பிம்பம் 16+ / அத்தியாயம் – 10

                  பிம்பம் 10

“இது போல கனவு வர்றது முதல் தரம் இல்ல ஹரிமா. கர்ப்பமான நாலாம் மாசமே தொடங்கியாச்சு. உருவமில்லாத ரெண்டு கைகள் என் வயித்துல இருக்கற குழந்தையை பிடுங்கிட்டுப் போகும். நான் பின்னாலயே துரத்துவேன். முகம் தெரியாமலே கனவுல இருந்து முழிச்சிருவேன்.

ஆனா, இன்…இன்னைக்கு…”

கனவில் கண்ட பயங்கரத்தின் கனத்தைத் தாங்க முடியாதவளாக, பட்டென ஜுரம் விட்டதுபோல வியர்த்து வழிய , சாயாலக்ஷ்மி ‘அம்மு’ என்று அலறிக்கொண்டு எழுந்து, ஹரிணியையும் எழுப்பி  இருந்தாள்.

ஃப்ளாஸ்க்கில் இருந்த வெந்நீரை தம்ளரில் ஊற்றிக் கொடுத்த ஹரிணி, சாயா சிறிது ஆசுவாசம் அடைந்தவுடன் சொன்ன கதையைக் கேட்டாள்.

“இன்னைக்கு என்னாச்சுக்கா?”

“அந்த கைக்கு உருவம் வந்துடுச்சு. அதோட முகத்தையும் பாத்துட்டேன். அது போட்டிருந்த சட்டை ஸ்ரீதரனோடது. ஆனா, அந்த முகம்… ஹரிமா,  அந்த முகம் உங்க மாமாவோடதுடீ ” என்றவளின் கண்களும் முகமும் பயத்திலும் அதிர்ச்சியிலும் தோய்ந்திருந்தது.

“கவலைப்படாதக்கா. ப்ரெக்னன்ஸிலயும், போஸ்ட்பார்டம் பீரியட்லயும் பல பேருக்கு இது போல கனவு வர்றது சகஜம்தான்னு எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதக்கா” 

கர்ப்ப காலத்தில்  கனவுகள் வருவது சகஜம் என்று படித்திருப்பதால் அதையே தன் தமக்கையிடம் சொல்லவும் செய்தாள். 

“எப்போதும் இதே கனவுதானா? இல்ல, வேற மாதிரி ஏதாவது…?”

” சில தடவை இன்னொரு கனவும் வந்திருக்கு. அதுல, நான் எதையோ, யாரையோ தேடி அலையும்போது, ஒரு ரூமுக்குள்ள, என்னோட ஃபோட்டோவை பெரிசா சுவத்துல மாட்டி இருக்கறதை பார்க்கறாப்பல. அதுல நான் வளைகாப்பு அன்னிக்கு கட்டி இருந்த நீல கலர் பட்டுப் புடவையும், முத்து நகைங்களும் போட்டிருக்கேன்”

இப்போது ஹரிணிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் , சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். பிறகு, “இந்த கனவு எப்ப  வந்தாலும்,  ஃபோட்டோல நீ அதே புடவை, நகையைதான் போட்டு இருக்கியாக்கா?”

சற்று யோசித்த சாயா “ஆமா, ஒடும்போது நான் சுடிதார்  சாதாரண புடவை, பட்டுப் புடவைனு மாறி மாறி போட்டிருக்கேன். ஆனா, ஃபோட்டோல அதே புடவை, நகைதான். ஆமா, ஏன் கேக்கற?”

“சும்மா, தெரிஞ்சிக்கதான். எப்போதும் உனக்கு கனவே வராதுன்னு சொல்லுவ. இப்ப இவ்ளோ ஞாபகமா சொல்றியேக்கா?”

“அதான் ஹரிமா எனக்கும் புரியலை. ஏதோ வாட்ஸ் ஆப் வீடியோவை ரிபீட் மோட்ல பாக்கறாப்போல, மறக்காம நினைவுக்கு வருது.

