பூ பூக்கும் ஓசை-2

பூ பூக்கும் ஓசை-2

      மணப்பெண்ணை கண்டு கலங்கி போனது சில வினாடிகள் தான். ஆனால் தங்கை விரும்புகின்றாளோ என்ற ஐயம் சில மாதங்களாய் தோன்றியதால் இந்த அதிர்வை தாங்கி கொள்ள பூர்ணாவால் இயன்றது.

      “சபாஷ்… இன்னிக்கு ஏதோ எக்ஸாம்னு அப்பா அம்மா கால்ல விழுந்து ஆதிர்வாதம் வாங்கினியே அது இதுக்கு தானா?

   எப்படி டி அப்பா அம்மாவை ஏமாத்த மனசு வருது அவர்… அவருக்கு என்னை விட உன் மேல தானே பாசம் அதிகம்.

    அம்மாவிடம் ஆயிரத்தெட்டு பிரச்சனையை பேசி செல்லம் கொஞ்சுவ. காதலிக்கறதை சொல்லி ஒரு வார்த்தை பர்மிஷன் கேட்டியா.

     இந்த ரிங் எப்படியிருக்கு? இந்த கலர் டிரஸ் நல்லாயிருக்கா, இந்த வளையல் மேட்சிங்கா இருக்கா? எந்த குரூப் படிக்கனு என்னிடம் சஜ்ஜஷன் கேட்ப, என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை.

     மாலையும் கழுத்துமா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல நிற்கற. ஒரு நெர்வஸும் இல்லாம?

     நம்பி கழுத்தறுக்கறதுன்னா இதானா டி. இருபத்திரெண்டு வருஷம் உன்னை வளர்த்து ஆளாக்கி இன்னிக்கு உனக்கு கல்யாணம். ஆனா பெத்த அப்பா அம்மாவுக்கும் கூடப்பிறந்த அக்காவான எனக்கும் தெரியாது. அப்படியென்னடி அவசரம்” என்று பொறிந்து தள்ளினாள்.

      மணமகன் விக்னேஷ் செய்வதறியாது நண்பர்களை காண, அந்த நேரம் “ஏய் சாரிப்பா சாரிப்பா… இங்க வந்து சேருவதற்குள்ள எத்தனை கேள்வி எத்தனை பொய்யு… இதுல இரண்டு தெருக்குரிய லென்த் தாண்டுறதுக்குள்ள சிக்னல் வேற.

    பத்ரி சக்தி அய்… சத்யதேவ் அண்ணா மூன்று பேர். என்னோட சேர்த்து நாலு.

      விக்கி சார்புல ரெண்டு பேர் பத்ரி சக்தி கையெழுத்து போடுங்க. கலை சார்பா நானும் சத்யா அண்ணாவும் சாட்சி கையெழுத்து போடறோம்.

     ஏய் எங்க கல்யாணத்துக்கும் இதே மாதிரி முடிச்சி தாங்கப்பா. முடியலை… இந்த எருமை வீட்ல லவ்வை சொல்லாது. எங்கப்பா இப்பவே தினமும் சாடை மாடையா திட்டி என்னை டார்ச்சர் பண்ணறார்.” என்று வனிதா பத்ரியின் காதலி படபடவென பேசி தள்ளினாள்.

    ஏற்கனவே பூர்ணா வேறு இங்கு திட்டி தீர்த்து முடிக்க, வனிதாவின் பேச்சு கடுப்பை கூட்டியது.

     “நல்ல பிரெண்ட்ஸ் டி. நாலு பேர் போதும்ல… அதானே… இரண்டு பேர் கட்டிலில் புரள நாலு பேர் போதும் சாட்சி கையெழுத்து போட. செத்தாளும் நாலு பேர் தானே வர்றாங்க தூக்கிட்டு போக.” என்று அங்கே நிற்க பிடிக்காமல் பூர்ணா அங்கிருந்து செல்ல தயாரானாள்.

   ஒரு பக்கம் கலை அழுது கலங்கி ‘இல்லைக்கா’ என்று பேச முடியாது கலங்கினாள்.

   விக்னேஷோ தவறு செய்தமையால் என்ன கூறி புரிய வைக்க என்று தயங்கினான்.

