பிம்பம் 16+ / அத்தியாயம் – 9

                பிம்பம் 9

“அக்கா, பாப்பா பசில அழறா பாரு”

ஹரிணி குழந்தையைத் தொட்டிலில் இருந்துஎடுத்துத் தர, எழுந்து அமர்ந்து மகளுக்குப் பாலூட்டிய சாயாவின் முகத்தில் சோர்வும், வருத்தமும் தெரிந்தது.

“சும்மா நடந்ததையே நினைச்சுக்கிட்டு உடம்பை கெடுத்துக்காதக்கா. மாமா வர்ற நேரமாயிடுச்சு. நீ இப்படி இருக்கறதைப் பார்த்தா, அதுக்கு வேற ஏதாச்சும் சொல்லப்போறார். மாமா சொல்றதுக்கு ஏத்த மாதிரிதான் நீயும் செய்யுற”

ஹரிணி சொல்லி வாய் மூடுவதற்குள், அறைக் கதவைத் திறந்து கொண்டு சசிதரன் உள்ளே வரவும், ஹரிணி, மரியாதைக்கு இரண்டு நிமிடம்போல் அங்கிருந்துவிட்டு, வெளியேறினாள்.

மனைவியைப் பார்த்தவன் “சாயா, இப்ப உன் பிரச்சனை என்ன? எதுக்கு இப்படி சோகமா மூஞ்சியை வெச்சிருக்க?”
“…”

“இன்னும் ரெண்டு நாள்ல நம்ம குழந்தைக்கு பேர் வைக்கற ஃபங்ஷனை வெச்சுக்கிட்டு நீ இப்படி இருந்தீன்னா நல்லாவா இருக்கு?”

சாயா அமைதியாக இருக்க, சசி “ஏதாவது பேசுடீ” என்றான்.

“சோகமெல்லாம் இல்லீங்க. டயர்டா இருக்கு. அவ்வளவுதான்”

இமைக்காமல் அவளையே பார்த்தவன் “அப்படி இருந்தா நல்லது. நான் இப்ப ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வரேன். டேக் கேர்” என்று குனிந்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, அறையிலிருந்து வெளியேறினான்.

ஹரிணி மீண்டும் அறைக்குள் வந்து பார்த்தபோது, குழப்பமும் கவலையுமாக அமர்ந்திருந்தாள் சாயாலக்ஷ்மி.

இன்றோடு குழந்தை பிறந்து பதிமூன்று நாட்களாகிறது. பதினாறாம் நாள் பெயர் சூட்டு விழா வைத்திருக்கிறார்கள்.

ஹரிணிக்கு செமஸ்டர் பரீட்சை நடந்து கொண்டிருந்ததால், குழந்தை பிறந்த ஐந்தாம் நாள்தான் அவளால் வர முடிந்தது. நல்ல வேளையாக இரண்டு வாரங்களுக்கு கல்லூரியே விடுமுறை அளித்திருந்தது. அவள் வரும்வரை சாயா மருத்துவமனையிலேயே இருந்தாள்.

அன்று இரவு அவசரமாக ஃபோன் வந்து எஸ்டேட்டிற்குள் சென்ற கணவனைத் தொடர்பு கொள்ள முடியாது, ஸ்ரீதரனை அழைத்து ஹாஸ்பிடல் சென்றவளுக்கு, குழந்தை பிறந்த பிறகு வந்த சசிக்கு அவள் அவனது தம்பியை அழைத்தது பிடிக்கவில்லை என்பது வரையில் புரிந்தது. ஆனால், ஏன் என்றுதான் புரியவில்லை.

யானை துரத்திய மூன்று பெண்களில் இருவர் மீட்கப்பட, ஒரு பெண் இறந்திருந்ததில், தொழிலாளர்கள் பிரச்சனை, போலீஸ் கேஸ், வன இலாகாவின் பாதுகாப்பு விதிமுறை தொடர்பான மராமத்து பணிகள் என எல்லாப் பக்கமிருந்தும் சுமைகள் அழுத்த, சசிதரனால் இரண்டு மாதமாக சாயாவின் அருகிலேயே இருந்தும் பிரசவத்தின்போது அவளை கவனிக்க முடியாமல் போனதும், அதைவிட அந்த நேரம் அவள் உதவிக்கு ஸ்ரீதரனை நாடியதையும் தாங்க முடியாமல் போனது.

