பூ பூக்கும் ஓசை-10

பூ பூக்கும் ஓசை-10

    மாலை சத்யதேவ் பைக்கை எடுத்து முன்னே செல்ல, அதன் பின் வந்த பூர்ணா கார் அவனை ஒட்டியே வந்தது.

      சிக்னலில் இரண்டு முறை அவனை ஒட்டி நிற்க, ஹெல்மெட்டை கழட்டி பைக் மீது வைத்து விட்டு காருக்குள் இருக்கும் பூர்ணாவை பார்த்தான்.

   கால் மேல் கால் போட்டு போனை கையில் வைத்து அதனிடம் தொடுவிரலில் பதமாய் தேய்த்து ஹெட்செட்டில் பாடலை கேட்டு, இதுவரை வேடிக்கை பார்த்து வந்த பூர்ணா ஹல்மெட் கழட்டியதும் ‘இவனா?’ என்று பார்வையை மாற்றினாள்.

       சத்யதேவோ ‘இவ என்ன இந்த பக்கம்?’ என்று இடமிருந்தும் மெதுவாய் வண்டியை ஓட்டினான்.

     அவன் தங்கியிருக்கும் ஏரியா வந்ததும் கார் இன்னமும் வந்து கொண்டிருப்பதை கண்டான்.

   வீட்டுக்கு சென்றதும் தனியாக தானே இருக்க போகின்றோமென காரை தூரத்திலிருந்து தொடர்ந்தான்.

     ஒரு பிள்ளையார் கோவில் வந்ததும் இறங்கியவள் மணி அண்ணாவை பார்த்து புன்னகைத்து விடை கொடுத்தாள்.

     மீண்டும் நடந்தவளை கண்டு, பின் தொடர யோசித்தான். ஹெல்மெட் முன்னே இருக்க அதனை மாட்டிக் கொண்டான்.

     மெதுவாய் நீண்ட இடைவெளியிட்டு தொடர, ஒரு கடைக்குள் செல்வதை கண்டான்.

   விக்னேஷ் ஒருமுறை ‘கலைவாணி அப்பா ஸ்டேஷனரி கடை வச்சிருக்கார் டா. அவங்க சொந்த வீடு, சொந்த கடை, அவங்க அக்கா ஐடி ஜாப்.’ என்று முன்பு கூறியது தற்போது மூளையில் உதிக்க ‘அப்பாவா?’ என்று பார்த்து நின்றான்.

    சற்று நேரத்திலேயே ஒரு முதிய பெண்மணி வந்து பூர்ணா கையில் புளியோதரை கொடுத்து கூடவே துளசி இலையை கொடுக்க, இலையை வாயில் போட்டு மென்றுக்கொண்டு இருந்தாள்.
 
   சத்யதேவோ நெற்றி சுருங்கி என்னவோ தான் அந்த இலையை சுவைத்தது போல முகம் கோண நின்றான்.

      புளியோதரை எடுத்து சாப்பிட்டு அன்னையிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, ஒரு கல்லூரி பெண் நடுவே நடுவே வந்து சென்றாள்.

     பின்னால் திரும்பி இருக்க அவளின் முகம் காண முடியவில்லை. கலைவாணியா இருக்குமா… சே சே செய்த தப்புக்கு உடனே சேர்த்துப்பிங்கனு சொல்ல முடியாது. ஒருவேளை குழந்தை வந்தா சேர்த்துக்கலாம். அப்ப இது யாரா இருக்கும்?

அந்த பொண்ணு. யாராயிருந்தா நமக்கென்ன, என்று நினைக்க, பூர்ணா அவள் தந்தை மற்றும் அந்த பெண் வெளிவர துவங்கினார்கள்.
  
     பூர்ணாவை கண்டு திரும்பிக் கொள்ள ஸ்ரீநிதி முகம் இம்முறையும் காண இயலாது போனது.

    அவன் திரும்பி பார்க்கும் நேரம் மூன்று பேர் வலது பக்கமிருந்த தெருவில் பேசியபடி நடந்தனர்.

     சத்யதேவ் வீட்டுக்கு போகலாமென வண்டியை திருப்ப முயல, மனமோ வீடும்கிட்ட தான் இருக்கும்னு விக்கி சொன்னான். இவ்ளோ தூரம் வந்தாச்சு. தொடர்ந்து போய் பார்த்துட்டா என்ன? என்ற மனநிலை தான் ஆட்டி படைத்தது.

