பிம்பம் 16+ / அத்தியாயம் – 14

பிம்பம் 14

சசிதரனின் குரலில் இருந்த அந்நியத் தன்மையும் தீவிரமும் எல்லோரையுமே உலுக்கியது. 

தங்கள் முதலாளி ஒரு உழைப்பாளி, கண்டிப்பானவன், ஆனாலும் நல்லவன் என நினைத்திருந்த வேலையாட்கள்,  அண்ணன் தன்னை வெறுத்தாலும், அவன் பக்கம் இருந்த இழப்பின் நியாயத்தைப் புரிந்திருந்த ஸ்ரீதரன், தந்தை இறந்த சமயத்தில், ஆபத்பாந்தவனாகக் கைகொடுத்ததும், அக்காவின் திருமணமும், சசிதரனின் கரிசனமும் கண் முன்னே வந்து போக, அவனிடம் இருந்த முரண்களைத் தேடிக் கொண்டிருந்த ஹரிணி என எல்லோருமே அதிர்ச்சியில் இருக்க, சாயா மயங்கி, மடங்கித் தரையில் சரிந்தாள்.

வனிதாவிடம் “சீனி அதிகம் போட்டு சூடா ஒரு டீ எடுத்துட்டு வாங்கக்கா” என்ற ஹரிணி, மீனாவின் உதவியுடன் சாயாவை சரியாகப் படுக்க வைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்தாள். கை  கால்களை சூடுபரக்கத் தேய்த்தாள். சாயா கண் விழிக்கவும், தேநீரைப் புகட்டினாள்.

ஸ்ரீதரன் மீண்டும் அந்த சப்இன்ஸ்பெக்டருக்குப் பேசவும், அவர் சசிதரனின் புதிய எண்ணை வாங்கிக் கொண்டு, இவர்களுக்குச் சொந்தமான வேறு இடங்கள் பற்றி விசாரித்தார்.  இந்த எண்ணை லொக்கேட் செய்ய தீவிர முயற்சி செய்வதாகவும், சசிதரன் குழந்தையுடன் இருப்பதால், ஏதாவது வாங்கவாவது கடைகள் இருக்கும் பகுதிக்கு வருவான் என்றும், பிடித்துவிடலாம் என தைரியம் அளித்தார்.

சாயா, ஏதோ நினைவுக்கு வந்தவளாக, வேகத்துடன் எழுந்து சமையலறைக்குள் செல்ல, வனிதாவும், ஸ்ரீதரனும் பின்தொடர்ந்தனர்.

ஸ்டோர் ரூம் அலமாரியைத் திறந்து பார்த்தவள் “அடப்பாவி” எனவும் “என்னண்ணி?” என்றான் ஸ்ரீதரன்.

பொதுவாக அம்முவுக்கு, தாய்ப்பால், கஞ்சி, சமீபமாக சிறிது சாதம், இட்லி என்று குடுத்தாலும், ஜூஸ், தண்ணீர் குடிக்க என சிப்பர் பாட்டில்கள் இரண்டு, மூன்று வைத்திருந்தாள். இரண்டு உபயோகத்தில் இருக்க, புதிதாக இருந்ததைக் காணவில்லை.

“உங்கண்ணன் ஏதோ கோவத்துல போனமாதிரி தெரியலை தம்பி. ஏதோ, திட்டத்தோடதான் போய் இருக்காரு” என்ற சாயாவுக்கு, சசிதரன் வைத்திருந்த நிபந்தனையில், ஸ்ரீதரனைப் பார்க்கவே கூசியது.

அங்கே நின்று கொண்டிருந்த மீனாவிடம் “எல்லாருக்கும் டிஃபன் செய்ங்க அக்கா” எனற ஸ்ரீதரன்

“வனிதாக்கா, அண்ணியை ஹாலுக்குக் கூட்டிட்டு வாங்க” என்று வெளியேறியவன் ஹரிணியிடம் “அண்ணியை எப்படியாவது கொஞ்சம் சாப்பிட வைங்க. நாம சாப்பிட்டுப் பேசலாம். நீங்க எல்லாரும் சாப்பிட்ட பிறகு என்னைக் கூப்பிட்டா போதும். வெயிட் பண்ண வேண்டாம்”

“சரி”

“தாயம்மா, ராத்திரி இங்கேயே இருங்க. வனிதாக்கா, எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணுங்க” என்றவன், மொபைலுடன் அலுவலக அறைக்குள் போய்விட்டான். வீடு முழுவதும் பெண்களாக இருக்க அங்கே நிற்கவே அவனுக்கு சங்கடமாக இருந்தது.

