பிம்பம் 16+ / அத்தியாயம் – 2

பிம்பம் 2

தீபாவளி சமயம் என்பதால், திருச்சி நகரமே விழாக்கால மனநிலையில் இருக்க, சாயாலக்ஷ்மியும், ஹரிணியும் தங்கள் தந்தையின் படையலுக்கான ஏற்பாடுகளில் ஆழ்ந்திருக்க, கலாவின் அம்மாவும், அக்கம் பக்கத்தைச் சேர்ந்த இன்னும் இரண்டு பெண்களுமாக, படையலுக்கான சமையலை செய்தனர்.

அந்த முறை ஐப்பசி மாதக் கடைசியில் தீபாவளி வந்ததால், மழை வேறு விடாது படுத்தியது. ஹரிணி மீண்டும் கல்லூரிக்குத் திரும்ப வேண்டும் என்பதால், ஐந்தாம் நாளே கருமாதி காரியங்களை செய்து, இன்று பத்தாம் நாளில் படையல் வைக்கின்றனர்.

இதில் ஒரு நன்மையாக, தீபாவளி மற்றும் மழையின் காரணமாகத் தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

சங்கிலியை விற்ற பணம், பெரும்பாலும், காரியம், படையல், அந்த மாத வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை சாமான்கள் என வேகமாகக் கரைந்தது.

நல்ல வேளையாக இவர்களுக்கு சொந்தம் என்று அதிகம் யாருமில்லை. அவளது தாய் வழியில் ஒரிரு தூரத்து சொந்தங்களும், சாயாலக்ஷ்மியின் தாய்மாமா இறந்து விட, அவரது மனைவியும் மகளும் மட்டுமே. அவர்கள் இருவரும் வந்திருந்தனர். இவர்கள் அளவுக்குக் கூட வசதி இல்லாதவர்கள்.

வீடு முழுவதும் பெருக்கி, மெழுகி, சாயா தனக்கென வாங்கிய முதல் ஸ்மார்ட் ஃபோனில் எடுத்த,, தந்தை கோவிந்தனின் புகைப்படத்தை, ப்ரிண்ட் போட்டுக் கொண்டு வந்து, தாயின் படத்தின் அருகே வைத்து, சந்தனம் குங்குமம் இட்டு என விடிகாலை முதலே வேலை செய்தாலும், சாயாலக்ஷ்மியின் மனம் முழுவதும் இன்று சசிதரன் வருவானா என்ற கேள்வியிலேயே நின்றது.

அன்று தந்தையின் உடலை எரியூட்ட உதவி, காவிரியில் கரைக்கவென அஸ்தியையும் வாங்கிக் கொடுத்து, கட்டாயப் படுத்தி, ஒரு நல்ல ஹோட்டலில் உண்ணச் செய்தபின், இரவு பத்தரை மணிபோல் பஸ் ஸ்டாண்டில் கொண்டு வந்து விட்ட சசிதரன், “ஒரு நிமிஷம் சாயா” என்று இவளை மட்டும் தனித்துப் பேச அழைத்தான்.

காலத்தில் அவன் செய்த உதவியால், இப்போது சாயாவின் மனம் முழுவதும், சசியின் பால் நன்றியால் நிறைந்திருந்தாலுமே, தங்கை ஹரிணியைத் தயக்கத்துடன் பார்த்தபடி அவன் அருகே சென்றாள்.

“சாயா, செலவுக்குப் பணம் ஏதும் வேணுமா?”

சசிதரனின் கரிசனத்தில், சாயா அதிகம் உணர்ந்தது தன் ஏழ்மையையும், இயலாமையையும். வேகமாக ‘வேண்டாம்’ என்று தலையாட்டினாள்.

அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் ‘ஓகே’ என்று தோளைக் குலுக்கினான்.

“நான் நாளைக்கு சிங்கப்பூர் போறேன். ஒரு வாரத்தில் வருவேன். உன் மொபைலைக் குடு” என்றவன், அவளது மொபைலில் இருந்து, தனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்தான்.

