பிம்பம் 16+ / அத்தியாயம் 16 (Final)

பிம்பம் 16

ஸ்ரீதரன் “மணி மூணரையாகப் போகுது. இப்ப மழையும் அதிகம் இல்லை. நான் வெளிய போய்த் தேடிப் பாக்கறேன் அண்ணி. எனக்கென்னவோ, அண்ணன் ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாருன்னுதான் தோணுது”  என்றான்.

“நானும் உங்க கூட வரேன் தம்பி” என்றாள், சாயா.

அழுது, களைத்து, அழுது, சோர்ந்து இருந்தவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. முதல் நாள் காலையில் பால் கட்டிக்கொண்டதில் இருந்து, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை ஹரிணியின் உதவியுடன், பீய்ச்சி எடுத்துக் கீழே ஊற்றுகிறாள். தாய்ப்பாலின் அளவு மாறினாலும் சத்து மாறாதுதானே?

ஸ்ரீதரனுக்கு சாயாவைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தயக்கமாக இருந்தது. ஒருக்கால் போகுமிடத்தில், சசிதரனைக் கண்டுபிடித்து விட்டால், ஏற்கனவே, தங்கள் இருவரையும் சந்தேகப்படுபவன், தற்போது இருக்கும் மனநிலையில், ஆத்திரத்தில் குழந்தையை ஏதாவது செய்துவிட்டால் என்று பயந்தான் ஸ்ரீதரன்.

“என்ன தம்பி யோசிக்கிறீங்க?”

“இல்லண்ணி… அது வந்து…”

இருவரையும் மாறி மாறிப் பார்த்த ஹரிணி “நானும் வரேன், வாங்க போகலாம்” என்றாள்.

சரவணனுக்கு கால் செய்து வரவழைத்த ஸ்ரீதரன் “சரவணா, நீங்க நாலு பேரும் வீட்ல இருங்க. ஒருவேளை அண்ணா இங்க வந்தா, யாராவது அவரைப் பத்தி தகவல் சொன்னா,  உடனே எனக்கு ஃபோன் செய். வனிதாக்கா பாத்துக்கோங்க” என்று சகோதரிகளுடன் வெளியேறினான்.

அவர்களது எஸ்டேட், டீ ஃபேக்டரி, குடோன்கள், முன்பு ஸ்ரீதரன் இருந்த வீடு, கோத்தகிரியில் இப்போது அவன் தங்கி இருக்கும் வீடு என ஒவ்வொரு இடமாக மீண்டும் சென்று பார்த்தனர். இரண்டரை மணி நேரமாகச் சுற்றியும் பலனில்லை. 

இரவு முழுவதும் தூங்காததும், மன உளைச்சலுமாக, கார் தன்னையறியாமல்  தடுமாறிவிடுமோ என்ற பயத்தில், மணி காலை ஆறை நெருங்கவும், கோத்தகிரி டவுனில் இருந்து திரும்புகையில், ஜீவன் டீ  எஸ்டேட்டுக்கு சிறிது முன்னால் அப்போதுதான் திறந்திருந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி, டீ வாங்கி இருவருக்கும் கொடுத்தவன், தானும் ஒரு டீயுடன் கடைக்கு அருகில் நின்று கொண்டான். மழை சத்தமில்லாது பிசுபிசுக்கத் தொடங்கி இருந்தது.

டீ கிளாஸைத் திருப்பிக் கொடுத்தவன், ஏதோ தோன்ற, பெரிய நம்பிக்கை எதுவுமில்லை  என்றாலும்,  தன் மொபைலில் இருந்த சசி, அம்மு இருவரின் படத்தையும் டீக்கடைக்காரரிடம் காட்டியவன் “இவரை, இந்தக் குழந்தையோட இந்தப்பக்கம் பாத்தீங்களா?” என்றான். 

சற்றே யோசித்தவர் “குழந்தையைப் பாக்கலை சார். ஆனா, இவரு நேத்து நைட்டு பாதிக்குமேல கடையடைச்ச பிறகு வந்து, கைக் குழந்தைக்குப் பால் வேணும்னு கேட்டு, கூடவே ஒரு பாக்கெட் பன்னும் வாங்கிட்டுப் போனாரு” என்றார்.

