மஞ்சள் மலரே 2

“அப்பா” என அவரைத் தாங்கிப் பிடித்தாள் கமழி. அவருக்கு லேசான தலைச் சுற்றல் தான். தன் கைபைலிருந்து  நீர் குப்பியை வேகமாக எடுத்தவள் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்மாறனை நீர் அருந்த வைத்தாள்.

இதையெல்லாம் யாருக்கோ நடப்பது போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வைத்தேகி சலிப்புடன் ‘இந்த நாடகம் எப்போது முடியும் இவர்கள் எப்போது இடத்தை காலிப் பண்ணுவார்கள்?’ என்றே மனதிற்குள் எண்ணிய படி நின்றார்.

கமழி, அவர் நெஞ்சை தடவிக் கொடுத்து “அப்பா ! “என்ற அழைக்க அதில் சிறு பதற்றம் தென்பட்டத்தை உணர்ந்தவர் மகளின் கையை அழுத்தி, “எனக்கு ஒண்ணுமில்ல மா கொஞ்சம் தலைச் சுத்திடுச்சி ! நீ பயப்படாத ” என மகளைச் சமாதானம் செய்தார். கண்களில் தேங்கிய வலியோடு, “வளர் எப்ப மா இறந்தா ?”வைதேகியை பார்த்துக் கேட்டார்.”ஒரு வருஷம் ஆச்சிங்க” என்றார் கடனுக்கே.

“அப்போ மாமா?” என்றவர் வளரின் கணவனைப் பற்றிக் கேட்க, “பச் அண்ணனும் அண்ணியும் ஒரு கார் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. ஆமா அவங்கள பத்தி கேள்வி கேக்கறீங்களே நீங்க யாரு?”

“நான் வளரோட அண்ணன் மா” என்றார் கண்ணீரைத் துடைத்து படி. வைதேகியோ திகைத்து நின்றார். ‘ எது அண்ணனா ? ஆத்தி ! மருமக புள்ளைய வளைச்சிப் போட்டு இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி ஆகிடலாம் பார்த்தால், வளரோட சொந்தம் சொல்லிட்டு புதுசா மொளச்சி  வராணுங்க. வளருக்கு அண்ணனா வளவன் தம்பிக்கு  தாய்மாமன் முறையில. இது அவரோட பொண்ணு போலையே.  அழகா வேற இருக்காளே ! அப்போ முறைனு சொல்லி கட்டிக் கொடுத்து சொத்தை எல்லாம் அபகரிச்சிடுவாங்களோ !’ வைதேகியின் கற்பனைக் குதிரை தரிகெட்டு ஓடியது.  “வளருக்கு  அண்ணனா? வளருக்கு  சொந்தம்னு சொல்லிக்க  எங்களைத் தவிர யாருமில்ல. நீங்க வீடு மாறி எதுவும் 
வந்துட்டீகளா?” எனக் கேட்டவரின் திருட்டு முழியே கமழிக்கு எடுத்துரைத்தது அவருக்கு சொந்தம் சொல்லிக் கொண்டு வந்தது பிடிக்கவில்லை என்று.

“இருக்கலாம் மா ! அத்தை இருப்பாங்கனு நம்பி வந்துட்டோம். ஆனா அவங்க இல்ல, புரிஞ்சது தவறான முகவரிக்கு தான் வந்திருக்கோம்னு  ரொம்ப நன்றிங்க.  அப்பா வாங்கப்பா போலாம்” தந்தையை அழைக்க, ” இல்லம்மா நாம வளரு…” என்று உண்மையைச் சொல்ல வந்தவரை தடுத்து நிறுத்திய கமழியோ, ” அப்பா ! நாம தான் அடர்ஸ் மாத்தி வந்திருக்கோம். இது இப்போ உங்க வளரோட வீடு  இல்லப்பா வாங்கப் போலாம்” என்றவள் அதற்கு மேல் நிற்காமல் வைதேகியை அற்பமாகப் பார்த்து விட்டுத் தந்தையை பிடித்தப் படி நடந்தாள்.

‘நல்ல வேள வேற வீடுனு சொல்லி ஏமாத்திட்டோம் அதுங்கள.  இல்ல  இதுங்களும் இங்கன டேரா போட்டு சொத்துக்கு பங்கு கேட்டு வரதோட மருமகப் புள்ளைய  வளைச்சி போட்டுடுங்க.  அதுக்கு அப்றம் நானும் என் பசங்களும் தெருவில தான் திரியணும். கொஞ்ச நேரத்தில தலை வலிய வர வச்சிட்டாங்க சப்பா !’ தலையைப் பிடித்து கொண்டு உள்ளே சென்றார்.

