பிம்பம் 16 + / அத்தியாயம் – 15

                   பிம்பம் 15

ஸ்ரீதரனும் ஹரிணியும் அந்த அறையில் இருந்த அலமாரிகளைத் தேடிக் கொண்டிருக்க, அதற்குமேல் அங்கே நிற்க மாட்டாதவளாக, வெளியே வந்த சாயா, கீழ் ஹாலுக்கே திரும்பிச் செல்ல, வனிதா, மீனா, தாயம்மா மூவரும் பின்தொடர்ந்தனர். 

பத்மலக்ஷ்மியின் படம் அங்கிருக்கக் கூடும் என்று கூறிய  தாயம்மாவால், இவ்வளவு புகைப்படங்கள் இருக்கக் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. அதுவும் அதே நிறப் புடவைகளில், அதே நகைகளில் சாயாவையும் பார்த்திருப்பது, அங்கிருந்த அனைவரையுமே அதிரவைத்தது.

பத்மலக்ஷ்மி என்ற பெயரையும், சாயாவுக்கும் அவளது மாமியாருக்குமான உருவ ஒற்றுமையையும் பார்த்தவுடனேயே சாயாவுக்கும் ஹரிணிக்கும் அது யாரென்று புரிந்து போனது. 

அவளது தந்தை கோவிந்தன்தான் மூச்சுக்கு முன்னூறு முறை ‘நீ எந்தங்கச்சி மாதிரி அழகு, உனக்கும் எங்க குடும்பத்துல வழக்கமா முதல் பொண்ணுக்கு பேர் வெக்கிறாப்போல லக்ஷ்மின்னு  வர மாதிரிதான் உனக்கும் பேர் வைச்சிருக்கேன். எந்தங்கச்சி  பேரு பத்மலக்ஷ்மி’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறாரே?

இருந்தாலும், ஹரிணி தன் சந்தேகத்தை, ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஸ்ரீதரனிடம் “உங்கம்மாக்கு சொந்த ஊர் எது?” என்று கேள்வியாக்கினாள்.

“ஏன், மேலகோட்டை”

சாயாலக்ஷ்மிக்கும் பத்மலக்ஷ்மிக்குமான உறவு, இப்போது, சந்தேகத்துக்கே இடமில்லாமல் நிரூபணமானது.

ஹரிணியின் மனதில் பலவித கேள்விகள் அலைமோதின. சாயா, ஹரிணியின் தந்தை கோவிந்தன், அவரது பதினைந்து வயதில், எட்டாம் வகுப்பை மூன்றாவது முறையாக  ஃபெயிலானதற்கு, தந்தை வேலப்பன் அடித்து நொறுக்கியதால் வந்த ஆத்திரத்தில், வீட்டில் அவரது தந்தை விதைநெல்லுக்காக வைத்திருந்த  ரூபாயுடன், மெயின் ரோட்டிற்கு வந்து பஸ் ஏறி விட்டார். அது திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டது.

படிப்பு வராவிட்டாலும்,  ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், கோவிந்தன் உடல் உழைப்புக்கு அஞ்சவில்லை. காய்கறி மார்க்கெட்டில் கூலி, மளிகைக் கடையில் பொட்டலம் போடுவது, சிறிய ஹோட்டலில் பெருக்கித் துடைக்கும் வேலை என்று பல வேலைகள் பார்த்து, கடைவாசல்களும், மலைக்கோட்டை அடிவாரமுமே அவருக்கு உறங்குமிடமாக, 

வருடங்கள் ஓடியது. மெதுவே, ஒரு சின்ன ஒற்றை அறை வீட்டிற்குக் குடியேறினார்.

சிறுவயது என்பதால் பல இரவுகள், அதுவும் ரோட்டில், வாசல்படிகளில் படுத்திருக்கையில் அப்பா, அம்மா, தங்கைகள் பத்மலக்ஷ்மி, மீனாட்சி என குடும்பத்தைப் பிரிந்ததற்கு வருந்தி, அழுவார். 

ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு அவருடன் ஊரில் விளையாடிய நாச்சிமுத்துவைப் பார்த்தபோது,  அவனது தந்தை வேலப்பன், இப்போது யாரோ பணக்காரரின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பராமரிப்பதாகவும், அவனது சிறிய தங்கை மீனாட்சி, அம்மை போட்டுக் குளிர்ந்து விட்டதாகவும் சொன்னான். அப்போது பத்மலக்ஷ்மிக்குத் திருமணமாகவில்லை.