“ரொம்ப நன்றிங்க” என்றவன், மூன்று டீக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.  “சார், எங்கிட்ட இவ்வளவு பணத்துக்கு சில்லறை…”

“எனக்கு சில்லறை வேண்டாங்க. அது உங்களுக்குதான்” என்றவன், காரில் ஏறி, வேகமாக மீண்டும் எஸ்டேட்டை நோக்கிச் செலுத்தினான்.

ஹரிணி “எதுக்குங்க இத்தனை வேகம்?”

“அண்ணன் நேத்து ராத்திரி இந்த டீக்கடையில அம்முக்குப் பால் வாங்கி இருக்காரு. அப்படீன்னா, அவரு நம்ம எஸ்டேட்டுக்கு உள்ளதான் எங்கேயோ இருக்கணும். வீட்டுக்குப் போயிட்டு, போலீஸுக்குச் சொல்லி முழுசா சர்ச் பண்ணச் சொல்லுவோம்”

வீடு வந்து சேர்ந்து, ஸ்ரீதரன் போலீஸுக்குச் சொல்லி, முகம் கழுவிக் கொண்டிருக்கையில், வீட்டு லேண்ட் லைன் ஒலித்தது.

எடுத்த ஹரிணி “ஆமாங்க, நீங்க யாருங்க?  அவர் இல்லைங்க. அவங்க தம்பி ஸ்ரீதரன் சார் இருக்காருங்க, பேசறீங்களா?” என்றவள், சரவணனிடம்  ஸ்ரீதரனை அழைக்கச் சொன்னாள்.

டீ எஸ்டேட்டிலும், ஃபேக்டரியிலும் வெளியில் இருந்து வேலைக்கு வருபவர்களையும் தினக்கூலிகளையும் தவிர, மேனேஜர்கள், சூபர்வைஸர்கள், அக்கவுண்டன்ட்டுகள், செக்யூரிட்டிகள் குடும்பத்துடன் வசிப்பதற்கென சில வீடுகள் உண்டு. 

இப்போது ஃபேக்டரியின் வேலையும் வியாபாரமும் அதிகரித்து விட்டதில், மேலும் சில வீடுகளைக் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில், தகர டெண்ட் போட்டு, கட்டுமானப் பொருட்களுக்குக் காவலாக  இருக்கும் இரண்டு கொளத்து வேலை செய்பவர்களில் ஒருவர்தான் ஃபோன் செய்திருந்தார்.

“ஹலோ, யாருங்க”

“…”

“எப்பல இருந்து?”

“…”

“நீங்க பாத்தீங்களா?”

“…”

“சரி, நீங்க அமைதியா உங்க இடத்துக்குள்ள கண்டுக்காத மாதிரியே இருங்க. நான் வரேன்” என்று ஸ்ரீதரன் ஃபோனை வைத்தான்.

ஆறு ஜோடிக் கண்களும் ஸ்ரீதரனைக் கேள்வியாக நோக்க “புதுசா கட்டற  குவார்டர்ஸ்ல ஒரு வீட்ல, நைட்ல இருந்து குழந்தை அழுவுற சத்தம் விட்டு விட்டு கேக்குதாம். விடி காலைல யாரோ நடமாடறா மாதிரி இருக்குன்னு அந்த மேஸ்திரி சொல்றாரு. அநேகமா, அண்ணாவாதான் இருக்கும்னு நினைக்கறேன்” என்றவன், சப் இன்ஸ்பெக்டருக்குத் தகவல் சொல்ல, அவர் “எஸ்டேட் வாசல்லதான் இருக்கோம், ரெண்டே நிமிஷம்” என்றார்.

ர்ஷுகுட்டி அப்பாவோட செல்லம் இல்ல, அழக்கூடாது” என்று  குழந்தையின் வாயில் சிப்பரைத் திணிக்க, திமிறிய அம்மு, தன் வாயில் இருந்த பாலை  ஃபூஃர்ர் என்று கொப்பளித்தது. 

