பூவோ? புயலோ? காதல்! – 20

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 20

காலை எட்டு மணி!

வாடகை காரில் வந்து தன் தாத்தாவின் வீட்டின் முன் இறங்கினாள் வேதவர்ணா.

அன்னையிடம் கூட அவள் வரப் போகும் விஷயத்தைச் சொல்லவில்லை.

இதற்கு முன் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவள் ஊரில் இருந்து வந்து இறங்கினால் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் வாசலுக்கே வந்து வரவேற்று அவளை உள்ளே அழைத்துச் செல்வார்கள்.

ஆனால் இப்போது வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற தயக்கத்துடன் வாசலிலேயே நின்றாள் வேதவர்ணா.

எவ்வளவு நேரம் தான் வாசலிலேயே நிற்க முடியும்?

கர்ப்பம் தாங்கிய உடலும், பயண அலுப்பும் அவளை அசத்த, தயக்கத்தைத் தகர்த்து விட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.

‘யார் வந்து கதவை திறப்பார்கள்?’ என்ற ஆர்வத்துடனும், ‘என்ன சொல்வார்களோ?’ என்ற பதட்டத்துடனும் காத்திருந்தாள்.

“ஏய் வேதா… என்னடி?” கதவை திறந்த அவளின் அன்னை சித்ரா, மகளின் வரவை எதிர்பாராமல் அதிர்ந்து கத்தினார்.

“அம்மா… எப்படி இருக்கீங்க?” அவரின் கத்தலை காற்றில் விட்டவள், ஆவலுடன் நலம் விசாரித்தாள்.

“நான் எப்படி இருக்கேங்கிறது இருக்கட்டும்டி. நீ எப்படி இங்கே வந்தாய்? மாப்பிள்ளையும் வந்திருக்கிறாரா?” என்று கேட்டுக் கொண்டே மகளின் பின்னே பார்வையைச் செலுத்தி தேடினார்.

“ரித்வி வரலைமா, நான் மட்டும் தான் வந்தேன்…”

“என்னடி சொல்ற? தனியா அவ்வளவு தூரத்தில் இருந்து அதுவும் இந்த நிலையிலா வந்த?” என்று கேட்டார்.

“ம்ம்…” என்று அவள் தலையை அசைக்க,

“அறிவு இருக்காடி உனக்கு?” என்று கோபத்துடன் திட்டினார்.

“அறிவு இருந்திருந்தால் உன் மகள் இங்கே வந்திருக்கவே மாட்டாளே சித்ரா…” என்று கோபமாகச் சொல்லிக் கொண்டே அங்கே வந்தார் சித்ராவின் மாமியாரும், வேதாவின் பாட்டியுமான லட்சுமி.

அவர் சொன்னதைக் கேட்டு வேதவர்ணாவின் முகம் சுருங்கி போக, சித்ரா பதட்டத்துடன் கைகளைப் பிசைந்தார்.

“உன் மகள் இங்கே எங்கே வந்தாள் சித்ரா? அவளை இங்கே வரக் கூடாதுனு சொன்னது அவளுக்கு மறந்து விட்டதா?” என்று மருமகளை உறுத்து விழித்த படி கேட்டார்.

“அது அத்தை…” என்று தடுமாறிய சித்ரா,

‘ஏன்டி வந்த?’ என்பது போல் மகளைப் பார்த்தார்.

அன்னை கண்களால் கேட்ட கேள்வியே வேதாவை கலங்க வைத்தது.

ஆனாலும் இப்படி நடக்கும் என்று தெரிந்து தானே வந்தாள்? ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள். போகப் போகத்தான் அவர்களின் மனம் மாறும் என்று நினைத்துக் கொண்டவள் தன் கலங்கிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

“ஏன் பாட்டி என் அம்மா, அப்பாவை பார்க்க வர எனக்கு உரிமை இல்லையா என்ன? என் அப்பா, அம்மாவை பார்க்க நான் இங்கே வந்து தானே ஆகணும்?” என்று லேசாகப் புன்னகைத்துக் கொண்டே கேட்டாள்.

“இதோ பார் சித்ரா, இப்படி எல்லாம் பேச வேண்டாம்னு உன் மகளிடம் சொல்லி வை! நாங்க சொன்னதையும் மீறி இங்கே வந்ததும் இல்லாம அப்படித்தான் வருவேன்னு சொல்ற மாதிரி பேசுறது சரியில்லை. அப்புறம் என்ன நடக்கும்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டியது இல்லை…” என்றார் கடுமையாக.

“ஏன்டி வேதா இங்கே வந்து தேவையில்லாததைப் பேசிட்டு இருக்க?” என்று சித்ரா மகளைக் கடிந்து கொண்டார்.

