பூ 6

பூ 6

“தேவா…. ஏய் புள்ள தேவா… சொல்லிட்டு போடி” என்று கத்திக்கொண்டு இருந்தாள் மேகலா

அவளின் கத்தலை சட்டைச் செய்யாமல் பஸ்ஸில் ஏற அவளை தொடர்ந்து ஏறிய மேகலா தேவாவை முறைத்தபடியே இறுக்கையில் அமர்ந்து தொனதொனத்தாள்.

இறுக்க கண்களை மூடித்திறந்தவள் “இப்ப ஏண்டி என் உயிரை வாங்குற? என்னதான் தெரியனும் உனக்கு? தெளிவா கேளு”

“எங்கடி கேக்க விடுற… எல்லா பக்கமும் கேட் போடுற… நான் கூப்பிட கூப்பிட காது கேக்காத மாதிரி போற… என்னையும் அறியாம சரியா கேட்டாக் கூட குழம்ப வைக்கிற” என்று மேகலா புலம்பினாள்.

“இப்போ என்ன குழப்பி விட்டேன்னு இப்படி புலம்புற!! நீ ஒன்னும் இல்லாத விஷயத்தை கிளறி கிளறி பெருசாக்குற” என்று  தேவாவின் வார்த்தைகள் எரிச்சலாய் வந்தது.

“ஏது இது சின்ன விஷயமா!?!” என்று வியப்பை காட்டியவள் “அதானே காலைல இருந்து உன் வாயில வார்த்தைய வாங்க முடியல!!! இப்படியே சத்தமா பேசி வாயடைச்சுடு” என்று மேகலா அலுத்துக் கொண்டாலும் தோழியிடம் உண்மையை தெரிந்துக் கொண்டே ஆகவேண்டும் என்று உறுதியுடன் இருந்தவள்.

“உன் மனசுல என்னதான்டி ஓடுது நீ காலைல பண்ண வேலைக்கு எங்க உங்க வீட்டுல என்னை ரவுண்டு கட்டு வாங்களோன்னு பீதியில இருக்கேன் புள்ள… ஒழுங்கா உண்மைய சொல்லு அந்த அண்ணன பார்த்து அவ்வளவு நேரம் பெயரை தான் கேட்டுட்டு இருந்தியா” என்று பஸ்ஸில் ஏறியதில் இருந்து கடுகடுத்தாள் மேகலா

“நான் உண்மையதான்டி சொல்றேன் நீ நம்பலனா அதுக்காக நான் என்ன பண்ண முடியும்… வேணும்னா உன் தலைல அடிச்சி சத்தியம் செய்யவா?? அவர் பெயரை மட்டும் தான் கேட்டேன்னு ” என்று அவள் தலையில் கையை வைக்கவும்

“ஆத்தா மகமாயி உன்னை என்னனு கேட்ட என் தலையிலையே கையை வைச்சி பொய் சத்தியம் பண்ணி என்னை பரலோகம் அனுப்ப பிளான் பண்ணுரியா!!! போதும்டி உன் சங்காத்தம் இனி என்னன்னு கேட்டேனான்னு பாரு” என்று விழுந்தடித்துக் கொண்டு எட்ட போனவளை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள் தேவா. அதே நினைப்புடன் இதழில் தோன்றிய சிறுநகையுடன் இல்லம் வந்து சேர்ந்தாள்.

“அம்மா” என்று அழைத்தபடி மான்குட்டி கணக்காய் துள்ளி வந்தவளை பார்த்த மரகதம் “ஏய் மெதுவா மெதுவா நடந்து வாயேன்டி… இப்படி துள்ளிக்கிட்டு வரவ.. பொண்ணுண்ணா அடக்கமா இருக்கனும் இப்படி அவுத்து விட்ட கன்னுக்குட்டி கணக்கா வர… இப்படியேதான் வீதியிலும் வந்தியா” என்றார் படபடவென

“அட என் மரகதமே” என்று அவரை வழித்து திருஷ்டி கழித்தவள் “எங்க இருந்து தான் என் அப்பா உன்னை தேடி புடிச்சு கட்டிக்கிட்டு வந்தாரோ?? எதுக்கு எடுத்தாலும் ஒரு குறை சொல்லுற” என்று அலுத்து கொண்டாள்.

