பூ பூக்கும் ஓசை-6

பூ பூக்கும் ஓசை-6

         அடிக்கடி சத்யதேவ் தான் பூர்ணாவை நோட்டமிட்டான். அவளோ நிலைக் கொள்ளாமல் தவித்து சீக் லீவ் எடுத்து கொண்டு சென்றாள்.

     சூர்யாவோ என்ன ஏதென கேட்டாலும், “வீட்ல பிரச்சனை சூர்யா. அப்பா அம்மா நினைவாயிருக்கு. கொஞ்சம் மனசு சரியில்லை. நீ அடிக்கடி டீம் லீடரை கூப்பிட்டனு ஸ்டாப் ஒருத்தங்க சொன்னாங்க அதனால தான் வந்தேன். இப்ப இங்க வந்ததும் கொஞ்சம் நிலைமையை சமாளிச்சி அதுலயிருந்து வெளியே வந்திடுவேன்னு வந்தேன். ஆனா முடியலை. சூர்யா ப்ளிஸ் இன்னிக்கு லீவ் எடுத்துக்கறேன்” என்றாள் பூர்ணா.

      “உன்னை ஆன்வேல் டே போட்டோல பார்த்ததும் நம்ம ஜூனியராச்சேனு சந்திக்க இரண்டு நாள் வேகமாக வந்தேன். நீ இரண்டு நாளும் லீவ் என்றதும் நான் தான் உன் டீம்ல இருந்தவங்களிடம் கேட்டேன். ப்ளிஸ் எல்லாம் நமக்குள் எதுக்கு? தாராளமா லீவ் எடுத்துக்கோ.

அப்பறம் இது எதுவும் என்னால காயப்பட்டு போகலையே.” என்று கேட்டான் சூர்யா.

    “அன்னிக்கு காலேஜ்லயே ப்ரின்சிபாலிடம் கம்பிளைன் சொன்னப் பிறகு நான் அதை பற்றி பெரிசா எடுத்துக்கலை. சொல்லப்போனா அது என்னை பாதிக்கலை மறந்தே போன விஷயமா மாறிடுச்சு.

   இப்ப உங்களை பார்த்ததும் சீனியர் நமக்கு மேனேஜரா வந்திருக்கார் என்ற சந்தோஷம் தான்.

     என் கவலைக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது வேற” என்றதும் சூர்யா மனதில் ‘என்னது பெரிசா பாதிக்கலையா? லவ் பண்ணறேன்னு ரூமர் கிளப்பியது பாதிக்கலையா? என்ன இவ மறந்தே போச்சுனு சொல்லறா’ என்று எண்ணியதை வெளியே காட்டிக்கவில்லை.

     அவள் ஹாண்ட்பேக் எடுத்து தலையாட்டலில் கிளம்ப, சூர்யா “பை பூர்ணா.” என்று வழியனுப்பினான்.

     பூர்ணாவோ சத்யதேவை கடந்து செல்ல, அவனின் பார்வை நெற்றி சுருக்கம் என்று கவனித்தவளுக்கு, ‘ஏன் போற?’ என்று கேட்பதாக தோன்றியது.

     ஆனால் டீம் லீடரான அவளை அனைவர் எதிரிலும் இன்று வந்த தான், நிற்க வைத்து வினா தொடுக்க இயலாதே.

     வெறும் பார்வையாளராய் வேடிக்கை பார்த்தான்.

      அவளும் சோர்வாய் கிளம்பியவள் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்ல வழியை லேண்ட்மார்க் கூறிவிட்டு கண் மூடினாள்.

      தாய் தந்தையர் ஸ்டேஷனரி கடையில் இருக்க அங்கேயே நிறுத்த கூறிவிட்டு இறங்கினாள்.

     “என்னடா பாதிலயே வந்துட்ட?” என்றார் நாராயணன்.

       “நீங்க என்ன செய்யறிங்கனு தோனிட்டே இருந்ததுப்பா. அதான் வந்து பார்க்கலாம்னு” என்று அம்மா அப்பாவை பார்த்தாள்.

    கோகிலாவோ டிபன் பாக்ஸை கழுவ எடுக்க அது ஏற்கனவே பளிச்சிட்டு விளக்கியிருந்தது.

