பிம்பம் 16+ / அத்தியாயம் – 8
பிம்பம் 8
சாயாலக்ஷ்மிக்கு வளைகாப்பு முடிந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. அவளது உடல்நிலை, தூக்கமின்மை, கணவனின் எதிர்பார்ப்புகள், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வரும் கனவுகள் என எல்லா பக்கமும் அவளை அழுத்தியதில்
சோர்ந்து காணப்பட்டாள்.
ஸ்ரீதரன் கூட “உடம்புக்கு ஏதும் செய்யுதா அண்ணி?” என இரண்டு மூன்று முறை நேரிலும், குரல் சோர்வை வைத்தே ஃபோனிலும் கூட கேட்டுவிட்டான்.
சில முறை உட்கார, எழ சிரமப்படும் சாயாவைப் பார்த்தவன் “என்ன அண்ணி செய்யுது?” என்றான். தாய், சகோதரி என நெருக்கமான பெண் உறவுகள் யாரையுமே பார்த்திராத ஸ்ரீதரனுக்கு, தன்னிடம் இயல்பாகவும், அன்பாகவும் பேசிய சாயா தாய்மை அடைந்ததில் மகிழ்ச்சியாகவும், அவளது கர்ப்பகால அவஸ்தைகளில் கவலையாகவும் இருந்தது.
“முதுகு வலிக்குது. இப்ப இப்படிதான் வலிக்கும்னு டாக்டர் சொன்னாங்க”
ஸ்ரீதரன் அடுத்த முறை வந்தபோது நான்கு டென்னிஸ் பந்துகளும், மரத்தில் செய்யப்பட்ட உருண்டையான மஸாஜரும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தான். .
“எனக்கெதுக்கு தம்பி பந்து?”
“உங்க முதுகு வலிக்கு, இந்த பந்தை வெச்சு மஸாஜ் செஞ்சா சரியாகும்னு நெட்ல படிச்சேன். அதான் வாங்கிட்டு வந்தேன்”
அவன் தந்தபோது சசிதரனும் அங்கேயேதான் இருந்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. இரவில் அவள் அந்த மர உருளையை முதுகில் வைத்துத் தனக்குத் தானே ஓட்டிக் கொண்டாள். சில நிமிடங்களிலேயே கை சோர்ந்தவள், முயற்சியைக் கை விட்டு, சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
அதுவரை உதவிக்கு வராமல் பார்த்துக் கொண்டிருந்த சசிதரன், எழுந்து அருகில் வந்து அந்த பந்துகளையும், மஸாஜரையும் தூக்கிக் கீழே போட்டவன் சாயாவின் இடுப்பு, முதுகை கைகளால் அமுக்கினான்.
சாயாவிடம் “எதானாலும் என்னைக் கேளு சாயா” என்றவனின் ஆழ்ந்த குரலில் அவளுக்கு மனதோரம் சில்லிட்டது.
ஆனால், இவளாக எதுவும் கேட்காவிட்டாலும், இனிப்பு, பழங்கள் என எதையாவது வாங்கி வருவதும் நலம் விசாரிப்பதுமாகதான் இருந்தான் ஸ்ரீதரன்.
இப்போதுதான் இயல்பான பேச்சும் போக்குவரத்துமாக இருப்பவனிடம் எதையும் மறுத்துச் சொல்ல சாயாவுக்கு விருப்பமில்லை.
“ஏன் அண்ணி ஃபோன்ல உங்க குரலே ஒரு மாதிரியா இருக்கு, உடம்புக்கு ஏதும் செய்யுதாண்ணி?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நைட்ல சரியா தூங்க முடியலை. அதான் தம்பி”
இந்தப் பேச்சு நடந்து ஒரு வாரத்தில் ஸ்ரீதரன் ஒரு பெரிய்ய பாக்கெட்டுடன் வந்தான். சாயாவின் கையில் ஒரு சின்ன பாக்கெட்டைக் கொடுத்தான்.
