பூ பூக்கும் ஓசை-16

பூ பூக்கும் ஓசை-16

     செக்கியூரிட்டி பூர்ணாவிடம் வந்து, “மேடம் உங்களை பார்க்க கலைவாணினு ஒருத்தங்க வந்திருக்காங்க” என்றதும் கணினியில் ப்ரியாவிடம்  மேற்பார்வை பார்த்தவள் நிமிர்ந்து சத்யதேவை கண்டாள்.
 
     அவனோ மென்னகை புரிந்து ‘போ’ என்பது போல விழியில் சேதி கூறினான். மதிய உணவு நேரம் என்பதால் தங்கையிடம் பேச சென்றாள்.
  
    சூர்யாவுக்கு இதை கண்டதும் பத்திக்கொண்டு வந்தது. ‘இவனை காதலிக்கறா.. என்னை காதலிக்க என்னவாம். காலேஜ்ல இருந்து சுத்தறேன்’ என்று கொதித்தான்.

      தங்கள் அலுவலகத்தின் கீழ் இருக்கும் ஒரு பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். கலைவாணியை கண்டு, “பார்த்து உட்காரு” என்று கூறினாள்.

     “அக்கா… நான் கன்சீவா இருக்கறது தெரியுமா?” என்று அக்கா பூர்ணாவின் அக்கறை கண்டு கேட்டாள்.

     “ம்… தேவ் சொன்னார்.” என்று முடித்தாள்.

     “தேவ்? சத்யதேவ் அவரா?” என்று கேட்டதும், “ஆமா” என்று தன் அலுவலக கட்டிடத்தின் தளத்தை கண்டு, எங்க ஆபிஸ்ல ஒர்க் பண்ணறார், அப்ப பேசினார், சொன்னார். அதோட அம்மாவோட திருப்பதி போனப்ப மீட் பண்ணினோம். இன்பேட் பேமிலி பிரெண்ட் மாதிரி பேசினார்.
  
   கலை நீ தப்பு பண்ணலை. அம்மாவிடம் சொன்னா புரிஞ்சிப்பாங்க. நான் ஈவினிங் சொல்லறேன். நீ நைட் வீட்டுக்கு வா. உன்னோட கணவரோட.” என்று தட்டி கொடுத்தாள்.

    “அக்கா… தேங்க்ஸ்க்கா… நான் எப்படி சொல்லறதுனு எனக்கே தெரியலை அக்கா.” என்று கூறினாள்.

    “அதான் உன் ஹஸ்பெண்ட் பிரெண்ட் பதமா சொல்லிட்டாரே. ஆமா உன் ஹஸ்பெண்ட எப்ப மீட் பண்ணின. உன் காலேஜும் இல்லை.” என்று முன்பு பழகியது போல தோழியாய் வினவினாள்.

    “போன வருஷம் ஆசிரமத்துக்கு பண்ட் கலெக்ட் பண்ணி கொடுக்க என்எஸ்எஸ் குரூப்புக்கு ஒரு ஒர்க் கொடுத்தாங்க நினைவிருக்கா. அதுக்கு பண்ட் கலெக்ட் பண்ணி நேரடியா கொடுக்க மேம் கூட நானும் போனேன். அப்ப தான் விக்னேஷ் அவரோட பிரெண்ட் சக்திக்கு பெர்த்டே செலிபரேட் பண்ண வந்தாங்க.

   சக்தி அநாதை ஆசிரமத்துல பிறந்து வளர்ந்தவர். அதனால விக்னேஷ், சத்யதேவ், பத்ரி இவங்களாம் ரொம்ப பாசமா அவரிடம் பழகினாங்க. அதுலயும் விக்னேஷ் ரொம்ப க்ளோஸா பழகினார்.

   அவரை அதோட அகைன் ஒருமுறை டிபார்ட்மெண்ட் கடையில பார்த்தேன். அவரையே பார்த்துட்டு போய் ஸெல்ப்ல மோதி… கடையில எல்லாம் கீழே விழுந்தது. அப்ப தான் பேசினார் பழகினார்.

   அவரோட கேரக்டர்ல தான் பிடிச்சது அக்கா லவ் பண்ணினேன். அன்னிக்கு சக்தி பீட்ஸா கடை திறப்பு விழாவுல மாட்டி உயிர் போயிருக்கும்.  அங்க விக்கியும் நானும் தப்பு பண்ணணும் நினைக்கலைக்கா. அப்படி இருந்தா தான் கூடுதலா உயிர் பிழைக்க வாய்ப்பு அமையும்னு சூழ்நிலை.

