பிம்பம் 16+ / அத்தியாயம் – 6

பிம்பம் 6

டாக்டர் ரங்கநாயகியிடம் சென்று வந்து, இரண்டு வாரங்கள் கடந்திருக்க, சாயாவின் கர்ப்பகால அவஸ்தைகள் அதிகரித்தது. க்ராம்ப்ஸ் வந்து, அடிவயிற்றில் தசையைப் பிடித்து சுருட்டி இழுத்ததில், பீரியட்ஸ் வந்து விடுமோவென பயந்தாள்.

சாயாவிற்கு, காலை வேளைகளில் தலைவலி மண்டையைப் பிளந்தது. எப்போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. வயிற்றுக்குள் யாரோ கிச்சுகிச்சு மூட்டும் உணர்வு, தூக்கமின்மை என தினமும் ஒரு மாற்றம். சில நாட்கள் உடல் சூடு அதிகரித்து ஜூரம்போல் காய்ந்தது.

அவர்கள் இப்போது மாஸ்டர் பெட்ரூமை உபயோகிக்கத் தொடங்கி இருந்தனர்.

முன்தினம் காலையில் கோவை சென்று, இரவு திரும்பிய சசிதரனுக்கும், நேற்றிரவு முதல் காய்ச்சல் அடித்தது. ஏற்கனவே தூக்கமில்லாமல் தவித்தவள், சசியின் அனத்தலில், மூன்று மணிக்கு மேல்தான் கண்ணயர்ந்தாள்.

இதோ, இப்போது காலையில் எழுந்து உட்கார்ந்த சாயாவை தன்னிடம் இழுத்து, அவளது தோளில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அமைதியாக, அவனை அணைத்துக் கொண்டிருந்தவள், சசியின் உடல் சூடும் கனமும் தாங்காமல் நெளிந்தாள். உடனே பாத்ரூம் செல்லும் உந்துதல் எழவும் “என்னங்க, விடுங்களேன்”

“ம்ஹூம், மாட்டேன். ப்ரெக்னென்ட் ஆனதுல இருந்து, நீ என்னை மறந்தே போய்ட்ட. என்னை கவனிக்க மாட்டேங்கிற. இப்போ எனக்கும் உடம்பு சரி இல்லை. நீ இப்படியே இரு. விட முடியாது”

சாயா, அடுத்த ஐந்தாறு நிமிடங்கள் குட்டிகர்ணம் போடாத குறையாக அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, பல வாக்குறுதிகளை வழங்கி, மன்னிப்புகளை வேண்டியபின்தான் அவளை விடுவித்தான்.

சாயா ஓடிய வேகம் பார்த்து சிரித்தான். சாயாவுக்கு, இன்று சசிதரன் வீட்டில்தான் இருப்பான் என்று புரிந்ததால், கையோடு குளித்துவிட்டு வந்தாள். அவள் வந்ததும் மன்னிப்புக் கேட்டான்.

சசி சொல்வது உண்மைதான். அவளுக்கு இருந்த, அவளை மீறிய உடல் உபாதையில், அவனது தேவைகளைப் பூர்த்தி செய்ய அவளால் இயலவில்லை. அது அவளுக்குக் குற்றவுணர்வைக் கொடுத்தது.

அவனும் எழுந்து சென்று குளித்து வந்தவன் ரூமுக்கே டிபன், காபியை வரவழைத்து, உண்ட பின், ஆஃபீஸுக்கு தகவல் சொன்னவன், மீண்டும் சாயாவைப் பிடித்துக் கொண்டான்.

சசிதரன் “உன்னை நான் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா சாயா?” எனவும் கண்ணெதிரே இருப்பவளை எப்படி மிஸ் செய்வான் என்று சாயா விழித்தாள்.

“இப்பல்லாம் நீ என்னைக் கவனிக்கறதே இல்லை. என்னோட ப்ளூ ஷர்ட்ல பட்டன் இல்லை. டூ யூ நோ தட்?”

வார்ட்ரோப் முழுவதும் பாதிக்கு மேல் நீலச்சட்டைகளாகவே இருக்க சாயா ‘எந்த ப்ளூ ஷர்ட்?’ என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.

