பிம்பம் 16+ / அத்தியாயம் – 3

                     பிம்பம் 3

சசிதரனின் வீட்டின் முன்னேயே பெரிதாக ஷாமியானா போட்டிருந்தனர். குழுக்களாக அமர்ந்து பேச வசதியாக, மேஜைகளும் நாற்காலிகளும் வட்டமாக போடப்பட்டிருந்தது. வீட்டின் வேலையாட்களும், ஃபேக்டரி, எஸ்டேட்டில் இருந்து சற்று திறமையான, பொறுப்பான ஆட்களும், விருந்தினர்  வருகை, கார் பார்க்கிங், உணவு ஏற்பாடு என கவனித்துக் கொண்டிருந்தனர்.

நேற்று முந்தைய தினம் நடந்த திருமணத்திற்கு, இன்று ரிஸப்ஷன். பேக்டரி மற்றும் எஸ்டேட் தொழிலாளர்களுக்குப் பரிசும் விருந்தும், முன்தினம் மதியமே ஃபேக்டரியில் வைத்துக் கொடுத்தாயிற்று. 

சசிதரன், தொழிலாளர்களுக்கு மனைவி சாயாவை முறையாக அறிமுகம் செய்து வைத்தான். பரிசுப் பொருளை அவள் கையாலேயே கொடுக்க வைத்தான். 

இன்று ஏனைய தொழில் தொடர்பு மற்றும் நட்புகளுக்காக வரவேற்பு. சாயாலக்ஷ்மியைத் தயார் செய்ய, அழகு நிலையத்தில் இருந்து ஒரு பெண் வந்தாள். 

சாயாவுக்கு நல்ல அடர்த்தியான தலைமுடி என்பதால் கொண்டை போட்டால் தலைவலி வரும். எனவே சற்றே தளரப் பின்னலிட்டு, கூடலூரிலிருந்து வரவழைத்த மல்லிகைப் பூவை  அளவாக சூட்டினாள், அந்த பியூட்டீஷியன். 

“கொஞ்சமா மேக் அப் போட்டுக்கங்க மேடம்” என்று வற்புறுத்தியவளிடம்  “இல்லை மாய்ஸ்சரைஸர் மட்டும் போதும்” என்றாள், சாயா. அந்தப் பெண், வந்ததற்கு வேலை என எதுவும் செய்யாமலே பணம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றாள்.

விருந்தினர்கள் வரத் தொடங்கி விட,  மனைவியை அழைத்துச் செல்ல உள்ளே வந்த சசிதரனின் கண்கள், ஆழ்ந்த மெரூன் கலர் புடவையில், எளிதான ஒப்பனையில் நின்ற சாயாவைப் பார்த்து ஒரு கணம் மின்னியது.

“ஹேய், சாயா” என்று நெருங்கியவன், ஹரிணியை அங்கே கண்டதும் சுதாரித்தவாறு 

“இதைப் போட்டுக்கோ சாயா” என்று ஒரு நகைப் பெட்டியைக் கொடுத்தான்.

அதில் கெம்பில் செய்யப்பட்ட, தோடு, ஜிமிக்கி, அழகான செதுக்கியது போன்ற ஹாரம், வளையல் என பழைய கால நகைகள் இருந்தது. சாயா தயங்கினாள். 

“போட்டுக்கோ சாயா. இது எங்கம்மாவோடது. இந்த வளையல் மட்டும் உனக்காக நான் செஞ்சது. ஆசாரி, இப்பதான் கொண்டு வந்து கொடுத்தார்” என்றவனின் கண்களில் மின்னிய ஆசைக்கு இசைந்தாள். 

“போகலாமா?” என்று அவளுடன் வாசலுக்கு நடந்தான். தாயம்மா கீழேயே நின்றிருக்க, இறங்கி வந்த சாயாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். நேற்றும் இதே பார்வைதான். ஆனால், இன்று இன்னுமே, தீவிரமாக, ஆராய்ச்சியாக….

சசிதரன் “தாயம்மா, எம் பொண்டாட்டி மேல கண்ணு கிண்ணு போட்றாதீங்க”

“நான் ஏன் கண்ணு போடப்போறேன்? நீ சந்தோசமா இருந்தா எனக்கு, அதுவே போதும் கண்ணு”

கோத்தகிரி, குன்னூர், ஊட்டி மட்டுமல்லாது சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர் என இன்னும் சில நகரங்களில் இருந்தும் விருந்தினர்கள் வந்திருக்க, அதில். இளங்கோவும் அவன் மனைவியும் கூட இருந்தனர்.

