பூ பூக்கும் ஓசை-8

பூ பூக்கும் ஓசை-8

 காலையில் அலுவலகம் கிளம்பும் நேரம், "உங்க ஆபிஸ்ல இருக்கறவரோட பெயர் என்ன அண்ணி?" என்று ஸ்ரீநிதி கேட்டாள். 

"தெரிஞ்சு என்ன பண்ண போற ஸ்ரீநிதி. பொறுக்கியோட சவகாசம் எனக்கு எதுக்கு? அவன் எனக்கு கீழே வேலை செய்யறான். அவ்ளோ தான் அதை மீறி அவனிடம் நின்று பேச கூட நான் தயாராயில்லை. 

உன்னிடம் சொன்னதை அப்பா அம்மாவிடம் சொல்லாதே. அப்பறம் அவனால எனக்கு ஏதாவது பிரச்சனையா அதுயிதுனு பயப்படுவாங்க." என்று ஹாண்ட்பேக்கை எடுத்தவள், "உனக்கு நாளை தானே காலேஜ்?" என்றதும் ஸ்ரீநிதி ஆமென கூறவும் புன்னகையோடு கையசைத்து வெளியேறினாள். 

ஸ்ரீநிதி இருக்க தாயுக்கு இனி நன்றாக நேரம் போகுமென தந்தையோடு பூர்ணா மகிழ்ச்சியாய் கிளம்பினாள். 

தந்தை கடை வந்ததும் கேப் ஏறி போனை நோண்டி கொண்டிருக்க, அலுவலகம் வந்ததும் மிடுக்காய் நுழைந்தாள்.

  ஆனால் ஆங்காங்கே கூட்டமும், குசுகுசுவென்ற ஓசையும் இவளை தொடர்ந்தது. 

 சாதாரணமாய் அவள் நுழைந்தப் பின்னும் இது போன்றவை தொடராது. ஆனால் இன்றோ அவள் வந்தப் பின்னும் அதிகமாக குரல்கள் கீச்கீச்சென்று சத்தம் கேட்டது. 

 போதாத குறைக்கு சத்யதேவ் வரும் நேரம் சலசலப்பு அதிகரிக்கவும் செய்தது. 

 'எதுக்கு என்னயே பார்க்கறாங்க?' என்று வந்தவன் அவனிடம் வந்து தனக்கு நெருக்கமாய் இருந்த தாமஸ் என்னும் புது நண்பனிடம் கேட்டான். 

"என்ன ப்ரோ நீங்க ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கறிங்க. நீங்களும் பூர்ணா மேடமும் லவ்வராமே. 

என்னிடம் பழகினப்ப லவ்வர்ஸுனு சொல்லவேயில்லை." என்று குறைப்பட்டான். 

"தாமஸ்... என்ன சொல்லறிங்க" என்று அதிர்ந்தான் சத்யதேவ். 

"நான் எங்க சொன்னேன். ஆபிஸ்ல பாதி பேரு சொல்லறாங்க." என்றதும் தனக்கு பூர்ணா எண்ணை பகிர்ந்த சம்ருதியிடம் வந்து நின்றான். 

 அவன் வந்ததுமே, "ஹேய்... என்னப்பா... நேத்து தான் நம்பர் கேட்டிங்க, ஆனா நீங்க இரண்டு பேரும் லவ்வர்ஸ்னு பேசிக்கறாங்க. உண்மையை சொல்லு சண்டையில மேடம் நம்பர் மாத்திட்டாங்கனு என்னிடம் வந்து கேட்டிங்களா" என்று வருத்தமாய் கேட்டாள். 

 "சம்ரு.. நாங்க லவ்வர்ஸ் எல்லாம் இல்லை. இந்த ரூமரை யார் கிளப்பி விட்டா?" என்றான் சத்யதேவ். 

 "ரூமரா.? உனக்கு மேமை முன்னாடியே தெரியுமா? தெரியாதா?" என்று கேட்டு அவனை நேர்காணல் செய்து கொண்டிருந்தாள். 

