பூ பூக்கும் ஓசை-11

பூ பூக்கும் ஓசை-11

ஸ்ரீநிதி பூர்ணா கிளம்பும் நேரம் அவளையே பார்த்து பேச தயங்கினாள்.

ஆனால் தயக்கம் உடைத்தால் தானே அந்த தேவ் என்பவனை சந்தித்து கலைவாணி வீட்டை கண்டறிந்து, தனது காதலுக்கு உதவி கேட்க முடியும். அதனால பூர்ணாவிடம் காலேஜ் பேக்கை மாற்றி நின்றாள்.

“அண்ணி அண்ணி.. உங்க ஆபிஸ் போற வழில என்னை ட்ராப் பண்ணிடுங்களேன்.” என்று கூறினாள்.

“கார் எனக்கு மட்டும்னு ஆபிஸ் கொடுத்திருக்கு ஸ்ரீநிதி. தனிபட்டு உபயோகப்படுத்த மாட்டேன். கலைவாணி கூட இப்படி கேட்டிருக்கா. நான் அழைச்சுண்டு போனதில்லை. ப்ளிஸ் நீ ஆட்டோ பிடிச்சு போ” என்று கூறினாள்.

ஸ்ரீநிதிக்கு வருத்தமாய் போனது. ‘பூர்ணா அண்ணி ஒரு உதவியும் பண்ண மாட்டாங்க. அது தெரிந்தும் முன்ன முன்ன போய் ஹெல்ப் கேட்கறேன் என்னை உதைக்கணும்’ என்று முகம் தூக்கி வைத்து, ‘என்னயிருந்தாலும் வந்ததும் படிப்பை தவிர அவரை தேடி போனா அசிங்கமா இருக்கே. இதுலயும் படிப்பை கோட்டை விட்டேன் ரொம்ப கேவலமா போயிடும் அதனால படிப்பை கொஞ்சம் கவனிப்போம். என்னயிருந்தாலும் பூர்ணா அண்ணி மாதிரி பெஸ்ட் ஸ்டூடண்ட், டீம் லீடர் இதெல்லாம் வராது. ரூமை கூட ‘க்ளின் அண்ட் நீட்’ என்று வச்சிருக்காங்க என்று கவலையாய் புறப்பட்டாள்.

பூர்ணா கதவை திறந்து வைக்க சரியாய் சத்யதேவ் பைக் வந்து நின்றது, ‘ஓ மை காட் சாரி சொன்னா அதுக்கும் முறைப்பா கண்டுக்காத மாதிரியே போயிடு டா தேவ்’ என்று பைக்கை நிறுத்திவிட்டு சாவியை எடுத்து சுழற்றினான்.

காரிலிருந்து இறங்கி கையை கட்டி அவனை ஒர் நொடி குறுகுறுவென பார்க்க, சத்யதேவோ சம்ருதியை கண்டு “ஹே சம்ரு” என்று பேச்சை மாற்றி ஓடினான்.

வழக்கமாய் எவ்வித அசம்பாவிதம் இன்றி இனிதாய் பொழுது ஓடியது.

சூர்யா கூட சரவணன் புகைப்படம் கண்டதும் சற்று பின் வாங்கி விட்டான். கூடுதலாய் இனி பூர்ணா தன் வேலைக்கு வேட்டு வைக்கலாம் எதற்கு வம்பு என்றது போல கடந்தான்.

மாலை வரை எல்லாம் சரியாக தான் சென்றது. சத்யதேவ் அவளின் கார் அருகே வரும் வரை. அதுவும் அவள் தந்தை இருப்பிடம் வரை வந்து தன்னை கடந்து செல்லாமல் தயங்கி வண்டியை செலுத்தவும், பூர்ணா அவனின் அருகாமையில் எரிச்சலடைந்து, கார் கண்ணாடி கதவை திறந்து பொரிய துவங்க காத்திருந்தாள்.