என்னதான் சாயா மூன்று வயத மூத்தவள்தான், என்றாலுமே, சசிதரனின் குற்றச்சாட்டை இருபத்திமூன்று வயது ஸ்ரீதரனால் ஜீரணிக்க முடியவில்லை. வசதி, பணம் எல்லாமிருந்தும், நினைவு தெரிந்த நாளாய், அண்ணனிடமிருந்து வெறுப்பையும் புறக்கணிப்பையும் மட்டுமே அனுபவித்தவனுக்கு இந்தப் பழியைத் தாள முடியவில்லை. இந்தச் சூழலைச் சமாளிப்பதும் கடினமாக இருந்தது.

இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களில், சசிதரன் இதைக்குறித்தும், அவனது வருகையைக் குறித்தும் பேசியதில், ஸ்ரீதரனே விலகியபோதும், அண்ணி உதவி என்று கேட்கும்போது தள்ளி நிற்பது எப்படி?

சாயாவின் இயல்பான,   அன்பான பேச்சும், எல்லை மீறாத, உறவை, உரிமையைத் திணிக்காத நட்பும் ஸ்ரீதரனைக் கவர்ந்ததால்தான் அவளுடன் இயல்பாகப் பேசத் தொடங்கினான். சாயாவைப் பார்த்ததுமே அவனுக்குள் எழுந்த  நெருக்கமான ஒரு உணர்வுக்கு, தாய், சகோதரி, நண்பி என்று பெயர்சூட்ட அவன் விரும்பவில்லை. 

ஆனால், சாயாவின் பேச்சும் தோற்றமும், ஆறு வயதுக்குப் பிறகு, அன்னையின் புகைப்படத்தைக் கூட பார்த்திராத  ஸ்ரீதரனுக்குள் இதமான, இனிமையான, ஒருவித பாதுகாப்பான, நெருக்கமான உணர்வைப் பரப்பியது என்பதென்னவோ நிஜம். அவளது அன்பை பெரிதும் மதித்தான். 

சாயா கர்ப்பமானதும் மகிழ்ந்தவன்,  அவளது வளைகாப்புக்கு, அவன் வளையலை வாங்கி, சசிதரனே அவளுக்கு அணிவித்ததில், ஏதோ தன் உறவுகள் அனைத்தும் தன்னிடம் மீண்டும் சேர்ந்துவிட்டதாக நினைத்தவனை, குழந்தை பிறந்த தினத்தன்று பிடித்துத்  தரையில் இறக்கிய சசிதரன், குழந்தைக்காக ஹாஸ்பிடல் போக நேர்ந்த தினத்தன்று, முழுவதுமாகவே உடைத்துப் போட்டான்.

 இப்போது இது…

முதலில் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும். அதன் பிறகுதான் சசிதரனின் உடல், மன நிலையை, சாயாவுக்கும் சசிக்குமான எதிர்கால உறவைப் பற்றி யோசிக்க முடியும். சிந்தனையை எங்கெங்கோ செல்லவிட்டு, அமர்ந்திருந்தவனை, ஹரிணி வந்து சாப்பிட அழைத்தாள். 

ஒரு வழியாக காலையில் இருந்து பட்டினி இருந்த சாயாவுக்கு இரண்டு இட்லிகளைத் திணித்தாள், ஹரிணி.

இரவு ஒன்பது மணிக்கு மேல், வெளியில் மழை தொடங்கி இருக்க, குளிர்ந்தது. வனிதாவும் மீனாவும் மூவருக்கும் கம்பளிகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். 

