பிம்பம் 16+ / அத்தியாயம் 1

                பிம்பம் 1

திருச்சி, தில்லை நகரில் பணக்கார வீடுகளுக்கு மத்தியில் இருந்த அந்த விஸ்தீரணமான இரண்டு மாடி சூப்பர் மார்க்கெட்டில், கையில் நோட்பேட் பென்சில் சகிதம், மாடியில் இருந்த கடை ஓனரின் சிறிய அலுவலக அறைக்குச் செல்ல கிளம்பினாள்,
சாயா லக்ஷ்மி.

வழியில் பிஸ்கட் பாக்கெட்டுகளை ஸ்டாக் எடுத்துக் கொண்டிருந்த கல்பனாவின் கேலியும் அக்கறையும் நிறைந்த “திரும்பவுமாடீ?” என்ற கேள்விக்குத் தோளைக் குலுக்கி விட்டுப் படி ஏறினாள் சாயா.

அவள் செய்யும் வேலைக்கும், அவளது தோற்றத்திற்கும் தொடர்பில்லாது இருந்தாள். திரும்பத் திரும்பப் போடும் சற்றே நிறம் மங்கிய சுடிதார்களின் மேல், அந்த சூப்பர் மார்க்கெட்டின் லோகோ பொறித்த ஷர்ட்டை அணிந்து கொண்டிருந்தாலுமே, அவளின் உயரம், வாளிப்பு, முகத்தின் வசீகரம்…

மொத்தத்தில் அழகி. தூசி படிந்த அந்த அழகை கொஞ்சமே கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்தால் பேரழகி.

அறையின் வெளியே நின்று, இரண்டு முறை பெருமூச்சை எடுத்து, கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

கடை ஓனர் இளங்கோவின் எதிரில் சூப்பர் மார்க்கெட்டின் சூப்பர்வைசர் வினோத்தும் மேனேஜர் சரளாவும் நின்றிருக்க, அந்த அறையையே அடைத்தாற்போல் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான் சசிதரன்.

மேனேஜர் சரளாவின் பார்வையில் இருந்தது ஏளனமா, பொறாமையா?

சாயாவிற்கு முதல்முறை அவனைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. ஏதோ காலனி இந்தியாவுக்கு வருகை தந்த பிரிட்டிஷ் இளவரசரை வரவேற்பது போன்ற பந்தாவும் பரபரப்புமாக இளங்கோ செய்த அலம்பலில், அங்கு வேலை செய்யும் அனைவருமே எரிச்சலும் எகத்தாளமுமாகத்தான் இருந்தனர்.

ஆனால், வாசலில் சசிதரன் வந்து இறங்கிய காரையும் அவனது தோற்றத்தையும் பார்த்த ஆண் ஊழியர்கள் காதிலிருந்தும், பெண் ஊழியர்களின் வயிற்றெரிச்சலில் இருந்தும் புகை கிளம்பியதென்னவோ உண்மை.

கதைகளில் வரும் செல்வச்சீமான்களைப் போல் இருந்தான். சட்டை, பேண்ட், ஷூ, வாட்ச், சட்டைப் பையில் குளிர் கண்ணாடி என இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் அலங்காரம்தான்.

ஆனால், அதில் இருந்த நளினம் நாசூக்கு, நாகரிகம்? ம்ஹும். வாய்ப்பில்லை. ராஜாதான்.

சாயாவைப் பொறுத்தவரை இளங்கோதான், அவளுக்குத் தெரிந்த, அவளுடன் பேசும், அவள் பேசும் பணக்காரன். சசிதரனுக்கு முன்பு இளங்கோவின் பணமும் பந்தாவும், மதிப்பிழந்தது போல் தோன்றியது.

சசிதரன் கடந்த இரண்டு மாதங்களில் இங்கு வருவது இது ஐந்தாவது முறை. சசிதரனுக்கு கோத்தகிரியில் நாற்றி இருபது ஏக்கரில் ஒரு டீ எஸ்டேட்டும், அதற்குள்ளேயே ஒரு தேயிலை பதப்படுத்தும் ஃபேக்டரியும் இருக்கிறது.

