பூக்களை விரும்பா வேர்களில்லை – 1

அத்தியாயம் – 1 

‘சென்னை தர்பார்’

ராயபுரம்

சென்னையின் அன்றாட பரபரப்பையும் துரீத தன்மையையும் தன்னிலும் உள்ளடக்கியவாறு வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த உணவகம். மணி காலை பத்தரையை நெருங்கி இருந்தது. இரண்டு தளங்களை கொண்ட உணவகத்தின் முகப்பில் சிறு வரவேற்பறை இருந்தது. முதல் தளத்தில் அலுவக ஊழியர்களும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களும் வேலைக்கு புறப்படும் அவசரத்தில் சுற்றுப்புறத்தை கண்ணிலும் கருத்திலும் பதிக்காமல் தங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருக்க குளிரூட்டப்பட்ட இரண்டாம் தளத்தில் தங்களின் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசியபடியே சிப்பந்தி எடுத்து வந்த உணவுகளை ரசித்து ருசித்தவாறு சாவகாசமாக அமர்ந்திருந்தனர் சிலர்.

கீழ் தளத்தில் அமர்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் சுத்தம் பார்க்கவில்லை சுற்றுப்புறம் உணரவில்லை. தங்கள் பசியையும் ருசியையும் மட்டுமே உணர்ந்து ஐந்து நிமிடங்களில் காலை உணவுகளை முடித்துவிட்டு வெளியேற, மேல் தளத்தில் இருக்கும் மக்களில் பலர் சுற்றத்தையும் சுகாதாரத்தையும் மனதில் வைத்து உணவினை ருசி பார்க்கவே நல்ல நேரம் பார்த்தும் ஒரு மணி நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

வெள்ளை நிற போலோ டிஷர்ட்டோடு பழுப்பு நிறத்திலான ட்ராக் பேண்ட்ஸ் கண்களில் கூலர் கண்ணாடி காதுகளில் காதொலிப்பானுடன் அசாத்திய உயரத்தில் வலது புறத்தின் முனையில் இருந்த ஐந்தாவது இருக்கையில் தனியாக அமர்ந்தவாறு உண்டுக் கொண்டிருந்தான் பின் இருபதுகளை சேர்ந்த ஒருவன். கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வமானவன் போலும் அவனுடைய தோள்பட்டையை தழுவி இருந்த சட்டையையும் தாண்டி தெரிந்தது அவனுடைய அசாத்திய வலிமை. காரிருள் சூழந்த கரிய நிறம். அவன் கண்களில் சுடர்விடும் ஒளி அவனின் நிறத்தை மாநிறமாக கூட்டி காட்ட தான் செய்தது. பாடல்களை முணுமுணுக்கும் அவன் உதடுகளின் இடைவெளியில் வெளிப்பட்ட பற்கள் அவன் புன்னகை மன்னன் தான் என்று தெரிவித்தது.

தனிமையில், அரைமணி நேரத்தை உணவுண்டு கடத்திய திறமைசாலி. அவசரமில்லாமல் அத்தனை பொறுமையாக தன் உணவுகளை ரசித்துக் கொண்டிருந்தான் அவன். மற்ற இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களின் கவனம் தன் பக்கம் திரும்ப கூடாது என வெகு சிரத்தை எடுத்து சுவரோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்தவாறு சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நேரெதிர் இருக்கையில் ஐந்து வயது தாண்டாத இரண்டு குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி அமர்ந்திருந்தனர். அதற்கு அடுத்த இருக்கையில் நான்கு நடுத்தர வயது நண்பர்கள். இப்படியாக அந்த தளம் முழுவதுமே நிரம்பி இருக்க மேல் தளத்தின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் ஒரு யுவதி.

