பூ பூக்கும் ஓசை-14

பூ பூக்கும் ஓசை-14

      அங்கு தனது டீமில் சத்யதேவ் விடுப்பு கேட்டு மெயில் அனுப்பவும் ‘இவனும் லீவா?’ என்று தோன்றினாலும் எதிரிலிருந்த அவனிடம் காரணம் கேட்டாள்.

     “ம்.. பொண்ணு பார்க்க போறேன். ஏன் எனக்குனு பெர்ஸனல் இருக்க கூடாதா.. மே..டம்.” என்றான்.

    சூர்யாவிடம் தனக்கு இருந்த அதே வெறுப்பான பதிலை தனக்கு சத்யதேவ் பதிலாய் தரவும், பேசாது அதையும் சூர்யாவுக்கு அனுப்பி விட்டு ”நீங்க போகலாம்” என்று கூறிவிட்டாள். என்னை பொண்ணு பார்க்கறதை கோவில்ல பூசாரியிடம் சொன்னேன். இவன் கலைவாணியிடம் சொல்வான்னு இவன் நக்கலா அதை இப்ப என்னிடம் திருப்பறான்.’ என்று புரியாமல் இல்லை.

    சூர்யாவோ இவனும் லீவு, அவளும் லீவு. கண்ணாமூச்சி ஆடுறிங்க லீவு முடிஞ்சி வரட்டும் இந்த சூர்யா யாருனு காட்டறேன் என்று கருவினான்.


   நேற்றே ஸ்ரீமதி கோயம்பத்தூர் சென்றாள். சனியன்று காலையிலேயே புறப்பட்டு காளஸ்தியில் இறங்கி பூஜையை வேண்டா வெறுப்பாக பூர்ணா முடித்தாள்.

     பதினொன்றுக்கு மேலாக கீழ் திருப்பதி சென்றனர்.

       “அம்மா… இந்த வயசான காலத்துல ஏன்மா நடக்கறேன்னு வேண்டிக்கிட்ட,” என்று அலுத்து கொண்டு தாயோடு நடந்தாள்.

       “மனசு கஷ்டமா இருந்தப்ப, உனக்கு நல்ல வரன் வந்தா நடந்து வருவதா வேண்டிக்கிட்டேன் மா” என்று கூறவும் தாயை கடிந்திட இயலுமா?!

     இரண்டு மணி நேரம் நடராஜா சர்வீஸில் மூச்சு வாங்கியது. ஆனாலும் பூர்ணாவுக்காக என்று நடந்தனர்.

   அப்பொழுது முன்னால் சென்ற பெண்மணி அசதியாய் அமர்ந்தார். அவரின் மகனோ ஏதோ கூறி தாயை தூக்கி கொண்டு நடந்தார்.

     அந்த பெண்மணியோ “கீழ விடு சத்யா பயமாயிருக்கு” என்று கூறவும் கொஞ்ச தூரம் தூக்கி நடந்து பின்னரே இறக்கி விட்டான்.

     பூர்ணாவோ இத்தனை பேர் பார்க்க அவன் தூக்கியதை கண்டு, அவளிதழில் முறுவல் பூத்தது.

    ஆனால் அந்த பெண்மணியை பார்த்தாலே தவிர அன்னையை அலுங்காமல் தூக்கியவனை காணாது கண்களால் அலைப்புறுதலிட்டாள். அடிக்கடி அவன் முகம் காண முயன்றால் ஆனால் முடியவில்லை. அந்த நேரம் அவர்களோடு வந்த பெரியவர் ஓரமாய் திண்டு போன்றதில் அமரவும், அந்த பெண்மணியும் அமர்ந்தார்.

   இருவர் அமர்ந்தப்பின் அவனும் அமர்ந்து தண்ணீர் பாட்டலை எடுத்து பருகினான்.

     பூர்ணாவுக்கு அவன் முகம் கண்டதும் மொட்டு போன்ற கண்கள் விரிந்தது.

    பாதி தண்ணிர் குடித்ததும் சத்யதேவின் பார்வையில் பூர்ணா விழவும் புரையேறியது தண்ணிரை சட்டையில் வழியவிட்டான்..

      பூர்ணா திகைத்து நிற்க, “கால் வலிக்குது பூர்ணா கொஞ்ச நேரம் உட்காருவோம்” என்று நாராயணன் கூறி, உதயேந்திரன் அருகே அமர்ந்தார்.
  