“இப்ப கூட பாரு, நீ எனக்கு ஜுரம் அடிக்குது. எவ்வளவு ஜூரம் இருக்குன்னு நீ செக் செய்யலை”

அவனது அனத்தலிலும் குற்றச்சாட்டிலும் பயந்து போன சாயா, அமைதியாக எழுந்து போய் மெடிகல் ‘கிட்’ டில் இருந்து தெர்மாமீட்டரையும், ஒரு பாராசிட்டமால் மாத்திரையையும் எடுத்து வந்தவள் “ஆ காட்டுங்க”

“சாயா, இதுவரைக்கும் நீ எனக்கு எதுவும் ஊட்டினதே இல்லை தெரியுமா?” எனவும் சாயாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“ஏங்க, டைனிங் ஹால்ல சர்வென்ட்டுக்கெல்லாம் முன்னாடி ஊட்டவா முடியும்?”

வெப்பமானி நூறு டிகிரி என்று காட்டியது. மாத்திரையை அவன் வாயில் போட்டு தண்ணீரைப் புகட்டினாள். அன்று முழுவதும், சாயாவின் உபாதைகளை நினைக்கக் கூட விடாமல் வைத்திருந்தான்.

மதியம் நாட்டுக் கோழி சூப் வைக்கச் சொல்லி புகட்டினாள். சசிதரன், பதிலுக்கு அவளுக்குப் புகட்ட முயல, ஏற்கனவே அதை முகர்ந்ததிலேயே, உமட்டுவது போலிருக்க, சாயா பாத்ரூமை நோக்கி ஓடவும்தான் சற்று அமைதியானான்.

மாலை ஐந்து மணி வாக்கில், சசிதரன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, ஹரிணி ஃபோன் செய்யவும், கட் செய்தவள் ‘ஹரிமா, நீ எப்படி இருக்க? இங்க ஆல் ஃபைன். பிறகு பேசலாம்’ என்று மெஸேஜ் அனுப்பி விட்டாள்.

சசிதரனுக்கு முன்னே சில முறை ஹரிணியுடன் பேசி இருக்கிறாள்தான். ஆனால், இவள் கர்ப்பமானது முதல், ஹரிணிக்கு, தன் ஒரே உறவான அக்காவை வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

சாயாலக்ஷ்மி, தன் கர்ப்பம் உறுதியானதுமே, ஹரிணியை அழைத்து, தான் குழந்தை உண்டாகி இருப்பதைச் சொன்னாள்.

“சூப்பர்கா. எவ்வளவு நாளாச்சு? மார்னிங் சிக்னஸ் இருக்கா? ரெஸ்ட் எடுத்துக்க. ஐயோ, எனக்கு குஷியா இருக்குக்கா. மாமா என்ன சொல்றாரு?” என்று வேகமாகப் பேசினாள்.

அப்போது சசிதரனும் அங்கேயே அமர்ந்து, அவனெதிரேயே இதைப்பற்றிப் பேசியதில், வெட்கத்தில் சிவந்திருந்த மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“போடீ, பெரிய மனுஷி, உங்க மாமா இங்கதான் இருக்காரு. நீ அவர் கிட்டயே பேசு. என்னங்க, ஹரிணிக்கு உங்க கூட பேசணுமாம்”

சிரித்தபடியே மொபைலை வாங்கிக் கொண்டவன் “சொல்லுமா”

“ம், தேங்க் யூ. பாத்துக்கலாம். அதைவிட எனக்கு வேறென்ன வேலை?”

“எனக்கு எப்படா பரீட்சை முடியும்னு இருக்கு மாமா. அக்காவை உடனே வந்து பார்க்கணும் போல இருக்கு”

“ம், அதுக்கென்ன, வந்தாப் போச்சு. நீ முதல்ல பரீட்சையை நல்லா எழுது. நான் ஃபோனை வைக்கறேன்”

“சாயா,நீ ஹரிணி கிட்ட, அவ எக்ஸாம் முடியுற வரைக்கும் உன் உடம்புக்கு என்ன செய்யுது, அவளைப் பாக்கணும் போல இருக்குன்னு எல்லாம் சொல்லி பாவம், படிக்கற பொண்ணு மனசுல ஆசை காட்டி, அவளை திசை திருப்பாத” என்றான்.