சசிதரனுக்குச் சலிப்பாக இருந்தது. தனியாக, ஒரு எட்டு மாதக்குழந்தையை ஒரு நாள் முழுவதும் தன் பொறுப்பாகப்(?) பார்த்துக் கொண்டதில் மிஞ்சியது என்னவோ பதட்டம்தான். இந்தச் சாயா, அப்படி என்னத்தைதான் கொடுத்து வளர்க்கிறாளோ தெரியவில்லை, எதைக் கொடுத்தாலும் துப்புகிறது. ஒரு வேளை வயிற்றைக் காயவிட்டால், அடுத்த வேளை எதையும் குடிக்கும் என அவன் நினைத்தது போல், எதுவும் சுலபமாக நடக்கவில்லை.

முந்தைய நாள் முழுவதும் முக்கால் தம்ளர் பாலும் அரை வாழைப்பழமும் உள்ளே போயிருந்தால் அதிகம். கட்டாந்தரையில் அவனது ஜாக்கெட்டில் படுத்திருந்த அம்மு பசி, குளிர், கொசுக்கடி எல்லாமாக சேர்ந்ததில் இடை விடாது சிணுங்கினாள். இதில் இருட்டும், மழையும் வேறு. 

முந்தைய நாள் அதிகாலையில், தூக்கம் வராமல் ஏதேதோ எண்ணியபடி  புரண்டு கொண்டிருந்தவனால், தன் மனதை அரித்த சந்தேகத்தை, மனைவியில் பால் இருந்த ஆசையை, தன் தந்தையின் மீது, தாயின் மீது இருந்த நெடுநாள் ஆத்திரத்தை அடக்கமுடியாதுபோனது. 

 எழுந்து அமர்ந்தவன், திவானில் சுருட்டிக் கொண்டு, தன் அம்மாவின் பிரதி பிம்பமாக, அதே மாசுமருவில்லா அழகில், நிச்சிந்தையாக உறங்கிய மனைவியைப் பார்த்தவனால், அவளது களங்கமில்லாத் தன்மையை உணர முடிந்தாலும், நம்ப முடியவில்லை. 

சாயாவைப் பார்த்த முதல் நொடியில் இருந்து மனதில் எழுந்த தாபம், ஆசை, அதே நேரத்தில் அந்த உருவத்தில் இன்னொருத்தியா என்ற பழிவாங்கும் உணர்ச்சி  என எல்லாம் சேர்ந்து, ஒரு நொடியில் முடிவெடுத்தவன், குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.

 குழந்தை ஈரம் செய்து விட்டால்  அவசரத்திற்கு உடை மாற்றுவதற்காக, கட்டிலின் அருகே உள்ள டேபிளில் சாயா வைத்திருந்த இரண்டொரு உடைகளையும், கீழே வந்து கிச்சனில் ஸ்டோரில் இருந்து புதிதாக ஒரு சிப்பரையும் எடுத்துக்கொண்டான். கவனமாகத் தன் பர்ஸை தவிர்த்தவன்,  அதிலிருந்த பணத்தை மட்டும் உருவிக்கொண்டான். 

பின், குழந்தையுடன் தன் ரகசிய அறைக்குள் சென்றவன், சரியாக மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தான்.

குழந்தையைப் பின் சீட்டில் படுக்க வைத்தவன், காரில் ஏறி அமர்ந்த உடனேயே, தன் செல்ஃபோனிலிருந்து சிம்கார்டை உருவி, தேயிலைச் செடிகளுக்கு நடுவே வீசி எறிந்தான்.

 கார் பண்ணாரி செல்லும் பாதையில் செல்ல, ஏதோ ஒரு மலைச்சரிவில், தன் மொபைலையும் விட்டெறிந்தான். இனி மொபைலை ட்ரேஸ் செய்தாலும், அவனைக் கண்டுபிடிக்க முடியாது.

கார் கோத்தகிரியில் இருந்து பண்ணாரி செல்லும் பாதையில் நாற்பது கிலோ மீட்டர் போல் பயணித்ததும், அம்மு விழித்துக்கொண்டு,  பாலுக்கு அழத்தொடங்கினாள். 

விடிந்தும் விடியாத அந்த வேளையில் காரை ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, ஒரு பேக்பேக் சகிதம், சற்றுத்தொலைவில் தெரிந்த சிறிய ஹோட்டலை நோக்கி நடந்தான். பாலை வாங்கி, ஆற்றி சிப்பரில் ஊற்றியவன்  தானும் காபி வாங்கிக் குடித்தான். அந்நேரத்துக்கே, சூடாக இட்லி கிடைக்க, வாங்கி சாப்பிட்டான்.