எவ்வளவுதான் முயற்சித்தாலும்,  அவருக்கு ஊருக்கு போகும் தைரியம் வரவில்லை. இருபத்திநாலு வயதில், அவர்  வேலை செய்த ஹோட்டல் வாசலில் இருந்த பெட்டிக் கடையில் , அந்த பிரபலமான மகளிர் கல்லூரியில் ப்யூன் வேலை காலியாக இருப்பதாகவும், தகுதியாக, குறைந்தது எட்டாவது வரை படித்திருக்க வேண்டும் என்ற செய்தி கிடைத்தது.

போய்ப் பார்க்க, முதலில், கல்லூரி முதல்வர் , மகளிர் கல்லூரி, இவரது வயது என தயங்கினாலும் “எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது. ஸ்டூடண்ட்ஸோட ஏதாவது பிரச்சனை வந்தா, நானே போலீஸ்ல புகார் செஞ்சுடுவேன்” என்ற எச்சரிக்கையுடன், கோவிந்தன் மூவரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே கல்லூரியில், ஹாஸ்டலில்  சமையல் வேலை பார்த்த, ராஜாங்கம் என்பவர், கோவிந்தனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வீட்டை விட்டு வந்ததில் இருபக்கமும் உறவுகள் இல்லாதிருக்க, சீரான, சிக்கனமான வாழ்வு.

அதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவற்றை, தன் தவறு உட்பட மறைக்காது தன் மனைவி, மக்களுக்குச் சொல்லி இருந்தார், கோவிந்தன்.

ஹரிணியின் மனமும் முகமும் நிறைய யோசனையும் சந்தேகமும்  தாங்கி நின்றவள் “இந்த ரூம்ல வேற ஏதாவது இருக்கான்னு தேடிப் பாக்கலாமா?”

அந்த மரக்கதவுகளும் பூட்டி இருக்க, ஸ்ரீதரன் நெம்பினான். அந்தக்கால பூட்டு, படு ஸ்ட்ராங்காக இருந்தது.

ஹரிணி “இப்டி, கீழ இருந்து அந்த ஸ்க்ரூவை கழட்டுங்க, வலது பக்கம் சுத்தியால  ஓங்கி அடிங்க, நான் ட்ரை செய்யட்டுமா? என்றாள் பெறுமை இழந்தவளாக.

அத்தனை அழுத்தத்திலும் ஸ்ரீதரன் சிரித்தான்.

“நான் என்ன தொழில்முறை திருடனா? கொஞ்சம் பொறுங்க”

ஒருவழியாக இருபது நிமிட போராட்டத்துக்குப் பின், பூட்டு உடைந்தது.

உள்ளே, முப்பதுக்கும் மேற்பட்ட கேலிகிராஃபி  நோட்டுப்புத்தகங்கள், அதற்கான தனி பேப்பர்கள், கேலிகிராஃபி எழுதத் தேவையான பேனாக்கள், கலர்கலராக அதற்கான இன்க் பாட்டில்கள் என்று நிறைய  இருந்தது.

அனேகமான புத்தகங்கள் சசிதரனின் சிறுவயது முதலே எழுதி நிரப்பப்பட்டு இருக்க, ஐந்தாறு காலி நோட்டுக்களும் இருந்தன. அங்கிருந்த  இழுப்பறையைத் திறக்க முடியாதபடி (கூடாதென்று?!)  குறுக்கும் நெடுக்குமாக அலுமினியச் சட்டம் அடிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீதரன் “இது வேறயா? இதுல என்ன ரகசியத்தைப் பதுக்கி வெச்சிருக்கான்னு தெரியலையை” என்றபடியே, ‘டூல் கிட்’டில் இருந்து, நீண்ட  ஸ்க்ரூ டிரைவரையும் (திருப்புளி), ஒரு புறம் சுத்தியலும், மறுபக்கம் குறடுமாக இருக்கும் claw hammer ஐயும் எடுத்துக் கொண்டு, பட்டிகளை நீக்கத் தொடங்கினான். 

நேரம் இரவு பன்னிரெண்டைத் தாண்டி இருந்த நிலையில், படீர், படீரென சுத்தியலை அடிக்கும் ஓசை வீடெங்கும் எதிரொலித்தது. அலுமினியப் பட்டி என்பதால், ஓரளவு சுலபமாகவே எடுக்க முடிந்தது. ஆனாலுமே, இது போல் கடின வேலைகளுக்குப் பழகாமல் சொகுசாக வளர்ந்த ஸ்ரீதரனுக்கு, கோத்தகிரியின் குளிரிலும் வியர்த்து வழிந்தது. 

