந்து அவள கவனிச்சிக்கணும் தோணுதுங்க ! பேசாம அந்தத் தம்பி கிட்ட போய் உண்மைய சொல்லி வளர இங்க கூட்டிட்டு வந்து பார்த்துக்கலாமாங்க”

என்ற மனைவியின் குமறல் தனக்குள்ளும் இருக்கிறது என்பது போல கரித்து கொண்டு வந்த  கண்ணீரை அடக்கினார்.

“எனக்கும் அந்த ஆசை இருக்கு தான் மதி. ஆனா அந்தத் தம்பி சொந்தம்னாலே அறவே வெறுக்குது.அதுவும் இல்லாம எங்க சொத்தை அபகரிக்க வந்துடுவாங்கனு வளரோட சொந்தத்தை எல்லாம் உள்ள விடாம பண்ணிட்டு இருக்கு அந்தம்மா ! இவங்கள கடந்து நாம வளர பார்த்துக்கறது கஷ்டம்மா”என்றவர் தன் இயலாமை எண்ணி வருந்தினார்.

“உண்மைய சொன்னால் கூட இந்த உலகம் நம்புறதில்ல. வளர பார்த்துக்க யார்  வருவா?! வர்றவங்க அவளை நல்லா பார்த்துப்பாங்களா?! சொந்தபந்தத்த போல கூட இருந்து பார்த்துப்பாங்களா? ஏன் இந்தத் தம்பி வளர் விஷயத்துல இப்படி பண்ணுதோ !” என்றவர் புலம்ப  மாறனுக்கு சட்டென மூளையில் மணி அடித்தது.

“மதி, நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே !”

” என்ன அது சொல்லுங்க” என்றார். ” இந்த வாய்ப்பு விடக் கூடாதுனு தோணுது  மதி. அந்தக் கேர்டேக்கரா நம்ம கமழிய அனுப்பினா என்ன? கமழி படிச்சிட்டு இருக்கும் போதே பார்ட் டைம் ஜாப் போறேன் வயசானவங்கள பார்த்துக்கற வேலைக்கு போனா தானே. அது போல வளர பார்த்துக்க அனுப்பி வைக்கலாமா? உனக்கு சரினுபடுதா?”

“எனக்கு தோணுச்சிங்க, ஆனா ஒரு வயசு பொண்ண எப்படி தனியா அங்க அனுப்புறது? அந்த தம்பி எப்படினு நமக்கு எப்படிங்க தெரியும்? யாரை நம்பி பிள்ளைய அனுப்ப?” பெற்றவளாக யோசிக்க, ”  எனக்கு வளரோட வளர்ப்பு மேல நம்பிக்கை இருக்கு  மதி. அந்தப் புள்ள நல்ல புள்ள தான்”

“சரிங்க, ஆனா அந்தம்மா பாப்பாவ உள்ள விடுமா? உங்களோட சேர்த்து பாப்பாவையும் பார்த்திருக்கும் எப்படி அவளை உள்ள அனுமதிக்கும்?”

“வேலை கேட்டு  தான் வந்திருக்கோம்னு பொய் சொல்லி சமாளிச்சி தான் உள்ள போகணும். நல்ல விஷயத்துக்குப் பொய் சொல்றது தப்பில்ல மதி”

“இதுக்கு உங்க பொண்ணு ஒத்துக்கணுமே”

“என் பொண்ண ஒத்துப்பா.  அவ கண்டிப்பா இதை அப்பாக்காக செய்வா. என் பொண்ணு தைரியமானவா அவ எங்க போனாலும் எந்த ஆபத்திலையும் போராடி வருவா எனக்கு நம்பிக்கை இருக்கு மதி” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே துயல் கலைய  முகம் அலம்பி வந்தவள் தந்தையின் அருகே அமர்ந்து அவர் தோளில்  தலையை சாய்த்து அம்மா ” காஃபி” என்றாள் கமிழி.

மகளின்  தலையை வருடி கொடுத்தவருக்கு நெஞ்சின் ஓரமாக சுறுக்கென்று வலியும் வந்தது மகளின் வாழ்க்கையைப் பணையம் வைத்து  தான் வளரை காப்பாத்தணுமா? என்ற எண்ணம் தோன்ற சின்ன வலியையும் உணர்ந்தார்.

“என்னப்பா பேசிட்டு இருந்தீங்க ரெண்டு பேரும்?”

“அதுமா…!” எனத் தயங்கியவர், பேப்பரை நீட்ட , அதை வாங்கி அந்தச் செய்தியை படித்தவள், தந்தையைக் காண. அவரோ  கெஞ்சுதலாகப் பார்த்து அவளது கையைப் பற்றினார்.