“ஏன் மா என்னைப் பேச விடாம தடுத்த? நாம வளர் என்ன அனாதையா? நாம இருக்கும் போது. அந்தம்மா கிட்ட நாம வளருக்கு யார்னு சொல்லிருக்கணும்மா !”  என்றவரை கசந்த முறுவலுடன் பார்த்தவள்,

“சொன்னா மட்டும் நம்பிடுவாங்கனு நினைக்கிறீங்களா ப்பா ! நீங்க வளரோட அண்ணன் சொன்னதும் அந்தம்மா முகம்  போன போக்கை நீங்க பார்க்கல எங்க சொத்துல
பங்கு கேட்டு வந்திடுவாங்களோன்ற பயத்துலே நம்ம கிட்ட வளர் அத்தைக்கு யாருமில்லனு சொல்லி நம்மள ஏமாத்திட்டாத நினைக்கிறாங்க ப்பா ! நமக்கு இந்தச் சொத்தும் வேணாம் சொந்தமும் வேணா வாங்க போலாம்” என்று நடக்க ஆரம்பித்தாள்.

அவரும் மகளின் பேச்சை ஏற்றுக் கொண்டு அவளுடன் நடந்தார். இருவரும் கேட்டை நெருங்க “பாப்பா ! ” என்று அழைத்த படி ஒரு பெண்மணி கமழியை நோக்கி ஓடி வந்தார்.  தந்தையும் மகளும் அவரைப்  பார்த்து நின்றனர்.

“அந்தம்மா கிட்ட  நீங்க பேசிட்டு  இருந்தத கேட்டேன். நீங்க தான் வளர் அம்மாவோட அண்ணனா ?” என்று யாழ்மாறனை பார்த்துக் கேட்டார். அவரோ மகளைப் பார்த்து விட்டு ‘ஆமாம்’ என்றார்.

“வளர் அம்மா இறக்கலங்கயா ! இந்தம்மா வரவங்க போறவங்க கிட்ட
 அப்படித் தான் சொல்லிட்டு இருக்கு. ஆனா எங்க வளர் அம்மா உயிரோட தான் இருக்காங்க…”என்று வடிந்த கண்ணீரை முந்தானையால் துடைத்தப்படி கூறினார்.

அவர் கூற அதிர்ந்தவர்கள் இன்ப அதிர்ச்சியோடு “என்ன வளர் உயிரோட தான் இருக்காளா? நான் அவள பார்க்கணும். எங்க இருக்கானு சொல்லுங்கமா நாங்க அவள பார்த்துட்டு போயிடுறோம்” என யாழ்மாறன் அவரிடம் கெஞ்ச,.

“இல்லங்கயா வந்து… அம்மா இப்போ கோமால இருக்காங்க. நடந்த ஆக்சிடெண்ட்ல ஐயா இறந்துட்டார். அம்மா கோமாக்கு போயிட்டாங்க. அவங்கள பார்க்கறது ரொம்ப கஷ்டங்கயா ! இந்தம்மா இருக்குற வர அம்மாவோட சொந்தம் சொல்லிட்டு வர யாரையும் உள்ள விடாதுங்கயா? சின்ன ஐயாவும் முன்னாடி போல இல்ல ரொம்ப கோவமா இறுக்கமா இருக்கார். எங்க அம்மா எங்களுக்கு பழைய படி கிடைக்க நாங்க எல்லாரும் வேண்டிட்டே இருக்கோங்கயா. நான் சொன்னதா யார்கிட்டையும் சொல்லிடாதீங்கயா ! எங்க நீங்களும் அவங்க சொன்னதை நம்பிடுவீங்களோ பயந்து தான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்” என்று அழுது கொண்டே அவ்விடம்  விட்டு அவர் நகர்ந்தார்.

பரந்து விரிந்து கிடந்த இந்த வீட்டில் தான் வளர் எங்கோ இருக்கிறாள் என்று அலைந்த கண்கள்  கண்ணீரை வடித்தன.

‘ உனக்கா வளரு இந்த நிலமை வரணும். யாருக்கும் நீ மனசறிந்து துரோகம் பண்ணதில்லையே உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? நீயும் நானும் ஓடி களைத்து விளையாடின வீட்டை மீட்க முடியாதவனா,  நீயாவது அந்த வீட்டை வாங்குவேன் உன்னை நம்பி வந்தேன். உன்னை பக்கத்துலே இருந்து கவனிச்சிக்க முடியாத பாவியா நிக்கிறனே ! ‘ மனதிற்குள் மருகினார். அவர் கண்ணீரைத் துடைத்த விட்ட கமழி. “அப்பா வாங்க போலாம்”என்று கூட்டிக் கொண்டுபோனாள்.
இருவரும் மீண்டும் தங்கள்  ஊருக்கே பயணப்பட்டனர்.

