பிம்பம் 16+ / அத்தியாயம் – 4

                   பிம்பம் 4

மழையும் குளிரும் கோத்தகிரியை வாட்டியெடுக்க, ஸ்ரீதரனுக்கு வந்திருந்த ஃப்ளூ ஜுரம் இறங்கவே முழுதாக ஐந்து நாட்களானது.

அந்த பெரிய வீட்டில், யார், எங்கு உறங்குகிறார்கள் என்றே புரியாமல், சாயா அநேக நேரம் தன் அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தாள். 

இவளும் சசிதரனும் மட்டுமே இருந்த வீட்டில் இவர்கள் மாடியறைக்கு வந்து விட்டால், கீழே யார் கதவைப் பூட்டுகிறார்கள், காலையில் வேலையாட்களுக்கு யார் கதவைத் திறக்கிறார்கள், என்றே, அவளுக்குத்  தெரியவில்லை.

சசிதரன் டூருக்குக் கிளம்புமுன் கேட்டதற்கு “நீ கவலைப்படாத. அவங்க பாத்துப்பாங்க. நீ நிம்மதியா இரு” என்று விட்டான்.

கையகல வீட்டில் இருந்த ஓட்டை உடைசல் சாமான்களையே பூட்டிப் பாதுகாத்துப் பழகிய சாயாவுக்கு, இத்தனை பெரிய வீடு, வேலையாட்களின் வசமே இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

இவளது வற்புறுத்தலில் இங்கு வந்த ஸ்ரீதரன், சங்கடத்துடனே தங்கினான். எதற்கும் “பரவாயில்லை அண்ணி. நான் பாத்துக்கறேன் அண்ணி” என்று ஒரு விலகலோடே பேசினான். 

ஸ்ரீதரனை வீட்டுக்கு அழைத்து வந்தது முதல், சாயா வேலையாட்களிடம் ஒரு சலசலப்பு எழுந்ததைக் கவனித்தாள். தாயம்மாவைத் தவிர, ஏனையோருக்கு ஸ்ரீதரன் மீது தனியானதொரு பரிவு இருந்தது.

இரண்டொருவர், அவன் இருமினாலே சார், தம்பி, என்று அவனைக் கவனிக்கச் செல்வதையும் பார்த்தாள்.

அவன் வீட்டுக்கு வந்த தினத்தன்று இரவு உணவுக்கு, ஸ்ரீதரனுக்கு கஞ்சியும், பிரட் டோஸ்ட்டும் கொடுக்கச் சொல்வதற்காக, சமையலறைப் பக்கம் சென்ற சாயா, வனிதா அவளுடன் சமையல் வேலை செய்யும் மீனாவிடம் “நல்ல காலத்துக்கு காச்சல் வந்த புள்ளையை சாயாம்மா போய் கூட்டிட்டு வந்தாங்க. இந்த வீட்ல எப்படி இருந்த குழந்தை அவரு.  அனாதையாட்டம் தனியா இருக்கறதைப் பாக்கவே கஷ்டமா இருக்கு மீனா”

அதற்கு மீனா “ஆமாங்க்கா, எஸ்டேட்ல கூட சிலர் அப்படிதான் பேசிக்கறாங்கன்னு எங்க வீட்டுக்காரர் சொன்னாரு. பெரிய இடத்துல பிரச்சனையும் பெரிசாதான் இருக்கும் போல” என்றதைக் கேட்டாள்.

அதேபோல் தன்னிடம் மரியாதையுடன் பேசும் ஸ்ரீதரன், தாயம்மாவைத் தவிர, வேலையாட்களிடம், இன்னுமே இயல்பாகப் பழகினான்.

தாயம்மாவின் “இவரு இங்க வந்ததை சசி தம்பிகிட்ட சொன்னியா கண்ணு?” என்ற கேள்வியை, சாயா ரசிக்கவில்லை. எனவே, பதிலளிக்காமல், கடந்து விட்டாள்.

ஸ்ரீதரனை அழைத்து வந்தவுடனேயே, சசிதரனுக்கு கால் செய்து சொல்லி விட்டாள்.

