பிம்பம் 16+ / அத்தியாயம் – 13

                    பிம்பம் 13

நேரம் பிற்பகல் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

வீட்டின் வாயில் கதவருகே நின்று ஸ்ரீதரன் யார் யாருக்கோ ஃபோன் செய்து  கொண்டே தன்னைச் சுற்றிப் பார்த்தான்.

பசி, தூக்கம், கொஞ்சல், அழுகை  சமாதானம்  என  ஒவ்வொரு முறையும் காரணங்கள் வேறாக இருந்தாலும், விடியற்காலையில் இருந்து, இந்நேரம் வரை, குறைந்தது ஐந்தாறு முறையாவது சாயாவிடம் பாலைத் தேடும் அம்மு இல்லாததில், சாயாவுக்குப் பால் கட்டிக் கொண்டு வலி எடுக்கவே, ஒன்பது மணியில் இருந்தே லேசான காய்ச்சலும் இருந்தது.

இனிமேல் அழுதால் வீங்குவதற்கு இடமில்லாத அளவு , சாயாவின் முகம் சிவந்து, உப்பி, ஜிவுஜிவுத்துக் கிடந்தது. எந்நேரமும், தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தாலுமே கலையாத தலையும், நலுங்காத ஆடையுமாக, பளிச்சென்று, எளிமையான அழகு மிளிரும் தோற்றத்திலேயே பார்த்திருத்த எஜமானியம்மாவைப் பார்த்த வேலையாட்களின் முகத்தில் தெரிந்த அனுதாபம், ஸ்ரீதரனை உலுக்கியது.

வீடெங்கும் கணவனையும் பிள்ளையையும் மீண்டும், மீண்டும் தேடியவள், மழையைப் பொருட்படுத்தாது, இருட்டில் வாசலுக்கு சென்று, கராஜில் வரிசையாக இருந்த கார்களைப் பார்க்க, சசிதரன் வழக்கமாக எடுத்துச் செல்லும் அவனது காரைக் காணவில்லை. 

சாயாவை பதட்டமும் பயமும் உந்த, அழுகையை ஒத்திப்போட்டவள், பெல் அடித்து  வனிதாவை வரச்சொன்னாள். அமைதியான  அந்த எஸ்டேட்டின் நடுவே, குளிரிலும் மழையிலும், அசந்து உறங்கியவர்களை, ஒற்றைக் கார் கிளம்பிய சத்தம் எப்படி எட்டி இருக்கும்?

ஹரிணியை அழைத்தவள், பேச முடியாமல் கேவியதும் பயந்து போன ஹரிணி, கட் செய்து விட்டு, சசிதரனுக்கு முயற்சிக்க, இந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றது ஒரு பெண் குரல். 

மீண்டும் அவளே சாயாவை அழைக்கவும், திக்கித் திணறி,  ஒரு வழியாக விஷயத்தைச் சொன்னதும் “அக்கா, தைரியமா இருக்கா. மாமா அங்கதான் பக்கத்துல எங்கேயாவது போய் இருப்பாங்க. நான் ஏழுமணி பஸ்ல கிளம்பி வரேன்” என்றவளின் மனதில் பெரிதும் இருந்தது என்னவோ, நம்பிக்கையின்மையே.

ஸ்ரீதரன் வரும்போதே, செக்யூரிட்டியிடம், கார் எஸ்டேட்டை விட்டு வெளியேறியதை  உறுதிப்படுத்திக்கொண்டான். ஆனால், அவர்களுக்குக் குழந்தையைப் பற்றித் தெரியவில்லை. 

முதலாளி, சொல்லாமல் கொள்ளாமல் தன் குழந்தையைத் தானே எடுத்துக் கொண்டு போனதை அவர்களிடம் சொல்ல மாட்டாமல், வீட்டுக்கு வந்தான். 

சாயாவிடம் என்ன பேசுவது, எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியாமல் தயங்கியவன் சசிதரனின் மொபைல் இருக்கும் லொக்கேஷனை கண்டுபிடிக்க முயற்சிக்க, சசிதரனின் ஃபோன் லொக்கேஷன்,  அங்கேயேதான் காட்டியது.

குழம்பியவனுக்கு ஹரிணி “அக்கா எப்படி இருக்கா? அம்மு, மாமா பத்தி ஏதாச்சும் தகவல் தெரிஞ்சதா?” என்று கால் செய்தாள்.