ஜீவன் டீ என்று ஏற்கனவே நன்கு பிரபலமான டீயை, இப்போது விதவிதமான இயற்கை மணமூட்டிகள், பழ ருசிகள், மூலிகைகள் என வெவ்வேறு சுவைகளில் உற்பத்தி செய்கிறான்.

எஸ்டேட் மற்றும் டீ ஃபேக்டரியின் பெயரும் ஜீவன்தான். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதியில் அதன் ஏஜன்சியை எடுத்துக் கொள்ள, முன்னரே பேசி முடிவு செய்திருந்தார் இளங்கோ.

முதல் முறை அவன் வந்தபோது, தனது கடைக்கு வருகை தந்த சசிதரனிடம், அட்வான்ஸ் தொகையைக் கொடுத்ததோடு, மேனேஜர் சரளா விடுப்பில் இருந்ததால், தங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குத் தேவையான ரகங்களை, தேவையான ஸ்டாக்குகளை, எந்த அளவு எடையுள்ள பாக்கெட்டுகள் அதிகம் விற்பனை ஆகிறதென்று கணக்கிட்டு சொன்னது, சாயா லக்ஷ்மிதான்.

அன்று அந்த அறையில் சாயா லக்ஷ்மியை முதலில் பார்த்த சசிதரனின் கவனமும் பார்வையும் அதன்பிறகு அவள் மீதுதான் அதிகம் இருந்தது.

உண்மையில் சசிதரன் அதன்பிறகு அவனே நேரில் வர, சாயாதான் காரணம் என்பதைப் புரிந்து கொண்ட இளங்கோ, தனக்கான லாபமாய், அடுத்தடுத்த சந்திப்பிலும் சாயாவை அழைத்து விட்டான்.

தன்னை இளங்கோ உபயோகிப்பது புரிந்தாலும், பிடிக்காவிட்டாலும், சாயாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளது குடும்ப சூழ்நிலைக்கு இந்த வேலை மிகவும் அவசியம். இந்தத் திருச்சியில், மாதம் பிறந்தால் சுளையாக பதிமூணாயிரம் ரூபாய், நாள் முழுவதும் ஏசி, அக்கவுண்ட்டன்ட் என்பதால், உட்கார்ந்த இடத்தில் வேலை, யார் தருவார்?

வீடுமே இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க, அமைதியாய் போய் நின்று, கேட்ட விவரங்களைக் கொடுத்து விட்டு வந்து விடுவாள்.

“டீ விக்குதா, பேக்கேஜிங் நல்லா இருக்கா, சூப்பர் மார்க்கெட் வாசல்ல மூணு நாளைக்கு ஒரு டேஸ்ட்டிங் ஸ்டால் போடலாமா?’ என வெவ்வேறு காரணங்களுடன் வந்த சசிதரன், மூன்றாவது முறை வந்தபோது ஏனோ, தனக்கான விவரங்கள் போதும் என்பதைப் போல், அவளை போகச் சொல்லி விட்டான்.

ஆனால், தன் வேலை முடிந்து, இரவில் வீட்டுக்குச் செல்ல, தன் சைக்கிளில் கிளம்பிய சாயாவை, இரண்டு தெருக்கள் தள்ளி வழியில் நிறுத்தியவன், அவளை மணக்கக் கேட்கவும், உண்மையில் பயத்தில் உதறினாள் சாயா. அதைவிட அந்த பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க, அதிகம் முயற்சித்தாள்.

இரவு நேரத்தில் இது என்ன புது வம்பு என்று எண்ணியவள் அமைதியாக நிற்க “நீ எதுக்கு சாயா இப்படி ராத்திரி நேரத்துல, சைக்கிள்ல, அதுவும் இளங்கோ மாதிரி ஆள் கிட்ட வேலை பார்க்கணும்?” என்றான் சசிதரன்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளை “எனக்கு உன் மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சதும், தேவையில்லாம அவன் உன்னை கூப்பிடறது எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறியா சாயா?”