“ஏதாவது வேணும்னா தயங்காம கால் செய், புரியுதா?”

“சரிங்க”

“நான் வர வரைக்கும் உங்க அப்பா இல்லாம அந்த வீட்ல சேஃபா இருப்பியா? ஒண்ணும் பயமில்லையே?”

“பழகின இடம்தாங்க. பயமில்லை. அப்பா ஊருக்கு போன இந்த நாலு நாளா கலா அக்கா கூடதான் தூங்கறேன்”

“ஆமா, உங்கப்பா எதுக்கு கோயம்புத்தூர் வந்தார்?”

“அது… அது வந்து”

“எது வந்து?”

“அது நீங்க அப்பாகிட்ட கல்யாணத்தைப் பத்திப் பேசினதும், உங்க ஊர்ல வந்து உங்களைப் பத்தி விசாரிக்க…”

“விசாரிச்சுட்டாராமா? ஏதாச்சும் சொன்னாரா?”

“இல்லியே, எதுவுமே சொல்லாம போய்ட்டாரே” என்ற சாயா சட்டென அழத் தொடங்கினாள்.

“ஏய், கன்ட்ரோல் யுவர் செல்ஃப்”

சாயா அழுவதைப் பார்த்துவிட்டு, ஹரிணி அருகில் வந்தாள்.

சசிதரன் “ஒகே, அப்ப நான் கிளம்பறேன். டேக் கேர்” என்று தன் காரில் ஏறிக்கொண்டான். ஹரிணி, சாயாவின் சிந்தனையை அறுத்தாள்.

“அக்கா, பால் எவ்வளவுக்கா வேணும்?”

“பாயாசம், டீ, காபின்னு நாலு லிட்டராவது வேணும்”

இன்று படையல் என்று சசிதரனுக்கு மெஸேஜ் செய்திருந்தாள். அவன் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும், இதற்கெல்லாம் வருவதற்கு அவன் ரத்த சொந்தமா என்ன, என்ற விரக்தியுமாக இருந்தாள் சாயா.

தாயை இழந்ததில் இருந்து வீட்டு வேலை, படிப்பு, பிறகு சூப்பர் மார்க்கெட் வேலை என்று பிஸியாக இருந்தாலும், அவளது அப்பா கோவிந்தனுமே எல்லா வேலைகளும் செய்வார். பொறுப்பு அவருடையதாக இருந்தது. அவர்கள் தெருவிலேயே குடிப்பழக்கம் இல்லாத வெகு சிலரில், அவரும் ஒருவர்.

தந்தையின் இழப்பும், தங்கையின் பொறுப்பும், பாதுகாப்பற்ற உணர்வும், எதிர்காலமும் மிரட்ட, மனது ஆதரவான வார்த்தைகளை, சாய்ந்து கொள்ளத் தோளைத் தேடியது. எளிதாகச் சொன்னால், எந்த நம்பிக்கையில் என்று தெரியாவிட்டாலும் சசிதரனின் வருகைக்கு ஏங்கினாள்.

கோவையில் சசிதரன் வந்து உதவியதும், சாயாவின் வருங்காலக் கணவன் என்றதும், கலாவின் குடும்பத்தின் மூலம் தெருவில் பரவி இருக்க, துஷ்டிக்கு வந்தவர்கள், துக்கம் விசாரித்ததை விட, சசிதரனைப் பற்றி விசாரித்ததுதான் அதிகம்.
இளங்கோ மட்டும் ஒருமுறை வந்து செல்ல, கடை ஊழியர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

பொறாமையாக, எச்சரிக்கையாக, அக்கறையாக, அக்கறை போல என விதவிதமான அறிவுரைகள்.

சாயாவை விட, வெளியூர் கல்லூரி, ஹாஸ்டல் வாசம், மருத்துவ மனையில் நர்சிங் பயிற்சி, விதவிதமான நோயாளிகள் என, சிறிது வெளியுலகைப் பார்த்திருந்த ஹரிணியால் அவர்களை அதிகம் புரிந்து கொள்ள முடிந்தது.