அம்முவுக்குப் பாலைக் கொடுத்தவன், பஸ்ஸில் ஏறி பண்ணாரி கோவிலுக்குச் சென்றான். மதியம் நாலு மணி வரை அங்கே, இங்கே என்று  நேரத்தைப் போக்கிவிட்டு, வழியில் புதிதாக இரண்டு சிம்கார்ட் வாங்கிக் கொண்டு, தன்னுடன் எடுத்து வந்த, சாயாவின் பழைய மொபைலில் ஒரு சிம்மைப் போட்டுக் கொண்டான். 

கர்நாடகாவில் இருந்து வந்த, கோத்தகிரி செல்லும் பஸ்ஸில் ஏறி, அவனது எஸ்டேட்டுக்கு சிறிது தூரத்தில் இறங்கிக் கொண்டான்.

இரவு நன்கு ஏறி நடமாட்டம் வெகுவாகக் குறைந்ததும், வீட்டிற்கு ஃபோன் செய்தான். இந்தப் பிரச்சனைக்கும் சாயா ஸ்ரீதரனைத்தான் அழைத்திருப்பாள் என்ற நினைவே, அவனது  வெறியைத் தூண்டியது. அந்த சிம்மைத் தூக்கி எறிந்தவன்,  தூங்கும் அம்முவை பக்கத்தில் மூடி இருந்த மருந்துக்கடை வாசலில் படுக்க வைத்து விட்டு, டீக்கடையில் போய் பாலும் பன்னும் வாங்கி வந்தான்.

அவனைக் காணாது, எல்லோரும் அலர்ட்டாக இருப்பார்கள் என்பதால், எஸ்டேட்டுக்குள் எப்படி நுழைவது என, ஏற்கனவே அவனுக்கு அத்துபடியான, அவன் மனதில் இருந்த வரைபடத்தின் படி,  பணியாளர்களின் குடியிருப்பு, ஓரிடத்தில் எஸ்டேட்டின் கம்பி கட்டிய சுற்றுச்சுவரை ஒட்டி இருக்க, அங்கே குடி இருக்கும் மக்களே, பக்கத்திலேயே மெயின் ரோடு என்பதால் வேலியை ஒட்டி வளர்க்கப்பட்ட  புதர்ச்செடிகளின் (Hedges) நடுவே சிறியதாக ஒரு வழி ஏற்படுத்தி இருந்தனர்.

எத்தனை முறை எச்சரித்தும், பள்ளி செல்லும் பிள்ளைகளும், கடை கண்ணிக்குச் செல்லும் பெண்களும், மிரட்டிய சில நாட்களுக்குப் பின் எப்படியாவது மீண்டும், அந்த இடத்தில் வழியை உண்டாக்கி விடுவர்.

இப்போதும், சசிதரன் எதிர்பார்த்தது  போலவே, அங்கே இரண்டு ஆட்கள் செல்லுமளவு பாதை இருக்க, இடையில் இருந்த ஒரளவு பெரிய, சரிவான பள்ளத்தைக் கையில் குழந்தையுடன் கடந்தவன், புதியதாக கட்டப்பட்டு, பூச்சு வேலை வரை முடிந்து, எலெக்ட்டிரிகல் வேலை நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டிற்குள் சென்றான். இரவு கடந்தது.

பொழுது நன்கு விடிந்திருக்க, அழுது கொண்டிருந்த அம்மு, பசியிலும் தாகத்திலும் நிம்மதியற்ற தூக்கத்திலும், இப்போது தந்தை கொடுத்த பாலை ஓரளவு ஒழுங்காகக் குடித்து விட்டு, தன் கழுத்துக்குக்  கத்தி வைத்திருக்கும் தந்தையைப் பார்த்து, ஒற்றைப் பல்லுடன் சிரித்தது.

“ஏண்டீ, ஏண்டீ எல்லாரும் அந்தத் தே…யா மாதிரியே, அதே ஜாடையிலயே அழகா இருந்து என்னை வதைக்கறீங்க?” என்றவன், சுற்றுப் புறத்தில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தான். குழந்தையைக் கீழே உட்கார வைத்துவிட்டு, ஜன்னல் அருகே தவழ்ந்து போய் மெதுவே வெளியே எட்டிப் பார்த்தான். இரண்டு மூன்று போலீஸ் உடுப்புகள் தெரிந்தது.