“ஓ, சரி நல்லா கவனிச்சுக்க சாயா. நான் சீக்கிரமா வரப் பாக்கறேன்” என்றவன்  ஸ்ரீதரன் வீட்டுக்கு வந்த மறுநாளே திரும்பி வந்து விட்டான்.

அதுவரை தந்தை, இப்போது சசிதரன் தவிர, வேற்று ஆண்களுடன் உறவுமுறையில் பழகி இராததால், கணவன் ஒருநாள் முன்னதாகவே வந்தது, சாயாலக்ஷ்மிக்கு ஒருவிதத்தில் நிம்மதியாகவே இருந்தது. 

சசிதரன் திரும்பி வந்ததுமே, அவன் ஸ்ரீதரனிடம் நேரடியாக

எதுவும் பேசவில்லை என்று உணர்ந்தாள். அதைப் பற்றி கணவனிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது.

முந்தைய நாளிரவு, வனிதா ஸ்ரீதரனுக்குப் பாலும், ஃப்ளாஸ்க்கில் வெந்தீரும் கொண்டு வைத்துவிட்டுச் செல்ல, அவனது நலம் விசாரித்து விட்டு, எதுவும் வேண்டுமானால் சொல்ல சொல்லி விட்டுத் தங்கள் அறைக்கு வந்தவளை,  சசிதரன்  “என்ன மேடம், உங்க சமூக சேவையெல்லாம் முடிஞ்சுதா?” என்று ஒரு மாதிரி நக்கலாக வரவேற்றான்.

ஒருவேளை அவனுக்குக் கோவமோ என்று அவன் முகத்தைப் பார்க்க, அவனது தொனிக்கும் அவனுக்கும் தொடர்பே இல்லாது, சிரித்தபடி அவளை நோக்கி இரு கைகளையும் விரித்தான். பக்கம் சென்றதும் “உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் சாயா.  இத்தனை நாளா நீ இல்லாம, நான் எப்படித் தனியா இருந்தேன்னே தெரியலைடீ” என்று மனைவியைத் தழுவியவனின், தேவையும், எதிர்பார்ப்புகளும், சாயாவுக்கு கூச்சத்தை உண்டாக்கியது. அதே நேரம், தனக்காக தன்னவன் ஏங்கிக் குழைகிறான் என்பதே பெருமிதத்தை அளித்தது.

மறுநாள் மாலையில் அதிசயமாக நாலு மணிக்கெல்லாம் வீடு திரும்பிய  சசிதரன் வந்தவுடன், சாயா “ஏங்க, நீங்க தம்பியை ஒண்ணுமே கேக்கலியே?”

“நீயேதான்  நல்லா கவனிச்சுக்கறியே, அப்புறமென்ன?”

“அதுக்கில்லைங்க..”

“நீயும் நானும் ஒண்ணுதான். இதுல நான் போய் நீ நல்லா இருக்கியா, அண்ணி நல்லா கவனிக்கறாளான்னு கேட்டேன்னு வை, நான் உன்னை நம்பலைன்னு ஆகிடும்டா”

 உடை மாற்றிக் கொண்டே பேசியவனை, வியப்பும் மகிழ்ச்சியுமாகப் பார்த்தவள், கீழே செல்லக் கிளம்பினாள்.

“ஏய், இங்க வா,  இந்த சட்டை பட்டனைப் போடேன். தலை ரொம்ப வலிக்குது சாயா. எனக்கும் ஜுரம் வருமோ என்னவோ? கொஞ்சம் அமுக்கி விடேன்” என்றவன், சாயாவை, கட்டிலில் உட்கார வைத்து, அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான். சாயா விரல்களால் மெதுவாக அமுக்கி, தலையைக் கோத, தூங்கி விட்டவனை, ஆறு மணிக்கு, அவனாக எழும் வரை, அவளால்  இம்மி கூட  அசைக்க முடியவில்லை.

அடுத்தநாள் காலையில் சசி  கிளம்பும்போதே, “இன்னைக்கு ஈவினிங் கோயம்புத்தார்ல  ஒரு பார்ட்டி இருக்கு. நான் மூணு மணிக்கு வந்துடுவேன். ரெடியா இரு” என்று விட்டு சென்றான்.