“என்னப்பா?”

“வளர பார்த்துக்க நீ போறீயா மா?” எனக் கெஞ்சவும், ” நானா ?” என்று அதிர்ந்தாள். “அப்பா !”

“எனக்கு வேற வழித் தெரியலமா? வளர வேற யார் பார்த்து கிட்டாலும் அவளை குணப்படுத்த முடியாது. உன்னால முடியும்மா”

“அக்கா ஒன்னும் டாக்டரோ கடவுளோ இல்லப்பா. வளர் அத்தைய அவளால மட்டும் தான் காப்பாத்த முடியும் எப்படி சொல்றீங்க?” என்று விஷயமறிந்து வந்தான் கனியமுதன்.

“அமுதா ! சொந்தத்த போல யாரும் கூட இருந்து பார்த்துக்க மாட்டாங்கபா. இத்தனை நாள் வேலைக்கு ஆள் போட்டுருந்தாங்களே வளர குணப்படுத்த முடிஞ்சதா? அதுவே கமழி போனால்  அத்தைன்னு நினைச்சி வளர கூட இருந்து பார்த்துப்பா !”

“ஆனா, ஏன் அக்கா பார்க்கணும் அவளுக்கு அது தலையெழுத்து இல்லப்பா ! அவள அங்க போய் கஷ்டப் படச் சொல்றீங்களா? இளையவளும் வந்தாள்.

” ஒரு உயிரைக் காப்பாத்த சொல்றேன் கனி. வளர் பாவம் டா. சொந்தம்  சொல்லிக்க நாம இருந்தும் அவ அனாதையா இருக்காள். அவளை குணப்படுத்த வேண்டியது நம்ம கடமை கனி !” என்றார்.

“வளர் வளர்  வளர்  எப்பையும் அவங்க தானா? பிள்ளைகங்கனு சொல்லிக்க நாங்க இருக்கோம் எங்களுக்கு செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குப்பா ! அக்காக்கு கல்யாணம் பண்ற வயசு வந்திடுச்சி, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குப்பா ! அதை விட்டுட்டு சுத்தமா நன்றியே இல்லாத  சுயநலவாதிகளை பத்திக் கவலைப் பட்டு அவங்களுக்கு போய் வேலைப்பார்க்க அனுப்புறீங்க… இவ்வளவு பெரிய பணக்காரங்களுக்கு செஞ்ச நன்றிக் கடன் மறந்து போச்சா? ஏன் உங்களை இத்தனை நாள் தேடி வரல? சொல்ல போனா அவங்களுக்கு உதவி பண்ண  போய் நீங்க இழந்தது தான் அதிகம். இல்லேன்னா நாம  இந்நேரம் இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போமா? அவங்க வாழ்க்கை நல்லா இருக்கணும் நீங்க இழந்ததெல்லாம் போதும், மறுபடியும் அந்தத் தப்ப பண்ணாதீங்க? அக்கா போக மாட்டாள். இந்த வீட்ல இருந்து  யார் போகவும் கூடாது” என்று இளையவன் உண்மையை அறிந்து உறக்கப் பேசினான். மாறனால் பதில் பேச முடியவில்லை. மகனின் பேச்சு ஓர் விதத்தில் சரியாக இருந்தாலும் வளரை அவர் இதுவரை அப்படி எண்ணவில்லை. தன்னுயிர் தோழி அல்லவா அவள்.

“நான் போவேன் ! ” அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காந்திமதிக்கு கோபம் தலைக்கேற அதை தன் பிள்ளைகளிடம் காட்டக் கூடாது என்று பொறுமையை கடைப்பிடித்தார் ‘மகள்  சென்றால் தான பயந்து கிடக்க வேண்டும் தானே சென்றால் தன்னுயிர் தோழியை உடனிருந்து பார்த்து கொள்ளலாம், அவர் பட்ட நன்றிக் கடனுக்கு இதை கூட செய்யவில்லை என்றால் என்ன உயிர்தோழி நான் ?’ என முடிவுக்கு வந்தவர், அதை அவர்களிடம் சொல்லியும் விட்டார்.