‘ஓ, கண்டு புடிச்சிட்டீங்களா, வாங்கடா, வாங்க’ என்று கர்விக் கொண்டான்.

அந்த சப் இன்ஸ்பெக்டரின் கையில் இருந்த வயர்லஸ் மைக்கில் “மிஸ்டர் சசிதரன், உங்களைக் கண்டு பிடிச்சாச்சு, இனிமே உங்களால தப்ப முடியாது. ஒழுங்கா குழந்தையோட வெளிய வந்து சரண்டராயிடுங்க” என்றார்.

எந்தச் சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சசிதரன், தங்கள் ஷூக்களை அவிழ்த்துவிட்டு, இன்னும்  கதவுகள் பொருத்தப்படாததால், பின் பக்கத்தில் இருந்து உள்ளே வந்த ஒரு கான்ஸ்டபிளையும், ஸ்ரீதரனையும் கவனிக்கவில்லை.

ஸ்ரீதரன் பூனைப் பாதம் வைத்துச் சென்று, அதிர்ஷடவசமாக கீழே உட்கார்ந்திருந்த அம்முவை அள்ளிக்கொள்ள, அந்தக் கான்ஸ்டபிள் வாசல் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தான். 

அம்முவின் ‘கெக்’ என்ற சத்தத்தில் சலனப்பட்டுத் திரும்பிய சசிதரன், அதிர்ந்தாலும் “ஏய், மரியாதையா குழந்தையைக் கொடு” என்றான்.

அப்போது, இன்னும் மூன்று காவலர்களுடன் மெதுவே சாயாலக்ஷ்மியும் ஹரிணியும் நுழைந்தனர். 

ஸ்ரீதரன் “அண்ணா, உனக்கென்ன பைத்தியமா?” 

“ஆமாண்டா, பைத்தியம்தான். எங்கம்மா எங்கிட்ட அன்பா இருக்கணும்னு ஆசைப்பட்ட பைத்தியம். எங்கப்பா எனக்காக என்ன வேணா செய்வார்னு நம்பின பைத்தியம். அப்பா இருந்தாலும் இல்லைன்னாலும், அழகா இருந்த எங்கம்மாவைப் பார்த்து பைத்தியம். அப்பாவுக்கு துரோகம் செஞ்ச அம்மாவை, என்னை விட்டு உன்னையே கவனிச்சுக்கிட்ட அம்மாவை பழி வாங்கணும்னு பைத்தியம்”

தன்னை மறந்து, தன் அந்தஸ்து, உழைப்பு, பணம், அதிகாரம் என எல்லாவற்றையும் மறந்து, தன் உள்ளக்கிடக்கையை, நெடுநாள் சுமையை, சசிதரன்  வார்த்தைகளாய் இறக்கி வைத்தான்.

குழந்தை அம்மு, தாயைப் பார்த்ததும் துள்ளிக்கொண்டு, அவளிடம் போக உடலை வில்லாய் வளைத்தது. ஸ்ரீதரன் அருகில் சென்று அவளிடம் குழந்தையைக் கொடுத்தான்.

“பாரு, எனக்கு முன்னாலயே என் பொண்டாட்டி பக்கத்துல போற. நான் இல்லாதபோது? இதைத்தானே எங்கம்மாவும் செஞ்சா?”

“அண்ணா”

“மாமா”

“நான் தப்பு  செய்யலைங்க”

“தெரியுண்டீ. ஆனா, உன்னோட அந்த முகம்… அந்த முகத்தையும் உருவத்தையும் என்னால நம்ப முடியலையே… உன்னை மொத மொதல்ல பாத்தபோது அதிர்ச்சியானேன். எப்படி இப்படி ஒரு உருவ ஒத்துமைன்னு. அடுத்த நாளே திரும்பவும் வந்தேன். அந்த இளங்கோ கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சேன்”

“…”