“ஒரு வேளை, ப்ரெக்னென்ஸில உனக்கு ஏதாவது சூப்பர் பவர் கிடைச்சு இருக்குமோக்கா?” என்று முயற்சித்து கிண்டல் செய்தாள் ஹரிணி. 

ஹரிணி இப்போது  உண்மையிலேயே பயந்திருந்தாள்.  ஏனென்றால், இந்த நேரத்தில் வரும் கனவுகள் பெரும்பாலும், நிஜத்தைக் குறிக்கக் கூடியவை. சாயாவின் உடல், மன நிலையில் இவற்றைப் புரிய வைக்க முயற்சிப்பது அவளுக்கு மேலும் அச்சத்தைதான் கொடுக்கும் என்பதால் மௌனமாக இருந்தாள்.

இருவரும்  நீண்ட நேரம் விழித்திருந்து,  சாயா அழுத குழந்தைக்குப் பாலூட்டித் தூங்கவைத்து, தானும் உறங்கிய பிறகுமே ஹரிணி சிந்தனையுடன் விழித்திருந்தாள்.

ஹரிணிக்கு அந்த வீட்டில் இருந்த ஏதோ ஒரு குற்றத்தின் நிழலில், பயங்கரத்தின் பிடியில் தன் அக்கா சிக்கிக் கொண்டிருப்பதான பிரமை எழுந்தது. 

தூக்கமும் விழிப்புமான நிலையில், சசிதரன், ஸ்ரீதரன், தாயம்மா, வனிதா, முகம் தெரியாத அந்த இன்ப சேகரன் என எல்லோரையும் நினைத்துக் கொண்டே படுத்திருந்த ஹரிணி, 

வெகுநேரம் கழித்தே நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

அடுத்த  மூன்று நாட்களில் கல்லூரிக்குச் செல்ல வேலூருக்குக் கிளம்பிய ஹரிணி சாயாவின் உடல்நிலையையும், கனவுகள், அதன் தாக்கம் என மனநிலையையும் கருதி, ஸ்ரீதரனுக்கும் சசிதரனுக்கும் நடந்த வாக்குவாதம் குறித்தோ, ஸ்ரீதரன் மேல் சசிதரன் சொன்ன பழிகளைக் குறித்தோ, இன்ப சேகரன் என்பவரைப் பற்றியோ, சசிதரன், தாயம்மா இருவரது பேச்சுக்கும் உள்ள தொடர்பு குறித்தோ எதையும் சொல்ல இயலாதவளாய், “அக்கா, எதா இருந்தாலும் எனக்கு ஃபோன் பண்ணுக்கா. அவசியம்னா வரேன். எக்ஸ்ட்ரா டியூட்டி பார்த்து அட்டெண்டன்ஸை சரி கட்டிக்குவேன். ஜாக்கிரதையா இருக்கா. அம்முவை பத்திரமா  பாத்துக்க” என்றவள் மனமே இல்லாது புறப்பட்டுச் சென்றாள்.

கோத்தகிரியில் டவுனில் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்து ஃபேக்டரிக்கு வந்து செல்லும் ஸ்ரீதரனை உதவிக்கு அழைக்க விருப்பம் இல்லாது போக, சசிதரனுக்கு வேலை நெட்டி வாங்கியது. சாயாலக்ஷ்மி வனிதாவின் உதவியுடன், மெதுவே தானும் தேறிக்கொண்டு, குழந்தையையும் தேற்றினாள்.

இப்போது முழுதாக இரண்டு மாதங்களாகி விட, குப்புறப்படுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தாள், குழந்தை  அம்மு. காலையில் சசிதரன் சென்றவுடன், குழந்தையுடன் கீழே இறங்கி வரும் சாயா, அந்த வீட்டில் தன் வேலையாக வைத்துக் கொண்டிருந்த பூஜையறை வேலைகள், சமையல் சாமான்கள், மெனு போன்றவற்றை மீண்டும் தன் பொறுப்பில் எடுத்துக்   கொண்டாள்.