அது சசிதரனின் கல்லூரி நண்பர்களுக்காக சசிதரன் அளித்த விருந்து.  அதில் திருமணமானவர்கள் குடும்பத்துடனும், ஒன்றிரண்டு பேச்சிலர்களும்  வந்திருந்தனர். முன்று பெண்களும் தங்கள் கணவர், குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

அதில் வர்ஷினி என்பவள் “நீ எவ்வளவு லக்கி தெரியுமா? சசி பின்னால காலேஜ் பொண்ணுங்க எல்லாம் பைத்தியமா சுத்தும். அவன் என்னடான்னா உன் பின்னாடி சுத்தி இருக்கான். லக்கி யூ” என்றாள்.

அன்றைய விருந்தில், சாயாவையும் சசிதரனையும் அவனது நண்பர்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி ஓட்டித்தள்ளியதில், சாயாவுக்கு சில நேரம் சசிதரனைப்  பார்க்கவே கூச்சமாக இருந்தது. 

விருந்து முடிந்து, இரவு கோவை வீட்டில் தங்கி விட்டு, அடுத்த நாள் காலை பத்து மணிக்குதான் திரும்பினர். வரும் வழியில், முதலில் தான் எஸ்டேட் ஆஃபீஸில் போய் இறங்கிக் கொண்டு, அவளை வீட்டுக்கு அனுப்பினான்.

சாயா வருவதற்காகவே காத்திருந்தது போல், ஸ்ரீதரன் “இப்ப உடம்பு நல்லாயிடுச்சு அண்ணி. நான் கிளம்பறேன்” என்று பிடிவாதமாகப் போய் விட்டான்.

இந்த மூன்று நாட்களில், சசிதரனுக்கும் ஸ்ரீதரனுக்கும் நடுவில் ஒட்டாத் தன்மையைத் தவிர, வேறெதுவோ பிரசினை இருப்பதை சாயா புரிந்து கொண்டாள். அது என்றவென்றுதான் தெரியவில்லை.

ஸ்ரீதரனைப் பார்க்கவும் பழகவும் வெகு இயல்பாக இருந்தான். சசிதரனைப் போன்று பிடிவாதமான, அழுத்தமான அணுகுமுறையோ இல்லாது நட்பாகப் பேசினான்.

மரியாதையோ, எதற்கு தேவையில்லாமல் என நினைத்தானோ, அண்ணனிடமிருந்து சற்றுத் தொலைவிலேயே இருந்து கொண்டான். சொல்லப்போனால், சசிதரனிடம்தான் தம்பியின் மீது ஏதோ ஒர் வெறுப்பும் அலட்சியமும் இருந்தது என்று நினைத்தாள் சாயா. 

தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலுமே, சசியிடம் நேரடியாகக் கேட்கப் பயந்தவள் “ஏங்க, உங்க தம்பியை நம்ம கூடவே வந்து இருன்னு சொல்லலாம் இல்ல? இத்தனை பேரோட முதலாளி நீங்க, பெரிய வீட்டுல ரீங்க இருந்துக்கிட்டு, தம்பியை வெளிய போக சொல்லிட்டார்னு பேச மாட்டாங்களா?”

சசிதரன் சுள்ளென்று “யாருடீ பேசுவாங்க? பேசினா பேசட்டும். நானா அவனை வெளில போகச் சொன்னேன்? இப்பதான் கொஞ்சநாளா நிம்மதியா இருக்கேன். நீ வேற ஏழரையைக் கூட்டாத” எனவும் சாயா உண்மையிலேயே பயந்து விட்டாள்.

ஆனால் அவளது முகம் பார்த்து, உடனே தணிந்தவன் “ஸாரிம்மா, ஸாரிம்மா” என்று மன்னிப்புக் கேட்டான்.

பிறகு “உனக்கு அதுதான் சரின்னு பட்டா, அவனை நீயே கூப்பிடு. வந்தா வரட்டும். ஆனா, உன்னை எதுவும் மரியாதை இல்லாம பேசினா, நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றான்.