     நாராயணன் அருகே கோகிலா அமர்ந்து பூர்ணாவையும் உட்கார இழுத்தார். சத்யதேவ், காயத்ரி, உதயேந்திரன், நாராயணன், கோகிலா கடைசியாய் பூர்ணா அமர்ந்தனர். பூர்ணா சத்யதேவ் இருவரின் இதயமும் தடதடக்கென்று ஓசையெழுப்பியது.

      “தம்பிக்கு அம்மா மேல பாசம் அதிகமோ.. அலுக்கா தூக்கிட்டே போனார்.” என்று நாராயணன் பேசிட, உதயேந்திரனோ “பாசம் காவேரி மாதிரி கரைபுரண்டு ஓடும்” என்று மகனை கலாய்த்தார்.

     சத்யதேவ் முறைத்தாலும் அப்பா பேசுகின்றாரென அமைதியானான்.

       “வயசாகிடுச்சு இனி எவ்ளோ தூரத்துக்கு நடக்க முடியும்…” என்று உதயேந்திரன் பதில் தந்து “ஐ அம் உதயேந்திரன் ப்ரம் கோயம்புத்தூர்” என்று கைநீட்டி அறிமுகமானார்.

   “நான் நாராயணன் சென்னை தாம்பரம்” என்று கூறவும் உதயேந்திரனோ “தாம்பரமா… நாங்களும் தற்போது தாம்பரத்துல தான் இருக்கோம். எங்க” என்று ஏரியாவை கேட்டறிய, நாரயணன் தனது ஸ்டேஷனரி கடையையும் வெற்றி விநாயகர் கோவிலையும் அடையாளமாக கூறினார்.

    “அட நாங்களும் அங்க தானே இருக்கோம்” என்று உதயேந்திரன் பேச, “கோவில் பக்கம்னா எங்க?” என்று கோகிலா கேட்டதும், காயத்ரி தங்கள் வீட்டு விலாசத்தை கூறினார்.

    பூர்ணாவோ நாலு தெரு தள்ளி இருக்கான் என்று மனதில் எண்ணினாலும் பேசுவதை தடுக்கவோ அதில் கலந்துக் கொள்ளவோ இயலாது தவிர்த்தாள்.

     அதற்குள் உதயேந்திரன்-காயத்ரி  இருவரும் கோயம்புத்தூரில் தங்கள் வசிப்பிடம் என்றும் அவர்களின் மகனுக்காக இங்க வந்துள்ளதாக கூறினார்.

    நாராயணனோ “அப்படியா.. என் தங்கை கூட அங்க தான் இருக்காங்க. வாங்க பேசிட்டே போவோம்” என்று கூறினார்.

     பெண்கள் மூவரும் முன்னே நடக்க, ஆண்கள் மூவரும் பின்னால் வந்தார்கள். காயத்ரி-கோகிலா பேசியபடி வர பூர்ணா அவர்களோடு இசைந்து நடந்தாள்.

     அதே போல உதயேந்திரன்-நாராயணன் பேசவும் சத்யதேவ் தனது முதுகில் சுமந்திருக்கும் பையிலிருந்து முறுக்கை கடக்முடக்கென்று கடித்து திங்கவும், காயத்ரி திரும்பி பார்த்து, “தனியா திங்காத டா. வயிறு வலிக்கும் நீங்களும் எடுத்துக்கோங்க” என்று கோகிலாவிடம் கூறி நீயும் எடுத்துக்கோமா” என்று பூர்ணாவை பார்த்து கூற தயங்கி தயங்கி திரும்பினாள்.

    ஒரு டபர்வேரில் முறுக்கை வைத்திருந்தவன் அவள் முன் நீட்டினான். “தேங்க்ஸ்” என்று ஒன்றை எடுத்து கொண்டு திரும்பிக் கொண்டாள்.

    பின்னர் நேரம் கூடுதலாகவும் கொண்டு வந்த புளியோதரை எடுத்து சாப்பிடவும் தக்காளி சாதம் என்று ஒரே வீட்டார் போல பகிர்ந்து கொண்டனர்.

    “மா.. எனக்கு இன்னும் கொஞ்சம் புளியோதரை வேண்டும் வாங்கி கொடு.” என்று சத்யதேவ் காயத்ரி காதில் கேட்க, “அதுக்கு எதுக்கு தம்பி தயங்குறிங்க பூர்ணா தம்பிக்கு வை” என்று கோகிலா கூற பூர்ணா பரிமாறினார். சத்யதேவின் சின்னதாய் உதடு விரிந்து புன்னகைப்பதை கண்டிருந்தால் அவன் தலையில் கொட்டியிருப்பாளோ என்னவோ.

