பூ பூக்கும் ஓசை -7

பூ பூக்கும் ஓசை-7

        கோகிலா வழக்கமாய் சமையல் செய்ய ஆரம்பித்தார்.

     கலைவாணிக்காக கொஞ்சமும் வருந்துவது இனி தேவையற்றதாய் எண்ணியிருப்பார் போல. பூர்ணாவுக்காக அவளுக்கு பிடித்ததை செய்து டிபன் கட்டி எடுத்து வைத்தார்.

     “இங்க பாரு பூர்ணா சாப்பிடாம அப்படியே ஆயாம்மாவுக்கு கொடுத்துட்டு வந்திடாதே. வேண்டுமின்னா அவங்களுக்கும் ஒரு டிபன் பாக்ஸில வைக்கிறேன். நீ சாப்பிடாம இருக்க கூடாது. அம்மாவுக்கு நீ சாப்பிடாம இருந்தா தான் கவலை புரிதா.” என்று பிசிறின்றி தெளிவாய் ஆணித்தரமாய் பேசினார்.

     “உங்கப்பா வரன் தேடிட்டு இருக்கார் நல்லபடியா வரன் அமைஞ்சா அந்த நேரம் பார்த்து நீ வத்தலோ தொத்தலோ நிற்க கூடாது.” என்று கண்டித்து கூறினார்.

       அன்னையை இப்படி பார்க்க மகிழ்ந்தவளாய் “சரிம்மா” என்று தலையாட்டினாள்.

      நாராயணனும் ஸ்டேஷனரி கடைக்கு சென்றிருந்தார். அவரோடு பூர்ணாவும் அமர்ந்து கொண்டாள். பூர்ணாவின் கேப் அவள் தந்தையின் கடையருகே வந்து தான் ஏற்றி செல்லும். வீடுவரை வர இயலாது. சற்று குறுகலாய் இருக்க சில சமயம் கடினப்பட்டு வந்து சேர்ந்து விடுவார். பெரும்பாலும் இப்படி தான் கடையருகே இருக்கும் பஸ் ஸ்டாப் இடத்தில் ஏறிக் கொள்வாள்

      கோகிலா எப்பொழுது வேண்டுமென்றாலும் ஸ்ரீநிதி வருவாளென காத்திருந்தார்.

    அலுவலகம் வந்ததும் நேற்றைய சுணக்கமின்றி தெளிவாய் நடந்து வந்தாள்.

       சத்யதேவ் அவளை கண்டு சிஸ்டம் தலையை விட்டு எதையோ தீவிரமாய் தேடினான்.

     பூர்ணா அவனை கடக்கும் நேரம் ஒர் நொடி நின்று நிதானித்தே கடந்தாள்.

      ‘இவனுக்கு யாரு நம்பர் கொடுத்தானு முதல்ல கண்டுபிடிக்கணும்.’ என்றவள் அறைக்குள் சென்றாள்.

    அவள் சென்றதும் எழுந்து சேரில் நன்றாக சாய்ந்தமர்ந்தான்.

     ‘ஒரு பொண்ணுக்கு பயப்படறியே சத்யா… இது தேவையா..?’ என்றது மனசாட்சி.

      அவன் எட்டி எட்டி பார்க்க, அவளிருந்த இடத்தில் கைக்கு அடக்கமாய் இருந்த கண்ணாடி விநாயகரை சுற்றியிருந்த காய்ந்த பூக்களை அகற்றினாள்.

   வீட்டிலிருந்து எடுத்து வந்த மலரை போட்டு விட்டு வணங்கி திரும்பினாள்.

    சத்யதேவ் அவளை கண்டு உதடு விரிந்து மென்னகை புரிய துவங்க, தன்னை அவள் காண்கின்றாள் என்றதும் பார்வையை மாற்றி கொண்டான்.

     போதாத குறைக்கு அதன் பின் வந்த சூர்யா இவளின் கேபின் வந்து ‘குட்மார்னிங்’ வைத்தான்.

      “குட்மார்னிங் சூர்யா” என்று அவன் நேற்று கொடுத்த பணியில் யார் யார் என்ன செய்து தரவேண்டும் என்று பகுத்து லிஸ்ட் தயாரித்தாள்.

     “ஹாய் பூர்ணா பிரேக் டைம் டீ வித் சமோசா சாப்பிடலாமா?” என்று வந்து சேர்ந்தான் சூர்யா.
  
     “சூர்யா… எனக்கு வேலையிருக்கு. நீங்க போங்க” என்று பதில் தந்துவிட்டு கணினியில் மூழ்கியிருந்தாள்.