  சத்யதேவ் கலைவாணிக்கு அக்கா என்றதை பேச்சின் சாரம்சத்தில் அறிந்து கொண்டான். “எங்கே… காதல்னா தப்பாங்க. ஒரு நிமிஷம் காது கொடுத்து கேளுங்க.” என்று பூர்ணா கையை பிடித்து நிறுத்தவும், ‘பளார்’ என்ற ஓசை அடுத்த நிமிடம் கேட்டது.

     “இத்தனை நாள் காது கொடுத்து கேட்காம என்ன பண்ணிட்டு இருந்தோம். அப்ப வந்து சொல்லியிருக்கணும். இப்ப கையும் களவும் பிடிப்பட்டதும் உங்க நிலைமையை நான் காது கொடுத்து கேட்கணுமா.” என்றதும் அந்த அலுவலக கட்டிடமே பூர்ணா சத்யதேவை தான் திரும்பி பார்த்தது.

     சத்யதேவ் கன்னத்தில் கை வைத்து நெற்றி சுருங்க, சினத்தை அடக்கினான்.

     பத்ரி, சக்தி இங்கு வந்தப்பொழுது கேலி கிண்டலென இருக்க பூர்ணா சத்யதேவை அறைந்ததும் இரண்டடி பின்னால் நகர்ந்து கொண்டனர்.

     “அய்யோ அக்கா… அவரை போய் எதுக்கு அடிச்ச. என்னை அடி திட்டு” என்று கலை கூறவும், “உன்னை நான் அடிக்கறதா.. சீ எனக்கு ஒரு தங்கை இருந்தா. இனி நீ யாரோ நான் யாரோ” என்று வெளியேறி சென்றாள்.

     “சாரி… எங்க அக்கா யாரையும் கை நீட்ட மாட்டா. என்னால திடீரென அதிர்ச்சி ஆகி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டா” என்று சத்யதேவிடம் மன்னிப்பு வேண்டி நின்றாள்.

     “இட்ஸ் ஓகே மா.” என்றவன் சகஜமாய் இருந்தாலும் டேபோடில்ஸ் மலரை பிடித்த பிடியில் அது துவண்டிருந்தது.

     வாங்கும் போது அதனை அழுத்தம் கொடுக்காமல் வாங்கி வந்தவன் தற்போது சுற்றமும் நட்பும் இல்லாமல் போனால் பிய்த்து எறிந்து கசக்கி இருப்பான்.

     “சார் விக்னேஷ்-கலைவாணி ஜோடி வந்திங்கன்னா ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துடலாம். இல்லை கல்யாணம் கேன்சலா?” என்று கேட்டதும் அங்கிருந்த நட்புகளும் ஜோடியும் “இதோ வந்துட்டோம் சார்” என்று ஓடினார்கள்.

   இன்றே திருமணம் ஆகவேண்டிய கட்டாயம். அதனால் பின்னால் நடக்க போகும் நிகழ்வை எண்ணி பிறகு கலங்கி கொள்வோமென நண்பர்கள் கூட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றனர்.

      அழுத கண்களோடு பதிவு திருமணம் செய்யும் தாளில் ஒப்பந்த கையெழுத்து போட்டு முடித்து கண்களை துடைத்தாள்.
 
    விக்னேஷும் அதே போன்று கையெழுத்து இட்டு திரும்பி, மாலை மாற்றினார்கள்.

    வனிதா, சத்யதேவ் இருவரும் கலைவாணிக்காக கையெழுத்து போட, விக்னேஷிற்காக பத்ரி, சக்தி கையெழுத்து போட்டு நின்றனர்.

      அவரவர் கைகுலுக்கி வாழ்த்தை தெரிவிக்க, பூக்களை கொடுக்க சத்யதேவ் நீட்டவும் அதனை கவனித்தான்.

   அவன் பிடியில் தண்டு பகுதி அழுத்தம் கண்டிருக்க, பச் வேற வாங்கி விஷ் பண்ணறேன் டா. இது வேண்டாம்.” என்றவன் “ஓகே டா நான் கிளம்பறேன்” என்றான் சத்யதேவ். அவனுக்கு பூர்ணா அறைந்ததிலிருந்து இங்கு இருக்கவே பிடிக்கவில்லை.

