பிம்பம் 16+ / அத்தியாயம் – 11

                    பிம்பம் 11

“சாயா, என் கூட பேசுடீ. நான் சொன்னதெல்லாம் தப்புதான். நீ பேசாம கஷ்டமா இருக்கு சாயா. நான் வேணா ஸ்ரீதரனை இங்கேயே  வரச்சொல்லட்டுமா?”

இறுகிய, சிரிப்பைத் தொலைத்த முகத்துடன் சாயா கணவனைப் பார்த்த பார்வையில் கோபம் இல்லை. ஆனால், அந்தப் பார்வையின் கூர்மையில், சசிதரன் சற்றுத் தயங்கினாலும், உடனே சுதாரித்து விட்டான். இன்றோடு அம்முவை டாக்டரிடம் கூட்டிச்சென்று வந்து ஐந்து நாட்களாகி விட்டது.

அன்று குழந்தைக்கு ஹாஸ்பிடல் செலவுக்குக் கூட கையில் பணமில்லாமல் ஸ்ரீதரனை உதவிக்கு அழைத்து, டாக்டரைப் பார்த்ததில் குழந்தைக்கு ஜுரம் குறைந்து, அன்றிரவே சாதாரணமாகி விளையாடத் தொடங்கி விட்டாள். ஆனால், அன்று முதல், சசிதரனின் கேள்வியால் சாயாதான் சூடேறிப் போனாள். 

அவளது தொடர் அழைப்புகளை ஏற்காததோடு, அந்த நசநசத்த மழையிலும், அவசரத்துக்கு உதவிய தம்பியையும் மதிக்காது, சாயா வெளியில் சென்ற காரணத்தை வனிதா சொல்லியுமே ‘நீயும் என்னை ஏமாத்திட்ட இல்ல?” என்ற கேள்வியில் சாயா அதிர்ந்துதான் போனாள்.  

“வனிதாக்கா, உள்ள போங்க” என்ற ஸ்ரீதரன் “அண்ணா, தேவையில்லாம அண்ணியைப் பேச வேண்டாம். நாங்க எங்க, ஏன் போனோம்னு உங்களுக்குத் தெரியாதா,  இல்ல வனிதாக்கா சொல்லலையா?”

“என் பொண்டாட்டி கிட்ட நான் பேசறேன். உன் வேலையை பாத்துட்டு போ. வந்துட்டான். எல்லாம் இவளால வந்தது” என்று சசிதரன் குரலை உயர்த்தவும் சாயாவின் தோளில் உறங்கிய குழந்தை விழித்து எழுந்து, , தந்தையின் குரலைக் கேட்டதும், அவனிடம் தாவினாள்.

எதிலோ, யார் மீதோ இருந்த கோபத்தை, தன் மனைவியின் மீதும், தம்பியின் மீதும் உமிழ்ந்தவனை, மகளின் புன்னகை முகமும், அவன்  தூக்கிக் கொள்வதற்காக, சாயாவிடம் இருப்புக் கொள்ளாமல் அவள் நெளிந்து குதித்ததும் ஏதோ ஒரு வித திருப்தியைத் தர, அப்போதுதான் மகளின் கையில் ஐவி கேனுலா போட்டிருந்த இடத்தில் இருந்த ப்ளாஸ்டரைக் கவனித்தவன் “ஏய், அம்முக்கு என்னடீ ஆச்சு?” என்று பதறியபடி, மனைவியிடமிருந்து, குழந்தையை வாங்கிக்கொண்டு, முத்தமழை பொழிய, அந்தக் காட்சி, சாயாவுக்கு ஆச்சர்யம் என்றால், ஸ்ரீதரனுக்கு அதிசயம்.

தந்தை முத்தம் தந்த மகிழ்ச்சியிலும், தாடியின் குறுகுறுப்பிலும் கிளுக்கிச் சிரித்த அம்மு, தானும் அவனது முகமெங்கும் எச்சில் செய்யவும், தன் கோபம், கேள்வி அனைத்தையும் மறந்தவனாய், புளகாங்கித சிரிப்புடன் “ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க. நான் வர்ஷாவை மேல தூக்கிட்டுப் போறேன் என்றவன் “அம்முகுட்டி, அப்பாவை விட்டு எங்க போனீங்க? என் வர்ஷுக்கு ஊசி போட்ட அந்த மக்கு டாக்டர் யாருடா?” என்று மகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே படியேறியவனை, மனைவி, தம்பி இருவராலுமே புரிந்துகொள்ள முடியவில்லை.