   சாப்பிட்டு முடித்து கை அலம்பி கையில் வடை மட்டும் வைத்து திரும்ப பூர்ணாவை உறுத்து விழித்து குரங்கு படைகள் நான்கு சூழ்ந்திருந்தது.

     “அம்மா.. குரங்கு. சூ.. .. சூ… போ.. ” என்று பயந்து ஓட, குரங்குகள் அவளை விரட்டியது.

   “அச்சோ.. குரங்கு.” என்று கோகிலா நாராயணன் பதறவும் சத்யதேவ் வேகமாய் பூர்ணாவை, ஒரு குச்சியெடுத்து நெருங்கியிருந்தான்.

    அவள் கையிலிருந்த வடையை பிடுங்கி தூரயெறிந்து விட்டு குச்சி வைத்து விரட்டவும் குரங்குகள் வடையை நோக்கி ஓடியது. ஒரு குரங்கு கவ்வி கொண்டு மரத்தில் ஏறவும் மற்றவை துரத்தியது.

     மூச்சு வாங்க, “இந்த அதட்டல் உருட்டல் எல்லாம் டீம் மெம்பரிடம் மட்டும் தானா? குரங்கிடம் இப்படி பயப்படுற. ஐந்தறிவு ஜீவன் தானே விரட்டினா போக போகுது.” என்று கூறி அவளின் முகத்தில் பூத்த வேர்வை துளிகளை கண்டு ஏக்கமாய் பார்வையிட்டான்.

     “முகமெல்லாம் வேர்த்துடுச்சு பாரு. கர்ச்சீபால துடை” என்று கூறவும் முகம் துடைத்தாள்.

    “தேங்க்ஸ்… நீயும் இங்க தான் வர்றேன்னு தெரியாது. எங்கம்மாவுக்கு நீ தான் கலைவாணி மேரேஜை நடத்தி வச்சேன்னும், அதோட அவ கன்சீவா இருக்கறதும் தெரியாது. நீயா எதையும் உளறிடாதே. எப்படியும் ஒரே ஆபிஸ் என்ற பேச்சு வரலாம்.” என்று யோசித்ததை கூறினாள்.

   “நீ உன் தங்கை கன்சீவா இருக்கறதை சொல்லலையா… அப்போ கலைவாணி விருந்தப்ப எங்கம்மாவுக்கு தெரியும்னு சொன்னாளே.” என்று கேட்டான்.

     “ஜஸ்ட் கெஸ் பண்ணியிருப்பாங்க.” என்றவள் தாய் தந்தையோடு வந்து அருகே நின்று கொண்டாள். சத்யதேவிடம் பேசுவதை தவிர்க்கவே.

     மாலை ஆனதும் திருப்பதியில்  கூண்டில் அடைப்பட்டனர். இறைவனை தரிசிக்க காத்திருந்தனர்.

     அப்பொழுது தான் எத்தனை குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்று பேச்சு ஆரம்பித்தது.

   பெண்கள் தனி பகுதியாய் அமர ஆண்கள் தனித்து அமர்ந்திருக்க, கோகிலா “இது என் பெரிய மகள் டீம் லீடரா ஐடி கம்பெனில வேலை பார்க்கறா. இப்ப தான் வரன் அமைஞ்சிருக்கு. காளஸ்தில தோஷம் கழிச்சிட்டு திருப்பதி போகலாம்னு வந்தோம்.

   சின்ன மக… கல்யாணமாகிடுச்சு, காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. ரெஜிஸ்டர் மேரேஜ்…” என்று தலைகுனிந்தார்.

    “அதுக்கேன் வருத்தப்படறிங்க. எங்களுக்கு ஒரே பையன் கோயம்புத்தூர்ல இருந்தோம். அப்பாவும் பையனும் ஏதோ நண்பர்களா பேசுவாங்க பழகுவாங்க. யார் கண் பட்டுச்சோ இவரோட தம்பி பொண்ணு ஒருத்தியும் லவ் பண்ணினா.

   ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணறதை தற்செயலா அங்க போன சத்யதேவ் பார்த்துட்டான்.

    கூட பிறக்கலைனாலும் தங்கையாச்சே. இப்படி திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணறான்னு தெரிந்ததும் கோபம் வந்து ஒரு அண்ணாவா மாப்பிள்ளை பையனை கண்மண் தெரியாம அடிச்சிட்டான்.

     அதுக்குள்ள இவரோட தம்பிக்கு போன் செய்து ‘சித்தப்பா  ஐசுவர்யா கல்யாணம் பண்ண ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்திருக்கா இங்க வாங்க’னு சொல்லிட்டான்.