பிள்ளை பெற்று பாலூட்டும் இளம் தாய்க்கே உரித்தான செழுமையில், சாயா பலமடங்கு அழகு கூடித் தெரிந்தாள். ஆசை இருந்தும், டாக்டர் ரங்கநாயகி விளையாட்டாக  “சசி, நீ ஒரு மூணு மாசம் சாயாவை மறந்துடணும். ஆன் சீரியஸ் நோட், ஜாக்கிரதையா இருங்க. அது சாயாக்கும், குழந்தைக்கும் நல்லது” என்றிருந்தார்.

மனைவியை நெருங்க முடியாமல் தவித்தவனுக்கு, அவள் பழையபடி நடமாடத் தொடங்கினாலும், தன்னை கவனிக்காமல், குழந்தை வர்ஷாவுடனே நேரத்தைக் கழிப்பது பிடிக்காமல் போனது.

எனவே, மீண்டும் தன் தினசரி எதிர்பார்ப்புகளை சாயாவின் மீது  திணித்தான். புதிதான நிபந்தனைகள், வேலைகள் என அவளைத் தன்னை விட்டு நகரவிடாது பிடித்து வைத்துக் கொள்வான். குழந்தையைக் கூட தூக்கி கவனிக்காவிட்டால், தானே அழுது, அடங்குமாக இருக்கும்.

ஆனால், சசியின் அழைப்புக்கு சாயா வர சற்றுத் தாமதமானாலும், சசிக்கு சடுதியில் கோபம் வந்து விடும். ஏனோ, சாயாவால் தனக்கான உரிமைகளைக் கோரவோ, டக்கென “இருங்க, வந்துதானே ஆகணும்” என்று கூறவோ, “என்னால் முடியாதென’ மறுக்கவோ இயலவில்லை.

அவளுக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்,  அவளது அறிவு அவனது எதிர்பார்ப்பை, தேவைகளை ஏற்றுக்கொண்டாலும் நிராகரித்தாலும் சாயா கணவனிடம் சண்டையிடவோ, கோபிக்கவோ முயவில்லை.

மாறாக, தன்னருகில் இருந்து, தனக்காக, தன் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றுபவளை, “மூணு, நாலு மாசமா உன் பக்கத்துல வராம கஷ்டமா இருக்குடீ” 

“இதெல்லாம் ஒரு வேலையான்னு நீ நினைக்கலாம் சாயா, ஆனா உன் கையால செஞ்சா ஒரு தனி ‘கிக்’, தெரியுமா?”

” கும்முனு செமையா இருக்கடீ… எப்போன்னு சொல்லுடீ?”

“வர்ஷா வந்ததுல இருந்து நீ என்னைக் கண்டுக்கறதே இல்லை, தெரியுமா?”

“எங்க போற? எங்கூட உக்காரு”

அவனது சின்னச் சின்ன வேலைகளைக் கூட அவளைச் செய்ய வைத்தான். “நான் அவசரமா ஒரு மீட்டிங்க்கு கிளம்பணும்” என்பவனை, சில நேரம் அழும் குழந்தையைக் கீழே விட்டு விட்டுக் கவனிப்பாள்.

ஐந்து மாதக் குழந்தைக்கு பசியாற்றுகையில் கூட “சாயா, சீக்கிரம் வா” என்று அழைத்திருக்கிறான்.

இது போன்ற சமயங்களில், சசிதரன் அழைத்ததும் போகாவிட்டால் ஆத்திரமும் முணுமுணுப்பும் முகத்திருப்பலுமாக இருப்பவன், சாயா குழந்தையை விடுத்து, தனக்காக உடனே வந்து விட்டாலோ, குழந்தையைத் தவிக்க விட்டதில் சங்கடமாக உணர்ந்தாலோ, சாயாவை தன் இறுகிய அணைப்பிலும், முத்தங்களிலும் மூழ்கடிப்பவன், அவள் வந்தபிறகு எப்படி அவன் வாழ்வே வண்ணமயமாக, வசந்தகாலமாக மாறிவிட்டதென்று நீண்ட உரையாற்றுவான்.

