பிம்பம் 16+ / அத்தியாயம் – 7

                 பிம்பம் 7

“சாயா, கொஞ்சம் தண்ணி கொடேன்”

மேஜை நாற்காலியில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த சசிதரனின் குரலில், திவானில் அமர்ந்திருந்த சாயா எழுந்து சென்று, படுக்கையின் சைட் டேபிளில் இருந்த கண்ணாடி ஜாடியில் இருந்து, தம்ளரில் தண்ணீரை ஊற்றக் குனிந்தவளின் வயிற்றுப் பிள்ளையை யாரோ பிடுங்கிக் கொண்டு ஓடினார்கள்.

“ஐயோ, என் குழந்தை” என்று கத்திக்கொண்டே, எதையோ அல்லது யாரையோ துரத்திக் கொண்டு, பின்னே ஓடியவளுக்கு, அது ஒரு ஆண் என்று உணர முடிந்ததே தவிர, அதன் உருவமோ, முகமோ தெரியவில்லை.

கண்ட கனவின் தாக்கத்தில், கோத்தகிரியின் குளிரிலும், உடல் முழுவதும் வியர்வை பொங்க எழுந்து அமர்ந்தவளின் உடல் நடுங்கியது.

மனைவியின் அலறலைக் கேட்டு, தூக்கக் கலக்கத்தில் எழுந்து, உலுக்கிய சசிதரன் “சாயா, ஹேய் சாயா, என்னாச்சுமா, ஏன் அப்படி கத்தின?”

“ஒண்ணும் இல்லைங்க, ஏதோ கெட்ட கனவு” என்றாள். முகம் முழுவதும் பயம் அப்பிக் கிடந்தது.

இதுபோன்ற கனவு வருவது இது முதல் முறையல்ல. முன்பெல்லாம், எல்லோருக்கும் கனவுகள் வருவதுபோல்தான் சாயாவுக்கும் கனவுகள் வரும். அநேகரைப் போலவே, தூங்கி எழுந்ததும், அதை மறந்தும் விடுவாள். எப்போதாவது சில நேரம் மட்டுமே, கண்விழித்த பின்பும் கனவு ஞாபகத்தில் இருக்கும்.

ஆனால், கடந்த ஒரு மாதம், ஒன்றரை மாதமாகத்தான் இதுபோன்ற கனவுகள் வருகிறது. அதுவும் எப்படி? ஹெச்டி, த்ரீடியில் பார்ப்பது போன்ற தெளிவுடன் வருகிறது. அப்படியே வந்தாலும், முதுகுத் தண்டை சில்லிட வைக்கும், ஒரே மாதிரியான சில காட்சிகள் மட்டும் மறுபடி மறுபடி வர வேண்டிய அவசியமென்ன?

அது மட்டுமல்ல, இதுபோல் அந்த உருவம் சாயாவுக்கோ, குழந்தைக்கோ ஏதோ செய்ய முற்படுவதும், இவள் துரத்துவதும்தான், வெவ்வேறு சூழல்களில் வருகிறது.

சென்ற முறை செக்அப்பிற்கு சென்றபோது, சசிதரனை வெளியே அனுப்பி விட்டு, இவளை பரிசோதித்த சமயம், டாக்டரிடமும் கேட்டு விட்டாள்.

“கர்ப்ப காலத்துல இது போன்ற கனவுகள் சகஜம். நிஜம் போலவே கலர்கலரா, ரொம்ப ரியலிஸ்டிக்கா தெரியும். இங்கிலீஷ்ல இதை Vivid dreams னு சொல்லுவாங்க. கனவுல முதமுதல்ல குழந்தையைப் பாக்கறா மாதிரி, அம்மான்னு கூப்பிடறா மாதிரி நல்லதாவும் வரலாம். இல்ல சிம்ம சொப்பனம்னு சொல்லுவாங்கள்ல, அதுபோல பயமுறுத்தற night maresம் வரலாம். பயப்பட வேண்டாம். சரியாயிடும். எதைப்பத்தியாவது கவலையா இருந்தா கூட அப்படி கனவு வரும். சஷ்டி கவசம் படி. நிம்மதியா இரு. உன்சுகப் பிரசவத்துக்கு நான் கியாரண்டி” என்றார் டாக்டர் ரங்கநாயகி.