 "ம்ம் தெரியும் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி லவ்வர்ஸ் இல்லை." என்றான்.

 "மேடமும் நீங்களும் சண்டை போட்டிருக்கிங்க தானே?" என்று நமுட்டு சிரிப்பில் கேட்டாள். 

 "யா... சண்டை தான் ஆனா லவ்வர் இல்லை. இது வேற. பூர்ணா எனக்கு தெரிந்தவங்க மூலமா பழக்கம்" என்றான். 

 "என்ன பாஸ் நீங்க. தெரிந்தவங்க மூலமா பழக்கம். பூர்ணானு எங்க மேடத்தை ஒருமையில உரிமையா கூப்பிடறிங்க. இங்க யாரும் அப்படி கூப்பிட்டது இல்லை தெரியுமா. 

அதுவுமில்லாம நேத்து கியூட்டா காதுல கை வச்சி சாரி கேட்கறிங்க, மேடம் என்னடானா முறைச்சிட்டு சாரியை அக்சப்ட் பண்ண முடியாதுனு கிளம்பிட்டாங்க.

பார்த்த நாலு பேரும் காஸப் பேயுங்க. ஹீ ஹீ நானும் தான்." என்றதும் சத்யதேவ் தலையில் அடித்து கொண்டான்.

 "அவ லவ்வர் இல்லை." என்றவன் அங்கிருந்து அகன்றான். 

‘இது மட்டும் அவ காதுல விழுந்தது நான் காலி.’ என்றவன் அலுவலகத்தின் பாதி பேர் கிசுகிசுப்பான குரலும் தன்னை நோட்டமிடும் பார்வையும் கண்டு துணுக்குற்றான்.

 'அய்யோ... லேடி ஹிட்லர் காதுல கண்டிப்பா போகும் சத்யதேவ் நீ செத்தடா. எதுக்கோ காதை ரெடிப் பண்ணிக்கோ. 

இல்லை இல்லை… வேற வேலைக்கு அப்ளிகேஷன் போடணும்.’ என்று பணியில் வேலையை கவனித்தான்.

 அவள் இருக்கும் பக்கமும் பார்வையிடாது தவிர்த்தான். 

பூர்ணாவுக்கு கீழே பணியும் ஆட்களால் அவள் காதிற்கு இந்த செய்தி வெளிவருவதற்கு காலம் எடுக்கும்.

 ஆனால் சூர்யா வந்ததும் அவன் 'ஐ லவ் பூர்ணா' என்ற 'கீ செயினை' நடப்பாதையில் வைத்து விட்டு ப்ரியாவை அழைத்தான். 

அவள் வரும் நேரம் அதை எடுப்பாள் யாருடையது என்று கேட்டு, முழிக்க, அனைவரும் அந்த கீ-செயினை பார்ப்பார்கள் தங்களுக்குள் ‘பூர்ணா மேடம் பெயர் இருக்கு’ என்று சொல்வார்கள்.

அந்த நேரம் ப்ரியாவிடம் தன்னுடையது என்று வாங்கி கமுக்கமாய் வைத்து விட்டால், ப்ரியா மற்றவரிடம் தான் பூர்ணாவை விரும்புவதாகவும், அவளும் விரும்புவதாகவும் புரளி பேச்சு பரவுமென திட்டமிட்டான்.

ஆனால் ப்ரியா வந்ததும் அந்த கீசெயினை எடுத்து, 'அச்சோ சத்யதேவோடியது' என்று எடுத்து கொண்டாள். 

 சூர்யாவுக்கு உள்ளுக்குள் ஆனந்தம் யாரிடமாவது கேட்டு பேச்சு திரியுமென்று. 

ப்ரியாவோ நேராக சத்யதேவிடம் கொண்டு கொடுக்க, அவனோ “இங்க பாரு மா. அது என்னோடது இல்லை.” என்று வாங்காமல் திருப்பி தந்தான்.