தாயம்மாவின் மகன், அவர்கள் மூவருக்கும் போர்வை கொண்டு வந்து தந்தார். இடையில் சிறிது நேரம் மின்சாரமும் நின்றிருக்க, மின்தொடர்பு இன்வர்ட்டருக்கு மாறுவதற்கான சொற்ப நேரத்துக்குள், ஸ்ரீதரனுக்கு அந்த வீட்டையும், வீட்டு மனிதர்களையும் அந்தகாரம் சூழ்ந்ததான உணர்வு ஏற்பட்டது.

தாயம்மா ஸ்ரீதரிடம் “ஐயா குட்டி ராசா, அந்த போலீஸ் கிட்ட பேசுனீங்களா? எப்படியாவது சசி தம்பியை கண்டுபுடிச்சு என் ராசாத்தியை மீட்டுக் கொண்டு வந்துடுங்க ராசா” எனவும்  “தாயம்மா” என்ற ஸ்ரீதரனின் குரல் தடுமாறியது.

தாயம்மா எப்போதுமே சசிதரனைத்தான் கவனித்துக் கொள்வார். ஸ்ரீதரனின் அம்மா பத்மா உயிரோடு இருக்கையில், எப்போதாவது தாயம்மாவிடம் ஸ்ரீதரனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லும்போது இப்படி “குட்டி ராசா” என்று அழைப்பார். அவனது அம்மா  இறந்தபிறகு, ஒரே உறவான அண்ணனும் விலகி நிற்க, வேலையாட்கள் உதவியில் அவன் வேலைகளும், உணவும் நடக்க, ஸ்ரீதரன் தன் பொழுதுகளை பெரும்பாலும் தனிமையில்தான் கழித்திருக்கிறான். 

தன்னை சுதாரித்துக் கொண்ட ஸ்ரீதரன் “பேசி இருக்கேன் தாயம்மா, முயற்சி செய்வோம். விடிகாலைல நானும் போய்ப் பாக்கறேன். அண்ணன் காலைல வரைக்கும் டயம் கொடுத்து இருக்கறதால, ராத்திரி குழந்தைக்கு ஆபத்தில்லைன்னு நம்புவோம்” என்றவன், அதை தாயம்மாவுக்கு மட்டுமில்லாமல், மற்றோருக்கும், ஏன், தனக்கேவும் சொல்லிக் கொண்டான்.

சற்று நேர அமைதியின்பின் ஹரிணி “அப்புறம் என்ன நடந்தது தாயம்மா?”

“ஜீவானந்தம் ஐயா, பத்மா அம்மாவுக்கும் இன்பசேகரன் ஐயாவுக்கும் நடுவுல ஒடிக்கிட்டிருந்த பிரச்சனையை, தான் நம்பாட்டாலுமே, ஊர்க்காரங்க பேசுறதைத் தவிர்க்க, அவரை பிஸினஸ் விஷயமா அடிக்கடி வெளியூருக்கு அனுப்பிடுவாரு. வேற வழி இல்லாம அவரும் போவாரு”

ஸ்ரீதரனுக்கு, சசிதரன் அவனுக்குக் கல்யாணம் ஆன புதிதில் தன்னை அடிக்கடி வெளியூர் அனுப்பியது நினைவுக்கு வந்தது. தாயம்மா தொடர்ந்தார்.

“சசி தம்பிக்கு பத்து வயசு இருக்கும். அந்த தடவை  ஃபேக்டரிக்கு மெஷின் வாங்கச் சொல்லி கல்கத்தாவுக்கு அனுப்பினதுல, கிட்டத்தட்ட நாலஞ்சு மாசம் இன்பசேகரன் ஐயா ஊர்ல இல்ல. அப்போ ஜீவானந்தம் ஐயாவும் அம்மாவும் சந்தோஷமாதான் இருந்தாங்க.

இந்த சமயத்துல பத்மாம்மா திரும்பவும் பிள்ளை உண்டாகி இருந்தாங்க”

ஹரிணி, ஸ்ரீதரனை ஓரக்கண்ணால் பார்த்தாள். இறுக்கமாக இருந்தவன், எச்சிலை முழுங்குவது தெரிந்தது.