ஸ்ரீதரன் ஆற்றாமையுடன்  “இன்னும் இல்லை. என்னால அண்ணி கிட்ட நெருங்கிப் பேசவே முடியவில்லை. நீங்க கிளம்பிட்டீங்களா?” என்றான். 

“ம், ஒரு மணிக்கு முன்னால கோயமுத்தூர் வந்துடுவேன். நாலு மணிக்குள்ள…”

“பஸ்லயா? நான் கோயமுத்தூர் பஸ் ஸ்டாண்டுக்கு கார் அனுப்பறேன். நீங்க வந்தா, அண்ணிக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்”

“சரிங்க”

ஸ்ரீதரனின் தன்மையான பேச்சும், சாயாவுக்காக யோசித்து செயல்படுவதும் ஹரிணியைக் கவர்ந்தது. கூடவே, சசிதரனுக்கும் ஸ்ரீதரனுக்கும் இடையே நடந்த தகறாரும் நினைவுக்கு வந்தது. 

பத்து மணிவரை எஸ்டேட், ஃபேக்டரி, அவர்களுக்கிருந்த வீடுகள், குடோன்கள் என்று  முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் சசிதரனைக் காணவில்லை.

போலீஸுக்குப் போக தயக்கமாக இருந்தது. தன் அண்ணனால், குழந்தைக்கு ஆபத்து என்பதை இன்னுமே, ஸ்ரீதரனால் நம்ப முடியவில்லை. ஏன், சாயாவுமே அப்படி நினைக்கவில்லை. நேற்றிரவு கூட, அத்தனை ஆத்திரத்திலும், மகளை அணைத்துக் கொண்டுதானே உறங்கினான்? 

சசிதரன் எதை நினைத்து அல்லது எதிர்பார்த்து, குழந்தையைத் தூக்கிச் சென்றானோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், நிச்சயம்  தொடர்பு கொள்வான் என ஸ்ரீதரனின் உள்ளுணர்வு கூறியது.

டாக்டர் ரங்கநாயகிக்கு ஃபோன் செய்து முடிந்தவரை, விஷயத்தைப் பெரிது படுத்தாமல், விளக்கிச் சொல்லி “ப்ளீஸ் ஆன்ட்டீ, அண்ணி இப்ப அங்க வர நிலமைல இல்ல. வீட்டுக்கு வந்து பாருங்க ஆன்ட்டீ” என்றவன், வனிதாவை அழைத்து, சாயாலக்ஷ்மியின் பிரச்சனையைப் பற்றி மருத்துவரிடம் பேசச் சொன்னான்.

ரங்கநாயகி, பால் கட்டி இருந்ததற்கு, ஒத்தடம் கொடுக்கச் செய்து,  பம்ப் செய்து, எளிதாக்கியவர் “என்ன பிரச்சனை சாயா?” என்றார்.

சாயா தயக்கமும் அழுகையுமாக கணவனையும் குழந்தையையும் காணவில்லை என்றதோடு, அவனது கோபத்தை, எதிர்பார்ப்பை, கொஞ்சலை, மிஞ்சலையும் சேர்த்தே கோடி காட்டிச் சொன்னாள். 

“கடவுளே, பக்கா மேனிபுலேட்டர் (Manipulator). உன்னை கம்ப்ளீட் கன்ட்ரோல்ல வெச்சு இருந்திருக்கான். க்ளீனிக்ல உன்னை முதல்ல அவனோட பாத்தபோதே, உன்னை அவன் பாக்கற பார்வையே  வேற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். காரணம், எல்லாருக்கும் தெரிஞ்சதுதானேன்னு சும்மா இருந்துட்டேன். டேக் கேர் மா. குழந்தை கிடைச்சதும் ஃபோன் பண்ணு. எங்கிட்ட வா. நான் பேசறேன்” என்று கிளம்பிச் சென்றார்.

ஓரிரு விஷயங்களத் தான் சொன்னதற்கே, டாக்டர் சொன்ன வார்த்தைகள் சாயாவை மேலும் பயமுறுத்தியது. அந்தக் காரணம் என்னவென்று யோசிக்கும் அளவுக்கு சாயாவின் மூளை வேலை செய்யவில்லை.

எப்போதும் காலையிலேயே வந்துவிடும் தாயம்மா இன்று  இன்னும் வரவில்லை.

மதியம் இரண்டரை மணிக்கு, ஸ்ரீதரன் அனுப்பிய காரில் வந்து சேர்ந்த  ஹரிணி, எடுத்த எடுப்பில் “ஏன் இன்னும்  போலீஸுக்கு சொல்லலை?” என்றாள்.

