பூ பூக்கும் ஓசை-12

பூ பூக்கும் ஓசை-12

     வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் நேரம், “இதோ பூர்ணா வந்துட்டா.” என்றதும் கரண்ட் இல்லாமல் கசகசவென வீற்றிருந்த சரவணன் கடுப்போடு வாசல் பக்கம் பார்த்தான்.

     கரண்ட் இல்லையென்றாலும் வெளிச்சம் இருந்தது. அவன் திரும்பும் நேரம் பாதம் முதல் மெதுவாய் தன் விழியை மேல் நோக்கி பயணிக்க, நேர்த்தியாய் புடவை கட்டிய பதுமையாய் பூர்ணா இருந்தாள். அவள் முகம் காணும் நேரம் மின்சாரம் வந்து பளிச்சிட, மின்விசிறியின் உபயத்தால் காற்று பரவி முகத்தில் இருந்த இரண்டு மூன்று சிகைகற்றைகள் அலைப் பாய்ந்தது.

        இதுவரை காத்திருக்க பிடிக்காமல் எரிச்சலில் எழுந்து போக தயாராய் இருந்த சரவணன் ஆணி அடித்தாற் போன்று அமர்ந்து பூர்ணாவை காணவும் அவன் தாய் ஷியாமளா தந்தை மோகன் அவனிடம் ‘பிடிச்சிருக்கா?’ என்று கேட்டதும் இமை மூடி ஆமென்றான்.

     அவளை பார்த்து பிடித்த பின் தான் பழச்சாறையே அருந்தினான் சரவணன்.

      மற்ற விஷயங்கள் பேச பேச, பூர்ணா மௌவுனமாய் நின்றாள்.

     ஏதேனும் பேசப் போய் கலைவாணியை வைத்து தாய் தந்தையரை புண்படுத்தி விடுவார்களோ என்ற சிறு பயத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.

      ஆனாலும் வரதட்சணை நகை பற்றி பேசும் போதெலல்லாம் தாடை இறுகியது.

    பூர்ணாவுக்கு எப்பொழுதும் ஒரு வழக்கம் உண்டு. நகை போடாமல் யாரும் பெண்ணை கை வீசி அனுப்ப மாட்டார்கள். ஆனால் அதை மாப்பிள்ளை வீட்டாட்கள் கேட்டு பெறுவது பிடிக்காதவொன்று.

     இதே கலைவாணி திருமணம் ஆகாது இருந்தால் வாய் விட்டு கேட்டிருப்பாள் இன்றோ பெற்றோரை பாதிக்கக்கூடாதென அமைதியானாள்.

   இது அடிபணிந்து போவதல்ல, தந்தைக்கு தன்னால் எந்த அவமானமும் கஷ்டமும் வேண்டாம் என்ற முடிவு.

     ஷியாமளா பேசிக்கொண்டே போக, சரவணனோ “அம்மா… வரதட்சனை நீங்களா எதையும் கேட்காதிங்க. அவங்க அவங்களோட பொண்ணு செய்து வச்சதை போடட்டும். நீங்க நிச்சயதார்த்தம் கல்யாண தேதியை மட்டும் குறிங்க” என்று கூறினான்.

     பூர்ணா போட்டோவில் பார்த்த சரவணனை தற்போது பேசியபின் முதல் முறை விழி நிமிர்த்தி கண்டாள்.

    சிறு புன்னகையோடு அவன் கண்கள் சந்திக்க பூர்ணாவோ நட்பாக சன்ன சிரிப்பை வெளியிட்டாள்.

  ஸ்ரீநிதியோ சீவல் தட்டை எடுத்து வந்து “அண்ணா… அண்ணியிடம் பேசறிங்களா?” என்று கேட்டு வைத்தாள்.

     பூர்ணாவுக்கோ தூக்கி வாறி போட்டது. இரண்டு நிமிடம் பார்த்தவனிடம் என்ன பேச? என்று சராசரி பெண் மனமாய் திகைத்தாள்.

    “இட்ஸ் ஓகே… தேவைப்படாது. நான் பூர்ணாவோட போன் நம்பரை வாங்கிட்டு பிறகு பேசிக்கறேன்.” என்று சரவணன் பதில் தரவும் தான் நிதானித்தாள்.

      ஸ்ரீநிதியோ ‘சே சீன் மிஸ்ஸாயிடுச்சே.’ என்று காதல் காட்சியை எதிர்பார்த்து ஏமாந்தாள்.