“அம்மா !” கனியமுதன் கத்தி விட்டான். “கத்தாத அமுதா !  நானே அங்க போறதா முடிவு பண்ணிட்டேன். என்னையாரும் தடுக்காதீங்க.உங்களோட அப்பா இருக்கார். உங்களை பொறுப்பா   பார்த்துப்பார். அத்தை மாமாவும்கூட இருப்பாங்க. கமழிக்கு அப்பா நல்லது செய்து வைப்பார் அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்க.  அப்படி நல்லது நடக்கும் போது கூப்டுங்க வந்து என் மகள மனசார வாழ்த்திட்டு போறேன்” என்றவரை மூவரும் என்ன எண்ணிருப்பார்கள் என்பது அவரவர் சித்தம்.

‘கட்டிய கணவர், பெத்த பிள்ளைகள் விடவா அந்த வளர் முக்கியம் அப்படி  என்ன செய்து விட்டார் அவர்? ‘ என்று அப்பாவும் அம்மாவும் சேர்ந்து’ வளர் வளர் ‘ அவரது நாமத்தையே சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்’ பிள்ளைகள் மூவரும் எண்ணாமலில்லை அதை கனி கேட்கவும் செய்தாள்.

“அப்படி என்ன மா செஞ்சுட்டாங்க அவங்க? ரெண்டு பேரும் வளர் வளர்னு அவங்க பேர சொல்லிட்டு இருக்கீங்க?! எங்கள விடவா அவங்க உங்களுக்கு முக்கியமா போயிட்டாங்க?!”

காந்திமதி உதட்டில் ஒரு விரக்தி புன்னகை, ” இந்த வாழ்க்கைய கொடுத்ததே அவ தான். அவ மட்டும் இல்லேன்னா, நான் உங்களுக்கு அம்மாவா இருந்திருக்க மாட்டேன் நீங்களும் எனக்கு பிள்ளையா  பிறந்திருப்பீங்களான்னு சந்தேகம் தான். காதலிச்சவரையே கைப்பிடிக்க, அன்பான மூணு முத்துக்களை கொடுத்து, போதும் போதும் பாசம் காட்ற குடும்பத்தை வரமா கொடுத்த சாமி அந்த வளர்.  அவளுக்கு ஒண்ணுன்னா நான் பார்க்காம இருந்தால் நான் தான் நன்றி கெட்டவ ! அதனால நானே போய் என் வளர பார்த்துக்கிறேன்” என்றவர் கணவனைப் பார்க்க ஓரு கண்ணில் பெருமை மற்றொரு கண்ணில் ஏக்கமும் நிறைந்திருந்தது.

மனைவியோ ! மகளோ ! யாரோ ஒருவர் சென்றால் தான் வளரை மீட்க முடியும். மகளைப் பிரிந்தாலும் மனைவியைப் பிரிந்தாலும் கூடுதல் வலி அவருக்கு தான். அதை விட வலி சுயநினைவின்றி படுத்திருக்கும் தன்னுயிர் தோழி வளரின் நிலை. அமைதியாக நின்று மனைவியின் கருத்தை அவர் மறுக்கவில்லை. அப்படியே நின்றார்.பெரும் அமைதிக்கு பின் கமழி எழுந்தாள்.

“அம்மா  நீங்க போக வேணாம், நானே போறேன்” என்றாள். தம்பி தங்கை இருவரும் ஏதோ சொல்ல வர தடுத்தவள், “அப்பாவ விட்டு அம்மாவாலையும் அம்மாவ விட்டு அப்பாவாலையும் இருக்க முடியாது.  நாம் மூணு பேரும் அப்பா கூட இருந்தாலும், அவரு அவங்கக் கூட இருப்பது போல இருக்காது. அதுனால நானே போறேன். அப்பா அம்மா உங்க வளர உங்கிட்ட நானே ஒப்படைக்கிறேன்” என இருவரையும் பார்த்து கூறினாள். மகளை கட்டிக் கொண்டனர் இருவரும்.

“அக்கா !” இருவரும் அவளை ஏக்கமாக பார்த்தனர். ” யாருக்காகச் செய்ய போறேன், இதுவரை எதுவுமே தனக்காக  செஞ்சிக்காம, ஆசைனு பட்ட எதையும் அனுபவிக்காம நமக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சவங்களுக்காக செய்யப்போறேன். எனக்கு இதுல பெருசா ஒரு கஷ்டம் இல்லடா !”தம்பியைப் பார்த்து கூறியவள், தங்கையிடம்” இனி நீ தான் என் இடத்துல இருந்து எல்லாத்தையும் பொறுப்பா  பார்த்துக்கணும் கனி ” என்றதும் கண்ணீருடன் தலை அசைத்தாள்.

