பூ பூக்கும் ஓசை-4

பூ பூக்கும் ஓசை-4

     இரண்டு நாட்களாய் அலுவலக பணிக்கு விடுப்பு எடுத்து கொண்டாள். புது மேனேஜர் வரும் நேரம் டீம் லீடரான தான் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுப்பது சரியல்ல. ஆனாலும் இது போன்றதொரு சூழ்நிலையில் பெற்றோரை விட பணியோ அது கொடுக்கும் பணமோ பெரிதாய் தோன்றாது.

       நாராயணன் தான் இடிந்து சோர்ந்து போய் ஸ்டேஷனரி கடையை திறக்கவில்லை.

  கோகிலா பூர்ணாவிடம் கேட்க இயலாது தவித்தார். இது பூர்ணாவிடம் கேட்டறிவதை விட நேரிடையாக கலைவாணியிடமே கேட்பது சிறந்தது.

   அவள் எங்கு சென்றாள் எப்படி சந்திக்க என்று யோசிக்க, இருக்கவே இருக்கின்றேன் நான் என்று ‘அலைப்பேசி’ ஒலி அலறியது.

    பூர்ணாவின் போன் தான் பாடலை இசைக்க அதனை எடுத்து தொடர்பை ஏற்றாள்.

    “பூர்ணா மேம் புது மேனேஜர் வந்துட்டார் அவர் டீம் லீடரானா உங்களை, ஏன் வரலை எதுக்கு வரலைனு கேட்டுட்டே இருக்கார். கொஞ்சம் லீவை கேன்சல் பண்ணிட்டு வர முடியுமா? புது பிராஜக்ட் வேற சைன் பண்ண போறதா பேச்சு. அதுவும் உங்க டீம் தான் செய்யணும்னு ஆர்டர்” என்று அவளுக்கு கீழே பணிப்புரியும் பெண் ப்ரியா கேட்டதும், வீட்டில் உள்ள நிலைமையை எப்படி புது மேனேஜரிடம் புரியவைப்பது என்று ஸ்தம்பித்தாள்.
  
     போனையே கையில் வைத்து கலங்கியவளின் தோளில் கோகிலா கையை வைத்தார்.
 
     “நாளைக்கு ஆபிஸ் கிளம்பு பூர்ணா. எவ்ளோ நாள் இப்படியே அடைந்து இருப்போம் பழகிக்கலாம்.” என்று அன்னையே கூறவும், பூர்ணா தந்தையை கவலையாய் பார்த்தாள்.

    பின்னர் போனில் “நாளைக்கு வந்துடுவேன் ப்ரியா பை” என்று கத்தரித்து விட்டாள்.

     நீண்ட பெருமூச்சை வெளியிட்டு தந்தையின் அருகே அமர்ந்து, அவர் கையை பிடித்து, “அப்பா… ஸ்கூல் பசங்களுக்கு மிட்டர்ம் எக்ஸாம் வருது. எப்பவும் உங்க கடையில பேனா, பென்சில் ஏதாவது வாங்கிக்கலாம்னு வர்ற பசங்க ஏமாந்துடக்கூடாது.

    கடை திறந்து வையுங்கப்பா. அப்ப தான் உங்களுக்கும் கடைக்கு வர்ற பசங்களை பார்த்து மனுஷங்களை பார்த்தை மனசு கொஞ்சமாச்சம் ரிலாக்ஸ் ஆகும். வீட்டிலேயே இருந்தா கலையோட போட்டோ, திங்க்ஸ், டிரஸ்னு பார்த்து பார்த்து அழுவிங்க.

   எத்தனை நாளைக்கு அழுவோம், மற்ற வேலை பாதிக்க கூடாதுல. நீங்க கடை திறக்க போனா தான் நானும் ஆபிஸ் போவேன். இல்லைனா என்னாலையும் உங்களை தனியா விட்டுட்டு போக முடியாதுப்பா.” என்று ஆதரவாய் பேசி முடிக்க நாராயணன் பூர்ணா வார்த்தைக்காக செவி சாய்த்தார்.

    “உனக்காக கடைக்கு போறேன் டா.” என்றார் முடிவாக.