வழக்கமாய் மேடை போட்டு, ஒரு இடத்தில் நிற்காமல், சசிதரனும் சாயாவுமே, வாசலில் நின்று, வரவேற்றனர். அனேகமாக எல்லோரும் வந்து ஆங்காங்கே, நின்றும் அமர்ந்தும் பேசிக்கொண்டிருக்க, தம்பதிகள், வந்திருப்பவர்களுடன் பேசி, அறிமுகப்படுத்திக் கொண்டு கூட்டத்தில் கலந்தனர்.

நான்கு வருடமாக தன்னிடம் கை நீட்டி, மாதச்சம்பளம் வாங்கிய பெண்ணுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை, இளங்கோவால் ஜீரணிக்க முடியவில்லை.

ஸ்ரீதரனும் கூட்டத்தில் ஒருவனாக இருந்தான். அவன் சமீபமாகத்தான் டீ ஃபேக்டரியில்  தள பொறுப்பாளராக, வேலையில் சேர்ந்திருந்தான்.

சாயா ஆரம்பத்தில்,  தனது பின்னணியை புறந்தள்ளி, இந்த மேல்மட்டக் குலாவலுக்கு, அளவான புன்னகை முகமூடியை அணிந்து, தோரணையாகப் பேச வராமல் தவித்தவள், பின் வராததை எதற்கு வலுக்கட்டாயமாக வரவழைக்க வேண்டும், என தன் இயல்பான சிரிப்பும், தலையசைப்புமாக, கணவனைத் தொடர்ந்தாள்.

சிலர் சசிதரனிடமே, சாயாவின் அழகைப் புகழ்ந்தபோது, அவன், புன்னகையுடன் கடக்க, சாயாதான் அதை எதிர்கொள்ளத் தெரியாமல் அவஸ்தைப் பட்டாள்.

 வரவேற்பிற்கு வந்த பெரும்பாலோர் இயல்பாக இருக்க, சில வயதானவர்கள், நீண்ட நாட்களாக அங்கேயே வசிப்பவர்களின் கண்களில், சாயாலக்ஷ்மியைக் கண்டதும் ஒரு புரிதல், நட்புணர்வையும் தாண்டிய ஏதோ ஒன்று வெளிப்பட்டது போல் அவளுக்குத் தோன்றியது. 

முதல் நாள் காலையில் சின்ன வயதில் இருந்து சசிதரனை வளர்த்த அந்த தாயம்மா என்ற பெண்மணி, சாயாவைப் பார்க்க வந்து விட்டு, சாயாவையே பார்த்தபடி, சில நிமிடங்கள் பேச்சற்று நின்றவர், “ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் கண்ணு. சசி ரொம்ப நல்ல பையன். சின்ன வயசுலயே பொறுப்பை ஏத்துக்கிட்டு, தானே வளர்ந்தவன். அவன் மனசு கோணாம நடந்துக்க கண்ணு” என்று பெரூமூச்சு விட்டதை நினைத்துக் கொண்டாள்.

அவரிடம் தெரிந்த அந்த பார்வை சாயாவை ஏதோ செய்தது. அவரிடம் உணர்ந்த அதே பார்வையைதான் இவர்களிடமும் உணர்ந்தாள்.  ஆனால்

சாயாவிற்கு அதை இனம் காணும் அளவிற்கு நேரமோ, யோசனையோ, பரிச்சயமோ இல்லை. 

விழா இனிதே முடிந்து, குளிர் பரவத் தொடங்கி, தூறலாகத் தொடங்கிய மழை சாரலானது. 

வேலையாட்களும் சென்று முடங்கிக் கொள்ள, சசிதரன், சாயாவை அழைத்துக்கொண்டு  உள்ளே சென்று விட்டான்.

வீட்டுக்குள் நுழையும் முன், சாயா, வீட்டுக்குள் வராமல், வெளி வராந்தாவில், மழை நிற்பதற்காக நின்றிருந்த ஸ்ரீதரனைப் பார்த்தாள்.