“ஒரு நிமிஷம்” என்று ஹரிணியைத் தனியே அழைத்த ஸ்ரீதரன்  “அண்ணன் ஏன், எதை எதிர்பார்த்து இப்படி ஒரு வேலையை செஞ்சார்னு தெரியலை. ஆனா, நாம போலீஸுக்கு போய், ஏதானும் தப்பாயிட்டா?”

“புரியலைங்க”

குரலை தழைத்துக்கொண்டவன் “இல்ல, அண்ணா கோபத்துல குழந்தையை ஏதாவது செஞ்சுட்டா” என்றவனின் குரலில் இருந்த அவமான உணர்வு!

அவனே “அதோட, எதையாவது எதிர்பார்த்து இப்படி செஞ்சிருந்தா அதுக்காக அவரே தொடர்பு கொண்டு பேசுவார்தானே? அதனால…”

“நீங்க சொல்றதை நான் ஒத்துக்கறேன். ஆனா, ரகசியமாகவாது, நாம போலீஸுக்குப் போகணும். முதல்ல நேத்து என்ன நடந்ததுன்னு அக்காவைக் கேப்போம்” என்றாள் ஹரிணி.

சசிதரன் தன்னை உளவு பார்த்திருக்கிறான், என்ற சாயாவின் செய்தியில், ஸ்ரீதரன்,   ஹரிணி இருவருமே அதிர்ந்தனர்.

ஸ்ரீதரன் “இதுக்கு மேல வெய்ட் செய்யறது முட்டாள்தனம்னு படுது. நான் போலீஸுக்கு ஃபோன் செய்யறேன்” என்றவன், அவர்களுக்குத் தெரிந்த டிஎஸ்பி ஒருவரைத் தொடர்பு கொண்டு, விஷயத்தைச் சொல்ல “என்னப்பா இது, இவ்வளவு லேட்டாவா சொல்லுறது?” என்றவர், சற்று நேரத்தில் துடிப்பான ஒரு சப் இன்ஸ்பெக்டரையும், மூன்று உதவியாளர்களையும், ஸ்ரீதரனின் வேண்டுகோளுக்கிணங்க மஃப்டியில் அனுப்பினார்.

போலீஸ் தனது சக்தியைப் பிரயோகித்ததில், சசிதரனின் கார், கோத்தகிரியில் இருந்து, பண்ணாரி போகும் வழியில் ஆளில்லாமல் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தது.

காரும் இன்றி, தாய்ப்பால் குடிக்கும் ஒன்பது மாதப் பெண்குழந்தையுடன் எங்கே, என்ன செய்கிறான் சசிதரன்? அவனது மகளை, வர்ஷூவை சசிதரன் ஒன்றும் செய்ய மாட்டான் என்று, சாயா, தன்னைத் தானே செய்து கொண்ட சமாதானம், அரை நிமிடம் கூட நீடிக்காமல், பீதியாக இருந்தது.

எங்கே போயிருப்பான், ஈஅதுவும் கைக் குழந்தையுடன்? மாற்றுத்துணி, டயப்பர், மகளுக்காக , அவனே தேடித்தேடி வாங்கிய  குளிருக்கான உடைகள்,  என அத்தனை சொகுசாக இருந்த அம்முவை எங்கே , எந்தநிலையில் கொண்டு போய் வைத்திருப்பான்? எப்படிப் பசியாற்றுவான்? தாய்பாலைத் தவிரவும், அம்முவுக்கு நான் என்ன கொடுக்கிறேன் என்று அவனுக்கு என்ன தெரியும்?

“அம்மு” என்று மயங்கிச் சரிந்தவளுக்கு, வலுக்கட்டாயமாக, ஜூஸைப் புகட்டினர், ஹரிணியும் வனிதாவும்.

நேரம் மாலை ஆறை நெருங்கும் சமயம், தாயம்மா வந்தார். பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்குப் போயிருந்ததாகச் சொன்னார். 