“நீங்க சொல்றதும் சரிதாங்க” என்றாள். ஆனால், அதற்கு முன்பு, வாரம் ஓரிரு தடவைகளே பேசிய ஹரிணி, இப்போது இவளது நலனை விசாரிக்க, தினமும் கால் செய்கிறாள்.

ஒருநாள் மாலை சாயா பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருக்க, சற்று சீக்கிரமாக அலுவலகத்திலிருந்து வந்து விட்ட சசிதரன், ஹரிணியின் ஃபோனை எடுத்து விட்டான்.

ஹரிணியிடம் சாதாரணமாகப் பேசியவன் “நீ உன் பிரச்சனை எல்லாம் அந்த சின்னப் பொண்ணு கிட்ட புலம்பி வைக்கிற. அவ பாவம் கவலைப்படறா பாரு. படிக்குற பொண்ணை தொந்திரவு செய்யாதன்னு சொன்னேன்ல?” என்று கடிந்து கொண்டான்.

அதிலிருந்து முடிந்தவரை, கணவனின் முன் தங்கையிடம் பேசுவதை சாயா தவிர்த்தாள்.

வீட்டில் மொபைல் சிக்னலும் wi-fi யும் சரி இல்லாது போக, அடுத்த வாரத்தில் ஒருநாள் ஆளைக் கூப்பிட்டு, மாடியில் அவர்களது அறையில் புதிதாக ஒரு கனெக்ஷன் கொடுத்தான்.

“இதுல நீ என்ன வேணா பாக்கலாம், படிக்கலாம், யாரோட வேணா பேசலாம்’ என்று சாயாவுக்கு ஒரு டேப் (TAB) வாங்கித் தந்தான். ஆனால், அவனெதிரில் அவள் அதைக் கையில் எடுத்தாலே அவனுக்குப் பிடிக்காது.

அவளுக்குப் புதிதான, லேட்டஸ்ட் மாடல் ஆன்ட்ராய்ட் மொபைலை வாங்கி வந்து, பழைய மொபைலில் இருந்த டேட்டாவை, புதிய ஃபோனுக்கு மாற்றிக் கொடுத்தான்.

“இதை நான் யாருக்காவது கொடுத்துடறேன் சாயா, நீ புதுசு யூஸ் பண்ணிக்கோ. மீனாவும் நீயும் ஒரே மாடல் மொபைலை யூஸ் செய்யறது எனக்குப் பிடிக்கலை”

அதுவரை மீனாவிடம் என்ன ஃபோன் இருந்ததென்று கூட தெரியாத சாயாவுக்கு, என்னதான் சசிதரனின் செல்வச் செழிப்பு புரிந்தாலும், ஃபோனை வாங்கிக் கொடுத்ததோடு நில்லாமல், அவன் செய்த அந்த ஒப்பீடு சுருக்கென்றது.

ஸ்ரீதரன் வழக்கம்போல் வருவான், சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பான். அந்த வார இறுதியில் கோவை சென்றிருந்த ஸ்ரீதரன் “மாங்கா கிடைக்குது அண்ணி. உங்களுக்கு இப்ப பிடிக்குமோன்னு வாங்கிட்டு வந்தேன்” என்று ஒட்டு மாங்காய், உருண்டை மாங்காய் என சிறிது சிறிதாக இரண்டு, மூன்று ரகங்களை வாங்கி வந்திருந்தான்.

சசிதரன் வீட்டில் இருக்கும் சமயத்தில்தான் வந்தான். அப்போது எதுவும் பேசாமல் மௌனமாக இருந்த சசிதரன், மறுநாள் விடி காலையிலேயே எழுந்து எங்கோ சென்றவன், மதியம் ஒரு மணிக்கு மூன்று கூடை நிறைய மாங்காய்களுடன் வந்து அதிர்ச்சி அளித்தான்.

“என்னங்க இது?”

“என் பொண்டாட்டி நீ, நான்தான் உனக்கு மாங்காய் வாங்கித் தருவேன்”

வீட்டு வேலையாட்கள், தங்கள் முதலாளியின் அலப்பறையை சிரிப்புடன் வேடிக்கை பார்க்க, சாயா மூன்று கூடை மாங்காய்களுக்கு நடுவே மலைத்து நின்றாள்.