சாயாலக்ஷ்மி பேசுமுன்பே “நான் வரேண்ணி. அவசியம்னா கால் செய்ங்க” என்றான் ஸ்ரீதரன்.

“தேங்ஸ், தம்பி. சாப்பிட்டு…”

“இருக்கட்டும் அண்ணி. அப்புறமா வரேன்” என்றவன் தயக்கத்துடன் “அண்ணாவை தப்பா நினைக்காதீங்கண்ணி” எனவும் சாயா புன்னகைத்தாள். 

அத்தப் புன்னகையின் பொருள் ஸ்ரீதரனுக்கு மட்டுமல்ல, சாயாவுக்குமே புரியவில்லை.

கேட்டதையும் கேட்டுவிட்டு, சசி, கடந்த ஐந்து நாட்களாக, சாயாவைக் கொஞ்சுவதும் கெஞ்சுவதுமாக இருக்கிறான். பழக்கத்தின் காரணமாக, 

கணவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அவனது தேவைகளை பூர்த்தி செய்பவள், ரொம்ப அவசியமென்றால் தவிர, வாயைத் திறப்பதில்லை.

எப்போதும் மனைவி அவன் அருகிலேயே இருக்க வேண்டும் என்பவன்,  அவள் எதையேனும் செய்யத் தவறினால், குற்றம் ஏதோ செய்தது போல் உணர வைப்பவன், இப்போது நாளும் பொழுதும் மன்னிப்பை யாசித்தான். 

அன்று மதிய உணவுக்கு வந்து, வீட்டிலேயே இருந்து விட்ட சசிதரன், கண்ணை மூடிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தவளை ஒட்டிப் படுத்து, சாயாவை விடாப்பிடியாகத் தன் புறம் திருப்பினான்.

“சாயா, பேசுடீ என் கூட. சரி, நான் கேட்டது தப்பு. உன் காலை எடுக்காதது தப்பு.   ஸாரிடீ சாயா, என்று அவளைத் தன்னுடன், மேலும்  இறுக்க, இளகினாள் மனைவி.

“நீங்க எங்கிட்ட பணம்னு ஏதாவது கொடுத்திருந்தா, நான் ஏங்க உங்க தம்பியைக் கூப்பிடப்போறேன்? அவசரத்துக்கு கூட கைல காசு இல்லை. பணத்தைக் கட்டிட்டு வாங்க, குழந்தையைப் பாக்கறோம்னு சொல்றாங்க. நான் என்ன செய்ய?”

“நீ  யாருன்னு அவங்க கிட்ட சொல்லி இருக்கலாமே?”

“என்னன்னு? ஜீவன் எஸ்டேட்  ஓனரோட பொண்டாட்டி நான். எங்கிட்ட சல்லிக் காசு இல்ல. ஃப்ரீயா வைத்தியம் செய்ங்கன்னா?”

“சாயா” என்றவன் அமைதியாக யோசனையில் ஆழ்ந்தான். 

“என்னைக் கொஞ்சம் விடறீங்களா, தூக்கம் வருது”

“முடியாது”

அந்த சமாதானத்துக்குப் பிறகு இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டாலுமே, சாயாவின் மனதில் ‘என் மீது சந்தேகமா? என்னை எப்படி இவன் அப்படி கேட்கலாம்?’ என்ற எண்ணத்திலேயே உழன்றாள். 

யோசித்தால், இந்த 

இருபது மாத திருமணத்தில், அவனது விருப்பப்படி நடந்தால், அவனது தாளத்திற்கு ஆடினால், கொஞ்சுவான். சாயாவிடம் இரண்டாவதாக வேறு எந்த ஆப்ஷனுமே இல்லாததால், அவனை எதிர்க்காமல், அவன் சொல்வதைக் கேட்டாள். அதற்கு அவள் பொறுமையும், கணவனின் மீது இருந்த காதலும்  முக்கிய காரணிகள்.

அவளது பெற்றோர், சிறுவயது முதல் பழகிய இடம், சொற்பமே ஆனாலும் அறிந்தவர், தெரிந்தவர் என யாரும், எதுவும் இல்லாமல், இருக்கும் ஒரே ரத்த உறவான தங்கையும் எங்கோ இருக்க, கணவனுடன் பேசாமல் இருந்த இந்த நாலைந்து நாட்களில், சாயாலக்ஷ்மி,தான் தனிமைப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தாள்.

