பிம்பம் 16+ / அத்தியாயம் – 5

பிம்பம் 5

ஸ்ரீதரன், சாயாவின் அழைப்பிலும் வற்புறுத்தலிலும்  கடந்த இரண்டு மாதங்களாய், வாரத்தில்  இரண்டு முறையாவது வந்து தலையைக் காட்டி விடுவான். இரண்டு முறை வார இறுதியில் “சாப்பிட வாங்களேன், தம்பி” என்றதற்கு “இல்லண்ணி, நான் ஃப்ரெண்ட்ஸைப் பாக்க கோயமுத்தூர் வரை போறேன். உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்றுவிட்டான்.

சனி, ஞாயிறில்,  சசிதரன் வீட்டில் இருப்பான் என்பதாலேயே வருவதைத் தவிர்க்கிறான்  என்று சாயா புரிந்து கொண்டாள்.

சில நேரம் வீட்டில் ஸ்பெஷலான இனிப்போ, அசைவமோ, தின்பண்டமோ செய்திருந்தால், ஸ்ரீதரனுக்குக் கொடுத்து அனுப்பினாள். முதலில் தயங்கியவன், பிறகு அமைதியாகி விட்டான். 

சாயா நல்ல மனதோடு,  தனக்காக வேலை மெனக்கெட்டு, தன்னை நினைவில் நிறுத்தி செய்வதை  அவன் அனுபவித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

தந்தையையே பார்க்காமல், ஆறு வயதில் தாயை இழந்தவனுக்கு, சாயாவுடன்  ரத்த சம்பந்தம் இல்லை என்றாலும், முதல் முறையாக அந்த வீட்டின் சொந்தங்களில் இருந்து கிடைத்த அவளது அன்பையும் அக்கறையையும்,  பெரிதும் மதித்த ஸ்ரீதரனுக்கு , அதை மறுக்கத் தோன்றவுமில்லை. மனதுமில்லை.

தன்னை விட இரண்டு, மூன்று வயதே மூத்தவளான அண்ணியிடம், ஆரம்பத்தில் அவள் கேட்ட கேள்விக்கு பதில் என்றிருந்தவன், பிறகு  இயல்பாகப் பேசத் தொடங்கி, இப்போது நன்கு கலகலப்பாக அரட்டை அடிக்கும் அளவு பேசுகிறான்.

சில நேரம் ஸ்ரீதரன் சாயாவைப் பார்க்கும் பார்வையில் தெரியும் ஏதோ ஒரு ஏக்கம், பரிதவிப்பு சாயாவை என்னவோ செய்தது.

தினசரி, கூடவே  என்று இல்லா  விட்டாலும், சாயாவுக்கும் சசிதரனைத் தவிர, அவ்வப்போது பேச்சுத்துணை என்று இருந்தது, ஸ்ரீதரன் மட்டுமே.

சசிதரன் வீட்டில் இருக்கும்போது வர நேரிட்டாலும், சிறிது நேரம் இருந்து, சாயாவுடன் பேசிவிட்டுச் சென்று விடுவான்.

சசி இல்லாதபோது, ஸ்ரீதரன் வந்தாலோ, அவனுக்கு ஏதேனும் சாப்பிடக் கொடுத்து அனுப்பினாலோ, அவன் சொன்ன நகைச்சுவையோ எதுவாக இருந்தாலும், கணவனிடம் சொல்லிவிடுவாள் சாயா.

சசிதரன் பதில் சொல்லாவிட்டாலும், மனைவி சொல்வதைக் கேட்டுக் கொள்வான். சில நேரம் ஐந்தாறு நாட்கள், சாயா எதுவும் சொல்லவில்லை என்றால் மட்டும் ” என்ன, உன் கொழுந்தன் வரலையா, ஒரு நியூஸையும் காணும்?” என்று தூண்டில் போடுவான்.

நாளுக்கு நாள் சசிதரனின் அன்புத் தொல்லைகளுக்கு(!) அளவே இல்லாமல் போனது. சாயாவின் உலகம் அவனாகவே, அவனைச் சுற்றியே இயங்க வேண்டும் என்று எதிர்பார்த்தவன், கிட்டத்தட்ட அதை சட்டமாக்கினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாஸ்டர் பெட்ரூமில் இருந்த கட்டில், மற்றும் இதர மரச்சாமான்களை பாலீஷ் செய்து, காயவைத்து, மெத்தை குஷன்களை புதிதாக வாங்கி, அறைக்குப் புதிதாக பெயிண்ட் அடித்து, பாத்ரூமை முற்றிலும் புதியதாக மாற்றி என, முதல் இரண்டு வாரங்கள் அடிப்படை வேலையிலேயே கழிந்தது.