     பத்ரியோ “என்ன மச்சி அப்படியே இவங்களை போட்டோ இரண்டை எடுத்துட்டு, கோவில்ல தாலி கட்ட வச்சி மதியம் சாப்பிட வச்சிட்டு பிறகு போவோம் டா.

எப்படியும் விக்கி கலை வீட்ல பூகம்பம் பிரளயம் உருவாகும். அதை அவனுங்க தான் சமாளிக்கணும்" என்று கூறவும் சத்யதேவ் தவிர்க்க முடியாது நின்றான். 

   அவனுமே இப்படி தான் முடிவெடுத்து இருந்தான். ஆனால் அப்பொழுது இருந்த நிலை வேறல்லவா.

      “டேய் எப்படியும் இன்னிக்கு மதியம் லஞ்ச் முடிச்சிட்டு இரண்டு வீட்டுக்கும் போய் புரிய வைக்கவே ரொம்ப கஷ்டமா போகும். அதுவரை எல்லாரும் இருந்திங்கனா பீலிங் பெட்டரா இருக்கும் டா.” என்று மணமகன் விக்னேஷ் கோரிக்கையாய் உரைக்கவும் கோவிலுக்கு செல்ல தயாராகினார்கள்.

     கலைவாணி விக்னேஷ் இருவரும் அருகேயிருந்த ஸ்தலத்தில் மாலை மாற்றி, மாங்கல்யம் சூடவும், ஐயர் வேறு அவரவர் ராசி நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்து முடித்தார்கள்.

     தனியாக அவருக்கு பணம் கொடுத்து விட்டு கோவிலை சுற்றினார்கள்.

      “இங்க பாரு கலை தாலி கட்டிட்டேன். இனி என்ன கவலை. வீட்டுக்கு போய் நம்ம மேரேஜை சொல்வோம். அக்சப்ட் பண்ணினா ஓகே இல்லைனா தனியா வாழ ஆரம்பிப்போம். நேத்தே முடிவு பண்ணி தானே வந்தோம். என்ன திடீரென உம்முனு இருக்க?” என்றான் விக்னேஷ்.

      “அக்கா… அக்கா வந்ததும் பேசியதும் ஒரு மாதிரி இருக்கு விக்கி.” என்று கூற அவளின் கையை பற்றி பார்த்துக்கலாம் என்று ஆறுதல்படுத்தினான்.

       பத்ரி-வனிதா இருவரும் சேர்ந்து நடந்தனர். அடுத்து அவர்கள் ‘இந்த கோலத்தில் மாறுவோம்’ என்று பேசிக்கொண்டனர்.

    சத்யதேவ் மற்றும் சக்தி இருவரும் பின்னால் நடந்தார்கள்.

        “என்ன மச்சி அந்த பொண்ணு அடிச்சிட்டாளேனு அப்சட்டா.” என்று நெருங்கிய நண்பனின் மனதை புரிந்தவனாக கேட்டான்.

      “ரியலி… அவ அடிப்பானு எக்ஸ்பெக்ட் பண்ணலை டா. அந்த நிமிஷம் வரை நம்ம விக்கி மேரேஜ் பத்தின கவலை தான் இருந்தது. அது கூட மேரேஜ் ஆகிட்டா சரியாகிடும்னு இருந்தேன். பேரண்ட்ஸ் கன்வின்ஸ் ஆனாலும் ஆகாட்டினாலும் அது பிரச்சனையில்லைனு பார்த்தா, அவ பேசியது கொஞ்சம் சரினு தான் மனசுக்குபடுது.

     விக்கி வீட்லயாவது அவன் லவ் பண்ணியதை சொன்னான். அந்த பொண்ணு கலை வீட்ல எதுவும் சொல்லாம இந்த முடிவுல இப்படி நடந்தா அவ பேரண்ட்ஸுக்கு எப்படியிருக்கும்.

     கொஞ்சம் ஒரு மாதிரி அப்சட்டா இருக்கு.” என்றவன் படிதுறையில் நின்றபடி கையிலிருந்த டேபோடில்ஸ்(பேரரளி) மலரை குளத்தில் வீசினான்.

    அது நீரில் மிதந்து தனி தனியாக பிரிந்து சில மலர் மூழ்க, சில மலர் மிதந்து கடைசி படித்துறையில் வந்து சேர்ந்தது.