“எதுமா தேவையில்லாதது? நான் உங்களைப் பார்க்க வந்தது தேவையில்லாததா? நம்ம உறவு இப்படியே விட்டு போய்ட கூடாதுன்னு தான் நான் கிளம்பி வந்தேன்மா. நானும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே உங்களைப் பிரிந்து இருக்க முடியும்?” என்று கேட்ட மகளை முறைத்துப் பார்த்தார் சித்ரா.

“இப்படியே இருக்கணும்னு முடிவு எடுக்க வச்சது நீ தான் வேதா. அப்படி இருக்கும் போது இப்போ இப்படித் திடுதிப்புன்னு வந்து நின்னு உறவு வேணும்னு கேட்டால் கிடைச்சுடுமா?”

“அம்மா, பாட்டி தான் கோபமா அப்படிப் பேசுறாங்கனா நீங்களும் இப்படிப் பேசுறீங்களே? நீங்க இப்படிப் பேசுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலைமா…” என்றாள் வருத்தமாக.

“இப்போ வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை வேதா. என்னை இப்படிப் பேச வைக்கிறதே நீ தான். இங்கே உள்ள சூழ்நிலை தெரிந்தும் இப்படி மாசமா இருக்குறப்ப மாப்பிள்ளை கூட இல்லாம தனியா இவ்வளவு தூரம் வந்தது முதல் தப்பு. உன் தாத்தா, பாட்டி என்ன சொல்லுவாங்கனு தெரிந்தும் உறவை புதுப்பிக்க வந்தேன்னு உன் பாட்டிக்கிட்டயே பேசியது அடுத்தத் தப்பு. உன் பக்கம் தப்பு இருக்கும் போது பின்ன நான் எப்படிப் பேச முடியும் வேதா?” என்று கேட்டார் சித்ரா.

தாத்தாவும், பாட்டியும் தன்னைப் பேசுவார்கள் அவர்களை எப்படியாவது பேசி சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்த வேதாவிற்கு இப்போது பெரிய ஏமாற்றம் தான் ஏற்பட்டது.

பாட்டி தன் பக்கமே திரும்பாமல் தன் அன்னையையே தனக்கு எதிராகப் பேச வைத்துக் கொண்டு இருப்பதில் அடுத்து என்ன பேசி அவர்களைச் சமாதானம் செய்வது என்று புரியாமல் குழம்பி போனாள்.

“எதுக்கு இப்போ அம்மாவும், மகளும் வளவளன்னு பேசிட்டு இருக்கீங்க சித்ரா? நாங்க சொன்ன முடிவு எப்பவும் மாறாது. உன் பொண்ணுக்கு உங்க நிம்மதிக்காகக் காதல் திருமணம் செய்து வைத்ததில் ஏற்கனவே நம்ம சொந்த பந்தத்தில் எங்களுக்கு இருந்த மதிப்பு போயிருச்சு.

இவள் இங்க வந்து போகாமல் இருக்கவும் தான் ஏதோ பரவாயில்லைன்னு நம்ம சொந்த பந்தம் எல்லாம் இறங்கி வந்து நல்லா பழக ஆரம்பிச்சுருக்காங்க. அது அப்படியே நிலைக்கணும்னா நாங்க முன்னாடியே சொன்னது போல உன் பொண்ணு இங்கே வந்து போய் இருக்கக் கூடாது. அதையும் மீறி வந்தால் இந்த வீட்டுக்குள் நான் நுழைய விட மாட்டேன்…” என்று கறாராகச் சொன்னார் லட்சுமி.

“உங்க பேத்தி என்னை விடச் சொந்த பந்தம் தான் உங்களுக்கு முக்கியமா பாட்டி?” என்று வேதனையுடன் கேட்டாள் வேதவர்ணா.

“இங்கே பார் சித்ரா, என்னை இந்த மாதிரி கேள்வி கேட்கிற உரிமை எல்லாம் உன் மகளுக்கு இல்லை. முதலில் ஒழுங்கா அவளை இங்க நின்னு கேள்வி கேட்டுட்டு இருக்காமல் அவளைக் கிளம்பி போகச் சொல்லு…” என்றார்.

‘என்ன? இவ்வளவு தூரம் வந்து விட்டு உடனே போவதா?’ என்று நினைத்த வேதா, “அம்மா, அப்பா எங்கே? உள்ளே இருக்காரா? அவரை வரச் சொல்லுங்க. நான் அவர் கிட்ட பேசணும்…” என்றாள்.

“என்ன திரும்ப என் மகன்கிட்ட கெஞ்சி கூத்தாடி அவள் நினைத்ததைச் சாதிக்கலாம்னு நினைச்சாளா? இதுல எல்லாம் உன் மகள் விவரமா தான் இருக்காள். நல்லவேளையா இன்னைக்குனு பார்த்து உன் புருஷன் இங்கே இல்லை…” என்றார் லட்சுமி.