     சின்ன டைம் பாஸ் போய் தான் பார்க்கலாம் என்று தொடர்ந்தான்.

      வலது பக்கம் வர அதற்குள் பத்து வீடு தாண்டி சென்றிருப்பார்கள்.

      அவன் அருகே வர கல்லூரி பெண் உள்ளே சென்றிருந்தாள். பூர்ணா அம்மாவும் வடகம் எடுக்க மாடிக்கு சென்றிருந்தார்.

     வீட்டின் முன் விளக்கு போட்டுவிட்டு திரும்ப, சத்யதேவ் சட்டென நேர் பாதையில் சென்று கொண்டிருந்தான்.

   ‘எப்பவும் சல்லுனு பாஸ்டா போறதால இவ இங்க தான் இருக்கா என்றதே தெரியலை.’ என்று தனக்குள் பேசியபடி, வீட்டுக்கு வந்த நேரம் அங்கே வாசலில் இரண்டு டிராவல் பேக்கை வைத்து கொண்டு அம்மா காயத்ரியும் தந்தை உதயேந்திரனும் இருக்க பதறியபடித்து பைக்கை நிறுத்தி வந்தான்.

     “அம்மா.. சாரிம்மா… நீங்க வர்றிங்கனு சொன்னிங்க. நான் தான் மறந்துட்டேன். வெயிட் பண்ண வச்சிட்டேன். எவ்ளோ நேரமா வெளியே நிற்கறிங்க” என்று சாவியை எடுத்து வீட்டை திறந்தான்.

     “அதெல்லாம் கொஞ்ச நேரம் தான் டா. என்ன வேலை அதிகமா?” என்று மகனின் நிலையை கண்டு வருந்தினார்.

     “கொஞ்ச நேரம் தான்… முப்பத்தெட்டு நிமிஷமா வெளியே தெருவுல நிற்கறோம்னு உன் பிள்ளையிடம் சொல்லு” என்று உதயேந்திரன் எரிச்சலாய் கூறி ஹாலில் பையை வைத்து கண்களை சுழற்றி ஒரு விசாலமான பார்வையை வீசினார்.

      “அங்க எவ்ளோ பெரிய வீடு… அதை விட்டுட்டு இங்க வந்து… சேசே அதெல்லாம் எனக்கெதுக்கு ஏதாவது கேட்க போய் தான் சார் அங்க கோவப்பட்டு இங்க வந்துட்டாரு” என்று நொடிந்து கொண்டு சோபாவில் அமர்ந்தார்.

      “வந்ததும் என்ன பேச்சுங்க” என்று காயத்ரி கண்டிக்க, சத்யதேவோ “பேசட்டும்மா… அப்பா தானே. இப்ப எல்லாம் முன்ன மாதிரி எதுக்கெடுத்தாலும் கோபம் வர்றதில்லை மா.” என்றவன் அன்னை கால் மட்டத்திலிருந்து எழுந்து பாட்டில் ஜூஸை எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.

       அவன் பேச்சு சற்றே உதயேந்திரனை அசைத்து விட, அவன் நீட்டிய கூல்ட்ரிங்ஸை எடுத்து பருகினார்.

    “எனக்கு கொஞ்சம் குளிர்ச்சி போகட்டும். இங்க வந்து உட்காரு” என்று அருகே அழைக்க, சத்யதேவோ அம்மாவின் கால் பக்கம் அமர்ந்து மடியில் தலையை சாய்த்து கொண்டான்.

       “வேலை பிடிச்சிருக்கா பா” என்று கேட்டதும் “பிடிச்சிருக்குமா” என்றவன் தந்தையை நோக்கிவிட்டு, “அப்பாவுக்கு கோபம் போகலையா மா.” என்றவன் குரல் உடைந்து போனது.

     “உன்னிடம் பேசாம எங்க போக போறார். அவருக்கு நீ நம்ம ஆபிஸை டேக் ஓவர் பண்ணுவனு பார்த்தார். நீ அம்போனு விட்டுட்டு மாதசம்பளத்துக்கு வந்தது வருத்தமா இருக்கு.

   நம்ம வீட்டை விட்டுட்டு இங்க வந்து தங்கினா கோபம் வராதா.

   சரி அதை விடு. அப்பாவும் நானும் நடந்தே திருப்தி வர்றதா வேண்டியிருக்கோம். உன் மனசு மாற” என்றதும் சத்யதேவ் தன் உள்ளங்கையை பார்த்து முடித்தான்.