யாழ்மாறன், மதுரையை அடுத்த சிறு கிராமத்தில் வசித்து வருகிறார். அக்கிராமத்தில் பெண்களை வைத்து வீட்டுலே அனைத்து வகையான மசாலா பொடிகள் தயாரித்து தங்களை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மதுரையிலுள்ள சில கடைகளுக்கும் விற்பனைச் செய்து வருகிறார் . பெண்களின் கை வண்ணத்தில் இயற்கை முறையில் இந்த மசாலா பொடி வகைகள் தயாரிக்கப்பட, அவ்வூர் மக்களே சிலர் விரும்பி வாங்கிச் செல்வார்கள்.

அப்பெண்கள் அனைவருக்கும் தலமை தாங்கி நிற்பது காந்திமதி தான் யாழ்மாறனின் மனைவி. அவர் கொடுத்த திட்டத்தின் படி  சிறு தொழில் போல ஆரம்பித்து இன்று கொஞ்சம் விருட்சமாக கிளை விட்டிருக்கிறது. ஆண்டவன் புண்ணியத்தில் தொழில் நன்றாகத் தான் செல்கிறது. யாழ்மாறனின் மொத்த குடும்பமும் சேர்ந்து தூணாகப் பிடித்து தொழிலை உயர்த்த பாடுபடுகின்றனர்.

யாழ்மாறன் காந்திமதி தம்பியருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள், கமழி, இளையவள் கனிமொழி, கடைசியானவன் கனியமுதன். மூவரும் தங்கள் தொழிலுக்கு சம்பந்தப்பட்ட துறையை எடுத்து படித்து முடித்தவர்கள் வேலைக்குச் செல்லாது தங்கள் தொழிலையே பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

யாழ்மாறனின் தந்தை நாராயணன்  மிகப் பெரிய செல்வந்தர். பல தலைமுறையாக கட்டிக் காத்த சொத்துக்கள் ஏராளம் அதற்கு எல்லாம் ஒரே வாரிசு யாழ்மாறன் தான். ஆனால் வளரின் திருமணத்தை நிறுத்தி அவள் மனதுக்கு  பிடித்தவனுடன் கல்யாணம் செய்து வைத்தது சென்னைக்கு அனுப்பி வைத்தார் யாழ் மாறன். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து ஊர் சனத்தை எல்லாம் அழைத்திருக்க,  மறுநாள்  கல்யாணம் என்ற ரீதியில் அனைவரும் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டிருக்க. யாழ்மாறன், வளரை அவள் காதலித்தவனோடு இரவோடு இரவாக அனுப்பி வைத்தார்.  கல்யாணம் நின்று போக, நாராயணன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் யாழ்மாறனை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்.  கோபத்தில் சொத்தை எல்லாம் தன்  மூத்த மருமகன் நாகராஜ் பெயரில் எழுதி வைத்து விட்டார். அவரோ பொறுப்பில்லாமல் குடி கூத்து என சொத்தைக் கரைக்க,  வீடு மட்டுமே மிச்சமாக இருந்தது. அவர் வாங்கிய கடனால் அதுவும் மூழ்க்கப் போகிறது. சாகிற தருவாயில் இந்த வீட்டையாவது மீட்டுவிடு என்று மகனிடம் சொல்லி விட்டு இறந்தார் நாராயணன்.  தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றவே துடிக்கிறார் யாழ் மாறன்.

வீட்டின் மதிப்பு லட்சத்தில் இருக்க, மாறனால் பணத்தைத் திரட்ட முடியவில்லை. தொழிலை வைத்து வாங்கினால் கூட மேற்கொண்டு பணம் கண்டிப்பாக தேவைப்படும். அப்படியே மீட்டாலும் அதை வித்து தான் கடன் அடைக்க வேண்டும். வீட்டை மீட்க பணமும் இல்லாத பட்சத்தில்,  சென்னையில் வசிக்கும் தன் மருமகனும் வளரின் மகனுமான யாழ் வளவன் செல்வ செழிப்போடு இருப்பதாக தன் நண்பனின் மகன் மூலம் அறிந்தார். அவனும் யாழ்வளவனிடம்  தான் வேலை பார்க்கிறான். தான்  வேலை பார்க்கும் அலுவலக  முகவரியைத் தந்தான். அந்த வீட்டை வளராவது வாங்கிக் கொள்ளட்டும் என்றுவளவனிடம்  உதவி கேட்க தன் மகளோடு சென்றார்.