“என்னங்க தம்பி இது?”
“இது ஸ்லீப்பிங் மாஸ்க் அண்ணி. இதை போட்டுத் தூங்க ட்ரை பண்ணுங்க”
“இதுல என்ன?”
“இது ஒரு ஸ்பெஷல் தலையணை அண்ணி. இதுக்கு ப்ரெக்னன்சி பில்லோன்னே பேராம்” என்று அந்தக் கவரை பிரித்துக் காட்டினான். ஆளுயரத்துக்கு ஆங்கில U எழுத்தின் வடிவில் இருந்த தலையணை/ மெத்தையை வெளியில் எடுத்தான்.
இவன் வாங்கி வருவது அவனது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை என்று ஸ்ரீதரனிடம் எப்படிச் சொல்வது என்ற நினைப்பு ஒரு பக்கம் மனதைப் பிராண்டினாலும், சாயாவுக்கு அந்த பிரம்மாண்டத் தலையணையைப் பார்த்ததும் வியப்பாகத்தான் இருந்தது.
சாயாவுக்கு ‘பணமிருந்தால் கைக்கெட்டும் தூரத்தில் எவ்வளவு வசதிகள் ? பணம் இருப்பவர்களுக்காகவே படைக்கப்படும் பொருட்கள்தான் எத்தனை?’ என்ற எண்ணம் எழுந்தது. அவள் வளர்ந்த சூழலில், பெண்கள் கர்ப்பமாவதும், முடிந்தவரை வீட்டு வேலை, வெளி வேலை என பார்ப்பதும், குழந்தை பெற்றுக் கொள்வதையும் பார்த்திருக்கிறாள்தான்.
அப்போது இயல்பாக, இயற்கையாக, சுலபமாகத் தெரிந்ததெல்லாம் இப்போது வேறு மாதிரி தெரிகிறது. ‘ஒருவேளை பணக்காரர்களின் குழந்தைகள் கருவிலேயே வசதிகளை எதிர்பார்ப்பார்களோ?’ என்ற கேள்வி எழவும் ‘சேச்சே, இது என் குழந்தை’ என்று சொல்லிக்கொண்டாள்.
ஸ்ரீதரன் கிளம்பிவிட்டான். மீனாவிடம் அந்தத் தலையணையை படுக்கை அறையில் கொண்டு போய் வைக்கச் சொன்னாள்.
இரவு ஏழு மணிக்கு வந்த சசிக்கும் அந்த தலையணை ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
“என்னடீ இது?”
“ப்ரெக்னன்சி பில்லோவாம்”
“ஸ்ரீதரனா?”
“… ஆமாங்க”
“அவங்கிட்ட எதுவும் கேக்காதன்னு சொன்னேன்ல?”
“…”
“என்ன?”
“தம்பி கிட்ட நான் எதுவும் கேக்கலைங்க…”
நீண்ட மௌனத்தின் பின் “இது என் குழந்தை. எதா இருந்தாலும் நீ எங்கிட்டதான் கேக்கணும். என் குழந்தைக்கு நான்தான் எல்லாம் செய்வேன். புரியுதா?”
கணவனின் உரிமையுணர்வும், எதையும் தன் விருப்பப்படிதான் செய்ய வேண்டும் என்ற அவனது எண்ணப்போக்கும் சாயாவுக்குத் தெரிந்ததுதான். ஆனாலும் அவன் கேட்டதும், அந்தக் குரலும் மனதை உறுத்தியது. அந்த தலையணை, மாஸ்க் எல்லாம் அவர்களது பழைய அறைக்குப் போய் விட்டது.