சொல்லப்போனால், அந்த அறை அப்படியே  கூட உபயோகிக்கும் நிலையில்தான் இருந்தது. அந்த ஒற்றை படுக்கையறைக்கு ஆகும் செலவு, சாயாலக்ஷ்மியின் குடும்பத்தில், அவள் பிறந்ததில் இருந்து ஆன மொத்த செலவுக்கும் மேல்.

சாயா முதலில் பொருட்களை, அதன் தரத்தை, விலையைப் பற்றிக் கேள்வி கேட்டு, கணக்கிட்டு தேர்வை உறுதி செய்யத் தயங்கினாள். ஒரு இன்ட்டீரியரை வரவழைத்து, அவளுக்கு அறிமுகப்படுத்திய பின், வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்தான் சசிதரன்.  

சாயா  எதையும் முடிவு செய்யாததை, உள் அலங்கார நிபுணர் சசியிடம் கூறியதில், மனைவி, இன்னும் தன் பின்னணியில் இருந்தே யோசித்து, தயங்குவதைப் புரிந்து கொண்ட சசிதரன் “சாயா, பணத்தை பத்திக் கவலைப்படாத. வேஸ்ட்டா செலவு செய்யறோமோனானு நினைக்காத. நாம உழைக்கறோம். செலவு செய்யறோம்” என்று அறிவுறுத்தியதைப் புரிந்து கொண்டாள். பிறகு, மளமளவென வேலைகள் நடந்தது.

சசிதரன் கொடுத்த கெடுவுக்கு ஐந்தாறு நாட்கள் முன்னதாகவே  அந்த மாஸ்டர் பெட்ரூம், சில சின்னச் சின்ன வேலைகளைத் தவிர, பெரும்பாலும் தயாராகி விட்டது. 

முந்தைய நாள் மாலையில்தான், கர்ட்டன்ஸ், அங்கிருந்த திவான், லவ் சீட் எனும்  ஒரு கூடை வடிவ சோஃபா, பெட், குஷன்கள், தலையணைகள் என எல்லாவற்றுக்கும் மூன்று செட்டுகள் புதிதாக தைக்கப்பட்டு வந்திருந்தது. 

மீதமிருந்தது, இவர்களது சாமான்களை, சசியின் அறையிலிருந்து இங்கு கொண்டு வந்து அடுக்குவது மட்டுமே. அவற்றை வேலையாட்களின் உதவியுடன் இங்கே தூக்கி வந்த சாயா, காலையில் சசிதரன் வேலைக்குக் கிளம்பியதுமே, மேலே சென்று, தன் வேலையைத் தொடங்கி விட்டாள்.

முதலில் தன்னுடைய உடைகள ஒரு அலமாரியில் அடுக்கினாள். சசிதரனின் உடைகளையும் இழுப்பறையல், ஹேங்கரில், தட்டுகளில், என பிரித்து, அவனது வழக்கம்போலவே செட் செய்தாள். சசிதரனுக்கு, வேலையாட்கள் யாரும் அவனது பொருட்களைக் கையாள்வது  பிடிக்காது. 

பிறகு அந்த அறையிலிருந்து எடுத்து வந்த சசிதரனின் புத்தகங்களை அங்கிருந்த ஆளுயர சுழலும் புக்  ஸ்டேண்டில் வைப்பதற்காக, கீழே அமர்ந்து, சைஸ் மற்றும் மொழி வாரியாக பிரித்துக் கொண்டிருந்தாள். 

புத்தகங்களை, ஒரு மெல்லிய காட்டன் துணியால் துடைத்து அடுக்கியவள், அதில் ஒன்றிரண்டு பழைய மேனேஜ்மென்ட் புத்தகங்களும் இருக்க, ஜாக்கிரதையாகத் துடைத்தாள். இவ்வளவு பழைய புத்தகம் யாருடையதாக இருக்கும் என்ற ஆர்வம் பிறக்க, எதேச்சையாக புத்தகத்தைப் பிரித்துப் பார்க்க, இன்பசேகரன் என்று எழுதி இருந்தது. யாரென்று புரியாமல், வைத்து விட்டாள்.

யாரோ கதவைத் தட்டவும், கீழே அமர்ந்திருந்தவள் வேகமாக எழப்போக, ஒரு நொடி அறையே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது. சமாளித்துக்கொண்டு, கதவைத் திறக்க, வனிதா நின்றிருந்தாள். 