ஆனால் சத்யதேவோ, “ம்மா… இங்க நம்ம வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கேன். கோவிலா.. எந்த கோவில்… ஓ… சாமியெல்லாம் நான் எங்கம்மா கும்பிட்டேன்.

அங்க இருக்கியா… ஏது… வெற்றி விநாயகர் ஆலயமா” என்று காதில் ப்ளூ டூத்தை பிடித்தபடி சுற்றி முற்றி பார்வை பதிக்கவும் அவனின் பேச்சை உள்வாங்கியவள் ‘இவனும் இந்த ஏரியாவா?’ என்று திட்டுவதை ஒத்தி வைத்தாள்.

“ஆ… அம்மா.. பார்த்துட்டேன்… வயலெட் கலர் சேரி பார்த்தாச்சு மா. நீ போம்மா நான் பைக் நிறுத்திட்டு வந்துடறேன்” என்று பைக்கை கோவிலருகே நிறுத்தினான்.

பைக்கை பார்க் செய்து திரும்பவும், ஏதோ இவனை பூர்ணா பின் தொடர்ந்தது போல ஒரு பார்வையை வீசினான்.

பூர்ணாவோ ஹாண்ட்பேக்கை மாட்டி போனை கையில் வைத்து மெதுவாய் நடந்தாள்.

பைக்கை நிறுத்தியவன் ஷூவை கோவில் வாசலில் கழட்டி விட்டு, கோவிலின் உள் செல்லும் போதே பிள்ளையாரின் வாசல் படிக்கு பிளையிங் கிஸ் தொட்டு கொடுத்து நுழைந்தான்.

யாரோ ஒரு வயலெட் கலர் சேலை பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் உயரத்திற்கு முகம் மறைந்தது. ஆனால் உருவம் மட்டும் கணமாக இருக்க சற்று அவன் நிறத்தை ஒத்து கைகள் பளிச்சிட்டது. நிஜமாகவே அவன் அம்மாவை சந்திக்க வந்ததை எண்ணி அவள் போக்கில் பயணித்தாள்.

தந்தை கடையருகே இரண்டு நிமிடம் பேசிவிட்டு அந்த அம்மாவின் முகம் காண இரண்டு மூன்று முறை முயன்றாள்.

பிரகாரம் முன் திரும்பி இருந்ததும், கோவிலை சுற்ற போவதும் தென்பட, ‘நீயேன் அவன் அம்மாவை காண ஆவல் கொள்கின்றாயென’ மனதை அடக்கினாள்.

தந்தையிடம் விடைப்பெற்று செல்லும் நேரம் சத்யதேவோ அந்த வயலெட் உடை பெண்மணியோ கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் அவனின் பைக் மட்டும் இருப்பதை கண்டாள். முதல் முறை அவனின் பைக் இலக்கை கவனித்தாள். 2345 என்று மனனம் ஆகும்படி எளிதாய் இருக்க, வீட்டிற்குள் நுழைந்தாள்.

“இப்ப எதுக்குடி கலைவாணிகிட்ட பேசணும்…. உன்னை இங்க என் அண்ணி படிக்க அனுப்பினா. என் மகளை என்னோட சேர்த்து வைக்க இல்லை. நாங்களே தலைமுழுகிட்டோம். அவளிடம் ஒட்டி உறவாட எனக்கு ஆசையில்லடிம்மா. நீ உன் படிப்பை கவனி.” என்று அதட்டு போட்டபடி கோகிலா குரல் வாசலில் கேட்டது.

ஸ்ரீநிதியோ தன் அத்தையிடம் பேசிய நெயிர்ச்சியான வார்த்தைகள் தோல்வியுற்று அயர்ந்து போனவளாய், பூர்ணாவை கண்டு பயந்தாள்.

துருவி துருவி கலைவாணியை கேட்கின்றோமென்று சந்தேகம் உதிக்குமோயென.