“வாய்கொழுப்பு டீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ… உங்க அப்பாரு என்னதான் கட்டிக்கனும்னு நடையா நடந்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தாரு…. உன் வாயிலையே நாலு இழுத்தா எல்லாம் சரியா போகும்… நான் சொல்றது எல்லாம் இப்போ கசக்கத்தான் செய்யும்… நீ விழுந்து வாரி கால கைய்ய உடைச்சிக்கிட்டு வந்து நிக்கும்போது இவ எதுக்கு சொல்றான்னு தெரியும் அப்போதான் நீயும் அடங்குவ” என்று அவள் முகவாயிலையே ஒரு இடி இடித்தவர் “காபி போட்டு வைச்சிருக்கேன் முகத்தை கழுவிக்கிட்டு டிரசை மாத்திக்கிட்டு போய் காப்பிய குடி” என்று அவளை விரட்டி விட்டு கணவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார் மரகதம்.

மனையாளை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் சீக்கிரமே வீடு திரும்பி இருந்தார் சௌந்தரலிங்கம். கணவரை கண்டதும் “ஏய் புள்ள தேவா தேவா அப்பா வந்துட்டாரு கொஞ்சம் தண்ணீ கொண்டு வா” என்று குரல் கொடுத்துவிட்டு “என்னங்க ரொம்ப கலைப்பா தெரியுரிங்க சித்த இருங்க காபி போட்டு கொண்டுவறேன்” என்று அவருக்கு பேனை சுழலவிட்டு அடுக்கலைக்குள் நுழைய இருந்தார்.

“இரு மரகதம் கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்று கூறி மகள் கொண்டுவந்த தண்ணீரை பருகியவர் “என்னம்மா காலேஜ் போயிட்டு வந்துட்டியா” என்று மகளை விசாரித்தார்

“ம் இப்போதான் வந்தேன் பா.. பஸ் கூட இன்னைக்கு சீக்கிரமே வந்துடுச்சி” என்று பதிலளித்து விட்டு இனி தனக்கென்ன இங்கே வேலை என்று உள்ளே செல்ல முனைய அவளின் ஆலிலை பாதங்களின் நடையை தடைசெய்தது சௌந்தரலிங்கத்தின் வார்த்தைகள்.

“என்னங்க போன வேலை என்ன ஆச்சு” என்று மரகதம் தன் மனதில் இருந்ததை கேட்க

தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தபடியே “மரகதம் நம்ம இடத்தை வாங்க ஆசைபட்டவரை பத்தி சொன்னா நீ ஆச்சரியபடுவ” என்றதும்

“அப்படி ஆச்சரியம் கூட்டுற அளவுக்கு யாருங்க அவர்”

“விசாகன் தம்பி தான்” என்று அவன் பெயரை கேட்டும் அவனை தெரியாமல் அவர் விழித்து பார்க்க “ஆமா ஆமா உனக்கு தான் பெயர் தெரியாதுல… அன்னைக்கு நைட்டு நம்ம பொண்ணை கூட்டிட்டு வந்து விட்டாரே” என்று விளக்கவும் தான் அவனை அடையாளம கண்டு கொண்டவர் “ரொம்ப சந்தோஷங்க யாருக்கோ போறது நமக்கு தெரிஞ்ச தம்பிக்கு போறது மனசுக்கு திருப்தியா இருக்குங்க” என்று கூறி “ஆமா அந்த தம்பிக்கு இவ்வளவு ஒதுக்குபுறம் இருக்குற நிலம் தோதுபடுமாங்க?” என்று தன் ஐயத்தை வினவவும்

“நானும் கேட்டேன் மரகதம் ஏதோ மோட்டார் ஸ்பேர் ஸ்பார்ட் பாஃக்டரி வைக்கப் போகிறார் அதுக்கு இப்படி இருந்தாதா நல்லா இருக்கும்னு சொன்னார்… கூடவோ குறையவே அவருக்கே கொடுக்க முடிவு பண்ணிட்டேன்… அனேகமா வர்ற வெள்ளிகிழமை ரிஜிஸ்டரேஷன் இருக்கும்னு நினைக்கிறேன்… டவுனு வரையும் போக வேண்டி வரும் மரகதம்”

சரிங்க போயிடலாம் என்றபடியே “நல்ல புள்ளைங்க அன்னைக்கு வந்தப்ப கூட என்ன அமைதியா இருந்தாரு… தங்கமா வளர்த்து இருக்காங்க” என்று அவனுக்கு பாரட்டை வாரி வழங்கினார்.