வனிதா மதிய சமையல் குறித்து எதையோ கேட்க, பதில் சொன்ன சாயா “சூடா ஒரு டீ கொண்டு வாங்கம்மா” என்றாள். பொதுவாக உணவு நேரத்தைத் தவிர எதுவும் கேட்காத புது எஜமானியம்மா டீ கேட்கவும் வனிதா “உடம்புக்கு எதுவுமாம்மா?” என்றாள்.

“இல்ல, சூடா ஏதாவது குடிக்கலாம்னு…”

“சரிம்மா, இதோ” என்று கீழே சென்றவள், ஐந்தே நிமிடங்களில், டீயுடன் வந்தாள். அவளை அனுப்பியவள், டீயைக் குடித்துவிட்டு, ஆயாசமாக இருக்கவும், சோர்வுடன் அங்கிருந்த திவானில் படுத்தவளுக்கு, அடித்துப் போட்டது போன்ற தூக்கம்.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த சசிதரன்,  வரும்போதே “சாயா, சாயா’ என்று பரபரப்புடன் உரத்த குரலில் அழைத்துக் கொண்டே வந்தான். 

கீழே சாயாவைக் காணாமல், தங்கள் அறையில் மனைவியைத் தேடியவனுக்கு, அவள் அங்குமில்லாது போகவும் சுறுசுறுவென்று கோபம் எழுந்தது, 

இந்த நான்கு மாதங்களில் நின்றால், நடந்தால், மனைவியின் அருகாமைக்கும் சேவைகளுக்கும் நன்கு பழகி இருந்தவனுக்கு, அவளைக் காணவில்லை என்றதும் கோபம் வந்து விட்டது.

இப்போதெல்லாம் அவனுக்குக் கை, கால்களில் நகம் வெட்டுவது கூட சாயாதான் செய்தாள். சாயா ஒரு பத்திரிகை படிப்பதில், டீவி பார்ப்பதில் ஆழ்ந்திருந்தால் கூட அவனுக்குப் பிடிப்பதில்லை. 

எதையாவது சொல்லி, செய்து, எப்படியாவது அவளது கவனத்தை தன்னிடம் திருப்பி விடுவான்.

சில நேரம் “நான் உண்டு, என வேலை உண்டுன்னு இருந்தவனை நீதான்டீ செல்லம் கொஞ்சிக் கெடுத்துட்ட” என்று பழியை அவள் மீது போடுவான். 

சாயா ஏதாவது  பதிலளிக்க வந்தால் “இப்படியெல்லாம் எனக்கு யாருமே செஞ்சதில்லை தெரியுமா? நான் உன்னை முன்னாலயே பாத்திருக்கணும் சாயா. நீ எனக்குக் கிடைச்ச கிஃப்ட்டுடீ” என்று அவளை மூச்சு முட்ட அணைத்துக் கொள்வான்.

வேறொரு சமயம் அவனே “ஏன், நீ எனக்கு இதைக்கூட செய்ய மாட்டியா?” என்பான். சசி அடிக்கடி சொல்லும் இந்த வார்த்தைகளின்போது, அவனது தொனியும் முகபாவனையும் பல நேரம் ஒத்துப் போகாது. அவன் கோபமாகச் சொல்கிறானா, விளையாட்டுக்கு தன்னைச் சீண்டுகிறானா என்றே புரியாமல் நிற்பாள் சாயா.

 இந்த வம்புக்குதான் அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவனுடனே என்றுதான் இருப்பாள்.அதையும் விரும்பியேதான் செய்தாள். இன்று அவளறியாமல் உறங்கி விட்டாள்.

சசிதரன்  ஏதோ யோசனையுடன் மாஸ்டர் பெட்ரூமுக்கு வந்து பார்க்க, அறையெங்கும், புத்தகங்களும், மீதமிருந்த துணிமணிகளும், கலவையான சாமான்களுமாக ஆங்காங்கே கிடக்க, அங்கிருந்த திவானில் படுத்து, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் சாயா.

அவன் வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும், மனைவி அவனுடனே இருக்க வேண்டும் என்ற அவனது எதிர்பார்ப்பு தெரிந்தும், உறங்குபவளை ஒரு வேகத்துடன்  எழுப்பப் போக, அருகில் சென்ற உடன், மனதை மாற்றிக்கொண்டு, அந்த சிறிய திவானில், அவளருகில் படுத்துக் கொண்டு, அவளை அணைத்துக் கொண்டான். 