தெருவில் நெருக்கமானவர்களை அழைத்திருக்க, அனைவரும் வந்ததும், படையலிட்டு, உணவு பரிமாறினர். ஒரு மணியளவில் வீடு அடங்கி விட, அவளது மாமாவின் மனைவியும் கிளம்பிவிட்டார். அன்று கலா விடுப்பெடுத்துக் கொண்டு, இவர்களுடன் இருந்தாள்.

சசிதரன் வராமலே நிகழ்ச்சி முடிந்தது. அவன் இந்தியா திரும்பி விட்டானா, என ஃபோன் செய்து கேட்கும் துணிவு சாயாவிடம் இல்லை.

ஒருக்கால் அவ்வளவு பணக்காரனான அவனைப்பற்றி அவனது ஊருக்கே போய் தந்தை விசாரித்ததாகச் சொன்னதில் கோபமாகக் கூட இருக்கலாம்.

சாயா லக்ஷ்மியை இது காதலா என்று கேட்டால், அவளுக்கே தெரியாது. ஆனால், அவளுடன் திருமணம் பற்றிப் பேசிய முதல் மற்றும் ஒரே ஆண் என்ற காரணத்தாலேயே, அவள் மனதில் ஒரு மாதிரி பதிந்து போய் இருந்தான். அதற்கு மேல் அவனை அழைத்துப் பேசி, விவரம் கேட்கும உரிமையோ தைரியமோ அவளிடம் இல்லை.

ஹரிணிதான் “எங்க பாத்தீங்க எப்ப பாத்தீங்க, அப்பாக்கு எப்படித் தெரியும்” என குடைந்து, குடைந்து கேள்வி கேட்டாள்.

காலை முதல் வேலை செய்த அலுப்பில், ரசம், மோர் என சிறிது சாதத்தில் கரைத்துக் குடித்து விட்டுப் படுத்து விட்டாள். மீதி சாப்பாடை ஹரிணிதான் சீர் செய்து வைத்தாள்.

ஆறு மணிக்கு கலாவின் அம்மா டீயுடன் வந்து எழுப்பும் வரை, மூன்று பெண்களும் அடித்து போட்டது போல் தூங்கினர்.

நான்கைந்து நாட்களாக மகன் செய்த மூளைச் சலவையின் பயனாக, கலாவின் அம்மா “சாயா, அவ்வளவு பெரிய பணக்காரருன்னு சொல்லுற. இப்ப உங்கப்பாரும் இல்ல. அந்தத் தம்பி(!) கிட்ட இருந்து ஒரு தகவலும் வரலை. இன்னுமா நீ, அவரு வருவாருன்னு நம்புற?”

“அதில்லத்த…”

“நம்பளை மாதிரி ஏளை(ழை)ப் பொண்ணுங்களை பணக்காரப் பசங்க காதலிச்சு, கட்டிக்கறதெல்லாம் சினிமாலதான் நடக்கும். நம்மை சுத்திப் பாரு. நெசத்துல யாராச்சும் அப்படிக் கட்டி இருக்காங்களா? பழைய பேப்பர் கடைக்காரர் மருமக கூட எட்டு பவுன் நகையோடதான் வந்தா”

தன் வீட்டில் நடக்கும் பேச்சுக்களை கலா அறிந்திருந்ததால், மௌனமாக இருந்தாள். அவளுக்குமே, பணக்கார சசிதரன் மீது நம்பிக்கை வரவில்லைதான். ஆனால், சாயா போன்ற படித்த, அழகான பெண்ணுக்கு, பள்ளிப் படிப்பைதக் கூட தாண்டாத தன் அண்ணன் நல்ல இணையல்ல என நினைத்தாள்.