கவசம் ஒருபக்கமும், கனவு ஒரு பக்கமுமாக நாட்கள் நகர்கிறது. சாயாவும் கூகுள் செய்து கனவுகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு படித்தாயிற்று. அத்தனை விவரங்கள் கண்முன்னே விரிந்ததில், மிஞ்சியது குழப்பம் மட்டுமே.

கனவுகளைப் பற்றிய நம்பிக்கைகளும் கருத்துக்களும் ஆதிகாலம் தொட்டே மக்களிடம் புழங்கி வருகிறது. அந்தந்த மக்கள், வாழ்க்கை முறை, கலாச்சார சூழலுக்கு ஏற்ப, கனவுகளும், கனவுகளைப் பற்றிய கருத்துகளும் கூட பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது.

சாயாவுக்கு ‘கனவுகள் என்பது நம் ஆழ்மன ஆசையின், ஏக்கத்தின், பயத்தின், கவலையின், எதிர்பார்ப்பின் வெளிப்பாடே’ என்று எங்கோ படித்தது உண்மை என்றால், தனக்கு வரும் கனவின் பொருள் என்ன? குழந்தைக்கு ஆபத்து என்பதா? அதுவும் வயிற்றிலிருக்கும் குழந்தையை ஏன் பிடுங்க வேண்டும்? அதற்கு யார் குறி வைப்பார்கள்? இன்னும் இந்த உலகையே காணாத சிசுவுக்கு எதிரி யார்?

யார் அந்த உருவமில்லாத, முகமறியாத, நிழலுருவம்? அவன் ஒரு ஆண் என்பது வரையில் தெரிகிறது. ஆனால், யார்? ஏன்?

ஏனோ சாயாவின் நினைவில் இன்பசேகரன் என்ற பெயர் இடறியது. அது யாராக இருக்கும்? சசிதரனின் பெற்றோர்கள் இறந்துவிட்டால் என்ன? அவனுக்கு சொந்தம் என்று ஏன் ஒருவரும் இல்லை?

சாயாவுக்கு தீடீரென, தன் புகுந்த வீட்டைப் பற்றியோ, மாமனார், மாமியாரைப் பற்றியோ எதுவுமே தெரியாமல் இருப்பது குறித்து சஞ்சலமாக இருந்தது. வீட்டிலோ, எஸ்டேட், ஃபேக்டரி அலுவகங்களிலோ எங்குமே அவர்களது படம் இல்லை. ஸ்ரீதரனிடமும் இல்லை.
டீ எஸ்டேட்டிலும், தொழிற்சாலையிலும், டீ பாக்கெட்டுகளிலும் ஜீவனாக, ஜீவன் என்ற பெயராக, பெயரளவில் மட்டுமே இருக்கிறார், மாமனார்.

மாமியாரின் பெயர் பத்மா என்றதைத் தவிர, அவரை அவரது புடவைகளிலும், நகைகளிலும்தான் பார்க்கிறாள்.

சாயாவின் நினைவுகள் எங்கெங்கோ செல்ல “ஏய், எங்கடீ பாக்கற? இத்தனை வேர்க்குற அளவுக்கு அப்படி என்ன கனவு? எதுக்கு இவ்வளவு பயம்? நான் இங்கேயேதானே இருக்கேன்? படுத்து தூங்கு” என்று தண்ணீரை நீட்டினான், சசிதரன்.

‘இவளது தூக்கத்தில் வரும் கனவுக்கு அவனால் என்ன செய்ய முடியும்?’ என்று எண்ணியவள், பேசாமல் படுத்துக் கொண்டாள். மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த கணவனின் கையைக் கோர்த்துக் கொண்டதும், சசிதரனின் கை, தூக்கத்திலும், தன்னிச்சையாக மனைவியின் கையை தன் பிடிக்குள் எடுத்துக் கொண்டது.

விடிகாலை நாலரை மணி. சாயாலக்ஷ்மி சசிதரன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த தேன் கலரில் ப்ரௌன் பார்டர் போட்ட த்ரெட் வொர்க் செய்யப்பட்ட பட்டுப்புடவையை அணிந்துகொண்டு, சற்று தூரத்தில் நின்று கண்ணாடியில் பார்த்தாள்.