“அப்பா வீட்டில் இல்லையாமா? எங்கே போயிருக்கார்?” லட்சுமி அவளைக் கண்டு கொள்ளாதது போல், வேதாவும் அவரைக் கண்டு கொள்ளாமல் தன் அம்மாவிடமே பேச்சை வளர்த்தாள்.

இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு சித்ரா தான் விழித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு மாமியாரையும் எதிர்த்துப் பேச முடியவில்லை. கர்ப்பம் தரித்திருக்கும் மகளையும் ஒரு கட்டத்திற்கு மேல் கடிந்து கொள்ள முடியவில்லை.

மகளின் முகத்தில் தெரிந்த சோர்வு அவரைக் கட்டிப் போட்டது.

அவளை உள்ளே அழைத்துச் சென்று கவனித்துக் கொள்ளத் தாய் உள்ளம் தவித்தது.

ஆனால் மாமியாரை மீறி பழக்கமில்லாத சித்ரா செய்வதறியாமல் நின்றிருந்தார்.

அவர் மகளை அதிகமாகப் பேசிவிடக் கூடாதே என்று தான் தானே முதலில் மகளைக் கடிந்து கொண்டார்.

“அம்மா, அப்பா எங்கம்மா? அவரை இங்கே வரச் சொல்லுங்களேன். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கும்மா. அவர் வந்தா என்னை எப்படியாவது உள்ளே கூட்டிட்டு போய்டுவார். நான் இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு ஊருக்கு போயிடுறேன்…” என்றாள் வேதவர்ணா.

“அப்பா வெளியூர் போயிருக்கார் வேதா. இப்போ என்னையும் உங்க பாட்டியையும் தவிர வீட்டில் யாரும் இல்லை. உங்க தாத்தா இப்போ வந்துருவார்…” என்று சித்ரா விவரம் சொல்ல,

“என்ன சித்ரா இப்போ வீட்டில் யார் யார் இருக்காங்கன்னு கணக்கு சொல்லவா உன்கிட்ட சொன்னேன்? உன் மகளை அனுப்ப சொன்னேன். சொன்னதைச் செய்! உன் மாமா வந்தா அப்புறம் உன்னையும் சேர்த்து தான் வீட்டை விட்டு அனுப்புவார்…” என்றார் லட்சுமி.

“அத்தை, வேதா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்காள். பாவம் அத்தை முகம் எல்லாம் சோர்ந்து போயிருக்கு. ப்ளீஸ் அத்தை உள்ளே விடுங்க…”

“இதோ, இதான்… இது நடக்கும்னு ஆசைப்பட்டுத் தான் உன் மகள் இந்த நிலைமையில் கிளம்பி வந்திருக்காள். புள்ளத்தாச்சி பொண்ணு போனா இரக்கப்பட்டு உள்ளே விட்டுருவாங்க. அப்படியே குடும்பத்துக் கூட ஒட்டிக்கலாம்னு நல்லாவே கணக்கு போட்டிருக்காள். அவள் தான் கணக்கு போட்டாளா? இல்லை நீ தான் இந்தக் கணக்கை போட்டு உன் மகளை இங்க வர வச்சுட்டு இப்போ ஒன்னும் தெரியாதது போல் நடிக்கிறாயா?” என்று லட்சுமி கடுமையாகக் கேட்க,

“அய்யோ! இல்லை அத்தை. நான் வர சொல்லலை…” என்று பதறி பதில் சொன்னார் சித்ரா.

“எனக்கு என்னமோ உன் வேலைன்னு தான் தோணுது…” என்று லட்சுமி நம்ப மறுக்க,

“இல்லை அத்தை…” என்று மறுத்துக் கொண்டிருந்தார் சித்ரா.

அவர்கள் இருவரும் வழக்காடிக் கொண்டிருக்க, இரவு அரையும் குறையுமாக உணவு உண்டது, ஊருக்கு வரும் பரபரப்பு மனதை ஆக்கிரமித்து இருந்ததால் இரவு முழுவதும் சரியாக உறங்காதது, அலைச்சலால் வந்த சோர்வு எல்லாம் தாக்க மயங்கி சரிந்தாள் வேதவர்ணா.

அவள் கீழே விழும் முன் அவளின் மீது ஒரு பார்வை வைத்திருந்த சித்ரா வேகமாகப் பாய்ந்து மகளைத் தாங்கி கொண்டார்.

“வேதா, என்னடி செய்து?” என்று பதறியவர், அவளின் கன்னத்தில் லேசாகத் தட்டி எழுப்பினார்.