      ஒரு பெண்ணின் பாதத்தில் வந்து சேர, அவளின் முகம் காண துடித்து எக்கி பார்க்க, அவனுக்கு கஷ்டம் கொடுக்காமல் திரும்பினாள் பூர்ணா.

      “அச்சச்சோ இவளா” என்று சக்தி அலற, சத்யதேவோ தெனாவட்டாய் ஒரு பார்வை பதித்தான்.

    “பத்ரி… கலையோட அக்கா டா. வா அப்படியே திரும்பிடலாம்” என்று வனிதா இழுத்துக் கொண்டு பிரகாரத்தையே சுற்ற ஓடினார்கள்.

    அக்கா… என்னை ஆசிர்வாதம் பண்ணுக்கா” என்று கலை காலில் விழவும் கையில் மீன்களுக்கென்று வாங்கி வந்த பொறியை நீரில் மொத்தமாய் வீசிவிட்டு கலையை கடந்து சென்றாள்.

   குளத்தில் பொறி நிறைய விழவும், ஒரே நேரத்தில் மீன்கள் கொத்தி திண்ண நீரில் முண்டியடித்தது.

     அதனால் நீர்த்திவலைகள் தெளிக்க ஆரம்பிக்க அது கலையின் முகத்தில் நீர்த்துளிகளாகப்பட்டது.

     “உன்னோட பிளஸிங் உன் தங்கை கன்னத்துல இருக்கு” என்று சத்யதேவ் வழிமறித்து கூற, பூர்ணா திரும்பி பார்க்க, நீர்த்துளியை கண்டு கலை மகிழ்வதை கண்டு சத்யதேவை தள்ளி விட்டு அக்கோவிலை விட்டே வெளியோறினாள்.

    சத்யதேவோ அவள் தன் சட்டையை தொடும் நேரமே தள்ளிவிட போகின்றாளென எண்ணி சுதாரித்து விட்டான். அதனால் காலை பேலன்ஸ் செய்து சமன்படுத்திக் கொண்டான்.

     விக்கியோ “முதல்ல சாப்பிட்டு உங்க வீட்டுக்கு போவோம்.” என்று கையை பற்றி உணவகத்துக்கு அழைத்து சென்றான்.

      இதே மற்ற நேரமாக இருந்தால் விருப்பப்பட்டதை கேட்டு வாங்கி சாப்பிட்டு உணவகத்தில் மகிழ்ச்சியாய் இருந்திருப்பார்கள். இன்றோ சாப்பிட மறுக்க, வற்புறுத்தி சிறிதளவு சாப்பிட்டாள்.

     “உங்க அக்கா பேர் என்னமா?” என்று சக்தி கேட்க சத்யதேவ் உணவை பிசைந்தவன் காதை கூர்த்தீட்டினான்.

     “பூர்ணா அண்ணா” என்று எதிர் இருக்கையில் இருந்த கலைவாணி கூறிவிட்டு நீர் அருந்தினாள்.

      “சத்யதேவ்-பூர்ணா பெயர் நல்லாயிருக்குல டா” என்று பக்கத்திலிருக்கும் சத்யதேவிடம் மெதுவாய் கூறினான்.

“கழுத்தை நெறிச்சி கொன்றுடுவேன்” என்று சத்யதேவ் அவனின் கையை சக்தியின் கழுத்தருகே கொண்டு சென்றான்.

   “டேய் சத்யதேவ்… அந்த பொண்ணு பெயர் பூர்ணா நல்லாயிக்குலனு சொல்ல வந்தேன் டா. உன் பெயரை அவபெயரை சேர்த்து சொல்லலை.” என்று மழுப்பினான்.

    “நீ என்ன அர்த்தத்துல சொன்னனு எனக்கு தெரியும். மூட்டிடு திண்ணு தொலை. நானே அவ அடிச்சிட்டாளேனு கடுப்புல இருக்கேன்” என்று சாப்பிட்டான்.

     ‘ஆமா ஆமா.. கடுப்புல தான் அவகிட்ட மறுபடியும் போய் உங்க பிளஸிங் மாதிரி வாட்டர் டிராப்ஸ் பட்டிருக்குனு நிலைமையை ஸ்கீரின்பிளே பண்ணி விஷூவல் சுட்டி காட்டிட்டு வந்தியாக்கும்’ என்று முனங்கினான்.