    கர்ப்பமாயிருப்பேன்னு நினைக்கலை அக்கா. விக்னேஷிடம் சொன்னதும் கலைக்க வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னார். 

    வீட்ல பேசறேன்னு கூட சொன்னார். என்னால தான் கர்ப்பமா இருப்பது தெரிந்தா அம்மா என்னை மன்னிக்க மாட்டாங்க. நான் பேசறதை கேட்க மாட்டாங்கனு மறுத்துட்டேன். ஒரு வேளை கல்யாணத்துக்கு ஒத்துக்கலைனா… அதனால தான் கல்யாணம் முடிஞ்சி அங்க வந்து சொல்லிடலாம்னு பிளான் பண்ணினேன்.” என்றதும் பூர்ணாவோ தன் கைகுட்டையால் தங்கை கண்ணீரை துடைத்து, அம்மாவிடம் பேசறேன். நைட்டு வீட்டுக்கு வா. அப்பறம் ஸ்ரீமதி வேற இருப்பா… ஓகே பார்த்துக்கலாம். எப்படியும் அப்பா அம்மாவிடம் பேசிடறேன்.” என்று தங்கைக்கு நெற்றியில் ஆதுரமாய் ஆசிர்வதித்தாள் 

    ஓகே லஞ்ச் டைம் முடிய போகுது. சாப்பிட்டியா… இல்லையா..” என்று தங்கைக்கு ஊட்டி விட்டாள்.

    சத்யதேவ் அப்பொழுது தான் வெளிவந்து “ஹாய் மா… எப்படியிருக்க?” என்று கேட்டான்.

     “நல்லாயிருக்கேங்க… தேங்க்ஸ்…” என்றாள்.

     “நீங்க பேசட்டும் வெயிட் பண்ணினேன். பட் இப்ப நேரமாகிடுச்சு. பார்த்துப்போமா வர்றேன்” என்று கூறிவிட்டு பூர்ணாவிடம் தலையசைத்து விடைப்பெற்றான்.

   பூர்ணாவோ அவனின் தலையாட்டலில் மெய்மறந்தவளாய் பார்க்க, “அக்கா… நீயும் சாப்பிடு” என்று கலைவாணி ஊட்டவும் வாங்கினாள்.

   சாப்பிட்டப்பின் தங்கையை வழியனுப்பி விட்டாள்.
    அலுவலகம் வந்ததும் வேலையில் அமர்ந்து பணியை கவனிக்க ஆரம்பித்தாள்.

   சற்று நேரத்திற்கெல்லாம் பூர்விகாவை அழைத்த சூர்யா ஏற்கனவே செய்து வைத்த பணியில் எரர் காட்டவும், டீம் மெம்பர் இருக்க அவளை அவமானம் செய்யவே திட்டி தீர்த்தான். பூர்ணாவுக்கு எங்கு எப்படி தவறு நேர்ந்தது. கொடுக்கும் போது சரிபார்த்து அல்லவா பதிவு செய்தோம் என்று குழம்பி, திட்டை கடனேயென்று செவிமடுத்தாள்.

        சத்யதேவ் பொறுமை போக, ‘கவலைப்படாதிங்க சார். என்னிடம் இன்னொரு காபி இருக்கு” என்று சேகரித்தவையை அனுப்பி முடித்தான்.

    “என்னிடம் இது ஒரு காப்பி தான் இருக்குனு பூர்ணா சொன்னா. நீ என்ன எக்ஸ்ட்ராவா சேவ் பண்ணியிருக்க.” என்று சந்தேகம் கொண்டான் சூர்யா.

     “இப்படி ஏதாவது தப்பாயிட்டா எரர் காட்டினா… எப்பவும் என் மேல தப்பு வராம பார்த்துக்க ஒரு காப்பி சேவ் பண்ணிட்டு தான் கொடுக்கறது என் வழக்கம்” என்றார் சத்யதேவ்.

   அதன் பின் சூர்யா அவனின் அறைக்குள் சென்று முடங்கினான்.

   இரவு நேரமாக தங்கை திருமணம் சூழ்நிலையை கூறி அப்பா அம்மாவை தங்கை தங்கை கணவன் இரவு வருவதற்குள் சமாதானம் செய்து வரவேற்க தயாராக்க சென்றாள்.