இரண்டு மூன்று நாட்கள் இதை நினைத்து வருந்திய சாயா, பிறகு, தன் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நிறைய குழந்தை வளர்ப்பு பற்றிய வீடியோக்கள், செய்திகள், Baby videos என்றே அழைக்கப்படும் குட்டிக் குழந்தைகளின் காணொளிகள் சுகப்பிரசவத்துக்கான முன்னேற்பாடுகள் என, இணையத்தில் தேடித்தேடிப் பார்த்தாள்.
பூவின் மென்மையுடன், மெத்து மெத்தென்று பால் சதையுடன் சிரிக்கும், அழும், உதடு பிதுக்கும், பெற்றோரின் மேல் புரளும், தூங்கும் பிஞ்சுக் குழந்தைகளின் வீடியோக்களில் மனம் மயங்காதவர் யார்?
அதுவும் எட்டு மாதக் குழந்தையை சுமக்கும் நேரம், சாயாவுக்கு, பார்க்கும் ஒவ்வொரு அழகுக் குழந்தையும், ‘தன் குழந்தை இப்படிதான் இருக்குமோ’ என்ற கற்பனையைக் கொடுத்தது.
சசிதரன், நீண்டநாளைக்குப் பிறகு, கோத்தகிரியிலேயே நடந்த தவிர்க்க முடியாத ஒரு திருமணத்திற்கு சாயாவையும் அழைத்துச் சென்றான். இப்போது அவர்கள் சாயாவுக்கும் நன்கு பரிச்சயமாகி இருந்ததால், மறுக்காமல் சென்றாள்.
ஆனால், அங்கு அவளைக் கண்ட பெரும்பாலானோர் அவளது சோர்வையும், வெளுத்திருந்த முகத்தையும் பார்த்து, விசாரித்ததோடு, சசிதரனையும் மனைவியை கவனித்துக் கொள்ளச் சொன்னார்கள்.
அந்த வார இறுதியிலும், திங்கள்கிழமையும் ராப்பகலாக ஆஃபீசிலேயே இருந்த சசிதரன், செவ்வாய்க் கிழமை காலை, வழக்கம்போல் ஆறுமணிக்கு அலாரம் அடித்ததும் எழுந்த சாயா, வாஷ்ரூம் சென்று வந்து சசிதரனை எழுப்பினாள்.
எப்போதும் அவளுக்கு முன்பே எழுந்து விடுபவன்
“தூங்க விடுடி, ப்ளீஸ்”
“மணி ஆயிடுச்சுங்க. நீங்க கிளம்ப வேண்டாமா? மழை வேற பெய்யுது”
“ம்ஹும். இன்னைலருந்து குழந்தை பொறக்கற வரைக்கும் வீட்டுல இருந்துதான் வேலை பார்க்கப் போறேன். தினமும் காலைல ஒருதரம், அப்புறம் இஷ்டம் போல ஒரு சடன் விஸிட் மட்டும்தான். ஏஜண்ட், கஸ்டமர் மீட்டிங் இருக்கற நாள்ல போவேன்”
“…”
“அப்புறம் இன்னைக்கு முதல் நாள்ங்கறதால, நான் தூங்கப்போறேன். நீயும் வந்து தூங்கு” என்று இழுத்துப் போர்த்திக் கொண்டான். சொன்னபடியே, காலையில் எட்டு மணிக்கு போய் எஸ்டேட், ஃபாக்டரி இரண்டிலும், அன்றைய வேலைகளை சொல்லி, பகிர்ந்தளித்து விட்டு வருபவன், அதன்பிறகு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்துக்கு வெவ்வேறு நேரத்தில் போவான்.
பெங்களூர், சென்னை, மும்பை என அவன் செல்ல வேண்டிய டூருக்கு முதல் முறையாக ஸ்ரீதரனை அனுப்பினான். அது எஸ்டேட், ஃபாக்டரியில் மட்டுமல்லாமல் வீட்டு வேலைக்காரர்கள் வரை வியந்து பேசும் விஷயமானது.