ஸ்ரீதரன் இந்த வீட்டில் வசிக்கவில்லை. முதல்நாளிரவு, இங்கு வந்தவுடன் கவனத்தில் வராதது, மறுநாள் காலை உணவின்போது கருத்தில் பட, சாயா சசிதரனிடம் “உங்க தம்பியையும் சாப்பிடக் கூப்பிடுங்க” என்றாள்.

சில நொடிகளுக்குப்பின் சசி “அவன் இந்த வீட்ல இல்லை. எஸ்டேட்டுக்குள்ள சின்னதா இன்னொரு வீடு இருக்கு. அங்கதான் இருக்கான்”

“தனியாவா?”

“ம், ப்ளஸ்ஒன், ப்ளஸ் டூ ஊட்டி கான்வென்ட்ல படிச்சுட்டு, கோயமுத்தூர் காலேஜ்ல படிச்சான். ஹாஸ்டல்ல தனியாவே இருந்ததனால, படிப்பு முடிஞ்சு வந்ததும் அங்க போய்ட்டான்”

“ஓ, நீங்க சொல்லலியா?”

“அம்மா இறந்ததில் இருந்தே அவன் அப்படிதான். ஒட்ட மாட்டான்” என்ற சசிதரனிடம்  ஹரிணியும் அங்கே இருக்க, இந்தப் பேச்சை விரும்பாத பாவனை தெரிந்ததால், சாயா அமைதியாகி விட்டாள்.

மேலும் புது கணவனிடம், அதற்கு மேல்  கேட்கத் தயக்கமாக இருந்தது. அவனைப் பற்றி தனக்கு என்ன தெரியும்? சட்டென கோபப்பட்டு விட்டால்? ஒரு கண நேரம், தான் கல்யாணத்திற்கு அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தவள், மறுநொடியே “சேச்சே, இதெல்லாம் தப்பு” என்று மானசீகமாக அவனிடம் மன்னிப்பும் கேட்டாள்.

தங்கள் அறைக்குள் நுழைந்ததுமே, “சாயா, எப்படி இருந்தது ரிஸப்ஷன்?”

“நல்லா இருந்ததுங்க. நான் கூட,  வரவங்க எல்லாரும் பெரிய பெரிய பணக்காரங்களா இருக்காங்களே, ஆனா, உங்களை மாதிரியே என் கூட நல்லா பேசுவாங்களோ மாட்டாங்களோன்னு நினைச்சேன். நான் பயந்ததுக்கு, நல்லாவே இருந்ததுங்க”

“நான் இருக்கும்போது உனக்கென்ன பயம்? இது மாதிரி எண்ணமே உனக்கு வரக்கூடாது புரியுதா?”

“ம்”

சசிதரன், சாயாவை அங்கிருந்த கண்ணாடியின் முன் நிறுத்தினான். 

“சாயா, நீயே உன்னை நல்லாப் பாரு. இந்த வீட்டோட எஜமானிடீ நீ. உனக்கென்ன குறைச்சல்? சொல்லப்போனா இந்த ஜீவன் மேன்ஷனுக்கு இன்னிக்குதான் ஜீவனே வந்திருக்கு”

“என்ன…”

அவள் கழுத்தில் தன் நாடியை வைத்து அழுத்தியவன் “என்னை பேச விடு சாயா. நீ எவ்வளவு அழகா, கம்பீரமா இருக்க, தெரியுமா? இங்கிலீஷ்ல Lady of the house னு சொல்லுவாங்களே, அது போல இருக்கடீ”

மங்கிய மஞ்சள் விளக்கின் பின்னணியில், கோத்தகிரியின் குளிரில், சேலை கட்டி, தலைவாரி, ஐந்து மணி நேரத்திற்குப் பிறகும், கொஞ்சமே, கொஞ்சம் சோர்வுடன், நிறைய ஃப்ரெஷ்ஷாக, அழகாக இருந்தவளை, அவளாலேயே நம்ப முடியவில்லை. 

சற்றே கூச்சத்துடன், திரும்பியவளை சசி “எங்க ஓடற? நீ லேடின்னா, நான் உன்னோட லேடா. ஸோ, நோ மோர் வெக்கம்ஸ்” எனவும் மேலும் சிவந்தாள்.

ஹரிணிக்கு, அந்த வீடு, வீட்டின் நடைமுறைகள் என எல்லாமே  வித்தியாசமாக இருந்தது. அநேக வேலையாட்கள் இருந்தாலும், அதிகமாக யாரும் கண்களில் படுவதில்லை. 