“இருங்க, தண்ணி குடிச்சிட்டு வரேன்” என்று அவன் வெளியே செல்ல முற்படவும், ஏனோ அந்த அறையில் தனியே நிற்கத் தயங்கிய ஹரிணி ” நான் எடுத்துட்டு வரேன்” என்று கீழே சென்று விட்டாள்.

ஹால் சோஃபாவின் கீழே, கண்ணை மூடித் தரையில் அமர்ந்திருந்த சாயாவைப் பார்த்தாலும், ஒன்றும் பேசாது, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மேலே சென்றவள், ஓர் ஃபைலில் இருந்த காகிதங்களைக் கையில் வைத்துக் கொண்டு, கண்ணில் நீருடன், வெறித்த பார்வையுடன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருத்த ஸ்ரீதரனைக் கண்டு திடுக்கிட்டாள்.

“ஸார், என்னங்க, ஸ்ரீதரன் ஸார்” என்று பல வகையாக அழைத்தும், அசையாது அமர்ந்திருந்தவனின் கைகளில் இருந்து, ஹரிணி அந்த ஃபைலை உருவியதைக் கூட உணராமல், பேஸ்த்தடித்தது போல் இருந்தான் ஸ்ரீதரன்.

அவனது கையில் தண்ணீர் பாட்டிலைத் திணித்துவிட்டு, அவசரமாக மேலோட்டமாக  சில காகிதங்களைப் புரட்டியதற்கே பலத்த அதிர்ச்சி என்ற பதத்தின் பொருளை, மழுமையாக உள்வாங்குவதற்குள், வேகமாகப் படியேறி வந்த  மீனா “சார், சாயா மேடத்துக்கு என்னவோ செய்யுது சார். உடம்பெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது.  என்னன்னவோ பேசறாங்க ரொம்ப அழுவுறாங்க. அம்மா  வந்து உங்க அக்காவைப் பாருங்கம்மா” எனவும், ஸ்ரீதரனும் ஹரிணியும், கீழே செல்லும் முன், ஸ்ரீதரன் அந்தக் கோப்பையும்  கையோடு எடுத்துச் சென்றான்.

கடந்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக, மாடியில் பார்த்த புகைப்படங்களின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் வெளிவராமல் யோசனையுடன் இருந்தவளுக்குக் கணவன் தன்னை ஏதோ திட்டத்துடன், பழி வாங்கி  இருப்பது புரிந்து போனது.  ஏதேதோ எண்ணங்கள் அலைமோத, மகவின் நினைவும், தன் நிலையும், எதிர்காலமும், ஏமாற்றப்பட்ட அவமான உணர்வும் சாயாவைத் தன் வசமிழக்கச் செய்துவிடும் அளவுக்குக் குழப்பமாக உணரச் செய்தது.

 தங்கையைக் கண்டதும் “ஹரிம்மா…” என்று வெடித்து அழுதாள்.

“அக்கா…”

“ஹரிம்மா, நாம அம்மு கிடைச்சதும் இங்க இருந்து எங்கேயாவது போயிடலாம் ஹரிம்மா” என்றவள் “அம்மூ…” என்று மீண்டும் அழுதாள்.

“அக்கா, முதல்ல இந்தத் தண்ணியைக் குடி. மெதுவா. இப்ப சொல்லுக்கா”

“அண்ணி, கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணி. எப்படியாவது அண்ணனையும் அம்முவையும் கண்டு புடிச்சிடலாம்”

“இனிமே உங்கண்ணனை எனக்குப் பாக்கவே வேணாம் தம்பி. எனக்கு ரொம்பப் பயமா இருக்கே. அய்யோ, எனக்கு அவமானமா இருக்குடி ஹரிம்மா… அவரு என்னைப் பாத்ததும் விரும்பினார்னு நினைச்சேன். இத்தனை ஏழைப் பொண்ணுகிட்ட, அவ்வளவு பெரிய பணக்காரருக்கு எப்படி ஆசை வரும்னு முதல்ல  நம்பிக்கை இல்லாமதான் இருந்தேன். எத்தனை முறை எனக்காக ஸ்டோருக்கு வந்து, அப்பாவைப் பாத்துன்னு, எதுவுமே அவர் ஆசையில செய்யல, என்னை, என்னை…என்னை எதுக்காகவோ ஏமாத்தி, ஆசை காட்டி மோசம் பண்ணி இருக்காருடீ”

