பிம்பம் 16+ / அத்தியாயம் – 12

                  பிம்பம் 12

சசிதரனின் தந்தை குறித்தான அவனது பதில் தந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே சாயாவுக்கு அவகாசம் தேவைப்பட்டது. 

தானே காரை ஓட்டிக் கொண்டு போய் உருண்டு விழுந்தாரென்றால், அது தற்கொலைதானே? இவ்வளவு பெரிய எஸ்டேட்டின் உரிமையாளர், செல்வாக்கு மிகுந்தவர், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு அப்படி என்ன கஷ்டம்?’

‘இதைப்பற்றி யாரிடம் கேட்பது? வேலையாட்களிடமா? ஸ்ரீதரன்? அவனுக்குத் தெரியுமா? அவன் பிறப்பதற்கு முன்பே  தந்தை இறந்துவிட்டார் என்றால், அவனுக்கு என்ன தெரியும்? சசிதரனுமே அப்போது சிறுவனாகத்தானே  இருந்திருப்பான்?

சாயாவுக்கு யோசித்து யோசித்து மண்டை குழம்பியதுதான் மிச்சம். இருந்த குழப்பத்தில், வேலை நேரத்தில் ஹரிணிக்கு ஃபோன் அடிக்க, அவள் க்ளாஸில் இருந்ததால் எடுக்கவில்லை.

யோசித்துப் பார்த்தால், சசிதரனையும்  அவனது கம்பெனி டீயையும் தவிர வேறென்ன தெரியும் தனக்கு என நினைத்தவளுக்கு ஹரிணியே கால் செய்தாள். 

“என்னக்கா, எதானும் முக்கியமான விஷயமா? அம்மு நல்லா இருக்காதானே?” என்று படபடத்தாள்.

“நாங்க எல்லாம் நல்லாதான் இருக்கோம்”

“பின்ன உன் குரல் ஏன்க்கா ஒரு மாதிரியா இருக்கு?”

“ஹரிமா, உனக்கு இப்ப நேரம் இருக்கா?”

“இருக்குக்கா. க்ளாஸ் முடிஞ்சுது. சாப்பிட்டாச்சு. இனிமே  ஈவினிங் ஏழு மணிக்குதான் நைட் டியூட்டிக்கு போகணும். நீ சொல்லுக்கா”

சாயா சசிதரன் சொன்னதை தங்கையிடம் பகிர்ந்தாள். “இந்த குடும்பத்துல இப்படி எல்லாம் குழப்பம் இருக்கும்னு நான் யோசிக்கவே இல்லடீ”

தமக்கையின் பேச்சை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட ஹரிணிக்கு, சசிதரனின் தந்தை ஜீவானந்தத்தின் மறைவுக்கும், சசிதரன் ஸ்ரீதரனைப் பற்றி சொன்னதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனாலும், இது எதுவும் தெரியாத சாயாவுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டுமே?

“அதனால என்னக்கா, அவருக்கு என்ன பிரச்சனையோ? அதைப்பத்தி  நீ ஏன் கவலைப்படற? மாமா உன்னையும் அம்முவையும்  நல்லா பாத்துக்கறாரா, அம்மு நல்லா விளையாடறாளான்னு பாருக்கா. அப்படியே உங்க மாமனார் இறந்திருந்தாலும், அதனால உனக்கு என்ன?” 

“நீ சொல்றதும் சரிதான் டா. நான் நானும் டென்ஷனாகி  க்ளாஸுக்கு நடுவுல உன்னையும் டிஸ்டர்ப் பண்ணிட்டேன். பை ஹரிமா” என்று ஃபோனை வைத்தாள்.

சாயாவுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. பதினேழு வயதில் அவளது அம்மா தவறியதில் இருந்தே வீடு, தங்கை, தந்தை, தன் படிப்பு என கவனித்துக் கொண்டு இருந்த சாயா, இப்போது போன இடம் தெரியவில்லை.  ஏனோ, தன்னம்பிக்கை குறைந்து, சசிதரனை சார்ந்தே இருத்தாள்.  இது அந்த வீட்டின் வசதி வாய்ப்பினாலா என்றால், நிச்சயமாக இல்லை.