சரியாக அதே நேரத்தில் அவனுக்கு எதிர் மேஜையில் இருந்த அந்த பெண்மணி தன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெளியேறுவதை பார்த்து எழுந்து நின்றவன் தன் காதில் இருந்த காதொலிப்பானை அகற்றி தன் கழுத்தை சுற்றி அதை கடத்தியவன் தன் வலது கையை குறுக்காக உயர்த்தி பிடித்து லேசாக பின்னால் சாய்த்து வேகமாக முன்னே நீட்டி ‘ஆரம்பிக்கலாம்’ என்று யாருக்கோ சமிக்ஜை செய்தான். அதை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த அந்த யுவதி தன் விழிகளை விரித்து அவனை உள்வாங்கினாள்.

அவனை கண்ட நொடியில் ஜில்லென்ற காற்றில் அவள் தேகமெங்கும் கூசி சிலிர்த்துப்போக இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். அதையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்தபடியே இருந்தாலும் அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் வேகமாக தனியாக அமர்ந்திருந்த அந்த கணவனுக்கு முன்னால் சென்று அமர்ந்தான். அவனை தொடர்ந்து தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்ற நடுத்தர வயதை சேர்ந்த நண்பர்கள் கூட்டம் இருவரையும் சுற்றிலும் நின்றுக்கொள்ள அங்கே சென்று அமர்ந்திருந்தவனையே பின்தொடர்ந்தவளுக்குள் அவளுடைய விழித்திரையில் குடியேறியவனை பறித்துக்கொண்ட சிறு சலிப்பு. 

அடுத்த ஐந்தாவது நிமிடத்திற்கெல்லாம் அந்த கணவனை அரெஸ்ட் செய்திருந்தார்கள் அவர்கள் ஐவரும். அங்கே என்ன நடக்கிறது என்பதை ஆவலாக பார்த்தவர்களுக்கு அப்போது தான் அவன் போலீஸ் என்பதே தெரிந்தது. குற்றவாளியாக அவர்கள் பிடித்திருக்கும் நபரின் பெயர் ராகவன். போதை மருந்துகளை கடத்துவது, பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி பணம் பறிப்பது போன்ற அல்பமான வேலைகளை செய்து வரும் கூட்டத்தின் தலைவன். நார்த் மெட்ராஸ் இவன் கண்ட்ரோலில் தான் இருக்கிறது.

“என்ன வேணும்னு கேட்டு வாங்கிட்டு போங்க. அதவிட்டு எதுக்கு பப்ளிக் ப்ளேஸ்ல சீன் க்ரேட் பண்றீங்க?” என்று கொஞ்சமும் அலட்டலில்லாத குரலில் தன் இரண்டு கைகளையும் பிடித்திருந்த நால்வரையும் பார்த்து தெனாவெட்டாக வினவினான் ராகவன்.

“மூர்த்தி தானே உங்களுக்கு மேல. அவனே என் ஆளு. நான் தரத வாய மூட்டிட்டு வாங்கிட்டு போவான். ஃபோன் பண்ணி குடுங்க அவனுக்கு நான் பேசறேன்.” என சொல்லி நிறுத்தியவன் தன் கைகளை விட்டுவிடுவார்கள் என்று நினைக்க, அவர்களோ மேலும் அழுத்தமாக பற்றிக் கொண்டார்கள்.

“பொண்டாட்டி பிள்ளைங்கள கூட்டிட்டு வந்திருக்கேன். எல்லாரும் அமைதியா போய்ருங்க. ஹே! போலீசு எவன் உன்ன அனுப்பினது? இங்க எல்லாருமே நம்ப ஆளுங்க தான். மூர்த்திய…” என்று முடிப்பதற்குள்ளே அவனுக்கு விழுந்த அறையில் அவன் கடவாய் பல்லே உடைந்து வாய் புடைத்து முழுவதும் இரத்தம் கொட்டியது. தன் கண்களில் அணிந்திருந்த கூலரை கழட்டி தன் வலது உள்ளங்கையை வைத்து லேசாக தேய்த்தவன் தன் உதட்டுக்கு நேராக அதனை தூக்கி பிடித்து கண்ணாடியில் படிந்திருந்த தூசிகளை ஊதினான். 