எல்லா மலைப் பிரதேச வீடுகளையும் போலவே, இதுவும் சரிவான கூரையும், இருளும் குளிரும் சூழ்ந்துதான் இருந்தது. சசிதரனின் கொள்ளு தாத்தா காலத்திய இடம். தாத்தாவின் இளவயதில் கட்டப்பட்ட வீடு. சற்று ஆங்கிலேயர்களின் வீட்டின் அமைப்பில் இருந்தது.

கீழே பெரிய ஹால், பார்ட்டிகளுக்கென்றே, ஒரு பெரிய டைனிங் ஹால், இரண்டு, விருந்தினர் அறைகள், ஒரு அலுவலக அறை இருக்கிறது. பின்பக்கம் சமையலறை. சமையலறை என்றால், அதற்குள்ளேயே சமைக்கலாம், சாப்பிடலாம். அதற்கு வெளியே சிறியதாக ஒரு டைனிங் அறை இருந்தது. அங்குதான் சசிதரன் உணவு உண்கிறான்.

மாடியில், முன்புறம் சுற்று வராண்டாவும், ஹாலும், நான்கு அறைகளும் இருந்தன. மாடி ஹால்வரை சென்ற ஹரிணி, மாடியில், சசிதரனின்  அறையைத் தவிர, எல்லா அறைகளுமே பூட்டி இருப்பதைக் கண்டாள். 

பெரிய வீடு. பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களால் நிரம்பி இருந்தது. அழகாக பராமரிக்கப் பட்டிருந்தது. அதில் நேர்த்தி இருந்தது. நேசம் இல்லை. ஒரு பழைய அரண்மனையைப் போல, மியூசியத்தைப் போல துடைத்து, சுத்தமாக வைத்திருந்தனர். 

அந்த வீட்டின் மாஸ்டர் பெட்ரூம்  மாடியில்தான் இருந்தது. இப்போதைக்கு சசிதரன்  அவனது அறையில்தான்  இருந்தான். இனிதான் மாஸ்டர் பெட்ரூமுக்கு மாறவேண்டும்.

யாரும் யாருக்கும் சொல்லாமலே,  எண்ணெயிட்ட சகடையாய் வேலை நடந்தது. 

இரண்டு நாளும் வெயில் வரும் நேரத்தில், வீட்டைச் சுற்றி வாக்கிங் போனபோது, வேலையாட்கள் தங்களுக்குள் இயல்பாகப் பேசுவதைப் பார்த்தாள். தாயம்மாவைத் தவிர, மீதி அனைவரும் சசிதரனிடம் சற்று பயத்துடனே, பேசினர்.

பைக் ஒன்று கிளம்பும் சத்தம் கேட்க, ஹரிணி, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். மழை சற்றே குறைந்திருந்ததால், ஸ்ரீதரன் பைக்கில் ஏறிப் போவது தெரிந்தது.

நேற்று காலை முதல் மூளையைக் குடையும் கேள்வி, மீண்டும் எழுந்தது. சசிதரனின் தாய் இறக்கையில் அவனுக்குப் பதினாறு வயது, ஸ்ரீதரனுக்கு ஆறு வயது. தாய், தந்தை இருவரும் இல்லாத ஒரு ஆறுவயதுக் குழந்தை, தன் ஒரே சொந்தமான, அதுவும் பத்து வயது மூத்த அண்ணன், சசிதரனிடம் அதிக நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இருவரும் பேசிக் கொண்டே இவள் பார்க்கவில்லை. 

அதேபோல் சசிதரனும் அவர்களது நெருக்கமின்மையை அலட்சியமாகக் கையாள்வது போல்தானே தெரிகிறது?  என்னதான் அவனுக்கும் சிறு வயதுதான் என்றாலுமே, குழந்தைப் பருவத்தைத்  தாண்டாத தன் சின்னத் தம்பியின் மீது இன்னும் கொஞ்சம் பரிவுடன் இருந்திருக்கலாமோ?

தன் நினைவு போன போக்கில், தலையை உலுக்கிக் கொண்டவள், ‘அவங்க வீடு, அவங்க பிரச்சனை. அக்கா சந்தோஷமா இருந்தா சரி. வந்தமா சாப்ட்டமா, போனோமான்னு இருக்கறதுதான் நமக்கு நல்லது. 