     ஸ்டேஷனரி கடையொட்டி சற்று தள்ளியிருந்த இடத்தில் கேக் கடையிருக்கே ப்ருட் கேக் வாங்கி வந்து கோகிலா கொடுத்தார்.

     “என்னம்மா நான் என்ன குழந்தையா?” என்று சலித்தாள்.

     “இல்லைடா… கொண்டு போனா சாதத்தை ஆயம்மாவுக்கு கொடுத்துட்டு என் பிள்ளை வந்திருக்கே. 

    உங்கப்பா எனக்காகவும் நான் அவருக்காகவும் சாப்பிட்டோம். நீ ஏன் டா சாப்பிடலை. முதல்ல கேக்கை சாப்பிடு” என்று அதட்டு போட்டார்.

    ‘அம்மாவுக்கு பாத்திரம் கழுவி இருந்ததால் அது வேலைக்காரப்ப பெண்கள் தான் சாப்பிட்டு இருப்பாங்கனு புரியுது. நான் சாப்பிடலைனு தெரிந்து ப்ரூட் கேக் வாங்கி வந்து தர்றாங்க. எப்படி இப்படிப்பட்டவங்களுக்கு  கலைவாணியால் தப்பு செய்து கரிபூச முடிந்தது.

   அம்மாவிடம் பேசாம அவளால எப்படி இருக்க முடியுது. காதல் இத்தனை சுயநலமானதா‘ என்று வெறுத்தாள்.

    இதே மற்ற தாய் தந்தை என்றால் நீயும் காதலிக்கறியா என்று கோபம் உண்டாகி மற்றொரு பெண்ணையும் வார்த்தையால் வதைத்து விடுவார்கள். ஆனால் என்னை இன்னும் தாங்குகின்றனர். ஏன் இவர்கள் கலைவாணியை கூட திட்டி தீர்க்கவில்லை. இப்படி ஊமையா இருந்து கல்யாணம் செய்துக்கிட்டாளேனு தான் வருந்தறாங்க. இப்ப மட்டும் கலைவாணி கர்ப்பம் ஆனது தெரிந்தா ஓடிஞ்சிடுவாங்க.’ என்று கவலையை புதைத்தாள்.

    இங்கு கோகிலாவும் புதைத்து தான் இருந்தார்.

    கோகிலா பாத்திரம் கழுவிவிட்டு வருவதாக கூறி நாராயணனை அனுப்பிவிட்டு கதவை அடைத்து கலைவாணிக்கு போன் செய்தார்.

    தானாக போன் செய்தால் அவள் இன்னமும் தங்களை மதிக்க மாட்டாளென தோன்றினாலும் பெத்த மனம் பித்து கொண்டதல்லவா அழைத்து விட்டார்.

     கர்ப்பவதியாக இல்லாமல் இருந்து வேறு காரணம் இக்கட்டு என்று இருந்தால் புரிந்துக் கொள்ள முயலலாமென மனதை தேற்றிக் கொண்டார்.

    ஆனால் கலைவாணி போன் எடுத்ததும் ஆனந்தமாக, “அம்மா… நீயா போன் போட்டியா மா. என்னை மன்னிச்சிட்டியா அம்மா. நான் அன்னிக்கு போன் போட்டப்ப அப்பா ‘தயவு செய்து போன் போட்டு மிச்ச மீதி உசிரை வாங்காதேனு சொல்லிட்டார் மா’ என்று அழுதாள்.

     கோகிலாவோ மௌவுனம் கலைந்து, “நான் உன்னோட கொஞ்சி குலாவி உன்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லறதுக்கு இல்லை. ஏன் இப்படி எங்களிடம் சொல்லாம கல்யாணம் பண்ணின காரணம் என்ன?” என்றார் நேரிடையாக.

    விக்னேஷ் வேறு வீட்டில் இல்லாது அலுவலகம் சென்றிருக்க, தனியாய் எப்படி கூற என்று தவித்தவளாய் அப்பொழுதும் அழுதாள்.