ஸ்ரீதரனிடம் எதுவும் பேசாமல், அவனைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்றவன், சற்றுப் பொறுத்து தன்னை சமாளித்துக்கொண்டு, திரும்பி வந்து, பிரசவித்த மனைவியிடம் தன் கோபத்தைக் காட்டாமல் பேசினான். குழந்தையைக் கையில் வாங்கியவன் ‘பயமா இருக்கு’ என உடனே திருப்பிக் கொடுத்துவிட்டான்.

கடை திறந்ததும் சாக்லேட் வரவழைத்து ஹாஸ்பிடல், வீடு, எஸ்டேட் மற்றும் டீ ஃபேக்டரி என விநியோகித்துக் கொண்டாடியவன், எஸ்டேட் பிரச்சனை ஒரு புறம், பிரசவித்த மனைவி ஒருபுறம் என அலைந்தான்.

தன்னிடம் சசி காட்டும் அலட்சியத்தை ஸ்ரீதரன் உணர்ந்தே இருந்தாலும், அண்ணனின் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டதால், அதைப் பொருட்படுத்தாமல், மறுநாளும் ஹாஸ்பிடலுக்கு வந்தான்.

பிரசவித்த சாயாவுக்கு தேவையானதைப் பற்றி சசிதரனுக்கு இல்லாத புரிதல், ஸ்ரீதரனுக்கு இருந்தது. குறைந்தபட்சம் “என்னண்ணி வேணும்?” என்று கேட்கவாவது செய்தான். சசிதரனுக்கு அதற்கான நேரம், புரிதல், மனது மூன்றுமே இல்லை.

சசியின் மனது, தான் இருந்து பார்க்க வேண்டிய, தன் பிள்ளை பிறக்கும் தருணத்தைத் தவற விட்டதிலும், தன்னை தொடர்பு கொள்ள முடியாததால் சாயா ஸ்ரீதரனை அழைத்ததிலும், குழந்தையின் தந்தையான தன்னை வெளியே போகச் சொன்ன அந்த நர்ஸ், ஸ்ரீதரனை உள்ளே அழைத்ததிலும் எழுந்த ஆத்திரத்திலும் இயலாமையிலும், எதிர்ப்பட்ட, படாத அனைவரிடமும், அவனது ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட அந்த யானைகளிடமும் கூட கண் மூடித்தனமான கோபத்தில் இருந்தான்.

ஐந்தாம் நாள் காலை பத்து மணிபோல் ஹரிணி வரவும், அன்று மதியமே சாயாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். அன்று மாலை சாயாவையும் குழந்தையையும் பார்க்க மருத்துமனைக்கு வந்த ஸ்ரீதரன், நேரே வீட்டுக்கு வந்தான்.

ஸ்ரீதரனது கார் சத்தமும், அதன் பின்னாலேயே ஏதோ ஒரு மினி ட்ரக்கின் சத்தமும் கேட்டது.

சாயாவும் குழந்தையும் மேலே தூங்கிக்கொண்டு இருக்க, ஹரிணி சாயாவுக்கு குடிப்பதற்கு சூடாக ஏதாவது வேண்டும் என வனிதாவிடம் கேட்டாள்.

வனிதா ‘இப்பதான் பால் வெச்சிருக்கேன். பத்து நிமிஷத்துல தரேம்மா’ என்றதால் ஹரிணி ஆஃபீஸ் அறையை ஒட்டிய பெரிய டைனிங்கில் நின்று கொண்டு, அங்கிருந்த பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்கள், ஓவியங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு காத்திருக்கும்போது, ஸ்ரீதரன் வீட்டுக்குள்ளே நுழைவது தெரிந்தது.