அவளது முடிவை, ஆலோசனையை எதிர்நோக்கி, அங்கே எதுவும், யாரும் நடக்கவில்லை. நிஜத்தில், குழந்தையின் வைத்தியத்துக்குக் கூட கையில் பணமில்லாத நிலையில், சாயா தன்னை பணக்காரியாக உணர்வதெப்படி? 

இன்னும் சொல்வதென்றால், சமீபத்தில் சாயா, தன் கையால்  பணம் கொடுத்து  ஒரு பொருளை வாங்கியதான நினைவே அவளுக்கு இல்லை.

தனியே எங்கும் வெளியே செல்வதில்லை. வீட்டுக்குத் தேவையான பொருட்களை, இவளாகவே சரி பார்க்கிறாளே தவிர, யாரும் எதுவும் சொல்லவில்லை. 

படித்து, வேலை பார்த்து, தன் காலில் தானே நின்று கொண்டிருந்த  சாயா,  திடீரென, தன்னம்பிக்கை என்பது அவளிடம் அறவே இல்லாததுபோல் உணர்ந்தாள்.

சாயாவுக்கு சசிதரனைத் திருமணம் செய்து கொண்டதில் இருந்து, அவனது கட்டளையை மீறாது, அவன் இட்ட பணிகளை செய்து கொண்டு, அதற்காகக் கணவனிடமிருந்து கிடைக்கும் அணைப்புகள், இதழொற்றல்களுக்கு மகிழ்ந்து ,  இவைகளே அவளது வாழ்வாதாரம் என்பது போல், அவன் தரும் பாராட்டுகள் எல்லாம் என்னவோ பத்ம விருதுகள் போல் உணர்கிறோமோ என்ற எண்ணம் எழுந்தது.

அதே நேரம், பத்து வயதுச் சிறுவன், மிகவும் எதிர்பார்த்த  தன் தந்தையை இழந்து எப்படித் தவித்திருப்பானோ  என்று சிறு வயது சசியை எண்ணி வருந்தவும் செய்தாள்.

தொடர்ந்து, தந்தையின் மறைவுக்குப்  பின்னரே, பிறந்த ஸ்ரீதரனையும் நினைத்தாள்.

பணத்துக்குக் குறைவில்லைதான். ஆனால்  இரு ஆண்மகன்களையும்  இந்த எஸ்டேட்டையும் பராமரிக்க, இவர்களது அம்மா, எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள்? 

சசிதரனுக்கு அவளது தந்தை மீது கோபம் என்று புரிகிறது. ஆனால் தாயைப் பற்றிய பேச்சே இல்லையே? ஏன்?

சசிதரன் மட்டுமல்ல, ஸ்ரீதரன், வேலையாட்கள் என யாருமே, ஏன் அவர்கள் குறித்துப் பேசுவதில்லை? பிறந்தது முதல் தந்தையையே பார்க்காத, ஆறு வயதில் தாயும் இல்லாமல் நின்ற தம்பியின் மேல் அப்படி எதற்கு ஒரு கோபம், வன்மம்?

சாயா கேள்விச் சுரங்கத்துள் தன்னைப் புதைத்துக் கொண்டாள். தோண்டதா தோண்ட மேன்மேலும் கேள்விகள்தான் வந்ததே தவிர, பதிலில்லை.

ஸ்ரீதரன் அழைத்தான். “அண்ணி, இன்னைக்கு அப்பாவோட நினைவுநாள். அண்ணா சொல்லி இருப்பார்னு நினைக்கறேன்” என்றவன் தயங்கினான்.

“சொல்லுங்க தம்பி”

“பொதுவா அண்ணா அப்பா, அம்மா இறந்த நாள்ல மூட் அவுட்டா இருப்பார். அதான் உங்க கிட்ட ஏதாவது…”

“அப்படி எதுவுமில்ல தம்பி, அவர் காலைலயே கிளம்பிட்டாரு”

“ஓ, அப்ப ஓகே”

“நீங்க…”

“நான் போய் திதி கொடுத்துட்டு வந்துட்டேண்ணி. இங்க தனியா வந்ததுல இருந்துதான் இப்படி”

“ம், சரி…” என்று சாயா, எதையோ கேட்க எண்ணுமுன், ஸ்ரீதரன் “அப்புறம் பேசறேன்” என்று காலை கட் செய்து விட்டான்.