     அவர்கள் வழக்கப்படி நிச்சயத்தை திருமண நாளிற்கு முன்னதாக வைத்து கொள்வோம் என்றும், திருமண நாளை வீட்டிற்கு போய் கலந்து ஆலோசித்து கூறுவதாக வணக்கம் வைத்து கூறினார்கள்.

    நாராயணனிற்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. கோகிலாவும் வணக்கம் வைத்து மகிழ்ச்சியாய் அனுப்பி வைத்தார்.

   சரவணன் மட்டும் போன் எண்ணை கூறி அவளின் நம்பரை வாங்கினான்.

    “டச்ல இருப்போம் பூர்ணா.” என்று இயல்பாய் விடைப்பெற்றான்.

    அவர்கள் சென்றதும் பூர்ணா ஒரு பௌலில் அல்வா எடுத்து சாப்பிட துவங்கினாள்.

     “என்னடா எல்லாம் பிடிச்சிருக்கா. அவங்களுக்கு சொந்தக்காரங்களை அழைத்து வர விருப்பமில்லையாம். பையன் ஸ்ட்ரிட்டா யாரும் வேண்டாம் பொண்ணு தானே பார்க்க போறோம் கூட்டத்தை அவாய்ட் பண்ணுங்கனு சொன்னாராம்.” என்றார் நாராயணன்.

     “அப்பா… அதெல்லாம் பிரச்சனையேயில்லை.” என்றாள் பூர்ணா.

     “அவர் ஒரே பையன் அதனால வெளிப்படையா பேசினாங்க. உன்னை பிடிச்சதும் வரதட்சனை பத்தி கூட பெரிசா பேசலை.” என்று கூறவும் பூர்ணா தலையாட்டினாள்.

    அல்வா போதுமென்று வைத்து விட்டு சீவலை நொறுக்கினாள்.

    நாராயணன் கோகிலா இருவரும் மகள் ஆர்வமாய் இல்லையோ என்ற எண்ணம் உதிக்க, காபியை ஆற்றியபடி, “உனக்கு பிடிச்சிருக்கு தானே பூர்ணா.” என்று கோகிலா கேட்டதும், “அந்த பையன் சரவணன் பார்க்க நல்லா தான் மா இருக்கார். நான் பற்கடிக்கறதை வைத்தே வரதட்சனை டாபிக்கை ஸ்கிப் பண்ணிட்டார்.
   உங்க தேர்வு நல்லா தான் இருக்கு. ஆனா என்னால தான் இயல்பா பொண்ணு பார்த்துட்டு போனதுக்கோ கல்யாண முடிவானதுக்கோ சந்தோஷப்பட முடியலை. எப்பவும் போல ரியாக்ஷன்ல இருக்கேன்.

   ஒரு வேளை ஆபிஸ்ல எனக்கு கீழே அதட்டி கண்டிப்பா இருந்தே பழகி, ஓவர் மெச்சூர்டாகி இந்த வெட்கம், நாணம் எதுவும் வரலையானு தெரியலைம்மா.” என்றதும் கோகிலா “இருக்கும் மா… நீ எப்பவும் முதிர்ச்சியா முடிவெடுக்கறவ. இந்த திருமண ஆசை, திணறல், வெட்கம் பூசிட்டு ஓரமா நிற்கறது எல்லாம் வராது. வரலைனா என்ன என் பொண்ணு சந்தோஷமா இருக்காளே அது போதும்” என்று உரைத்தார்.

    பூர்ணா அன்னையை கட்டிக்கொள்ள ஸ்ரீநிதியோ “அண்ணி அந்த அண்ணா நம்பரை சேவ் பண்ணிட்டிங்களா?” என்றதும் உதடு பிதுக்க, “முக்கியமானதை விட்டுட்டிங்களே. இருங்க நான் சேவ் பண்ணி தர்றேன்.” என்று போனை எடுத்தாள்.

   கோகிலா நாராயணன் அடுத்து காலெண்டரை எடுத்து திருமண நாள் எது நல்ல நாளென தேடுதலில் மூழ்கினார்கள்.

       அறைக்கு வந்த ஸ்ரீநிதியோ “மை ஸ்வீட் ஹார்ட்” என்று பூர்ணா போனில் சரவணன் எண்ணை சேவ் செய்ய, அதனை வாங்கி “அப்படியெல்லாம் சேவ் பண்ணாதே.” என்று சரவணன்(வுட்பி) என்று சேவ் செய்தாள்.