      “அப்பா… போகறப்ப அம்மாவும் துணைக்கு கூட்டிட்டு போங்க. நமக்கு டிபன் செய்துட்டு உங்களையும் என்னையும் அனுப்பிட்டு இவங்க தூண்ல சாய்ந்து அழுவாங்க. அம்மாவை தனியா விடாதிங்க. என்னை மாதிரி சாப்பாடு கட்டிட்டு நீங்க கடையிலயே சாப்பிட்டு இரண்டு பேர் அங்கயே இருங்க. நான் வர்ற நேரம் வீட்டுக்கு வாங்க.  அம்மாவுக்கும் அப்ப தான் மைண்ட் மாறும்.” என்றதும் நாராயணன் அப்படியே செய்கின்றேன் என்று ஆமோதித்தார்.

       கோகிலாவோ கணவன் மற்றும் மகள் பேசியதுமே செவியில் விழுந்தவையை அசைப்போட்டார்.

     மகள் சென்றதும் தனக்கு தோன்றிய ஐயத்தை தெளிவாக்கிட முனைந்தார்.

     இரண்டு நாட்கள் மகளே சமைத்து ரசம் சாதம், கஞ்சி, தயிரை சோறு என்று மிக்ஸியில் அடித்து கொடுத்து எல்லாமே நீர் ஆகாரமாக சாப்பிட வைத்தில் பெரியவளின் பொறுப்பும் நேசத்தையும் எண்ணி மகிழ்ந்தார்.

    கூடவே சிறியவள் செய்கை வலியை தந்தது.

     இரவும் பால் சாதம் அரைப்பதற்காக சாதம் குழைய வைக்க அரிசி எடுக்க சென்ற பூர்ணாவை தடுத்து, “கேரட் பட்டாணி போட்டு கிச்சடி பண்ணறேன் சாப்பிடலாம். நீ போய் உனக்கு வேலை இருந்தா பாரு.” என்று கோகிலா கூறவும் தாயை அணைத்து விடுவித்தாள்.

      பெயருக்கு மூவரும் சாப்பிட்டு முடித்தார்கள். நேற்று போல தாய் தந்தையோடு ஹாலிலேயே உறங்க மடித்து வைத்த பெட்டை விரித்தாள்.

       அன்னை மீது கையை போட்டுக் கொண்டு உறங்கினாள். கோகிலாவிற்கு சிறுவயதில் இரண்டு பக்கமும் இரண்டு பெண்பிள்ளைகள் போட்டி போட்டு கொண்டு ‘நீ கையை எடு இது எங்கம்மா’ ‘இல்லை நீ கை எடு இவங்க எங்கம்மா’ என்று மாற்றி மாற்றி கூறிய நிகழ்வு தற்போது  தோன்றவும் கண்ணீர் உகுத்தி கணவர் மகள் அறியாமல் துடைத்து கொண்டார்.

       கோகிலாவை போல பூர்ணாவுக்கு தங்கையோடு வம்பிட்டு வழக்காடியவை நினைவு வரவும் கையை எடுத்து திரும்பி படுத்தாள்.

       கண்ணீர் வற்றி, கண்கள் எரிந்து தானாக உறக்கம் தழுவியது.

      அடுத்த நாள் விழித்தப் பொழுது குக்கர் சத்தம் கேட்டது.

       முந்தானையை இழுத்து சொறுகி அன்னை சமையல் கட்டில் வலம் வரவும் பூர்ணா நிம்மதியாய் எழுந்து தனதறைக்கு சென்று அலுவலகம் செல்ல தயாரானாள்.

   சுடிதார் அணிந்து ஒருபக்கம் துப்பட்டாவை போட்டு, சென்டர் க்ளிப் அணிந்து, பாதி முடியை முன்னே போட்டும், மீதியை பின்னங்கழுத்தில் எடுத்து விட்டு, மெரூன் வண்ண பிந்தியை விற்போன்ற புருவத்திற்கு மத்தியில் வைத்து, ஹேண்ட் பேக் மாட்டி வெளிவர, அன்னை கோகிலா தயாராய் ரவை உப்புமா செய்து வைத்திருந்தார்.