“…”

“அதனாலதான், அவன் கூப்பிட்டும், நான் உன்னைத் திருப்பி அனுப்பிட்டேன். உன்னை யூஸ் பண்ண அவன் யாரு? எனக்கு வந்த கோபத்துக்கு அவனை அங்கேயே….ப்ச், விடு. நோ வயலன்ஸ்”

“…”

“நான் சொல்றது புரியுதா சாயா? நீ இங்க இருக்க வேண்டியவளே இல்லை தெரியுமா? என் மனைவியா, எனக்கு உரிமையா இருந்தா, அவனால இப்படி உங்கிட்டப் பேசற தைரியம் வருமா? சீக்கிரமா என் கிட்ட வந்திடு சாயா”

“…”

மணி இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகி இருக்க, கஞ்சா அடித்தவனைப் போல் பிதற்றுபவனை எப்படிக் கடந்து போக என்று முழித்தவளை, அவளது தந்தை மொபைலில் அழைத்துக் காப்பாற்றினார்.

அவரிடம் “வழில வந்துக்கிட்டே இருக்கேன்பா” என்றவள் “எங்கப்பா திட்டுவார் சார்” என்று சொல்லிவிட்டு, ஆளை விட்டால் போதுமென, சைக்களில் ஏறிப் பறந்துவிட்டாள்.

ஆனால், அடுத்தநாளே, சசிதரனுக்கு சாயாவை விடும் எண்ணம் சிறிதுமில்லை என்பது, அவளுக்குப் புரித்து போனது.

மறுநாளே இவள் கடையில் இருக்கும் சமயம், அவன் நேரே இவளது தந்தை கோவிந்தனிடமே போய் நிற்பானென ஜோசியமா கண்டாள் சாயாலக்ஷ்மி? ஆளையும், காரையும் கண்டு மிரண்ட அவளது தந்தை, முதலில் அவனுடன் பேசவே மறுத்தார்.

“எங்கப்பா பேர் ஜீவேந்திரன். அம்மா பேர் பத்மா. அவங்க இப்ப உயிரோட இல்லை. ஒரு தம்பி இருக்கான். பேர் ஸ்ரீதரன்” என்று தொடங்கியவன், அவனது எஸ்டேட், டீ ஃபேக்டரி, என தன் பெருமைகளை விளக்கிவிட்டு, பெற்றோரில்லாத தனக்கு, இனி அவர்தான் தந்தை என்றும் மூளைச்சலவை செய்திருந்தான்.

“அத்தனை பணக்காரர், உம்மேல ஆசைப்பட்டுக் கட்டிக்க கேக்கறார்மா. நான் கொஞ்சம் அவகாசம் குடுங்கன்னு கேட்டிருக்கேன்” என்றார்.

“நான் அவருக்கு நம்ம வீட்டு அட்ரஸே தரலையேப்பா?”

“இது ஒரு பெரிய விஷயமாம்மா? உங்க சூப்பர் மார்க்கெட் ஓனர் கிட்ட கேட்டிருப்பார்”

ஏற்கனவே, அத்தனை ஆளுமையான அழகான சசிதரன், தன்னை விரும்புவதிலும், திருமணத்திற்குக் கேட்டதிலும், தனக்காக, இளங்கோவை திட்டியதும், அவள் மீது காட்டிய அக்கறையை விளக்கியதிலும், ஆழ உழுத நிலம் போலக் கிடந்த சாயாவின் மனதில், பயத்தை மீறிய ஆர்வம் துளிர்விட்டது.

இது நடந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிறது. சசிதரன், இதற்குள் இரண்டு மூன்று முறை அவளது தந்தையிடம் பேசி இருந்தான். அவனது ஆர்வமும், ஆசையும், கோவிந்தனிடம் நம்பிக்கையை விதைக்க, இரண்ட நாட்களுக்கு முன், எதற்கும் சசிதரனைப் பற்றி விசாரிக்க எண்ணி அவனது ஊருக்கு செல்வதாகச் சொல்லிச் சென்றிருந்தார்.