ஸ்ரீதரன் உள்ளே வர, பின்னாலேயே இரண்டு ஆட்கள் நல்ல வேலைப்பாடுடன் கூடிய வர்ணம் தீட்டப்பட்ட, அழகானதொரு மரத் தொட்டிலை தூக்கிக் கொண்டு வந்து ஹாலில் வைத்தனர்.

வாயில்புறத்தில் இருந்த அலுவலக அறையில் தன் லேப்டாப்பில் மூழ்கி இருந்த சசிதரன், சத்தம் கேட்டு வெளியே வந்து ஸ்ரீதரனையும் தொட்டிலையும் பார்த்ததும் கடுமையான குரலில் தம்பியை அங்கே அழைத்தான்.

காத்திருந்த நேரத்தில் வேண்டுமென்று இல்லாவிட்டாலும், வெளியில் வந்து அழைத்த சசிதரனின் முகத்தில் வழிந்த வெறுப்பிலும் கசப்பிலும் அதிர்ந்த ஹரிணி, அவர்களின் பேச்சை முழுமையாகக் கேட்க நேர்ந்தது.

“சாயாக்கு நீ எதுவும் வாங்கித் தர வேண்டாம்னு உனக்கு எவ்வளவோ தரம் குறிப்புக் காட்டியாச்சு. என் நேரம், என்னால டெலிவரி டயத்துல அவ கூட இருக்க முடியலை. அவளுக்கு என்ன தேவைன்னு நான் பாத்துக்கறேன். சாயா சொன்னதுக்காகதான் நீ இங்க வர்றதையே நான் சகிச்சுக்கறேன். அண்ணி அண்ணின்னு குழையடிக்கறதை மொதல்ல நிறுத்து”

“ஏண்ணா இப்படி பேசற, சாயாண்ணி… ” என்றவனை கை காட்டி நிறுத்தச் சொன்ன சசிதரன் “நான் சொல்றதை சொல்லிட்டேன். என்னை பேச வைக்காத”

“கொஞ்ச நாளா ஒழுங்கா பேசுறியேன்னு நினைச்சேண்ணா. திரும்பவும் தொடங்கிட்ட. சரி, நான் பாப்பாவையும் அண்ணியையும் ஒரு முறை பாத்துட்டுப் போயிடறேன்”

“பாரு, அப்படியே அப்பன் புத்தி. அந்த இன்பசேகரனுக்குப் பொறந்தவன்தானே நீ? அவன் எப்படி எங்கம்மாவை அண்ணி அண்ணின்னே சீரழிச்சானோ, நீயும் அப்படியே…”

“ச்சீ, நிறுத்து. இதுவா உன் எண்ணம்? இந்த நினைப்புலயா ஆறு வயசுல இருந்து அம்மா அப்பா இல்லாம இருக்கற என்னை வெறுக்கற? எனக்கு ரத்த சம்பந்தம்னு இருக்கறதே நீ மட்டும்தான்ற ஒரே காரணத்துக்காகத்தான், சின்ன வயசுல இருந்து நீ என்னை என்ன சொன்னாலும், செஞ்சாலும் பொறுத்துக்கிட்டேன்”

“என்னடா, ஓவரா பேசற?”

‘தன்னை மீறி எங்காவது கத்திவிடப் போகிறோமோ?’ என்ற பயத்தில், துப்பாட்டாவை வைத்து தன் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டிருந்த, ஹரிணிக்கு, யாரோ, யாரையோ பளாரென அறையும் ஓசை கேட்டது.

“இதுக்கு ஒரு நாள் ரொம்ப வருத்தப்படுவண்ணா. உனக்கு இன்பசேகரன் சித்தப்பா மேல எவ்வளவு கோபமோ, அதே அளவு ஆத்திரம்தான் எனக்கும். இப்ப நீ சொன்ன பழியையும், பேசினதையும், அடிச்சதையும் சேர்த்தா, உனக்கு எவ்வளவு பாதிப்போ, அதைவிட அதிகம் எனக்கு. ஆனா நடந்து போனதையே நினைச்சுக்கிட்டு இருக்கறதால என்ன கிடைக்கப்போவுது? நான் இனிமே இங்க வரலை. ஆனா, எதையாவது தப்பா புரிஞ்சிக்கிட்டு அண்ணியை…”