அம்முதான் ஒரே ஆறுதல் என்பதுபோல் தோன்றியது. திருமணத்திற்கு  முன் ப்யூனின் மகளாக, ஏழ்மை நிலையில் இருந்தபோது  கூட,  சாயா இப்படி கையில் சல்லிக்காசு இல்லாமல் இருந்ததில்லை. கணவனிடம் சொல்லிக் காட்டுவது அவளது நோக்கமும் இல்லை. 

சசிதரன் நிதானமாகக் கேட்டிருந்தால், ஸ்ரீதரனை அழைத்ததற்கான காரணத்தை அவளே சொல்லி இருப்பாள். அவனது சந்தேகமான கேள்வியும் நியாயமில்லாத ஆத்திரமும், சாயாவுக்கும் கோபத்தை வரவழைத்தது. குழந்தையின் உடல்நிலையைப் பற்றியும் கேட்காமல், போனை எடுத்துப் பேசாததற்கு காரணம், சமாதானம், மன்னிப்பு என எதுவுமே சொல்லாமல், அவளையும் ஸ்ரீதரனையும் இணைத்துப் பேசியதில், சாயாவுக்கு வனிதாவைப் பார்க்கவே அவமானமாக இருந்தது.

இதில், இரண்டு நாட்கள் கழித்து சாயாவுக்கு கால் செய்து “அம்மு எப்படியண்ணி இருக்கா?” என்ற ஸ்ரீதரன் “அண்ணன் கோபம் போய் நார்மல் ஆகிட்டாரா அண்ணி?” என்று பேசினான். பிறகும் ஓரிரு முறை கால் செய்து விசாரித்தான்.

வனிதா வேலைக்காரிதான். இங்கு இவள் என்ன செய்கிறாள் என்பது அநேகமாக அவளுக்குத் தெரியும்தான். குழந்தை பிறந்தபோது நடந்த சண்டையும் அவளுக்குத் தெரியும். சாயாவின் சிந்தனை முழுதும் மீண்டும், மீண்டும் ‘சசிதரனின் மனதில் இந்த கேள்வி, எத்தனை நாட்களாக இருக்கிறதோ?’ என்ற ஒரே புள்ளியிலேயே வந்து நின்றது.

தான் இங்கு சசிதரனுடனும், குழந்தை அம்முவுடனும் மகிழ்ச்சியோடு இருப்பதாக ஹரிணி நினைத்துக் கொண்டிருக்க, அவளிடம் இதைப் பகிர்ந்து கொள்வதில் , சாயாவுக்கு விருப்பமில்லை.

எனவே, குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல், டாக்டரிடம் போனதையும், என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தனர் என்பதையும், சசிதரன் ஊரில் இல்லாததால் ஸ்ரீதரனை உதவிக்கு அழைத்ததையும் மட்டும் தங்கையிடம் சொல்லி இருத்தாள்.

சாயாவைப் பொருத்தவரை ஹரிணிக்குத் தெரியாதே தவிர, தன் அக்காவை விட, அதிகம் அறிந்திருந்த ஹரிணிக்கு , சாயாவின் குரலில் இருந்தே, அவளது வழக்கமான ஆர்வமும், உற்சாகமும் இல்லாது வரவழைத்துக்கொண்ட இயல்புடன் பேசுவதைப் புரிந்து கொண்டாள்.

அடுத்தடுத்த நாட்களும் ஏதோ சிந்தனையுடன் பேசும் தமக்கையின் குரல் பேதத்தை உணர்ந்தவள், கேட்ட ‘ஏதாச்சும் பிரச்சனையாக்கா, மாமாவோட சண்டையா, அம்முக்கு உடம்பு பரவா இல்லையா, உனக்கு உடம்பு சரி இல்லையா? போன்ற எந்த கேள்விக்குமே சாயா பதில் சொல்லவில்லை.

சாயா “எங்களுக்கென்ன, நாங்க மூணு பேரும் நல்லாதான் இருக்கோம். இன்னைக்கு ஈவினிங் இங்க ஒரு ரிஸப்ஷன் இருக்கு. அதுக்கு போகப்போறோம்” என்றாள். கர்ப்பகாலத்தில், சசிதரன் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும்போது இருந்த உயிர்ப்பு, இப்போது இல்லை என்பது ஹரிணிக்குப் புரிந்தது. ஒரு வாரம்போல் பொறுத்தவள், நேரடியாக சசிதரனை அழைத்து விட்டாள்.