     ‘இவனுக்கு இங்க மேனேஜர்னு தெரியுமா தெரியாதா. இன்னமும் சீனியர் என்று வெட்டியா சுத்திட்டு இருக்கான்’ என்று மனதிலேயே திட்டினாள்.

     மதியம் சாப்பிடும் நேரமும் ‘என்னோட சாப்பிட வர்றியா பூர்ணா?” என்றதும் சூர்யாவிலிருந்து “சீனியர் நீங்க சாப்பிடுங்க. என்னோட என் டீம் கொலிக் வருவாங்க. சாரி.” என்றுரைத்தாள்.

     இம்முறையும் சூர்யா “ஓகே டேக் கேர்” என்று நகர்ந்தான்.

       அவளின் டீம் ஆட்களில் சத்யதேவும் அமர்ந்து அமைதியாய் சாப்பிட அவளும் அமர்ந்தாள்.

     நேற்று விட மனமும் உடலும் சமனாகியிருக்க, உணவை விழுங்கினாள்.

   சத்யதேவோ அவளுக்கு நேற்றை விட இன்று பரவாயில்லை என்று சாப்பிட்டான்.

      பாதி சாப்பாட்டில் மூடிவைத்து எழுவும் சத்யதேவ் எழுந்தான்.
  
    நேற்று போல எங்கே தனியாய் அமர்ந்து பேசிடுவானோ என்று ப்ரியாவுக்காக காத்திருந்தாள்.

     ப்ரியாவும் உணவை சாப்பிட்டு முடிக்க எழுந்தாள்.

     அவள் எழுந்த அடுத்த நொடி, “ஹேய் ப்ரியா வெயிட் நானும் வந்துடறேன்” என்று கலந்தான்.

      பூர்ணாவோ இவளிடம் எண்ணை வாங்கினானோ என்று ப்ரியாவிடம் அவன் இருக்கும் நேரமாய் பார்த்து “ஏன் ப்ரியா சமீபமா யாரிடமாவது என் நம்பரை கொடுத்தியா?” என்றாள்.

     “இல்லையே மேம். ஏன்” என்றாள் ப்ரியா.

     “நத்திங் ப்ரியா யாரோ ஒருத்தன் தேவையில்லாம கடலை வறுக்க ட்ரை பண்ணறான்.” என்று கூறினாள்.

     “நோ மேம் உங்க நம்பரை உங்களிடம் கேட்காம தரமாட்டேன்” என்றாள் அந்த சிறியவள்.

  சத்யதேவிற்கோ சினம் துளிர்த்தது. அவளிடம் அந்த அர்த்ததில் அவன் அனுப்பவேயில்லை. அப்படியிருக்க அவளை முறைத்து நின்றான்.

       பூர்ணாவோ ஒரு உதாசினமும் ஏளனத்தையும் வழியவிட்டு நகர்ந்தாள்.

     அவரவர் இருக்கைக்கு வந்தப்பின் பூர்ணா அவளின் பணியில் சரியாய் பொருந்திக் கொண்டாள்.

   ஆனால் சத்யதேவோ ‘நான் என்ன கடலை வறுக்கறேன். ஒரு மெஸேஜ் பண்ணி சாரி கேட்கறது குற்றமா டா.’ என்ற எண்ணமே அலை மோதியது.

     சட்டென பூவை கொடுத்து அனைவரின் பார்வையையும் காதலி என்பதாக பேருந்தில் தன்னால் நிலைநிறுத்த பெற்றவள் என்றோ, ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமண ஜோடிகள் அங்கும் இங்கும் அலைந்திருக்க அவளின் அனுமதியின்றி கைப்பிடித்து நிறுத்தியதோ, அல்லது அவளிடம் தனக்கு நல்ல பெயர் இல்லையென்று தெரியாமல் மேலும் மேலும் நண்பன் செய்த தவறை நியாயப்படுத்தி இவனுக்கு அவப்பெயரை அவனாகவே சூட்டிக் கொண்டதை அவனிடம் யாரும் வரையறுக்காத வரை அவன் அறிவதில்லை.

    அவளின் எண்ணை கண்டறிந்து மன்னிப்பு கேட்டதும் தவறாக தான் எண்ணுகின்றாளென அவனுக்கு புரியவில்லை.

   அவளிடம் பேச எடுக்கும் முயற்சி என்று எண்ணினாள்.

   தங்கையை அவனின் நண்பனை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டு வாழ வைக்க வரும் தூதாக கருதினாள்.