மேடிட்டிருந்த வயிற்றின் காரணமாக, புடவை சற்று மேலே தூக்கிக் கொண்டு நின்றது. சரி செய்து பின்னை போடுகையில் ‘இந்தப் பின் வயிற்றுப் பிள்ளைக்கு உறுத்துமோ?’ என்ற சந்தேகம் எழுந்தது.

பொட்டு வைத்து, முகத்தை சரி செய்தவள், வந்து கட்டிலில் சாய்ந்து கொண்டாள். தூக்கம் கண்களை சுழற்றியது. சாயாவுக்கு புடவை கட்டிக் கொண்டதே மிகவும் ஆயாசமாக இருந்தது. முகத்திலும் சற்று நீர் வைத்து உப்பி இருந்தது. நீர் கோர்த்திருந்த பாதங்களைக் கீழே வைத்தால், ஏதோ குஷனைக் காலில் கட்டிக் கொண்டது போல் மெத்தென்றது.

கடந்த பத்து நாட்களில் ஒரு திருமண வரவேற்பு, ஒரு தொழில்முறை விருந்து என சென்று வந்திருக்க, இது மூன்றாவது முறை. அவனது நண்பர்களில் ஒருவனுக்கு, கோவையில் திருமணம். இவளது மறுப்பை பொருட்படுத்தாது, எங்கு சென்றாலும், கங்காரு குட்டிபோல் அவளையும் கூடவே அழைத்துக் கொண்டு சென்றான்.

குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்த சசிதரன் உடையணிந்து தயாரானான்.

“ரெடியா சாயா? இந்தா இதை போட்டுக்கோ” என்று அவனது அம்மாவின் உடமைகள் இருந்த அலமாரியில் இருந்து ஒரு நகைப்பெட்டியை அவள் கையில் கொடுத்தான். வைரத்தோடும், சோக்கரும், வளையல்களும் இருந்தது.

சாயா கையில் வாங்காமல் ‘இது எதற்கு இப்ப ?’ என்பது போல் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன, நான் வேணா போட்டு விடவா?” என்றவன், அவளது கைகளைப் பிடித்து, அவள் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றி, இரண்டிரண்டு வளையல்களை அணிவித்தான்.

“குடுங்க, நானே போட்டுக்கறேன்” என்றவள் தோடையும், சோக்கரையும் தானே அணிந்து கொண்டாள்.

“அந்த செயின் வேணாம் சாயா, எடுத்துடு” எடுத்தாள். மனைவிக்குக் கை கொடுத்து எழுப்பினான். கண்ணாடியில் தெரிந்த அவளது உருவத்தைக் காட்டிய சசி “சாயா, எவ்வளவு கம்பீரமா, நேர்த்தியா இருக்க தெரியுமா?” என்றவன் சற்றே அவள் முன்னால் குனிந்து, அவளது கையை வேண்ட, சாயாவுக்கு வெட்கமாகி விட்டது.

கீழே இறங்கியதும் மீனா, சாயாவுக்கு ஹார்லிக்ஸும், சசிதரனுக்கு டீயும் கொண்டு வந்தாள். ஐந்து மணி இருக்கும். இருவரும் கிளம்பும் சமயம், உள்ளிருந்து வந்த தாயம்மாவின் பார்வை சாயாவுக்கு பயத்தைக் கொடுத்தது. அருகில் நின்றிருந்த கணவனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

அவளது பதட்டத்தையும், தானாகவே தன் கையை பிடித்ததையும் பார்த்த சசிதரன், சாயாவின் பார்வை போன திசையில் இருந்த தாயம்மாவைப் பார்த்தான்.

“என்ன, தாயம்மா, இந்தக் குளிர்ல இந்நேரத்துக்கே வந்திருக்கீங்க?” என்றவன் பதிலுக்குக் காத்திராமல், சாயாவுடன் வெளியேறி, காத்திருந்த காரில் அவளை முதலில் உட்கார வைத்து, பின் அவனும் அமர்ந்து கொண்டான்.