சம்ருதியோ, “பாஸ்… அதான் எல்லாருக்கும் தெரியுதே. எங்க பூர்ணா மேமை கரெக்ட் பண்ணிட்டிங்கனு பிடிங்க.” என்று அவன் ஷர்ட் பேக்கெட்டில் போட்டாள்.

 அதே நேரம் பூர்ணா வந்து, "இங்க என்ன சத்தம். நானும் அப்ப இருந்து பார்க்கறேன். பிஸ் மார்க்கெட் மாதிரி சலசலப்பு. நீ என்ன எப்பபாரு இங்க வந்து தவமிருக்க. போய் வேலையை பாரு." என்று அதட்டல் கொடுக்கவும் சம்ருதி அவள் கேபினுக்கு ஓடினாள். 

ப்ரியாவும் சென்று விட, “என்ன ரோமியோனு நினைப்பா. உன்னை சுத்தி எப்பவும் ஆட்கள் இருக்கணுமா? இங்க வேலை பார்க்கறதா இருந்தா பாரு. இல்லை.. கேர்ல்ஸ் காலேஜ் காலேஜா போய் ஒரு பொண்ணை மடக்கி, பீச் பார்க்னு கடலை போடு.” என்று திட்டவும் சத்யதேவ் கோபமாய் அவள் பேசுவதை கேட்டு பேக்கெட்டிலிருந்த கீசெயினை அப்படியே போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

அதனை ப்ரியாவிடமே கொடுக்க முயன்றவன் தற்போது பூர்ணா பேச்சில் பற்களை கடித்து முனங்கியபடி மானிட்டேரில் கவனம் வைத்தான். 

 பூர்ணாவோ சுற்றி மற்றவர்களை பார்த்து அவளது அறைக்கு சென்றாள். 

கணினியில் கைகள் விளையாட அதன் பின் பணிகளில் மற்றவர் மூழ்கினார்கள்.

சூர்யாவோ 'இதென்ன ப்ரியா சத்யதேவிடம் அதை கொடுத்து விட்டாள். 

அப்படின்னா சத்யதேவ் பூர்ணா லவ்வர்ஸா? நான் ஒரு புரளி கிளப்பி பூர்ணாவை என் பக்கம் இழுக்க பிளான் போட்டா வேற ஏதேதோ நடக்குதே.’ என்றவன் சம்ருதிக்கு அழைப்பு விடுத்து உள்ளே வரக் கூறினான்.

அவளும் வந்ததும் சூர்யா 'என்ன கீசெயின்? எதுக்கு சத்யதேவிடம் கொடுத்திங்க? பூர்ணாவுக்கு சத்யதேவுக்கும் என்ன கனெக்டிங்? ஏன் பூர்ணா அடிக்கடி சத்யதேவை திட்டறாங்க" என்று அவன் கேட்க, கூற தயங்கினாள். 

"சார் நான் சொன்னேன்னு மேடத்திடம் சொல்லாதிங்க. பூர்ணா மேடம் சத்யதேவ் இவங்க லவ்வர்ஸ். அவங்களுக்குள் ஏதோ சண்டை போல. சத்யதேவ் பூர்ணா மேடத்திடம் எவ்ளோவோ சமாதானம் பண்ண ட்ரை பண்ணறார். மேடம் கோபமா இருங்காங்க.

அதனால சத்யதேவ் சார் ஐ லவ் பூர்ணானு கீசெயின் வாங்கியிருப்பார் போல. அது கீழே இருந்தது ப்ரியா எடுத்துட்டு வந்து கொடுக்க வாங்கலை. அதனால நான் அவரோட பாக்கெட்டில போட்டுட்டேன்." என்று கூறவும் சூர்யாவுக்குள் ஒரு எரிமலையே வெடித்து சிதறியது. 

இந்த பூர்ணா அதனால தான் என்னை மேனேஜரா பிஹேவ் பண்ணு சீனியரா பிரெண்ட்லியா பேசாதேனு சீனை போட்டாளா. எங்க சகஜமா பேசினா அவளோட காதலன் சத்யதேவ் தப்பா எடுத்துப்பானோனு? என்று கோபமானான். 