      “ஓகே ஓகே இரண்டு போட்டோ எடுத்துடலாம். இந்த சேலையில அழகா இருக்கிங்க. நகை கழட்டறதுக்கு முன்ன போட்டோ எடுத்துடறேன்” என்று மீண்டும் போனை பிடுங்கி போட்டோ எடுத்தாள்.

   ஜன்னலில் வெளிப்பக்கமாக பார்த்து ரசிக்க அழகாய் இரண்டு மூன்று எடுத்து விட்டு, “போதும் ஸ்ரீநிதி நான் டிரஸ் மாத்திடறேன்” என்று பூர்ணா சென்றாள்.

     பூர்ணா தலை மறைந்ததும் கான்டெக்ட் லிஸ்டை வேக வேகமாய் Dev என்றதை எடுத்தாள்.

   அவசரமாய் நம்பரை தன் போனில் பதிவேற்றம் செய்தாள்.

   ஒன்பது நம்பரை பதிவேற்றம் செய்யும் நேரம் கோகிலா வரவும் அரையும் குறையுமாக ஒன்பது இலக்கத்தோடு X என்று சேவ் செய்தாள்.

     “ஸ்ரீநிதி அம்மா அப்பாவுக்கு போன் போட்டு சொன்னியா. மாப்பிள்ளை வீட்ல வந்துட்டு போனதை” என்றதும், “இ…இல்லை அத்தை” என்று தடுமாறி பூர்ணா போனிலிருந்து கான்டெக்டிலிருந்து வெளிவந்து கூறி முடித்தாள்.

      “சரி சரி நானே சொல்லிடறேன். அதான் கரெட்டு. என் போன்ல பேட்டரி லோனு காட்டுது. பூர்ணா போன் கொடு” என்று பூர்ணா போனை வாங்கி சுபத்ரா அத்தை என்ற பெயரை போட்டு அழைத்தார்.

     X என்ற எண்ணில் ஒன்பது இலக்கை கண்டு அச்சோ.. ஒரு நம்பரை மிஸ் பண்ணிட்டேன். இப்ப திரும்ப வாங்கினேன் பூர்ணா அண்ணி தரமாட்டாங்க. அப்பறம் டவுட் வேற படுவாங்க” என்று கடைசி எண் தானே. பூஜ்ஜியத்திலிருந்து ஒன்பது வரை பத்து நம்பர் மட்டுமே. மாற்றி மாற்றி போட்டு கண்டறிந்திடலாம் என்று மனக்கோட்டை கட்டினாள்.

      இங்கு வீட்டுக்கு வந்த சத்யதேவோ, தலையை தாங்கி பிடித்து சொல்லயியலாத உணர்வோடு தவித்தான்.

     “என்னடா கோவிலுக்கு போனியா?” என்றதும் “அம்மா… இனி என்னை கோவிலுக்கு போக சொல்லாதிங்க. அங்க போனா மனசு ஒருநிலையில் இல்லை.” என்றான்.

    “என்னடா இது கோவிலுக்கு போனா மனசு ஒரு நிலைக்கு வரும்னு சொல்வாங்க. நீ என்ன இல்லைனு சொல்லற” என்றதும் ‘அதான் எனக்கும் தெரியலை மா. இரண்டு நொடிக்கு மேல அவளை பார்த்தாலே அக்னி பிழம்பா பார்வையை வீசி எட்ட நிறுத்த வச்சிடுவா. ஆனா நாள் முழுக்க சலிக்காம பார்க்கணும்னு தோணுது. ஷாக்கடிக்கும்னு தெரிந்தும் ஹை-வோல்ட்டேஜை டச் பண்ணினா என்னனு இருக்கு’ என்றவன் மனம் தறிக்கெட்டு ஓடியது.

      “அம்மா விக்னேஷ் கலைவாணியை விருந்துக்கு அழைச்சிட்டோம். இந்த பத்ரி நாயும் வருதாம். அதனால சக்தியையும் வரச்சொல்லிட்டேன்.” என்றான்.

     “எத்தனை பேர் வந்தா என்னடா சமைச்சி அசத்திடலாம்” என்று காயத்ரி கூறவும் சத்யதேவ் தந்தையை தேடினான்.

    “உங்கப்பாவுக்கு வீட்டுக்குள்ளயே இருக்க போரடிக்காம். அதனால மார்க்கெட் பக்கம் வாக் போயிருக்கார்.” என்றதும் அன்னையின் கையை வருடினான்.

      “அப்பாவுக்கு என் மேல என்னம்மா கோபம்… உன்னை விட அவர் தானம்மா எனக்கு பெஸ்ட் பிரெண்ட். இப்படி பேசாம இருந்தா நான் என்ன பண்ண.