ஹரிணி “இப்ப எதுக்குத்த இந்தப் பேச்செல்லாம்?” எனவும் “எனக்கென்ன, தெரிஞ்ச புள்ளைங்களா இருக்கீங்களே, நல்லதை சொல்லுவோம்னு நினைச்சேன். உங்கக்காவும் வேலை பாக்குறா, எம்மவனும் வேலை பாக்குறான். அனாதையா நிக்குறீங்களே, ஒரு நல்லது செய்வோம்னு…”

“யார் இங்க அனாதை?” என்ற சசிதரனின் குரலில், பெண்கள் நால்வரும் அதிர்ந்து திரும்பினர். அந்தக் கையகல அறை முழுவதும் நிரம்பி வழிந்தான் சசி.

அவன் வராத, வரமாட்டான் என்ற தைரியத்தில் பேசிய கலாவின் தாய், சசிதரன் யாரென்று முன்பின் பார்க்காமலே புரிந்துகொண்டார்.

“இல்ல, அது வந்து… சின்னப் பொண்ணு… அதான், வாடி கலா, நாம போவலாம்” என்று, மகளுடன் கிளம்பப் பார்க்க, கேலியாகச் சிரித்த சசிதரன் “எங்க கிளம்பிட்டீங்க. கொஞ்ச நேரம் இருங்க”

“சரிங்க சார்”

“ஒரு வேலை செய்ங்க. போய், உங்க வீட்டுலயும், வேற யாரும் ரொம்பத் தெரியும்னாலும் கூட்டிட்டு வாங்க”

அவர் விட்டால் போதுமென மகளுடன் வெளியேறினார்.

ஹரிணி தன் அக்காவையும் சசிதரனையும் குறுகுறுவென மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாயாவின் சிறிது நிம்மதியும் ஆர்வமும் கலந்த முகத்தைப் பார்க்க, அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.

“சாயா, நான் அப்போ சொன்னதுதான், இப்பவும். நாம ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும். இந்த வீட்ல, இந்தம்மா மாதிரி ஆளுங்களோட நீ தனியா இருக்கறதுலயோ, இளங்கோ கிட்ட வேலைக்கு போறதுலயோ எனக்கு விருப்பமில்லை”

“இல்ல, அப்பா…”

“உனக்கும் உங்க அப்பாக்கும் விருப்பம் இருக்கறதாலதானே, என்னைப் பத்தி விசாரிக்கப் போய் இருக்கார். இன்னும் என்ன?”

“இல்ல, நான் மட்டும் தனி இல்லை. இனிமே, என் தங்கை ஹரிணியோட படிப்பு, கல்யாணம் எல்லாமே என்னோட பொறுப்புதா…”

“யார் இல்லைன்னு சொல்றாங்க? உங்கப்பாவும் இல்லைன்னும்போது, எனக்கு தெரியாதா, அவ உன்னோட பொறுப்புன்னு? அவ்வளவு பெரிய வீட்டுல, இந்தச் சின்னப் பொண்ணுக்கா இடமில்லாம போச்சு? இனி ஹரிணி, எனக்கும் தங்கை மாதிரிதான். இப்ப சம்மதமா, இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?”

சசிதரனின் சகஜமான, உரிமையான பேச்சும், ஆளுமையும், தன்னையும் அவனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டதும் , சாயாவை விட ஹரிணியை இளக்கி, நெகிழ்த்தியது.

முகத்திலும் உடல் மொழியிலும் சம்மதம் தெரிந்தாலும், வார்த்தையில் சொல்லத் தயங்கியவளிடம், ஹரிணி “அக்கா, மாமாதான் இவ்வளவு தூரம் சொல்றாங்கள்ல, சரின்னு சொல்லுக்கா. எப்படியும் நான் ஹாஸ்டலுக்குப் போயிட்டா நீ இங்க தனியா என்ன செய்வ?” என்று மூத்தவளுக்கு உபதேசம் செய்தாள்.