“ஆமா மரகதம் விசாகனை மாதிரி ஒரு பையனை பார்க்க முடியாது… தாய் தகப்பனை சின்ன வயசுலையே இழந்து இருந்தாலும் குணத்துலயும் நடத்தையிலும் சொக்கதங்கம்” என்று தந்தையின் வாயிலிருந்தும் அவனை பற்றி நல்லபடியாகவே கேட்டாள்.

“அய்யோ பாவமே அந்த புள்ளைக்கு பெத்தவங்க இல்லையா?? அந்த முப்பாத்தம்மாதான் இந்த தம்பிக்கு எந்த குறையும் இல்லாம நல்ல குடும்பத்தை அமைச்சி கொடுக்கனும்” என்று அவசரமாக கடவுளுக்கு ஒரு அப்பிளிகேஷனை போட்டவர் கணவரிடம் திரும்பி அந்த “புள்ளையே சொல்லுச்சாங்க அய்யோ எவ்வளவு வருத்தமா இருந்துக்கும் அந்த புள்ள மனசு” என்று வருத்தப்பட்டு கேட்டு கொண்டிருந்தார்.

இதுவரையில் அவனை பற்றிய எண்ணங்களில் உயர உயர பறந்தவள் கடைசியாய் அவர்களின் பெற்றவர்களை பற்றி கேள்விபட்டதும் உயர பறந்தவளின் மனம் பொத்தென்று கீழே விழுந்தது அவனை பற்றிய சிந்தனையிலையே தன்னிச்சையாக கால்கள் அவள் அறைக்கு சென்று சேர்ந்து விட்டது.

“இல்ல மரகதம் ரொம்ப அழுத்தகார தம்பி… வாயிலிருந்து ஒத்த வார்த்தை வரல… நம்ம சண்முகம் தான் சொன்னாரு அந்த தம்பிய பத்தி” என்று இருவரும் மாறி மாறி விசாகனை பற்றி பேசி தங்களுக்கு தெரியாமலேயே மகளின் மனதில் அவனை பற்றிய எண்ணங்களை வலுக்க செய்து இருந்தனர்.

நிலத்தை பார்த்து பேசிய நண்பர்கள் இருவரும் மில்லிற்கு திரும்பி இருந்தனர். “விசாகா என்னைக்கு பத்திரபதிவு வைச்சிக்கலாம்னு இருக்க நிலமும் தோதா இருக்கு நீ எதிர்பார்த்த மாதிரி எந்த வில்லங்கமும் இல்ல… சீக்கிரமே முடிச்ச நாமலும் வேலைய ஆரம்பிச்சிடலாம். பாஃக்டீரி கட்ட காப்ரேஷன்ல பர்மிஷன் வாங்கனும் நிறைய வேலை இருக்கு” என்று பேசியபடியே உள்ளே வந்தனர்.

அங்கே நடுத்தர வயது கொண்ட ஒருவர் வேலை பார்த்தபடி இருக்க “அண்ணே பொன்னையன் மாமா அரிசி மூட்டை ரெடியாகிடுச்சா” என்று கேட்டான் விசாகன்.

‘ஆயிடுச்சி தம்பி அது முடிஞ்சி நம்ம சங்கரன் அய்யா 50 மூட்டை நெல்லு அனுப்பி இருக்காரு அதை தான் அடிச்சிட்டு இருக்கேன்” என்றவரிடம் “சரிண்ணே வேலை பாருங்க” என்று கூற அவரும் வேலை பார்க்க சென்று விட்டார்.

அவர் சென்றதும் அறைக்கு சென்ற விசாகனும் சுந்தரனும் அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டு பாஃக்டீரியை பற்றி மற்ற விஷயங்களை பேசிக்கொண்டு இருக்கும் போது பின்னிருந்து வந்த மாமா என்ற அழைப்பில் இருவரின் பேச்சும் தடைபட்டு நின்றது.