பூர்ணாவோ “அம்மா கலைவாணி செட் அவ. அவளுக்கு எப்பவும் கலைவாணி தான் கடைத்தெருவுல இருந்து, பங்ஷன் வீட்ல கைப்பிடிச்சி கதை பேசுவா. குலத்தெய்வ கோலிலுக்கு போனாலும் ஒரே சீட் என்று இடம் பிடிச்சி பேசி பழகினவங்க. அதனால தான் கலைவாணியை பற்றி அக்கறையா கேட்கறா. சின்ன பொண்ணு தானே மா. தன்மையா சொல்லுங்க இனி கலைவாணி பத்தி நம்ககு என்ன தெரியும்னு” என்று பொறுமையாய் கூறினாள்.

நல்ல வேளை நட்பேதுணை என்று இத்தனை நாள் பழகியது காப்பாற்றியது. ஸ்ரீநிதி மனதில் எண்ணங்களில் நிம்மதியுற்றாள்.

“பிரெண்ட் தான்டி இல்லைனு சொல்லலை. நாளைக்கு சுபத்ரா அண்ணியோ பத்மநாபன் அண்ணாவோ இங்க வந்து என் மகளை உங்க சின்ன பொண்ணோட பழகவிட்டுட்டிங்களேனு குறையா பேசிடக் கூடாது பாரு.

இவங்க வீட்டுக்கு அனுப்பி இப்படியாகிடுச்சுனு ஒரு வார்த்தை வந்துட்டா நல்லதுக்கு இல்லையாச்சே” என்று நிதர்சனத்தை உரைத்தார்.

ஸ்ரீநிதியோ “சாரி அத்தை.” என்று மெதுவாய் உரைத்தாள்.

இனி வீட்டில் யாரிடமும் உதவி கேட்க போவதில்லை என்ற முடிவோடு அவனை தேடி அங்கு செல்ல முடிவெடுத்தாள்.

நிச்சயம் அவனை பற்றி அங்கே ஏதேனும் குறிப்பிடுவார்கள் என்று நம்பினாள்.

சென்னை நகரம் தனக்கு புதிது என்றாலும் இடத்தை கூறினால் சரியாய் கொண்டு சென்று விட்டு விட்டு பணத்தை பெறும் ஆட்டோ கேப் தோதானதை கண்டுக் கொண்டாள்.

என்ன கல்லூரி சேர்ந்து உடனே விடுமுறை எடுப்பது கடினம் என்பதால், இரண்டு மூன்று நாட்கள் கடந்து, நல்ல நேரம் நாள் கிழமைக்கு காத்திருந்தாள்.

இரண்டு மூன்று நாட்கள் கடந்தது.

எங்களுக்கு பெரும்பாலும் சனிக்கிழமை தான் வசதி என்றது போல பூர்ணாவை பொண்ணு பார்க்க மாலை வருவதாக கூறியிருந்தனர் சரவணன் தாய் ஷியாமளா தந்தை மோகன்.

பூர்ணா சனிக்கிழமை அவசரமாய் பணியினை சரிபார்த்து சரிச்சொல்லி கிளம்ப, சூர்யா நின்றான்.

“இன்னிக்கு அவசரமா கிளம்பற மாதிரி இருக்கு மிஸ்.பூர்ணா” என்று பதவியின் மிடுக்கோடு கேட்டு நின்றான் சூர்யா.

“வுட்பி வீட்டுக்கு வர்றதா பேரண்ட்ஸ் சொன்னாங்க சார். அவர் வர்ற டைம்கு நான் இல்லாம இருந்தா நல்லாயிருக்காது இல்லையா சார்.” என்று அவனிடம் மரியாதை தந்தே பேசினாள்.

“கரெக்ட் தான் டேக்கேர் பூர்ணா” என்று அனுப்பவும் பூர்ணாவோ ‘இவனிடம் பதில் சொல்லியே என் வாழ்க்கை ஆபிஸ்ல ஓடிடும்” என்று கேபை அழைத்து விரைவாக செல்ல கூறினாள்.

ஓட்டுனர் மணி சரியான நேரத்திற்கு அழைத்து வந்து விடுத்து, திரும்பினார்.

உள்ளே நுழைகையிலேயே நெய் வாசம், மூக்கை துளைத்தது.