“உன்னை, உன் முகத்தை, உன் உருவத்தை, எங்கம்மாவோட பிரதிபிம்பத்தை இந்த முறை யாருக்கும் விட்டுத் தரக்கூடாதுன்னு உன்கிட்ட என் லவ்வை சொன்னேன். உங்கப்பா கிட்ட போய் பொண்ணு கேட்டேன். அவரைப் பத்தி, அவரோட சொந்த ஊரைப் பத்தி விசாரிச்சதுமே, அவர் என் தாய்மாமான்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, இது ஒரு காதல் கல்யாணமா இருக்கணும்னுதான் நான் விரும்பினேன்”

“…”

“ஆனா, உங்கப்பா, இளங்கோகிட்ட போய் பேசினபிறகும், இங்க எஸ்டேட்டுக்கு வந்திருக்காரு. கைல அட்ரஸோட செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சவருக்கு, அம்மா பேரு பத்மலக்ஷ்மின்னு சொன்னதுமே டவுட் வந்திருக்கு. உங்க கிராமத்துக்கு, அதாவது எங்கம்மாவோட பிறந்த ஊருக்குப் போய் விசாரிச்சிருக்காரு. உண்மையைத் தெரிஞ்சிக்கிட்டார்”

“…”

“அவருக்கு எங்கம்மா மேல பாசமா, அவங்களோட துரோகம் பத்தி தெரியுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் ரிஸ்க் எடுத்து உன்னை இழக்க விரும்பலை. முதல் தடவையா ஒருத்தரைப் போட ஆளை ஏற்பாடு செஞ்சுட்டு, நான் திருச்சிக்கு வந்துட்டேன். ஆனா, அவர் போன ஆட்டோக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி, தானாவே செத்துட்டாரு”

“அடப்பாவி”  என்றாள் ஹரிணி.

“நான் அடப்பாவி இல்லைம்மா, அப்பாவி. நான் ஆசைப்பட்டதெல்லாம் எங்கம்மாவோட அன்புக்குதான். அதைத்தான் அதே போல இருக்கற உங்கக்காகிட்டயாவது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்”

“…”

“சாயா நிறைய அன்பைக் கொடுத்தா. ஆனா, அவளா எதுவும் செய்ய மாட்டா. கேட்டாதான் செய்வா. உனக்குத் தெரியுமா சாயா, எங்கம்மாவை எனக்கு அவ்வளவு புடிக்கும். ஆனா அவங்க என்னை நெருங்க விட்டதும் இல்லை, எங்கிட்ட நெருங்கினதும் இல்லை”

“…”

“உன்னை எனக்கு எவ்வளவு புடிக்கும் தெரியுமா சாயா? உன் உருவத்து மேல அவ்வளவு ஆசையும், அதே நேரத்துல வெறுப்பும்னு தவிப்பா இருக்கும். எங்க, நீயும் என்னை விட்டுப் போயிடுவியோன்னு பயமா இருக்கும். தாயம்மா உங்கிட்டப் பேசினாக்கூட எனக்குப் பிடிக்காது. ஏன், அம்முவோட நீ அதிக நேரம் இருக்கறது, அவசியம்னு புரிஞ்சாலுமே, எனக்குப் புடிக்காது”

“எப்பல்லாம் என்னோட மூர்க்கமும் தவிப்பும் அதிகமா இருக்கோ, அப்பல்லாம் உன்னை… சாயா, நீ என்னோட மட்டும்தான் பேசணும், நீ என்னோட அம்மாடீ” என்றபடி, அவளை நோக்கி வந்தவனின் கண்களில் கூத்தாடிய வெறியில், சாயா பின்னோக்கி நகர்ந்தாள்.

சசிதரன் பேசத் தொடங்கியதுமே, ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்யச் சொல்லி, கான்ஸ்டபிளிடம் சொன்ன சப் இன்ஸ்பெக்டர் “மிஸ்டர் சசிதரன், நீங்க இருக்கற மனநிலைல இப்ப உங்களை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போறோம். அமைதியா இருங்க” எனவும், ஆம்புலன்ஸின் சைரன் கேட்டது. 

சசிதரன் அங்கிருந்து தப்பும் வழிக்காக சுற்றும், முற்றும் பார்க்க, எல்லா பக்கமும் ஆட்கள் நின்றிருந்தனர். 