சசிதரனும் இளங்கோவும் இரண்டு மாத சேல்ஸ், ஏஜன்சியின் விற்பனை நிலவரம் என பேசிக் கொண்டிருந்தனர். சாயாவை இளங்கோ சில விவரங்களைக் கேட்க, கொடுத்துவிட்டுக் கீழ்த் தளத்துக்கு வந்துவிட்டாள்.

சசியும் கண்டும் காணாததைப்போல் இருக்கவும்,
இதுநாள் வரை தன் ஆர்வத்தைத் தூண்டாமல், தங்களின் ஏழ்மை நிலையையும், அவனது உயரத்தையும் எண்ணி மனதை மூடி வைத்திருந்தவளுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது.

ஆனால், சசிதரன் அன்றிரவும் வழியில் காத்திருந்தவன் “என்ன மேடம் கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டீங்க போல இருக்கு. காலைல என்னைத் தேடினதானே?” எனவும் சாயாவுக்கு முகம் சிவந்து விட்டது.

“ஹேய், யு ஆர் ப்ளஷ்ஷிங். நான் ரெண்டு நாள்ல பிஸினஸ் ட்ரிப்பா சிங்கப்பூர், இந்தோனேஷியா போகப் போறேன். ஸீ யூ ஷார்ட்லி ” என்றவன், அவளை மேலும் சங்கடப்படுத்தாமல், சிரிப்புடன் நகர்ந்து விட்டான்.

சாயா ஒரு மாதிரி தன்னை மறந்த நிலையில் சைக்கிளை உருட்டிக் கொண்டு, வீடு வந்து சேர்ந்தாள்.

‘தன் தகுதிக்கு மீறி ஆசைபபடுகிறோமோ? இவ்வளவு பெரிய பணக்காரன், எற்னை ஏமாற்றிவிட்டால்? ஏண்டா இப்படி செஞ்சேன்னு கூட வந்து கேட்கக் கூட யாரும் கிடையாது. சாயா அவளது தந்தை, தங்கை ஹரிணி என சிறிய, ஏழ்மையான வட்டம் அவர்களுடையது.

‘ஏமாற்றுபவன் ஏன் திருமணம் பற்றிப் பேசுகிறான்?’ என்று ஒரு மனம் சசிதரன் சார்பில் வாதாடியது.

சாயா, தந்தை ஊருக்கு சென்ற இந்த நான்கு நாட்களாக, பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

திருச்சியின் பிரபலமான ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் ப்யூனாக இருந்து ரிடையர் ஆன அவளது தந்தை பொதுவாக வெளி ஊருக்கு என எங்கும் சென்றதே இல்லை எனலாம்.

சாயா கல்லூரி முதல் வருடத்தில் இருக்கும்போது, அவளது தாய், அதிக உதிரப்போக்கினால் இறந்த பிறகு, ஓரிரு முறை கல்லூரி விழா, தேர்தல் பணி என்று அவர் கல்லூரியிலேயே இரவைக் கழிக்க நேரிட்டபோதும், அவள் தங்கை ஹரிணி இவர்களுடன் இருந்த வரை, இவர்கள் இருவருமே இருந்து கொள்வார்கள்.

ஹரிணி இப்போது வேலூர் CMCல் பிஎஸ்சி நர்சிங், இரண்டாம் வருடம் படிக்கிறாள்.
அதனாலேயே சாயாவின் தந்தை ரிடையர் ஆகி ஏழு வருடங்கள் சென்ற பிறகும், வீட்டிலேயே விதவிதமான பேப்பர் கவர்கள் தயாரிப்பது, புக் பைண்டிங் செய்து தருவது என செய்து கொண்டிருக்கிறார்.