     மூன்று முப்பது இருக்க சூர்யா மீண்டும் வந்து “ஹாய் பூர்ணா மார்னிங் தான் பிரேக் டைம் என்னோட வந்து டீ குடிக்கலை. இப்ப வர்றியா… நீயும் வேலைப் பார்த்து டயர்டா இருப்ப” என்றதும் பூர்ணா அவனை விநோதமாக பார்த்தாள்.

     “சார்… நீங்க இங்க மேனேஜர். எப்ப பாரு என்னோட கேபின்ல வந்துட்டு டீ காபி சமோசானு சாப்பிடலாம் வர்றியானு கேட்கறது நல்லாயில்லை.” என்று எழுந்து கூறினாள்.

     “நான் உன்னோட சீனியர் சூர்யா தானே” என்றான்.

     “சீனியர் காலேஜ்ல சூர்யா. இங்க நீ மேனேஜர். அதுக்குண்டான கெத்தோட இரு. இப்படி அடிக்கடி இரிட்டேட் பண்ணாதே.

    உன்னை சூர்யா என்று பிரெண்டா சீனியரா கூப்பிடறதால தான் உனக்கு ஆபிஸ் பொறுப்பு வரலை.

    சார் என்ற ரேஞ்சு தான் பெஸ்ட். நான் சார் என்ற ரெஸ்பெக்ட் தர்றேன். நீங்க அதுக்குண்டான ரெஸ்பெக்ட ஆபிஸ்குள்ள காப்பாத்திக்குங்க.” என்றதும் சூர்யாவுக்கு முகத்திலறைந்தது போன்ற இருக்க அவளையே பார்த்து கொண்டு “சாரி பூர்ணா’ என்று வெளியேறினான்.

பூர்ணா எவ்வித சலனமின்றி பணியை செவ்வென கவனிக்க ஆரம்பித்தாள்.

    சத்யதேவ் அவர்களின் பேச்சு புரிபடாமல் அடிக்கடி கண்ணாடி கதவை நோட்டமிட்டான்.

      கணினியை தட்டிக் கொண்டேயிருந்த பூர்ணாவோ, சட்டென அவனை நோக்க, அவனோ அவசரமாக தன் கணினியை இயக்கினான்.

     ப்ரியாவை அழைத்து “நியூ கம்மர் சத்யதேவை கூப்பிடு” என்று அனுப்பி வைத்தாள்.

    ப்ரியா அவனிடம் வந்து “மேம் உங்களை கூப்பிட்டாங்க” என்றதும் எழுந்தான்.

        கதவை திறந்து அவன் பாட்டிற்கு வரவும் பூர்ணா திமிராய் பார்த்து “என்னயிது?” என்றாள்.

     “என்ன பூர்ணா.?” என்றான் சத்யதேவ்.

     “முதல் இரண்டு தவறு கதவை திறந்து நீங்களா வரக்கூடாது. உள்ள வரலாமா மேம்னு கேட்டுட்டு வரணும். 

    என்னனு கேட்கணும்.. சொல்லுங்க உள்ள வரலாம மேம்னு புரிதா?” என்றாள்.

    சத்யதேவ் முறைத்து கொண்டு தலையாட்டினான்.

     “பெட்டர்… அப்பறம் அதென்ன அங்கிருந்து கண்ணாடி வழியா குறுகுறுனு பார்க்கறது. அசிங்கமா இல்லை ஒருத்தரை அடிக்கடி நோட்டமிடறது.” என்றதும் முறைப்பதை குறைத்து விட்டு தலைகுனிந்தான்.

   “சாரி மேம்.” என்றான் சத்யதேவ்.

    “தட்ஸ் குட் போங்க.” என்று அனுப்பினாள்.

    அவனோ இரண்டடி எடுத்து வைத்து திரும்பியவன் “உங்க சிஸ்டரிடம் பேசினிங்களா?” என்று கேட்டான்.

    அவள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கையை கட்டி புருவமேற்றி என்ன என்று கேட்டாள்.

     “இல்லை… விக்கி கலைவாணி போனை தூக்கி போட்டு உடைச்சிட்டான். புது நம்பர் வாங்கி கொடுத்திருக்கான். நீங்க ஒருவேளை பேசினிங்களோனு கேட்டேன்.” என்றான்.

    “லுக் மிஸ்டர் சத்யதேவ். இது ஆபிஸ்.. ஆபிஸ் டைம்ல பர்ஸனலை பேசக்கூடாதுனு தான் சூர்யாவை திட்டி அனுப்பியிருக்கேன். நீங்க வேற பெர்சனஸை கிளறுறீங்க.