அவள் எழாமல் போக, செய்வதறியாது திகைத்தவர், தங்களையே அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருந்த மாமியாரை இறைஞ்சுதலுடன் பார்த்து, “அத்தை, இவளை இனி இங்கே வரக் கூடாதுன்னு கண்டிச்சு வைக்கிறேன். இப்போ மட்டும் உள்ளே விடுங்க. நாளைக்குப் போய் விடுவாள்…” என்றார்.

“என்னமோ போ… நீயும் உன் பொண்ணும் நினைச்சதை சாதிச்சிட்டீங்க. உன் மாமா வந்தா என் சிண்டை தான் பிடிப்பார். இப்போ உள்ளே கூட்டிட்டு போ! ஆனா நீ சொன்ன மாதிரி இனி இங்கே அவள் வரக்கூடாது…” என்று கறாராகச் சொல்லி விட்டு உள்ளே சென்றார் லட்சுமி.

“என்ன மனுஷங்களோ… சொந்த பேத்தின்னு ஒரு அக்கறையாவது இருக்கா?” என்று தனக்குள் முனகி கொண்டே மயக்கத்தில் இருந்த மகளைச் சிரமப்பட்டு ஒற்றை ஆளாகக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் சித்ரா.


“நான் சொல்றதை கொஞ்ச நேரம் பொறுமையா கேளு வர்ணா. நான் ஒரு விஷயத்தைச் செய்யாதேன்னு உன்னைச் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்னு உனக்குத் தெரியாதா?” என்று ரித்விக் கேட்க,

தலையைக் கோபமாகச் சிலுப்பிய வேதா “என்ன அர்த்தம் இருக்கு? நான் சொன்னது தான் காரணம். உங்களுக்கு இல்லாத சொந்தம் எனக்கும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்க. அவ்வளவு தான்…!” என்றாள்.

“திரும்பத் திரும்ப எனக்கு வலியை பரிசா தந்துட்டு இருக்க வர்ணா. இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் கூட வலிக்க வச்சுக்கோ. ஆனா நான் என்ன சொல்ல வர்றேன் என்பதையும் காது கொடுத்துக் கேளு…” என்று இழுத்துப் பிடித்த பொறுமையுடன் சொன்னான் ரித்விக்.

“நானா? நானா உங்களை வலிக்க வைக்கிறேன் ரித்வி? நீங்க தான் இப்போ எனக்கு வலியை தந்துட்டு இருக்கீங்க. நான் எதுக்காக ஊருக்கு போறேன்னு விளக்கம் சொன்ன பிறகும், என்னைப் போக விடாம தடுத்துப் பேசிட்டு இருக்கீங்க…”

“வேணாம் வர்ணா வார்த்தை தடிக்குது. உன் வீட்டு உறவு வேணும்னு என்னை உதாசீனப் படுத்தாதே. உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன்…” என்று இன்னும் பொறுமையாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்தான்.

“இது எனக்கு நல்லது இல்லை ரித்வி. என் அப்பா, அம்மா கூட நான் பழைய படி இருக்கணும்னு நினைக்கிறது தான் எனக்கு நல்லது. அதுக்கான ஏற்பாட்டை நான் செய்யணும். என்னைத் தடுக்காதீங்க…” என்று கோபமாகக் கத்தினாள் வேதவர்ணா.

“ச்சே… சொல்றதை புரிஞ்சுக்கவே மாட்டியா வர்ணா? இதை உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ சொல்லித்தான் ஆகணும் என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்துட்ட… நல்லா கேட்டுக்கோ. உன் தாத்தா நம்ம கல்யாணம் சமயத்தில் மட்டும் இல்லை, அதுக்குப் பிறகும் நம்ம இரண்டு பேரையும் அங்கே வரவே கூடாதுன்னு சொன்னார்…” என்று உண்மை உடைத்திருந்தான் ரித்விக்.

“என்ன சொல்றீங்க ரித்வி? திரும்பத் தாத்தா அப்படிச் சொன்னாரா? அதை என்னை நம்பச் சொல்றீங்களா? நெவர்…” என்றாள் கோபமாக.

“எனக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை வர்ணா. நீ உங்க அம்மாவை ரொம்பத் தேடுறேன்னு நான் போன் போட்டு வர சொன்னேன்ல, உங்கம்மா வந்துட்டு இங்கிருந்து ஊருக்கு போன மறுநாள் உங்க தாத்தா பேசினார்…” என்றவன் அவர் பேசியதை சொல்ல ஆரம்பித்தான்.

‘என்ன இப்போ எல்லாம் தமிழ் நல்லா பேசுறீங்களாம்? என் மருமகள் சொன்னாள். எங்க கூடச் சேரத்தான் எங்க மொழியைச் சீக்கிரம் கத்துக்கிட்டீங்கன்னு சொன்னால், அது அநாவசியம் தம்பி. எங்க மொழியில் பேசியோ, இல்லை உங்களுக்குப் பிறக்க போற பிள்ளையைக் காட்டியோ எங்களை உங்க பக்கம் இழுக்க நினைக்காதீங்க.