அவனது உயரத்துக்கும், ஆகிருதிக்கும், பொருந்தாமல், குட்டைப் பாவாடை போல் இருந்தது, திவான்.

சாயாவை அழுத்தமாக, வன்மையாக அணைத்திருந்தவனது கனமும், இறுக்கமும் சேர்ந்து, சாயாவுக்கு மூச்சுத் திணறியது. இருமினாள். விழித்தவள், கணவனைக் கண்டதும் பதறி எழ முயற்சிக்க, எங்கே? அவன்தான் மலைப்பாம்பு போல் அவளைச் சுற்றி இருந்தானே!.

அவனது எதிர்பார்ப்பை புரிந்திருந்த சாயாலக்ஷ்மி,  தூங்கி விட்டதற்கான குற்ற உணர்வுடன் “ஸாரிங்க, நல்லா தூங்கிட்டேன் போல. எப்ப வந்தீங்க?” என்றவள், அவனது  இறுக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தாள்.

“சும்மா நெளியாதடீ. இப்பதான் வந்தேன். உன்னைக் காணாம, எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?”*

“நான் எங்க போகப் போறேன்? இங்கதான் சாமானை அடுக்கி வெச்சுக்கிட்டு இருந்தேன்”

அறையைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவன் ” பரவாயில்லை. ரூமை நல்லாவே செட் பண்ணி இருக்க” என்றான் பாராட்டுதலாக. உண்மையில், அறையைத் தயார் செய்யச் சொன்னவன், பிறகு, இன்ட்டீரியருக்கு ஆட்களைக் காட்டியதோடு சரி. இன்றுதான், இந்த அறைக்குள்ளேயே வருகிறான். 

அவனது பாராட்டில் மலர்ந்தவள் “சரி வாங்க சாப்பிடலாம்”

“அப்புறமா சாப்பிடலாம்” என்றவனின் பார்வையும் குரலும் மாற, சோர்வு மீதூற இருந்த சாயா, அந்நேரத்தில் அவனைத் தவிர்ப்பதற்காக “சாப்பிட நேரமாச்சுங்க, வாங்க போலாம்” என்று மீண்டும் எழ முற்பட, அவளது முயற்சி புரிந்தவன், எதுவும் பேசாமல் விருட்டென எழுந்து, வெளியேற, ஸ்தம்பித்த சாயா வெளியே வரும் முன், அவனது கார் கிளம்பும் ஓசை கேட்டது.

சசி, தன் வேலை முடிந்து, மதிய உணவுக்கு வரும் நேரம், ஒவ்வொரு நாளும் மாறுபடும். அவனது டிரைவர், வீட்டில் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் அவன் வரும் நேரம் தெரியாது, சாப்பிடவோ, மதிய ஓய்வுக்கோ செல்ல முடியாது, காத்திருப்பர்.

கல்யாணத்திற்கு முன் டிரைவர் வந்து, அவன் இருக்குமிடத்திற்கு எடுத்துச் செல்வாராம். இப்போது இவளுக்காகதான் வருகிறான் என்றதிலேயே சாயா, உருகி விட்டாள்.

“உங்களுக்கு நான் சாப்பாடு போடறேங்க” என்று சாயா சொன்னாலும், நீ போடு, ஆனா, அவங்களும் இருக்கட்டும் என்பான்.

சாயாவுமே, தொடர்ந்து, அந்த மார்ச் இறுதி கணக்கெடுப்பின்போது, சசிதரன் வருவதற்கு மூன்று மணி, நான்கு மணி என்று ஆனதில், சாயாவுக்குப் பசித்தது. ஒரு நாள் மணி நாலைத் தாண்டியும், அவன் வராதிருக்க, 

பார்த்த சாயா அவன் வந்து சாப்பிட்டதும், ” சீக்கிரமா வந்து சாப்பிட்டுப் போய்டுங்களேன். இல்லை, நான் வேணா அங்கயே  குடுத்து விட்ரவா?” எனவும் பலமாக மறுத்தான்.

“இல்லை, உன்னோட சேர்ந்து சாப்பிடணும்னுதான் நான் வீட்டுக்கு வரேன்” என்றான். பசி மீறி பழம், ஜூஸ் என்று எதையாவது தின்று, குடித்து வைப்பவளுக்கு சாப்பாடும் இறங்காது. ஆனால், சசியே அவன் கையால் பரிமாறுவான்.