“மாமா, நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க? அக்கா ஏன் மாமா டல்லா பேசறா?” எனவும்தான் சசிதரனுக்கு, மனைவி இன்னும் முழுதாக சமாதானம் ஆகவில்லையோ என்ற சந்தேகமே தோன்றியது.

“அதெல்லாம் இல்லைம்மா. அம்மு இப்ப தவழ தொடங்கினதுல, கால் முளைச்சு போச்சு. வாய்ல போட்டுக்க அவளுக்குன்னு ஏதாவது குப்பை கிடைக்குது. அதுல வயிறு கொஞ்சம் சரியில்லை. பல் வேற வருது போல இருக்கு. தூசிய எடுக்க, வாய்ல கையை வெச்சா, நல்லா கடிச்சு வெக்கறா” என்று சசிதரன், மகளின் பெருமையை பேசினான்.

ஆனால் அதற்கு அடுத்த நாளே, சாயாவிடம் ஏதேதோ கையெழுத்து வாங்கிக்கொண்டு போனான். சில முதலீடுகளில், பங்குகளில் அவளது பெயரையும் சேர்த்திருப்பதால், அவ்வப்போது இதுபோல கையெழுத்து வாங்கிச்செல்வான் என்பதால், சாயாவும் அனிச்சை செயலாக கையெழுத்திட்டுக் கொடுத்தாள்.  மகளது விபரங்களையும் எடுத்துச் சென்றான்.

அடுத்த வாரக்கடைசியில் ஒரு நாள் மாலை அலுவலகத்தில் இருந்து வந்தவன் “சாயா, இன்னும் ரெண்டு நாள்ல நாம   மொரீஷியஸுக்குப் போகப்போறோம். பிஸினஸ் விஷயமா ரெண்டு மூணு நாள் வேலை இருக்கு. அதோட சேர்ந்து நாம அஞ்சாறு நாள் போய்ட்டு வரலாம். நாளைக்கு கோயம்புத்தூர் போயிடலாம். அம்முக்கும் உனக்கும் ஏதாவது வாங்கணும்னா அங்க வாங்கிக்கலாம். காலைல வனிதாக்காவை வெச்சுக்கிட்டு பேக் செய்” என்றான்.

“பாஸ்போர்ட் எல்லாம்?”

“வாங்கியாச்சு”

“என்ன திடீர்னு?”

சசிதரன் பதிலேதும் சொல்லாமல், அம்முவுடன் வெளியில் சென்றான். மறுநாள் காலை, சசி அலுவலகம் சென்றதும், சாயா ஸ்ரீதரனை அழைத்து தங்கள் பிரயாணம் குறித்து தெரிவித்தாள்.

“சூப்பர் அண்ணி. என்ஜாய்”

அன்று காலை நீண்ட நாட்களுக்குப்பிறகு, சசிதரன் ஃபேக்டரிக்கு சென்றிருந்த நேரத்தில், மூச்சிரைக்க மாடியேறி வந்த தாயம்மா “ராசாத்தியும் நீங்களும் சசி தம்பி கூட ஊருக்குப் போகப் போறீங்களாமே? பத்திரமா போய்ட்டு வாங்க” என்று சற்று நேரம் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். தினமும் பார்க்கும் பழக்கத்தில் குழந்தையும் தாயம்மாவிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் அம்மு என்ற அழைப்பும், தந்தையின் வர்ஷு என்ற குரலையும் போலவே தாயம்மாவின் “ராசாத்தி” என்ற அழைப்பும் அம்முவிற்கு தன்னைத்தான் என்று புரிந்தது. மற்ற வேலையாட்கள் அம்மும்மா என்றே அழைத்தனர்.

உடன் எடுத்துச் செல்ல வேண்டிய துணிகள், சாமான்களை சாயா எடுத்துக் கொடுக்க, வனிதா மடித்து, சரிபார்த்து, பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார்.