“ராஜன்! ப்ரிங் ஹிம்” என இரண்டே வார்த்தைகளில் சீறியவனை கண்டு சிம்மராஜன் என்பவன் வேகமாக அவனை இழுக்க முயலவும், “டே! யாரா நீ? நான் யாருனு தெரியுமா? நரசிம்மன்னா யார்னு தெரியுமா? இந்த நார்த் மெட்ராசே என் கையில தான்டா இருக்கு? யாரா நீ? யார் என்னனு தெரியாம மோதி பாக்கறியா? சேதாரம் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும் யோசிச்சுக்க!” என ராகவனுக்கு முன்னால் இருந்த மேஜையை தன் காலால் தள்ளி விட்டு வேகமாக அதில் ஏறி அமர்ந்தவனின் ஷூ அணிந்திருந்த கால்கள் ராகவனின் மார்பில் பதிந்தது. 

“என்ன சவுண்ட் அதிகமா இருக்கு? ம்ம்?” என அவன் மார்பில் மிதித்தவனின் பார்வையின் பொருளை உணர்ந்து பிடித்திருந்த ராகவனை விட்டு விலகி நின்றார்கள் நால்வரும். 

“நீ யார் என்னனு தெரியாமையா உன்னை அரெஸ்ட் பண்றேன். நரசிம்மன் யார்னு கூட எனக்கு தெரியும். என்ன மோதி பார்க்கறியானு ஒரு கேள்வி? நான் மோதற அளவுக்கு கூட நீ வொர்த் கிடையாது. அதனால உன் கூட எல்லாம் மோதி பார்க்க எல்லாம் எனக்கு டைமில்ல. மரியாதையா வாய மூடிட்டு இரு.” என தன் இதழ்களில் விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை செய்தவன், 

“குமரன்! இவனை அரெஸ்ட் பண்ணது வெளியே தெரிய கூடாது. நான் சொல்ற இடத்துல இவனை வச்சிருக்கணும்.” என தெளிவாக அவன் முன்பே அனைத்தையும் பேச ராகவனுக்கு தன்னை என்ன செய்ய போகிறானோ என்று பயமே வந்துவிட்டது. 

“பொருமாள்! அப்பறம் சாருக்கு யாரோ மூர்த்திய தெரியுமாமே. இவருக்கு ரொம்ப வெண்டப்பட்டவராம். அவர என்ன பண்ணலாம்? ஹ்ம்ம்..?” என யோசனை படிந்த முகபாவனையில் இதழ் வளைத்தவன், “வேணும்னா கொல்கத்தாவுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கி கொடுப்போமா? பாவம் அவர் அங்க போயாவது பொழைச்சிக்கட்டும்.” என்று கூறியவனின் பாவனையிலையே அது வில்லங்கமான இடம் என்று புரிந்தது.

“ராஜன்! க்ளர் த ஸ்பாட். இங்க இருக்கறவங்க யாருக்கும் எதுவும் ஞாபகம் இருக்க கூடாது. கமான் குயிக்.” என அவர்களை விட்டு விலகியவனின் செவியில் வழுந்த வார்த்தைகளில் நடந்துக் கொண்டிருந்தவனின் கால்கள் தன்னாலையே நின்றது.

“சார்! என் பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுருங்க சார். அவங்களுக்கு எதுவும் தெரியாது…” என கூறியவனை நோக்கி வேகமாக திரும்பியவன் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தான்.

“எத்தன குடும்பத்தை வேரோட அழிச்சு இருப்ப? எத்தன குழந்தைகளை நாசமாக்கி இருப்ப? எத்தன பெண்களோட வாழ்க்கைய சூறையாடி இருப்ப? உன் பொண்டாட்டி பிள்ளைங்கனா மட்டும் வலிக்குதோ? ஹான்? அவங்க எப்படி போன என்ன? நீயே எங்க கிட்ட அடிவாங்கி தான் சாக போற? ச்சோ ச்சோ!” என்று உறுமியவன், “கூட்டிட்டு போங்க இவனை!” என்று மற்றவர்களை நோக்கி சீறினான்.