சாயா மறுநாள் சிரிப்பும் வெட்கமுமாக இதை ஹரிணியிடம் சொல்ல, ‘மூணு கூடை மாங்காயா?’ என்று கேட்டவளுக்கு தோன்றியதெல்லாம் ‘மாமாவுக்கு பொறாமையா, பொஸஸிவ்நெஸ்ஸா? அப்படியே இருந்தாலும் மூன்று கூடை மாங்காய்களா? என்ற கேள்விகள்தான்.

சசிதரனின் மூலிகை டீயும், பழ ருசிகளில் தயாரிக்கப்படும் டீயும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்க, அதன் விற்பனையை இங்கிலாந்து, இரான், சவுதி அரேபியா என விஸ்தரிக்கும் வேலையில் இறங்கி இருந்த சசிதரன், மூன்று வாரப் பயணமாக அந்த நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தான்.

“சாயா, உன்னை ஹனிமூனுக்கே ஃபாரின் கூட்டிட்டு போகணும்னு ஆசையா இருந்தேன், தெரியுமா? ஆனா, இப்ப நம்ம வீட்லயே எல்லாத்துக்கும் தடாவா இருக்கு” என்று, டாக்டரின் ஆலோசனையைக் குறை சொல்லிப் புலம்பினான்.

ஒரு கட்டத்தில், கணவனது புலம்பலையும், தவிப்பையும் தாங்க மாட்டாமல் போக, நான்காம் மாதம் பாதிக்கு மேல் முடிந்திருக்க, சாயாவே அவனை நெருங்கினாள்.

“உன்னைத் தனியா விட்டுப் போறேனேன்னுதான் கவலையா இருக்கு. நான் திரும்பி வந்ததும், குழந்தை பொறக்கற வரை எங்கேயும் போக மாட்டேன்”

“தாயம்மாவை உனக்குத் துணையா வெச்சுக்கோ. ஏதாவது வேணும்னா அவங்களைக் கேளு, என்ன?”

நிறைய ஆலோசனையும் அறிவுரையும் பத்திரமும் சொன்னவன், ஒருவழியாகக் கிளம்பிச் சென்றதும், வழக்கமாக அவன் இரண்டுநாள் எங்காவது சென்றாலே தவிப்பவள், ஏனோ, இப்போது சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள்.

அண்ணன் ஊரில் இல்லாததால், ஸ்ரீதரன் தினமும் மாலை நேரத்தில் இங்கு வந்து சாயாவைப் பார்த்துப் பேசி, நலன் விசாரித்து விட்டுப் போவதை வழக்கமாக வைத்திருந்தான்.

இப்போது ஐந்தாம் மாதம் தொடங்கி இருக்க, டாக்டரின் ஆலோசனைப்படி, சாயா, மாலை வேளைகளில், தங்கள் வீட்டைச் சுற்றி நடக்கத் தொடங்கினாள்.

ஓரிரு முறை அது போல் நடக்கையில் வந்த ஸ்ரீதரனும், அவளுடன் பேசிக்கொண்டே இணைந்து நடந்தான்.

அது போன்ற ஒரு நேரத்தில், சாயா திடீரென நினைவு வந்தவளாக “யாரு தம்பி, இன்பசேகரன்?” எனவும், முகம் கருத்த ஸ்ரீதரன், பதில் எதுவும் சொல்லாமல் தவிர்த்தவன், அடுத்த சில நிமிடங்களிலேயே “நான் நாளைக்கு வரேண்ணி. ஏதாவது தேவைன்னா கால் செய்ங்க” என்று கிளம்பி விட்டான்.

கேள்வி கேட்ட சாயாவுக்குதான் ‘ஏண்டா கேட்டோம்?’ என்று தோன்றிவிட்டது. அதே நேரம், ‘அந்த இன்ப சேகரன் யார், ஸ்ரீதரன் ஏன் பதில் சொல்லாமல் சென்று விட்டான், அந்த பேரைக் கேட்டதுமே அவனது முகம் ஏன் மாறியது? இன்னும் அவரது பெயரில் பழைய பாட புத்தகங்கள் இந்த வீட்டில் இருக்கிறதின்றால், இவர்களுக்கும் அந்த இன்ப சேகரனுக்கும் என்ன தொடர்பு?’ என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்.