மாற்று உடைகளும், சாயாவுக்கு அவசியமான சில பொருட்கள், தண்ணீர், புளிப்பு மிட்டாய், பழங்கள் என, இரண்டு பைகளை மீனா காரில் ஏற்றினாள். கார் கிளம்பியது.

எப்போதும் ஏதோ, சசிதரனிடம் தனக்குதான் அதிக உரிமையும் அதிகாரமும் என்பது போல் நடந்துகொள்ளும் தாயம்மாவை, தனக்காக, கேள்வி கேட்ட கணவன் மேல் நன்றியும் நேசமும் மிக, அந்த இருள் பிரியாத, குளிர் காலையில், சாயாலக்ஷ்மி சசிதரனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

டிரைவர் முன் அவனுடன் பேசக்கூடத் தயங்குபவளின் செயல், சசிதரனைத் தொட்டிருக்க வேண்டும். மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

முதல் முறையாக கணவனுடன் இயல்பாக, நெருக்கமாக உணர்த்தவளின் கண்கள் கலங்கி விட்டது. சசி சாயாவின் இடது முழங்கையை வருடினான்.

“தூக்கம் வந்தா தூங்கு சாயா” என்று மனைவியின் காதில் கிசுகிசுத்தவன், அந்த மலைப்பாதையில், இருள் பிரிந்து, மேகக் கூட்டங்களுக்கு நடுவிலிருந்து, முட்டி மோதி, வண்ணங்களையும நம்பிக்கையையும் வாரித்தந்தபடி எழுந்த ஆதவனைக் கூட கவனியாது, ஏதேதோ யோசனையில் வெளியே வெறித்தபடி பயணித்தவனின் விரல்கள் மட்டும், தன் வருடலை நிறுத்தவில்லை.

அந்தத் திருமணத்திலுமே, சாயாவுக்கு , அந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்காருவது அவஸ்தையாக இருக்க, முஹூர்த்தம் முடிந்ததுமே, முதல் பந்தியிலேயே சாப்பிட்டு விட்டு, கோவை வீட்டிற்குச் சென்று விட்டனர்.

சாயா “எனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லைங்க. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸோட போய் பேசிட்டு வரதுன்னா வாங்க” என்றாலும், சசிதரன் போக மறுத்துவிட்டான்.

அமைதியாக படுத்துவிட்ட சாயாவுக்கு, அந்த கல்யாண மாப்பிள்ளையின் அம்மா ‘ஏன் சசி, மாசம் ஆயிடுச்சே, பொண்டாட்டிக்கு சீமந்தம் செய்ய வேண்டாமா?’ என்று கேட்டதை நினைத்தாள்.

ஹரிணி கூட போனவாரம் “அக்கா உன் வளைகாப்பை, ஞாயித்துக் கிழமை வைக்க சொல்லுக்கா” என்றாள்.

வீட்டில் பெரியவர்கள் என்று யாரும் இல்லாதுபோக, சசிதரனுக்கு இது குறித்து எந்த ஐடியாவும் இல்லை என்று புரிந்ததால், சாயாவுக்கு கணவனிடம் இதைப்பற்றி தானே பேசத் தயக்கமாக இருந்தது.

‘தான் புடவைக்கும் நகைக்கும் ஆசைப்படுவதாக சசிதரன் நினைத்துக் கொண்டால்?’ என்ற எண்ணம் வந்தது. கூடவே ‘இந்த அந்தஸ்து வித்தியாசம் கடைசி வரை தன்னை விட்டுப் போகாது போல ‘ என்றும் நினைத்துக் கொண்டாள்.

அவளுக்கிருந்த உடல் அசதியில், மறுநாள்தான் கோத்தகிரிக்கு வந்தனர். அன்று மாலையே டாக்டரிடம் சென்றனர்.

ஸ்கேனை பரிசோதித்த டாக்டர் ரங்கநாயகி “பேபி வளர்ச்சி நல்லா இருக்கு. பேபி ஆக்டிவா இருக்கு. பார்லி வாட்டர் குடிம்மா சாயா. நீர்இறங்கும். பிரஷர் கொஞ்சம் அதிகமா இருக்கு. எதிலயுமே உப்பு கொஞ்சம் கம்மியா போட்டு சாப்பிடு”

“சரி டாக்டர்” என்ற சாயாவை சில நொடிகள் பார்த்திருந்த டாக்டர், புன்னகைத்தார். சாயா டாக்டரிடம் இரண்டாம் முறை வந்தபோதிருந்தே, இப்படித்தான் இவளையும், சசிதரனையும் கூர்ந்து பார்க்கிறார்.

