பூ போல் என் இதயத்தை பறித்தவளே பூ 1

பூ 1

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

என்று எம்.எஸ் சுப்புலட்சுமியின் குரலில் சுப்ரபாதம் அந்தியூர் கிராமத்தின் நடுநாயகமாக இருக்கும் பெருமாள் கோவிலில் இருந்து காற்று வாக்கில் மிதந்து வந்தது.

இது தேனீ பக்கத்தில் இருக்கும் சிறிய கிராமம். அழகிய ஊர் பச்சை பசேலென வயல்வெளிகளில் வரிசையாய் சிப்பாய்கள் அணிவகுத்து நிற்பது போல அதனை சுற்றிலும் இருக்கும் தென்னை மரங்கள் ஒரு பார்வையில் அழகு என்றால், வைகறை வெளிச்சத்தில் சூரியன் மலை முகட்டில் இருந்து வெளிவருவது இன்னொரு அழகு… இயற்கை எழிலும் , அழகும், வனப்பும் சூழ்ந்திருத்தது அந்தியூர் எனும் கிராமம்.

சிறிய கிராமம் தான் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிலேயே இருந்தது தெருக்கள்…. மாட்டு வண்டிகளும் மிதிவண்டிகளும் மோட்டார் பைக்குகளும் மட்டுமே வலம் வரும் அந்த செம்மண் தெருக்கலில் எப்போதாவது அரிய வகையில் பெரிய வீடுகளுக்கு கார்களில் சொந்தங்களும் வருவது உண்டு. சில மினிபஸ்களும் அந்த கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் வாகனமாகவும் இருக்கிறது. பல கான்கிரீட் வீடுகள் இப்போதுதான் நடைமுறையில் அங்கங்கே முளைத்துக் கொண்டிருந்தது.

நல்ல விஸ்தாரமான அமைப்புடைய மச்சி வீட்டிற்கு முன்னே பரந்து விரிந்து கிடந்த வாசலில் புங்கை மர இலைகளையும், வேப்பமர இலைகளையும் பெருக்கி வாறி சாணியை கரைத்து வாசலில் அழகாய் மொழுகியபடி இருந்தார்
மரகதம். மாநிறத்தில் நற்பது வயதில் இருந்தவருக்கு சற்று பூசிய உடல்வாகு சன்னகரையிட்ட பருத்தி புடைவையில் அளவான நகைகளுடன் காட்சி தருபவர். ஆனால் மகள் என்று வந்துவிட்டாள் எங்கிருக்கும் கண்டிப்பும் அவளுக்கு முன்னால் வந்து விடும். அந்தியூரில் நிலபுலனுடன் செல்வாக்கும் இருக்கும் குடும்பங்களில் இவர்களின் குடும்பமும் ஒன்று.

வயற்காடுகளிலும் மில்லிற்கும் வேலைக்கு செல்லும் மக்களுக்கு நேரத்தை அறிய பக்கத்து ஊரான பூங்குடியில் சங்கு ஒலிப்பது இயல்பு இன்றும் தூரத்தில் கேட்கும் சங்கு சத்தத்தை வைத்து மணி ஐந்து என்று ஊகித்த மரகதம்.

” ஏ…. புள்ள தேவா … தேவா….”என்று உள்ளே குரல் கொடுத்தவர் “இன்னும் என்னடி தூக்கம்… பொழுது அன்னிக்கும்… சிநேகிதிங்க கூட கொட்டம் அடிக்கிறது…. இது பத்தாதுன்னு ஆத்தங்கரைக்கும், அரசமர ஊஞ்சலுக்கும் ஆட்டம் போட்டுட்டு ஆத்தா ஆக்கி வைச்சி இருப்பான்னு வந்து சாப்பிட வேண்டியது… ஒரு வேலைக்காவாது ஒத்தாசையா இருக்கியா?” என்று மகளை அர்ச்சித்த படியே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

மரகதம் போட்ட சத்தத்தில் அடுத்த வீட்டு அன்னம் கூட கோலம் போடுவதை பாதியில் விட்டுவிட்டு “ஏன் மரகதம் அக்கா இப்படி நல்லா நாள் பெரிய நாள் அதுவுமா புள்ளைய வையுறவ” என்றவாறே அருகில் வந்தார்.

“ஆமாடி அன்னம் எனக்கு ஆசை பாரு… அவளை கரிச்சி கொட்டி கிட்டே இருக்க… அவ வயசு புள்ளைங்க எல்லாம் எம்புட்டு வெள்ளன எந்திரிச்சு கோலம் போடுதுக…. இது இன்னும் இழுத்து போத்திக்கிட்டு தூங்குது… வயசுபொண்ணா எந்திரிச்சோமா வேலையா பாத்தோமான்னு இல்லாம கிடக்கா…” என்று அவரையும் பஞ்சாயத்துக்கு அழைத்தார்.