இரண்டாவது சுற்றிலேயே, மெலிதாகப் பரவத் தொடங்கிய குளிரை உணர்ந்ததும், சிலிர்த்தபடி, கைகளைக் கட்டிக் கொண்டு, வீட்டுக்கு வரத் திரும்பியபோது, இவளின் தலையைக் கண்டதும், தாயம்மா உள்ளே சென்று மறைவது தெரிந்தது.

தாயம்மா இதுபோல் செய்வது, இது முதல் தடவை இல்லை. முன்பும் இவளை பார்க்கும்போது ஒருவித அளவீட்டுடனே பார்ப்பவர், இப்போது, சசிதரனே ‘சாயாவை பாத்துக்கங்க. அவளுக்கு என்ன வேணும்னு பாருங்க. துணையா இருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றதில் இருந்து அந்த எடைபோடும் பார்வை, இப்போது சந்தேகப் பார்வையாக மாறிவிட்டது போல் சாயாவுக்கத் தோன்றியது.

இரவு வேளைகளில் மாடி அறையில், துணைக்குப் படுத்துக் கொள்ள வருகிறேன் என்றவரை மறுத்து விட்டாள்.

சாயா மனதளவில் முழுமையாக இன்னும் வசதிபடைத்த சசிதரனின் மனைவியாக, தன்னியல்புடன் இருக்கத் தொடங்கவில்லை.

என்னதான் சசிதரன் கணவன் என்றாலும், ஒரு கணவனாக அவளுடன் அவன் நெருக்கமாக இருந்தாலும், சாயாவுக்கு அந்த அதீத வசதியை தன்னுடையதாக ஏற்றுக்கொள்ளவும், தன்னிச்சையாகக் கையாளவும் அவளிடம் சிறிது தயக்கம் இருந்தது.

எனவே, தனி அறைக்குள் இருக்கும் சுதந்திரத்தை இழக்க விரும்பாத சாயா “தேவை இல்லை. அவசியம்னா கூப்பிடறேன். வயசான காலத்துல, நீங்க ஏன் சிரமப் படறீங்க?” என்று மறுத்து விட்டாள்.

தாயம்மா, சாயா கீழே போனால், வாக்கிங் போனால், ஏதாவது அறைகளுக்குள் நுழைந்தால், பின்னோடே வந்து பார்ப்பதும், இவள் கவனித்து விட்டால், பம்மியவாறு திரும்பச் செல்வதுமாக இருந்தார்.

முதலில் வயதனானவர், சிறுவயதில் கணவனை வளர்த்தவர் என்ற எண்ணத்தில், கண்டுகொள்ளாமல் இருந்த சாயாவுக்கு, ஒருநாள் மாலை, இவள் தோட்டத்தில் நின்று, ஹரிணியுடன் மொபைலில் பேசுவதை, தினமும் ஸ்ரீதரனுடன் பேசுவதை எல்லாம் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து கவனிப்பதைக் கண்டதும் சினம் துளிர்த்தது.

‘என்னை வேவு பார்க்க இவர் யார்? சசிதரனைப் பார்த்துக் கொண்ட ஆயாதானே, அவரது அம்மா இல்லையே?’

மறுநாள் வந்த ஸ்ரீதரனிடம், சாயாவும் எதையும் கேட்கவில்லை, அவனும் எதுவும் சொல்லவில்லை.

சசிதரன் மூன்று வாரம் என நினைத்துச் சென்ற வேலைகள், மேலும் சில ஒப்பந்தங்கள் கை கூடும் போல் இருந்ததால், அவன் வருகை இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திப் போனது.

ஹரிணியின் இரண்டாம் வருடப் பரீட்சைகள் முடிந்திருந்தாலும், நர்ஸிங் படிப்பு என்பதால், ஹாஸ்பிடலில் டியூட்டி போட்டிருந்தவர்கள், திடீரென பத்து நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கவும், சொல்லாமல் கொள்ளாமல், அக்காவைப் பார்க்க, கோத்தகிரியை நோக்கி வந்தாள்.

சாயாவின் ஆறு மாத மேடிட்ட வயிற்றைப் பார்த்தவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. சாயாவின் மெடிகல் ரிப்போர்ட்களைப் பார்த்தாள். ஹரிணியும் சாயாவுடனே தங்கிக் கொண்டாள். ஆனால், “நான் திவான்லயே படுத்துக்கறேன்கா” என்று விட்டாள்.