    வீட்டுக்கு வந்தப்பொழுது ஸ்ரீநிதி அங்கு இன்னமும் வரவில்லை என்று கோகிலா புலம்பினார்.

    தந்தையை அழைத்து வந்தவள் நாசூக்காக அம்மா அப்பாவிடம் நடந்தவையை கூறினாள்.

         அவள் காதலிக்க ஆரம்பித்ததும் நண்பர்கள் கடைதிறப்பு விழாவுக்கு சென்று மாட்டிக்கொண்டு அந்த ப்ரீஸரில் உறைந்து இறக்காமால் மரணத்தின் நேரத்தை தவிர்க்க அப்படியொரு தவறு தங்கைக்கு நிகழ்ந்ததாக கூறினாள்.

   கோகிலா இடிந்து போனாள். இது தெரியாமல் மகளை திட்டி தீர்த்து விட்டோமே என்ற குற்றவுணர்வு. தந்தை நாராயணனுக்கோ மகள் கர்ப்பவதியா என்றதும் அதற்கான சூழ்நிலையும் அறிந்து அதிர்ந்தார்.

     “நைட் டின்னருக்கு வரச்சொல்லியிருக்கேன் மா. வந்தா பேசுங்க… அவயென்ன தப்பு பண்ணினா. அவளுக்கும் நம்மளை தவிர யாரு இருக்கா. என் கல்யாணத்துக்கு தங்கையில்லாம எப்படிம்மா?” என்று பதமாய் கூறினாள்.

    நாராயணன் “சந்தோஷம் தான் மா. வரட்டும். யாருக்கு தலைவிதி எப்படி அமையுதுனு யாரால கணிக்க முடியும் சொல்லு.

அந்த தம்பி சத்யதேவ் ரொம்ப நல்லவரா தெரிந்தார். அவரோட பிரெண்ட் நல்லவரா இருப்பாருனு நம்புவோம்” என்று பதில் கொடுக்கவும் பூர்ணாவுக்கோ சத்யா எண்ணம் மோத, அவனிடம் பகிர்ந்திட போன் செய்தாள்.

    அவனோ போனை எடுத்துவிட்டு, “சொல்லு பூர்ணா” என்றான்.

     “அம்மா அப்பா கலைவாணியை வரவேற்க தயாராகிட்டாங்க” என்றாள்.

    “ஓகே… எதிர்பார்ததது தான். சந்தோஷம் பூர்ணா… பூர்ணா… நான் அப்பறம் கால் பண்ணவா. இங்க பீட்சா கார்னர்ல பிரெண்டோட பேசிட்டு இருக்கேன்.” என்று கூறவும், “ஓகே ஓகே… சொல்லணும்னு தோனுச்சு. சொன்னேன். தேங்க்ஸ்” என்று அணைத்தாள்.

     இந்த ஸ்ரீநிதி இன்னமும் வரலை. எங்க போனா.? நல்லவேளை அம்மா அப்பாவிடம் சொல்லறப்ப அவயிருந்தா டிஸ்டர்பா இருக்கும்னு நினைச்சேன்.’ என்று பூர்ணா தங்கைக்காக தாய் சமைக்க உதவிக்கு சென்றாள். தந்தையோ பழங்கள் வாங்க பழக்கூடை எடுத்து சென்றார்.

   இங்கு சத்யதேவ் முன்னால் அழுத ஸ்ரீநிதி “நான் இங்க வந்ததே உங்களை எல்லாம் தேடி கண்டுபிடிக்க தான். எப்படியும் நீங்க எல்லாம் பிரெண்ட்ஷிப்டே அப்ப ஆசிரமத்துக்கு வந்து செலிபரேட் பண்ணுவீங்கனு தெரியும்” என்று ஸ்ரீநிதி அழுவவும் சத்யதேவ் தலையில் கை வைத்து கோபமாய் அமர்ந்திருந்தான்.

     “குழந்தை மாதிரி இருந்துட்டு கேடித்தனம் பண்ணாதே ஸ்ரீநிதி. மரியாதையா இங்கிருந்து கிளம்பு. இல்லையில்லை… இந்த ஊரை விட்டு கோயம்புத்தூர் கிளம்பு. அப்படியில்லை… பத்மநாபன் அங்கிளுக்கு போன் பண்ண வேண்டியதா போயிடும். நீயிங்க படிக்க வரலை. காதலிக்க வந்திருக்கனு.” என்று மிரட்டினான்.