பணக்கார வீட்டு உறவுகளைப் பத்தி எவ்வளவு சினிமால, கதைகள்ல, சீரியல்ல வருது? இன்னும் ஒரு வருஷம். படிப்பு முடிஞ்சதும், நல்ல ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்துடணும். கவர்மெண்ட் வேலை கிடைச்சா நல்லாதான் இருக்கும்’ என்று ஏதேதோ எண்ணியவாறே கண்ணயர்ந்தாள் ஹரிணி.

மறுநாள் ஹரிணி வேலூருக்குக் கிளம்பினாள்.  பொதுவாக, அவள் ஹாஸ்டலுக்குக் போகும்போதெல்லாம் சாயா அவளுக்குத் தெரிந்த இனிப்பு, காரம், ஊறுகாய் என எதையாவது செய்து கொடுத்து அனுப்புவாள். 

இந்தப்  புது இடத்தில் தயக்கமாக இருந்தது. தன்னை விட வேலை செய்பவர்கள் அதிக உரிமையோடு புழங்குவதான எண்ணம் எழுந்தது.

காலையில் சசிதரன், தான் எழுந்து, தயாராகிக் கிளம்பும் வரை சாயாவை அறையை விட்டு வெளியே வர அனுமதிப்பதில்லை. 

சசிதரன் முதல்நாளே, அவன் வீட்டில் இருக்கும்போது, அவனுக்கு வேறு வேலை இருந்தால் தவிர, சாயா தன்னுடனே இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி விட்டான்.

முதலிரவு முடிந்து காலை எழுந்து, குளித்து, வெளியே செல்லப் போனவளை “எங்கடீ போற?”

“கீழ போய்…”

“நீ ஒண்ணும் செய்யவேணாம். என் கூடவே இரு”

“ஏழு மணி ஆகிடுச்சுங்க. வீட்ல வேலைக்காரங்கள்லாம் இருக்காங்க”

“இருக்கட்டும். நாம என்ன செய்யணும்னு அவங்க முடிவு செய்யக்கூடாது”

“ஹரிணி இருக்காங்க”

“இருந்தா?  அக்காக்கு தனியா ஒரு வாழ்க்கை இருக்குன்னு புரிச்சுக்கட்டும். அதோட, புதுசா கல்யாணம் ஆனவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியாத அளவுக்கு, அவ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. நர்ஸிங் வேற படிக்கறா. முதல்ல அவ கூடவே அலையறதை நிறுத்து சாயா”

சசி, சாதாரணம் போல் சொன்னாலுமே, கிட்டத்தட்ட கட்டளை போல் மீற முடியாத குரலில்தான் ஒலித்தது. ஆனால், சாயாவின் முகம் வாடும் முன்பே அவள் அருகில் வந்து  இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“ஏய், எத்தனை வருஷமா, எனக்குன்னு யாருமே இல்லாம இந்த வீட்ல தனியாவே இருக்கேன் தெரியுமா? நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்னு நான் நினைக்கறது தப்பா சாயா?”

அவ்வளவு ஆளுமையான ஆண், இரவு முழுதும் அவளை ஆண்டவன், தன் அருகாமைக்கு  ஏங்குவதாகச் சொல்லவும், சாயாவுக்குள் ஏதோ நெகிழ்ந்தது, நிகழ்ந்தது. 

“தப்பில்லைங்க. இனிமே உங்களை விட்டு நான் எங்கயும் போக மாட்டேங்க” என்றாள்.

சிங்கப்பூர் போனதில் இருந்தே, நிறைய வேலைகள் தேங்கி இருந்ததால், சசிதரன் “நான் எஸ்டேட்டுக்குப் போய்ட்டு, ஃபேக்டரியை எட்டிப் பார்த்துட்டு, பதினோரு மணி போல வரேன்” என்று கிளம்பினான்.

“குட்மார்னிங் மாமா” என்ற ஹரிணியிடம் “குட்மார்னிங். நான் வந்த பிறகு நீ கியம்பலாம் உனக்கு என்ன வேணுமோ உங்க அக்காவை கேளு” என்றான்.

“சரி மாமா”

“சாயா, அவளுக்கு வழில சாப்பிட, ஹாஸ்டல்ல வெச்சு சாப்பிடற மாதிரி  ஏதாவது செஞ்சு குடுக்க சொல்லு”

“சரிங்க”

“வனிதாம்மா” என்று சமையல் செய்பவரை அழைத்தான்.