சாயா குழந்தைக்கான சில மருந்துகளை, டாக்டரிடம் பேசி, முன்னேற்பாடாக வாங்கி வரச் சொல்லி, சசியின் டிரைவரை அனுப்பி இருந்தாள். மீனா வந்து டிரைவர் அழைப்பதாக சொல்லவும் சாயா கீழே சென்று லிஸ்ட்டை சரிபார்த்து, மருந்துகளை வாங்கிக்கொண்டு மேலேறி வந்து, கதவைத் திறந்தவள் தாயம்மாவின் “மாசாணியம்மா, உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கியோ? புள்ளைங்களை நல்லா வைம்மா” என்று உரக்கவே முனகியவாறு எழுந்து கீழே சென்றார்.

தாயம்மா எப்போதுமே இது போல் ஏதாவது சொல்வது வழக்கம்தான் என்றாலுமே, அன்று சாயாவிற்கு இருந்த மனநிலையில், ஏனோ சுரீரென்றது.  மதியம் மூன்று மணிபோல் கோவைக்கு கிளம்பினர். 

ஆனால், போகும்போதும், வரும்போதும் கோவையில் கழித்த மூன்று நாட்களும் சரி, மொரீஷியஸில் இருந்த எட்டு நாட்களும் சரி, பிஸினஸ் மீட்டிங் என்று அவன் வெளியில் சென்ற நாட்களைத் தவிர மனைவியையும் மகளையும் தன் கையில் தாங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாயா அங்கே எடுத்த ஃபோட்டோக்களை அனுப்பியதற்கு பேசிய ஹரிணி “என்னக்கா குழந்தைக்கு அப்புறம் ஹனிமூனா?” என்றாள்.

“அம்மு குட்டி நல்ல பெருசாயிட்டாக்கா. பாக்கணும் போல இருக்கு”

“ஊருக்கு வந்ததும் வாயேன்”

“பாக்கறேன். செமஸ்டர் முடிஞ்சாதான்க்கா வரமுடியும்”

சசிதரனின் “சாயா” என்ற குரலில் “ஓகே ஹரிமா, பை” என்று காலை கட் செய்த சாயா, ஃபோன் பேசுகையில் மகளுடன் முகத்தோடு முகம் வைத்து எடுத்த செல்ஃபியை தங்கைக்கு அனுப்பினாள்.

இருவரது முகத்தையும் ஒரு சேரப் பார்த்த ஹரிணிக்கு ‘விதியை யாரால மாத்த முடியும்?’ என்ற தாயம்மாவின் குரல் நினைவுக்கு வரவும், தூக்கி வாரிப்போட்டது. இந்த எட்டு  மாதத்திலேயே, சாயாவின் பிரதி பிம்பமாக இருந்தாள் குழந்தை. 

திரும்பி வந்து ஒரு மாதம்போல் சென்றது. ஒருநாள் மதியத்தில் இருந்தே சசிதரனை ஏதோ தொந்தரவு செய்ததைப் போல் உணர்ந்தாள் சாயா. சிடுசிடுப்பும் எரிச்சலுமாக இருந்தான்.

இரவு படுக்கை அறைக்கு வந்தவனிடம் சென்று காலைக் கட்டிக்கொண்ட அம்முவைத் தூக்கியவன் “சாயா, வர்ஷுவை வெச்சுக்கோ. நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன்” என்று வெளியில் சென்றுவிட்டான்.

‘என்றுமில்லாமல், இந்தக் குளிரில் இரவு பத்துமணிக்கு என்ன வாக்கிங்?’ என்று எண்ணினாலும், அவனது மனதை ஏதோ அழுத்துவது புரிந்து, சாயா குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

மறுநாள் காலை எழுந்து, குளித்துவிட்டு வேட்டியணிந்து தயாராகி நின்றவனைப் பார்த்து விழித்தவளிடம் “இன்னைக்கு எங்கப்பாக்கு திதி. அதான் இப்படி” 

“அதுக்கு ஏன் வெளிய போறீங்க? முன்னால சொல்லி இருந்தீங்கன்னா மாமாவோட படத்தை வெச்சு வீட்லயே நாம…”

“நான் ஒருத்தன் இருக்கறதைப் பத்திக் கவலைப்படாம, தன்னைப் பத்தி மட்டுமே நினைச்சுக்கிட்டு, காரை எடுத்துக்கிட்டு போய் கன்னாபின்னான்னு ஓட்டி, மலைல இருந்து உருண்டு விழுந்தவருக்கு இதுவே அதிகம். இது கூட ஃபேக்டரி, எஸ்டேட்ல வேலை செய்யற தொழிலாளர்களுக்காகதான்” என்று சொல்லிவிட்டு விருட்டென வெளியேறினான்.