    அன்னிக்கு ஒரே ரகளையா போச்சு. சண்டை வந்து என் பொண்ணா இருந்தா என் கூட வானு என் கணவரோட தம்பி கூப்பிட, ஐசுவர்யா வரலை.

    ‘கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாழ்த்திட்டு போங்க’னு அழுதிருக்கா. அப்ப தான் அந்த பையன் திடீருனு ‘இனி என்ன கல்யாணம் பண்ண. உங்கண்ணா என் மேலயே கையை வச்சிட்டான். இனி கல்யாணம் பண்ண மாட்டேன் போடினு மாலையை விசிறியடிச்சு கிளம்பிட்டான்.’ அவனுக்கு அவமானமா போச்சாம். அவன் போனதும் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போக, இரண்டு நாள்ல வாந்தி எடுத்திருக்கா. நான் கர்ப்பமா இருக்கேன் என்னை காதலிச்சவனோட சேர்த்து வையுங்கனு அவஅப்பா அம்மாவிடம் அழுது சொல்லியிருக்கா.

     அவங்களும் வெளியே தெரிந்தா அசிங்கமாச்சேனு அந்த பையனிடம் பேச போனாங்க. அவன் பிடிவாதமா சத்யதேவ் அவனோட பிரெண்ட்ஸ் முன்ன அடிச்சதை காரணம் காட்டி அவமானமா இருக்கு. இனி உன்னை கட்டிக்க மாட்டேன். இந்த குழந்தைக்கு வேற எவனையாவது அப்பனா காட்டிக்கோனு, திட்டிட்டான்.

     சத்யதேவுக்கு தெரிந்து மன்னிப்பு கூட கேட்டான். ஆனா அந்த பையன் சமாதானமாகலை. உன் தங்கை எவனை கட்டிப்பானு பார்க்கறேனு சாவலிட்டு போயிட்டான்.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அங்கயிருந்து இங்க வந்திருக்க மாட்டான்.

   தங்கையா நினைச்சு தான் உரிமையா அங்க அண்ணனா அவதாரம் எடுத்தான். ஆனா அவங்களே ‘நீ யாருடா என் மக கல்யாணத்தை நிறுத்த, அவனை அடிச்ச, அதனால தான் என் மக வாழ்க்கை போச்சுனு திட்டினாங்க.

‘அண்ணனா கூப்பிட்டா சொந்த அண்ணாவாகிடுவியா… பெரிப்பா பையன் தானே. உன்னால பாரு என் மக வயித்துல பிள்ளையை வச்சிட்டு தனிமரமா இருக்கா’னு சத்யதேவை திட்டினாங்க.

    இதுல ஐசுவர்யா ஒருடப்பா நிறைய தூக்கமாத்திரை சாப்பிட்டுட்டா… உயிரை காப்பாத்திட்டாங்க ஆனா கரு கலைந்துடுச்சு. ஐசுவர்யா பிரம்ம பிடிச்ச மாதிரி யாரிடமும் பேசாம இருக்கா. இவனுக்கும் அங்கயிருந்து சித்தப்பா வீட்ல யாரும் நம்மிடம் பேசாம கொள்ளாம போக கஷ்டமாகிடுச்சு. அதனால இங்க சொல்லாம கொல்லாம வந்துட்டான்.

    அதுல இருந்து சத்யதேவோட அப்பா சத்யதேவிடம் பேசலை.

    முதல் தவறு கோபத்தை கண்ட்ரோல் பண்ணி சத்யதேவ் அந்த பையனை அடிக்காம பேசியிருந்தா ஒரு வேளை அந்த பையன் மனசுயிறங்கி கல்யாணம் பண்ணியிருப்பான்.

இரண்டாவது எங்களிடம் சொல்லிட்டாவது இங்க வந்திருக்கலாம். அவங்க பேசலைனு எங்களிடம் கூட சொல்லாம வந்தா பெத்தவரு, பிரெண்டா பழகி என்ன பிரோஜனம்னு மகனிடம் பேசறதில்லை.

     காதல் கல்யாணம் ரெஜிஸ்டர் மேரேஜ் இதெல்லாம் சகஜமா போயிடுச்சுங்க. இதுல பெத்தவங்க மனசு கலக்கமடையாம கல்யாணம் பண்ணற காதல் தம்பதிகள் கொஞ்சம் பரவாயில்லை.” என்று காயத்ரி பேசவும் பூர்ணாவோ சத்யதேவிடம் பார்வையை நிலைநிறுத்தினாள்.