சாயாவுக்கு ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் வந்திருக்க, பெண்கள் கல்லூரியில் வேலை பார்த்ததன் பயனாக, மகளுக்கு அங்கேயே பி. காம் சீட் கிடைத்தது. இவள் டிகிரி முடிக்கவும், கணக்கு வழக்குக்குத் தேவையான கணிப்பொறி கோர்ஸை முடித்தவள், இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலையில் சேர்ந்து நான்கு வருடங்களாகிறது. பேங்க், அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதுகிறாள். ஆனால், இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை.

தோசை ஊற்றி சாப்பிட்டு, இருந்த பாலில் டீ போட்டு, பக்கத்து வீட்டு கலா அக்காவுக்கும், தனக்கும் எடுத்து வந்தவள், தன் எண்ணங்களில் இருந்து வெளி வரவில்லை.

சசிதரனின் பணம் இவளை மிரட்டியது. என்னதான் பெற்றோர் இல்லாத இடமாக இருந்தாலும், தனக்கும், அவனுக்கும் லிஃப்ட் வைத்தால் கூட எட்டாது என்று அறிந்தே இருந்தவளுக்கு, நிராசையும் ஏக்கமும் எழுந்தது. பெருமூச்சுடன் அமர்ந்திருந்தாள்.

சசிதரனைப் பற்றி எண்ணும்போதே, அவனது துளைக்கும் பார்வையின் மேவலையும், வருடலையும் அவளால் மீண்டும் உணர முடிந்தது.

தன் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். அப்பாவிடமிருந்து இரவு ஏழு மணிக்கு ‘நாளைக்கு வந்திருவேன். பத்திரமாக இரு” என்ற தகவல் இருந்தது. கால் செய்தாள். அவுட் ஆஃப் நெட்வொர்க் கவரேஜ் என்றே வந்தது.

விளக்கை அணைத்து, வாசல் கதவின் தாழை சரி பார்த்து விட்டுப் படுத்துக் கொண்டனர்.

“என்னடி சாயா, ஏன் எதுவும் பேசாம இருக்க?”

“ஒண்ணுமில்லக்கா. மாமா பேசினாராக்கா?

“ம். பேசினாங்க”

“என்ன சொன்னாங்க?”

“ம்…சொல்றாங்க”

“சும்மா சொல்லுங்கக்கா”

“எப்போடா கல்யாணம் முடிஞ்சு, அவங்க கிட்ட ….” என்றவளுக்கு சொல்லி இருக்கக் கூடாதோ என பாதியிலேயே பேச்சை நிறுத்தி விட்டாள்.

“அக்காவுக்கு வெக்க வெக்கமா வருதோ”

“உனக்கு கல்யாணத்துக்கு பாக்கலையா, சாயா?”

“ம்… அப்பா பாக்கணும்னு சொன்னாங்க” என்றாள், குரலில் கவனம் வைத்து.

“சூப்பர்டி சாயா. அவருக்கு கூட ஒரு தம்பி இருக்கார். வேணா பாக்கலாமா?”

சாயாவின் அனுமதியின்றியே சசிதரனிடம் சென்ற அவளது மனம், அவனுடன் அந்த முகமில்லா மனிதனை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை.

அவளது கட்டுப்பாட்டை மீறி சசிதரன் மீதான ஈர்ப்புகாகும் ஆசைக்கும் தயக்கத்துக்கும் இடையில் கிடந்து சாயாவின் அறிவு அல்லாட, அவளது மனம் முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் சசிதரனே நிறைந்திருப்பதை அவளே அன்றுதான் முழுதாக உணர்ந்தாள்.

சாயாவின் மௌனம் தொடர, சற்று நேரத்தில் இருவருமே உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

திருச்சியின் பிரபலமான பாத்திரக்கடையில் விற்பனைப் பெண்ணான பக்கத்து வீட்டு கலா அக்காவும், சாயாவும் வேலை செய்த களைப்பில், அயர்ந்து உறங்கினர்.

யார் வீட்டிலோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, ‘அதற்குள்ளா விடிந்து விட்டது?’ என்ற அலுப்புடன், மொபைலில் கடிகாரத்தைப் பார்த்த சாயா, மணி மூன்றரைதான் என்பதில் திருப்தியடைந்து, அடுத்த நொடியே திரும்பவும் தூங்கிப்போனாள்.