மீதமிருந்த நேரம் முழுவதும் சாயாவுடனேயே இருந்தான். அவர்களது அறையைத் தவிர சில நேரம் கீழ் ஹால், தோட்டம், மாடி வராந்தா என்று, அவன் போகும் இடங்களுக்கெல்லாம், அவளையும் இழுத்துக் கொண்டு போனான்.
அவளுக்கென இருந்த நேரமும் இப்போது சசியுடனே கழிந்தது. அவன் வீட்டிலேயே இருந்ததால், தாயம்மா, வனிதா, மீனா, மற்ற வேலையாட்கள் என யாருடனுமே சாயா, அவசியமான இரண்டொரு வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.
சாயாவுக்கு ஏதாவது வேண்டுமா, வாந்தி, தலைசுற்றல் இருக்கிறதா, ஏதாவது தேவையா என்று கேட்கவும், குடிக்க சூப், ஜூஸ், டீ, சாப்பிட பழங்கள் என ஏதாவது தரவும் மேலே வந்து, அப்படியே பொதுவாக ஏதாவது இரண்டு வார்த்தை பேசுவதும், நின்றுபோய், அவர்களுமே அழைத்தால் மட்டுமே மாடிப்பக்கம் வந்தனர்.
தாயம்மாவை சசிதரனே “விடுங்க தாயம்மா, சாயாவை நான் பாத்துக்கறேன். நீங்க மாடியேறி கஷ்டப்பட வேணாம்” என்றுவிட்டான்.
மனைவி பார்க்கும் குழந்தை வீடியோக்கள் சிலவற்றை அவளோடு சேர்ந்து பார்த்தவனது முகம் வழக்கத்தை விட கனிந்திருந்தது போல் தோன்றியது அவளுக்கு.
“உனக்கு குழந்தைன்னா ரொம்பப் பிடிக்குமா சாயா?”
“குழந்தைன்னா எல்லாருக்கும்தானேங்க பிடிக்கும்? அதுவும் இது நம்ம ….” சொல்ல வந்ததை சசியின் பார்வையில் பாதியிலேயே நிறுத்திவிட்டாள்.
இரவு, முதலில் தூக்கம் கண்களை சுழற்றவே, முதலில் தூங்கியவள், பிறகு முதுகு வலிக்கவும் எழுந்து அமர்ந்து கொண்டாள். சசி தூங்கி விட்டானென இவள் நினைத்திருக்க, “சாயா, நீ நம்ம குழந்தையை நல்லா பாத்துப்பதானே? வெறுத்துட மாட்டியே?”
சசிதரனின் கேள்வியில் அதிர்ச்சியடைந்தாலும், அவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை “பாத்துப்பேங்க” என்று சொல்லப் பணித்தது.
‘ஆனாலும் இவருக்கு என் மீது நம்பிக்கை இல்லையா?’ என்ற கேள்வியில் இரண்டு நாள் உழண்டாள்.
ஒரு வாரம் போல் வீட்டிலேயே இருந்த சசிதரனுக்கு, அதன்பிறகு பழைய ஒப்பந்தத்தை புதுப்பித்தல், புது வாடிக்கையாளர்களுடன் கான்ட்ராக்ட் என சந்திப்புகளும், அதற்கான அடிப்படை வேலைகளும் வரிசை கட்டி நிற்க, எந்நேரமும் பிஸியாக இருந்தான். சில நேரம் ஓரிரண்டு உதவியாளர்களை வீட்டிற்கே வரவழைத்து, கீழே இருந்த அலுவலக அறையில் வேலை செய்தான்.
ஒன்பதாம் மாதம் நிறைவுறும் நிலையில் இருந்த சாயா, எப்போதாவது ஹரிணியுடன் ஃபோன், டாக்டர் செக் அப், நடைபயிற்சி, சில நேரம் டிவி, சில நேரம் மொபைல் என்றிருந்தாள். அவ்வளவே. ஸ்ரீதரன் ஊரில் இருந்தால் வருவான்.