நீங்க நினைச்சாலும் அது நடக்காது. நான் அந்தக் காலத்து மனுஷன். எனக்குன்னு சில கோட்பாடு இருக்கு. அதை என் மகன் வயித்துப் பேத்தி உடைச்சு உங்களைக் கட்டிக்கிட்டாள். என் மகன் கேட்டதுக்காக நானும் போனா போகுதுன்னு விட்டுட்டேன். அப்படி விட்டதில் இப்போ சொந்தக்காரங்க முன்னாடி கீழ் இறங்கி போய்ட்டோம். உன் பேத்திக்கு காதல் கல்யாணம் பண்ணி வச்சவன் தானே நீயுன்னு இளக்காரமா பார்க்கிறாங்க. அவங்க பார்வையில் எங்களுக்குத் திரும்ப மதிப்பு வரணும்னா, நீங்க எங்களை அண்டாமல் இருப்பது தான் நல்லது.

எங்க உறைமுறைல நான் முக்கியமான மனுஷனா இருந்தேன். உங்க கல்யாணத்தால் இப்போ ஒரு பய என்னை மதிக்க மாட்டேங்கிறான். இனியும் நான் கீழ் இறங்கி போக முடியாது. உங்க கூட ஒட்டும் உறவும் இருக்குற வரை நான் கீழே இறங்கி போய்ட்டே தான் இருப்பேன். அதனால ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எங்க கூட ஒட்டிக்கலாம்னு கனவு காணாதீங்க.

அது மட்டுமில்லாம எனக்குக் கல்யாணம் ஆகாத இன்னொரு பேத்தி இருக்காள். இப்போ உங்களை வந்து போய்ப் பழக விட்டால் நாளை பின்ன அவளும் எவனையாவது கூட்டிட்டு வந்து கட்டிக்கிறேன்னு சொல்லுவாள். இப்போ திட்டிட்டு, பின்னாடி சேர்த்துக்குவாங்கன்னு அவளும் கனவு காண்க ஆரம்பிப்பாள்.

அப்படி மட்டும் நடந்துட்டா என்னோட மானம், மரியாதை எல்லாம் காத்தோட போய்டும். அப்படி ஒன்னு நடக்க நான் விடமாட்டேன். கிழவன் தானே இவன் என்ன பண்ணிருவான்னு நினைக்காதீங்க. நான் நினைச்சா இப்போ கொஞ்சமா ஒட்டிக்கிட்டு இருக்குற உங்க மாமனார் உடனான உறவை ஒட்டு மொத்தமா வெட்ட வைக்க முடியும். அப்படி நடக்க விடமாட்டீங்கன்னு நினைக்கிறேன்’

“இப்படித்தான் உன் தாத்தா சொன்னார் வரு. அதனால் தான் உன்னைப் போக வேண்டாம்னு சொல்றேன். நீ உறவை ஒட்ட வைக்கப் போறேன்னு கிளம்பி இப்போ கொஞ்சமா இருக்குற உறவையும் இல்லாம ஆக்கிருவியோன்னு பயந்து தான் உன்னைத் தடுக்கிறேன்…” என்ற கணவனை நம்பாமல் பார்த்தாள் வேதவர்ணா.

“இல்லை நான் நம்ப மாட்டேன்…” என்றாள்.

“உன் தாத்தா எப்படிப் பேசுவார்னு என்னை விட உனக்கு நல்லா தெரியுமே வரு?”

“தெரியும் தான். ஆனா நான் அவங்க பேத்தி ரித்வி. நான் நேரில் போய்ப் பேசினால் அவங்க மனசு மாறும்னு நம்பிக்கை இருக்கு. அதனால் என்னை ஏதாவது சொல்லி குழப்பாம என்னைப் போக விடுங்க ரித்வி…” என்று பிடிவாதம் பிடித்தாள்.

“நான் இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும் பிடிவாதம் பிடிக்கிறது சரியில்லை வர்ணா…” என்றான் கடுமையாக.

கணவனின் கடுமையில் கோபம் அதிகமாக “இத்தனை நாளும் உங்களைக் காதலிச்சது தப்போன்னு நான் நினைச்சது இல்லை ரித்வி. ஆனா இப்போ எனக்குத் தப்போன்னு தோணுது…” என்று சொல்லி விட்டு அதற்கு மேலும் அங்கே நிற்காமல் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

அவள் சொல்லிய வார்த்தையில் வாயடைத்துப் போனான் ரித்விக்.