ஹரிணியும் இல்லாது, ஸ்ரீதரனையும் பார்க்காது, கணவன், குழந்தை, வேலையாட்கள், குழந்தைக்காக என்று டாக்டர், எப்போதாவது வரும் விருந்தினர் என சாயாவின் வெளியுலகத் தொடர்பு, குறைந்தபட்சமாக இருந்தது. 

அதன் காரணமாக, அவளையறியாமலே, கணவனது பாராட்டுக்கும் நெருக்கத்துக்கும் ஏங்கிய சாயாவுக்கு, சசிதரனின்  இந்த விதமான கையாளல் சங்கடத்தோடு, வினோதமாக ஒருவித சந்தோஷத்தையும் கொடுத்ததில், கணவனின் அடக்கியாளும் நோக்கத்தை எதிர்க்கத் தோன்றாமல், அவனது கட்டுப்பாட்டிற்கு தன்னை ஒப்புக் கொடுத்தாள்.

சரியாக மூன்று மாதம் முடிந்ததும், சாயாவின் இரவுகளும் சசியின் வசமாகியது.

மெதுவே நாட்கள், வாரங்களாகி, மாதங்களாக, சாயா அம்முவுக்கு கஞ்சி, பழக்கூழ் என திட உணவுகளைப் பழக்கினாள். ஏடுபோல மெலிதாக இருந்த, ஏழு மாதமான அம்மு, இப்போது நன்றாக நீந்தினாள். குளிர்ந்த தரையில் கீழே விட சாயாவுக்குதான் பயமாக இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டவளின்  கவலையைப் போக்க, வீடு முழுவதும் கார்ப்பெட் போட்டான்.

ஒருநாள் தவழுவதற்காக  யானைபோல் முட்டி போட்டு நாலுகாலில் எழுந்து நின்று, குழந்தை  முன்னும் பின்னும் ஆடுவதைப் பார்க்கவே கொள்ளை அழகாக இருக்க, சாயா வாரி எடுத்து முத்தம் கொடுத்தாள். குழந்தையும் தன் முகத்தை அம்மாவின் கன்னத்தில் வைத்து எச்சில் படுத்தவும், சாயா சிலிர்த்துச் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தான் சசிதரன்.

“என்ன பாக்குறீங்க?”

“உனக்கு நான் முத்தம் கொடுத்தா பிடிக்கலையா சாயா?”

ஒரு நொடி கேள்வி புரியாமல் முழித்த சாயா, முகம் சிவக்க “என்னங்க?” எனவும்,

“அப்புறம் ஏன் நீ இது மாதிரி சிரிக்கறதில்லை?” என்ற கேள்வியில் திகைத்தாள்.

மேலும் “வர்ஷாவும் உனக்குதான் முத்தம் கொடுக்கறா. அவளுக்கும் என்னை…”

சசிதரனின் பேச்சில் அதிர்ந்து போனவள், அம்முவை அவன் கையில் திணித்தாள்.

சாயா “நீங்க முதல்ல அம்முவோட பேசுங்க. கொஞ்சுங்க, முத்தம் கொடுங்க. நீங்க செய்யறதை அவளும் செய்வா” என்று படபடவென பொரிந்து விட்டு, அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அன்று வெகுநேரம் மகளைக் கையில் வைத்திருந்தவன், அடிக்கடி  குழந்தையை அணைத்துக் கொள்வதையும், மகள் தன்னை அடித்து விளையாடிக் களைத்து, அவன் தோளிலேயே உறங்கியதிலும் நெகிழ்ந்திருந்தான் போலும். முகத்தையும் கண்களையும் ஒரு கையால் துடைத்துக் கொண்டான். 

