பூ பூக்கும் ஓசை-13

பூ பூக்கும் ஓசை-13

கலைவாணி சற்று தயங்கி அமர்ந்திருந்தாள். விக்னேஷோ அவன் வீட்டில் இருக்கும் உணர்வோடு சத்யதேவ் வீட்டில் சுற்றியிருந்தான்.

பத்ரி, சக்தி இருவருமே, உதயேந்திரனிடம் பேசி கொண்டிருந்தனர்.

“பாரும்மா அப்பாவை என்னிடம் முன்ன மாதிரி பேசமாட்டேங்கிறார். இந்த இரண்டு தடிமாடுகிட்ட மட்டும் ஜாலியா பேசறார்.” என்று நண்பர்களிடம் பதர்தை பேசுவதை சுட்டிகாட்டி குறைப்படவும், காயத்ரி சிரித்தபடி உணவை தயார் செய்து முடித்தார்.

“வெல்கம் ட்ரிங் முக்கால் வாசி குடித்து முடித்து கையிலேயே கண்ணாடி டம்ளரை வைத்து நேரம் போக்கினாள்.

“என்னம்மா.. ரொம்ப நேரமா தனியா இருக்கற பீல் ஆகுதா. எல்லாம் தடியன்களாவே இருக்காங்க.” என்று காயத்ரி வந்து அமர்ந்தார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை ஆன்ட்டி. இங்க நீங்க மதிச்சு கூப்பிட்டதிலேயே அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். மூனு நாளா காயத்ரிம்மாவை பார்க்க போறோம். விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்கனு வாய் ஓயாம சொல்லிட்டு இருந்தார்.” என்றதும் காயத்ரி அகமகிழ்ந்தார்.

“பையன் எப்படி காதலிக்கறப்ப இருந்த குணமும் கல்யாணம் ஆனப்பிறகும் அதே மாதிரி இருக்கானா” என்று கேட்டார்.

சற்று தள்ளியிருந்த விக்னேஷை பார்த்து “இல்லை ஆன்ட்டி. முன்ன ஆசையா பேசுவார். இப்ப கோபம் வருது.

முன்னயெல்லாம் இதானா என்ற ஏளனம் வழியும். இப்ப எது என்னனு ரொம்ப யோசிக்கறார்.

இந்த குணங்கள் நல்லது கெட்டது என்ற இரண்டிலும் எனக்கு அபெக்ட் ஆகுது.” என்று கூறினாள் கலைவாணி.

“பொறுப்புகள் அதிகமாகுதே அந்த பயம் அவனோட கோபமும் வெளிப்படுது மா.” என்று அனுபவம் கண்டு அறிவுறுத்தினார்.

மென்னகையாக ஆமோதித்தாள் சிறியவள்.

“விக்னேஷ் அப்பா எப்படி பழகறார் மா.” என்றதும், நொடியில் கண்ணீர் சிந்தியவள், “அவர் எப்பவும் என்னிடம் பேசறதில்லை ஆன்ட்டி. ஒருமுறை மயக்கமாகி குமட்டுதுனு சொன்னதும் விக்னேஷ் அசால்டா இருக்க, என்னிடம் வந்தவர் என்ன குழந்தை கலைக்க முடியாம கல்யாணம் பண்ணிட்டிங்களானு ஒரு மாதிரி அசிங்கமா கேட்டுட்டார் ஆன்ட்டி.

போனதிலருந்து ஒரு வார்த்தை அவரா பேசியதில்லை. சமைச்சா சில நேரம் என்ன குழம்புனு பார்த்து சாப்பிடுறார். அப்ப மட்டும் விக்னேஷ் இது எங்கப்பாவுக்கு பிடிச்ச குழம்பு அடிக்கடி வைனு சொல்வார். ஆனா பேசின கொஞ்ச வார்த்தையும் என்னை கொன்றுடுச்சு.

இப்ப எல்லாம் ரூம்ல அடைந்துக்கறார்னு வேலைக்கு வர்ற அம்மா சொல்லறாங்க.” என்று பேசினாள்.

“அவர் அப்படி தான்னு விக்னேஷ் சொல்லுவான். அவர் போக்குல விட்டுடு.” என்று சாப்பிட எடுத்து வைக்க, நால்வர் படையாக பத்ரி, சக்தி, விக்னேஷ், சத்யதேவ் அறையிலிருந்து வெளியேறினார்கள். உதயேந்திரன் கூடவே மகனின் தோழர்களோடு பேசி அரட்டையில் கலந்தவராய் வந்தார்.