காதலில் கசிந்துருகி தன்னையும் உருக வைத்த மனைவி, இப்போதோ உன்னைக் காதலித்ததையே தப்பென்று நினைக்கிறேன் என்று சொல்லியது ரித்விக்கை சவுக்கால் அடித்தது போல் வலிக்க வைத்தது.

காதலியோ, காதலனோ தன் இணையிடம் கேட்டு விடக் கூடாத வார்த்தை அது!

‘உன்னைக் காதலித்ததைத் தப்பென்று நினைக்கிறேன்’ என்று தன் இணை சொன்னால் அங்கே காதலே தோற்று போய் விடுகிறது.

‘அப்போ எங்கள் காதலும் தோற்று போய் விட்டதா?’ என்று திகைப்புடன் நினைத்துக் கொண்டான் ரித்விக்.

மனைவியின் வார்த்தைகள் கொடுத்த வலியில் ரித்விக்கின் கண்கள் கலங்கி கண்ணீர் துளிகள் இமையைத் தாண்டி எட்டிப் பார்த்தன.


மயக்கமா, உறக்கமா என்று தெரியாத உணர்வில் படுத்திருந்த வேதவர்ணாவின் எண்ணங்கள் கணவனுடனான தன் வாக்குவாதத்தைச் சுற்றியே வந்தது.

கோபமாக வீட்டை விட்டு வந்தது வரை அவளின் நினைவுகள் சுழன்றன. அவள் பேசிய வார்த்தைகளை அனைத்தையும் அவளின் உள் மனம் அவளுக்கு எடுத்து சொல்ல, ‘அதிகமாகப் பேசி விட்டோம் என்று உள்ளூர உணர்ந்ததில் வேதனையுடன் முகத்தைச் சுளித்தாள்.

‘சாரி ரித்வி…’ என்று அவள் உறக்கத்திலேயே முனங்க போன நொடியில், அவளின் தலையை ஒரு கை இதமாகக் கோதி கொடுத்தது.

அந்தக் கையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் கணவனின் நினைவுகளைப் பின்னுக்குத் தள்ளி “அப்பா…” என்று முனங்கினாள்.

“இப்போ எப்படி இருக்கு வேதாமா?” என்று அவளின் தந்தையின் குரல் கேட்க, பிரிய மறுத்த இமைகளைச் சிரமப்பட்டுப் பிரித்துத் தன் தலை அருகில் இருந்த தந்தையைப் பார்த்தாள்.

பாசம் சொட்டும் விழிகளுடன் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்ததும், பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“ஏய்! மெதுவா எந்திரிடி! பிள்ளையை வயித்துல வச்சுக்கிட்டு இப்படியா வேகமா எழுந்துக்குவ?” என்று திட்டிக் கொண்டே கையில் உணவு தட்டுடன் அறைக்குள் வந்தார் சித்ரா.

“அப்பா, எப்படி இருக்கீங்க?” அன்னையின் திட்டை காதில் வாங்காமல் தந்தையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள் வேதா.

“எனக்கு என்னமா? நான் நல்லா இருக்கேன். நீ தான் மயங்கி விழுந்துட்டன்னு உன் அம்மா சொன்னாள். இப்போ உனக்கு எப்படி இருக்கு?” என்று தந்தை கேட்ட பிறகு தான், வீட்டிற்குள் வந்து விட்டோம் என்பதையே உணர்ந்தாள்.

“அது… ட்ராவல் செய்தது ஒத்துக்கலை போலப்பா. வேற ஒன்னும் இல்லை…” என்றவள், “நீங்க வெளியூர் போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க. எப்ப அப்பா வந்தீங்க?”

“இப்போதான்மா வந்தேன்…” என்றார் சந்திரசேகர்.

“உங்க அப்பாக்கிட்ட அப்புறம் பேசலாம்டி. இப்போ முதலில் இந்தச் சோறை சாப்பிடு. காலையில் வந்தவ மதியம் வரை மயங்கி கிடந்திருக்க…” என்றார் சித்ரா.

வேதா மணியைப் பார்க்க, மதியம் ஒரு மணி ஆகியிருந்தது.

படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்குள் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், உணவை உண்டு முடித்தாள்.

தன் வீட்டிற்குள் அன்னை, தந்தையிடம் வந்ததே வேதாவின் மனதை இலகுவாக்கியிருந்தது.

உணவை உண்டு முடித்தவள், “அப்பா, நான் இங்கே வரக் கூடாதுன்னு பாட்டி என்னை உள்ளே விட மாட்டேன்னு சொல்லிட்டாங்கபா. நீங்க அவங்க கிட்ட என்னன்னு கேளுங்கப்பா…” என்று தந்தையிடம் சலுகையாகச் சொன்னாள் வேதவர்ணா.