    “என்னடா முனங்கலு?” என்று சத்யா கேட்டதும் நத்திங் டா. அவ அறைஞ்சதும் அதை பார்த்து பத்ரி, நான், வனிதா எல்லாம் இங்க ரிவர்ஸ்ல நழுவினா. நீ அடிவாங்கியதை மறந்து போய் ப்ரண்ட்ல(front) போய் நிற்கற.” என்றதும் சத்யதேவ் அதையே தான் சாப்பிட்டு முடிக்கும் வரை யோசித்தான்.

    நான் ஏன் அவ முன்ன முன்ன போய் நிற்கறேன். எனக்கு நிகழ்ந்துக்கு அவளை நான் ஒரு அறை விட்டு என் முகத்துல முழிக்காத அளவுக்கு அவளை கண்டாலே அலட்சியப்படுத்தி போயிட்டே இருக்கணும். பட் ஏன் இப்படி… சம்திங் ஸ்பெஷலா தெரியறா.’ என்றவன் மனம் சிறு ஆசையில் திளைக்க, வந்த ஆசையை அப்படியே கை கழுவி விட்டு எழுந்து கொண்டான்.

     “டேய் எனாஃப் எனக்கும் டைம் ஆகிடுச்சு நாலு நாள்ல புது ஆபிஸுக்கு போகணும். டுடே வீடு ஷிப்ட் பண்ணணும் பைடா.” என்று கடைசியாய் சக்தி, பத்ரி, விக்கி மூவரையும் அணைத்து விடுவித்து கொண்டார்கள்.

   “கலை டேக்கேர் மா. எம்மா வனிதா… உனக்கு முடிஞ்சளவு அரேன்ஜ் மேரேஜா முடிக்க பாருமா. வர்றேன்.” என்று ஷேர் ஆட்டோவை வழிமறித்து ஏறினான்.

   ‘இந்த பஸ் ஆட்டோ ஸப்பா… நாளையிலருந்து பைக் வந்துடும். இந்த தொல்லை இல்லை.

மார்னிங்கே படில ஸ்லிப் ஆச்சு… சத்யாதேவா அப்பவே உஷாராகி வேற பஸ்ல ஏறியிருக்கணும்.

    இப்ப பாரு ஒரு பொண்ணுகிட்ட அடிவாங்கி திரும்பறேன்’ என்று புலம்பியபடி சேருமிடத்திற்கு வந்தடைந்தான்.

    இங்கு பூர்ணாவும் அவளின் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து சேரவும் தாய் கோகிலா மகளின் அமைதியை கண்டு “என்னமா ஆச்சு. ஆபிஸ் போகலையா? காய்ச்சலா?” என்று கழுத்து நெற்றி என்று தொட்டு தொட்டு பார்த்தார்.

     “ம்மா… அப்பாவை வரச்சொல்லு?” என்று கூறினாள்.

     “எதுக்கு பூர்ணா… என்னாச்சு பூர்ணா… நீ ஏன் இப்படி டல்லா இருக்க? மேலுக்கு முடியலையா?” என்று வினாவை விடாது தொடுத்தார் கோகிலா.

     “சொல்லறேன் மா. அப்பாவை வரச்சொல்லு” என்று கூறவும் கோகிலா உடனடியாக பூர்ணா தந்தை நாராயணனுக்கு அழைப்பை தொடுத்தார்.

     இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஸ்டேஷனரி கடையினை பார்த்து கொண்டிருந்த நாராயணன் மகள் இரண்டு மணிக்கே வீட்டுக்கு வந்ததும், தன்னை அழைத்ததும் புதிதாய் தோன்ற கடை மூடி விட்டு வந்தார். வழக்கமாய் உணவு உண்ண வருபவர் இன்றும் வருவதற்குள் இப்படி என்றதால் உடனே வர தயாரானார்.

  தந்தைக்கு எப்படி அறிவித்து அவரின் மனதை பாதிக்காத வண்ணம் தங்கை கலைவாணி செய்கையை கூறுவதென கையை பிசைந்து கவலையாய் நின்றாள்.

-தொடரும்.
~பேரரளி~