    “இங்கே பாருடிம்மா..  உன் அழுகையை கேட்க போன் பண்ணலை. காரணம் கேட்கறேன் சொல்லு. உன் வீட்டுலயும் உன் புருஷன் வேலைக்கு போயிருப்பார் தானே. அம்மாவிடம் சொல்ல என்ன தயக்கம். சொல்லு… இந்த கட்டை அந்த காரணத்தை தெரிஞ்சிண்டு உன்னை புரிந்துக்க பார்க்கறேன்” என்றார். அவரின் வார்த்தையில் மேலும் அழுதவள் “அம்மா… அம்மா…” என்றதை தான் மீண்டும் மீண்டும் கூறினாளே தவிர தன் கர்ப்பவதியென்று கூற அவமானமாய் உணர்ந்தாள்.

     “என்னடிம்மா தலைக்கு ஊத்தலையா… நாள் தள்ளிப்போச்சா… தாலிக்கு முன்ன வயித்துல சிசுவை வாங்கிட்டு அதையும் அழிக்க முடியாம கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா” என்று சலனமேயில்லாமல் கேட்டார்.

   கோகிலாவுக்கு மகளின் வெடித்து அழும் அழுகையே தெரிவித்து விட்டது.

    “அம்மா… அம்மா… என் மேல தப்பில்லை மா. ஒரு முறை தான் எல்லை மீறினோம்மா அது கூட நாங்களா எந்த தப்பும் செய்யணும்னு செய்யலை. தனிமை சூழ்நிலைனு எல்லை மீறிட்டோம்மா இப்படி ஆகும்னு தெரியாது மா.” என்று அழுதாள்.

     “உன் பிறந்தநாளுக்கு உன்னையே தூக்கி கொடுத்துட்ட? அப்படி தானே” என்று அவளின் பிறந்த நாள் அன்று தான் இப்படி தவறு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று யூகித்து விட்டார் அன்னை கோகிலா. அன்று தானே மகள் நேரம் கழித்து வந்தது.

    “ஆமா அம்மா.” என்றாள். கலைவாணி.

“நல்லாயிரு… என் மக பையன் வீட்ல அவசர கல்யாணம் பண்ணறாங்க அதனால காலேஜ் போன உன்னை கூட்டிட்டு போய் கட்டிண்டான்னு நினைச்சேன். ஆனா…

     என்னோட மக கலைவாணிக்கு சூதூவாது தெரியாதுனு சின்ன பிள்ளைனு நானும் உங்கப்பாவும் உன்னை எல்.கே.ஜி பாப்பாவாவே கண்ணுல வச்சி நினைச்சிட்டோம்.

   பொண்ணுங்க வளர்ந்திட்டிங்கனு செருப்பால அடிச்சி புரிய வைச்சிட்ட.

    உனக்கு ஒரு புது உறவு வயித்துல கடவுள் கொடுத்திருக்கார். நல்லபடியா வாழு. ஆனா உனக்கு அம்மா, அப்பா, அக்கா என்ற உறவை கடவுள் எடுத்துக்கிட்டார். தயவு செய்து இனி இந்த வீட்டு வாசல் பக்கம் வந்திடாதே.

   என் மக ஒருத்தி தான் அது பூர்ணா தான். கொஞ்சம் கோவக்காரி ஆனா உன்னை மாதிரி முதுகுல குத்த மாட்டா.

    உனக்கு கல்யாணம் ஆனப்பவே அப்பா அம்மாவை ஒதுக்கினவள் நீ. அதனால பெரிசா கஷ்டமிருக்காது. ஆனா நாங்களும் உன்னை ஒதுக்கிட்டோம்னு புரிஞ்சிக்கோ.” என்று கோகிலா பேச பேச அந்தபக்கம் “அம்மா அம்மா” என்ற அலறலும் அழுகையும் அதிகரிக்க கலைவாணி துவண்டாள்.

    “நீ மாசம் மாசம் தலைக்கு ஊத்தறதை வச்சி சந்தேகத்துல நானா உண்மையை யூகிச்சிட்டேன். தயவு செய்து பாசம் வைக்கிறேன்னு என் கணவரிடம் உன் நிலையை சொல்லிடாதே. மனுஷன் தாங்கமாட்டார் செல்லம் கொடுத்து தானே மகளை தவறான பாதைக்கு போயிட்டானு அவரே அவரை வருத்திப்பார். அதனால என் கணவருக்கு போன் செய்து உன் புகழை பாடாதே. என் பெரியவளாவது நிம்மதியா இருக்கட்டும்.” என்று அணைத்தார்.