ஆனால், சில நிமிடங்களிலேயே மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், ‘இருள் பிரியாத இந்நேரத்தில் யார்?’ என கலவரமான கலா, மொபைலில் தன் அண்ணனை அழைத்தவள், கதவருகில் சென்று “யாரு, யார் இந்த நேரத்துல?”

“முதல்ல கதவைத் திறங்கம்மா. நாங்க போலீஸ்”

“ஸார்.. எங்கண்ணா… போலீஸா..சாயா எந்திரிடீ” என்று கதவைத் திறக்காமலே உளறியவள் சாயாவை உலுக்கினாள்.

அதற்குள் கலாவின் அண்ணன், அம்மா, அப்பா, தங்கை என எல்லோரும் வெளியில் வர, இன்னும் சில அக்கம்பக்க வீடுகளில் இருந்தும் ஆட்கள் எட்டிப் பார்த்தனர்.

“கலா, கதவைத் திற” என்ற கலாவின் தந்தையின் குரலில் , கதவைத் திறந்த பெண்கள் இருவரும் அந்நேரத்தில் போலீஸைக் கண்டு மிரண்டனர்.

“இதுதானேம்மா கோவிந்தன்ங்கறவரோட வீடு?”

“ஆமா சார். எங்கப்பாதான் சார். அவர் எந்தத் தப்பும் பண்ண மாட்டார் சார். அவருக்கு என்னாச்சு சார்?”

போலீஸைப் பார்த்த பதட்டத்தில் உளறியவளை அனுதாபத்துடன் பார்த்தவர் “பதட்டப்படாம கேளும்மா. நேத்து நைட் உங்கப்பா கோயம்புத்தூர்ல ஆட்டோல போகும்போது, எதிர்ல வந்த வேன்ல மோதி உங்கப்பா, அந்த ஆட்டோ டிரைவர் ரெண்டு பேருமே, ஸ்பாட்லயே இறந்துட்டாங்கம்மா” என்றார்.

அடுத்து வந்த நொடிகள், நிமிடங்கள் எல்லாம் சாயாவை உறைநிலையில் நிறுத்தி விட்டுக் கடந்தன.

கலாவே அவளது தங்கை ஹரிணியை அழைத்து விவரம் சொன்னாள். இரண்டு முறை மயங்கி விழுந்தவள், விடியும் நேரத்தில் சிறிது சுதாரித்துக் கொண்டாள்.

சாயாலக்ஷ்மியும் ஹரிணியும் போட்டிருத்த தோடுகள், அதைத்தவிர ஜிமிக்கியுடன் இணைந்த ஒரு தோடு, மூன்று பவுனில் ஒரு சங்கலி, அவளது தாயின் தாலி தவிர தங்கம் என அவர்களிடம் எதுவும் கிடையாது.

கோவிந்தனுக்குப் பென்ஷன் கிடையாது. வந்திருக்கக் கூடிய சொற்பத் தொகையும், அவளது தாயின் வைத்தியக் கடனுக்கே ஈடாகி விட, எட்டு மாதமாக சாயா பேங்கில் மாதம் ஆயிரம் ரூபாய் ஆர்டியாக கட்டும் எட்டாயிரம் ரூபாய் மட்டுமே இப்போதைய கை இருப்பு.

இப்போது தந்தையின் உடலை அடையாளம் காட்டிப் பெற்றுக் கொள்ள கோவை வரை செல்வதற்கே பணம் வேண்டுமே?

அந்தச் சங்கிலியை கலாவின் தந்தையிடம் கொடுத்து விற்கச் சொன்னாள்.

காலை ஆறு மணிக்கெல்லாம் இளங்கோவை அழைத்து விவரம் சொல்ல “ஓகே. பாத்துக்க” என்று ஃபோனை வைத்து விட்டார்.