“அவங்க முன்னாடியே அது தானேமா சொன்னாங்க. அதையும் மீறி நீ இங்கே இப்போ வந்தது தப்பு தானே?” என்று நிதானமாக மகளிடம் கேட்டார் சந்திரசேகர்.

“அப்பா?” தந்தையிடமும் அந்தக் கேள்வியை எதிர்பார்க்காமல் திகைத்து அழைத்தாள்.

“என்னப்பா நீங்களும் இப்படிக் கேட்குறீங்க? அப்போ நான் இங்கே வரவே கூடாதா? எனக்கு நீங்களும், அம்மாவும் என்கிட்டே சகஜமா வந்து போய் இருக்கணும்னு ஆசைப்பா. ஆனா அது நடக்கவே செய்யாதா?” என்று கேட்டாள்.

“உனக்கு ஒரு தேவைன்னு வரும் போது வந்து போய்த் தானே இருக்கோம் வேதா?”

“ஆனா அதில் ஒரு கட்டாயம் தானே இருக்கு அப்பா? நீங்க கூட என்னைப் பார்க்க வரலை…”

“வருவேன் வேதா. ஆனா நீ நினைப்பது போலச் சகஜமா வந்து போய் இருப்பதெல்லாம் நடக்காத காரியம்…” என்றார்.

“ஏன்பா அப்படி? நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணியதுக்கு இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எனக்குத் தண்டனை தருவீங்க?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

“எங்க அப்பா, அம்மா காலம் மட்டும் இல்லை. எங்க காலம் இருக்க வரைக்கும் கூட இப்படித் தான் நிலைமை இருக்கும் வேதா…”

“அப்பா?” என்று அதிர்ச்சியுடன் அழைத்தாள்.

“ஆமாம்மா… இதுதான் சாத்தியம்…”

“ஏன்பா?” கலங்கிய விழிகளுடன் கேட்டாள்.

“ஊர் உலகத்தில் இப்போ எல்லாம் காதல் கல்யாணம் சகஜமா நடந்துட்டு தான்மா இருக்கு. ஆனா அதை எல்லாராலேயும் சகஜமா ஏத்துக்க முடிவது இல்லை. அதே தான் இந்த வீட்டுலேயும். உன் மேலே எங்களுக்குப் பாசம் எல்லாம் நிறைய இருக்கு. அந்தப் பாசம் தான் உன் கல்யாண விஷயத்தில் உன் விருப்பப்படி எங்களை நடக்க வச்சது.

ஆனா நாம சகஜமா வந்து போற அளவுக்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. என்னோட அப்பா மட்டும் இல்லை. நானும் ஊர் உறவோட ஒத்துப் போறவன் தான். அதிலிருந்து என்னாலும் இறங்கி வர முடியாது…” என்றார்.

“உங்க சொந்தப் பொண்ணை விட ஊரும், வேற சொந்தக்காரங்களும் முக்கியமாப்பா?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா முக்கியம் தான்மா. ஊரோட ஒத்து வாழ் என்பது தான் என் அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தது. அதில் இருந்து என்னால் மாற முடியாது…” என்றார்.

“தாத்தா, பாட்டி கூட இருந்தால் தானே அப்பா அப்படி? நீங்க தனியா வந்திடலாமே?” என்று கேட்ட மகளை “வேதா…” என்று அதட்டி அழைத்தார் சந்திரசேகர்.

“வயசு எத்தனை ஏறினாலும், நான் எங்க அப்பா, அம்மாவுக்குப் பிள்ளை தான். எங்க அப்பாவோட ஆசை நாங்க அண்ணன், தம்பி மூணு பேரும் பிரிஞ்சு தனிக் குடுத்தனம் போய்ட கூடாதுன்னு தான். எந்த விஷயத்தில் எங்களுக்கு ஒற்றுமை இருக்கோ இல்லையோ, நாங்க அண்ணன், தம்பி மூணு பேரும் இந்த விஷயத்தில் மட்டும் ஒற்றுமையா எங்க அப்பா சொல்றதை தான் கேட்போம். அதனால் தனியா வர சொல்லி இனி ஒரு முறை என்கிட்டே பேசாதே…” என்று அதட்டினார்.

தந்தை பேசியதில் வேதாவின் கண்கள் கலங்கி போனது.

தன் ஆசை நிறைவேறவே செய்யாது என்று தெரிந்ததில், வேதனையுடன் கண்ணீர் வடித்தாள்.

“இப்போ வந்துட்ட சரி, ஆனா இனியும் உங்க தாத்தா பேச்சை மீறாதே…!” என்று கண்டிப்புடன் சொன்னார் சந்திரசேகர்.