“சொல்லுங்க தம்பி”

“இவங்க ஊருக்கு கிளம்பறாங்க. மேடம் சொல்றதை கேட்டு, என்ன வேணுமோ செஞ்சு குடுங்க”

“சரிங்க தம்பி”

திருமணமாகி, கோத்தகிரி வந்ததில் இருந்து இப்போதுதான், சகோதரிகளுக்குத் தனிமை கிடைத்தது.

ஹரிணிக்கு, சாயா மிகுந்த மனநிறைவோடு இருப்பது புரிந்தது. சாயா சந்தோஷமாக சிரித்தாள். தந்தையின் மறைவு கூட இனிமேல் அக்காவை அதிகம் பாதிக்காது என்று எண்ணிக் கொண்டாள் ஹரிணி.

உண்மைதானே? 

‘பற்றிக்கொள்ளவும், படர்ந்து வளரவும் கணவன் இருக்க, இழப்பின் தாக்கம் தன்னளவுக்கு இருக்காதுதானே?’

‘அந்த பாதுகாப்பைக் கருதிதானே, பெற்றவர்கள், மக்களின் திருமணத்தை, தங்கள் கடமையாகக் கருதுகின்றனர்?’

“ஹரிம்மா, என்னடீ யோசனை?”

“அக்கா, நீ சந்தோஷமா இருக்கியா?”

“இதென்னடீ கேள்வி?”

“மாமா, உங்கிட்ட…”

“போடீ, பெரிய மனுஷி, நான் நல்லா இருக்கேன். உங்க மாமா எங்கிட்ட அன்பா, ஆசையா இருக்கார். போதுமா?” என்று சொல்லும்போதே, சாயாவின் கன்னங்கள் சிவந்தது.

அவளது மனநிலையைக் கெடுக்க விரும்பாத ஹரிணி, இரவுகளில், தான் கேட்ட காலடி ஓசையையும், ஸ்ரீதரனுக்கும், சசிதரனுக்கும் உள்ள உறவுச் சிக்கலையும், வேலையாட்களின் விலகலையும், மியூசியம் போன்ற வீட்டில், ஒரு பிணைப்பு, பர்ஸனல் டச் இல்லாத உணர்வு எழுவதையும் சாயாவிடம் சொல்லாமலே, சசிதரன் வந்ததும், கிளம்பினாள்.

சசிதரன், ஹரிணிக்குத் துணையாக, காரில் டிரைவரையும், அவன் மகளையும்  கோயம்புத்தூர் ரயில்நிலையம் வரை அனுப்பினான்.

அடுத்த இரண்டு வாரங்கள், சசிதரனின் வழக்கமான வேலைகள், சாயாவுடன் நெருக்கமான பொழுதுகள் என்று கழிந்தது.

அவளை எந்த வேலையும் செய்ய, வேலையாட்கள் அனுமதிக்கவில்லை. கிச்சனுக்கு  காபி போடலாம் என்று போனால் கூட, கள்ளிச் சொட்டு காபியை, கையில் கொடுத்தனர். 

சாயா, தன் வீட்டின் எளிமைக்கு ஏங்கினாள்.

கடைசியில் சசியிடமே “வேலையே செய்யாம போர் அடிக்குதுங்க” என்று தஞ்சமடைந்தாள்.

“உனக்கு ஏன்டா, இந்த வேலையெல்லாம்? ஜாலியா இரு”

சசிதரன் அடுத்த வாரத்தில், பிஸினஸ் ட்ரிப்பாக மூன்று நாட்கள் பெங்களூர் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்ற மறுநாள், ஸ்ரீதரனுக்கு கடும் ஜுரம் அடிப்பதாக, ஃபேக்டரியில் இருந்து ஃபோன் வந்தது.

என்ன செய்வதென்று யோசித்த சாயா, மழையை பொருட்படுத்தாது, டிரைவரை விட்டுக் காரை எடுக்கச் சொல்லி, ஸ்ரீதரன் வசிக்கும் வீட்டுக்குச் சென்றவள்,  வரவே மாட்டேன் என மறுத்தவனை, வற்புறுத்தி, வீட்டுக்கு அழைத்து வந்தாள்.