அவர்கள் நால்வரும் ராகவனோடு அந்த இடத்தை விட்டு விலகவும் அங்கே அமர்ந்திருந்த அனைவரையும் ஒருமுறை கூர்ந்து அளந்தவன் வெளியே செல்ல முயலுகையில் தான் அவனை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டான். சுற்றுப்புறத்தை மறந்து விழிகளில் தேங்கி நின்ற ரசனையுடனும் அதையும் தாண்டிய ஈர்ப்புடனும் இதழ்கள் மலர்ந்து அவனையே பார்த்தவளை கண்டு சட்டென்று அவனுள் மூண்டது கோப கனல்கள். 

“ஹலோ! எஸ்க்கியூஸ் மீ!” என்றவன் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் கதவை திறந்து வெளியேறவும் அப்போது தான் அவன் அவளை கடந்து சென்றதையே உணர்ந்து அவன் பின்னோடு ஓடியவள், “ஏசிபி ஸார்!” என்று சத்தமாக அழைத்துவிட்டாள். அவள் கதவை திறந்து கத்தியதில் அனைவரும் அவர்களை திரும்பி பார்க்கவும் அவளை திரும்பி பார்த்து சலிப்புடன் முறைத்தவன் இருபக்கமும் தலையாட்டியவாறே தன் வேகநடையை தொடர்ந்தான்.

“அட! ஏசிபி ஸார். நில்லுங்க!” என்று வேகமாக மூச்சு வாங்க அவனுக்கு அருகில் வந்து நின்றவளை ஏனென்றும் கண்டுக் கொள்ளாமல் அவனுக்கு வந்த அலைபேசி அழைப்பை கவனித்து அதை ஏற்று காதில் வைத்தான்.

“என்ன? சொல்லுங்க!” என இவன் கேட்க, “டேய்! எங்க இருக்க?” என்று அந்த பக்கம் யாரோ ஒருவன் கொடுத்தான்.

“இப்ப தான் எழுந்தேன்! அப்பறம் பேசட்டுமா?” என்று கேட்டு அவன் அழைப்பை துண்டிக்க செல்லும் முன், “டேய் நல்லவனே! நான் இங்க தான் இருக்கேன். நாலாவது டேபிளுக்கு வா!” என அவன் திட்டுவதற்கு முன்னால் சொல்லி தன் அழைப்பை துண்டித்து விட்டான் அவனை அழைத்தவன்.

“பச்!” எரிச்சலில் தன் தலையை அழுத்தமாக கோதி விட்டுக் கொண்டு தன் பற்களை கடித்தவனை கண்டு, “அதோ! ஃப்வோர்த் டேபிள் அங்க இருக்கு ஏசிபி ஸார். வாங்க போகலாம்.” என அவனுக்கு அருகில் நின்றிருந்தவள் கூறியதை கேட்டு அவன் தன் புருவத்தை சுருக்க, சிவந்து போனது அவன் முகம்.

“அச்சச்சோ! நான் எதுவும் வேணும்னே ஒட்டுக் கேட்கலை ப்பா. உங்க ஃபோன் தான் ரொம்ப சவுண்ட்டா இருந்துச்சு. நீங்க பேசினது அவங்க பேசினதுனு எல்லாமே கேட்டுச்சு நான் என்ன பண்றது? ஏசிபி ஸார், ஃபோன் சவுண்ட்ட கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாமில்ல..” என அவள் இழுக்கும்போதே அவளை அற்ப பதரை போல பார்த்து முறைத்தான் அவன்.

“ஹே! இல்ல இல்ல அட்வைஸ் எதுவும் பண்ணல. சவுண்ட் கம்மி பண்ணினா உங்களுக்கு நல்லது. ஏன் சொல்றேனா உங்க பொண்டாட்டி உங்களை கொஞ்சி பேசுறதை கேட்டா நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்களா…” என்று முடிப்பதற்குள்ளே அவளை கொடூரமாக பார்த்தவன் வேகமாக கீழ் தளத்தில் இருந்த நான்காவது இருக்கையை நோக்கி செல்ல துவங்கினான். 