வரிசையாய் உணவை பரிமாற, சத்யதேவ் பாதி சாப்பாட்டில், “ஏன் கலைவாணி இங்க தானே உங்க வீடும் பக்கத்துல இருக்கு” என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லும் முன் விக்னேஷ் “ஆமா டா. பிள்ளையார் கோவில்ல இடது பக்கம் கடை இருக்கும் வலது பக்கம் வீடு பெரிய மாடமும் துளசி செடி அகல் விளக்குனு அங்க இருக்கும்” என்று அடையாளத்தை கூறினான்.

“உங்க அப்பா அம்மாவிடம் கர்ப்பமா இருக்கறதை சொன்னியாமா?” என்று காயத்ரி கேட்டதும் கலைவாணி அமைதியுற்றாள்.

“அம்மாவுக்கு எப்படியோ மந்திலி பேட் காலியாகலைன்னதும் தெரிஞ்சிருக்கு ஆன்ட்டி. அவங்களும் அசிங்கமா திட்டிட்டாங்க.” என்றதும் சத்யதேவிற்கு பூர்ணா கூறியிருப்பாளோ என்று சினம் துளிர்த்தது. ஆனால் பெற்றோரிடம் கூறாமல் அவளும் இருக்க இயலாதே என்ற உண்மை நிலவரம் உணர்ந்தான்.

“ஆன்ட்டி சமையல் சூப்பர். ஏன் ஆளாப்பறந்தாருனு இப்ப தெரியுது.” என்று விக்னேஷை வம்பிழுத்தாள்.

“இந்த இறால் மஞ்சூரியன் ட்ரை பண்ணி பாருமா” என்று காயத்ரி வைக்கவும், “டேஸ்ட் பண்ணிட்டேன் ஆன்ட்டி. ஏ ஒன்.” என்று சாப்பிட்டு முடிக்க விக்னேஷோ இன்னமும் எடுத்து போட்டு சாப்பிட்டான்.

“நீ சொல்லியிருக்கணும் மா. உன் சிட்டுவேஷனை.” என்று காயத்ரி கூறவும் கலைவாணி அமைதியானாள்.

“எப்படி ஆன்ட்டி” என்று சங்கடமுற்றாள்.

“அவங்க எல்லாம் காது கொடுத்து கேட்க மாட்டாங்க மா” என்று விக்னேஷ் கை அலம்பினான்.

சத்யதேவோ விக்னேஷ் பேச்சில் கோபமாக “காது கொடுத்து கேட்க மாட்டாங்க டா. எந்த பேரண்ட்ஸ் காது கொடுத்து கேட்பாங்க.

அவங்களை பொறுத்தவரை நீங்க வயசு கோளாறுல செய்த தப்பாவோ, தனிமையில கிடைத்த சந்தர்ப்பத்தை மிஸ் யூஸ் பண்ணியதா தான் நினைச்சிருப்பாங்க உண்மை தெரியாதுல.

இங்க பாரு விக்னேஷ் தப்பு செய்தா ஒதுக்கி வைப்பாங்க. நாம தான் இரண்டு மூன்று முறை ஈகோ பார்க்காம நேர்ல போய் உண்மை சொல்லி நிலைமையை விளக்கணும்.” என்றான் சத்யதேவ்.

“என்னால சொல்ல முடியலை சத்யதேவ். இதோ இவளும் அப்படி தான் தேம்பி தேம்பி அழுவறாளே தவிர சொல்ல மாட்டேங்கறா. அவங்க அம்மா போன் பண்ணி அசிங்கமா திட்டியதும் அழுதுட்டு உட்கார்ந்துடறா.

நான் சிம்மை உடைச்சிட்டேன். இனி பேசாதனு சொல்லிட்டேன். குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தை முகத்துக்காக மன்னிக்கட்டும். அதுவரை சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க சொல்லிட்டேன் சத்யா” என்று சத்யதேவிடம் விளக்கினான்.

“தப்பு டா. அதுவரை கலைவாணி அவளோட அம்மா தன்னை தப்பா எடுத்துக்கிட்டாங்களேனு மனசுல பாரத்தோட இருக்கணுமா. இல்லை அவங்க பேரண்ட்ஸ் நம்ம வளர்ப்பு தப்பா போச்சேனு அழுவாங்களா.

இதுல இவங்க அக்காவுக்கு அவசரமா கல்யாணம் பண்ண கூட சான்ஸ் இருக்கு” என்று கலைவாணிக்கு பூர்ணாவை பொண்ணு பார்க்க வருவது தெரியுமோ என்னவோ என்று தூண்டில் போட்டு கூறி பார்த்தான்.