     கோகிலா அதன் பின் முதுகில் குத்தியவளை விட முன்னே குலவிளக்காய் நிற்கும் பூர்ணாவை கண்டு யோசிக்க ஆரம்பித்தார்.

    நிஜமாகவே இருபத்தியேழுல வரன் பார்க்கலாம் என்ற முடிவோடு இருந்த குடும்பம் தீவிரமாய் இனி அவளின் வாழ்வை சீராக்க மனதில் உறுதி எடுத்தது.
   
   அதன் பின் இங்கு வந்து நாராயணனிடம் எதுவும் கூறாமல் சாப்பிட வற்புறுத்தினார்.

  பெரியாய் கலைவாணியை பற்றி பேசினாலும், “ஓடிப்போனவளை விடுங்க. பூர்ணாவுக்கு தரகரிடம் வரன் பார்க்க சொல்லி வையுங்க. நம்ம சேஷானந்த் அண்ணாவிடம் சொன்னிங்கனா நமக்கும் நம்ம பூர்ணாவுக்கும் ஏத்த மாதிரி வரனை சொல்வார்.” என்று கூறவும் தலையாட்டி அதற்கான ஆரம்ப புள்ளியை எடுத்து வைத்தார்கள்.

    பூர்ணாவின் ஜாதகம் வாட்சப்பில் தரகருக்கு கை மாறியது.

    பூர்ணா வந்ததும் மூவரும் வீட்டுக்கு வந்தார்கள்.

    வீடே சூன்யமாக தோன்ற, அந்த போன் வந்தது.

    நாராயணனின் தங்கை சுபத்ரா தான் போன் செய்தார்.

     நாராயணன் மனைவி பூர்ணாவை பார்த்து எடுக்க அஞ்சினார். கலைவாணியை பற்றி கேட்டால் என்ன செய்வதென்று.

     “அப்பா… கலைவாணியை பற்றி கேட்டா எதையும் சொல்லாதிங்க. ஏதாவது காலேஜ் நோட்ஸ் எடுக்க லைப்ரரி போயிருக்கா அதுயிது சொல்லிடுங்க. நாம முதலில் ரெக்கவர் ஆனப்பிறகு எதுனாலும் யாரிடமும் சொல்லிக்கலாம்.

இப்பவே யாராவது கேட்டா நமக்கும் மனசு தாங்காது. நிதானமா பேசுங்க… எமோஷனலில் அழாதிங்க.” என்று பூர்ணா கூறினாள்.

    “நீயே பேசுடா என்னால முடியலை.”  என்று கொடுக்க, பூர்ணா போனை அட்டன் செய்தாள்.

    “ஆஹ்… அத்த.. சொல்லுங்க எப்படியிருக்கிங்க?” என்று இயல்பாய் கேட்கும் கேள்வியை கேட்டு வைத்தாள்.

    “நல்லாயிக்கேன்டிம்மா
எங்க என் அண்ணா… அவர் போன்ல நீ எடுத்திருக்க.” என்று கேட்டதும், “அப்பா… அப்பா பாத்ரூம்ல இருந்தார். நம்ம அத்த தானேனு எடுத்தேன் ஏன் என்னிடம் பேசுங்க” என்று பேச்சை மாற்றினாள்.

    “நீ எப்படியிருக்க டி. ஆபிஸ் விட்டு வர ஏழு எட்டாகும்னு அண்ணி சொல்லுவாங்க. மணி ஐந்துக்கே வீட்ல  இருக்கற?” என்றார்.

     “அது தலைவலி அத்த.” என்றாள்.

     “என்னாச்சு சுக்கு கஷாயம் வச்சி தரலையா அண்ணி என்ன பண்ணறாங்க. எப்பவும் கலைவாணிக்குனா தான் பதறுவாங்களா.” என்றதும் கோகிலா புடவையில் வாயை பொத்தினார்.

பூர்ணாவோ, “அத்த இப்ப கொஞ்சம் பரவாயில்லை. என்னனு சொல்லுங்க” என்று விஷயத்திற்கு வந்தாள்.