அதுவரை அவன் முகத்தில் மண்டிக் கிடந்த எரிச்சலெல்லாம் அங்கே அமர்ந்திருந்தவர்களை கண்டதும் ஓடியே போனது. மலர்ந்த முகத்துடன் அவர்களுக்கு அருகில் வந்தவனை கண்டு எழுந்து நின்று தங்களின் விழிகளை விரித்து வரவேற்றனர் அங்கே அவனுக்காக காத்திருந்த அந்த கணவனும் மனைவியும். 

எதிரில் வந்து நின்றவனை கண்டு, “மச்சான்!” என்று வேகமாகப் பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டான் அவனை அலைபேசியில் அழைத்த அச்சுதன். அவனுக்கு அருகில் நின்றுக் கொண்டு அவர்கள் இருவரையும் புன்னகை முகத்துடன் பார்த்திருந்தாள் அவனுடைய மனைவி மஹாலக்ஷ்மி.

தன் நண்பனும் தங்கை கணவனுமான அச்சுதனை தானும் அணைத்துக் கொண்டதோடு எதிரில் நின்றிருந்த தங்கையை பாசத்துடன் வருடியது அவன் கண்கள். “எப்படி மஹா இருக்க?” என அவளை தன் பார்வையால் வேகமாக ஆராய்ந்தவனை கண்டு புன்சிரிப்புடன் நின்றவள் அவன் கைகளை பிடித்துக் கொண்டு, “ரொம்பவே நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கேண்ணா?” என வினவினாள் மஹாலக்ஷ்மி. 

“எத்தனையாவது மாசம்டா?” என பிள்ளை சுமந்திருப்பவளை பார்த்து கணிவுடன் ஆசையாக வினவ, “தங்கச்சி மேல இப்ப தான் பாசம் பொத்துக்கிட்டு வருதோ?” என்றவாறே அவனை பின் தொடர்ந்து அங்கு வந்து நின்றாள் அதுவரையில் அவனை தன் பேச்சால் அலைக்கழைத்த அந்த பெண்.

சட்டென்று மூண்ட கோபத்துடன் நிமிர்ந்தவன், “இவளை எதுக்குடா கூட்டிட்டு வந்த?” என அச்சுதனிடம் கோபிக்க, “ஹலோ! நீங்க வேணும்னா உங்க தங்கச்சிய கண்டுக்காத அண்ணனா இருக்கலாம். ஆனா எங்க அண்ணன் என்னை அப்படி எல்லாம் விட்டுக் கொடுத்துற மாட்டான் ஏசிபி ஸார்.” என்றாள் அவளும் ஏதோ கோவம் போல. அவளை பார்த்து முறைத்தவன், “தெரியாம சொல்லிட்டேன். இந்தா உங்க அண்ணன். பத்திரமா பார்த்துக்கோ. காக்கா வந்து தூக்கிட்டு போய்ட போகுது…” என்று சிரிக்காமல் கூறியவன் ஒரு நாற்காலியை நகர்த்தி மஹாவை உட்கார வைத்தான்.

தானும் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவனுக்கு அருகில் நின்றிருந்த அச்சுதனின் கையை பிடித்திழுத்து அவனுக்கு அருகில் அமர வைத்தான். நால்வர் அமரும் இருக்கையில் மஹாவுக்கு அருகில் இருந்த இருக்கை ஒன்று காலியாக இருக்கவும் அங்கே அமர முயன்ற அச்சுவை அவன் பிடித்து இழுத்த விதமே ‘உன் தங்கை பக்கத்தில் உட்கார எனக்கு விருப்பமில்லை!’ என்பதை சொல்லாமல் சொல்லியது.