முதல்ல கலைவாணி என்றவள் என் தங்கச்சி. அதுக்காக அழுதேன், கவலைப்பட்டேன். இப்ப அவ உங்க பிரெண்ட் மனைவி. எனக்கு அடுத்தவங்க பெர்ஸனல் தேவையற்றது. அதுவுமில்லாம நீ கர்ப்பமா  ஏன் கல்யாணம் பண்ண, எதுக்குனு கேட்கற ஆள் நான் இல்லை.

     என் வேலை மட்டும் பார்த்துட்டு போற கேரக்டர் நான். சோ போன் எண் மாற்றியதற்கு எல்லாம் என்னிடம் வந்து கேள்விக் கேட்கற வேலை வச்சிக்காதிங்க.

    இங்க வேலையை பத்தி மட்டும் பேசினிங்கனா நல்லதுனு நினைக்கிறேன். போங்க போய் வேலையை பாருங்க. உங்க பேன்ஸ் எல்லாம் இங்கயே நோட்டமிடறாங்க உங்களை மாதிரியே.

     அவங்களிடம் கடலை போட்டு, மடக்கி காதலிச்சு, ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுங்க வாழ்த்துகள்” என்றாள் நக்கலாய்.

       ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு அவளின் மிடுக்காய் பேசுவதாக காட்ட, மௌவுனமாய் வெளியேறினான்.

     அவள் கூறியது போல பெண்களில் சிலர் அவனை தான் வட்டமிட்டு சுழன்றி என்ன? என்பது போல பார்த்தனர்.

    ஒரு நொடி அவமானமாய் தோன்றியது. அவள் அமர்ந்திருந்த தோரணையும், பேச்சும், எந்தவொரு ஆணுக்கும் பெண் ஆளுமை செய்தால் பிடித்திருக்காதே.

    சத்யதேவும் அவள் தன்னை பேச பேச அவள் மீது எரிச்சலடைந்தான்.

    ‘பெரிய இவ… ஆமா மேனேஜரையே திட்டி அனுப்பியதா சொன்னா. அதான் அந்த சூர்யா முகம் பிரகாசமா இல்லாம இருண்டு போயிருந்ததோ?!
     என்னை விட அதிக டோஸ் வாங்டியிருப்பான் போல பல்பு அதிகமா ப்யூஸ் போயிருக்கு.’ என்று ஆனந்தம் கொண்டான்.

   மனசாட்சியோ ‘நீயும் தான் வாங்கி கட்டிருக்க’ என்று இளப்பமாய் கூறியது.

      உண்மை ஒப்புக்கொள்ள வேண்டியதாய் நின்றான்.

    அலுவலக நேரம் ஐந்தை நெருங்க ஒவ்வொருத்தராய் கணினியை அணைத்து முடக்கினார்கள்.

     சத்யதேவ் பைக்கை அதிவேகமாய் எடுத்து வந்து முறுக்க, அவன் நேரம் பூர்ணாவை டயரால் மெதுவாய் இடித்து விட்டான்.
  
      காளியவதாரமாய் திரும்பி நின்றவளை கண்டு சுற்றி முற்றி பார்த்து, “பூர்ணா வேண்டுமின்னே பண்ணலை. பைக் சர்வீஸ் முடிஞ்சி வந்துயிருக்கு. சல்லுனு சீறி பாய்ந்துடுச்சு ட்ரஸ்ட் மீ.” என்று கூறினான்.

   அவன் பூர்ணா என்று விளித்து விட்டதை நாலைந்து பேர் திரும்பி பார்த்து கேட்டு விட்டனர்.

    “கால் மீ மேம்.” என்று கத்தினாள்.

    “ம்ம் ஓகே.” என்றவன் “சாரி” என்று காதில் கை வைத்து கேட்க, பூர்ணா முன் அவள் செல்லும் கார் வந்து நிற்கவும் ஏறினாள்.

     ‘க்ரைம் ரேட் ஏறிட்டே இருக்கு.’ எனக்கும் இவளுக்கும் ஏதோ விட்டக்குறை தொட்டக்குறை இருக்கு. இவளிடம் நான் வசமா தலை கொடுத்துட்டேன்’ என்று சத்யதேவ் புலம்ப, ‘பூங்கொத்து தானடா கொடுத்த’ என்று நகைத்த மனதை அடக்கி இருசக்கர வாகனத்தை எடுத்தான்.

        சூர்யாவோ ‘இந்த பூர்ணாவோட சத்யதேவ் கனெக்டிங்கே சரியில்லையே. ஒருவேளை இந்த இடைப்பட்ட காலத்துல அவ விரும்பிய பையனா இருப்பானோ?’ என்று சூர்யா மனம் கொதித்தது.

     அவனுக்கு பூர்ணாவை இங்கு காணும் வரை அவளை பற்றிய எண்ணம் பூர்ணாவை போலவே மறந்து இருந்தான்.