காலை வேலையிலையே பெருமாள் கோவில் சுப்ரபாதத்திற்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு தாயின் சுப்ரபாதம் அவள் காதுகளில் துரிதகதியில் சென்றடைய விழிப்பு கலைந்து புரண்டு படுத்தாள் தேவா.

“ஏய் புள்ள தேவா எழுந்து வாடி” என்று மறுபடி ஒரு முறை மரகதத்தின் குரல் காற்றைவிட வேகமாக பயணித்து தேவாவின் செவிபாறையை சென்றடைந்தது.

அடித்துபிடித்து எழுந்த தேவா ‘கொஞ்ச நேரம் கூட தூங்க விடாதே இந்த அம்மா…. இன்னைக்கு யார பஞ்சாயத்துக்கு கூப்பிட்டு நிக்க வைச்சி இருக்கோ தெரியலையே’ என்று புலம்பிக்கொண்டு, வரும்போதே கோலமாவு கிண்ணதுடன் வந்தவளை பார்த்த மரகதம் “ராத்திரி என்ன சொல்லிட்டு படுத்தேன் புள்ள … நாளைக்கு கொஞ்சம் வெள்ளனே எழுந்து கூடமாட ஒத்தாசையா இருன்னு சொன்னேனா இல்லையா???”

செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி இந்நேர வரையிலும் படுத்துகிடக்கா பாருடி அன்னம்” என்று பக்கத்தில் இருந்த அன்னத்திடம் கூறினார்.

அன்னையை முறைத்தவாறே நின்றிருந்தவள் “இப்போ என்ன செஞ்சிப்போட்டேன்னு என் மேல குத்தத்த இப்படி நீட்டி அளக்குற மா… சித்த நினைவில்லாம தூங்கிட்டேன் எழுப்பிவிட்டு இருக்க வேண்டியது தானே காலையிலையே இராமயணத்தோட ஆரம்பிக்கனுமா??” என்று முகத்தை சுருக்கியவள் பக்கத்தில் இருந்த அன்னத்திடம்

“எங்கம்மாதான் பிராடு சொல்லுதுன்னா நீயும் வேலைவெட்டி இல்லாம கேக்குறியாக்கும்…. போயி பாதியில விட்ட கோலத்த முடி அதுக்குள்ள மாமா, எந்திரிச்சி பலகாரத்த கேக்க போறாங்க… திருதிருன்னு முழிக்க போற ..” என்று அவளையும் கோபத்தில் வறுத்தாள் தேவா

“ஆத்தாடி வாய பாரு? ஆழாக்கு சைசுல இருந்துட்டு என்னமா வாயி மரகதக்கா… பாத்து சூதானமா இருந்துக்க இவகிட்ட” என்று சொல்லவும்,

“இவளா வாயிதான் இருக்கே தவிர அந்திசாயிர பொழுதாச்சினா முந்தானைய புடிச்சிக்கிட்டே சுத்தும் பயந்தாகோலி”. என்று தலையில் ஒரு இடி இடித்தவர் வேலையை பார்க்க உள்ளேச் சென்றார்.

“ம்கூம்” என்று தாடையில் இடித்துக்கொண்டு ரெண்டு பேரும் சேர்ந்து காலையிலையே என்னை வெறுப்பு ஏத்துறாங்கப்பா.. ஒரு நாள் நான் யாருன்னு இவிகளுக்கு காட்டுறேன்”. என்று முனுமுனுத்தாவாறே ஒரு கோலத்தை போட்டு முடித்து உள்ளே சென்றாள் தேவா.

தேவசேனா பள்ளி படிப்பை அந்தியூரில் உள்ள பள்ளியில் முடித்து டவுனில் உள்ள கல்லூரியில் அவ்வருடம் தான் பிஎஸ்சி கம்பூட்டர் சயின்ஸ் பிரிவில் இளம்நிலை முதல் வருடத்தில் நுழைந்திருந்தாள்… தாய் மரகதம் கொஞ்சம் அல்ல அல்ல நிறைய கண்டிப்பானவர் தந்தை செளந்தரலிங்கம் தோப்பு துறவு என்று வைத்து விவசாயம் பார்த்து வருகிறார் ஊரில் சொல்லிக் கொள்ளும் அளவில் பெரிய மனிதர். இவருக்கு மூத்தவன் ஜெயசந்திரன் கல்லூரி படிப்பை முடித்த கையோடு கேம்பஸில் இன்டர்வீயில் சென்னையில் வேலை கிடைத்து விட அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறான். இளையவள் தான் தேவசேனா நம் (நம் கதையின் நாயகி) சொல்லிகொள்ளும் அளவிற்கு படிப்பவள்… நல்ல வளர்த்தி மாநிறம் அடர்த்தியான இடைவரை இருந்த கூந்தள் நீள்வட்ட முகம் பார்பதற்கு பேரழகி இல்லை என்றாலும் குறை சொல்லமுடியாத அழகிதான். வாய்பேச்சில் கில்லாடி ஆனால் இருட்டிவிட்டால் எங்கிருக்கும் பயமும் அவளை வந்து சூழ்ந்துகொள்ளும் அளவிற்கு பயந்தவள். இதை வைத்துதான் அவளை ஓட்டிகொண்டிருப்பார்கள் அவளைபற்றி தெரிந்தவர்கள். அதற்கெல்லாம் இவளது ஒரே பதில் நேரம் வரும்போது நான் யாருன்னு காட்டுறேன்… என்று வீராப்பாய் பேசித் திரிபவள்.