“அக்கா”

“அண்ணி, அண்ணா உங்களை நிஜமா விரும்பினார் அண்ணி. உங்க கிட்ட இதமா பேசறா மாதிரி அவர் யார் கிட்டயும் பேசி நான் பாத்ததில்லை அண்ணி”

“ம்ஹும். பொம்பளைங்கள்லாம் பைத்தியம் தம்பி. எலும்பு, பிஸ்கட்னு தூக்கிப்போட்டா, வாலாட்டிக்கிட்டு பின்னாலேயே சுத்தற நாய்க்குட்டி மாதிரி நாங்க. ‘ஆசை, காதல், நீதான் என் உசிரு, இந்த மாளிகையோட எஜமானிடி நீ, நீ பக்கத்துல இல்லைன்னா எனக்கு எதுவுமே சரிவரலைடீ’ ன்னு அவர் சொன்னது எல்லாமே பொய்”

“…”

“என்னென்ன வேலையெல்லாம் சொல்லுவார், தெரியுமா? எல்லாம் என் மேல இருக்கற ஆசைல, என்னைப் பக்கத்துலயே  வெச்சுக்கணும்னு நினைக்கறார்னு நம்பினேன்டீ…”

“…”

“சொன்னதை  செய்யலைன்னா கோபம், கூப்பிட்ட குரலுக்கு உடனே போகலைன்னா கோபம், அவரோட வெளில வரலைன்னா கோபம், இத்தனை ஏன், எத்தனை நாளைக்குப் பால் குடிக்கற அம்முவைக் கீழ போட்டுட்டு அவரைக் கவனிக்க…” என்று, கைகளால் முகத்தை மூடிக் கொண்ட சாயாவை, பெண்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, ஸ்ரீதரன் தலையைக் குனிந்து கொண்டான்.

ஆனால், சாயா ஸ்ரீதரனோ, மற்ற வேலையாட்களோ, தனது அந்தரங்கத்தைக் கேட்கிறார்கள் என்ற பிரஞ்ஞையே இல்லாது பேசினாள்.

“முதல் தடவை ரிஸப்ஷன்ல ஒரு மெரூன் கலர் புடவையும், கெம்பு நகைகளும் கொடுத்தார். அன்னைக்கு நைட் ‘நீ இப்ப இந்த மாளிகையோட எஜமானி மாதிரி, lady of the house மாதிரி இருக்க’ ன்னு சொன்னார். அது முதல் தடவை, அதுபோல அந்த ரூம்ல இருக்கற ஒவ்வொரு புடவையும், நகையும் எனக்குக் கொடுத்து இருக்கார்”

“…”

“நான் அதை எல்லாம் போட்டுக்கிட்டா அவர் பார்வையே வேற மாதிரி இருக்கும். அன்னைக்கெல்லாம்  என்கிட்ட ரொம்ப நெருக்கமா… ஒரு வேகத்தோட என்னை…  பல தடவை… ஐயோ, கடவுளே, அதெல்லாம் என் மேல இருக்கற ஆசைன்னு நினைச்சு…அம்மா, என்னால தாங்க முடியலம்மா” என்று தன்னை மறந்து தன் அந்தரங்கத்தை, அவமானத்தைச் சொல்லி அழுது அரற்றினாள். ஹரிணி, அவளை அடக்கி, ஆசுவாசப்படுத்த முயன்றும் முடியாமல் தவித்தாள்.

ஸ்ரீதரன் அதற்கு மேல் அங்கிருக்க முடியாதவனாக, எழுந்து ஆஃபீஸ் அறைக்குள் சென்று விட்டான்.

பத்மலக்ஷ்மியுடன் நேரில் பழகியதால், உண்மை தெரிந்த தாயம்மாவும் சரி, இன்று படத்தில் பார்த்து மாமியார் மருமகளின் உருவ ஒற்றுமையை வியந்த வனிதா, மீனாவும் சரி, தங்கள் முதலாளியின் இந்த நடவடிக்கையைப் புரிந்து கொள்ள முடியாது பேயறைந்தது போல் காணப்பட்டனர்.

தாயம்மா “அந்த ரூம்புல ஏதோ பத்மாம்மா, ஜீவனய்யாவோட (ஃ)போட்டா இருக்கும்னு நினைச்சேன் தாயி, ஆனா, இப்படி இருக்கும்னு நினைக்கலை” என உண்மையாகவே வருந்தினார்.

“அதெப்படிம்மா, அவங்க மாதிரியே நீங்களும் இருக்கீங்க?” என்றாள் மீனா.