‘ஏன்டா?’ என்பது போல அச்சுதன் தன் நண்பனை நிமிர்ந்து பார்க்க, “விடாம என்னையே குறுகுறுனு பாக்குறாடா! எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு.” என்று அவன் முணுமுணுத்தாலும் அவன் மனதில் என்ன இருக்கிறது என்பது சிறு வயது முதலே அவனுடைய நண்பனாக இருக்கும் அச்சுதனுக்கு புரியாதா என்ன? ‘ஏன் இந்த பொண்ணு இப்படி பண்றா?’ என தன் தங்கையை பார்த்து அவனால் மனதிற்குள் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“விடிய காலையிலேயே சென்னை வந்திருக்க. ஆனா இன்னமும் வீட்டுக்கு வரவே இல்லை?” என தயங்கி தயங்கி மெதுவாக அச்சுதன் அவன் முகத்தை பார்க்கவும், “எங்க வீட்டுக்கு வந்தா அவங்களை வீட்லையே பிடிச்சு வச்சுப்பங்களோனு பயமா இருக்கும். அதான் ஏசிபி ஸார் எஸ்ஸாக நினைச்சுட்டார் போல…” என புன்னகையுடன் கூறியவளை நிமிர்ந்து பார்த்தவன் வந்ததில் இருந்தே அவனை கேலி செய்பவளை பார்த்து சட்டென்று மூண்ட கோபத்தில், “கால் மீ ஆஸ் யுகேந்திரன். யுகேந்திரன் வாசுதேவன்.” என பற்களை கடித்தான் யுகேந்திரன்.

“சந்திரா! எத்தனை முறை சொல்லி இருக்கேன். எதுக்கு அவனை இப்படி டார்ச்சர் பண்ற? இப்ப தானே வந்திருக்கான். அவனை கொஞ்சம் ஃப்ரீயா விடேன்…” என்று கூறியவன், “அது மட்டுமில்லாம இப்ப டிசிபியா ப்ரோமோட் ஆகி வந்திருக்கவங்கள ஏசிபினு சொல்லிட்டு இருக்க அதுவும் பப்ளிக் ப்ளேஸ்ல…” என்று அவன் பங்கிற்கு அச்சுதனும் அவளை கடிந்துக் கொள்ளவும் முகம் சுருங்க யாரையும் நிமிர்ந்தே பார்க்கவில்லை அவள்.

“டேய்!” என அதற்கும் தன் பற்களை நறநறவென்று கடித்தவன், “இன்னைக்கு காலைல மூணு மணிக்கு தான் வந்தேன். இன்னும் சார்ஜ் கூட எடுக்கல. கமிஷனர் ஆஃபீஸ் போய்ட்டு சார்ஜ் எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன்டா. இன்னைக்கு நைட் எனக்கு நம்ப வீட்ல தான் டின்னர் போதுமா?” என்றவனின் பார்வை முழுவதும் அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தவளிடமே தான் இருந்தது.

சந்திரவதனா என்ற பெயருக்கு ஏற்றார் போலவே அழகிய நிலா முகம். கண்கள் அந்த கடலை விடமும் ஆழமானது. அதில் கொட்டிக்கிடக்கும் ரகசியங்களும் அலாதியானது. கண்களை விரித்து அவள் உதிர்க்கும் புன்னகை அவனுக்கு ரொம்பவே பிடித்தமானது. வில்லென்று வளைந்து நிற்கும் புருவங்களுக்கு இடையில் அழகாக வீற்றிருக்கும் ஒற்றை வெள்ளை கல் பொட்டு. அது இல்லாமல் அவளை பார்ப்பதே அரிது என்னும் அளவிற்கு அவள் எப்போதுமே புருவங்களுக்கு இடையில் வைக்கும் அந்த சிறு பொட்டில் மாட்டிக் கொண்டு தவித்தது அவன் இதயம். இதழ்களை கடித்துக் கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தவளை மீண்டும் சிரிக்க வைக்கும் வழி கிட்டாமல் தவித்தான்.