      “இப்ப உடம்பு சரியில்லாத நேரத்துல அவ்ளோ தூரம் எதுக்குமா?” என்றான் கரிசணையாக.

    “நான் என்ன இங்கிருந்தே போக போறேன்னா சொன்னேன். கீழ் திருப்பதில இருந்து மேல் திருப்பதி போக போறேன் அவ்ளோ தான்.

    அதுவும் இல்லாம போகணும்னு முடிவெடுத்து போன் போட்டு பேசினா… நீ ஏதோ லிஸ்ட் எல்லாம் சொன்ன. போக முடிவெடுத்ததுக்கே இந்த மாற்றம்னா கண்டிப்பா போய் வந்துடலாம்னு தீர்மானமே பண்ணிட்டேன்.

      அதென்னடா லிஸ்ட்… லட்சணமா, திமிரா, சொல் பேச்சு கேட்காதவளா..?” என்று கன்னத்தில் கை வைத்து கேட்க, “போம்மா.. சும்மா சொன்னேன். நீ வேற.. நான் உதயிடம் பேச ட்ரை பண்ணிட்டு வர்றேன்” என்று ஓடினான்.

      தந்தை உதயேந்திரன் மகனிடம் எத்தனை நட்பாய் பழகியது. இன்றோ கண்டிப்பான தந்தையாய் அல்லவா மாறி நிற்கின்றார்.

      “அப்பா” என்று தந்தையருகே வர அவரோ மற்றொரு அறையில் நுழைந்து, “காயத்ரி சாப்பிட கூப்பிடுமா வந்துடறேன்.” என்று தாழிட்டார்.