 அவனுக்கு பூர்ணாவை பிடித்திருந்தது. அவன் ஒரு பாதையில் பூத்தூவி அவளை வரவேற்று காதலை திணிக்க பார்க்க, அவள் மற்றொரு பாதையில் சென்றதாக தோன்றவும் தாங்கிக்க இயலாது திகைத்தான். 

  "நீ போ மா" என்று சம்ருதியை அனுப்பினான். 

   அலுவலகம் ஒரு மாயையாக தோன்ற, பூர்ணா என்பவளை மறக்க இயலாது தத்தளித்தான். 

 வீட்டில் பொண்ணு பார்க்க அவன் அன்னை ஜாதகம் எடுக்கும் நேரம், ஜாதக பலனாக காதல் திருமணம் நடக்கலாம் என்றதில் அவன் மனம் பூர்ணாவை தான் எண்ணியது. 

 அவளுக்கும் தனக்கும் இருக்கும் சீனியர் ஜீனியர் என்றதற்கு அடுத்த கட்டமாக இந்த முறை மேனேஜர் டீம் லீடர் என்று வந்ததும் அவனாகவே தப்பர்த்தம் கணக்கிட்டான். 

இந்த சத்யதேவ் பூர்ணா சந்திப்பும், பேச்சும் பார்வை பரிமாற்றமும், அலுவலக கிசுகிசுவும் அவனுக்கு சத்யதேவ் மீது சினம் வளர்ந்தது. 

 அதனை அடக்கியவனாக பூர்ணாவை நோட்டமிட்டான். 

பூர்ணாவோ எப்பவும் போல தனது டீம் மெம்பரோடு சாப்பாடு சாப்பிட டிபன் பாக்ஸ் எடுக்க, சூர்யாவுக்கோ தான் சீனியர் மேனேஜர் என்றதை விட சத்யதேவ் காதலனோடு சாப்பிட தான் தன்னை விலக்கி இருக்கின்றாளே என்று புரிந்துக் கொண்டான். 

இரண்டு நாளாய் சத்யதேவ் என்பவனை சுற்றி மொட்டுக்களாய் பெண்கள் கூட்டம் இருக்க 'டீம் லீடர் பூர்ணாவின் காதலன்' என்ற அடைமொழியால் விலகினார்கள். 

அதுவும் அவன் அருகே யாரும் சாப்பிடாமல் பூர்ணாவுக்கான இடம் என்று விடுத்து அமரவும், கடைசியாய் வந்த பூர்ணாவுக்கு வேறு வழியின்றி சத்யதேவ் அருகே அமர்ந்தாள். 

சத்யதேவோ இடது பக்கம் திரும்பாமல் மற்றவரிடம் பேசினான்.

 மற்றவர்களோ சிலர் மேஜையருகேயும் மேடம் சத்யதேவ் அருகே அமர்ந்து இருப்பதை கண்டு ஜோடிப் பொருத்தம் பார்க்கவும் கருத்து பரிமாற்றம் கூறவும், விஷயம் தெரிந்த சத்யதேவ் 'எப்படி விளக்கி சொல்வேன். இந்த லேடிஹிட்லருக்கு வேற அவளை பற்றி தான் காசப், அதுவும் என்னிடம் திரித்து பேசறாங்கன்னா என்ன பண்ணுவாளோ ஆண்டவா காப்பாத்து' என்ற வேண்டுதலோடு டிபன் பாக்ஸை மூடி வைத்து எழுந்து விட்டான். 

கை அலம்பி, கேபின் சென்று ‘ஸ்அப்பாடா’ என்றானது அவனுக்கு.

பூர்ணாவோ மூடிவைத்து நீரை பருக, மற்றவரின் பார்வை வித்தியாசம் கண்டு துணுக்குற்றவளாய் 'என்னவா இருக்கும்' என்று குழம்பினாள். 

இவளின் குழப்பம் அவனின் வருகையால் தேர்ந்தது. சூர்யாவுக்கு கோபம் அதிகரித்தது பூர்ணாவின் தனி கேபினிற்கு வந்து “காங்கிராட்ஸ் பூர்ணா லவ் பண்ணினா சீனியர் என்னிடம் சொல்ல என்ன வெட்கம்.