“அப்பா நான் போறேன் உங்க வளர குணப்படுத்த என்னால முடிஞ்சத பண்றேன். என்ன அந்த அம்மா மீறி உள்ள எப்படி போறது தான் சந்தேகமா இருக்கு ?! மத்தப்படி  உள்ள போயிட்டேன்னா உங்க வளர, உங்க வளராவே கூட்டி வருவேன்” இருவர் கையையும் பற்றி வாக்குக் கொடுக்க, இருவரும் வாஞ்சையாக முத்தம் வைத்து கட்டிக் கொண்டனர்.

“மேடம் கிளம்பிட்டீங்களானு சார் கேட்க சொன்னார். உங்களுக்காக வெளிய கார் வெயிட் பண்ணிட்டு இருக்கு ! ” என்று சரண் சொல்ல சலித்து கொண்ட வைதேகி சிலைப்போல நின்றார்.

“மேடம்…  ப்ளீஸ் சாருக்கு தெரிஞ்சா என்னை தான் திட்டுவார். சீக்கிரமா கிளம்புங்க மேடம்” அவன் கெஞ்ச, ” திட்னா திட்டு வாங்கு டா ! அதுக்கு நான் போகணுமா? போக மாட்டேன் இங்க தான் இருப்பேன்” என்று அடம்பிடித்தார்.

“மேடம்…” என அவன் பேச வருவதற்குள் ஹாலில்” சரண்” என அவன் பெயரை அழைத்தான் யாழ்வளவன். சரணை விட முந்திக் கொண்டு போனார் வைதேகி.

“இப்போ ஏன் தம்பி எங்களை போகச் சொல்ற? நான் போயிட்டா, உன்னையும் யாழினியையும் யார் பார்த்துக்கிறது. பொம்பிள்ளைய தனியா விட்டு நான் போகவா?” என அக்கறை உள்ளவர் போல் கேட்டார். இதுவரைக்கும் அவளை ‘சாப்பிடியா ?’ என்று கூட கேட்டதில்லை.

‘ஆமா பார்த்து கிழிச்சாங்க ! பாப்பா பேர தவிர என்ன தெரியும் இந்த அம்மாவுக்கு ? வந்திருச்சி அப்படி பொறுப்பு பொன்னுலட்சுமி மாதிரி’என வாய்க்குள் மூணுங்கிக் கொண்டான் சரண்.

“எங்களை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க ஊட்டில இருக்க உங்க பிள்ளைக்குப் போய் துணையா இருங்க…” என்றான்.

“அதுக்கில்ல தம்பி… அண்ணியும் அண்ணனும் என்னை நம்பி தான் உங்களை விட்டுட்டு போயிருக்காங்க. உங்களுக்கு ஒரு நல்லது பண்ணாம நான் எப்படி தம்பி  அங்க போயிருப்பேன்?”என்றவரை நக்கல் சிரிப்புடன் பார்த்தவன், ” நீங்க எங்களுக்கு என்ன  நல்லது பண்ண நினைக்கிறீங்க எனக்கு தெரியும். உங்க அக்கறைக்கு நன்றி. இனி எங்களுக்கு அந்த அக்கறை தேவை இல்ல நீங்க போகலாம்”என்றான்.

“மாட்டேன் தம்பி நான் போக மாட்டேன், நான் இங்க தான் இருப்பேன்” என்றவளை கனல் கண்ணால் எரித்தவன்,” நீங்க செஞ்ச உதவிக்கு எங்க அப்பாவோடவே அந்த நன்றிக் கடன் முடிஞ்சது. உங்க சொந்தமே வேணாம் துரத்த எத்தனை நேரம் ஆகும் எனக்கு? எங்க அம்மாக்காக உங்களை விட்டு வச்சிருக்கேன். இன்னமும்  மாட்டேன் சொன்னீங்கன்னா பழைய ஓட்டு வீடு நியாபகம் இருக்கும் நினைக்கிறேன்” என்றதும் ‘ இனி பேசி உள்ளத்தையும் கெடுத்துக் வேண்டாம் ‘ என்று எண்ணியவர் நமக்கு சமயம் கிடைக்காமலா போய்விடும்’ என்றெண்ணிக்கொண்டு வாயை மூடி விட்டு மகளோடு ஊட்டிக்  கிளம்பினார்.

மறுநாள் யாழ்வளவன் முன் அமர்ந்திருந்தாள் கமழி. எந்த முகத்தை வாழ்நாளில் காணக் கூடாது என்று எண்ணிவைத்திருந்தாளோ அதே முகத்தை இனி தினமும் காணப் போகிற வெறுப்பு அவள் முகத்தில் பிரதிபலித்தது  .