வீட்டில் இருந்த வினோத சூழலையும்  பரபரப்பையும். பார்த்துவிட்டு, விஷயமறிந்து  கொண்டு “என் ராசாத்தீ, எங்கம்மா இருக்க?” என்று அழுதபடியே வந்தவர் , சாயாவிடம் “புள்ளைய கவனமா பாத்துக்க, யார்கிட்டயும் விடாதேன்னு சொன்னேனே. நான் பயந்தபடியே நடக்குதே” என்றீ அழவும், அங்கிருந்த அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

ஹரிணிக்கும், சாயாவுக்கும் தாயம்மாவின் முணுமுணுப்புகள் நினைவுக்கு வர, அவரை வித்தியாசமாகப் பார்த்தனர். ஒவ்வொரு முறையும் சசிதரனின் சார்பாக, சசியிடம் இருக்கும் உரிமையில், அவன் தரும் சலுகையில்  அந்த வீட்டில்  ஆளுமை செலுத்துவதாக எல்லோரும் எண்ணிய  தாயம்மாவின் பேச்சுகள் அனைத்துக்குமே, இப்போது வேறு அர்த்தம் தொனித்தது.

சாயா, “என் குழந்தை, என் அம்மு தாயம்மா” என்று கேவி அழ, அந்த மூதாட்டி, சாயாவைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.

ஸ்ரீதரன் “என்ன சொல்றீங்க தாயம்மா, உங்களுக்கென்ன  தெரியும், எதுக்கு பயம்?” என்றான்.

“எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லுறேன். எப்படியாவது அந்தப் பச்சப் புள்ளையை காப்பாத்திடு கண்ணு” என்றார் தாயம்மா.

“நான் இந்த வீட்ல வேலை பாத்துக்கிட்டு இருந்த எங்க வீட்டுக்காரரோட கல்யாணமாகி இங்க வந்தபோது, எனக்குப் பதினஞ்சு வயசு.  அப்ப இந்த எஸ்டேட்டு முதலாளியா இருந்த உங்க (ஸ்ரீதரனைக் காட்டி) தாத்தாவுக்கு ரெண்டு மகன்கள். பெரியவர் உங்கப்பா ஜீவானந்தம் ஐயா. ரெண்டாவது உங்க சித்தப்பா இன்பசேகரன்.

ஸ்ரீதரன் அமைதியாக இருக்க, ஹரிணி கூர்மையானாள். சாயாவுக்கு இன்பசேகரன் என்ற பெயரை எங்கோ கேட்டதுபோல் இருந்தது.

ஜீவானந்தத்துக்கும் இன்ப சேகரனுக்கும் பன்னிரெண்டு வயசு வித்தியாசமிருந்தது. தாயம்மா வேலைக்கு வந்த ஒரிரு வருடங்களிலேயே, ஜீவானந்தத்தின் தந்தை நோய்வாய்ப்பட்டுக் காலமாகி விட்டார். எனவே, எஸ்டேட்டைக் கவனித்துக் கொள்ள, கோவையில் கல்லூரிப்படிப்பை விட்டு, இங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஜீவானந்தத்துக்கு.

அப்போது எஸ்டேட் இவ்வளவு பெரிதாக இல்லை. ஜீவானந்தத்தின் உழைப்பால், சில வருடங்களிலேயே எஸ்டேட் விரிவடைந்தது. அதிலேயே கவனமாக இருந்தவரது வயதும் முப்பத்துக்கு மேல் ஆகி விட்டது. 

ஜீவானந்தத்தின் அன்னைக்கு, பழனி அருகே இருந்த அவரது சொந்த கிராமத்திலும் கொஞ்சம் நிலபுலன்கள் இருந்தது. அதைப் பராமரித்துக் கொண்டிருந்த வேலப்பனின் மகள்தான் பத்மா. 

இயற்கையான கிராமத்துக் காற்றும், மாசற்ற சூழலும், அவளது தாயிடமிருந்து வந்த அழகுமாக இருந்த பத்மாவை, ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, சிறு வயது முதலே குடும்பம், எஸ்டேட் என்று பொறுப்பேற்ற மகனுக்கு அழகான மனைவி வேண்டும் என்ற ஆசையில் வேலப்பன் தம்பதிகளிடம் பேசி, திருமணத்தை முடித்து விட்டார்.

பதினேழு வயது மகளுக்கு, முப்பத்தோரு வயது மாப்பிள்ளையா என்று வேலப்பன் யோசித்த அளவு கூட அவரது மனைவி யோசிக்கவில்லை. மகளின் சொகுசு வாழ்க்கையும், அவளால் தங்களுக்கு வரப்போகும் அந்தஸ்தையும் மட்டுமே எண்ணினார். அது அவரது குணம்.

ஜீவானந்தத்துக்கும் பத்மாவுக்கும் ஒரு வருடத்திலேயே சசிதரன் பிறந்துவிட்டான். ஜீவானந்தத்தின் அன்னை, பேரனைப் பார்த்துவிட்ட ஆனந்தத்திலேயே உயிரை விட்டார். 