கலாவின் குடும்பமும், இன்னும் சில பெரியவர்களும் வரவும், இன்னைக்கு வெள்ளிக்கிழமை. வர்ற புதன் கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னைக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாம். திங்கள் கிழமை வந்து கூட்டிட்டுப் போறேன். கோயமுத்தூர்ல கோவில்ல கல்யாணம். கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிட்டு, கோத்தகிரி போறோம்”

கூட்டம் ‘இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாரேன்’ என்று பொறாமையில் புகைய “நாளைக்கே உன் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு முழுக்கு போடு. உனக்குத் தேவையான சாமான்களை மட்டும் எடுத்துக்கிட்டு, மிச்சத்தை செட்டில் செய்”

கம்ப்யூட்டருக்கு ஆணை இடுவதைப் போல் சாயாலக்ஷ்மிக்கு வரிசையாகக் கட்டளையிட்டவன், எல்லோரும் வியப்புடன் பார்க்கக் கிளம்பி விட்டான்.

மறுநாளே தங்களது உடைமைகளில் தேவை என நினைத்ததை மட்டும் வைத்துக் கொண்டு, சிலவற்றை விலைக்கும், நிறைய பாத்திரங்கள், ஒரு பழைய மரக்கட்டில் எல்லாவற்றையும், அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து விட்டாள்.

அவளது தந்தை செய்து வைத்திருந்த பேப்பர் பைகள் மற்றும் கவர்களை, அவர் வழக்கமாக கொடுக்கும் கடையில் சென்று கொடுத்துக் காசாக்கினாள். வங்கிக் கணக்கை முடித்து, பணத்தை வலுக்கட்டாயமாக ஹரிணியின் கணக்கில் சேர்த்தாள்.

“ஏன்க்கா?”

“எனக்கு எப்படியும் அவர் செலவு செய்வார்டீ. எதுக்கும் நீ இதை வெச்சுக்கோ “

“மாமாவை நீ நம்பலையாக்கா?

“அப்படி இல்லைடீ. ஆனா, அவங்க கிட்ட எடுத்தவுடனே கேக்க கூச்சமா இருக்கும், இல்லையா, அதான்”

ஞாயிறு மாலை, ஹரிணிக்கு ஒரு பெட்டி, சாயாவுக்கு பெட்டி என்று சுருங்கியது வீடு.

தன்னிடம் இருந்த புதிய உடைகளை மட்டுமே எடுத்து வைத்துக் கொண்டாள். ஹரிணி மற்றும் கலாவுடன் போய் உள்ளாடைகள் வாங்கி வந்தாள்.

திங்கள் காலை சரியாக ஏழாவது மணிக்கெல்லாம் வந்த சசிதரன், இளங்கோவையும், கலாவின் குடும்பத்தையும் திருமணத்திற்கு அழைத்துவிட்டு, இரண்டு பெண்களுடன் கோவையை நோக்கி கிளம்பிச் சென்றான்.
நேரே கோவை ஆர் எஸ் புரத்தில் இருந்த சசிதரனின் வீட்டிற்குச் சென்றனர்.

அன்று மாலையே, பணம் மட்டும் இருந்தால், எதையெல்லாம் சாதிக்கலாம் என்று புரிந்துகொண்டனர் சகோதரிகள்.

திருமண புடவைகள், அதைத் தவிரவும் வீட்டில் அணியும் புடவைகள் (எனக்கு சுரிதார் பிடிக்காது!) , நகைகள், தாலி, ஹரிணிக்கும் புதிதான மூன்று செட் உடை என வாங்கிக் குவிக்க, அடுத்த நாள் மதியமே, ரவிக்கைகள், புடவை ஃபால்ஸ் பீடிங் எல்லாம் தைத்து ரெடியாகி வந்தது.

புதன்கிழமை காலை ஒன்பது- பத்தரை முகூர்த்தத்தில், சசிதரனின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த ரத்னவிநாயகர் கோவிலில் மாலைமாற்றி, அக்னி சாட்சியாக தாலி கட்டி, நேரே, ரிஜிஸ்தர் அலுவலகம் சென்று, திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர்.