     ‘ஒருவேளை அவன் தங்கை மாதிரி கஷ்டப்படக்கூடாதுனு பிரெண்ட் மேரேஜை நடத்தி வைக்க வந்துயிருப்பானோ. நான் வேற அக்கா தங்கைக்கு நடந்தா தெரியும்னு பேசிட்டேன். என் வலி அவனுக்கு புரிந்து இருக்கும்.’

    கூண்டு திறந்துவிட அன்றே பெருமாளை  தரிசனம் செய்ய நடைபாதை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    “மணி இப்பவே இரண்டாகுது மூன்று மணிக்குள்ள தரிசனம் கிடைச்சிடும்” என்று நாராயணன் கூறி வரிசையில் நின்றனர்.

     பூர்ணா சத்யதேவை அடிக்கடி பார்த்து பேச தவிக்க, அவனோ ‘என்னவாம் இவளுக்கு… என்னயே லுக் விட்டுட்டு இருக்கா.’ என்று அவனுமே அடிக்கடி எதச்சையமாக பார்ப்பது போன்று பார்த்து திரும்பினான்.

     சரியாக பிரம்ம முகூர்த்தம் நேரம் நான்காக பெருமாளின் திவ்ய தரிசனம் கிட்டியது.

    உடலெங்கும் ஆபரணங்கள் அணிந்து புன்முறுவல் சிந்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உன் வருத்தங்களை என் திருவடியில் கொட்டிவிட்டு செல். நான் பார்த்து கொள்கின்றேன்’ என்று பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏழுமலையான் வெங்கடேசன்.

   ‘கடவுளே இந்த வாழ்க்கை வாழறதே சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ தான். கலைவாணி கல்யாணம் பண்ணியதில் அப்பா அம்மா ரொம்ப துவண்டுட்டாங்க. குடும்பத்தை ஒன்னு சேர்த்து வீட்ல பழைய சந்தோஷத்தை மீட்டு தா

   கல்யாணம் என்றாலே பிடிப்பு வரலை. எனக்கானவனிடம் நேசத்தை மலர வைக்கிறதும் உன் பொறுப்பு.” என்று வேண்டுதலை மனதில் முனுமுனுத்தாள் பூர்ணா.

சத்யதேவோ அவளையே கண்டு ‘இங்க வந்து இந்த ஆசை பிறக்கறது சரியா தவறானு தெரியலை. கடவுள் சந்நிதியில கூட என் மனசு வேண்டுதலை விட உன்னை தான் விழுங்குது.’ என்று தன்னையே திட்டிக்கொண்டு நின்றான்.

    “புருஷன் பொண்டாட்டி கொஞ்சம் நகர்ந்து போங்க. மத்தவங்க தரிசனம் பார்க்கணும்” என்று அங்கிருந்த ஐயர் திட்டவும் பூர்ணா சட்டென அவ்விடம் விட்டு ஓடினாள்.

     சத்யதேவோ அவ்வார்த்தையின் பொருள் உணர்ந்து முறுவல் கொண்டு வெளிவரவும், உதயேந்திரனோ மகனருகே வந்து, “சத்யா… நாராயணன் நம்ம ஏரியா தான். அதனால நம்மளோடவே கூட்டிடடு போயிடலாமா.” என்று கேட்டார்.

    “அப்பா… நீ என்னிடம் பேசிட்டப்பா” என்று மகன் அணைக்க, “டேய்… உன்னிடம் பேசாம எங்க போக போறேன்.

   நீ ஒரு வார்த்தை அவரை கூப்பிடு” என்று தோளில் தட்டி சென்றார்.

    தந்தை பேசிய சந்தோஷத்தில் வேகமாய் நாராயணனிடம் வந்து “அங்கிள் நாங்களும் தாம்பரம் தான் போகறோம். நீங்களும் கார்ல வாங்களேன். டிராப் பண்ணிடறேன்” என்று கேட்க பூர்ணா அவனை இதென்ன தொடர்ந்து உயிரை வாங்குகின்றான் என்று அணலாய் வீசினாள்.

   நாராயணனோ இதுவரை உதயேந்திரனிடம் பேசியதில் அவரொரு முறை கேட்டார் தற்போது அவர் பையன் வேறு அழைக்க பின்னால் காயத்ரியும் கோகிலாவை வற்புறுத்த சங்கடமாய் சரியென்று தலையாட்டினார்.
 
    பூர்ணாவோ இதுக்கே மூச்சடைக்குது. இதுல இவனோட வீடு வரையா? என்று திகைத்தாள்.

-தொடரும்.
-பேரரளி