“என்ன அல்வா மா… கலர் தூக்குது.” என்று பூர்ணா வாசம் பிடித்து வந்தாள்.

“தர்பூசணி அல்வா டி. உங்கப்பா நேத்து வாங்கிட்டு வந்தார். நல்லா பெரிய சைஸ் தர்பீஸ். அதனால வெல்கம் ட்ரிங்கா தர்பீஸ் ஜூஸ் போட்டுட்டு, மீதியை அல்வா கிண்டிட்டேன். பஜ்ஜி ரெடி, இந்த சீவலை மட்டும் போட்டுட்டேன் வேலை முடிஞ்சுது.

நீ போய் ஒரு குளியல் முடிச்சி டிரஸ் மாத்திட்டு வந்துடறியா.” என்று கோரிக்கையாய் கேட்டார் கோகிலா.

நாராயணனோ “எதுக்கோ மிக்சர் மட்டும் வெளியே வாங்கிடவா கோகிலா” என்று வந்து நின்றார்.

“அப்பா…. மாப்பிள்ளை ஒரு டீ காபி மிக்சர் ஸ்வீட் மட்டும் போதும் பா. அதை மீறி எப்படி சாப்பிடுவாங்க. மிஞ்சி மிஞ்சி ஒரு மணி நேரம் இருப்பாங்களா?” என்று அலுத்து கொண்டாள்.

“இருந்தாலும் ஒரு குறை சொல்லிட்க்கூடாது மா. என்னங்க நீங்க போய் வாங்கிட்டு வந்துடுங்க” என்று கூறினார் கோகிலா.

ஸ்ரீநிதி சுடிதாரில் அங்கும் இங்கும் ஒய்யாரமாய் நடந்தவள், “பிளேட் தட்டு ஓகே. டிசு பேப்பர் கூட சாட்பிட்டு கொடுக்க ரெடியா எடுத்து வச்சிட்டேன்.” என்று நின்றாள்.

“தேங்க் யூ டிம்மா” என்று கோகிலா சென்றதும் பூர்ணா கண்ணுக்கு மையிட்டு அழகாய் இருந்தாள்.

    பூர்ணா அழகு சிற்பமாய் விழிக்கு காட்சியளிக்க கோகிலா மகளுக்கு நெற்றி வழித்து திருஷ்டி கழித்து சொடக்கிட்டார்.

     பூர்ணா அலுவலகத்தில் வாரம் ஒருமுறை சேலை கட்டி பழக்கம் ஆனால் இன்று நகையணிந்து கோவில் சிற்பமாய் நின்றவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

      “மாப்பிள்ளை வரலேட்டாகுமோ என்னவோ கிளம்பிட்டாங்க. டிராபிக்ல மாட்டிக்கிட்டாங்களாம்.” என்று பேசவும் மின்சாரம் தடைப்பட்டது.

    “என்னங்க இது.” என்று கோகிலா பதற, “ம்மா.. நம்ம ஏரியாவுல உடனே கரண்ட் வந்துடும். ஏன் டென்ஷன் ஆகறிங்க.” என்று பூர்ணா ஆறுதலாய் மொழிந்தாள்.

    “இல்லைடி… உனக்கு சேலை, நகை புழுக்கமா இருக்குமேனு பார்த்தேன்.” என்று அபசகுணமாக தோன்றுவதை மறைத்து பேசினார்.

    “நான் பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன் மா. அதுக்குள்ள கரண்ட் வந்துடும்.” என்று சென்றாள்.

   ஸ்ரீநிதியோ “அண்ணி நான் வரட்டுமா?” என்று கேட்க, “பரவாயில்லை நானும் கோவில்ல ரொம்ப நேரம் இருக்க மாட்டேன். ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன்” என்று நாராயணனிடம் விடைப் பெற்று சென்றாள்.