“ஏய், அவ எம்பொண்டாட்டிடா. இன்னொரு வார்த்தை அவளைப் பத்திப் பேசின, பாரு. கெட் அவுட் ஐ ஸே”

வேகமாக வெளியே நடந்த ஸ்ரீதரனிடம் “நீ கொண்டு வந்த தொட்டிலையும் தூக்கிக்கிட்டு இடத்தைக் காலி செய்”

“அது நீயும் நானும் படுத்திருந்த தொட்டில்தான். அந்த வீட்ல கொஞ்சம் ரிப்பேரா கிடந்ததை சரி செய்து கொண்டு வந்தேன். நான் வாங்கிட்டு வரலை” என்றவனது கார், அடுத்த இரண்டாம் நிமிடம் சீறிக் கொண்டு கிளம்பியது.

பயத்திலும் அதிர்ச்சியிலும் நெஞ்சு விதிர்க்க, கோத்தகிரியின் குளிரிலும் வியர்த்த ஹரிணிக்கு மனம் நிறைய கேள்விகளும் யூகங்களும்.

அன்றொரு நாள் தாயம்மா யாரிடமோ பேசியதைக் கேட்க நேர்ந்தது, நினைவுக்கு வந்தது. சசிதரனின் கோபம் ஸ்ரீதரனின் வேதனை என இருவரது குரலிலுமே ஹரிணிக்கு நேர்மைதான் தெரிந்தது.

‘சசிதரன் மற்றும் ஸ்ரீதரனின் தாய் தவறானவரா?’ அவர்களது பேச்சில் இருந்து அந்த இன்பசேகரன் என்பவர், அவர்களது சித்தப்பா என்று புரிந்தது. இப்போது அவர் எங்கே? அவரும் உயிருடன் இல்லையா?’

‘ஸ்ரீதரனின் பிறப்பைப் பற்றி சசிதரன் சொன்னது உண்மையாகவே இருந்தாலும், அப்போது சசிதரனும் சிறுவன்தானே?
அவனுக்கு எப்படித் தெரியும்?’

இருள் சூழ்த்து இன்னும் விளக்குகள் ஏற்றப்படாத அந்த அந்திமாலைப் பொழுதின் இருளும், மலைக் குளிரும், மெலிதான மழையும் சேர்ந்து, அந்த பெரிய வீடே குற்றங்களும் ரகசியங்களும் நிறைந்து, ஹரிணிக்கு அச்சத்தைத் தருவது போல் இருந்தது.

‘ஒருவேளை மாமா, அக்காவை சந்தேகப்படறாங்களோ?’ என்ற நினைவே அவளுக்குப் பிடிக்காமல், மறுப்பாகத் தலையை ஆட்டிக் கொண்டாள். இப்பவும் சசிதரன் மனைவியைக் குறை சொல்லவில்லை. மேலும், சசியின் ஸ்ரீதரன் மீதான வெறுப்பு, இன்று நேற்று வந்தது அல்ல, என்பதைத்தான் அவன் வாயாலேயே கேட்டு விட்டாளே.

”ஒருவேளை இன்பசேகரன் யாருன்னு சாயாக்காவுக்கு தெரிஞ்சிருக்குமோ?’ என்று எண்ணியவள் வனிதாவின் “பாப்பா, இந்தாங்க ஹார்லிக்ஸ். அம்மாக்கு ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு கொடுக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க” என்ற குரலில் திரும்பி
“சரிங்க ஆன்ட்டி” என்றவள், வேகமாக மாடி ஏறி விட்டாள்.

தான் கேட்டதனைத்தையும் தன் அக்காவிடம் சொல்லிவிடும் வேகத்தில் மேலேறி வந்த ஹரிணி, எழுந்து அமர்ந்து, குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டு இருந்தவளைப் பார்த்ததும், அந்த நிலையில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியானாள்.