சிறுவயதிலேயே பொறுப்புகளைச் சுமந்ததாலோ என்னவோ ஜீவானந்தம் அமைதியான, கனிவான மனிதராக இருந்தார். உணர்வுகளை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், மனைவி, மகனிடம் உயிரையே  வைத்திருந்தார். 

சசிதரனோடு சரிக்குச் சரி விளையாடும் தந்தையாக இல்லாவிட்டாலும், காலையில் எஸ்டேட்டை சுற்றிப் பார்க்கப் போகையில், அவனைத் தன்னுடன் வெளியில் அழைத்துச் செல்வது, கதைகள் சொல்வது, தனக்குப் பிடித்த காலிக்ராஃபி (Calligraphy) எழுத்து முறையை நான்கு வயதிலேயே மகனுக்குக் கற்றுத் தருவது என்று, அவரது தளர்வான நேரங்கள் அனைத்தும் அநேகமாக சசிதரனுடன்தான் கழிந்தது.

தாயில்லாத, தன்னை விட பன்னிரெண்டு வயது சிறிய இன்பசேகரனுக்கு அண்ணனாக, சசிதரனுக்கு சிறந்த தந்தையாக, தன் எஸ்டேட்டை விஸ்தரித்து, சுத்துப்பட்டு கிராம மக்களுக்கு வேலை கொடுத்து, நியாயமான கூலியும் தரும் முதலாளியாக இருந்த, அந்த நல்ல மனிதர், பிறர் எதிரில் பேசுகையில் தன் மனைவியிடம் கூட மிகுந்த மரியாதையுடன்தான் பேசுவார்.

இதில், ஜீவானந்தம் கவனிக்கத் தவறியது, மனைவியின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும். பத்மாவின் தாய்க்கு இருந்த அளவுக்கு, பத்மாவுக்குக் கணவரின் பணத்தில் ஆர்வமில்லை.

அவ்வளவு ஏன்? தன் வேலை, கொள்கை, இலக்கு, குடும்பம் என கோடு போட்டு வாழும் கணவரிடமும் அதிக ஈர்ப்பு வரவில்லை. இதற்கு இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம், ஜீவானந்தத்தின் வழுக்கை விழுந்த தோற்றம், தனிமையிலும் கூட அளவான பேச்சு, மகன் சசிதரனுடனான அவரது நெருக்கம் என பல காரணிகள் இருந்தன.

ஜீவானந்தம், தன்னை விடுத்து மகனிடம் காட்டிய அக்கறையைம் பாசமும், அதே போல் குழந்தை சசியும் தந்தையுடன் ஒட்டிக்கொண்டதில், பத்மா, இருவரிடமிருந்துமே மனதளவில் சிறிது சிறிதாக விலகத் தொடங்கினார்.

கணவரிடம் வெளிப்படையாகக் காட்ட முடியாத வெறுப்பையும், விலகலையும் மகனிடம் காட்டினார். யார் வெறுத்தாலும் தாயிடம் செல்லும் குழந்தையை தாயே வெறுத்தால்? அனிச்ச மலராகக் குழைந்தான் சசிதரன். இது அவனை தந்தையிடம் இன்னுமே நெருங்க வைத்தது. தந்தையுடனான நேரத்தை பெரிதும் எதிர்பார்க்கத் தொடங்கினான் குழந்தை.

இதற்குள் தாயம்மாவிற்கு ஒரு மகனும் இரண்டு மகளும் பிறந்து, படித்துக் கொண்டிருந்தனர். மனைவியின் விட்டேற்றியான போக்கைப் பார்த்த, ஜீவானந்தம் சசிதரனை கவனித்துக் கொள்வதற்கென்றே, பிரத்யேகமாக தாயம்மாவை நியமித்தார்.

திருமணமாகி, குழந்தையும் இருந்தபோதும், தன் கனவுகளைக் கைவிடாது, பார்க்கும் திரைப்படங்களில் இருந்து நடை, உடையையும், பத்திரிகைகளில் வரும் அழகுக் குறிப்புகளையும் விடாது பின்பற்றி, தன் அழகைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினார், பத்மா.

திருமணம், விழாக்கள் என கணவர் ஜீவானந்தத்தோடு சென்றாலும், அழைப்பே, அவரை முன்னிட்டுதான் என்றாலுமே தனக்கும் கணவருக்கும் இருந்த பொருத்தமில்லாத் தன்மை பத்மாவை உறுத்தியது. 