சசி தம்பி எப்பவுமே வெளிய, எஸ்டேட்டுக்குள்ள, ஃபேக்டரிக்குன்னு அவங்கப்பாவோட போயிடுவாரு. சில சமயம், அவங்கப்பாவும் தம்பியும் ரெண்டு மூணுநாள் கூட ஊருக்குப் போய்ட்டு வருவாங்க. பத்மாம்மா அவசியமானா தவிர, ஐயாவோட எங்கேயும் போகமாட்டாங்க”

“…”

“அப்படி ஒருமுறை ரெண்டு பேரும் கோயமுத்தூருக்குப் போய் இருந்தபோது, இன்பசேகரன் ஐயா வந்துட்டாரு. ரெண்டுநாள் ஊருக்குப் போய்ட்டு, ஊரைச்சுத்தி, சர்க்கஸ் பார்த்துன்னு சந்தோஷமா வந்தவங்க, சொன்ன நேரத்துக்கு முன்னாலயே வந்துட்டாங்க”

“…”

“வந்தவங்க நேர ஐயாவோட பெட்ரூமுக்கு பத்மாம்மாவைத் தேடிப் போக, அங்க அவங்களும் இன்ப சேகர…”

ஸ்ரீதரன் எழுந்து வேகமாக வாயில் கதவைத் திறந்துகொண்டு வெளியேற, வெளியே ஊதக்காற்றும் ஊசிமழையும் சுழன்றடித்தது, உள்வரை உலுக்கியது. 

 மற்ற பெண்கள் அனைவருமே சங்கடமாக உணர்ந்தனர். சற்றுப் பொறுத்து உள்ளே வந்த ஸ்ரீதரன் ” மேல சொல்லுங்க தாயம்மா, பரவால்ல” என்றான்.

“அவ்வளவு சந்தோஷமா உள்ள வந்த ஜீவானந்தம் ஐயா, அத்தினி நாளா எதை நம்பக்கூடாதுன்னு பிடிவாதமா இருந்தாரோ, அதை நேர்லயே, அதுவும் அவரோட புள்ளையை உண்டாகி ஐம்பது நாள்தான் இருக்கும், தன் கண்ணால பாத்தபிறகு “ச்சீ”ன்னு இந்த வீடே அதிர்ற அளவுக்குக் கத்திட்டு, காரை எடுத்துக்கிட்டு வேகமா போனவருதான். நாலு மணிநேரம் கழிச்சு, ஐயாவோட கார் சரிவுல இருந்த மரத்துல மோதி, விபத்துல இறந்துட்டதா போலீஸ்தான் வந்திச்சு. ஆனா பாடியெல்லாம் வீட்டுக்குக் கொண்டு வந்தாங்க”

சாயாவின் மனம் தாயம்மா சொல்வதிலும், கணவனின் நிபந்தனையிலும் அம்முவின் நினைவிலும் ஊசலாடியது. ஹரிணி தன் மனதில் இருந்த கேள்விகளை  நாகரீகம் கருதிக் கேட்காமல் இருந்தாள்.

வனிதாவும் மீனாவும் அரைகுறையாய் கேள்விப்பட்டதை, முழுநீள சரித்திரமாய்க் கேட்டதில் திகைத்திருந்தனர்.

தாயம்மாவே “பாக்கக் கூடாத வயசுல, பாக்கக் கூடாததை, பாக்கக் கூடாதவங்களைப் பாத்த சசி தம்பி, அன்னைல இருந்து ஆளே மாறிப் போய்ட்டாரு. பிடிவாதம், முரட்டுத்தனம், பத்மாம்மா எது சொன்னாலும் கேக்காம இருக்கறது, இன்பசேகரன் ஐயாவைப் பாத்தாலே எதையாவது தூக்கி வீசறதுன்னு இருந்தாரு”

“…”

“நான் மட்டும்தான் அவருக்கு சொந்தம் மாதிரி நினைச்சிக்கிட்டு இருந்தாரு. ஐயா போன புதுசுல சில நாள், என் வீட்டுக்குக் கூடப் போகாம, சசிதம்பியோட இருந்திருக்கேன். இந்த சமயத்துல ஊர்க்காரங்க மத்தில பேச்சு அதிகமாகவே, இன்பசேகரன் ஐயா, பத்மாம்மாவுக்கு ஸ்ரீதர் தம்பி பொறந்து மூணு வயசு வரைக்கும், கொஞ்ச நாள், கோத்தகிரி வீட்டுல போய் இருந்தாரு”

“…”

“ஃபேக்டரியைப் பாக்கறது, பணம் கொடுக்கறது, கணக்கு சொல்றதுன்னு அப்பப்போ வந்துட்டுப் போவாரு. கொஞ்ச நாள்ல திரும்பவும் அடிக்கடி வரத்தொடங்கி, ரெண்டு பேரும் பழையபடி…”

[email protected]#$?!”