இருவரும் இல்லம் வந்து சேர்ந்தனர், காந்திமதி தன் கணவருக்கு  தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். நாகராஜ் ஆவலாக அவர் முன் அமர்ந்தார். கண்கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் போல எல்லாத்தையும் இழந்த பின்னே  திருந்தினார் நாகராஜ். பெற்ற ஒரு மகளும் காதலனோடு சென்று விட,  எல்லாம் இழந்து தனித்து நின்ற தன் அக்கா மாமா இருவரையும் தங்கள் ஊருக்கு அழைத்து வந்து  தங்களோடு வைத்துக் கொண்டார்.

“போன காரியம் என்னாச்சி  மாறா வளர பார்த்தியா?” எனக் கேட்டவர் மாறன்  கூறிய விஷயத்தைக் கேட்டு தலை கவிழ்ந்தவர்,” மன்னிச்சிடு மாறா ! நான் ஆடின ஆட்டத்துக்கு கடவுள் என் கால ஒடச்சிப் போட்டார். ஒன்னும் செய்ய முடியாத நிலையில உனக்கு பாரமா இருக்கேன். உங்க பூர்வீக வீட்டைக் கூட நான் விட்டு வைக்கல நான். உழைக்காத காசு உடல் ஒட்டாதுன்றது உண்மையாகிப் போச்சி.  நீங்க உழைச்சி சேர்த்த சொத்தை எல்லாம் அழிச்சிட்டேனே ! மாமாவோட கடைசி  ஆசைய கூட நிறைவேத்த முடியல. நான் இருந்தும் என்ன பயன்? தண்டத்துக்கு தான் இருக்கேன் மாறா !” என அவர் கண்ணீர் வடிக்க, “மாமா ! என்ன இது கொழந்த மாதிரி அழுதிட்டு. நீங்க தான் உங்க தவற உணர்ந்து திருந்தீட்டிங்களே ! இப்ப நீங்களும் உழைச்சி தான சாப்பிடுறீங்க… நீங்க எங்களுக்கு  உதவிய தான் இருக்கீங்க. நடந்ததையே நினைச்சிட்டு இருக்காதீங்க மாமா.  வீட்டை முடிந்தால்  மீட்கலாம். நீங்க பழச நினைச்சிட்டு இருக்காதீங்க, கண்டிப்பா அந்தக் கடவுள் ஒருவழி வச்சிருப்பான் ” என ஆண்டவனின் மேல் பாரத்தைப்  போட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டார்.

இங்கோ காந்திமதி மடியில் தலை சாய்த்தவள், நடந்ததை எல்லாம்  சொன்னாள். காந்திமதிக்கு வளரின் நிலமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருவரும் ஒரு காலத்தில் தோழிகள் அல்லவா !

“வளர ! கூட யாரு இருக்காங்களோ?  அவளை யார் பார்த்துகிறாங்களோ? நீ சொன்ன படி அந்தம்மா சொத்துக்கு ஆசைபட்டு வளர ஏதாவது பண்ணிடுமோ பயமா இருக்கு கமழிமா. எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்றவ  அவ. அவளுக்கா இந்த நிலம? பேச்சி மூச்சி இல்லாம, யாரும் கூடவும் இல்லாம அனாதையா கிடக்கிறாளே ! அவ தோழியா இருந்துட்டு என்னால ஒன்னும் பண்ண முடியாம இருக்கேனே !” என்று புலம்பிய காந்திமதியை அனைத்து ஆறுதல் உரைத்தாள் கமழி.

இங்கோ சில மருத்துவ உபகரணங்களோடு மெத்தையில் அசைவின்றி கிடந்தார் வளர்மதி.  அவரை பரிசோதித்த மருத்துவர் மூர்த்தியை தவிப்போடு பார்த்தான் யாழ்வளவன்.
வளரின் உடல் நலத்தில் எந்த  முன்னேற்றமும் இல்லை எப்படி கிடைந்தாரோ அப்படியே இருக்கிறார்.

“ஸாரி  வளவா ! உன் அம்மா அப்படியே தான் இருக்காங்க எந்த முன்னேற்றமும் இல்ல ” என்று  அவனது தோளை அழுத்தினார்.  “இன்னும் எத்தனை வருஷத்துக்கு இவங்க இப்படி இருப்பாங்க டாக்டர்? எங்க அம்மாக்கு நினைவு திரும்பவே திரும்பாதா? அதுக்கான ட்ரீட்மெண்ட் எதுவும் இல்லையா உங்க கிட்ட?” என வளர்ந்த சிறுவனாய் கேட்டான்.