      “வத்தக்குழம்பும் ஜவ்வரிசி அப்பளமும் வச்சிருக்கேன் பூர்ணா. இதுல கொஞ்சமா தயிர் சாதமும் மாவடு ஊறுகாயும் இருக்கு.” என்று கூறவும், “ஏதாவது ஒன்னு செய்யலாமே மா.” என்று பூர்ணா அலுத்துக் கொண்டாள்.

      ”எப்பவும் போல பழகிடுச்சு டி” என்றதும் டிபன் பாக்ஸை ஹேண்ட்பேக்கில் வைத்ததும் தாய் சொன்னதை கேட்டு மௌவுனித்தாள்.

     எப்பவும் பூர்ணாவுக்கு பிடிக்கும் சில உணவுகள் கலைவாணிக்கு பிடிக்காது. கலைவாணிக்கு பிடித்தது பூர்ணாவுக்கு பிடிக்காது. அதனாலே இவ்வாறு சில சமயம் இரண்டு விதமான உணவை செய்து வைத்து விடுவார் கோகிலா.

        தாய் தந்தையர் தான் சென்றபின் ஏதேனும் அசம்பாவிதம் செய்து தன்னை அநாதையாக்கி விடுவாரோ என்ற எண்ணம் உலுக்க, ஹாண்ட்பேக் இறுகப்பற்றியவளின் பாதங்கள் வேரோடு ஊன்றியது.

     மெதுவாய் திரும்பி “போயிட்டு வர்றேன் அம்மா. அப்பா… நீங்க ஆசைப்பட்டது போல எனக்கு வரன் பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்.” என்று கூற இருவரின் முகமும் ஆனந்தப்பட்டது.

     பூர்ணாவுக்கோ தற்போது தாய் தந்தையர் இருவரும் தனக்கு நல்ல துணையை தேர்ந்தெடுக்க மனதை செலுத்துவார்களென்று தோன்றியதும் அலுவலகத்துக்கு நிம்மதியாய் கேபில் ஏறி பயணம் மேற்கொண்டாள்.

      நாராயணனும் ஸ்கூட்டரில் புறப்பட, கோகிலாவை அழைத்தார். கோகிலாவோ, “நீங்க போங்க இந்த பாத்திரம் பண்டம், துணி எல்லாம் துவைத்து காயப்போட்டு வர்றேன்.” என்றதும் நாராயணன் சரியென்று கிளம்பினார்.

     நல்லவேளை இது கிராமம் இல்லை. இந்த வீட்டு பெண் ஓடிவிட்டாளென இவர்களாக சொன்னால் மற்றவருக்கு தெரியும் இல்லை யாவருக்கும் தெரிவது சற்று தாமதப்படும்.

       அதனால் ஸ்கூட்டர் எடுத்து கொண்டு ஸ்டேஷனரி கடைக்கு சென்றார். பூர்ணா கூறியது போல “அங்கிள் ஏபோர் ஷீட் தாங்க.”
“அங்கிள் டூம்ஸ் பென்சில் வேணும்.”
“அங்கிள் நட்ராஜ் ரப்பர் ஒன்னு”  என்று சிறுவ சிறுமியர்கள் காசை நீட்டி பறந்தனர்.