“எப்படியிருந்தாலும் அக்காவுக்கு இந்த இயர் வரன் பார்க்கறதா அப்பா சொல்லிட்டு இருந்தார். அதனால பார்க்கலாம். பார்த்தாலும் நல்லது தான். அப்படியாவது கொஞ்ச நாள் அம்மா அப்பா மனசை திசைத் திருப்பி நிம்மதியா இருக்கட்டும்.” என்று கலைவாணி கூறினாள்.

‘ஆமா அவளுக்கு என்ன… ஜாலியா அலங்கரிச்சி அழகா தேவைதையாட்டும் இருக்கா.’ என்று சத்யதேவ் மனம் அடித்துக் கொண்டது.

“ஏ… சத்யா ஒரு மாதிரி அப்சட்டா இருக்கான். கலை… உனக்கு விருப்பம்னா சொல்லு நான் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்றதும் கலைவாணி மறுத்துவிட்டாள்.

சக்தியோ “ஏம்மா… அவனே அழைச்சிட்டு போறான்னு சொல்லறப்ப போயிடும்மா. இல்லைனா அது வேற சொல்லிட்டே இருப்பான். என்னவோ இவனுக்கு ஈகோ இல்லை. நீ தான் பேசாததுக்கு காரணம்னு எட்டு கட்டுவான்.” என்று கூறினான்.

“இல்லை அண்ணா… அவர் சொல்லறதும் சரி தான். முதல்ல அக்காவிடம் பேசிட்டு பிறகு அம்மாவிடம் பேசணும். நேரா அம்மா அப்பாவிடம் போனா என் பேச்சை கேட்க மாட்டாங்க” என்று கூறினாள்.

சத்யாவோ “அப்ப உங்க அக்காவிடம் பேசும்மா.” என்று ஏற்றிவிட்டான்.

“சரிங்க” என்று கலைவாணி பதில் தரவும் சத்யதேவ் அதற்கே நிம்மதியடைந்தான்.

கலைவாணி விக்னேஷ் இருவரும் மாலை வரை இருந்து சிற்றுண்டி முடித்து கார்ட்ஸ் விளையாடி, இரவு உணவருந்தி பின்னரே சென்றனர்.

அதுவும் கலைவாணிக்கு நெக்லஸ் செட், விக்னேஷிற்கு தங்கசெயின் என்று அணிவித்து அழகு பார்த்தார்.

கலைவாணி திகைக்க, “நாஸூக்கா கல்யாணம் பண்ணிட்டான். ஒரு வார்த்தை சொன்னா நாங்க வந்துயிருப்போம். அதனால கல்யாணத்துக்கு கொடுக்கிற பரிசா நினைச்சிக்கோ மா” என்று கூறவும் ‘அப்ப கூட இவ்ளோ’ என்றாலும் விக்னேஷ் இது இயல்பு என்றது போல இருக்கவும் அமைதியானாள். பின்னர் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர்.