இந்த நேரத்தில்தான் தன் மேற்படிப்பை முடித்துவிட்டு, வீடு திரும்பினார் இன்பசேகரன். தம்பி, எம்பிஏ வரை படித்ததில், அளவில்லா பெருமையடைந்த ஜீவானந்தம், தம்பிக்கு அலுவலகத்திலும் பொறுப்புகளைக் கொடுத்தார்.

ஜீவானந்தம் எவ்வளவு பொறுப்பானவராக இருந்தாரோ, 

இன்பசேகரன், தன் பெயருக்கேற்ப இன்பத்தை சேகரிக்கும் இளைஞனாகவே  இருந்தார். பட்டணத்து ஸ்டைலில் உடை, சிரிக்க வைக்கும் சக்கரைப் பேச்சு என, இன்பசேகரனின் வரவால், எஸ்டேட் வீடே கலகலத்தது.

இன்பசேகரனின்  படித்த, நாகரிகமான இளமைத்தோற்றம், இனிக்கும் பேச்சு, புதிதாக வாங்கப்பட்ட விசிஆரில் போடுவதற்காக, இன்பசேகரன் கொண்டு வந்த வீடியோ கேஸட்டுகள், என பத்மாவின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்த கொழுந்தனிடம், அவருமே கலகலப்பாகப் பழகினார்.

தன் தம்பியும் மனைவியும் இயல்பாகப் பேசுவதும், மனைவி,  அவனைக் கவனித்து சாப்பாடு போடுவதையும் பார்த்து மகிழ்ந்த ஜீவாவுக்கு, அது போகும் பாதை புரியவில்லை.

அண்ணன் அலுவலகத்தில் உழைக்க, அழகான, கலகலப்பான, தன் பேச்சை ரசித்துச் சிரிக்கும், தன் ருசியறிந்து சாப்பாடு போடும் இளம் பெண், அண்ணியாக இருந்தால் ஆகாதா என்ன?

பார்வை, புன்னகை, பேச்சு, உணவு, உரிமை, தொடுகை, என தொட்டுத் தொடர்ந்தது உறவு. வேலையாட்கள், எஸ்டேட்வாசிகள், கோத்தகிரி மக்கள் என பலரும் அரசல்புரசலாய் பேசத் தொடங்கினர்.

சசிதரன் என்னதான் தாயம்மாவுடனே பொழுதுகளைக் கழித்தாலும், அதே வீட்டில் இருக்கும் தாயை நாடாமலேவா இருப்பான்? 

தன்னோடு அதிகம் பேசாத, தன்னைக் கொஞ்சாத, தன் தாயுடன் சேர்ந்தே காணக்கிடைத்த இன்பசேகரன் சித்தப்பாவை, சசி அறவே வெறுக்கத் தொடங்கினான்.

ஆனால்,  இது இரண்டு வருடங்கள் இப்படியே சென்றும், சசிதரனின் பத்தாவது வயதில், ஜீவானந்தம் அவரது கண்ணால் பார்க்கும் வரை எதையும் நம்பவில்லை.

தாயம்மாவின் கதையில் மூழ்கி இருந்தவர்களை,  சாயாவின் மொபைல் அழைப்பு கலைத்தது. ஏதோ புதிய நம்பராக இருந்தது.

“அண்ணி, எடுத்துப் பேசுங்க”

ஆன் செய்ததுமே கேட்ட அம்முவின் அழுகையில் பதறினர் என்றால், தொடர்ந்த சசிதரனின் பேச்சில் உறைந்தனர்.

 “சாயா, எங்கம்மாவைப் போலவே நீயும் ஸ்ரீதரனோட பேசறதும் பழகறதும் எனக்குத் தெரியும். இதை ஒத்துக்கோ. எங்கம்மா, நீ எல்லாரும் ஒரே மாதிரிதான்”

“உனக்கு அவன், என்னெல்லாம் வாங்கிக் கொடுத்தான்? இப்ப கூட நீ அவனோடதான் இருக்கன்னு எனக்குத் தெரியும்”

“நாளைக்கு காலைல எட்டு மணிக்குள்ள, உனக்கும் என் தம்பிக்கும் தொடர்பு இருக்குன்னு எனக்கு நீ எழுதிக் குடு. இல்லைன்னா, உன்னோட அம்மு….” என்றவன் காலை கட் செய்தான்.