பூ பூக்கும் ஓசை-9

பூ பூக்கும் ஓசை-9

     வீட்டுக்கு வந்து தலைவலியே வர ஹான்ட்பேக்கை  தனதறையில் வீசியெறிந்தாள்.

    முகமலம்பி கண்ணாடியில் தன் முகத்தை காண பளிங்கு போன்று காட்சியளித்தது.

    இந்த முகம், தோல், சதை இது தானே காதலிக்க ஆசையை தூண்டுது. இதை தவிர பெண்களிடம் பேச பழக இவனுங்களுக்கு என்ன தோன்றும் என்ற வெறுப்போடு கட்டிலில் அமர்ந்தாள்.

    பேனை போட செல்ல, “அண்ணி ஈரக் கையோட சுவிட்ச் போடு தொடறிங்க. ஷாக் அடிக்கவா?

   சொல்ல முடியாது நீங்களே கரண்டுக்கு ஷாக் வைப்பிங்க” என்று ஸ்ரீநிதி பேசியபடி உள்ளே வரவும் பூர்ணா கையை துப்பாட்டாவில் துடைத்து வரவேற்றாள்.

     “எப்படி இருக்கு? போரடிச்சுதா?” என்று கேட்டாள் பூர்ணா.

    “நோ நோ மாமா கடைக்கு போய் ஜாலியா கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வந்தேன். அத்தையோட இப்ப தான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன். நீங்க வந்துடுவிங்கனு தான் அவங்களும் அவசரமா வந்தாங்க” என்று திருநீறை சின்ன கோட்டை போல வைத்து விட்டாள்.

    ஸ்ரீநிதின் கரண்ட், ஷாக் என்ற வார்த்தை எல்லாம் பூர்ணாவுக்கு சத்யதேவை நினைவுப்படுத்த, தலையை உலுக்கி டிபன் பாக்ஸை எடுத்து கிச்சனில் வைக்க சென்றாள். பையிலிருந்து அந்த கீ-செயின் விழுந்தது.

   ஸ்ரீநிதி கண்ணில் தப்புமா?

    “அண்ணி இதென்ன கீசெயின் ஐ லவ் பூர்ணானு இருக்கு,” என்றதும் “அது ஒரு கோமாளி கொடுத்தது.” என்றாள் பூர்ணா.

    “யாரு காலையில பொறுக்கினு திட்டினிங்களே அவரா?” என்று கேட்டதும், “அவனில்லை… இது என் சீனியர், இங்கயும் எனக்கு மேனேஜரா வந்து உயிரை வாங்கறான். காலேஜ்ல கிறுக்கி யோசித்து எடுக்கு மடக்கு பண்ணின மாதிரி இங்கயும் சுத்தறான்.

    கொஞ்சம் கூட வளராம வந்துயிருக்கான். நான் கூட தேவ் தான் இதை பண்ணிட்டாரோனு ஒரு நிமிஷம் நினைச்சி திட்டினேன்.

      இது சீனியர் சூர்யா நாளைக்கு இருக்கு அவனுக்கு. என்ன தைரியமிருந்தா என்னிடமே ப்ரப்போஸ் பண்ணறான்.

     இதுல அந்த தேவ் வேற… ஒரு இளக்காரமா லுக் விடறான்.” என்று தலை க்ளிப்பை அவிழ்த்து விட்டு கொண்டையிட்டு முடிக்க, ஸ்ரீநிதி கையில் அந்த கீசெயின் ஆட்டியாட்டி பார்த்தாள்.

    “இந்த டால் அழகாயிருக்குல.” என்று முகத்திற்கு முன் ஆட்டி காட்டினாள்.

     “இந்த அரிசில பெயர் எழுதறது மோதிரத்துல கீசெயின்ல இதெல்லாம் நிறைய வெரைட்டி இருக்கு ஸ்ரீநிதி. பீச், தீம்பார்க்ல அவனவன் விற்றுட்டு இருப்பான்.

      இப்படி சில்லியா பெயர் எழுதி பிளே பண்ணி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணணும்னு முட்டாளா இருக்கானே. இவனை என்ன சொல்றது.” என்று தடுப்புக்கு அந்தப்பக்கம் சென்று நைட்டிக்கு மாறியிருந்தாள்.

     “பச்… நார்மலா கலைவாணி அண்ணி இப்படி போகாம, நம்ம கூடயிருந்து இருந்தா நீங்க இதுக்கு லைட்டா ரியாக்ட் பண்ண மாட்டிங்க?” என்று கேட்டாள்.