“வளவா ! எல்லா விஷயத்திலும் மெச்சூரிட்டி பாயா நடந்துக்கற  நீ உங்க அம்மா விஷயத்துல ஏன் இன்னமும் சின்ன பைனா இருக்க ? கோமால இருக்கிறவங்களுக்கு,  அவங்க நினைவ கிடைக்க வைக்க ட்ரீட்மெண்ட்டால முடியாது. அவங்களுக்கு நினைவு திரும்ப நீ தான் அவங்க கூட இருந்து  தினமும் அவங்க யார்னு நியாபக படுத்திட்டே இருக்கணும். ஒவன் ஹாராவது அவங்கக்  கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும். ஒரு கோமா பேசண்ட் பார்க்காம அவங்களோட நார்மலா  பேசணும், அதுல மேபீ அவங்க நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கு.  ட்ரீட்மெண்ட்டால பாசிப்பில் ஆகும்  சொல்ல முடியாது. அவங்கள கவனிக்க ஆள் வைச்சா மட்டும் போதுமா வளவா , அவங்களையும் மனுஷியா  நினைக்கற மனசு வேணும் டா ! அது பணத்துக்காக வேலைக்கு வரவங்க கிட்ட கிடையுமானு தெரியாது. பெட்டர் நீ  மேரேஜ் பண்ணிக்க, உன் ஒயிப்பா வரவங்க கிட்ட அம்மாவை பார்த்துக்கச் சொல்லலாம். அவங்க காசுக்காக வேலைப் பார்க்க மாட்டாங்க… அம்மாவாக எண்ணி அவங்களை பார்த்துக்கற ஒரு நல்ல பொண்ண பார்த்து மேரேஜ் பண்ணிக்க… உனக்கும் உன் அம்மாவுக்கும் ஒரு புது உறவு கிடைச்சது போல இருக்கும் டாக்டரா இல்லாம ஒரு கார்டியானா சொல்லுறேன் கேட்டுக்கோ” என்று  அவனுக்கு அறிவுரை வழங்க, அவனுக்கோ அதில் சிறிது உடன்பாடிலில்லை.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட, வைதேகியோ உள்ளே வந்து அவர்கள் பேச்சில் மூக்கை நுழைத்தார். “நானும் அதான் சொல்றேன் டாக்டர். என் பொண்ண கல்யாணம் பண்ணிங்க தம்பி ! என் பொண்ணு உன்னையும் அண்ணியையும் பார்த்துக்கும் சொல்றேன் கேட்க மாட்டிங்கிது நீங்களாவது சொல்லுங்களேன் ” என்று வந்தவரை விழிகளால் எரிந்தான் வளவன்.

மருத்துவர் மூர்த்திக்கும் வைதேகியையும் அவரது குடும்பத்தையும் அறவே பிடிக்காது நன்றிக்கடனாக  உடன் வைத்து கொண்டிருப்பதாக வளவனின் தந்தைச் சொல்லக் கேட்டிருப்பதால் அவரால் எதுவும் சொல்ல முடியாது போனது. இன்றும் அப்படியே ! 

“சொல்றதை சொல்லிட்டேன் உன் இஷ்டம்” என்று அவர் நழுவிக் கொண்டார்.

“சரண்” என்ற அழைத்த மறுநொடியே அவன் முன் வந்து ” சார் “என்றான் .

“அம்மாவை பார்த்துக்க நர்ஸ் , டேக் கேர்…  யாரா இருந்தாலும் பரவாயில்ல, வீட்டோட இருக்கணும், சம்பளம் எக்ஸ்பேக்ட் பண்ற அளவை விட அதிகமாக  கொடுக்கிறோம்  சொல்லி ஆட் கொடு, இந்த வீக்குள்ள இன்டர்வியூ  வைத்து ஆள் செலக்ட்  பண்ணிருக்கணும்” என்று கட்டளையிட்டு செல்ல, வைதேகியோ தலையில் அடித்துக்கொண்டு போனார்.

மறுநாள் பேப்பரில் செய்தியைப் பார்த்த யாழ்மாறன், மகளிடம் அதைக் கட்டினார். அவளும் படித்துவிட்டு தந்தையைப் புரியாமல் பார்க்க, அவரோ கெஞ்சதலாக பார்த்து மகளின் கையைப் பற்றினார்.