அவன் சாப்பிடாமல், ஆத்திரத்துடன், கிளம்பிச் செல்ல, செய்வதறியாது, கீழே இறங்கி வந்தாள். அவனது ஃபோனை பல முறை முயன்றும், எடுக்கவில்லை. 

சாயாவுக்குப் பசித்தது. பசி முற்றியதில், நெஞ்செரிச்சலும், உமட்டலுமாக, வாயில் பித்த நீர் ஊறியது. இரண்டு, மூன்று கிளாஸ்  தண்ணீரைக் குடித்தாள். பொதுவாக கோத்தகிரியின் காலநிலைக்கு அவ்வளவு தண்ணீர் தேவைப்படாது.

நேரம் ஆறை நெருங்கியது. விளக்கேற்றியவள், சோர்வுடன், மீண்டும் மாடிக்கே சென்றாள். இதுவரை அவளிடம் கோபப்பட்டாலும், உடனே சமாதானமும் மன்னிப்புமாக இழையும் கணவன், தான் அவனை, அவனுக்கு வேண்டுமென்றே  மறுத்து விட்டதாக நினைத்து கோபத்தில் இருப்பது புரிந்தாலும், இதை எப்படி சரி செய்வதெனக் குழம்பினாள்.

ஏழுமணிக்கு ஸ்ரீதரன் வந்திருப்பதாக வனிதா மீனா வந்து சொல்லவும், எழுந்து தன்னை சரிசெய்து கொண்டு, கீழே சென்றாள். அதற்குள், சசிதரனின் காரும் வந்து நின்ற சத்தம் கேட்டது.

மாடிப்படியில் இறங்கிய சாயா, வழக்கம்போல், உள்ளே வந்த கணவனின் பையை வாங்குவதற்காக அவனருகில் செல்லுமுன், காலையில்  போலவே மீண்டும் தலைசுற்றவும், சாப்பிடாமல் இருந்ததும் சேர்ந்ததில், சட்டெனத் தள்ளாடவும், ஸ்ரீதரன் “அண்ணீ” என்று கூவியபடி, பாய்ந்து சென்று அவளைப் பிடித்தான்.

அவ்வளவுதான். அதுவரை சாயாவை யாரோ போல பார்த்துக் கொண்டே உள்ளே வந்த சசிதரன், தன் கைப்பையை, அதில் லேப்டாப் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் சோஃபாவை  நோக்கி வீசியவன், “விட்றா அவளை” என்று உறுமியபடி சாயாவை ஸ்ரீதரனிடமிருந்து பிடுங்காத குறையாக தன் கைகளில் அள்ளியவன், சோஃபாவில் அமர வைத்தான்.

சாயா மயக்கத்துடன் அவன் மீதே சரியவும், ஸ்ரீதரன் “வனிதாம்மா, சீனி நிறைய போட்டு, சூடா டீ போட்டு எடுத்துட்டு வாங்க” என்றவன் உள்ளே சென்று தண்ணீருடன் வந்தான்.

தன்னிடம் அக்கறை காட்டும் அண்ணியின் உடல்நிலையில், சசிதரனின் செயலை ஸ்ரீதரன் பொருட்படுத்தவில்லை.

“சாயா, என்னாச்சு உனக்கு? எந்திரிடீ” என்று பதறிய சசிதரனை வீட்டில் இருந்த வேலையாட்களும் ஸ்ரீதரனும் ஏதோ அதிசயம் போல் பார்த்தனர். 

மனைவிக்கு டீயைப் புகட்டியவன் “வனிதாம்மா, என்னாச்சு? அம்மாவுக்கு உடம்பு முடியலையான்னு கூட பாக்க மாட்டீங்களா?”

“அம்மா ஒண்ணும் சொல்லலை தம்பி. காலையில என்னைக்கும் இல்லாம சூடா டீ குடுங்கம்மான்னு கேட்டாங்க. கப்பை எடுக்க போனேன். நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. சரி, நிறைய வேலை செஞ்ச களைப்பா இருக்கும்னு…”

“அண்ணி மதியம் சாப்பிட்டாங்களா?” என்றான் ஸ்ரீதரன். வனிதாவும் மீனாவும் அமைதியாக நின்றனர்.

அவர்களுக்கு கணவன் மனைவிக்குள் ஏதோ ஊடல் என்ற அளவில் புரிந்திருந்தது. 