       கோகிலாவோ கதவை அடைத்து போனை எடுத்து, கடவுளிடம் வேண்டி கலைவாணிக்கு அழைப்பை தொடுத்தாள்.

~~~

      பூர்ணாவோ கேபில் ஏறியமர்ந்தது தான் அதன் பின் உறங்கிவிட்டாள்.

      “மேடம்… ஆபிஸ் வந்துடுச்சு” என்று ஓட்டுனர் கூறவும், விழித்தவள் இறங்கி செடிக்கு அருகேயிருக்கும் இடத்தில், கொண்டு வந்த தண்ணீரால் முகம் அலம்பினாள்.

     கைக்குட்டையால் முகம் துடைத்து விட்டு, மெதுவாய் லிப்ட் நோக்கி விரைந்தாள்.

    பூர்ணா வந்திறங்கும் நேரம் புது மேனேஜரின் ஸ்கீரின் பாதி விலகியிருந்ததில் இருந்து எட்டி பார்த்த விழிகள், முழுவதும் திறந்து பூர்ணாவையே வட்டமிட்டு உதடு விரிந்து “இங்க தானே வந்தாகணும். பிறகு பார்த்துக்கறேன்” என்று வீம்பாய் இருந்தான்.

     பூர்ணா அவள் அலுவலகத்தின் ப்ளோரில் நுழைந்து நடந்து வர, “மேனேஜர் சாண்டல் ஷர்ட்ல செமையா இருக்கார் டி. நீ வேண்ணா பார்றேன் மேரேஜ் ஆகாதவரா தான் இருப்பார்.” என்ற குரலில் பூர்ணா அவள் பாட்டிற்கு நடந்தாள்.

    முன்பாவது இப்படி பேசியிருந்தால் வயதின் வேகம், ரசனை என்று சிரித்து கடப்பாள். இன்றோ இது போன்றவை ரசிக்க மனமில்லை. 

    பேசிக் கொண்டிருந்த இரு பெண்களும் “குட் மார்னிங் மேம்” என்று கூறி முடிக்க அதனை அவள் உணரவில்லை. தற்போது வந்து புதிதாக சேர்ந்ததால் அந்த இரு பெண்களும் பெரிதாக எடுத்துக்வில்லை.

       பூர்ணாவும் அவளின் இடத்தில் வந்தமர்ந்து மற்றவரின் குட்மார்னிங்கை தலையசைப்பில் பெற்று கொண்டு கணினியை உயிர்பித்தாள்.

      ப்ரியாவோ உள்ளே வர அனுமதி கேட்டு நின்றாள். பூர்ணா அழைக்கவும் “மேம் நீங்க வந்ததும் மேனேஜர் உங்களை கூப்பிட்டாங்க” என்ற தகவலை உதிர்த்து சென்றாள்.

    பூர்ணாவுக்கு ‘வந்ததுமே வா’ என்ற சலிப்பு மனதில் உதித்தாலும் தனக்கு மேலிடமானவரின் அழைப்பை தவிர்க்க இயலாது எழுந்து மேனேஜர் அறைக்கு நடையிட்டாள். போகும் போது “புது டீம் ஆட்களில் யார் யார் நியூ ஜாயின் என்று என்னை வந்து பாரக்க சொல்லு ப்ரியா” என்று கட்டளையிட்டாள்.

     பூர்ணா கதவில் கை வைக்கும் நேரம், உள்ளிருந்து ஆண்குரல் ஒன்று ”ஏ…. சினாமிகா…
சீரும் சினாமிகா… நீ
போனால் கவிதை அனாதிகா…
ஏ சினாமிகா… சீரும் சினாமிகா….
நீ போனால் கவிதை அனாதிகா..” என்று பாடிக்கொண்டிருந்தது.

     “எக்ஸ்கியூஸ் மீ சார்.” என்றவள் உள்ளே வர  “யாயா.” என்று எழுந்தவன் ஒற்றை ரோஜாவை நீட்டினான்.

     “நீயா…?” என்று கூறவும் அவனோ ‘அடியேன் தான்’ என்று தோளை குலுக்கினான்.

      “நீ… நீ.. நீ தான் புது மேனேஜரா?” என்று மீண்டும் கேட்டாள்.
  