காலையிலையே வேலை எல்லாம் முடித்து வடை பாயாசம் சக்கரை பொங்களுடன் புது வருடத்தை கொண்டாடியவள் கிடைத்த சிறிது நேர ஓய்வில் அப்பாடா என்று அமர்ந்த அன்னையிடம் “அம்மா இன்னைக்கு நம்ம ஊரு பக்கத்துல இருக்க டவுனுல புது படம் போடுறாங்களாம். என் சிநேகிதிங்க எல்லாம் போறாங்களாம் நானும் போகவா?” என்று ஆசையாக வந்து நின்றாள் தேவா

சிவனே என்று தலைசாய்ந்து அமர்ந்து இருந்தவர் காதில் தேவாவின் வார்த்தைகள் விழவும் “அடி செருப்பால இது என்னடி புது பழக்கம்… தனியா சினிமாக்கு போறது… எங்க இருந்து கத்துகிட்டு வந்த? என்னங்க இப்படி எனக்கு என்ன வந்ததுன்னு தேமேன்னு உட்காந்து இருக்கிங்க… நல்லா இருக்குங்க இவ கேக்குறதும்
நீங்க கம்முன்னு உட்காந்து இருக்குறதும்” என்று கணவரை பொறிய ஆரம்பித்து விட்டார் மரகதம்.

அன்றைய வார தோப்பின் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்த சௌந்தரலிங்கமோ தலையை உயர்த்தி “என்ன தேவா?? என்ன பழக்கம்மா இது?” என்றார் சற்றே குரலை உயர்த்தி இருந்தார்.

“அப்பா அது வந்து நான் இல்ல இல்ல நாங்க பிரெண்ட்ஸ்” எல்லாம் சேர்ந்து டவுனுக்கு என்றதுமே

மரகதம் திட்ட தொடங்கி விட “அதான் நான் கேக்குறேன்ல மரகதம். ஒன்னு நான் கேக்கனும் இல்ல நீ கேக்கனும்”.என்று மனைவியை முறைக்க “எனக்கென்ன வந்தது… நான் போறேன்.. எப்படியோ போங்க அவ பண்ற வேலை எதுவும் சரியில்லை… பன்னிரண்டாம் வகுப்பு முடிச்ச போதே வரனை பாத்து கல்யாணத்தை பண்ணி வைங்கன்னு சொன்னா, அவங்க சொன்னாங்க இவங்க சொன்னான்னு மூத்தவனும் நீங்களும் சேர்ந்து காலேஜ்ல சேர்த்துவிட்டிங்க… இப்போ பாருங்க புது புது பழக்கத்தை தேடி பிடிச்சி கொண்டு வரா… இது எல்லாம் நமக்கு ஒத்துவருமா. ஒரு வயசுக்கு வந்த புள்ள தனியாவா சினிமாவுக்கு அனுப்பி வைப்பாங்க ?” என்றவர் முனுமுனுப்போடு பின்பக்கம் சென்று விட

“கேட்டியா தேவா இதுக்குதான் ஆசைபட்டியா?? அவளை எதிர்த்து உன்னை காலேஜ் அனுப்பியது தப்புன்னு நினைக்க வைச்சிடாதே… படிக்க போனோமா வீட்டுக்கு வந்தோமான்னு இருக்க பாரு இது கிராமம் டவுன் இல்ல புரியுதா இப்போதான் நீ காலேஜிக்கே போற அதுக்குள்ள தனியா போற அளவு வந்துடுச்சா?? பார்த்து நடந்துக்க… என்ற கண்டிப்பான வார்த்தையோடு நிறுத்திக் கொண்டவர். மறுபடியும் கணக்கை பார்க்க துவங்கினார்.