“இப்போ சசி தம்பிக்கு பதிமூணு வயசாயிட்டதுல ஓரளவு உலகம் புரிஞ்சிடுச்சு. அதோட சின்னவயசுலயே தம்பியோட அனுபவங்கள், சுத்தி இருக்கறவங்களோட பேச்சு, கூடப்படிக்கற பசங்களோட கிண்டல், கேலின்னு வயசுக்கு மீறி பாத்துடுச்சு தம்பி”

“…”

“இந்த பிரச்சனைல, சசி தம்பிக்கு, குட்டி ராசாவைப்  (ஸ்ரீதரன்) பிடிக்காம போயிடுச்சு. நான் ஸ்ரீதர் தம்பியை தூக்கக் கூடாதுன்னு எனக்கும் சொல்லும்”

“சித்தப்பா என்ன ஆனாரு தாயம்மா?”

“ம்… ஒருநாள் பத்மாம்மாவுக்கும் இன்பசேகரன் ஐயாவுக்கும் அவரோட கல்யாண விஷயமா ஏதோ சண்டை. இன்பசேகரன் ஐயா, தனக்கு யாரோ ஒரு பொண்ணைப் பாத்து, அவங்க வீட்ல பேசி, எப்படியோ சம்மதிக்க வெச்சு, கல்யாணத் தேதியை முடிவு செஞ்சிட்டு வந்து, நாலு நாள்ல கல்யாணம்னு  பத்மாம்மா கிட்ட சொல்லி இருக்கார் போல”

“!!!”

“சில அர்த்தமில்லாத உறவுகள் காலகாலத்துக்கும் தொடரமுடியாது. அது போல உறவு, அதால வர உரிமை, உடமை, வாரிசு எதுக்குமே சமூகத்துல மதிப்போ, மரியாதையோ கிடையாது. இது புரியாம பத்மாம்மா, அவரோட சண்டை போட்டாங்க. அவரு கோபப்பட்டு வெளிய போய்ட்டாரு”

“அவருக்குக் கல்யாணம் ஆச்சா?”

“இன்பசேகரன் ஐயா மேலோட்டமா, அவர் பேர்ல அதிகம் தப்பு இல்லாத மாதிரி சொன்னதெல்லாம் பொய்யின்னு,  பொண்ணு வீட்டுக்குத் தெரிஞ்சதுல, கல்யாண மண்டபம் வரைக்கும் போய், முதல் நாள் நிச்சயம் நடந்து, மறுநாள் கல்யாணத்தன்னைக்கு காலையில், இன்பசேகரன் ஐயாவும், அவரோட தங்கி இருந்த  ரெண்டு சிநேகிதர்களும், எழுந்து, தயாராகி, வந்து பாக்க, மண்டபமே காலியா கிடந்தது. இது நடந்த மூணாவது நாள், பெங்களூர்ல ஒரு பெரிய  ஹோட்டல், இருந்த நீச்சல்குளத்துல இறந்து அவர் கிடந்ததா தகவல் வந்தது. அப்போ எஸ்டேட் மேனேஜரா இருந்த வடிவேல் ஐயாதான் போய் பாத்து, போலீஸுக்கு அடையாளம் காட்டி, அங்கேயே அடக்கம் செஞ்சிட்டு வந்தாரு”

“…”

“அடுத்த மூணுவருசமும், அம்மாவும் புள்ளையும் எப்பவும் முட்டிக்கிட்டேதான் இருப்பாங்க. நான் அதிகம் பக்கத்துல போய் கேட்டதில்லை. ஆனா, பத்மாம்மா, தான் செஞ்ச தப்பைப் புரிஞ்சிக்கிட்டு, வருத்தப்பட்டாங்க. சசி தம்பி அவங்க கிட்ட  என்ன சொல்லுவாரோ, எனக்குத் தெரியாது. ஆனா, அவர் பேசிட்டு போனபிறகு, நிறைய நேரம் அவங்க அழறதைப் பாத்திருக்கேன்”