சசிதரனின் அம்மா இறந்த நாள் எப்போது? அதுவுமா இத்தனை மாதங்களில் வரவில்லை? அல்லது அதைப்பற்றி அவன் சொல்லவில்லையா? தந்தையின் மீதுதான் கோபம்,  சரி. தாயைப் பற்றி என்ன? தாயின் புகைப்படம்? அவரது புடவைகளும் நகைகளும் மட்டும் அலமாரியையும், கூடவே சசியின் விருப்பம் போல், என்னையும் அலங்கரிக்கிறதே? 

பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அம்முவிற்கு, மதியம் ஒரு மணிக்கு உணவு கொடுத்தாள். சாப்பிட்டு சிறிது நேரம் விளையாடிய குழந்தை, உறக்கத்திற்கு சிணுங்கவே,  தூங்க வைத்தாள். சாயாவும் சற்று நேரம் உறங்கினாள். 

மூன்று மணிக்கு எழுந்தவள், அதுவரை வராத கணவனுக்கு லஞ்ச் அனுப்பலாமா என்று கால் செய்ய, ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று வந்தது. டிரைவரைத் தொடர்பு கொள்ள “சார் என்னை காலைலயே, ஒரு வேலையா குன்னூருக்கு அனுப்பிட்டார் மேடம். ஈவினிங்தான் வருவேன். இன்னிக்கு சாரேதான் காரை ஓட்டினார் மேடம்” என்றான்

மாலையில் ஹரிணி டியூட்டிக்கு செல்லும் முன் கால் செய்து விசாரிக்கையில், சாயா “உங்க மாமா இன்னும் வரலை. அம்மு விளையாடிக்கிட்டு இருக்கா நான் இப்ப  ஓகேடீ, நீ  போய் உன் ட்யூட்டியைப் பாரு. ” என்றாள்.

ஆனால், வழக்கமாக ஆறிலிருந்து ஏழு மணிக்குள் வந்து விடும் சசிதரன், அன்று இரவு நேரம் ஒன்பதரை மணி வரை வீடு திரும்பவில்லை.

காலை ஏழு மணிக்கு முன்பே வெளியில் சென்ற கணவன் பதினான்கு மணி நேரத்துக்கும் மேல், என்னதான் பெரிய ஏரியா என்றாலும், எஸ்டேட்டுக்கு உள்ளையேதான் இருப்பான் என்றாலுமே சாயாலக்ஷ்மிக்குக் கவலையாக இருந்தது.

சசிதரனுக்கு இருந்த மன அழுத்தம், எஸ்டேட்டுக்குள் யானை புகுந்தது, அந்த விபத்து, அவனது தந்தை தாறுமாறாகக் காரைச் செலுத்தியதில் நேர்ந்த மரணம் அல்லது தற்கொலை என மனது கிடந்து அல்லாட எட்டரை மணிக்குமேல் வந்து சென்ற  ஒவ்வொரு நொடியும் மனக்கிலேசத்துடன், விதவிதமான கற்பனைக் காட்சிகளுடனுமே கழிந்தது.

சசிதரனின் மொபைல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க,  சாயாவால் அவனிடம் பேசவும் முடியவில்லை.

ஒன்பதரை மணிவரை பொறுத்தவள், ஸ்ரீதரனை அழைத்து விட்டாள். அவன் ஹலோ சொல்லும் முன்பே “தம்பி, உங்க அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலை. எனக்குப் பயமா இருக்கு தம்பி” என்று படபடத்தாள்.

“ஓ, நான் போய் பாத்துட்டு. கால் செய்யறேன் அண்ணி” 

ஸ்ரீதரனிடமிருந்து எந்தத் தகவலும் வராமலே மேலும் நேரம் செல்ல, சசிதரன் பதினொன்றரை மணிக்கு வீட்டுக்கு வந்தான். 

அதுவரை தூங்காமல் சுற்றிக் கொண்டிருந்த அம்மு, அப்போதுதான் கண்ணைக் கசக்கவும், தூங்க வைப்பதற்காக மாடியறைக்குச் சென்று, பாலூட்டிக் கொண்டிருந்த சாயாவால், சசிதரனின் கார் வந்து நின்ற சத்தம் கேட்டும் எழுந்து செல்ல முடியவில்லை. 