சக்தி, பத்ரி இருவரும் பைக்கில் அவர்கள் வீட்டை அடைந்தனர்.

~~~

இரவு தட்டில் உணவை வைத்து விரலால் கோலமிட்டு கொண்டிருந்தாள் பூர்ணா.

‘இன்னிக்கு எப்படியும் கலைவாணி இந்த பக்கம் எங்கயோ தான் தேவ் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருப்பா. ஒரெட்டு இங்க வந்திருப்பானு நானும் வாசலை பார்த்து பார்த்து கண்ணு பூத்தது தான் மிச்சம். அவ ஏன் வரலை?

விக்னேஷ் வரவிட்டிருக்க மாட்டாரா? இல்லை இங்க வந்தா அன்னிக்கு மாதிரி திட்டி அனுப்புவாங்கனு நினைச்சிருப்பாளா?

காலேஜ்ல விக்னேஷ் விரும்பி இருக்க வாய்ப்பில்லை. பிறகு எப்படி பழக்கம்? சின்னதா ஒரு பொய்யை மறைச்சா கூட என்னிடம் நைட்டு உலறிடுவா. அப்படியிருக்க இதை எப்படி?

தப்பு செய்த பொண்ணா இருந்தா பிரெண்ட்ஸ் அதை பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா சத்யதேவ் அம்மா எப்படி விருந்துக்கு அழைச்சிருப்பாங்க.

சத்யதேவிடம் திரும்ப போய் கேட்கறது அவ்ளோ நல்லா இருக்காது.’ என்றவளின் எண்ணத்தில் ஸ்ரீநிதி சொடக்கிட்டாள்.

“என்ன அண்ணி கனவு காணறிங்களா.? சரவணன் அண்ணா கூட பேசியாச்சா” என்று நேரங்காலமின்றி ஸ்ரீநிதி பேசவும் பூர்ணாவோ, கடைசி உருண்டையை வாயில் திணித்தாள்.

“இந்த கனவு எல்லாம் எப்படி தான் வருமோ. இருக்கற பிராஜக்ட் முடிக்க நேரம் பத்தலை. ஆளாளுக்கு லீவு கேட்டு மெயில் அனுப்பியிருக்காங்க.

வீட்ல இருக்கற பிரச்சனை? இதெல்லாம் தாண்டி நேத்து பார்த்தவனோட எப்படி டூயட் பாட தோனும்” என்றவளை ஸ்ரீநிதி விநோதமாய் பார்த்தாள்.

“ரொம்ப கஷ்டம் அண்ணி. அண்ணா உங்களை கரெக்ட் பண்ண?” என்று ஸ்ரீநிதி தலையணையை எடுத்து மடியில் வைத்தாள்.

பூர்ணாவோ நாளை அலுவலகம் செல்ல உடையெடுத்து வைத்து படுத்து கொண்டாள்.

அடுத்த நாள் அலுவலகம் செல்லும் நேரம் வழியில் அருகே வந்த பைக்கின் எண்ணை பார்த்தாள். 2345 என்ற எண்ணை தேடியிருப்பாளோ அல்லது ஒரே வழி என்றதால் சகஜமாய் சத்யதேவும் இந்த வழி வருவானென அறிந்து அவனின் எளிதில் மனனம் ஆகும் பைக் எண்ணை காண்பது எதச்சையமோ என்று அவளின் உள்ளமே அறிந்தது.

ப்ரியா, சம்ருதி, தாமஸ் என்று சத்யதேவிடம் அரட்டையடிக்க, தனக்கு முன் வந்துவிட்டவனை கண்டாள்.

ஆனால் பெரிதாய் அதில் மகிழ்ச்சியடைய என்ன உள்ளது. பைக் வைத்திருப்பவன் சந்து பொந்தில் விரைவாக வந்து தொலைவான் என்ற எண்ணம் மட்டும் ஓடியது.

“சூர்யாவிடம் குட்மார்னிங் சார்” என்று பணியை பார்க்க அன்றைய நாட்கள் மெதுவாய் போனது.

அடுத்த நாளில் சூர்யாவிடம் வந்து “லீவ் அப்ரூப் பண்ணாம இருக்கிங்க சார்” என்று கேட்டு நின்றாள்.

“அதென்ன பூர்ணா… வேலை ஒன்னு கொடுத்தா லீவ் எடுக்கறதில இருக்கிங்க. அதுவும் உங்க டீம்ல இருக்கறவங்க எல்லாம் லீவ் எடுத்தா யார் தான் பிராஜக்ட் பண்ணுவீங்க?” என்றான் சூர்யா. அவன் பேச்சில் நீ தானே மேனேஜரா நடந்துக்க சொன்ன என்ற நக்கலும் பிணைந்திருந்தது.

“சார் கொடுத்த ஓர்க் ஆறு மாசம். அதுல ஐந்தாவது மாசமே முடிச்சி காட்டுவோம்.

இங்க வேலை செய்யறதால எனக்கு பெர்சனல் என்பதையே நான் மறக்க முடியாது இல்லையா. நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் அதுயிதுனு ஆரம்பிச்சா லீவு அப்ளை பண்ண தானே செய்வீங்க.