எப்போதுமே இப்படி தான். அவள் வாயாடினால் கடுப்பாக இருக்கும். அவளிடம் ஏட்டிக்கு போட்டியாக பேச வேண்டும் என்று தோன்றும் அவளை அழ வைக்க அவன் கைகள் பரபரக்கும் ஆனாலும் அதுவே அவள் முகம் சிறிதாக சுருங்கி விட்டாலும் கூட அதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. மீண்டும் எதையாவது செய்து அவனையே முட்டாளாக்கியாவது அவளை சிரிக்க வைத்தே ஆக வேண்டும் அவனுக்கு. முழுதாக இரண்டு வருடங்களுக்கு பிறகு அவளை மீண்டும் பார்க்கிறான். அதுவே அவளிடம் தெரிந்த மாற்றங்களை எண்ணி பார்த்து எண்ணி பார்த்து வியக்க வைத்துக் கொண்டிருந்தது அவனை. அதில் இப்படி முகம் சுணங்க அமர்ந்திருந்தவளை என்ன செய்யலாம் என்பதை போல தான் பார்த்திருந்தான்.

மேலும் ஒரு அரைமணி நேரமாக அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் அமர்ந்திருந்தாலும் அந்த உணவகத்திற்கு வந்து போனவர்கள், அங்கே அமர்ந்திருந்தவர்கள், அங்கே இருந்த அலங்கார பொருட்கள் மேலும் மற்றவற்றைகளை தான் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சந்திரா. இவர்களை சிறிதும் கூட அவள் கண்டுக் கொள்ளவே இல்லை. அப்படி தான் யுகேந்திரன் நினைத்து பரிதவித்தான். ஆனாலும் உண்மையில் அவன் பேசுவதை தான் அவள் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் வார்த்தைகள் அவள் கருத்தை சென்று சேரவில்லையே ஒழிய அவன் குரலை ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

விடைபெறும் நேரத்தில் அச்சுதன் வேண்டும் என்றே அவன் மனைவியை அழைத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து புறப்பட அவர்களுக்கு பின்னாலே எழுந்து நின்ற சந்திராவை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான் யுகேந்திரன். அவனை பார்க்காத பாவனையில் தன் கைப்பையை எடுத்தவள் அங்கிருந்து நகர முயலவும் அவள் புடவை தலைப்பை பற்றி இழுத்தான் யுகேந்திரன். அவன் இழுப்பதை உணர்ந்து வேகமாக அவள் திரும்பி பார்க்க முயலவும், “வேண்டாம்! இங்க எல்லாரும் பார்ப்பாங்க. திரும்பாத நிலா…” என அவள் பின்னால் நின்றுக் கொண்டு முனங்கியவன் மற்றவர்கள் அறியாமல் தான் அவள் புடவையை பிடித்திருந்தான்.

“உங்க அண்ணன் பேசினா சும்மா இருப்பியா நீ? நீ யார்டா என்னை கேக்குறதுக்கு நான் என் புருஷனை எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேன்னு சொல்ல மாட்டியா?” என அவள் காதோடு கிசுகிசுப்பான குரலில் வினவியவன், “சொல்லுங்க மிசெஸ். யுகேந்திரன். என்னை எப்படி கூப்பிடவும் உனக்கு உரிமை இருக்குனு சொல்ல மாட்டியா நிலா. ஹ்ம்ம்… சொல்ல கூடாதா?” என்றவனின் குரல் ஏனோ எதையோ அவளிடம் எதிர்பார்த்து கரைந்து தேய்ந்தது. “மிஸ் யூ நிலா… உன்னை ரொம்ப மிஸ்ஸ்ஸ் பண்ணினேன்.” என அவள் பதிலை எதிர்பார்த்து ஒரே ஒரு வினாடி நின்றவன் அது கிடைக்காது என்பதை உணர்ந்து அங்கிருந்து அவளை பார்க்காமல் கிளம்பிவிட்டான்.

– தொடரும்