சாயாவுக்கு அந்தக் கனவு வந்து பத்து நாட்களுக்கு மேல் இருக்கும். பிரசவத்திற்கு டாக்டர் கொடுத்த கெடுவுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்த நிலையில், வயிறு கீழிறங்கி, நீர் கூட சிறிது வடிந்து, முகம் கருத்து இருந்தாள் சாயா.
டாக்டர் “எல்லாம் சரியா இருக்கு. வீட்ல லேடீஸ் யாரும் இல்லாததால கொடுத்த டேட்டுக்கு ரெண்டு நாள் முன்னாலயே வந்து அட்மிட் செஞ்சிடு சசி. நான் பாத்துக்கறேன்” என்றிருந்தார்.
சசிதரன் அதிசயமாக “சாயா, உனக்கு ஏதாவது சாப்பிடணுமா, இல்ல வேற ஏதாவது வேணுமா?” என்றான்.
“வேணாங்க” என்றாள் தயக்கத்துடன். சாயாவுக்கு மற்ற பயங்கள் அனைத்தும் பின்னுக்கு சென்று, பிரசவ பயம் மட்டுமே இருந்தது. ஹரிணி அருகில் இருந்தால் பரவாயில்லை என நினைத்தாள்.
“சும்மா சொல்லு சாயா. உனக்கு ஹரிணியை பாக்கணுமா? வரச்சொல்லட்டுமா?”
“குழந்தை பொறந்த பிறகு சொல்லலாங்க”
“ஓகே, உன் விருப்பம்”
இயற்கை எப்போதும் அதன் விருப்பப் படிதான் இயங்கும். அதனாலேயே அது இயற்கை. ஏற்கனவே, நினைத்தபடி மழை பெய்யும் நீலகிரியில் ஐப்பசி மாதத்தில் சீரான மழை பெய்யத் தொடங்கி இருந்தது.
தேயிலை பறிக்கும் வேலைக்கு மழை, வெயில் எல்லாம் கிடையாது. தொழிலாளர்களின் திறமையையும் வேகத்தையும் நம்பி இருக்கும் தொழில். ஆனால், கூலி என்னவோ அதிகம் கிடையாது என்பதாலேயே, பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள்தான்.
அந்த பரந்த ஜீவன் டீ எஸ்டேட்டில், அன்றிலிருந்து மூன்றாம் நாள் இரவு ஒன்பது மணிக்கு மேல், மூன்று பெண் தொழிலாளர்கள், அதில் இருவர் தாயும், மகளும், வேலை முடிந்து வீடு திரும்பவில்லை என இருவரது கணவர்களும், எஸ்டேட் செக்யூரிட்டி, மேனேஜர் என இரவு ஏழரை மணிக்குத் தொடங்கிய தேடல், சசிதரனை அடைந்தபோது இரவு ஒன்பதரை மணி.
மனைவியின் பதட்டத்தைப் பார்த்தவன் “இதெல்லாம் சகஜம்தான்டா. தைரியமா இரு. நான் சீக்கிரம் வந்துருவேன். போய்ட்டு கால் செய்யறேன்” என்று கிளம்பிச் சென்றான்.
எஸ்டேட் முழுவதும் சர்ச் லைட் வைத்து அங்குலம் அங்குலமாத் தேட, இரவு ஓன்றரை மணியளவில், இருளில், சரிவில், மழையில் மூன்று பெரிய யானைகள் நின்றிருந்தது. அந்தப் பெண்களைக் காணவில்லை.
காட்டிலாகா அதிகாரிக்கு ஃபோன் செய்து, அவர்கள் வருகையில், அதிகாலை நாலுமணி. மூன்று உயிர்கள், அதிலும் பெண்கள் என்பதால், போலீஸ் வந்திருந்தது.