    ஓகே தப்பு தான். நான் தான் அவங்களை யோசித்து உங்களை விட்டு இங்க வந்தேன். அதுவொரு எமோஷனல்ல முடிவெடுத்தேன்.” என்றதும் மீண்டும் அவனுக்கு அவன் தவறு புரிந்தது.

    “எமோஷனல்ல தான் இரண்டு தப்பும் பண்ணிட்டேன்ல அம்மா” என்று வருந்தினான்.

    “யார்டா சொன்னது? நீ முதல்ல செய்ததும் சரிதான். அதுக்கு பிறகு இங்க கோவிச்சிட்டு வந்ததும் சரி தான்.

    என்ன…. எங்களை பற்றி யோசிக்காம வந்துட்டியேனு தான் அப்பாவோட வேதனை. நீ சொன்ன மாதிரி அவரோட பிரெண்டா பழகறவன் தானே நீ. நீ ஒரு வார்த்தை அப்பா இங்க இருக்க மனசுக்கு பிடிக்கலை. நான் கொஞ்ச நாள் தனியா இருக்கேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாம்ல.” என்றதும் வேதனை அடைந்தான்.

      “சரி சரி உங்கப்பா கோபம் போக ஒரு வழி சொல்லவா. நீயும் எங்களோட திருப்பதிக்கு நடந்து வர்றியா. அங்கயிருந்து திரும்பறப்ப பேச வைக்கிறேன்” என்று தூண்டில் போட்டார்.

      சத்யதேவிற்கு தந்தை பேசினால் போதுமென்ற எண்ணம் உதிக்கவும், யோசிக்காமல் வருகின்றேன் என்று வாக்கு தந்தான்.

     “எப்ப போகலாம்.?” என்று கேட்டு அவன் முகத்தை காணவும், அவனோ ‘நாளைக்கு விருந்து முடிச்சிட்டு அடுத்த நாள் திங்கள் வந்துடும். பிறகு லீவு போட்டா லேடி ஹிட்லர் திட்டுவா. அடுத்த சனிக்கிழமை போகலாம்மா. கார்ல போயிட்டு அங்க கீழ் திருப்பதில வண்டியை விட்டுட்டு நடந்து போய் திரும்பறப்ப கார்ல வந்துடலாம்.’ என்று கணக்கிட்டான்.

     “அடுத்த சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள்ல போதுமா” என்று அன்னையின் கன்னம் பிடித்து கொஞ்சினான்.

   உடனே செருமும் சப்தம் கேட்க, “எங்கம்மா.” என்று முத்தம் வைத்தான். தந்தை எப்பொழுதும் ‘என் பொண்டாட்டி டா’ என்று மறுகன்னத்தில் முத்தம் வைத்து விளையாடியதை போல இன்றும் விளையாடுவாரென காத்திருக்க, அவரோ “உங்கம்மா என்பதால தான் என்னை மதிக்காம பையனை தேடி இங்க வந்துட்டா” என்று முகத்திலடித்தாற் போல பேசி அறைக்குள் அடைப்பட்டார்.

     சத்யதேவிற்கு கவலைத் தாக்கிட சோகமானான்.

     அவன் செய்தது தவறா சரியா இன்றுவரை அவனுக்கே தெரியவில்லை.

     அதற்கு பிராயசித்தமாக தான் விக்னேஷ் திருமணமாவது முன் நின்று நடத்தி வைப்போம் என்றது அவன் மனம். ஆனால் அதுவும் அவனுக்கு பின் விளைவாக பூர்ணாவிடம் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டதே என்ற கவலையும் ஆழ்த்தியது.
  
     இதே முன்பு என்றால் அவ என்ன எப்படி எடுத்துக்கிட்டா எனக்கென்ன’ என்ற இறுமாப்பு தோன்றும். தற்போது இந்த உலகமே தன்னை தவறாக எண்ணினால் கூட பரவாயில்லை. அவள் மட்டும் தன்னை நம்பினால் போதும் அவளிடம் எவ்வாறு நல்அபிப்ராயத்தை ஏற்படுத்த என்று புரியாது தவித்தான்.

    எது என்னவோ பூர்ணாவோடு கலைவாணி விக்னேஷ் இருவரையும் பேச வைக்க வேண்டும். விக்னேஷ் செய்த தவறை எங்ஙணம் உணர்த்துவது என்று சிந்தித்தான்.

-தொடரும்.
~பேரரளி