      கோவிலுக்கு படியேறி நுழையும் போதே, ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள் அவள் வந்த்விட்டாள்.’ என்று பாடல் போன் ரிங் டோன் மூலமாக கேட்க, அனைவரது கவனம் ஒருவன் மீது பதிய அவனோ, “சைலண்ட் போட்டுட்டு வந்திருக்கணுமோ.” புலம்பியபடி “பத்ரி கோவில்ல இருக்கேன் டா. அப்பறம் பேசறேன்” என்று கத்தரித்து சைலண்ட்டில் போட்டு விட்டு திரும்ப பூர்ணாவை கண்டு ஸ்தம்பித்தான்.

சத்யதேவின் ரிங்டோன் புண்ணியத்தில் அவன் இங்கு ஏற்கனவே இருப்பதை சற்று முன் அறிந்து விட்டு அந்த பக்கமே பாராது நடந்து சென்றாள்.

கடவுள் சந்நிதியில் மலரை கொடுத்து விட்டு வழிபட, சத்யதேவனும் அவளுக்கு நேர் எதிராய் வந்து வழிப்பட்டான். 

கண்கள் மூடி உதடுகள் சிறு சிறு அசைவில் பூர்ணாவின் வேண்டுதலை கண்டு இவனின் உதடுகள் முறுவல் கொண்டது.

"என்னம்மா புடவை நகைநட்டுனு சாட்சாத் அம்மாள் மாதிரி வந்திருக்க என்று தெரிந்தவராய் அந்த ஸ்தலத்தின் பூஜை செய்பவர் கேட்டதும், "ஐந்து மணிக்கு என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க அண்ணா." என்று பதில் தரவும் சத்யதேவ் புன்னகை காணாமல் போனது. 

  தீபாரதனை தொட்டு கும்பிட்டு விபூதி குங்குமம் வைத்து நிமிர்ந்தவள் சத்யதேவ் என்பவனை காணாதது போல நகர்ந்தாள். 

மடமடவென கோவிலை சுற்றி முடித்தவன், அங்கேயே சில நோடி அமர்ந்தான். 

மெதுவாய் சுற்றிய பூர்ணாவின் போன் அதிர்வை தந்து தந்தையின் அழைப்பை எடுத்துரைத்தது.

 "கரண்ட் வந்துடுச்சா உடனே வந்துடறேன் பா" என்று அணைத்து விட்டு அமர்ந்து குங்குமத்தை பக்கவாட்டில் தட்டி விட்டு எழுந்தாள். 

 சத்யதேவோ கோவிலிலிருந்து வெளியேறி, ப்ளூ டூத்தில் பத்ரிக்கு போன் செய்து, "பத்ரி எருமை வர்றேன்னு சொல்லறேன்ல டா. அதுக்குள்ள என்ன போன் பண்ணிட்டே இருக்க" என்று சிடுசிடுத்து வண்டியை உதைத்தான். 

 நிச்சயம் பூர்ணா காதில் அவன் பேசுவது விழுந்திருக்கும். 

கண்ணாடியில் பார்த்து “எங்கம்மா நாளைக்கு விக்னேஷுக்கு விருந்து கொடுத்தா உனக்கென்ன நீ எதுக்கு வர்ற” என்று திட்டவும் பூர்ணாவும் சட்டென அவனை பார்த்தாள்.

 இந்த ஏரியாவுக்குள்ள தான் இவன் வீடு அப்படின்னா கலைவாணி இங்க தானே வருவா' என்று தான் ஆடாவிட்டாலும் சதை ஆடியது. 

 கண்ணாடியினை துடைக்க ஆரம்பிக்க அதில் இவள் முகம் தெரியவும் விறுட்டென்று வீட்டை நோக்கி நடைப்போட்டாள். 

சத்யதேவோ, போனில் பத்ரி ‘டேய் நானும் வர்றேன் டா அம்மாவிடம் சொல்லிடு.’ கெஞ்சுவதை கண்டுக் கொள்ளாமல் தன்னை திரும்பியும் பாராது செல்லும் பூர்ணாவை தான் விழியகலாது ரசித்தான்.

-தொடரும்.
~பேரரளி