“சசி, சாயா ரெஸ்ட் எடுக்கட்டும். நீ போற இடத்துக்கெல்லாம் அவளைக் கூட்டிட்டு போகணும்னு அவசியம் இல்லை. அண்டர்ஸ்டேண்ட்?”

“ஓகே, ஆன்ட்டி”

“என்ன மேன், ஏழாம் மாசம் முடியப் போகுது. சாயாவுக்கு வளைகாப்புவெல்லாம் செய்யலையா?”

“என்ன, எப்ப செய்யணும்னு தெரியலை ஆன்ட்டி. என் ஃப்ரெண்டோட அம்மா கூட கேட்டாங்க”

“நீ உனக்கு கல்யாணத்துக்கு நாள்குறிச்சவர் கிட்டயே, அவர் கேக்குற விவரத்தைக் கொடுத்து, ஒரு நல்ல நாள் பாக்க சொல்லு. என்ன செய்யணும்னு நான் சொல்றேன்”

“டன் ஆன்ட்டி”

அடுத்த நாளே, அடுத்த வெள்ளிக்கிழமையே சாயாவிற்கு வளைகாப்பு செய்ய நாள் குறித்துக்கொண்டு வந்தான்.

குறைந்தபட்ச விருந்தினர்களோடு, செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கேட்டுத் தெரிந்து கொண்டவன், விழாவுக்கான ஏற்பாடுகளை துல்லியமாக செய்தான்.

ஹரிணி வரவேண்டும் என்று ஹரிணி, சாயா இருவருமே விரும்ப, வரவழைத்தான். அவளும் வியாழனன்றே வந்துவிட்டாள்.

விழாவுக்கென, கணவன் வாங்கி இருந்த ஆகாய நீல நிற பட்டுப்புடவையை உடுத்தி இருந்தவளிடம், வழக்கம்போல் அதற்குப் பொருத்தமான அவனது அம்மாவின் முத்து நகைகளைக் கொண்டு வந்தவன் அவளை எதிர் பார்க்காமலே கை வளையல்களையும், நெக்லஸையும் போட்டு விட்டான்.

“எதுக்குங்க, ஒவ்வொரு முறையும்…”

“நீயே எதையும் எடுத்து போட மாட்டேங்கற, அதான், நான் போட்டு விடறேன்” என்றவன், வழக்கம்போல், இன்றும் அவளை விதவிதமாக காமிராவில் பதிந்து கொண்டான்.

வளையல் இட பெரியவர்கள் வேண்டும் என்பதற்காக, அவனது நண்பர்களின் பெற்றோரை அழைத்திருந்தான்.

மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த சாயாவைப் பார்த்த ஸ்ரீதரனின் கண்கள் விரிந்ததைக் கண்ட சசிதரனின் முகத்தில், அப்படி ஒரு விகசிப்பு.

அக்காவை பார்த்து மகிழ்ந்த ஹரிணி, ஸ்ரீதரனின் பார்வையையும், சசிதரனின் பாவனையையும் பார்த்துக் குழம்பினாள்.

சாயா, தன்போக்கில் “வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி, நல்லா இருக்கீங்களா?, வாங்கண்ணா” என்று விருந்தினர்களை வரவேற்கச் சென்றுவிட்டாள்.

சசிதரனின் நண்பன் குணாவின் அம்மாதான் வேப்பிலைக் காப்பையும், கண்ணாடி வளையல்களையும் அணிவித்தார்.

விழா நல்லபடியாக நடந்தேறியது. சசிதரன் சாயாவுக்கு நவரத்ன வளையல்களைத் தந்தான். புதிய டிஸைனில் இருந்தது.