சத்யதேவ் குட் சாய்ஸ் தான்." என்றதும் பூர்ணா எரிச்சலில் முகம் சுழித்தாள். 

"என்ன பேசற... அவன் வந்து சொன்னானா.. அவனும் நானும் விரும்பறோம்னு." என்றதும், சூர்யா தலையாட்டி இல்லையென்றான். 

 "அவன் சொல்லலை ஆபிஸே சொல்லுது." என்று நேற்று அவன் இவளை பைக்கில் இடித்து சாரி கேட்டதை காதல் நாடகமென்று வர்ணம் பூசி பேசினான். 

இன்று அலுவலக ஆட்களில் சிலரிடம் கேட்டதற்கு ஆமென்றனரே என்று வாதிட்டான்.

பூர்ணாவுக்கோ மதியம் சத்யதேவ் பற்றி பேசியவர்கள் தான் கடக்கவும் வாயை மூடிய நிகழ்வு தோன்றியது. 

நேற்று அவன் பக்கம் சம்ருதி மற்றொரு பக்கம் ராகிணி என்று அமர்ந்து அவனை ஈ மொய்ப்பது போல பேசினார்கள். இன்றோ அவன் பக்கம் யாருமில்லை என்று அவன் அருகே அமரணுமா என்ற சலிப்போடு சென்று அமர்ந்ததை நினைவு ஏட்டில் மீட்டினாள்.

ஆனால் அதற்கெல்லாம் தன்னை இணைத்து இப்படியொரு காதல் காவியத்தை இயற்றிய 'அதிபுத்திசாலி' யாரோ என்று 'லாவா இதயம்' உடையும் அளவிற்கு பெருமூச்சை விடுத்தாள். 

முதலில் முன்னால் இருக்கும் 'கோமாளி'யிடம் பதில் அறிவித்திடு என்று புத்திமதி நவில, "அவன் என் லவ்வர் இல்லை. லூசு தனமா இப்படி கேட்காதே. துண்டு துண்டா சேர்த்து வச்சி ஒரு கதையை கிரியேட் பண்ணாம, நமக்கு வந்த பிராஜக்டை எப்படி குயிக்கா முடிக்கனு யோசி சூர்யா." என்று பேசினாள். 

"அப்போ... சத்யதேவை நீ விரும்பலையா?" என்று கேட்டான். 

"விரும்பலை... தெரிந்தவன். எப்படி தெரிந்தவன்னு கேட்காதே. நீ எதுக்கு என்னையே குடைந்துட்டு இருக்க?" என்று கடுகடுத்தாள். 

 "பிகாஸ் நான் உன்னை லவ் பண்ணறேன் பூர்ணா." என்றான்.

 பூர்ணா திகைத்து முடிக்க, சத்யதேவ், கதவை தட்டி நின்றான். 

‘நீ எதுக்கு குடைந்துட்டே இருக்க’ என்றதிலிருந்து சத்யா காதில் விழுந்தவை அடுத்து ‘நான் உன்னை லவ் பண்ணறேன் பூர்ணா’ என்ற சூர்யா வாய் மொழி வார்த்தை கேட்டதும், எகத்தளமாய் ‘தங்கைக்கு காதல் கல்யாணத்துக்கு அப்படி குதிச்சா. இப்ப என்ன பதில் சொல்வா. தனக்குனு வந்தா தான் அடுத்து அதோட கவலை தெரியும். இனி கொஞ்சமாவது கலைவாணி விக்னேஷை புரிந்துப்பா. நான் புரிஞ்சிட்டது மாதிரி.’ என்று எண்ணினான்.

சூர்யா விருப்பம் கூறியதையும் அதை சத்யதேவ் கேட்டதையும் கண்டு கோபமுற்றவளாய் சூர்யாவிடம் "உங்களுக்கான பதிலை நாளைக்கு சொல்வேன் இப்ப கிளம்புங்க சார்." என்று முறைத்து அறிவித்தாள். 