    “கண்டிப்பா ரியாக்ட் பண்ணிருப்பேன். அப்பவே குப்பையில போட்டு இதான் டா பதில்னு. இப்ப தேவ் எதிர பண்ண முடியலை. எங்க அவன் அடுத்து ஏதாவது ஆரம்பிப்பானோ என்னவோனு கடுப்பா இருந்தது.

     எதுக்கோ இந்த சூர்யாவோட ஆன்சருக்கு பதில் நாளை தர்றேன்னு சீனை போட்டுட்டு வந்துட்டேன். அவன் எப்படியும் என்னிடம் வம்பு பண்ண மாட்டான். இந்த சூர்யாவுக்கு தான் இருக்கு.” என்று லேப்டாப்பை எடுத்தாள்.

     “என்ன பண்ண போறிங்க அண்ணி?” என்று ஸ்ரீநிதி கேட்க, “தெரியலை… அந்த நேரம் கோபத்தை பொறுத்து இருக்கு” என்று கூறவும் பூர்ணா ஸ்ரீநிதியை சாப்பிட அழைத்தார் கோகிலா.

      நால்வரும் அமர்ந்து சாப்பிட நாராயணன் மகளிடம் ஒரு போட்டோவை நீட்டினார்.

   மண்தக்காளி குழம்பை ஊற்றி பிசைந்து “பையன் பேரு சரவணன் மா. வந்த வரன்களில் நல்ல சம்பளம், கண்ணுக்கு லட்சணமா, வீட்டுக்கு ஒரே பையனா இருந்தான்.

   வேலை செய்யற இடத்துல ஒரு நாள் போனேன். நல்லவிதமா சொன்னாங்க. நேர்ல தூரத்துலயிருந்து பார்க்கறப்ப நல்லவிதமா தான் தெரிஞ்சுது.

     அவங்க அப்பா அம்மாவிடம் பேசினேன். வேலைக்கு போற பொண்ணு நல்லது தானேனு சொன்னாங்க.. ஆனா குடும்பத்தை பார்த்துக்கிட்டு பையனை பார்த்துக்கிடணும்னு சொன்னாங்க.

     நீ டீம்லீடர்னு சொன்னேன். அப்படின்னா சமாளிப்பா. உங்க பொண்ணிடம் கேட்டுட்டு சொல்லுங்க ஒரு நாள் பொண்ணு பார்க்க வர்றோம்னு சொன்னாங்க… பிடிச்சிருக்கா மா” என்று ஆசையாய் கேட்டு பதிலை எதிர்பார்த்தார் நாராயணன்.
 
      “உங்கயிஷ்டம் போல முடிவெடுங்கப்பா. என் கல்யாணத்துல உங்களோட முழுவிருப்பம் இருந்தா போதும். இந்த பூர்ணாவுக்கு பெத்தவங்க நல்லது செய்வாங்கனு தெரியும்.” என்று மலர்ந்து அப்பளத்தை கடித்து பதில் தந்தாள்.

      ஸ்ரீநிதி புகைப்படத்தை எட்டி பார்த்தாள். அவளிடமும் பூர்ணா புகைப்படத்தை காட்டினாள்.

     “ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்கார் அண்ணி. அண்ணா சூப்பர்.” என்று கூறவும் கோகிலா நாராயணனிடம் பார்வைகள் அப்ப வரச் சொல்லிடலாமா? என்று என்பது போல பரிமாறி நின்றனர்.

     “நாளைக்கு போன் பேசிட்டு  சொல்லறேன் டா” என்றதும் பூர்ணா தலையாட்டி முடித்தாள்.

    சாப்பிட்டு முடித்ததும் உறங்க செல்ல, “ஏன் அண்ணி… யாருனே தெரியலை… மாமா சொல்லறாங்கனு மேரேஜூக்கு ஓகே சொல்லிட்ட, கலைவாணி அண்ணியால மாமா அத்தை அவமானப்பட்டு இருக்காங்க. நாமளும் எதுவும் கருத்து தெரிவிக்க கூடாதுனு பூம்பூம் மாடு கணக்கா தலையாட்டிட்டியா?” என்று கேட்டாள் ஸ்ரீநிதி.

      “அதுவும் ஒரு காரணம் ஸ்ரீநிதி. ஆனா அது மட்டும் காரணம் இல்லை. அப்பா அம்மாவுக்கு ஒரு பொண்ணு இந்த சந்தோஷம் கூட கொடுக்கலைனா எப்படி. அதுவும் இந்த நேரத்துல.

   பையன் போட்டோ வச்சோ, இல்லை அவனோட ஒர்க்கிங் ஸ்டையில் வசதி வச்சோ அவன் நல்லவன் கெட்டவன்னு சொல்ல முடியாது.