‘அழுகிறானா? சசிதரனா?’

 உடை அலமாரிகளை சரி செய்து கொண்டு, இருவரையும் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருந்த சாயாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“அம்முவைக் குடுங்க. தொட்டில்ல போட்டுடறேன்”

“பரவாயில்லை, எங்கிட்டயே இருக்கட்டும்” 

“எனக்கு பிடிக்குதா இல்லையான்னு உங்களுக்குத் தெரிய வேண்டாமா?”

“சாயா” என்று நெற்றி சுருக்கி யோசித்தவன், பின் சத்தமாக சிரித்தான்.

சசிதரன் பெண்குழந்தையைக் கொண்டாடும் தந்தையாக இருக்கவில்லை. அதற்காக மகளை வெறுத்தான் என்றும் அர்த்தமில்லை. குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்வான். அவ்வளவுதான். அவன் மகளுக்கு முத்தம் கொடுத்தோ, வார்த்தைகளால் கொஞ்சியோ, விளையாட்டுக் காட்டியோ சாயா பார்த்ததில்லை. அவன் செய்யும் ஒரே  விளையாட்டு, மகளை மேலே தூக்கிப்போட்டுப் பிடிப்பதுதான். சில நேரம்  கூடைப்பந்து போல் மகள் போகும் உயரத்தைப் பார்த்தால் சாயாவுக்கு வயிற்றைக் கலக்கும்.  

சமீபமாக, குழந்தையைத் தூக்குவது சுலபமான பிறகு, சில நேரம், பகல் வேளையாக இருந்தால் வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்வான்.

இதுபோன்ற சமயங்களில் , தாயம்மா, சசிதரனை குழந்தையுடன் பார்த்துவிட்டால், வெளியிலேயே நிற்பார். தாயம்மா உடம்பு முடியாமல் மாடி ஏறி வரக்கூடாதென சசிதரன் தடை போட்டிருந்ததால், குழந்தை கீழே வரும் சமயம் வந்து பார்த்துவிட்டுப் போவார்.

அன்றும் அதுபோல், கீழ் ஹாலில், இப்போது உட்காரத்  தொடங்கி இருந்த குழந்தையுடன் சாயா விளையாடிக் கொண்டிருந்தபோது தாயம்மா வந்து “ராசாத்தி விளையாடுறீங்களா? எங்கிட்ட வரீங்களா?” என்று அம்முவைக் கொஞ்சிக் கொண்டே குழந்தையின் அருகில் அமர்ந்து  தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். 

சிறிது நேரத்திலேயே குழந்தை பசியில் சிணுங்கவும் சாயா “நீங்க கொஞ்சம் அம்முவை வெச்சுக்கறீங்களா? நான் போய் அவளுக்கு சாப்பிட கொண்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.

 சரியாக அந்நேரத்தில்   ஃபேக்டரியில் இருந்து வந்த சசிதரன், அவசரமாகக்  கோவை செல்ல வேண்டும் என்று, எதையோ எடுக்க வந்தபோது தாயம்மா, அம்முவை மடியில் வைத்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து மகளைத் தூக்கியவன்,

“சாயா, இந்த வயசான காலத்துல தாயம்மாவை ஏன் கஷ்டப் படுத்தற?” என்று தாயம்மா, வனிதா, மீனா, சரவணன் என வேலையாட்களின் முன்பே சத்தமாக மனைவியைக் கடிந்து கொள்ளவும், சாயாவுக்கு முகம் வாடிவிட்டது.