சகோதரிகள் இருவரும் விட்ட கதைகளை எல்லாம் பேசத் தொடங்கினர்.

சசிதரன், தானும் இல்லாத நேரத்தில், ஹரிணியின் வரவு சாயாவுக்கு உதவியாக இருக்கும் என்பதால், ‘என்ஜாய்’ என்றதோடு நிறுத்திக் கொண்டான்.

இருவரும் சேர்ந்து நடப்பது, சில சினிமாக்கள் பார்ப்பது, அரட்டை அடிப்பது என பொழுதுகள் சுவாரஸ்யமாகவே சென்றது. ஹரிணி ஊருக்குத் திரும்ப இன்னும் இரண்டு நாள் இருந்தது.

அன்று மாலை ஸ்ரீதரன் வந்திருந்தான். சாயாவின் கால்களில் நீர் கோர்த்திருக்க, அவள் நடக்க வராமல், ஹாலில் அமர்ந்து, ஸ்ரீதரனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீதரனிடம் ஹாய், ஹலோ என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளும் ஹரிணி, அவர்கள் பேசட்டும் என்று, தன் நடையைத் தொடர்ந்தாள்.

வீட்டைச் சுற்றி வருகையில் “பத்மாம்மா அந்த இன்பசேகரனோட இருந்தாப்போலயே இப்ப இந்த அம்மாவும்…” என்ற தாயம்மாவின் குரலும்,

“ச்சீ, வாயைக் கழுவுத்தா. உன் வயசுக்கு, அந்தத் தங்கமான பொண்ணைப் பத்தி என்ன பேச்சுப் பேசற?” என்று பதிலுக்கு சீறிய ஒர் ஆண்குரலும் கேட்டது!

இதில் ஹரிணிக்குப் புரிந்ததெல்லாம் பத்மா என்பது, சசிதரனின் தாயின் பெயர் என்பதுதான். இன்பசேகரன் யார் எனப் புரியாதவள், இவர்கள் சொன்ன அந்த இன்னொரு அம்மா தன் அக்கா சாயாலக்ஷ்மியோ என நினைத்தவுடன், விதிர்த்துப் போனாள்.

‘இதென்ன வீட்டு எஜமானிகளைப் பற்றி, அதுவும் இறந்தவர்களைப் பற்றிப் புறம் பேசுவது. என் அக்காவைப் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்?’ என்று ஆத்திரத்துடன் சிந்தித்துக் கொண்டே வீட்டுக்குள் வருகையில் இருட்டி விட்டது.

ஸ்ரீதரன் இன்னும் சாயாவுடன் பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் எல்லாம் கோவையில் இருந்து வந்த ஒரு டாக்ஸியில் இருந்து இறங்கினான், சசிதரன்.

கடந்த ஒன்றரை மாதத்தில் மனைவியின் நன்கு மேடிட்டிருந்த வயிற்றையும், சோர்வையும் மீறி அழகில் ஒளிர்ந்த முகத்தையும் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன் தம்பிக்கும், மைத்துனிக்கும் எதிரில் “சாயா” என்று அழைத்தவாறே அணைத்துக் கொள்ள, சாயாவுக்கு வெட்கமாக இருந்தாலும், கணவனின் தீடீர் வருகையும் அணைப்பும், அவளை நெகழச் செய்ததில் மகிழ்ச்சியாக உணர்ந்தவள், தன்னையறியாது அவனிடம் ஒண்டினாள்.

மனைவியின் செயலை உணர்ந்தவன் சில நிமிடங்களில் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன், வா சாயா” என்று அவளையும் அழைத்துக்கொண்டு மேலே சென்றுவிட்டான்.

ஸ்ரீதரன் கிளம்பிவிட, சசிதரன் சாயாவை கை விடாது அடைகாத்ததில், மறுநாள் போக மறுநாள் அங்கிருந்து கிளம்பும் வரை ஹரிணியால், சாயாவிடம் அவள் கேட்க நேர்ந்ததையும், கேட்க நினைத்த ‘இன்பசேகரன் யார்?’ என்ற கேள்வியையும், செய்ய நினைத்த எச்சரிக்கையையும் நிறைவேற்ற முடியாமலே, வேலூருக்கு கிளம்பிச் சென்றாள்.