அங்கு வந்து நின்றிருந்தவளின் குரலை அறிந்தவனுக்கோ கோபம் தலைக்கு மேல் தாண்டவமாடியது அதே வெறுப்புடன் திரும்பியவன் “யாருக்கு யார் மாமா அறைஞ்சேன் பல்லு அத்தனையும கொட்டிடும் இங்கிருந்து ஓடிடு” என்றான் சீற்றமாக

“நீங்க என் மாமா பையன் உங்கள மாமான்னு கூப்பிடாம வேற யாரை மாமான்னு கூப்பிடறது… இது என் மாமா மில்லு இங்க வரக்கூடாதா ஏன் இப்படி காய்ச்சி காய்ச்சின்னு காய்ச்சரிங்க” என்றாள் முகத்தை அஷ்டகோணலாக்கி

“ஒழுங்கு மரியாதையா கிளம்பிடு உன்னை பார்க்க பார்க்க கொலை வெறியாகுது. ஒரு பக்கம் உன் அப்பன் கோர்ட்டுக்கு என்னை இழுத்தடிச்சி சாகடிக்கிறான் நீ மாமா மண்ணாங்கட்டின்னு வந்து உயிரை வாங்குற… மொத்துத்துல என் நிம்மதிய கெடுப்பதுதான் உங்க வேலை இல்ல… இங்க நின்னு என் உயிரை எடுக்காம வந்த வழிய பாத்து கிளம்பு” என்று சுல்லென விழவும்

அவன் பேசியதில் மூக்கை உறிஞ்சியவள் “ஏன் மாமா இப்படியெல்லாம் பேசுற உன்னை நினைச்சி நானும் அம்மாவும் கஷ்டபடாத நாளே இல்ல அப்பா பண்ண தப்புக்கு நாங்க என்ன மாமா பண்றது இல்ல எங்களாலதான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிற” என்றாள் கலக்கத்துடன்,

“இந்த நீலி கண்ணீரெல்லாம் என் கிட்ட வேணா… எந்த நடிப்புக்கும் நான் ஏமாற மாட்டேன்… சொல்லி கொடுத்தானா உன் அப்பன் அவன் சரியான ஏமாளி இரண்டு சொட்டு கண்ணீர் விட்டா எல்லாத்தையும் மறந்துடுவான்னு… போய் சொல்லு இவன் எதுக்கும் அசையாத இரும்புன்னு சே… உன்னை பார்க்க பார்க்க உன் அப்பன் மூஞ்சும் அவன் செய்தததும் தான் நியாகம் வருது முதல்ல வெளியே போ என் கண்ணு முன்னாடி நிக்காதே” என்றான் காரமாக

அவளின் கலங்கிய விழிகளில் உருண்ட நீர்மணிகளை பார்த்த சுந்தரன் “நீ போ அமுதா அவன் கோவமா இருக்கான்…” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு நண்பனை பார்த்தவன் “ஏண்டா இவ்வளவு கோவம்” என்றவனுக்கு விசாகனுடைய கோவம் சற்றும் குறையாமல் கண்கள் சிவப்பாக இருப்பதை காணவும் அவன் கைகளில் அழுத்தம் கொடுத்து “விடுடா விசா கொஞ்சம் பொறுமையா இரு நீ கோவப்பட்டு கத்தி அவளை திட்டினா மட்டும் அந்த ஆளு திருந்திட போறானா இல்ல எல்லாம் மாறிட போகுதா சொல்லு” என்று எடுத்து கூறினான்.

அதன் நிதர்சனத்தை உணர்ந்தவன் எனக்கு அந்த ஆளை பத்தி பேசினாலே எங்க அம்மாவ கடைசியா பார்த்த ஞாபகம் தாண்டா வருது எவ்வளவு ஆசை ஆசையா வெளியே போனோம் தெரியுமா எல்லாம் மண்ணா போச்சிடா எல்லாம் நாசமா போச்சி நான் இழந்தது கொஞ்ச நஞ்சமில்ல எப்படிடா அந்த ஆளை சார்ந்தவங்ககிட்ட என்னால சாதரணமா பேசவோ பழகவோ முடியும்… இப்போ எனக்கு சொந்தம்னு இருக்கறது என் அப்பத்தா மட்டும் தான் கண்டவங்களை பத்தி பேசி என்னை கொலைகாரனா ஆக்காதே” என்றான் தீர்கமாக

நண்பனின் ஆதங்கம் அவனுக்கு புரிந்தாலும் “மாப்ள உங்க அத்தை அலமேலுக்காகவாது பாரு” என்றதும்

“எனக்கு எந்த உறவும் வேணா மாப்ள… என்னை என் போக்குல விட்டுடு” என்று அவனது கோவத்தை கட்டுபடுத்த முடியாமல் விருட்டென வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்…