தங்களது எஸ்டேட்டிற்கு வருகை தந்த யானைகளைப் பார்க்கும் ஆவலில், சொன்ன தேதிக்கு ஒரு வாரம் முன்பாகவே, வெளி உலகை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது சசிதரனின் குழந்தை.
திருமணமான இந்த பதிமூன்று மாதங்களில், பிரச்சனை என்று எதையும் பார்க்காததால், பெண்களைக் காணவில்லை என்றதுமே சாயாவின் கற்பனை தறி கெட்டு ஓடியது. ஒன்பதரை மணிக்கு எஸ்டேட்டுக்குள் போன கணவனின் ஃபோனை எதிர்பார்த்தவள், பன்னிரெண்டு மணிக்கு மேல் ஒரு வழியாக தூங்கி விட்டாள்.
அதி காலை மூன்று மணி இருக்கும், வயிற்றைக் கலக்கியதில் எழுந்து வாஷ்ரூம் போய் வந்தவளுக்கு, முதுகின் கீழ் பகுதியில் தொடங்கிய வலி, இடுப்பு, தொடை, அடிவயிறு என பரவி அடங்கியது.
சற்றே, வலி மட்டுப்பட, என்ன தோன்றியதோ ஈர நைட்டியை மாற்றிக் கொண்டாள். ஆயாசத்துடன் வந்து அமர்ந்து, தண்ணீரைக் குடிக்க, மீண்டும் வலி சொடுக்கியது. இப்போது அடுத்தடுத்து அதிகரித்த வலியில் பயந்து போனவள் கணவனுக்கு அழைத்தாள். பல முறை அழைத்தும் சசி ஃபோனை எடுக்காததில், வனிதாவின் மொபைலுக்கு அழைத்தாள்.
சாயாவின் குரலில் இருந்தே, நிலைமையைப் புரிந்து கொண்ட வனிதா வேகமாக வந்தாள். அதற்குள் மீண்டும் இரண்டு, மூன்று முறை சசிதரனை அழைத்தவள், பதில் இல்லாமல் போகவே, ஸ்ரீதரனை அழைத்து விட்டாள்.
நல்ல உறக்கத்தில் இருந்த ஸ்ரீதரன் பதட்டத்துடன் “இதோ வரேண்ணி” என்றான்.
அவன் வருதற்காக, கீழே சென்று வாயில் கதவை திறந்து வைத்துவிட்டு வந்த வனிதா, இரண்டு டவல்கள், இரண்டு உடை, நைட்டி, ஒரு ஃப்ளாஸ்க் வெந்நீர் என தனக்குத் தெரித்த வகையில் ஒரு பையில் தயார் செய்தபின் “கீழ போயிடலாம்மா” என்றாள்.
எழுந்து நின்ற சாயாவை இடி மின்னல் போல் வலி தாக்கியதில், பனிக்குடம் உடைந்தது. வனிதாவும் பயந்து போனவள், சாயாவை அமர வைத்து, சற்று அந்த இடத்தை சுத்தம் செய்வதற்குள் ஸ்ரீதரன் வந்துவிட்டான்.
உள்ளே நுழைந்தவனுக்கு எதுவும் புரியா விட்டாலும், சாயாவை கையில் தூக்கியவன் வனிதாவிடம் “ஆன்ட்டி, கீழ போய் கதவை ஃபுல்லா திறந்து, கார் கதவைத் திறங்க. நீங்களும் ஹாஸ்பிடல் வாங்க” என்று, கீழே இறங்கினான்.
வனிதாவும் ஏறிக்கொள்ள, காரைக் கிளப்பி, மழை பெய்ததால், கவனமாக காரை ஓட்டியவன், ஹாஸ்பிடல் போய் சாயாவை அட்மிட் செய்து காத்திருக்க, அதிக நேரம் அன்னையை சோதிக்காமல், அதிகாலை நாலரை மணிக்கு சாயாவுக்கும் சசிதரனுக்கும் பெண் குழந்தை பிறந்தது.