காலை பதினோரு மணிக்கு மேல் அந்த செயின் விற்ற பணத்துடன் சாயா, கலா, அவளது அண்ணன் மூவரும் கோவை சென்றனர்.

அரசு ஆஸ்பத்திரியின் அத்தனை குணங்களோடும் இருந்த இடத்தில், போலீஸிடம் சொல்லிவிட்டு, மூவரும் தேவுடு காத்தனர்.

“டீ சாப்புடுறியா சாயா?”

“ஜூஸ் எதுனா வேணுமா?”

“கவலைப்படாத, நாங்கல்லாம் இருக்கோம்” என்று இதுநாள் வரை அதிகம் பேசாமல் இருந்த கலாவின் அண்ணன், இன்று கூடுதல் அக்கறையும் நெருக்கமுமாக பேசியதே, சாயாவுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயத்தைக் கொடுத்தது.

மதியம் ஒரு மணியளவில் வேலூரில் இருந்து தங்கை ஹரிணியும் வந்து சேர்ந்தாள்.

மணி மாலை ஐந்தைத் தொட்டும் போஸ்ட்மார்ட்டம் செய்த தந்தையின் உடலை எப்போது தருவார்கள் என்று சலிப்புத் தட்டிய நேரம், புயல் போல் அங்கே வந்தான், சசிதரன். கூடவே இரண்டு, மூன்று ஆட்கள்.

“எங்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலையா சாயா? நல்லவேளை இளங்கோ சொன்னார். இதே, இன்னும் ரெண்டு நாள் கழிச்சுன்னா, நான் சிங்கப்பூர் போய் இருப்பேன்”

“உங்க நம்பரே எங்கிட்ட இல்லையே” என்றாள், பலவீனமான குரலில். அவளை ஆழ்ந்து நோக்கியவன், சிறிய தலையசைப்புடன் விட்டுவிட்டான்.

சசிதரனின் பேச்சும் தோற்றமும் ஆளுமையும் கலாவின் அண்ணனை, தானாகவே தள்ளி நிற்க வைத்தது என்பதை விட, சசிதரன் அவனைத் தள்ளி வைத்தான் என்பதே சரி. ‘என்னுடைய இடத்திற்கு நான் வந்து விட்டேன். இனி இங்கு உன் உதவி தேவை இல்லை’ என்பதான உரிமையும், அலட்சியமும் வார்த்தையால் அன்றி, சசிதரனின் உடல்மொழியிலேயே வெளிப்பட்டது.

ஹரிணியிடம் “ஹாய், நான் உங்கக்காவோட ஃபியான்ஸே” என்று அதிர்ச்சியளித்தான்.

எது எப்படியோ, சசிதரன் வந்த பத்தாவது நிமிடத்திலேயே, காட்சிகள் மாறி, துரித கதியில் வேலை நடந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கோவிந்தனின் பூத உடலைப் பெற்றுக் கொண்டு, மகள்களின் சம்மதத்தின் பேரில், அன்றிரவே, கோவையிலேயே மின்தகனம் செய்ய ஏற்பாடு செய்தான் சசிதரன்.

திருச்சி வரை வேனில் செல்லும் செலவைத் தவிர, அங்கு வேறெதுவும் இல்லை என்பதால், சாயாவும் ஹரிணியும் சம்மதித்து விட்டனர். கலாவின் பெற்றோர்களுக்கும், இளங்கோவிற்கும் தகவல் சொன்னார்கள்.

போலீஸ் ஹிட் அண்ட் ரன்” கேஸாக வழக்கைப் பதிந்தனர்.

இரவு எட்டு மணியளவில் இவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டான்.

அரசு மருத்துவ மனைக்குள் நுழைந்தது முதல் இந்தக் கணம் வரை, யாருடன் பேசினாலும், தன் மீது படிந்து,படிந்து மீண்ட அவனது பார்வை இப்போது தன்னையே கூர்வதை உணர்ந்தாள் சாயா.

சசிதரன் “உங்கப்பா எதுக்கு கோயம்புத்தூர் வந்தார்?” என்றான்.