    இப்ப எல்லாம் நல்லா பழகினவங்களே காலை வாறி விடறாங்க தெரியுமா. அப்படியிருக்க நல்லவன் கெட்டவன் நம்பி நம்ம வாழ்க்கை போகக்கூடாது.

   எந்த வாழ்க்கையும் அது பாட்டுக்கு போனா தான் தெரியும். நம்ம தலையெழுத்து இப்படி தான் எழுதி வச்சதை யாரால மாத்த முடியும்னு புலம்ப மாட்டேன். அதை மீறி என்றால் நாம தான் நம்ம லைப்பை ஹாண்டில் பண்ணணும். அது எப்படிபட்டதா இருந்தாலும்.

    என்னை பொறுத்தவரை கண்ணை கசக்கிட்டு அம்மா அப்பாவிடம் வர்றவ இல்லை நான்.

     எனக்கு என் வாழ்க்கையில என்னை மீறி எதுவும் நடக்க விடமாட்டேன். அதனாலயும் சம்மதிச்சேன். கூடவே அப்பா நல்லதை தான் செய்வார்.” என்று உறங்கினாள்.

    ஸ்ரீநிதியோ நாளை கல்லூரிக்கு அடியெடுக்கும் ஆசையோடு கனவில் மிதந்தாள். முன்பு படித்தது எதுவும் மண்டையில் ஏறாமல் பாதிக்கு பாதி அரியர் வைத்து சொதப்பினாள்.

  சுபத்ரா சும்மா இல்லாமல் ‘எங்க அண்ணன் பொண்ணு பூர்ணாவை பாரு டீம் லீடரா இருக்கா. நீ என்னடானா அரியரா வச்சி தள்ளு’ என்று திட்டி முடிக்க, ஸ்ரீநிதி அதற்கு ‘அவங்க ஆசைப்பட்ட படிப்பை மாமா படிக்க வச்சாங்க படிச்சாங்க. நீ என்னை இன்ட்ரீயர் டிசைனிங் கோர்ஸ் படிக்கவிடலை.’ என்று சப்பை கட்டு கட்டினாள்.

     பத்மநாபனோ பேச்சை வேடிக்கை பார்த்தவர் உடனடியாக மகளின் படிப்பை நிறுத்தி அரியரை வந்து எழுது. இனி உனக்கு பிடிச்சதை  போய் படி என்று கூற சென்னைக்கு வந்துவிட்டாள்.

      பூர்ணா பக்கம் திரும்பி, எதுக்கெடுத்தாலும் உன்னை வச்சி தான் திட்டறாங்க அண்ணி. உன்னால எப்படி தான் எவனோ ஒருத்தனை பார்த்ததும் சரினு தலையாட்ட முடிந்ததோ. ஒரு வேளை அழகா இருக்கான்னா.’ என்று எண்ணத்தை அலைமோதி கலைவாணியிடம் வந்தது.

    என்ன தான் பூர்ணா பழகினாலும் அவளின் தோழி கலைவாணியை மனம் தேடியது.

    மெதுவாய் கலைவாணி எண்ணிற்கு அழைப்பு தொடுத்து பார்த்தாள். அதுவோ விக்னேஷால் சிம் உடைக்கப்பட்டு குப்பைக்கு என்றோ சென்றிருந்தது.

      ஓகே முதல்ல வந்த வேலையை படிப்போம்… பிறகு கலைவாணியை பத்தி யோசிக்கலாம் என்று போனை தூர வைத்தாள்.

      அடுத்த நாள் பூர்ணா எப்பொழுதும் போல தலைவாரி முடித்தாள். அதே சென்டர் க்ளிப் முடியை இரண்டு பக்கமும் விரித்து விட்டு தயாராக நேற்று எடுத்து வந்த கீ-செயினை தேடினாள்.

     நீண்ட நேரம் ஸ்ரீநிதி பூர்ணா என்ன தேடுகின்றாளென கேட்க, “கீ-செயின் தான் ஸ்ரீநிதி. நேத்து வரை அந்த கோமாளி சூர்யா திரும்ப திரும்ப வர்றானேனு யோசித்தேன். சாதாரணமா சொன்னா அவன் மண்டையில ஏறலை. திரும்ப அடிக்கவும் பிடிக்கலை. சில்மிஷம் பண்ணினா அடிக்கலாம். லவ் பிரப்போஸ் தானே.

அதனால அப்பா போட்டோ காட்டி வரன் முடியறாப்புல சொன்னாரா, அதனால அதையே ரீசன் வச்சி அது கொடுத்த கீசெயினை கொடுத்துட்டு  உன் வேலையை பாருடா எனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சுனு சொல்லிடலாம்னு பார்க்கறேன் காணோம்” என்று ஹான்ட்பேக்கின் ஜிப்பை நாற்பதாவது முறை திருந்து தேடினாள்.