      “நானே தான்… என்ன ஷாக்கிங்கா… ஷாக்கை குறை ஷாக்கை குறை…” என்று பேசிக் கொண்டு பூர்ணாவை சுற்றி கொண்டு வந்தான்.

    “என்ன அடிச்சிட்டு இங்க வந்துட்ட… எனக்கு இங்க உன்னை பார்ப்பேன்னு சத்தியமா எதிர்பார்க்கலை இன்ட்ரஸ்டிங்ல” என்றவனின் பேச்சில் தலையை தாங்கி பிடித்தாள்.

    “ப்ளிஸ் உட்காரு… அப்பறம் எப்படி இருக்க?” என்றான் அவன்.

     “சூர்யா… நீ பண்ணின வேலைக்கு அடிக்காம என்ன பண்ணுவாங்க. காலேஜ் முழுக்க பேரவல் டே அப்போ லவ் பண்ணறோம்னு புரளி பரவ விட்டிருக்க.

   சீனியரா இருந்தா… உன்னிஷ்டத்துக்கு காலேஜ்ல அனவுன்ஸ் பண்ணி சீண்டுவியா. நீ பாட்டுக்கு எக்ஸாம் முடிச்சிட்டு போயிட்ட, அடுத்த ஒரு வருஷம் நான் உன் லவ்வர் என்று மற்ற பசங்க பேசிக்கிட்டாங்க தெரியுமா.” என்று சீறினாள்.

    “பூர்ணா… அது காலேஜ் லைப். காலேஜ் லைப்ல இதுவரை இல்லாம ஏதாவது மனசுல பதியுற மாதிரி இன்ஸ்சிடெண்ட் பண்ணலாம்னு ஆசையா இருந்தேன்.

    பிரெண்ட்ஸும் உசுப்பேத்தவும் யாரோட கனெக்ட் பண்ணி ப்ளே பண்ணலாம்னு யோசிச்சேன்.

   எனக்கு காலேஜ்லயே உன்னை தான் பிடிக்கும். அதனால தான் நீ என் லவ்வர்னு பேசினேன்.

     நீ என்ன வேகமா வந்து சப்புனு அறைஞ்சிட்டு ப்ரின்சிப்பால் சாரிடம் கம்பிளைன் பண்ணிட்ட. அவரிடம் ஜஸ்ட் ஃபன்னு சொல்லி எக்ஸ்பிளைன் பண்ணி ஹால்டிக்கேட் வாங்கறதுக்குள்ள நான் எப்படி நொந்துட்டேன் தெரியுமா.” என்றவனை உற்று நோக்கினாள்.

     இதை அன்றே அவள் அறிந்தது. ஆனால் அதன் பின் கல்லூரி முதல்வர் தன்னிடம் இவன் பேசினால் மீண்டும் கூற சொல்லியிருக்க, அடுத்து வந்த நாட்களில் சூர்யாவும் அடக்கம் ஓடுக்கமாக எக்ஸாமினால் விளையாட்டை மூட்ட கட்டினான்.

    இதோ இங்கு புதிதாக மேனேஜர் பதவி கிடைத்து மாற்றல் பெற்ற போது, இங்கே பழைய ஆண்டு விழா போட்டோவில் பூர்ணாவை கண்டு, அவளது வருகைக்காக தவம் கிடக்க ஆரம்பித்தான்.

   முன்பு காதல் உள்ளதா எல்லையா என்று கேட்டால் ‘டவுட் தனபாலன்’னாக நின்றிருப்பான். இன்றோ அவளின் அதே திமிர் பார்வை, பட்டாசு பேச்சு, நிமிர்ந்த நடை, அழகோவியமாக முன் வந்து நின்றவளை கண்டு தன்னை மறந்து ரோஜாவை நீட்டினான்.

     “திரும்ப என்ன?” என்று முறைத்தாள்.
 
     “என்னம்மா இது ஜஸ்ட் உன் சீனியர் உனக்கு பாஸா வந்திருக்கேன். நீ தான் வெல்கம் பண்ணலை. நான் கைக்கு கிடைச்ச ரோஜாவை வச்சி வெல்கம் பண்ணறேன். அக்சப்ட் பண்ண மாட்டியா?” என்றதும் பூர்ணா யோசித்தவளாய் அதனை வாங்க கையை நீட்டினாள்.

       அதே நேரம் “மே ஐ கம் இன் சார்?” என்ற ஆண்குரல் அதீத கோபமாய் கேட்டது.

    பூர்ணா மற்றும் சூர்யா இருவரும் கதவு பக்கம் பார்க்க அங்கே விரப்பாய் சத்யதேவ் நின்று காட்சியளித்தான்.