சாயா தன்னை எஸ்டேட் முதலாளியின் மனைவி என்றோ, சசிதரனே கூறுவது போல் அந்த வீட்டின் எஜமானியாகவோ ஒரு போதும் நினைக்கவில்லை. அதேபோல் அந்த வேலையாட்களை விட தான் உசத்தி என்ற எண்ணமும் அவளுக்கு இல்லை. இன்னும் சொன்னால், திருமணத்துக்கு முன்பான இவளது நிலையும் அவர்களை ஒத்ததுதான் என்றும் சாயாவுக்குத் தெரியும்.

ஆனாலும், அவனது மனைவியாக, வீட்டில் வேலை செய்(த)பவருக்காக, என்னதான் கணவனை சிறுவயது முதல் கவனித்துக் கொண்டவர் என்றாலுமே, வேலையாட்களின் முன், சசிதரன் தன்னைக் கடிந்து கொண்டதை  சாயா ரசிக்கவில்லை.

 சசிதரன் சாயாவை தன் கைப்பாவை போல் ஆட்டி வைப்பது வேலையாட்களுக்கோ வெளியாட்களுக்கோ யாருக்கும் தெரியாத படிதான்  நடந்து கொள்வான்.  சாயாவுமே, அவர்களது அறையைத் தாண்டி அவன் அழைத்தால், அவள் வரும்வரை அவனைக் காக்க வைப்பது அவனுக்கு அவமரியாதை என்பதால், அவன் “அரை” என்றால் உரைப்பவள், சசியின் கடிதலில் அவமானமாக உணர்ந்தாள்.

அதைவிட தாயம்மாவின் “விடுங்க தம்பி,

 நான்தான் ராசாத்தியைத் தூக்க ஆசைப்பட்டேன்” என்ற சமாதானத்தில் சாயா மேலும் வெகுண்டவளாக, எதுவும்  பேசாமல், ஒரு கையில் குழந்தை, மறு கையில் உணவு என மௌனமாக மேலே சென்று விட்டாள்.

சசிதரனுக்கு இருந்த அவசரத்தில் மனைவியின் முகத்தையோ உணர்வுகளையோ கவனிக்காது கிளம்பி விட்டான்.

அன்று கோயம்புத்தூர் சென்ற சசிதரனுக்கு  போன வேலை முடியாததோடு, தன் மனைவி குழந்தையுடன் பைக்கில் சென்ற அவனது நெருங்கிய நண்பன், விபத்தில் சிக்கி, மூவருமே ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்ததால் சசிதரனால் கோத்தகிரி திரும்ப முடியவில்லை.

அவன் சென்ற மூன்றாவது நாளில் இருந்தே, சளியும் இருமலுமாக டல்லடித்த அம்முவுக்கு, மாலை. நெருங்க, நெருங்க ஜுரமும் சேர்ந்து கொண்டது. 

பொதுவான சளி, ஜுரம் என்றால் கொடுக்கும் மருந்துகளைக் கொடுத்து  சமாளிக்க  சாயா முயல, மருந்தின் வீரியம் குறைந்தவுடன் மீண்டும் மீண்டும் ஜூரம் வர, மறுநாள் மதியத்துக்கு மேல், ஜுரத்துடன், மூச்சுத் திணறலும் சேர்ந்து கொள்ள, கணவனைத் தொடர்பு கொண்டாள். 

அவனோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தான். ஒரு மணி நேரத்துக்கு மேல் முயற்சித்தும் பயனின்றி போகவே, டிரைவரை அழைத்துக் காரை எடுக்கச் சொன்னாள்.

குழந்தைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்புகையில்தான், சாயாவுக்கு தன் கையில் பணமே இல்லை என்பது உரைத்தது. கப்போர்டின் இழுப்பறைகளைத் திறந்து பார்த்தவளுக்கு நூற்று முப்பத்தி சொச்சம் சில்லறை மட்டுமே கிடைத்தது. 

எதிரில் இருக்கும் சசிதரனின் அறை, கீழே ஆஃபீஸ் ரூம் என்று ரெய்டு நடத்தியும் பலன் பூஜ்ஜியம்தான்.