    “அண்ணி… அண்ணி… அது வந்து பொம்மை அழகா இருந்துச்சா. என்னோட பேக்ல மாட்டிக்கிட்டேன்.  பூர்ணா என்றதுல மட்டும் நேமை எடுத்துட்டேன்” என்று அவளின் பேக் ஜிப்பை காட்டினாள்.

     “அய்யோ ஸ்ரீநிதி உனக்கு அவனை பத்தி தெரியாது. அந்த லூசு நான் ஏதோ ஆசைப்பட்டு எடுத்து வச்சதா சொல்லிட்டு மறுபடியும் வருவான்.” என்றதற்கு ஸ்ரீநிதியோ “இங்க பாருங்க இந்த பிக்கை காட்டுங்க.” என்று அவளும் நேற்று தந்தை காட்டிய சரவணன் என்ற போட்டோவை க்ளிக் செய்ததை காட்டினாள்.

   “இதை எப்ப போட்டோ எடுத்த?” என்று காட்டினாள்.

    “மாமாவும் அத்தையும் எங்கஅப்பா அம்மாவிடம் உங்களுக்கு வந்த வரனை பேசியிருப்பாங்க போல. அம்மா போன் போட்டு பையன் போட்டோ அனுப்புடினு சொன்னாங்க. அதனால போட்டோ க்ளிக் பண்ணினேன்.” என்று ஸ்ரீநிதி கூறினாள்.

   பூர்ணா சற்று நேரம் யோசித்து “எதுக்கோ எனக்கு அந்த பிக்கை வாட்ஸப்பில அனுப்பு. அப்பறம் அந்த கீசெயின் வேண்டாம். உனக்கு கீசெயின் வேண்டுமின்னா அப்பா கடையில இருக்கு. இல்லை இதே மாதிரி தான் வேண்டுமின்னா ஈவினிங் வாங்கிட்டு வர்றேன்” என்று பேக் ஜிப்பிலிருந்து அந்த கீசெயினை எடுத்து பையில் வைத்து கொண்டாள்.

      “ஓகே பை” என்று ஸ்ரீநிதி சென்றதும் ஸ்ரீநிதி ‘பொம்மை அழகா இருந்துச்சு. இந்த அண்ணி அதை வச்சிட்டு இருக்கலாம்.’ என்று நாராயணனின் கடை வழியே சென்று ஆட்டோ பிடித்து கல்லூரிக்கு பயணமானாள்.

   பூர்ணாவோ கேபில் ஏறியமர்ந்து பூர்ணா என்றதை மொத்தமாய் அழித்தாள்.

  வாட்ஸப்பில் சரவணன் புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.

    இரண்டு நொடிக்கு குறைவாக பார்த்து விட்டு, அலுவலகம் நுழைந்தாள்.

    தேனீ போல சுறுசுறுப்பாக நுழைந்து குட்மார்னிங்கை தலையசைப்பில் பெற்றுக்கொண்டு அறைக்கு சென்றாள்.

    சத்யதேவ் எழுந்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே போனில் பேசிக் கொண்டிருந்தான்.

      ” அம்மா… அப்பறம் பேசறேன். ஆபிஸ் வந்துட்டேன்.” என்று துண்டிக்க பார்த்தான்.

    “இல்லை டா முடிவா சொல்லு” என்று அந்த பக்கம் கேட்டதும் ஒரு நிமிடம் மௌவுனமாக மாறி கண்கள் பூர்ணாவை நோக்கியது.

    அவள் கேபினில் கண்ணாடி விநாயகர் அருகே இருக்கும் மலரை எடுத்து குப்பையில் போட்டு விட்டு வீட்டில் பூத்த மல்லி மொட்டுக்களை கண்ணாடி விநாயகரை சுற்றி அலங்கரித்தாள்.

     “பார்க்க லட்சணமா இருக்கணும். அதிக திமிரா இருக்கணும். யாரோட பேச்சையும் கேட்க கூடாது. முக்கியமா என் பேச்சை கேட்க கூடாது. இது மாதிரி கேரக்டர்ல பாரும்மா” என்று கூறவும், அந்தப் பக்கம் “லிஸ்ட் ஒரு மார்க்கமா இருக்கு. நாளைக்கு நானும் அப்பாவும் அங்க தான் வர்றோம்.” என்றார்.