     ‘அடப்பாவமே இவனுமா?’ என்று பூர்ணா மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே சத்யதேவிற்கு கேட்டிருக்க வேண்டும்.

     “சூர்யாவின் தலையாட்டலில் உள் நுழைந்த சத்யதேவோ பூர்ணாவை தான் எரித்து கொண்டிருந்தான்.

     அவளும் தன்னை போல இந்த அலுவலகத்திற்கு புதிதாக பணியில் சேர வந்தவள் என்று தவறாய் நினைத்தான்.

     “ஐ அம் தி நியூ கம்மர் டூ திஸ் ஆபிஸ் சார். மை நேம் இஸ் சத்யதேவ். ஐ அம் எ டிரான்ஸ்பர் ஃபர்ம் பெங்களூர் ஆபிஸ்.” என்று அறிமுகப்படுத்தி சூர்யாவோடு கை குலுக்கி கொண்டான்.

      “நைஸ் மீட்டிங் யூ சத்யதேவ். இவங்க உங்க டீம் லீடர் பூர்ணா.

    நான் உங்க மேனேஜர். நானும் உங்களை மாதிரி தான் இந்த ஆபிஸுக்கு புதுசு. இரண்டு நாளைக்கு முன்ன தான் இங்க வந்து  செட்டிலானேன்.” என்று பேசினான் சூர்யா.

     ‘என்னது எனக்கு டீம் லீடர் இவளா’ என்று அதிர்ச்சியை தாங்கி நின்றிருந்தான் சத்யதேவ்.

    சூர்யாவை பற்றியோ புது மேனேஜர் என்றோ அவன் கருத்தில் பதியவில்லை.

சூர்யா தொட்டதும் தான் உணர்வு பெற்று மூளையில் ஏறியது.

   பூர்ணாவோ பெங்களூர்ல இருந்து வந்து என் தங்கை மேரேஜை நடத்தி தலைமை தாங்கிட்டான் பெரிய ஹீரோனு நினைப்பு’ என்று மனதிலேயே திட்டி தீர்த்தாள்.

      ஏற்கனவே அடிச்சிட்டா… இப்ப இந்த முறை முறைக்கிறா… சத்யதேவ் நீ ஏதோவொரு பாவம் பண்ணியிருக்க அதான் விடாம துரத்தறா. அன்னிக்கு என்ன சேலை கட்டியிருந்தா. இன்னிக்கு சுடிதார்.

   என்னயிருந்தாலும் அந்த சேலையில ரொம்ப அழகா இருந்தா.’ என்று தனி உலகில் பேசிக் கொண்டிருக்க மனசாட்சியோ, ‘ஏன் சுடிதார்ல அசிங்கமா இருக்காளா?’என்று எள்ளியது.

    அட சுடிதார்லயும் நல்லா அழகா தான் இருக்கா. என்ன மூஞ்சி மட்டும் ‘ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி’ மாதிரி வச்சிருக்கா. ஐ திங்க் அவ தங்கையை மேரேஜுக்கு சாட்சி கையெழுத்து போட்டதாலா இருக்குமோ.

     இந்த விக்கி-கலை இவங்க வீட்ல சேர்த்துக்கலை வாசலோட அனுப்பிட்டாங்கனு சொன்னான்.

   சரியான கல்நெஞ்சக்காரங்களா இருப்பாங்க போல.’ என்றவன் சூர்யா செருமவும் கையிலிருந்த சேர்க்கை கடிதம் மீது பார்வை பதித்தான்.

     “சூர்யா பெர்ஸனல்னா நான் அப்பறம் பேசறேன்.” என்று பூர்ணா நழுவினாள்.

    சத்யதேவும் லெட்டரை கொடுத்துவிட்டு அகன்றான். ஆனாலும் இவங்களுக்குள் வந்த இந்த டூ ஆர் த்ரீ டேஸ்ல பெர்ஸனல் பேச்சு போயிருக்கா… தெரிந்தவங்க மாதிரி தெரியுதே. இல்லை இவளும் லவ் பண்ணறாளா?’ என்று குழம்பினான்.

    சூர்யாவோ ‘கடைசியா பூ வாங்காமலே போயிட்டாளே’ என்று இலவம் பஞ்சு கதையாக தவித்தான்.

-தொடரும்.
~பேரரளி