டிரைவர் காருடன் தயாராக இருக்க, அம்முவைத் தூக்கியவள்,வீட்டில் அந்நேரம் வனிதா மட்டுமே இருந்ததால், “பரவாயில்லைகா” என்றவள், கோத்தகிரி டவுனில் இருக்கும் குழந்தை மருத்துவரிடம் சென்றாள்.

டாக்டர் ரங்கநாயகி பரிந்துரைத்த குழந்தை நல மருத்துவர்தான். ஆனாலும், சசிதரனுக்கு அதிக பரிச்சயமில்லாதவர். இளைஞர். நாற்பது வயதுக்கு மேல் இருக்காது. நல்லவேளையாக, அவசரம் புரிந்து, உள்ளே அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்தவர் “கன்ஜெஸ்ஷன். நெஞ்சுல நல்ல கபம் கட்டி இருக்கு. ஹார்ட்பீட் வேற அதிகமா இருக்கு.  நல்ல வேளை கூட்டிட்டு வந்தீங்க” என்றவர் “நர்ஸ், பாப்பாக்கு ஐவி போட்டு, சலைன் போடுங்க.  பாராசிட்டமாலும் விட்டமின் சியும் ஒரு டோஸ் குடுங்க.  ஸ்பான்ஜ் பாத் குடுத்துட்டு நெபுலைஸேஷனுக்கு ஏற்பாடு செய்யுங்க” என்று வரிசையாக கட்டளையிட்டவர் “நீங்க போய் ஃப்ரன்ட் டெஸ்க்ல பணத்தைக் கட்டிட்டு வாங்க” என்றார்.

சாயாவுக்கு குழந்தைக்கு என்னவோ என்ற பதட்டத்தை விட, கையில் பணமில்லாத பதட்டம் மிகுந்தது. வனிதாவை குழந்தையுடன் அனுப்பியவள், பணம் கட்டும் இடத்துக்குச் சென்று கேட்க, “மூவாயிரம் டெபாஸிட் மேடம்” என்றாள் அந்தப் பெண்.

செய்வதறியாது யோசனையுடன் நின்றவள், மீண்டும் கணவனுக்கு முயற்சிக்க, எடுத்தவன் “நானே கூப்பிடறேன்” என்று கட் செய்தான்.

ஜீவன் டீ எஸ்டேட்டின் உரிமையாளர் சசிதரனின் மனைவியால் டாக்டரிடமோ, வனிதாவிடமோ, தங்கையிடமோ தன் கையில் பணமில்லை என்று சொல்ல இயலாதவளாக, வேறு வழியின்றி,  ஸ்ரீதரனுக்கு முதலில் வாட்ஸ்ஆப்பில் எமர்ஜென்ஸி என்று மெஸேஜ் கொடுத்தவள், பிறகு அழைத்தாள்.  மூன்றாவது அழைப்பில் ஃபோனை எடுத்தவன், அடுத்த இருபது நிமிடத்தில் அங்கிருந்தான்.

ஆறு மணி நேர மருத்துவமனை வாசத்துக்குப் பின் ‘இந்தக் குழந்தைக்கா உடம்பு சரியில்லை?’ என்பது போல் அம்மு தன் கால் பற்களைக் காட்டி சிரித்தது.

ஸ்ரீதரனை பார்த்து தந்தை என்று நினைத்ததோ என்னவோ, வேற்றுமுகமின்றி அவனிடம் சென்றது குழந்தை. இரவு மணி பத்தை நெருங்கவே, ஸ்ரீதரனும் தன் பைக்கில் வீடு வரை வந்தான்.

தன் கைகளைக் கட்டியபடி வாசலிலேயே நின்றிருந்த சசி, காரிலிருந்து குழந்தையோடு இறங்கிய மனைவியையும், ஸ்ரீதரனையும் ஒரு சேர பார்த்தவன் “நீயும் என்னை ஏமாத்திட்டல்ல சாயா?” என்றான்.