ஹரிணி ஒரு பவுனுக்கு ஒரு பிரேஸ்லெட் வாங்கி வந்திருந்தாள். சசிதரன் “சின்னப் பொண்ணு, நீ எதுக்கு இதெல்லாம் செய்யுற? என்று அதட்ட, வாங்க மறுத்து, அதிர்ச்சியுடன் பார்த்த சாயாவிடம் ஹரிணி “ப்ளீஸ்க்கா, சொல்லுங்க மாமா” எனவும், சசிதரன் தலையசைத்தான். சாயாவின் கையில் ஹரிணி அணிவித்தாள்.

சசிதரன் ஹரிணியை கடிந்து கொண்டதில், சற்றே தயங்கினாலும், ஸ்ரீதரன் ஒரு ஜோடி வளையல்களை தன் பாக்கெட்டில் இருந்து எடுக்க, சசிதரன் முகத்தில் எதுவும் காட்டாமல் நிற்கவும், அவனிடமே கொண்டு வந்து “அண்ணிக்கு…” என்று நீட்டவும், ஒன்றும் பேசாமல் வாங்கி, மனைவியின் கைகளில் போட்டான்.

ஹரிணி வாங்கி வந்ததை விட ஸ்ரீதரன் வளையல் வாங்கி வந்தது, சாயா, சசிதரன் இருவருக்குமே இதமான அதிர்ச்சிதான். ஆனால், இதத்துக்கும் அதிர்ச்சிக்குமான சதவிகிதம்தான் வேறு.

விருந்து முடிந்து, சாயா “ஏன் ஹரிணி இப்படி செஞ்ச, நான் பேங்க்ல போட்ட பணத்தை செலவழிச்சிட்டியா?’ என்று கடிந்தாள்.

“இல்லக்கா. டியூட்டி பாத்தா ஸ்டைஃபண்ட். வரும். அதோட அந்த பெரிய ஜிமிக்கியையும் போட்டுதான் வாங்கினேன். இதோ பாரு தினமும் போடறாப்பல எனக்கு இந்த சின்னத் தோடையும் வாங்கிக்கிட்டேன்”

சாயாவுக்கு, பெற்றோர் பார்த்த செய்ய வேண்டியவற்றை, தானே செய்து கொண்டு, தனக்கும் சீருடன் வந்தவளைக் கண்டு பெருமையும், அழுகையும் ஒருசேர வந்தது.

“ம், இருந்தாலும்…”

“சும்மா இரு சாயாக்கா, உண்மையா சொல்லு, எல்லாருக்கும் முன்னால நான் இதை குடுத்ததுல உனக்கு சந்தோஷம்தானே?”

“ம், ஆமா ஹரிமா, அவரே எல்லாம் செய்யும்போது பிறந்த வீட்ல இருந்து வர்றது பெருமைதானே? என்ன, என்னை விட சின்னவ, நீ எனக்காக வாங்கி வந்ததுதான் வருத்தமா இருக்கு”

“இதெல்லாம் ஒரு மேட்டரா? அப்புறமா நீ எனக்கு வாங்கித்தராமலா போகப்போற?”

ஹரிணிக்கு சனி, ஞாயிறு முழுவதும் டியூட்டி இருந்ததால், மதியமே கிளம்பி விட்டாள். நண்பனின் குடும்பத்துடன் கோவை வரை அனுப்பினான் சசிதரன்.

அன்றிரவு சாயாவுக்கு இருந்த அசதியில் எட்டு மணிக்கே உறங்கி விட்டாள். மீண்டும் யாரோ, உறங்கிக் கொண்டிருந்தவளின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு ஓட, வழக்கம்போல் துரத்திய சாயா, எங்கெங்கோ ஓடிக்களைத்து ஒரு பெரிய அறையினுள் நுழையவும், திடுக்கிட்டு நின்றாள்.

எதிர்ப்புற சுவற்றில், அன்று காலை அவள் உடுத்தி இருந்த, அதே ஆகாயநீல பட்டுப் புடவையில், அதே முத்துக்கள் பதித்த ஆபரணங்களில், பெரிது படுத்தப்பட்ட அவளுடைய புகைப்படம் மாட்டப்பட்டிருக்க, சாயா கத்துவதற்குக் கூட குரலெழும்பாமல் அதிர்ச்சியில் உறைந்தாள்.