கோத்தகிரியில் இருந்து அவனது எஸ்டேட் மற்றும் ஃபாக்டரியில் வேலை செய்யும் சிலரும், அவனது தம்பியும் வந்திருந்தனர்.

சசிதரனின் தம்பிக்கு இருபது, இருபத்தோரு வயதுதான் இருக்கும். சசிதரனுக்கும் ஸ்ரீதரனுக்குமிடையே பதினோரு வயது வித்தியாசம் இருந்தது. தன் நான்காவது வயதிலேயே தாயை இழந்ததாலோ என்னவோ, அவனுக்குத் தன் அண்ணியாகப் போகும் சாயாலக்ஷ்மியை, பார்த்ததுமே பிடித்து விட்டது.

முதலில் அடிக்கடித் தன்னையே பார்த்தவனைக் கண்டு கூசியவள், பிறகு சகஜமாகி விட்டாள்.

மதிய உணவை அன்னலக்ஷ்மியில் முடித்துக்கொண்டு, கோத்தகிரியை அடைந்தபோது, இரவு மணி எட்டுக்கு மேல் ஆகி விட்டது.

அடர்ந்த டீ எஸ்டேட்டுகளுக்கு நடுவே, இருளின் ஆட்சியில், கம்பீரமாகவும், சற்றே மிரட்டுவதாகவும், இருந்தது, சசிதரனின் பரம்பரை வீடு.

சும்மாவே சிலுசிலுக்கும் கோத்தகிரி, நவம்பர் மாதக் குளிர், மழையின் ஈரம் என எலும்பை ஊடுறுவியது ஊதக்காற்று.

சமையல் வேலை செய்யும் இரண்டு பெண்கள் வந்து ஆரத்தி எடுத்து, அவர்களே பாலும் பழமும் கொடுத்தனர். அவர்களே சாயாலக்ஷ்மிக்குப் பூஜை அறையைக் காட்ட, சசிதரன் “நீ போ” என அறை வாசலிலேயே நின்று கொண்டான். விளக்கேற்றினாள்.

அந்தப் பெண்களே, சூடாக சேமியா பாயசம், சப்பாத்தி, குருமா என பரிமாறினர்.

“தாயம்மா எங்க?”

“உடம்பு முடியலைன்னு படுத்துட்டாங்க சார். காலைல வரேன்னாங்க”

“ஓ”

ஹரிணிக்கு கீழ்த்தளத்தில் ஒரு அறையைக் காட்டினான் சசிதரன்.

“தனியா இருந்துப்பியா?” என்றவனது குரலிலேயே ‘நீ தனியாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற செய்தி இருந்ததோ?

“இருந்துப்பேன் மாமா”

“ஓகே, குட் நைட்”

சாயாவை ஏற்கனவே ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றிருந்தனர். அவர்கள் வந்தது முதலே, ஸ்ரீதரன் கண்களில் படவில்லை.

ஹரிணியின் அறை சற்றே நீளவாக்கில் இருந்த அந்த ஹாலின் ஒரு கோடியில் இருந்தது. அவளது அறை வாசலுக்குப் பக்கத்திலேயே மாடிப்படி இருந்தது.

வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட வீடு பெரும்பாலும் இருளில் மூழ்கியது.

சாயா லக்ஷ்மி குளித்து, சசிதரனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமென்மையான சிவப்பு நிற மென்பட்டில் தயாராகி நின்றிருந்தாள்.

கனவு போல் இருந்தது. தந்தையின் மறைவு, தங்கை, பிறந்து வளர்ந்த திருச்சி, அனைத்தும் பின்தங்கிவிட, மனமெங்கும் சசிதரனின் ஆட்சி.