   பூர்ணா புகைப்படம் ஆண்டுவிழா புகைப்படத்தில் கண்டதும் ஏதோ அவனுக்கும் அவளுக்கும் விதி ஏதோ எழுதி வைத்ததாக நாயகன் அவதாரம் எடுத்தான்.

   ஆனால் தற்போது சத்யதேவ் என்றவன் நாயகனாய் ஏற்கனவே களம் இறங்கி அவளின் மனதை கொய்து விட்டானோ என்ற எண்ணம் மேலோங்க கரிப்பூசிய நிலையில் தன் பிம்பம் இருப்பதாய் தகித்தான்.

    முன்பு விளையாட்டாய் புரளி கிளப்பி கல்லூரியில் பரவ செய்தவனுக்கு நாளை முதல் அலுவலகம் முழுவதும் சூர்யா பூர்ணா காதல் கிசுகிசு பேச வைக்க போவதாக சூளுரைத்து அவனின் காரை கிளப்பினான்.

      பூர்ணாவுக்கு சத்யதேவின் சாரி கேட்டதும் அவனின் நுண்ணுணர்வும் இமையில் வந்து செல்ல, ‘அரைலூசு வண்டியை கூட ஒழுங்கா ஓட்ட தெரியலை’ என்று முனங்கினாள். 

     “மேடம்..” என்றதும் தான் கார் ஓட்டுனர் அவரை கூறுவதாக எண்ணி திரும்புவதை கண்டாள்.

      “அய்யோ மணி அண்ணா உங்களை இல்லை. ஆபிஸ்ல ஒரு கிறுக்கன்.” என்றாள்.

    “அந்த நேவி ப்ளூ தம்பியா மேடம்” என்றதும், “அவனே தான் அண்ணா. டோண்ட் மிஸ்டேக் மீ” என்றாள்.

      “சரிங்க மேடம்” என்று மணி என்பவர் கண்ணாடி வழியாய் பூர்ணாவை கண்டு தன்னை கூறவில்லையென நிம்மதியாய் ஓட்டினார்.
  
      பூர்ணாவோ இவனால நான் பைத்தியமாகிடுவேன்’ என்று போனை எடுத்தாள். அதில் தன் அத்தை மகள் ஸ்ரீநிதி வந்துவிட்டாளா என்று கேட்டு அனுப்பினாள்.

  நாராயணன் கடை வரவும் இறங்கி தந்தையின் திருமுகத்தை தூரத்திலிருந்து கண்டு பூவாய் வீட்டுக்கு நடந்தாள். அவரும் மகளின் கார் வந்ததும் ஒரு தலையசைப்பை கொடுத்து பூரிப்பார்.

      வீட்டுக்குள் நுழையவும் ஜதிகட்டை இசைக்கும் பாடல் ஒலிக்க, ஆடல் கேட்டது.

      கதவை திறக்க ஸ்ரீநிதி தான் பரதம் ஆடியபடி ஒற்றை பாதம் தூக்கி அபிநயம் பிடிக்க பூர்ணாவை கண்டதும் நிறுத்தி விட்டு ஓடிவந்து அணைத்தாள்.

     “பூர்ணா அண்ணி எப்படியிருக்கிங்க. பாருங்க வந்ததும் அத்தையை கலகலப்பா வச்சிக்கிட்டேன்.” என்று பேச, அவளின் உற்சாகம் பூர்ணாவை தோற்றிக் கொண்டது.

      அதன் பின் எப்ப வந்த? படிப்பு எப்படி போகுது? என்று ஆரம்பித்து கோகிலாவுக்கு தெரியாமல் கலைவாணி திருமணத்தை பற்றியும் பேசிக் கொண்டனர்.

    பூர்ணா அப்பொழுதும் தங்கை கர்ப்பம் என்றதால் தான் மணந்தால் என்று கூறவில்லை. அதை மட்டும் மறைத்து விட்டாள்.

     காதலிச்சிருக்கா கல்யாணம் பண்ணியிருக்கா.. பெயர் விக்னேஷ். அவங்க அப்பா அம்மா என்ன பண்ணறாங்க எங்க இருக்காங்க ஒன்னும் தெரியாது.

நம்ம வீட்ல அம்மா அப்பா வாசலோட அனுப்பிட்டாங்க.

    அந்த விக்னேஷோட பிரெண்ட் மட்டும் என் ஆபிஸ்ல என் டீம்ல தான் வேலைப் பார்க்கறான்.’ என்ற உபரி தகவலை சிதற விட்டு விட்டாள்.

-தொடரும்
~பேரரளி.