    சத்யதேவோ தந்தை இங்கு வந்ததே அதிசயம் என்று அவனாகவே மிளகு ரசம் வைத்து, லிட்டில் பொட்டேட்டோ ப்ரை செய்தான்.

~~~

    ஸ்ரீநிதியோ விடாது கல்லூரி அனுபவத்தினை கூற, பூர்ணா கண்கள் தானாக கலங்கி கண்ணீர் வழிந்தது.

    இப்படி தான் கலைவாணியும் அடிக்கடி கல்லூரி கதையை கதைப்பாள்.

   இந்த விக்னேஷ் கல்லூரி அல்ல, பிறகு எப்படி? என்று சிந்தித்தாள்.

    விக்னேஷ் சத்யதேவ் நண்பர்கள் என்றால் இருவருக்கும் ஒரே வயசு இருக்கலாம். அப்படியென்றால் எங்கே சந்தித்து இந்த காதல் முளைத்தது.

    “அண்ணி அண்ணி.. அத்தை சாப்பிட கூப்பிட்டாங்க.” என்று உலுக்க ஹாலுக்கு ஸ்ரீநிதியோடு சென்றாள்.

      தந்தை அவளுக்காக காத்திருந்தார் போல. மகள் வந்ததும் உணவு மேசையை இழுத்து அமர கூறி பணித்தார்.

    “வர்ற சனிக்கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம் டா. பையனும் ஐடி பீல்டு அதனால சனி கிழமை என்றாலும் பரவாயில்லைனு முடிவுப் பண்ணியிருக்காங்க.” என்றதும், பூர்ணா யோசனைவயப்பட்டவளாய் இருந்தாள்.

     “என்னம்மா..?” என்று கோகிலா முன் வர, “கலைவாணி பத்தி கேட்பாங்களா அப்பா. இல்லை ஏற்கனவே சொல்லிட்டிங்களா.

    ஏன் கேட்கறேன்னா இங்க வந்து பார்த்துட்டு பிறகு தங்கை மேரேஜ் பத்தி தெரிந்து நழுவறதுக்கு பதிலா, முதல்ல சொல்லிட்டா நல்லதுக்கு இல்லையா. நானும் ஷோகேஸ் பொம்மையா நிற்கறது தவிர்க்கலாம்.

    நான் நழுவினா தான் சொல்லறேன். அதை பத்தி தெரிந்தும் சம்மந்தம் பேசினா அடுத்தடுத்து மேரேஜ் நாள் குறிக்கலாம் இல்லையா.” என்றதும் நாராயணன் மகளை வாஞ்சையாக தடவி, “உன்னை எந்த இடத்திலயும் அப்பா ஷோகேஸ் பொம்மையா நிறுத்த மாட்டேன் டா. அவங்களிடம் சொல்லிட்டேன். என் சின்ன மக லவ் மேரேஜ் பண்ணி ரீசண்டா வீட்டை விட்டு போயிட்டானு சொல்லிட்டேன் டா” என்றதும் பூர்ணா தந்தையிடம் “சனி கிழமை சீக்கிரம் வந்துடறேன் பா” என்று கூறினாள்.

    ஸ்ரீநிதியோ வேடிக்கை பார்த்து முடித்து அவளும் உறங்க வந்தாள்.

   ஒரே மெத்தையில் இருவரும் உறங்க, “அண்ணி அண்ணி.. இன்னிக்கு என்னாச்சு?” என்று கேட்டாள்.

     “என்னது என்னாச்சு.” என்று மொட்டு போன்ற வாயால் கொட்டாவி விடுத்து கேட்டாள் பூர்ணா.

     “உங்க சீனியர்… கீசெயின்… அந்த பொறுக்கி ரியாக்ஷன்?” என்று அடுக்கினாள்.

     “ஏய்… சீனியரிடம் கீசெயினை குப்பையில போட்டு, எனக்கு உட்பி இருக்கார்னு சொல்லிட்டேன்.

   அந்த தேவ் பொறுக்கி எல்லாம் இல்லை. பரவாயில்லை… அவன் பாட்டிற்கு ஓரமா இருக்கான். இன்னிக்கெல்லாம் என்னை தொந்தரவு பண்ணலை.” என்று கூறினாள்.

    “சே… சப்பையா போச்சே. சூர்யா டார்ச்சர் பண்ணுவான்னு நினைச்சேன்.” என்றதும் பூர்ணா திரும்பி “ஏற்கனவே அடிவாங்கியிருக்கான். இங்க அடிவாங்கினான் ஜென்மத்துக்கு மறக்க முடியாது. அவனுக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும். அதனால அடக்கி தான் வாசிப்பான்.” என்று கூறிடவும், “ஓ ஓஹோ” என்று கூறி இருவரும் சிரித்தனர்.

     “அண்ணி கலைவாணி அண்ணியிடம் பேசுவிங்களா” என்று கேட்டாள்.

     “அம்மா அப்பாவை அழவச்சவளோட எனக்கென்ன பேச்சு. அதுவுமில்லாம பழைய நம்பரை அவளோட ஹஸ்பெண்ட் உடைச்சிட்டானாம். இது அந்த தேவ் ஒருமுறை சொன்னான்.

   எனக்கு பேச இன்ட்ரஸ்ட் இல்லை. அதனால தேவைப்படலை.” என்று கூறவும், “அப்ப பேசணும்னா அந்த தேவ்விடம் கேட்கணுமா?” என்று விடை அறிய ஆவலாய் கேட்டாள்.

      போர்வையை போர்த்தி “அவனிடம் நானா என்னைக்கும் பேச கூடாதுனு முடிவோட இருக்கேன். நான் போய் நம்பர் கேட்பேனா. என்ன தான் தேவ் பொறுக்கி இல்லைனாலும் எனக்கு என்னவோ அவனிடம் விலகியே இருனு தான் மனசாட்சி கட்டளை இயற்றி இருக்கு.

அதனால உங்க கலைவாணி அண்ணிக்கு பேசணும்னா அவளே அம்மாவோட நம்பர் அப்பா நம்பருக்கு போடட்டும். அப்பா கடை நம்பர் அவளுக்கு மனப்பாடம் தானே.” என்று திரும்பி படுத்தாள்.

      ஸ்ரீநிதியோ ‘சே நாமளா கான்ட்டெக் பண்ண முடியாதா? அந்த தேவ் யாரு..? அவரிடம் நம்பர் இருக்கா?’ என்று சிந்தித்தாள்.

   ‘அந்த சிடுமூஞ்சி சிங்காரம் வேற எங்க இருக்கோ, என்னவோ நான் இங்க எப்படி தேடறது இந்த கலைவாணி அண்ணி ஹெல்ப் இருந்தா பரவாயில்லை. அட்லிஸ்ட் காதலுக்கு மரியாதையாவது தருவாங்க. இந்த பூர்ணா அண்ணி ரொம்ப ஸ்ட்ரிட் ஆபிஸரா இருக்கே’ என்று எப்பொழுதும் போல புலம்பி தவித்தாள்.

-தொடரும்.
~பேரரளி