“அதாவது தாத்தா சொன்ன மாதிரி நான் இனி இங்கே வரவே கூடாது அப்படித்தானே? அதை இனி இங்கே வராதேன்னு நேரவே நீங்க சொல்லிடலாம்பா…” என்றாள் வருத்தமான முறுவலுடன்.

“நம்ம குடும்பம் இப்படித்தான் வேதாமா. அதை ஏத்துக்கப் பழகிக்கொள்…” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் அவளின் தந்தை.

அவர் சென்றதும் கண்ணீருடன் அமர்ந்திருந்த மகளிடம் வந்து அமர்ந்தார் சித்ரா.

அவரின் மடியில் படுத்துக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தாள் வேதா.

“இங்கே யாரும் எப்பவும் மாற மாட்டாங்க வேதா. நீ ஆசைப்பட்டவனையே கல்யாணம் முடிச்சுட்ட. நம்ம நல்ல நேரம் மாப்பிள்ளை தங்கமானவரா இருக்கார். வேற எதைப் பற்றியும் கவலைப்படாமல் மாப்பிள்ளை கூடச் சந்தோஷமா வாழ பார். நீ அங்கே சந்தோஷமா வாழ்ந்தாலே நானும், அப்பாவும் நிம்மதியா இருப்போம்…” என்றார் சித்ரா.

வேதா ஒன்றும் சொல்லாமல் அமைதியாகப் படுத்திருந்தாள்.

“உன் பெரியப்பா மக இரண்டாவது குழந்தை மாசமா இருக்காள். அவளைப் பார்க்க அவங்க குடும்பத்தோட போயிருக்காங்க. சித்தப்பாவும், சித்தியும் அவள் பிறந்த வீட்டுப் பக்கம் ஏதோ கல்யாணம்னு போயிருக்காள். நல்ல வேளை இப்போ அவங்க இங்கே இல்லை. இல்லனா உன் பாட்டி கூடச் சேர்ந்துக்கிட்டு அவங்களும் உன்னைப் பேசிருப்பாங்க…” என்றார் சித்ரா.

அன்று மாலை வரை அவர்களின் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் வேதவர்ணா.

மாலை வேதா மட்டும் அறைக்குள் தனியாக இருந்த போது, அறைக்கு வெளியே அவளின் தாத்தாவின் குரல் கேட்டது. அவர் மதியமே வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் இதுவரை அவளும், அவரும் பார்த்துக் கொள்ள வில்லை.

இப்போது குரல் கேட்டதும் இங்கே இப்போது தன்னைத் திட்ட வருவாரோ என்று பயத்துடன் எதிர்பார்த்திருந்தாள் வேதா.

ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை.

“என்ன சந்திரசேகரா, சமீபத்தில் கூட உன் மருமகன் கிட்ட குழந்தையைக் காரணமா வச்சு ஒட்டிக்க நினைக்காதீங்கன்னு சொல்லி வச்சேன். அப்படியும் உன் மகளை உன் மருமகன் இங்கே அனுப்பி வச்சிருந்தால் என்ன அர்த்தம்? என்னமோ உன் மாப்பிள்ளை நல்லவர், வல்லவர்னு சொன்ன? அந்த நல்லவர் செய்ற காரியம் ஒன்னும் சரியா இல்லையே…” என்று மகனை வெளியே திட்டிக் கொண்டிருந்தார் அவர்.

“இல்லப்பா, என் பொண்ணு தான் ஏதோ என்னைப் பார்க்கணும்னு ஆசையில் வந்துட்டாள். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன்…” என்று அந்த வயதிலும் தன் தந்தைக்குப் பணிந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

தாத்தாவின் பேச்சுக் காதில் விழ, அப்போ தன் கணவன் சொன்னது உண்மை தானா?

தாத்தா ரித்விக்கிற்குப் போன் போட்டு குழந்தையைச் சாக்கிட்டு வந்து போய் இருக்கக் கூடாது என்று மீண்டும் கண்டிஷன் போட்டது தெரியாமல் வெட்கமில்லாமல் இங்கே வந்து நின்று விட்டேனே?

தெரியாமல் எங்கே? அதான் கிளம்பும் போது ரித்வி அத்தனை எடுத்து சொன்னாரே… அவரின் பேச்சை கொஞ்சமாவது காது கொடுத்துக் கேட்டிருந்தால் இப்படித் தான் அவமானப்பட நேரிட்டிருக்குமா? என்று தன்னையே நொந்து கொண்டாள்.

காலம் கடந்த ஞானோதயம்!

குடும்பத்திற்குள் ஒட்டுதலை உருவாக்க போகிறேன் என்று கிளம்பி வந்தவள் உறவுகளின் பேச்சில் உண்டான வருத்தத்துடன் மீண்டும் கணவனிடம் போய்ச் சேர்ந்தாள் வேதவர்ணா.