இது எனக்கான நேரம் சார். குடும்பத்தோட கோவிலுக்கு போகணும்னு வேண்டுதல். அதை மீறி லீவ் இல்லைனா இல்லைனு சொல்லுங்க.” என்று வெடித்தாள். இதே வேறு யாரேனும் என்று தன்மை கூடியிருக்கும் சூர்யா தானே என்ற எண்ணம் கொஞ்சம் போல இருந்தது அந்த தைரியத்தில் சற்று குரலை உசத்தினாள்.

“ஓகே… கிராண்டட். பார்க்கறேன் குயிக்கா முடிச்சி தர்றிங்களானு.” என்றவன் ஏதோ முடிக்க இயலாது பூர்ணா தவிக்க வேண்டும் என்பது போல நடந்தான்.

அந்த கோபத்தோடு பூர்ணா வீட்டுக்கு வந்து சேர, “வர்றேன் மா வர்றேன் வை” என்று ஸ்ரீநிதி கடுப்போடு கத்தரித்தாள்.

“ஸப்பா… நாம ஒன்னு நினைச்சா. அது ஒன்னு நடக்குது. உங்களோட ஆசையா திருப்பதி வந்து வெங்கியை பார்க்கலாம்னு பார்த்தா.. காலேஜ்ல ஏதோ ஸ்பெஷல் பீஸ் கட்டணும்னு உசிரை வாங்கிட்டாங்க. நான் வேற கார்டை எடுத்துட்டு வரலை.

அப்பா வீட்டுக்கு வந்து எடுத்துட்டு போக சொல்லிட்டாங்க அண்ணி.

உங்களோட வர்ற மௌமெண்ட்ஸ் மிஸ்ஸாக போகுது.” என்று வருந்தினாள்.

எப்ப போற?” என்று பூர்ணா அலுங்காமல் கேட்டாள்.

“ப்ரை டே நைட் அண்ணி. அதோட ஞாயிறு ரிட்டன். வெங்கியை பார்க்கறது மிஸ்ஸிங். நான் வேற ஒரு வேண்டுதல் வச்சேன். சொதப்பிடுச்சு. அவரை தேடி கண்டுப்பிடிக்கறதுக்குள்ள நான் திணறிடுவேன்” என்று கூறவும், பூர்ணாவோ சூர்யா பேசியதில் உழன்றதில் ஸ்ரீநிதி பேசியதை கவனிக்காமல் போனாள்.

அதே நேரம் சரவணன்(வுட்பி) என்ற கால் வரவும் ஹாண்ட்பேக்கை வைத்து விட்டு “ஹலோ” என்று அட்டன் செய்தாள்.

“ஹாய் பூர்ணா ஹௌ ஆர்யூ.” என்றான் சரவணன்.

“ஃபைன் அண்ட் நீங்க?” என்று பேசினாள்.

“யா… ஃபைன். திருப்பதி போறிங்க போல. என்ன விஷயம்… பக்தியா?” என்றான்.

“காளஸ்தி போகணுமாம். மேரேஜ் பண்ணறதுக்கு முன்ன ஏதோ தோஷம் கழிக்கணும்னு அப்பா சொன்னார்.” என்று உரைத்தாள்.

“இஸிட்… ம்.. நான் இந்த வாரம் நாம மீட் பண்ணி பேசலாம்னு இருந்தேன். அப்ப தான் அம்மா சம்மந்தி குடும்பமா திருப்பதி போறாங்கனு பேசிக்கிட்டாங்க. முதல் பிளானே சொதப்பிடுச்சேனு பீல்ல இருக்கேன்.” என்று சரவணன் கூறவும் இந்தபக்கம் பூர்ணாவோ ‘ஓ மை காட் வெங்கி தேங்க்யூ.’ என்று மனதில் கூறி கொண்டாள்.

“பூர்ணா… நாம ஏன் நாளைக்கு சந்திக்க கூடாது.?” என்று கேட்டான்.

“இல்லை… நாளைக்கு முடியாதே. நாளைக்கு ஆபிஸ்ல ஓர்க் அதிகம். இன்னிக்கே மேனேஜர் ஸ்ட்ரிட்டா லேட்டாகும் வீட்ல சொல்லிடுங்கனு சொன்னார். அதனால வர்றது கஷ்டம் மிஸ்டர் சரவணன். நாம வேண்டுமின்னா ஊருக்கு போயிட்டு வந்து பாஸிபிள் ஆனா மீட் பண்ணலாம்.” என்று மறுத்தாள்.

“டேமிட்…” என்று சலித்து கொள்வது மறுப்பக்கம் கேட்டது. “சரவணன்..” என்று பூர்ணா குரல் ‘என்ன சொன்ன?’ என்ற அதிகார தோரணையில் விழுந்தது.

“நத்திங் இங்க சிக்னல்ல பைக்காரங்க வழிவிடாம இரிட்டேட் பண்ணிட்டு இருக்காங்க” என்றான்.

“ஓ.. சாரி டிராபிக்ல இருக்கிங்களா.. ஐ கால் யூ பேக் சரவணன். முதல்ல சேப்டி தானே முக்கியம். டிரைவ் பண்ணும் போது போன் அவாய்ட் பண்ணுங்க” என்று கூறி துண்டித்தாள்.

போனை அணைத்ததும் இப்ப எதுக்கு நேர்ல மீட் பண்ணணும். என்னால முடியாது. நான் இன்னும் பிராக்டிக்கலா மேரேஜ்க்கு ப்ரிப்பேர் ஆகலை. அதுக்குள்ள டேட்டிங் மீட்டிங்னு.’ என்று தலைவலிக்க தைலம் தேய்த்தாள்.

-தொடரும்.
~பேரரளி.