ஹரிணி “அவங்க எங்களோட அத்தைதான். அதை இப்பதான் புரிஞ்சிக்கிட்டோம். ஆனா, எங்களுக்கு அவங்க இருக்கறதோ, அவங்களுக்கு மகன்கள் இருக்கறதோ தெரியாதுக்கா. அவங்க படத்தையும் பேரையும் பாத்த பிறகு, ஊரையும் விசாரிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டோம்”

“நீங்க அவரோட மாமா பொண்ணுன்னு சசிதரன் ஐயாவுக்குத் தெரியுமாம்மா? ” என்ற வனிதாவிற்கு பதிலாக, உதட்டைப் பிதுக்கினாள், ஹரிணி.

“தெரியலைக்கா. ஆனா, அக்காவோட கல்யாணம் நடந்த வேகம், இப்ப நடக்கறதெல்லாம் பார்த்தா, மாமாக்கு தெரிஞ்சு,  ஏதோ திட்டத்தோட செஞ்ச மாதிரிதான் தெரியுது”

தாயம்மா ” அந்தப்புள்ளை  அம்மாவோட பாசத்துக்கு அப்படி ஏங்குவாரு. ஆனா, இவரு ஐயாவோடதான் அதிகம் இருப்பாரு. சசி தம்பி மனசுல என்ன இருந்துச்சு, இருக்குன்னு அந்த சின்ன வயசுல கூட தெரியாது தாயி. எதையும் சொல்லாது, எதுக்கும் அழுவாது. திடமான புள்ளைன்னு  நினைச்சேனே. எனக்கு ஒண்ணும் புரியலை கண்ணு”

“…”

ஹரிணியைத் தயக்கத்துடன் பார்த்தவர் சாயாவிடம் “எப்படியும் நீ பொஞ்சாதிதானே தாயி, இதுல எப்படி வித்தியாசமா சொல்றீங்கன்னு என் புத்திக்கு எட்டலைம்மா”

சாயா அமைதியாக இருக்க, ஹரிணிக்குப் புரிந்தும் புரியாமல் இருந்தது. அக்கா மாமாவின் உறவு, எதிர்காலம் என அதற்கு மேல் எதையும் யோசிக்கவே பயமாக இருந்தது.

பெண்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரன் எழுந்து வெளியே வந்து “வனிதாக்கா, எல்லாருக்கும் டீ, காபி இல்ல வேற ஏதாச்சும் சூடா குடிக்கக் கொண்டு வாங்க” எனவும் வனிதாவும் மீனாவும் எழுந்து உள்ளே செல்ல, தாயம்மாவும் பின் தொடர்ந்தார்.

ஹரிணி “அக்கா” எனவும், அவளை நிமிர்ந்து பார்த்த சாயாவால், கண்களையே திறக்க முடியாத அளவுக்கு கண் இரப்பைகள் இரண்டும் வீங்கி, இடுங்கி இருந்தன.

“அக்கா, நம்ம அப்பா உன்னைக் கல்யாணம் செய்து கொடுக்க மாமாவைப் பத்தி விசாரிக்க வந்த இடத்துலதானே விபத்தாச்சு. அவர் உனக்கு ஏதோ மெஸேஜ் அனுப்பினாரே, அது இருக்காக்கா?”

பரபரப்புடன் நிமிர்ந்த வேகத்திலேயே மீண்டும் மடங்கினாள் சாயா. “இப்ப என்னோட பழைய மொபைல் இல்லை. அவர்தான் டேட்டாவை எல்லாம் மாத்தினார்”

“அதே நம்பர்தானே அக்கா, உன் ஃபோனைக் கொடு”

முதல்நாள் அதிகாலையில் ஹரிணிக்குப் பேசிய ஃபோன் சோஃபாவில் அனாதரவாய்க் கிடந்தது. ஹரிணி அதை எடுத்து, அவளது அப்பாவிடம் வாட்ஸ்ஆப் இல்லாததால் சாதாரண மெஸேஜில் செக் செய்தாள். அந்ந நம்பரே இல்லை என்றது ஃபோன். மேலும் பார்த்ததில், ஹரிணியின்  நம்பரைத் தவிர, திருமணத்திற்கு முன்பான சாயாவின் தொடர்பு எண்கள் அனைத்துமே , அவளது தந்தை உட்பட அதில் இல்லை அல்லது அழிக்கப்பட்டிருந்தது.