சூர்யா போகும் போது சத்யதேவை கடந்து சென்றான்.

சத்யதேவோ ஏதோ கேட்க ”ராகிணியிடம் கேட்டுக்கோங்க.” என்று பதில் தந்து அனுப்பினாள்.

 சத்யதேவோ "ஓகே பூர்...ணா மேம்" என்றவன் அமைதியாக வெளியேற, சொடக்கிட்டு முடித்தாள். 

அந்த நிசப்தத்தில் அவளின் சொடக்கு சத்தம் திமிராய் தோன்றியது. சத்யதேவ் செல்லாமல் அதே நேரத்தில் திரும்பாது கதவில் கை வைத்து இருந்தான். 

"இங்க எல்லாரிடம் காஸப் திரித்து விட்டிட்டு இருக்கியா. நானும் நீயும் லவ்வர்ஸுனு?" என்றதும் திரும்பியவன், "இதப்பார் யாராவது எலக்ட்ரிசிட்டியை டச் பண்ணி பார்க்க விரும்புவாங்களா? என்னை பொறுத்தவரை நீ ஒரு ஹை வோல்ட்டேஜ். உன்னிடம் பழக கூட நினைக்கலை. இதுல லவ்வு... சான்ஸேயில்லை. என்ன இழவோ உன்னோட தொடர்புபடுத்தி பேசறாங்க. 

என்னால ஒவ்வொருத்தரிடமா போய் இல்லைங்க நான் லவ் பண்ணலை லவ் பண்ணலைனு சொல்லிட்டு இருக்க முடியாது.

அப்படியே சொன்னாலும் நம்ப மாட்டறாங்க. 

 காஸப் எல்லாம் அதுவா வரும் அதுவா போகும். நாம அதை இக்னோர் பண்ணிட்டு நம்ம கடமையை பார்த்துக்கிட்டா போதும். 

மேபீ ஒரு ஆண் பெண் பெயரை இணைச்சி கிசுகிசுக்கறது எரிச்சலா இருக்கும். ஆனா அதை நீ கண்டுக்காம கையாளுவ. ப்ளிஸ் காஸப் வச்சி திரும்ப திரும்ப என்னை திட்டாதே.

இது காலையில எந்த ‘கபோதி’யோ விளையாட ஆரம்பிச்சிருக்கு சத்தியமா நான் வாங்கலை” என்று பேக்கேட்டிலிருந்து கீசெயினை எடுத்து மேஜை மீது வைத்தான்.

 அதனை எடுத்து பூர்ணா பார்த்தாள். 'ஐ லவ் பூர்ணா' என்றிருந்தது. 

 "நான் இந்த அலுவலகத்துல புதுசா வந்திருக்குற ஒர்க்கர் மட்டும் தான். என் வேலையை மட்டும் பார்க்கறேன்." என்று கதவை திறந்து சோகமாய் வெளியேறினான். 

 சத்யதேவ் சென்றதும் பூர்ணா அறையில் கண்ணாடி கதவில் பார்வை பதித்தவர்கள் அனைத்தும் ஆடியோவின்றி வீடியோவாக பார்த்து காதலன் சத்யா காதலி பூர்ணாவை சமாதானப்படுத்தி கீசெயினை கொடுத்து விட்டதாக ஒளிப்பரப்பியதாக காட்சிக்கு எடுத்து கொண்டனர். 

 பூர்ணாவோ கீசெயினை எடுத்து 'யார் இப்படி பிளே பண்ணியிருப்பாங்க. நிச்சயம் சத்யதேவ் இப்படி பண்ண வாய்ப்பில்லை.' என்று யோசித்தாள். 

நேரமாக கீசெயினை ஹாண்ட்பேக்கில் போட்டுவிட்டு வெளியேறினாள். 

 சத்யதேவ் பைக் எடுத்து சிவனேயென்று கடக்க, பூர்ணா மறுபக்கமும் காரில் ஏறினாள். 

-தொடரும்
~பேரரளி