    “வாங்கம்மா நோ பிராப்ளம். எல்லாமே செட் பண்ணிட்டேன். உனக்கு பிடிக்கும். அம்மா… வர்றப்ப கண்ணாடி விநாயகர் இருந்தா வாங்கிட்டு வா.” என்றான்.

    “சரிடா” என்று துண்டித்தார்.

      சத்யதேவ் பேசறது வித்தியாசமா இருக்கு. இத்தனை நாளா ‘அம்மா அம்மா போனை வை மா’னு நான் அடுத்து பேசறதுக்குள்ள கட் பண்ணிடுவான். இன்னிக்கு ஏதோ லிஸ்ட் எடுத்து சொல்லறான். அவன் யாரையாவது பார்த்து இப்படி சொல்லறான்னு கிரகிக்கவும் முடியலை. எதுவானாலும் அங்க போனா தெரிஞ்சிடும் என்று சத்யதேவ் தாய் காயத்ரி உடைகளை அடுக்கினார்.

    பூர்ணாவோ அவளாக எதையும் சூர்யாவை தேடி கூறாமல் அவனாக வந்தால் பார்ப்போமென்று இருந்தான்.

      சூர்யா மதியத்திற்கு மேலாக தான் வந்ததே. அதுவும் சாப்பிட்டு முடிக்கும் நேரம்.

    இம்முறை சத்யதேவை புறக்கணிக்க மற்ற அனைத்து ஒர்க்கரையும் புறக்கணித்து தனியாக கேபினிலேயே வேலை இருக்கு நான் இங்க சாப்பிட்டுட்டே பார்த்துக்கறேன் என்று பொய்யுரைத்தாள்.

    கணினி அருகே சாப்பிடவும் பிடிக்காதவளுக்கு அது சங்கடமாய் இருந்தது. ஆனால் தவிர்ப்பது நலமென்று அவள் உள்ளுணர்வு கூறியது.

    ஸ்பூனில் சாப்பிட்டு நீரை குடிக்க சூர்யா சில பைல்களை எடுத்து வந்து கொடுத்து செய்யப்போகும் பிராஜக்ட் மாடல் இப்படி வந்துவிட வேண்டுமென கூறினான்.

     தலையாட்டி “எஸ் சார் ஆல்ரெடி ஒர்க் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.” என்ற் எழுந்து நின்று பதில் அளித்தாள்.

     “தட்ஸ் குட். அப்பறம் பூர்ணா நேத்து கேட்டதுக்கு பதில் சொல்லறேன்னு சொன்ன.” என்று நின்றான்.
  
     “சூர்யா… இது உங்க டால் தானே. வெயிட்” என்று அந்த அழகான பொம்மை கீ செயினை கத்திரிக்கோலால் கொதரி கத்தரித்து சிறு சிறு துகளாக குப்பையில் போட்டாள்.

    “இது தான் பதில். இதுக்கு அப்பறமும் வந்தேன்னா நான் மேனேஜ்மெண்ட்ல கம்பிளைன் பண்ண வேண்டியதா இருக்கும்.

   காலேஜ் டேஸ்ல அறைந்தேன். இப்ப உன்னோட இடத்துக்கு மரியாதை தந்து சும்மா பிரெண்ட்லியா விடறேன். அட்வான்டேஜ் எடுக்காம போயிடு. இதுக்கு பிறகு நீ என்னை ஒன்லி இங்க வேலை செய்யற பொண்ணா மட்டும் பாரு பேசு. அதை தாண்டி ஜூனியர் என்று வச்சிக்காதே.

   இது என்னோட உட்பி.” என்று புகைப்படம் காட்டினாள்.

    சூர்யாவுக்கு அதிர்ச்சி இருந்தாலும் மறைத்து கொண்டு “சாரி பூர்ணா. அதுக்காக பொம்மையை குப்பையில போட்டுட்ட?” என்று கேட்டான்.

     புருவமேற்றி என்ன என்று பார்வையில் கேட்டதும், “யா… அதான் கரெக்ட்” என்று வெளியேறினான்.

     பூர்ணாவும் பிரச்சனை தீர்ந்ததாக நிம்மதியாய் சாய்ந்தமர்ந்தாள்.

சூர்யாவுக்கு உள்ளுக்குள் தோல்வியுற்ற காதலாய் நெஞ்சு வலிக்க சத்யதேவை கண்டான்.

     அவ போட்டோல வேற ஒருத்தன் இருந்தான். அப்ப இவன் யாரு. ஒரு வேளை அதுக்கு தான் சத்யதேவுக்கும் இவளுக்கும் சண்டை ஓடுதா?! என்று அவனாய் ஒரு பாதைக்கு வழியை வெட்டினான்.

-தொடரும்
~பேரரளி