நேரே மாடியறைக்கு வந்து, படாரெனக் கதவைத் திறந்தவனின் தோற்றத்தில்  சாயா அதிர்ந்தாள். 

சாயாலக்ஷ்மிக்கு சசிதரன் அறிமுகமானதில் இருந்து, அவனது சிரிப்பு, வசீகரம், ஆளுமை, வியாபாரம், சாமர்த்தியம், கோபம், காதல், கொஞ்சல், சண்டை, சமாதானம், அம்முவுடன் இருக்கும்,சில அற்புதமான தருணங்களில் முகம் கொள்ளா சிரிப்பும் நெகிழ்வும் மகிழ்வுமாய், என பல விதமாக அவனைக் கண்டிருந்தாலும், கலைந்த தலையும், சிவப்பேறிய கண்களும், மிகுந்த சோர்வுமாக, அதே நேரம் விறைப்பான உடல் மொழியுடன் இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்ததில்லை.

எதுவும் பேசாமல் வந்து உட்கார்ந்து கொண்டான். சாயாவிடம் பால் குடித்தபடி, தூக்கத்தில் ஆழ்ந்த மகளைப் பார்த்தான். சில நிமிடங்களில், உறங்கிய குழந்தையை தொட்டிலில் எடுத்துப் படுக்க வைத்தாள்.

அதுவரை சசியின்  தோற்றத்திலும், முக பாவத்திலும் அவனிடம் எதையும் கேட்கத் தயங்கியவள் “வாங்க, சாப்பிடலாம்” என்க, அவனிடம் பதிலில்லை.

“என்னங்க…”

“என்னடீ என்னங்க? என்னைப் பத்தி இன்னும் யார்கிட்ட எல்லாம் புகார் சொல்லப் போற? உன் தங்கை, என் தம்பி, டிரைவர், ஃபேக்டரி மேனேஜர், எஸ்டேட் செக்யூரிட்டினு எத்தனை பேருகிட்ட பேசி இருக்க?”

“அதில்லைங்க…”

“உன் தங்கை கிட்ட என்னடீ என்னைப் பத்தி பேசறது? முளைச்சு மூணு இலை விடல, அவ என்னமோ சமாதானம் சொல்லி, பஞ்சாயத்து பண்றா” என்றவன், ஹரிணியின் பேச்சை ஒரு வார்த்தை விடாமல் சொல்லிக் காட்டினான்.

சாயா, கணவனின் உயரும் குரலில் பயத்துடன் “நீங்க சொன்னதுல எனக்கு பயமா  இருந்துச்சுங்க” என்றாள். 

“பயத்தைப் போக்கதான் உன் கொழுந்தனுக்கு ஃபோன் போட்டியாக்கும்?”

சாயா அதிர்ச்சியுடன் கணவனைப் பார்க்க “என்ன பாக்கற? நீங்க எல்லாருமே ஒண்ணு, நான் மட்டும் தனி. இப்பக் கூட பாரு, உன் பொண்ணுக்கு பால் குடுத்துட்டு  தூங்க வெச்சு, படுக்க வெச்சுட்டுதான் என்கிட்ட பேசவே செய்யுற. ஏன்னா, இந்த சசியைதான் யாருக்குமே புடிக்காதே” என்றவன், எழுந்து பாத்ரூமுக்குள் சென்று புகுந்து கொண்டான்.

தந்தையின் குரலிலும், பாத்ரூம் கதவை, அவன் அடித்து சார்த்திய வேகத்திலும், அப்போதுதான் உறக்கத்தில் ஆழ்ந்த அம்மு, விழித்துக் கொண்டு எழுந்து அமர்ந்து விட்டாள். சிணுங்கிய மகளைக் கையில் தூக்கிக் கொண்டு, செய்வதறியாது நின்றாள், சாயா.

 கணவனின் பேச்சிலும் ஆத்திரத்திலும்  அதிர்ந்து விழித்த சாயாலக்ஷ்மிக்கு, அவனை  எப்படிக் கையாளுவதென்று தெரியவில்லை.  