“மை காட், ஸ்கீமர்”

“என்னாச்சு ஹரிணி” என்றான் ஸ்ரீதரன்.

“இதுல அப்பா மட்டுமில்லாம, திருச்சில எங்களுக்குத் தெரிஞ்ச யாரோட நம்பருமே இல்லை”

“???”

“நீ யாருக்குமே பேசலையாக்கா?”

“அப்பா இல்லை. கலா பேசினது எனக்குப் பிடிக்கலை. அப்புறமா அவர் ஃபோனை மாத்திக் குடுத்தார். குழந்தை பொறந்ததுல உன்னைத் தவிர அவசியம்னா அவருக்கு, தம்பிக்கு, டாக்டருக்கு, இங்க வேலை செய்யறவங்களுக்கு பேசுவேன். அவ்வளவுதான். கவனிக்கலை ஹரிமா”

ஸ்ரீதரன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். “அண்ணா இதுல, சில விஷயங்களை கேலிகிராஃபி பேப்பர்கள்ல எழுதி வெச்சிருக்கான். படிக்கப் படிக்க அதிர்ச்சியா இருக்கு. இப்ப என் கவலை எல்லாம், எப்படியாவது  அம்முவை மீட்கணும்கறதுதான்” 

“…”

“இதைப் பாருங்க”

ஹரிணி ஸ்ரீதரன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தாள். அது கிட்டத்தட்ட நடந்த சம்பவங்களைப் பற்றிய சசிதரனின் வாக்குமூலமாகவே இருந்தது. 

சசிதரன், அவன் அவனது அப்பாவுடன் விளையாடியது, பேசியது, சித்தப்பா இன்பசேகரன் வந்த பிறகு, அவனது அம்மா அவருடன் அதிகமாக நெருங்கிப் பேசியது, இவனுக்கு அவரைப் பிடிக்காமல் போனது, ஸ்ரீதரன் பிறந்தது, அவனது அம்மா பத்மலக்ஷ்மி தம்பி பிறந்ததும் அவனை அதிகம் கவனித்துக் கொண்டது என சின்னச் சின்ன வரிகளில், அந்தந்த வயதுக்குரிய சொல்லறிவுடன், அழகான எழுத்தில் எழுதி இருந்தான்.

அவனது அம்மாவைப் பற்றி எழுதி இருந்த வரிகள் அனைத்திலும் வெறுப்பை மீறிய ஏக்கம்தான் அதிகம் தெரிந்தது. அவனது தந்தையும் அவனும் பத்மலக்ஷ்மியையும் இன்பசேகரனையும் ஒன்றாகப் பார்த்தது, அவனது தந்தையின் மறைவு என ஒன்று விடாமல் பத்து வயதுச் சிறுவனின் வார்த்தைகளில்  எழுதி இருந்தான்.

பதின் பருவத்தில் தன் அம்மாவின் அழகைப் பற்றி நிறைய கம்பீரம், அழகு, lady of the house போன்ற குறிப்புகளோடு அவன் எப்படி அவனது தாயுடன் பேசினான் என்பதையும் எழுதி இருந்தான். 

பதினான்கு வயதுச் சிறுவன், இன்பசேகரன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் முகவரியை, லேண்ட் லைன் எண்ணை அவரது பிஏவின் மூலம் தெரிந்து கொண்டு, அப்போது அவனிடம் செல்ஃபோன் கிடையாது, அவர்களுக்கு ஃபோன் செய்து, ஸ்பீக்கரில் குரலை மாற்றிப் பேசி, தன் தாய்க்கும் தந்தைக்குமான உறவை, மூன்றாவது மனிதன் போல் சொன்னதை எழுதி இருந்தான்.

‘கல்யாணம் நின்னு போகணும்னு நினைச்சேன், அவன் (இன்பசேகரன்) செத்துப்போனது எனக்கு படு குஷி. இனி எங்கம்மா, எங்களுக்கு மட்டும்தான் அம்மா’

அவனது குறிப்புகளில், குறிப்பாக பத்மலக்ஷ்மியுடன் பதின்பருவத்தில் பேசிய பேச்சுகளில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவரை வதைத்திருந்தது தெரிந்தது.

“ஓ காட், a big manipulator” என்றாள், ஹரிணி.

ஸ்ரீதரன் கடைசியாக, ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தான். அதில், சாயாவின் தந்தை கோவிந்தனின் கையெழுத்தில் ஜீவன் எஸ்டேட்டின் முகவரியும் சசிதரனின் மொபைல் எண்ணும் எழுதப்பட்டிருந்தது.