அன்று போன ஸ்ரீதரனை அதன்பின்னே காணவில்லை. குழந்தையை குளிக்க வைக்க வருகையில் ஒருமுறை வனிதாதான் “ஸ்ரீதர் தம்பி எங்கயோ போயிருக்காரு போலம்மா. நம்ம சரவணன் வேலை செய்யப் போய்ட்டு, வீடு பூட்டிக் கிடக்குன்னு திரும்பி வந்திட்டான்” என்றாள்.

அதைக் கேட்ட சாயா பலமுறை ஃபோன் செய்து பார்த்தாள். ஸ்ரீதரன் எடுக்கவில்லை. அவள் புலம்பிய புலம்பலில் இரண்டு நாளைக்கு முன்புதான் ஹரிணி “அக்கா, நீ ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்தன்னைக்கு அவர் இங்க வந்திருந்தாரு. மாமாக்கும் அவருக்கும் ஏதோ சண்டை போல. அவரு கோவமா வெளில போய்ட்டாரு” என்று பாதி உண்மையைச் சொன்னாள்.

மருத்துவ மனையில் இருந்து வீடு வந்த மறுநாள் காலையில் தாயம்மா வந்து குழந்தையைப் பார்த்தார். அப்போது சசிதரன் வீட்டில் இல்லை. “சாயாம்மா, குழந்தை கிட்ட யாரையும் விடாதீங்க. திருஷ்டி பட்டுரப் போகுது” என்றார். கீழே சென்றிருந்த ஹரிணி படியேறி வருகையில், “விதியை யாரால மாத்த முடியும்?” என்று தாயம்மா முணுமுணுத்துக்கொண்டே கீழே செல்வதைக் கண்டாள்.

அடுத்த இரண்டு நாட்கள் விழாவிற்கான தயாரிப்பில் செல்ல, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடியாமல், ஹரிணியையும் ஆலோசனையில் சேர்த்துக் கொண்டனர்.

சாயா “நான் சொன்ன பேரை எல்லாம் நீங்க நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்க. நீங்களே முடிவு செய்ங்க. இல்லாட்டி, பெரியவங்க பேரை..”

சசிதரன்”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு நம்பிக்கை கிடையாது. வர்ஷாதான் ஃபைனல்” என்று எழுந்து சென்றுவிட்டான்.

“இதுக்கு என்னை ஏன் கேக்கணும்?” என்றவளை சிரிப்போடு பார்த்த ஹரிணிக்கு சசிதரன் தன் அம்மாவின் மேல் அவ்வளவு பெரிய பழியை சுமத்தி இருக்க, அவரது பெயரை வைக்க எப்படி ஒத்துக் கொள்வான்? என்ற சிந்தனை ஓடியது.

“விடுக்கா, வர்ஷாவே நல்லாதானே இருக்கு”

“உனக்குப் பிடிச்சிருக்கா? நான்
அம்முன்னுதான் கூப்பிடப்போறேன்’ என்றாள் சாயா.

சசிதரன் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்க, விழா நன்கு நடந்தது. குழந்தையைப் பார்த்த அனைவரும் குழந்தை சாயாவையே உரித்து வைத்திருப்பதாகச் சொன்னதில் சாயாவுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

குழந்தைக்கு இருபது நாட்களாகிவிட, ஸ்ரீதரனையும் காணாமல், வேலை விஷயமாக தேநீர் பயிரிடுவோர் சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம் ஊட்டியில் நடக்கவிருந்ததால், சசிதரன் அதற்கான வேலைகளில் பிஸியாக இருந்தான்.

“உன் காலேஜ்ல சொல்லி, . இன்னொரு பத்துநாள் இருந்துட்டுப் போக முடியுமா ஹரிணி?” என்றான்.

தன் பேராசிரியரிடம் பேசி அனுமதி வாங்கியவள் ” மெடிகல் சர்ட்டிஃபிகேட் வேணுமாம் மாமா” எனவும் “டன்” என்றான்.

இப்போது இவர்களது படுக்கை அறையில் சாயாவுடன் ஹரிணி படுத்துக் கொள்ள, சசிதரன் அவனது ரூமில் படுத்துக் கொண்டான்.

அன்று முன்னிரவில் இருந்தே, பால் கூட குடிக்காமல், நன்றாகத் தூங்கியது குழந்தை, நேரமாக ஆக, சாயாவுக்கு பால் கட்டிக் கொண்டு விட்டது.