     “அதுக்கு தான்டி போன் பண்ணறேன். நம்ம ஸ்ரீநிதி இன்டீரியர் டிசைனிங் கோர்ஸ் படிக்கிறேன்னு அங்க சென்னை வர்றா. ஹாஸ்டல் எல்லாம் உங்க மாமா அலோவ் பண்ண மாட்டார். அண்ணா வீட்ல தங்கி படிக்க அனுப்பவானு கேட்டதுக்கு சம்மதிச்சிட்டார்.

    நாளை மறுநாள் வந்துடுவா. அண்ணாவிடம் சொல்லிடலாமேனு தான் போன் போட்டேன். அவருக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே.” என்று கேட்டார் சுபத்ரா.

    “அய்யோ அத்த. இங்க அனுப்ப என்ன கேள்வி. தாராளமா அனுப்புங்க எங்களுக்கும் அவளோட பொழுது போகும்.” என்றாள் பூர்ணா.

     “சரிடி… அண்ணா அண்ணியிடம் சொல்லிடு. ஏதோ டிரஸ் எல்லாம் வேண்டும்னு கடைக்கு போக கிளம்பி இருக்க சொன்னா. ஸ்ரீநிதி வந்துடறதுக்குள்ள கிளம்பி இருக்கேன்.” என்று அணைத்தாள்.

   “சரி அத்தை” என்று இவளும் கூறினாள்.

      நாராயணனோ “இப்ப என்னடா பண்ணறது. இங்க வந்தா ஸ்ரீநிதிக்கு விஷயம் தெரியுமே. நம்ம வீட்ல கலைவாணி இல்லைனு கேள்வி கேட்பாளே?” என்று நெஞ்சை பிடித்தார்.

      “அப்பா… அப்பா… ஒன்னும் பிரச்சனையில்லைப்பா. நான் மாமாவிடம் பேசிடறேன். கலைவாணி கல்யாணம் பண்ணிட்டு போயிட்டானு மட்டும் சொல்லிடலாம். எப்படியும் உறவுகாறங்களுக்கு தெரியணும். அதுவும் உங்க தங்கைக்குக்கு சொல்லறது தப்பில்லை.

    நான் முதல்ல மாமாவிடம் பேசறேன். அவரிடம் சொல்லி புரிய வைக்கிறேன்.” என்று பூர்ணா சுபத்ரா அத்தையின் கணவன் பத்மநாதனிற்கு அழைத்தாள்.

    நடந்தவையை ரத்தின சுருக்கமாக தங்கை கர்ப்பம் என்றதை மட்டும் மறைத்து கூறினாள்.

    அவரோ “பூர்ணா மச்சான் எப்படியிருக்கார். கவலைப்பட வேண்டாம்னு சொல்லு. இப்ப எல்லாம் காதல் கல்யாணம் பெரிய விஷயமில்லை மா. ஆனா என்ன சொல்லியிருக்கலாம். அப்படியென்ன பயமோ. அதை விடு… ஸ்ரீநிதி இப்ப அனுப்பினா உங்களுக்கும் தொந்தரவு தானே டா.” என்றார் அவர்.
   
    “இல்லை மாமா. அம்மா அப்பா நார்மல் லைப்புக்கு வரமாட்டறாங்க. ஸ்ரீநிதி இருந்தா கொஞ்சம் மாறலாம். நீங்க அவளை அனுப்புங்க. கலைவாணி போனதை வச்சி பயந்து அனுப்பாம இருக்காதிங்க” என்று சங்கடமாய் கூறினாள்.

   பத்மநாபனோ, “என்னடா நீ… மாமா அப்படி கஷ்டப்படுத்துவேனா. ரீ இருக்கியே டா தூணா. என் மச்சான் பொண்ணு பூர்ணா சொக்கதங்கம் டா. ஒருத்தரை வச்சி இன்னொருத்தரை எடைப்போட கூடாது டா. நீ அப்பாவிடம் கொடு. நான் ஆறுதலா பேசறேன்.” என்று போன் கைமாறியது.

     தந்தை சில நேரம் குலுங்கி அழ சில நேரம் பூர்ணாவை கண்டு ஆம் என்று பேச, அவளுக்கு புரியாததா. மாமாவும் போனவளை விடுத்து தனக்காக வாழ பேசி ஆறுதல் படுத்தியிருப்பார்.