நேரம் பார்த்து ஸ்ரீதரனிடம் பேசத் தீர்மானித்தவள், அந்த வார இறுதியில் சசிதரனிடம் டீ ஃபேக்டரி தொடர்பான ஏதோ பேப்பரைத் தர வந்தவனிடம் “ஏன் தம்பி அங்க தனியா இருக்கீங்க. இங்க வந்து எங்க கூட, நம்ம வீட்லயே இருக்கலாமில்ல?” என்று கேட்டாள்.

“இல்லண்ணி. அது சரியா வராது”

“அப்ப , அடிக்கடி வரப்  போக இருங்க”

ஸ்ரீதரன் வேறு வழியில்லாமல் “சரியண்ணி” என்றான்.

நாட்கள் நகர, சாயாவுக்கு இருத்த ஒரே வேலை சசிதரனைக் கவனிப்பதுதான் என்றானது. காலையில் அவன் சொல்லும் உடையை எடுத்துத் தருவதில் இருந்து, இரவு அவனது கை விரல்களை சொடுக்கு எடுக்கும்  வரை, சாயா அவனது அருகிலேயே இருக்க வேண்டும் என நினைத்தான் சசி.

அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில், கீழே இருக்கும்போதும் வேலையாட்கள் சாயாவை அணுகி ஏதாவது கேட்டால், சசிதரனே பதில் சொல்லி அனுப்பி விடுவான்.

பார்ட்டிகள், திருமண விழாக்கள் போன்றவற்றிற்கு அழைத்துச் சென்றான். வீட்டில் இருக்கும் பொழுதுகளை விட, இது போன்ற பொது இடங்களில், சசிதரனின் அன்பும் அக்கறையும் இன்னும் அதிகமாகவே வெளிப்பட்டது.

அவனது மனதுக்குப் பிடித்த வகையில், அவன் எதிர்பார்க்கும் விதத்தில், சாயா நடந்து கொள்ளும்போதெல்லாம், அவளைத் தன் அன்பில் குளிப்பாட்டினான்.

அவனது அந்தரங்க எதிர்பார்ப்புகளிலுமே, அவன் மிகுந்த நிறைவாக, மகிழ்வாக உணரும் நாட்களில், அவளையும் அப்படி உணரவைத்தான்.

கூடிய விரைவிலேயே, அவனது தினசரி எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் தேவைகளும் என்னவென்று ஓரளவு புரிந்து கொண்டாள் சாயாலக்ஷ்மி. அல்லது அப்படி நம்பினாள்.

அதை சரியாக நிறைவேற்றும் பட்சத்தில், தவறாமல்  மனைவியைக் கொஞ்சிக் கொண்டாடினான் சசிதரன்.

செய்வதற்கு வேறு வேலையுமில்லாமல், பேசுவதற்கு ஆட்களுமில்லாமல், பெரும்பாலும் தனிமையில் இருந்த சாயா, கணவனின் தேவைகளை விரும்பியே பூர்த்தி  செய்தாள். சசிதரன் சாயாவை தன் இஷ்டப்படி வளைக்க நினைத்தது, அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ, உணர்ந்திருந்தாள். 

அவனது அன்பை, நெருக்கத்தை விரும்பியவள், தன்னை அவனுக்கேற்றபடி தகவமைத்துக் கொண்டாள். அதற்கு அவன்  தரும் பாராட்டையும், அன்பையும் பெறுவதற்காகவே, அவனது விருப்பத்திற்கு வளைந்து கொடுத்த சாயா, சசிதரனின் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போலானாள்.

இதற்குள் திருமணமாகி மூன்று மாதங்கள் கடந்திருக்க, சாயாவின் பொழுதுகள் வளர்ந்தன. டீவி, பத்திரிகைகள், புத்தகங்கள் என்று இருந்ததுதான். ஆனால், அதெல்லாம் பழகிக்கொள்ளாது உழைத்தவளுக்கு வெட்டிப் பொழுதுபோக்கில் விருப்பமில்லை.