மாலையில், அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் இருந்து, கடைசியாக நடக்கத் தொடங்கிய அந்த தாயும் மகளும், அந்தப் பெண்ணும், மழைத் தூறலில், பின்னால் கேட்ட பூமி அதிர்வது போன்ற உணர்வில் திரும்பிப் பார்த்தவர்கள், யானைகளைக் கண்டு அதிர்ச்சியுடன் ஓடத் துவங்க, பின்னாலேயே துரத்திய ஒரு யானை, செருப்பு தடுக்கியதில் சற்றே தயங்கிய அந்த இளம்பெண்ணை, தன் துதிக்கையை நீட்டித் தூக்கிச் சுழற்ற, மன்ற இருவரும் தேயிலைச் செடியின் இடையிலேயே அமர்ந்து கொண்டனர்.
அந்தப் பெரிய யானையின் காலில் மிதிபட்ட பெண்ணைப் பார்த்த, அந்த பருவப் பெண் பயத்தில் அலற முற்பட, அவளது வாயைப் பொத்தினாள் தாய். மூன்று நான்கு மணி நேரத்தைக் கடந்தும் அந்த மூன்று யானைகளும் அங்கேயே நின்று கொண்டும் தேயிலைச் செடிகளை த்வம்சம் செய்து கொண்டும் இருந்தன.
தங்களைதான் தேடுகின்றனவோ என்ற பயத்திலேயே அமர்ந்திருந்தவர்கள், இதயமே வெளியில் வந்துவிடுமளவு தடதடப்புடன் மெதுவே நகர்ந்து, யானையிடமிருந்து சற்று தூரத்திற்கு நகர்ந்தனர். ஆனாலும், அவற்றைத் தாண்டி வெளியேற இயலாமல், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கேயே காத்திருந்தனர்.
எஸ்டேட்டில் இருந்த பிரச்சனையிலும் பதட்டத்திலும் சசிதரனுக்கு சாயாவுக்கு கால் செய்து, அவளையும் டென்ஷன் செய்ய விரும்பாமல் இருந்தவனால், பெய்த மழையில் நெட்வொர்க் இல்லாமல் போலீஸையே மேனேஜர் நேரில் போய்தான் அழைத்து வந்தனர். அங்கிருந்துதான் ஃபாரெஸ்ட் ரேஞ்சருக்கு தெரிவித்தனர்.
ஸ்ரீதரனை கூட அழைத்துப் பார்த்து விட்டான்.
ஐந்தரை மணியளவில், போலீஸும், வன இலாகா அதிகாரிகளும் நிலமையைக் கையில் எடுத்துக் கொள்ள, மனைவியைக் காண வீட்டுக்கு வந்தவனை வரவேற்ற தாயம்மா, ஸ்ரீதரனும் வனிதாவும் சாயாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றிருப்பதாகச் சொன்னதும், எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.
தங்கள் அறையில் இருந்த மனைவியின் மொபைலை எடுத்துப் பார்த்தவன், அவளது இருபதுக்கும் மேற்பட்ட அழைப்பைப் பார்த்துவிட்டு, அவனது மொபைலில் பார்க்க, தவறிய அழைப்புகளை காட்டவே இல்லை. மருத்துவ மனைக்கு விரைந்தான்.
சசிதரன் சென்றபொழுது, ரூமுக்கு வந்திருந்த சாயாவை, ஒரு நர்ஸ் குழந்தைக்குப் பாலூட்ட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சோர்வுடன் சாயாவின் அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சசிதரனை “சார், கொஞ்சம் வெளிய இருங்க” என்ற நர்ஸ், அவனுக்குப் பின்னே கதவருகில் வந்த ஸ்ரீதரனை “வாங்க சார், கேட்டதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா?” என்றதும், ஸ்ரீதரனைத் தாண்டிக் கொண்டு, ஆத்திரத்துடன் வெளியேறினான் சசிதரன்.