சசிதரனுக்கு சொரேலென்றது. தான் கோபத்துடன் வெளியேறியதில், சாயா எதுவும் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை என்று புரியவும் ஸ்ரீதரனிடம் கார் சாவியை நீட்டியவன் “காரை எடு. ரங்கநாயகி க்ளீனிக் வரைக்கும் போய்ட்டு வரலாம் என்று, சாயாவை தூக்கினான். ஸ்ரீதரனுக்கு மயக்கம் வராத குறைதான்.

கார் நகர்ந்ததுமே, குளிர் காற்று வீசியதில், முழுதாக விழித்து விட்ட  சாயா , ஸ்ரீதரன் காரை ஓட்டுவதையும், தான் கணவனின் அணைப்பில் இருப்பதையும் உணர்ந்தவள், சட்டென விலக யத்தனிக்க, சசி  “இவ ஒருத்தி, இப்ப என்ன, கம்முனு வா. எனக்குக் கோவம்னா நீ ஏன் சாப்பிடாம இருந்த?” என்று காய்ந்தான்.

‘சாப்பிட்டு இருந்தால் என்ன சொல்வானோ?’ என நினைத்தவளுக்கு, அக்கறையையும் அதட்டலாகவே வெளிப்படுத்திய கணவனைக் கண்டு, சாயாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சிரிக்காதடீ, பயந்துட்டேன், தெரியுமா?”

“இப்ப எங்க போறோம்?”

சசி “டாக்டர்கிட்ட” எனவும் “அதெல்லாம் எதுக்குங்க?” என்றவளிடம் “ஒர் வேளை சாப்பிடலைன்னாலே மயக்கமடிச்சு விழுந்தீன்னா, என்ன செய்யறது?” எனவும், சாயா வாயை மூடிக் கொண்டாள்.

இவர்களது பேச்சைக் 

கேட்டுக் கொண்டு, அமைதியாக காரை ஓட்டிய ஸ்ரீதரனுக்கு, தன் அண்ணனின் இன்னொரு முகமும், அண்ணிக்கான அவனது அக்கறையும் ரொம்பவே பிடித்தது.

டாக்டர் ரங்கநாயகி எழுபது   வயதான டாக்டர். பொதுநல மருத்துவர்தான். அவரது கணவரும் மருத்துவர்தான். சமீபமாக இறந்துவிட்டார். இவர்களது குடும்ப மருத்துவர்.

“வா, சசி,  என்னம்மா புதுப் பொண்ணு, எப்படி இருக்க?” என்றார் உரிமையுடன்.

“யாருக்கு என்ன?” எனவும் விவரம் சொல்ல, சசிதரனை வெளியில் அனுப்பி விட்டார்.

அவளது மாதாந்திர நாட்களின் கணக்கு, அவளுக்கும் சசிக்குமான தாம்பத்ய உறவைப் பற்றிக் கேட்டவர் “நீ கர்ப்பமா இருக்கன்னு நினைக்கறேன். இதை எடுத்துட்டு போய், டெஸ்ட் பண்ணிட்டு வா” என்று விவரம் சொல்லி உள்ளே அனுப்பினார்.

ஆறு நிமிடங்களில், அவள் அம்மா ஆகப்போவதை உறுதி செய்தார் டாக்டர். சசியையும் அழைத்து வாழ்த்தியவர் “சசி, முப்பத்தஞ்சு நாள்லயே ஹெவி சிம்ப்டம்ஸ் தெரியுது. சாயா ஹெல்த்தியாதான் இருக்கா. எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுலாவே இருங்க” என்றார்.

சாயாவிடம் “நேரத்துக்கு சாப்பிடு. ஹேப்பியா இரு. இந்த மருந்தை எடுத்துக்கோ. இவன் ஏதாவது சொன்னா எங்கிட்ட சொல்லு, என்ன?” என்று விடை கொடுத்தார்.

மதியம் இருந்த மனநிலை மாறி, கொண்டாட்ட மூடுக்கு வந்திருந்த சசிதரன், ஸ்ரீதரனிடம் சொல்லி, கேக் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து, எல்லோருக்கும் கொடுத்து, தான் தந்தையாகப்போகும் 

செய்தியைச் சொன்னான். 

சசிதரன் மகிழ்ச்சியின் மிகுதியில், ஸ்ரீதரனை “இங்கேயே சாப்பிட்டுப் போடா” என்றது ஒரு வரலாற்று அதிசயம்.

அன்றிரவு எண்ணற்ற முறை மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்த கணவன், தன்னிடம் கோபித்துக் கொண்டதே, சாயாவுக்கு முந்தைய ஜென்மம் போல் தோன்றியது. 

ஆனால்….