அதைவிட, ஹரிணி, டிரைவர், ஸ்ரீதரன், மேனேஜர் என, அவள் ஃபோன் செய்ததும், ஹரிணி இவளிடம் சமாதானமாகப் பேசியவையும் அவனுக்கு எப்படித் தெரியும்? அதுவும் ஒரு வார்த்தை பிசகாமல்?

அப்படியானால்? தன்னை வேவு பார்க்கிறானா? எப்போதிருந்து? திருமணமான புதிதில், வெளிநாடு சென்றபோது, சசிதரன் தனக்கு புது மொபைல், டேப் வாங்கிக் கொடுத்து, மாடிக்கு தனியாக  wi-fi கனெக்ஷனும் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

அப்படியென்றால், இத்தனை நாளாக நான் யாருடன், என்ன பேசுகிறேன், இணையத்தில் எதைத் தேடுகிறேன், என்ன படிக்கிறேன் என்ற விவரங்கள் அனைத்தும் அவனுக்குத் தெரியும். தெரிந்துமா என் மீது சந்தேகம்?

முதலில் என் மீது நம்பிக்கையில்லையா? எதற்காக இந்த சந்தேகம்? இதை அறிந்துதான் ஸ்ரீதரன் விலகியே இருக்கிறானோ? இவருக்கும் ஸ்ரீதரனுக்கும் ஏதோ சண்டை என்றாளே ஹரிணி, அதுவும் இதனால்தானோ? அதை கணவனின் உரிமையுணர்வு என்று நான் நினைத்தது தவறா? அது சந்தேகமா? அப்போது, சசிதரனுக்கு என் மீது காதல் இல்லையா? காதல் என்றாலே பரஸ்பர நம்பிக்கை இல்லையா?

வாஷ்ரூம் கதவு திறந்து வெளியே வந்த தந்தையைக் கண்டதும் தாவிய மகளைக் கையில் வாங்கியவன்  சாயாவிடம் எதுவும் பேசாமல், மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டு, தட்டிக் கொடுத்தான்.

தன் கேள்விகளுடன் தனக்குள் மூழ்கி  இருந்தவளால், தன்னிடமிருந்து கணவன் மகளைத் தூக்கியதைக் கூட உணர முடியவில்லை.

சசிதரன் விளக்கை அணைத்து விட்டு, அம்முவைத் தன் அருகிலேயே படுக்க வைத்துக் கொண்டான்.

எத்தனை நேரம் நின்றாளோ, தெரியாது, இருவரும் உறங்கிவிட்டதை உணர்ந்தவள், அவனுடன் படுக்கையில் படுக்க விருப்பமில்லாதவளாக, திவானில் சென்று போர்வை கூட இல்லாது முடங்கினாள். 

நீண்ட நேரம் விழித்திருந்தவள், கண்ணுறங்கும் முன் இடியுடன் கூடிய பெருமழை தொடங்கி இருந்தது.

திடீரென வெகுவாகக் குளிர்ந்தது. சாயாவுக்கு பாத்ரூம் போக வேண்டும் போலிருநதது. இன்னும், முழு இருட்டுதான். வெளியே, மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

 மணி ஐந்து அல்லது ஐந்தேகால் இருக்கலாம், பால்  சுரந்து,  மார்பகங்கள் சற்றே கனத்தது. வழக்கமாக, அதிகாலையில் அம்மு இந்நேரம் தாய்ப்பாலுக்காக ஒரு முறை எழுவாள்.

இருட்டில், தூக்கக் கலக்கத்தில் பாத்ரூம் சென்று வந்தவள்,  கட்டிலருகே சென்று, கவனமாக கணவன் படுத்திருந்த பக்கத்தைத் தவிர்த்து,  குழந்தையைத் தூக்கக் குனிந்தவள், திகைத்தாள். 

சாயாவின் கைகளுக்கு போர்வையும், தலையணைகளும்தான் தட்டுப்பட்டதே தவிர, அம்மு, சசிதரன் இருவரையுமே காணவில்லை. விளக்கைப் போட்டு, வீடு முழுவதும் தேடியும், கணவன், குழந்தையோடு அவனது காரையும் காணவில்லை.

சாயா, அந்த பெரிய வீட்டின் முன், இருளில், வெட்ட வெளியில் கொட்டும் மழையில் மூளை மரத்த நிலையில், திக்கித்து நின்றாள்.