“தன் மூத்த மகன்கிட்ட காட்டாத பாசத்தை எல்லாம் குட்டி ராசாகிட்ட காட்டினாங்க. சசிதம்பி கிட்டயும், பேசி சமாதானம் செய்யணும்னு அவங்க நினைச்சது நடக்கலை”

“அப்போ சசி தம்பிக்கு பதினாறு வயசிருக்கும். தன் அம்மா ஏதோ தப்பு செஞ்சுட்டாங்க, அதனால அப்பாவோட சாவுக்கு அம்மாதான் காரணம்னு நினைச்சதுக்கு மேல, இப்போ விவரம் புரிஞ்சதுல, அம்மா செஞ்ச துரோகம் புரிஞ்சதுல, தம்பி, அம்மான்னு கூட பாக்காம, அந்த வயசுலயே நறுக்குனு பதில் சொல்றதும், செஞ்ச தப்பை குத்திக்காட்டிப் பேசறதுமா இருந்திருக்காரு.

அன்னைக்கு பள்ளிக்கூடத்துல இருந்து சசி தம்பி திரும்பி வந்ததும் நடந்த வாக்குவாதத்துல, தம்பி என்ன சொல்லிச்சுன்னு தெரியாது.  ஆனா, மறுநாள் காலைல, மாடில ஒரு ரூம்பு மட்டும் பூட்டியே கிடக்கில்ல, அதான் அம்மாவோட தனி ரூம். அங்க பத்மாம்மா தூக்குல தொங்கிட்டாங்க”

“…”

“சசி தம்பி அந்த வயசுலயே கலங்காம நின்னு, அடுத்த ரெண்டு வருஷம்தான் படிக்க ஸ்கூலுக்குப் போனது. வயசு பதினெட்டானதும், எஸ்டேட், ஃபேக்டரி பொறுப்பை தானே நேரடியா பாக்கத் தொடங்கிட்டாரு”

“என்ன, அஞ்சாறு வயசுல அம்மா, அப்பா இல்லாம ஏங்கின குட்டி ராசாவைத்தான், ஏனோ பெரியதம்பி தள்ளியே வெச்சிடுச்சு. அதுலயும் சில நாள் “தம்பி சாப்பிட்டானா, தூங்கிட்டானான்னு கேப்பாரு. உடம்பு சரி இல்லைன்னா டாக்டர்கிட்ட போகவும், படிக்கத் தேவையான சாமான்கள், பொம்மை, உடுப்புன்னு செஞ்சாலும், தன்கிட்ட அண்டவிடாது. அது  எங்க கொண்டுவந்து விட்டுருக்குன்னு இப்பதான் புரியுது”

ஹரிணி “நீங்க ஏன் தாயம்மா இதை முன்னாலயே சொல்லலை?”

“நான் வளர்த்த புள்ளைம்மா அது. பணத்துக்கு, வசதிக்கு குறைச்சலா? ரெண்டுமே  தங்கம் மாதிரி, ராசா கணக்கா பெத்தவங்களோட இருந்திருக்க வேண்டிய  புள்ளைங்க”

“…”

” நான் ஏதாவது சொல்லணும்னு நினைப்பேன். ஆனா, சாயாம்மா கர்ப்பம் ஆனதுமே, கொஞ்ச நாள்ல, என்னை மாடிக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. இந்தப் பொண்ணை ஆட்டி வெச்சதை நாங்க எல்லாரும் பாத்துக்கிட்டுதான் இருந்தோம். அதான், சசி தம்பி வராதேன்னு  சொன்னாலும், அப்பப்போ வந்து எட்டிப் பாத்துடுவேன். ஆனா, சாயாம்மா மேலயும், ராசாத்தி மேலயும் அவரு ஆசையா இருக்கவும் நான் நம்பிட்டேன். இதை எதிர்பார்க்கலை. எல்லாம் விதி”

ஹரிணி  “தாயம்மா,  அத்தையோட  ஃபோட்டோ எதுவுமே இப்ப வீட்டுல இல்லையா?”