அக்கம்பக்கம் என்று யாருமில்லை. உள்ளே பக்கத்தில் இருப்பது, வேலையாட்ளுக்கான குடியிருப்புதான். அவர்களுடன் பேச முடியாது. சசிதரனின் நட்புகள் குடும்பங்கள் அனைத்துமே சம்பிரதாயமான வகையைச் சார்ந்தவைதான்.

சாயாவின் வளமான வாழ்க்கை கண்களை உறுத்தியதோ அல்லது சசிதரனின் உயரத்தால் வந்த பயமோ, காரணம் எதுவாயினும் திருச்சியில் இருந்த கலா,  கூட வேலை செய்த ஒன்றிரண்டு பெண்கள் என யாருமே இவளைத் தொடர்பு கொள்ளவில்லை.  

பத்திரிக்கை வராவிட்டாலும் கூட கலாவின் திருமணத் தேதிக்கு முன் அவளோடு பேசியதற்கு “நீயெல்லாம் இனிமே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வருவியா என்ன?” என்ற கலாவின் பேச்சில் வாடியவள், பிறகு யாரையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. 

ஹரிணிக்கும், செமஸ்டர் நெருங்கிக் கொண்டிருக்க, காலையில் கல்லூரி, ஒருநாள் விட்டு ஒருநாள் நைட் டியூட்டி என்றிருக்க, வாரத்தில் ஓரிரு முறைதான் அவளுடன் ஃபோனில் பேச முடிந்தது. அதற்கும் பாதி நாள் நெட்வொர்க் தகறார் செய்தது.

பேசும்போதெல்லாம் ஹரிணி ‘எப்படிக்கா இருக்க, பொழுது எப்படி போகுது?’என்பாள். 

ஒரு முறை சசிதரன் நான்கு நாட்கள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் “அந்தப் பெரிய வீட்டுல தனியா இருக்க பயமா இல்லையாக்கா? பத்திரமா இரு” என்றாள். ஆனால் சாயாவுக்கு அதுவரை அப்படி எதுவும் தோன்றவில்லை.

ஸ்ரீதரனை அழைத்து வந்ததையும், பிறகு அவனை இங்கேயே வந்து விடுமாறு சொன்னதையும் ஹரிணியிடம் சொன்னதற்கு ” மாமா என்ன சொன்னார்?” என்றாள்.

மற்றொரு முறை “சும்மா இருக்காம ஏதாச்சும் செய்க்கா” என்றாள். தங்கை சொன்னதே மனதில் ஓட,  சசிதரனிடம்  “நான் வேணும்னா நம்ம ஃபேக்டரி இல்ல எஸ்டேட்ல வந்து உங்களோட வேலை செய்யவா?” என்றாள்.

நொடி கூட தாமதிக்காது “சேச்சே, நீ அவங்களுக்கு எல்லாம் எஜமானி. அங்க வந்து நீ அக்கவுண்ட்ஸ் பாக்கறதெல்லாம்…. அதெல்லாம் சரியா வராது, சாயா”

“வீட்ல ரொம்ப போர் அடிக்குதுங்க”

“இங்க வா” என்று அவளை மடியில் அமர்த்திக் கொண்டவன் “நீஇந்த வீட்டோட, என்னோட ராணிடீ . முதல்ல நீ என் கணக்கை முழுசா பாத்து செட்டில் பண்ணு. நிறைய பாக்கி இருக்கு. புரியுதா?” என்றவனின் கையும் மெய்யும் தனிக் கணக்கை எழுதியதில் அந்தப் பேச்சு அதோடு முடிந்தது.

சசிதரன் “சாயா, போர் அடிச்சா இந்த வீட்ல உனக்கு ஏதாவது மாத்தணும்னு தோணினா, உன் இஷ்டப்படி செய்” என்றான்.

பகலில் அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக சுற்றிப் பார்த்தாள். மாடியில் மூடி இருந்த மூன்று அறைகளைத் தவிர எல்லாமே கச்சிதமாய்  பராமரிக்கப்பட்டு இருந்தது.