அவனது அக்கறையும், திட்டமிடலும், சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவனிப்பதும், ஒவ்வொன்றையும் எப்படிச் செய்ய வேண்டும் எனச் சொல்வதும் என, அவனது அன்பும் ஆளுமையும் வசீகரிக்க, சாயாவின் மனம் சசிதரனிடம் முழுதாக வீழ்ந்தது,

கதவு திறக்கும் சத்தம் கேட்க, சசிதரன்தான் உள்ளே நுழைந்தான்.

அந்த அறையில், அந்த இரவுக்கான அலங்காரம் என எதுவுமில்லை. முழுமையான ஆணின் அறையாக இருந்தது. ஒரு ஃப்ளாஸ்க்கில் பால் மட்டும் வைத்திருந்தனர்.

அருகில் வந்து அவளது முகத்தைத் தன் வலது கையின் ஆள்காட்டி விரலால் நிமிர்த்தினான்.

“சாயா”

சாயாவுக்குப் படபடப்பிலும் எதிர்பார்ப்பிலும் நெஞ்சு தடதடத்தது.

பணக்காரனாக இருந்தும், கேள்வி கேட்க ஆளில்லாத நிலையிலும் பெண்களை நெருங்காதவன், நெருங்க விடாதவன், பார்த்த முதல் நொடியிலேயே தன்னை ஈர்த்த சாயாவிடம், தன் இளமை வேகத்தைக் காட்டி, அவனது முப்பத்தியோரு வயது பிரம்மச்சரிய விரதத்துக்கு மூடுவிழா நடத்தினான்.

சாயாவின் கவலைகளை, சுற்றுப்புறத்தை, ஏன் அவளையே மறக்க வைக்கும் வித்தை சசிதரனுக்குத் தெரிந்து இருந்தது. சாயா சசிதரனின் ஆளுகைக்கு அடி பணிந்தாள்.

ஹரிணி, அவ்வளவு பெரிய வீட்டில், இருளும், தனிமையும் சற்றே பயத்தைக் கொடுக்க, தூக்கம் வராமல், மொபைலைப் பார்க்க, அதில் நெட் கவரேஜ் சுத்தமாக இல்லை. புரண்டு, புரண்டு படுத்தாள். வெளியே மழை அடித்துப் பெய்யத் துவங்கி இருந்தது. ஜன்னல் திரையை விலக்கி, வெளியே பார்க்கவும் துணிவில்லாமல், தலையோடு கால் போர்த்திக்கொண்டு, கண்களை இறுக மூடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

‘மாமாவும் அந்த ஸ்ரீதரனும் எப்படி பயமில்லாம இந்த வீட்டுல இருக்காங்க? அந்த ஸ்ரீதரன் எங்க போனான்? அவனை இதுக்கு முன்னால எங்கேயாவது பாத்திருக்கேனா? சேச்சே, இருக்காது’ என்று புது மனிதர்களைப் பற்றிய யோசனையில் இருந்தவளின் கவனத்தைக் கலைத்தது, அந்தக் காலடியோசை.

ஒரு கதுவு திறந்து மூடும் ‘வ்ராம், க்ளட்ச்’ ஒலியும், முதலில் மெதுவே ஒலித்த செருப்பணிந்த காலடிச் சத்தம், பிறகு சற்று பக்கத்தில் படியேறுவதைப் போல் ஒலித்து, பின் தேய்ந்து, மீண்டும் ஓர் ‘மெல்லிய ‘ப்ராய்ய்ங், க்ளிக்’ கேட்டது. ஓசை வீட்டுக்குள் கேட்டதால், கதவைத் திறந்து பார்க்கும் தைரியம் வரவில்லை. புது இடம். பணக்காரர்கள் வேறு. யாராவது தப்பாக நினைத்துக் கொண்டால்?

மொபைலில் மணி பார்க்க இரண்டு என்றது. இந்த நேரத்தில் யார்? ஹரிணி வலுக்கட்டாயமாகத் தூங்க முயன்றாள்.

அவள் அங்கே இருந்த மூன்று இரவுகளிலுமே அந்தக் காலடி ஓசையைக் கேட்டாள்.