மணி பத்தை நெருங்கி இருக்க, அதுவரை அணைத்து வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை, பக்கத்துக் கட்டிடத்தில் ஒயரிங் செய்வதற்காக அப்போதுதான், ஆன் செய்திருக்க, விசைப்பலகையை மாட்டாமல், சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த 15 ampere ஒயரின் அருகில் நின்றிருந்தான் சசிதரன்.

“தப்பிக்க முயற்சி செய்ய வேண்டாம். ஹாஸ்பிடலுக்குப் போகலாம், முரண்டுபிடிக்காம நீங்களே வாங்க” என்றார் சப்- இன்ஸ்பெக்டர்.

“அண்ணா, எல்லாம் சரியாயிடும்ணா. ஹாஸ்பிடல் போலாம் வா” என்ற ஸ்ரீதரனிடம்,

“ஸ்ரீதரா, நீ என் தம்பிதான்னு சமீபமா உறுதியா தெரிஞ்சுக்கிட்டேன்”

“…”

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் சாயா” என்றவன் அந்த லைவ் ஒயரில் கை வைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, அத்தனை ஆகிருதியான சசிதரனின் உடல் தூக்கி எறியப்பட்டு, வெட்டி வெட்டி இழுத்தது. சில நிமிடங்களில் உடலும் உயிரும் அடங்கியது.

தொடர்ந்த அதிர்ச்சிகளும், சசிதரனின் பேச்சும், தன் கண்ணெதிரே அவன் கருகியதையும் கண்ட சாயா, மயங்கிச் சரிய, அருகில் நின்றிருந்த ஒரு காவலர் சாயாவைப் பிடிக்க, குழந்தையை ஹரிணி வாங்கிக் கொண்டாள்.

அந்த இடத்தைப் போலீஸ் தங்கள் நடைமுறைகளுக்கு ஆக்கிரமித்துக் கொள்ள, எஸ்டேட் முழுவதும் செய்தி பரவியது. 

ஸ்ரீதரனும், ஹரிணியும் சாயாவையும் அம்முவையும் டாக்டர் ரங்கநாயகியின் மருத்துவமனைக்கே கூட்டிச் சென்றனர்.

சிறு பிராயத்திலேயே தன்னை விட்டுத் தன் தாய் விலகி நின்றதிலும், அவரது  அலட்சியத்திலும் தாயன்புக்கு ஏங்கி, பத்து வயதில் தன் சித்தப்பாவுடன் பார்த்த ஆடைகளற்ற அம்மாவின் துரோகத்தில் வெறுப்புற்று, தன்னை விட தன் தம்பியை அதிகம் நேசித்ததில் தம்பியை வெறுத்து, அவனது பிறப்பை சந்தேகித்து, பதின் பருவத்தில் அம்மா பத்மலக்ஷ்மியின் அழகில் கவரப்பட்டு என ஒரு வகையான ஈடிபஸ் காம்ப்ளெக்ஸில் (Oedipus complex) சிக்கி, சிதைந்த மனதுடன், தன்னைச் சேர்ந்தவர்களை, தன்னுடைய விருப்பத்துக்கு வளைத்து, வார்த்தைகளால் வதைத்து, தன் சித்தப்பாவையும், அம்மாவையும் தற்கொலைக்குத் தூண்டிய சசிதரன், தானும் தற்கொலை செய்து கொண்டான்.

 தன் மனைவி சாயாவின் மேல் அதீத ஆசையும் நேசமும் அதே சமயம் அவனது தாயைப் பிரதிபலித்த அவளது உருவத்தின்பால் அளவற்ற வெறுப்பும் சந்தேகமும் கொண்டிருந்த சசிதரனை, சாயாவைத் தன் தாயின் பிரதிபிம்பமாகவே பார்த்த சசிதரனை, வருடக்கணக்காக  அவனை ஆட்டி வைத்த அந்த உணர்வுகளே தின்று விட்டது.

தனக்கும் தன் மனைவி சாயாவுக்கும் இடையில் தன் மகள் வருவதைக் கூட விரும்பாத சசிதரன், தன் கற்பனையில் உதித்த பயத்தாலும் சந்தேகத்தாலும், இயற்கை விதித்தவரையில் இணைந்திருக்க வேண்டிய உறவை, இடையிலேயே முடி(றி)த்துக் கொண்டான். ஒருவேளை இதுதான் அவனுக்கான இயற்கையின் விதியோ என்னவோ?