சாயாவின் தந்தை கோவிந்தனின் ப்யூன் உத்தியோகத்தில் வந்த வருமானத்தில், நால்வருக்கான உணவு, உடை, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, இவர்களது படிப்பு என  கைக்கும் வாய்க்குமான இழுபறி போராட்டத்தில் வசதி படைத்தவர்களின் உள் அலங்காரங்களைப் பற்றி அவளென்ன அறிவாள்?

சொல்லப் போனால் , வேலை செய்யும்போது, அந்த வீட்டின் வேலையாட்கள் பேசிக் கொள்வதில் இருந்துதான் ரக் (Rug) என்பதற்கும் கார்பெட் (carpet) என்பதற்குமான வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டாள்.

டேபஸ்டரி ( Tapestry), ஸ்டெயின்ட் க்ளாஸ் (Stained glass), அப்ஹோல்ஸ்ட்ரி (Upholstery), கட்லெரி(Cutlery), க்ராக்கரி (Crockery) போன்ற  வேலையாட்களிடம் சர்வ சாதாரணமாக புழங்கிய வார்த்தைகள் முன்பே தெரிந்தாலும், அப்போதுதான் அவளால் அதை தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு அர்த்தம் தெரியுமோ இல்லையோ, பழக்கத்தில் அதன் பெயரும் அடையாளமும், உபயோகமும்  தெரிந்திருந்தது.  

எல்லாமே நேர்த்தியாக, நல்ல நிலையில் இருக்க புதிதாக எதை மாற்றுவது? அவற்றின் விலைக்கு திருச்சியில் இரண்டு வீடு வாங்கி விடலாம் போல என நினைத்தாள்.

திடீரென ஒரு ஞாயிறன்று காலை மனைவியை அழைத்துக் கொண்டு, அவனது அறைக்கு எதிர்ப் புறத்தில் இருந்த அறைக்கு சென்றான். 

அந்த அறை சுத்தமாகத்தான் இருந்தது, ஆனால் புழங்காமல் இருந்தது. மிகப் பெரிதான அறை. 

“இதான் மாஸ்டர் பெட்ரூம் சாயா. நாம இங்கதான் இருக்கப் போறோம். இதை நீ உன் இஷ்டப்படி மாத்து. உனக்கு ஒரு மாசம் டைம்”

“நம்ம ரூமே நல்லாதானேங்க இருக்கு. நாம ஏன் இங்க…”

“ம்ப்ச், சொன்னதை செய் சாயா. சும்மா கேள்வி கேக்கக் கூடாது. எங்கப்பா அம்மா இருந்த ரூம் இது”

சசிதரனின் குரலின் அழுத்தத்தில் “ஓ, சரிங்க” என்றாள். 

மறுநாள் முதல், காலையில் சசிதரன் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றதும், அந்த அறையில் இருந்த சாமான்களில் தேவை இல்லாதவற்றை அகற்றி, புதிதாக வாங்க வேண்டியதை பட்டியலிட்டு, அலமாரிகளை சுத்தம் செய்ய முற்பட்டாள்.

ஒரு அலமாரி மட்டும் பூட்டி இருக்க, திறந்து காட்டிய  சசிதரன் “இதுல எங்கம்மாவோட சில நகைகள், புடவைகள் இருக்கு. இதெல்லாம் உனக்குதான் சாயா” என்றான்.

‘நம்ம மாமியார் அந்தக் காலத்துலயே நல்ல ஸ்டைலா இருந்திருப்பாங்க போல’ என நினைத்துக் கொண்டாள் சாயா. பழைய புடவைகள் என்றாலுமே,  நல்ல ரசனையான கலெக்ஷனாக இருந்தது.

‘இது எப்படி எனக்கு மட்டும் சொந்தமாகும், நாளைக்கு ஸ்ரீதரனின் மனைவி வந்தால், அவளுக்கும் சமபங்கு உண்டே?’ என மனதில் நினைத்தாள் சாயா. கணவனிடம் அதைச் சொல்லி, அவன் ஏதாவது முரண்டினால், எதற்கு வம்பு? 

அந்த வேலையின் போதுதான்  இவ்வளவு பெரிய வீட்டில்  சசியினுடைய பெற்றோர்களின் படம் எங்குமே இல்லை என்பது சாயாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.