      உறவுகள் தங்களை குத்தி கிழிப்பாரோ என்று அஞ்சினாலும் தற்போது ஆறுதல் வரவும் நிம்மதி உணர்ந்தார்கள் பெற்றோர்கள்.

      இரவு சாப்பிடும் நேரம் கடைக்கு சென்ற சுபத்ராவும் கோகிலாவுக்கு அழைத்து பேசி சமாதானம் செய்தார்.

     ஸ்ரீநிதியோ “பூர்ணாவிடம் அண்ணி… கலைவாணிக்கா விடுங்க. நான் வந்து மாமா அத்தையை சிரிக்க வச்சி மனதை தேற்றறேன் பாருங்க” என்று கூறினாள்.

    உண்மையிலும் அவளின் வருகை மாற்றம் தரும் என்பது பூர்ணா எண்ணம்.

     உறங்கும் நேரம் தனது போனை எடுத்து பார்க்க, அதில் சூர்யாவோ, “யாரும் இல்லையென்ற கவலை வேண்டாம். அழுவதற்கு உன் கண்கள் உள்ளது துடைப்பதற்கு என் கைகள் உள்ளது.” என்று யாரின் தத்துவத்தை பிழிந்து அனுப்பியிருந்தான்.

     பூர்ணாவோ அதனை வாசித்து “இவன் வேற புது கோமாளி” என்று அர்ச்சித்து போனை தூர போட்டாள்.

     அன்னை தந்தை இருவரும் ஹாலில் உறங்க, அவளும் படுக்க தலையணையை போடவும், “நீ உள்ளயே தூங்கு டா. அப்பா அம்மாவுக்கு பயந்து கூடவே தூங்காதே. எங்களுக்கு உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சி தரணும். ஒரே கவலைக்கு எத்தனை முறை சோகமா இருக்கறது. நாங்களும் பூர்ணாவோட அம்மா அப்பா டா வாழ்க்கையை பழகிக்கறோம்.” என்றதும் பூர்ணா அன்னைக்கு கன்னத்தில் முத்தமிட்டாள்.

    தனியாக உறங்கும் நேரம் மீண்டும் குறுஞ்செய்தி வந்தது. சூர்யா.. என்று பல்லை கடித்து எடுத்தாள்.

    ஆனால் புது நம்பராக இருந்தது. அதனால் எடுத்து வாட்ஸப்பை திறக்க, அதில் “ஹாய் பூர்ணா, நான் சத்யதேவ். சாரி நான் மெஸேஜ் பண்ணினா உனக்கு கோபம் வரும். என்னடா இவன் தங்கைக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு தப்பில்லைனு வேற வியக்கானம் பேசறேன்னு.

    நான் என் பிரெண்டை ஆதரிக்கலை. அவங்க பண்ணியது தப்பு தான். எனக்கு அது நல்லாவே தெரியுது. நீ பேசியது கரெக்ட் ஆனா என்னிடம் ஹெல்ப் பண்ணுனு கெஞ்சினவங்க முன்ன உதவி செய்ய தான் தோன்றுச்சு.

   எனிவே முடிந்ததை பேச நான் வரலை. என்னால நீ காயப்பட்டிருந்தா வெரி சாரி. நீ என்னால தான் மதியம் சாப்பிடலை. நான் சொன்னது தான் பாதிச்சிருக்கும்.

   நான் ஒரு ஓட்ட வாய் இந்த விஷயம் விக்னேஷோ கலைவாணியோ சொல்லி நீங்க தெரிஞ்சிருக்கணும். நான் சொன்னது தப்பு சாரி பூர்ணா.

    லைப்புல நாம எதையும கடந்து போற ஒரு சிட்டுவேஷன் வரும். அது இது தான். கடந்து வா… உன் கவலையை நீ தான் தாண்டி வரணும்” என்று அனுப்பியிருந்தான்.

     “இவன் வேற.. இவனுக்கு என் நம்பர் யார் கொடுத்திருப்பா” என்று திட்டியபடி போனை சுவிட்ஆப் செய்தாள்.

-தொடரும்.
~பேரரளி