  
     அதே நேரம் இரவு உணவுக்கு முன்னதாகவே கலைவாணி விக்னேஷ் வீட்டிற்கு வந்தார்கள். விக்னேஷ் தான் மரியாதையெல்லாம் ஒரு மண்ணும் கிடைக்காது என்று அலட்சியமாய் வந்தான்.
   
  ஆனால் நாராயணனோ “வாங்க தம்பி. வாம்மா.” என்று மகளை அணைத்து கண்ணீர் திரள வழியவிட்டார்.

    கோகிலாவோ.. “அழுது அழுது பேசினியே. இப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு அழ என்னவாம்” என்று அன்பாய் கடிந்து மகளை அமர வைத்தார்.

    பூர்ணாவோ அவள் கையால் ‘மக்கன் பேடா’ என்ற இனிப்பு வகையை எடுத்து வந்து இருவருக்கும் வழங்கினாள்.

     “கலைக்கு எங்களுக்கும் பிடிச்ச மக்கன் பேடா. ஆற்காடு எங்க ஊர் ஸ்பெஷல்.” என்று கொடுக்கவும் பூர்ணாவை கண்டு தயங்கி வாங்கினான்.

      “கலைவாணி இங்க கூப்பிட்டதும் கழுத்தை பிடிச்சி வெளியே துரத்துவீங்கனு வந்தேன்.” என்றவன் கலையை எழுப்பி ஆசிர்வாதம் வாங்கினான்.

     “நல்லாயிருங்கப்பா நல்லாயிரு” என்று வாழ்த்தி முடித்தனர்.

     நாராயணன் விக்னேஷிடம் இயல்பாய் பேச முயன்றார். அதற்கு சத்யதேவ் பெயர் எடுத்து பேசவும் அழகாய் கோர்வையாய் பேச முடிந்தது.

   அதுவும் சத்யதேவோடு திருப்பதி சென்று வந்ததும் கூறினார்.

    ஏற்கனவே விக்னேஷிற்கு கலைவாணி கூறியிருந்தாள். அப்பொழுதிலிருந்து சத்யதேவிற்கு அவனும் போனில் அழைத்து முடிக்க ஒரு முறை கூட போனை எடுக்கவில்லை.

    ‘இவன் ஏன் பூர்ணா ஆபிஸ்ல வேலைக்கு போனதை சொல்லலை. ஏதோ ஐடி ஜாப் டானு சொன்னான்.

    அன்னிக்கு கல்யாண பரபரப்புல கவனிக்கலை. அதுக்கு பிறகு கேட்கவும் இல்லை. ஒரு வார்த்தை விருந்து வச்ச அன்னிக்கு டேய் நான் கலையோடஅக்கா பூர்ணா ஆபிஸ்ல தான் அவளோட வேலை செய்யறேன்னு சொல்லியிருக்கலாம்.

   இன்னிக்கு போன் பண்ணினா எடுக்க மாட்டறான்’ என்றவன் சிந்தனையில் “தம்பி அப்பா மட்டும் தானா?” என்று நாராயணன் கேட்டார்.

    “சாரி மாமா. அப்பா மட்டும் தான் அம்மா காலேஜ் படிக்கிறப்பவே இறந்துட்டாங்க.” என்று கூறினான் விக்னேஷ்.

    சாப்பிட அழைக்கவும் கலைவாணிக்கு கோகிலா வாயும் வயிறுமாய் இருப்பதால் இரண்டு மூன்று வகையான உணவு வகைகள் செய்து வைத்தார்.

     “ஏ அக்கா… மாப்பிள்ளை போட்டோ காட்டு” என்று கூறி அக்கா கணவராய் வரப்போகும் சரவணன் புகைப்படத்தை கேட்டாள்.

    போட்டோ கேலரியில் இருந்தாலும் எடுக்காமல் பூர்ணா கைபிசைந்திருக்க, நாராயணன் சரவணன் போட்டோவை எடுத்து வந்து காட்டினார்.

    கலைவாணி மற்றும் விக்னேஷ் இருவரும் ஒருசேர போட்டோவை பார்த்து முடித்தார்கள்.

     “அக்கா.” என்று கலைவாணி பூர்ணாவை அழைத்தாள்.

-தொடரும்
~பேரரளி