சசிதரனின் தாய் பத்மலக்ஷ்மி செய்த தவறால், அவரது இரண்டு மகன்களின் பிள்ளைப் பிராயமும் தனிமையில்தான் கழிந்தது. இருவருமே துரோகம் விளைத்த வெறுமையில் அன்புக்கு ஏங்கினர். இதில் உறவே தெரியாது வளர்ந்த சாயாலக்ஷ்மிக்கு, அவளுக்கும் அவளது முகமறியா(?!) அத்தைக்குமான உருவ ஒற்றுமையே தூரத்து இடி முழக்கமாக வந்து சேர்ந்தது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு:

தான் வளர்ந்த சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில், முடிந்தவரை தன்காலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றதைத் தவிர அதிக உலக அனுபவம் இல்லாத சாயாவையும் குழந்தை அம்முவையும் தனியே எங்கும் விட முடியாது, அந்த வீட்டிலேயே வேலையாட்களுடன் இருக்க வைத்த ஸ்ரீதரன், அந்த வருட இறுதிக்குள் எஸ்டேட்டையும், டீ ஃபேக்டரியையும் நல்ல விலைக்கு விற்றான். 

அவர்களது பரம்பரை வீட்டிலிருந்து அவர்கள் ஒரு துரும்பைக் கூட எடுத்துச் செல்லவில்லை. புது எஸ்டேட் உரிமையாளரிடம் அவர்களுக்கு விசுவாசமான வேலைக்காரர்களின் வேலையைத் தொடர அனுமதி பெற்றுத் தந்தான்.

ஸ்ரீதரன், வந்த பணத்தையும், செலவினங்களையும், முதலீடுகளையும் இரண்டாகப் பிரித்து, சாயாவுக்குத் தனி வருமானத்தை ஏறபடுத்தினான். 

பெங்களூரில், ஒரு பெரிய தனி வீட்டை வாங்கினான். இரண்டு இடத்தை வாங்கி, உலகத் தரம் வாய்ந்த பில்டரிடம் கொடுத்து, ஒன்றை ஐந்து மாடி அலுவலகக் கட்டிடமாகக் கட்டி வாடகைக்கு விட்டுவிட்டான். இன்னொன்றை மாலாகக் கட்டிக் கொண்டிருக்கிறான். 

அடுத்த வருடம் படிப்பை முடித்த ஹரிணியும் ஸ்ரீதரனும் தங்கள் அக்கா, அண்ணா, மற்றும் அம்முவுக்காகத் திருமணம் செய்து கொண்டனர். பரஸ்பர புரிதலிலும், ஒருவகையான நிர்ப்பந்தத்திலும்  திருமணம் செய்து கொண்டாலும், இருவரும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். ஹரிணிக்கு இப்போது ஐந்தாம் மாதம் நடக்கிறது.

ஹரிணியும் ஸ்ரீதரனும் எத்தனை சொல்லியும் சாயா அம்முவுடன் தனியாகக் கீழ் வீட்டிலும், இவர்கள் மேல் வீட்டிலும் வசிக்கின்றனர். சாயா தனக்குத் தேவையான சாமான்களை தானே சென்று வாங்கிக் கொள்கிறாள். கார் ஓட்டப் பழகிக் கொண்டிருக்கிறாள். 

ஸ்ரீதரனும் ஹரிணியும் அவளை மறுமணம் செய்து கொள்ளச் சொல்லி, அம்முவைத் தாங்கள் வளர்ப்பதாகச் சொன்னதற்கு “உங்கண்ணாவுக்கு நான் கடைசி வரை உண்மையா இருக்க விரும்பறேன் தம்பி, என்னை விட்டுடுங்க. இதுலயாவது அவரோட ஆத்மா சாந்தியடையட்டும். நான் இப்ப சந்தோஷமாதான் இருக்கேன்” என்று விட்டாள். ஃபேஷன் டிஸைனிங் கோர்ஸ் படிக்கிறாள்.

தற்போது எல்கேஜி செல்லும் அம்மு என்கிற வர்ஷா உருவத்தில் தன் தந்தை வழிப் பாட்டியின், தாயின் பிம்பமாகவே வளர்கிறாள்.