ஸ்ரீதரன் ” எனக்கு அம்மாவோட முகமே ரொம்ப நிழலாதான் நினைவிருக்கு தாயம்மா”

“இருக்கும். அம்மா, தற்கொலை செஞ்சுக்கிட்ட அந்த ரூம்லதான் இருக்கணும். சில நேரம் நடுராத்திரில கூட, சசிதம்பி அங்க போய் உட்கார்ந்திருப்பாரு போல. எங்க வீட்ல இருந்து பாத்தா, அந்த ரூம்ல விளக்கெரியுறது தெரியும்”

ஹரிணி “ஆமா, அக்காக்கு         கல்யாணம் ஆகி வந்தவுடனே, நான் இங்க இருந்த ரெண்டு, மூணு நாளும், யாரோ, மாடில இருந்து, கீழ வந்துட்டு, திரும்ப மாடிப்படி ஏறுற சத்தம் கேட்டுச்சு” என்றதும், ஸ்ரீதரனும் சாயாவும் அதிர்ந்தனர்.

“ஹரிமா, இதை ஏன் அப்பவே சொல்லலை?”

அதற்கு பதில் சொல்வதைத் தவிர்த்த ஹரிணி “தாயம்மா, அப்படி அந்த ரூம்ல என்னதான் இருக்கு? ஏன் அவ்வளவு ரகசியமா பூட்டியே கிடக்கு? அதைத் திறந்து பாக்க முடியுமா?” 

ஸ்ரீதரன் ” தாயம்மா, இந்த வீடு எனக்கும் சொந்தம்னுதான்  பேரு. நானே இன்னும் அங்க போனதில்லை.

இன்னைக்கு அதுல என்னதான் ரகசியம் இருக்குன்னு திறந்து பாத்துட வேண்டியதுதான்” என்றான்.

“சாவி…”

“உடைச்சாவது பாத்துடலாம், வாங்க” என்ற ஸ்ரீதரன், வனிதாவிடம் டூல் கிட்டை கொண்டு வரச்சொல்லி, எடுத்துக்கொண்டு, மாடி ஏறினான். 

தாயம்மா “ஸ்ரீதர் தம்பி பெத்தவளோட முகம் நினைவில்லைன்னு வருத்தப்படுது, ஆனா சசிதம்பி…” என்று முணுமுணுத்ததைக் கேட்டபடியே, எதை எதிர்நோக்கப் போகிறோமோ என்ற பயமும் ஆர்வமும் உந்த, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

பழைய வீடாகையால், அறைக் கதவில், தாழ்ப்பாளின் நாதாங்கியைப் பொருத்தி, பெரிய கோத்ரெஜ் பூட்டுதான் தொங்கியது.

தாமதிக்காமல், சுத்தியலால் மூன்றே அடியில் பூட்டைத் திறந்த ஸ்ரீதரன், உள்ளே சென்று, விளக்கைப் போட்டான். 

உள்ளே கண்ட காட்சியில், தாயம்மாவைத் தவிர, அனைவரும் புரியாது திகைத்தனர்.

அங்கிருந்த சுவரில், சாயாவின் வளைகாப்பன்று அவளுக்கு சசிதரன் கொடுத்த அதே ஆகாய வண்ணப் பட்டுப்புடவையில், முத்து நகைகளில்,  பத்மா ,  பெரிய அளவு தேக்குமரச் சட்டத்துக்குள், புகைப்படமாகத் தொங்கினார். 

அந்த ஒரு புகைப்படம் மட்டுமல்லாது, சசிதரன் சாயாவுக்குக் கொடுத்த, அதே நிற புடவைகள், நகைகளுடன், அதே அளவில் ஏழெட்டு புகைப்படங்கள் இருந்தது. எல்லாப் படங்களிலும், தோற்றம், மறைவு தேதிகளுடன், பத்மலக்ஷ்மி என்று எழுதப்பட்டிருந்தது.

புகைப்படத்தில் இருந்த பத்மாவுக்கும் சாயாவுக்கும் நாறு சதவீத இருந்த உருவ ஒற்றுமையில் சாயாவும் ஹரிணியும்  உச்சபட்ச அதிர்ச்சியில் ரத்தம் உறைய, நின்றனர்.