‘இப்போ என்ன கேட்டுபுட்டேன்னு இந்த குதி குதிக்கிறாங்க ஏது ஒரு படம் பாக்கதானே கேட்டேன் என் சிநேகிகளும் பொம்பள புள்ளைக தானே அவளுங்க எல்லாம் போறாளுங்க நான் மட்டும் போக கூடாது…. என்னங்கய்யா உங்க சட்டம்!!!…  அண்ணனை சென்னைக்கே தனியா அனுப்பி இருக்காங்க!! நான் ஒத்த சினிமா பாக்க கேட்டதுக்கு சுத்தி சுத்தி ரவுண்டு கட்டி திட்டுறாங்க பா… இவங்க ஏந்தான் இப்படி இருக்காங்களோ’ என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தாள் தேவா.

கோபமாய் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தாள். “ஏய் புள்ள தேவா…” என்று மெல்லிய ஒலி காதில் விழுந்தில் எதிரில் இருந்த ஜன்னலில் எட்டி பார்க்க, மேகலா ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.

“என்னடி இங்க வந்து நின்னுட்டு இருக்க படத்துக்கு போகலியா?” என்றாள் தேவா.

“நல்ல கேக்குற டி கேள்விய… நேத்து எல்லா பிளானையும் போட்டது நீ… இப்போ நீ வராம உள்ளார உக்காந்து இருக்க உன்னை கேக்கலாமுன்னு உள்ள வந்தா உங்க அம்மா உன்னை வையறத கேட்டு அப்படியே கழண்டு வந்துட்டேன்.. இப்ப என்னடி பண்றது” என்றாள் மேகலா.

“அதுக்குள்ள நீ ஏன் மூஞ்ச தொங்கபோடுற கலா… நாம இன்னைக்கு எங்கயாவது போயே தீரனும்.. எங்க போலாம்? எங்க போறோம் சொன்னா வெளியே போக விடுவாங்க!!!” என்று யோசனை செய்தவள் “இப்படி பண்ணலாமா கலா?” என்றாள்.

“எப்படி பண்ணலாம் சொன்னாதானே டி தெரியும்?” என்றாள் மேகலா சற்றே எரிச்சல் நிறைந்த குரலில்.

“நாம சினிமாக்கு போனாதானே வேண்டானு சொல்லுவாங்க… கோவிலுக்குன்னு சொன்னா அனுப்பி வைப்பாங்கதானே?”

“என்னடி சினிமாக்குன்னு சொல்லி ஆசைய கிளப்பி விட்டு இப்போ கோவிலுக்கு சொல்ற!?” என்றாள் மேகலா பாவமாக

“சரி தப்புதான்… வேற என்ன செய்ய சொல்ற, சினிமான்னு மறுபடியும் கேட்டா எங்க வீட்டுல விளக்குமாறு கட்டு பிஞ்சிடும் சொன்னாங்க… மகாராணி வீட்டுல சினிமாக்கு சொன்னா போயிட்டுவான்னு சொல்லி வழி அனுப்பினாங்களா?” என்றாள் நக்கலாக

“நீயாச்சும் கேட்ட…. நான் நீங்களாம் வந்து எனக்காக கேப்பிங்கன்னு நம்பிக்கையில இருந்தேன்” என்றாள் மேகலா அப்பிராணியாக

“நல்ல விவரமாதான்டி இருக்க” என்று அங்கலாய்த்த தேவா “இரு கலா நான் அன்னமாக்க வீட்டுபக்கமா வறேன் நீ அங்க வா” என்றவள், அம்மா அன்னமாக்க கூப்பறாங்க போயிட்டு வறேன் என்றவள் சிட்டாய் பறந்து சென்றாள்.

எப்படியோ அன்னத்தை பேசி சரிகட்டியவள் அவருடனே அன்னையிடம் வந்தாள். “மரகத அக்கா  என்றபடி வந்த அன்னம் அவரை பார்த்ததும் அக்கா நம்ம ராசிபுரத்துல ஒரு மாரியம்மன் கோவில் கட்டி இருக்காங்கலாம் இன்னைக்கு புதுவருஷம் அப்படின்றதால ரொம்ப விசேஷமா செய்றாங்களாம்… நான் போகலாமுன்னு இருக்கேன் தேவா வீட்ல தானே இருக்கா? அவளையும் அனுப்பி வைக்கிறீங்களா?”.

அன்னம் கேட்கவும் தட்ட முடியாத மரகதம் “கொஞ்சம் இரு அன்னம் அவ அப்பாருக்கிட்ட கேட்டு சொல்றேன்…” என்றவர் கணவரிடம் அனுமதியை பெற்று அவளை மாலை கோவிலுக்கு கூட்டிச் செல்லுமாறு கூறினார்.