மார்பகங்கள் கனத்து, அவளது கை பட்டாலும் , அசைந்தாலும் கூட வலி உயிர் போயிற்று. லேசான ஜுரமும், குளிரும் இருந்தது. இதை சசியிடம் சொன்னால் ” முன்னாடியே சொல்றதுக்கென்ன?” என்பான்.

பால் கட்டி இருத்த நிலையில் பசிக்கு அழுத குழந்தையால், பசியாற முடியாமல், குழந்தை வீறிட்டது.

இளஞ்சூட்டில் இருக்கும் வெந்நீரால் ஒத்தடம் கொடுத்து, கட்டிகளை இளக்கி, வெகுநேரமாகக் கட்டி இருந்த பாலைப் பம்ப் செய்தும், கையால் பீய்ச்சியும் வெளியேற்ற உதவினாள் ஹரிணி.

“சின்னப் பொண்ணா இருந்தாலும், நீ நர்ஸிங் படிக்கறதால இதெல்லாம் உனக்குத் தெரியுது ஹரிமா. எனக்கு மொத நாள் அம்முவைத் தூக்கவே பயமா இருந்துச்சு தெரயுமா?” என்றாள் சாயா.

சசிதரன் கூட, அவள் வந்த மறுதினமே “நீ எவ்வளவு அழகா குழந்தைக்கு வலிக்காம தூக்கற ஹரிணி” என்று சிலாகித்தான்.

மூன்று, நான்கு மணி நேரம் அவஸ்தைப்பட்ட பின் ஓரளவு சரியாகி, சாயா குழந்தைக்கு வயிற்றை நிரப்பித்தூங்க வைத்தவள் தானும் உறங்கிப்போனாள். வெளியில் நல்லமழை பெய்தது. நாலைந்து மணி நேர போராட்டத்திற்குப் பின், களைத்திருந்த ஹரிணியும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

சாயாவுக்கு இன்னும் உடலின் கதகதப்பு குறையவில்லை. நல்ல குளிராக இருந்தது. தூக்கத்தில் போர்வையை தலைவரை போர்த்தி இருந்தாள். இரண்டு தனங்களும் கனக்க, போட்டிருந்த உடை நனைந்ததும், குழந்தை வர்ஷாவை மார்போடு அணைத்து, பாலூட்டத் தொடங்கினாள்.

பிறந்து சில நாட்களே ஆன அந்த சிசு தன் செப்பு வாயால், தான் கற்றக் கொண்ட இரண்டு வாழ்க்கைத் திறன்களில் ஒன்றான பாலருந்தும் பணியை செய்யத் தொடங்கியது.

யாருடைய கைகளோ, சாயாலக்ஷ்மியிடம் பசியாறிய குழந்தையை வெடுக்கென்று பற்றி இழுத்தது. பல் இல்லாத புதுக் குழந்தை என்றாலுமே நல்ல அழுத்தமாக பாலை உறிஞ்சிக் கொண்டிருந்த குழந்தையைப் பிடுங்கியதில், சாயாவுக்கு வலி உயிர் போயிற்று.

வலியை மீறி, தன்னிடமிருந்து குழந்தையைப் பிடுங்கியது யார் என, ‘யாருடா நீ? என் அம்முவை எங்கிட்ட கொடுத்துடு’ என்று கத்திக்கொண்டே , குழந்தையைச் சுமந்து கொண்டு வேகமாக ஓடிய அந்தக் கைகளின் பின்னே சென்றவளுக்கு, முதலில் வெறும் கைகளாக மட்டுமே தெரிந்ததில் இருந்து ஸ்ரீதரனின் வெளிர் மஞ்சள் நிற சட்டையை அணிந்திருந்த அந்த உருவம் மெதுவே உருப்பெற்று, மெல்லத் திரும்ப, அங்கே சசிதரனின் முகம் தெரிந்தது.

‘அம்மு’ என்று அலறிக் கொண்டே தரையில் விழுந்தாள், சாயாலக்ஷ்மி.