பாலையில் பனித்துளி – 9

அத்தியாயம் – 9

“போன முறை உங்க அப்பா, அம்மா வந்தபோது அவங்களை இந்த வீட்டுக்குள் கூட நான் விடலை‌. ஆனால், உன்னை விட்டேன். ஏன் தெரியுமா?” ரஞ்சனா கேட்க, அவளின் கோபத்தில் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் புனிதா. 

வீட்டிற்கு வெளியே உள்ளே அம்மாவிடம் ஓடத் துடித்த பிள்ளைகளை வளைத்துப் பிடித்துக் கொண்ட பிரதாபன், சத்தம் இல்லாமல் இருக்க சொல்லி வாயில் விரலை வைத்தவன், மீண்டும் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று விட்டான். 

“இரண்டு பேரும் கொஞ்ச நேரம் இங்கேயே விளையாடிட்டு இருங்க. கொஞ்ச நேரத்துக்கு பிறகு அம்மாகிட்ட போகலாம்…” என்று பிள்ளைகளிடம் சொன்னவன், மீண்டும் வாயில் அருகே வந்து நின்று கொண்டான். 

ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அதென்ன பிள்ளையுடன் தனித்து வாழ்ந்து கொண்டிருப்பவளை துரத்த வருவது? என்ன குடும்பம் அது?

அன்றுதான் ரஞ்சனா தனது மாமனார், மாமியாரை எதிர்த்து பேசாமல் மெளனமாக இருந்தாள். இன்றாவது பேசுகிறாளா பார்ப்போம் என்று தெரிந்து கொள்ள காத்திருந்தான். 

முகம் கோபத்தில் சிவக்க பேச ஆரம்பித்தாள் ரஞ்சனா.

“உங்க வீட்டில் நீயாவது நியாயஸ்தியா இருப்பன்னு எனக்கு ஒரு நப்பாசை இருந்தது. ஆனால், நீயும் அந்தச் சுயநல கூட்டத்தில் ஒருத்திதான்னு ப்ரூஃப் பண்ணிட்ட‌. உங்க அப்பா, அம்மா போல பெத்தவங்களுக்குப் பிறந்த உன்கிட்ட நியாயத்தை‌ எதிர்பார்த்தேன் இல்லையா? அது என் தப்புதான்…” என்றாள் ரஞ்சனா.

“நாங்க சுயநலவாதிகளா? அதை நீங்க சொல்றீங்க பார்த்தீங்களா? வேடிக்கைதான். என்னோட அண்ணாவை லவ் பண்ணி, வீட்டை விட்டு வரவைத்து, கல்யாணம் பண்ணி, அதுக்கு பிறகும் அவனை எங்க வீட்டு பக்கமே வரவிடாமல் பிடிச்சு வச்சுக்கிட்ட நீங்க நல்லவங்க. நாங்க சுயநலவாதிகளா? இது உங்களுக்கே அநியாயமா தெரியலை?” என்று நக்கலாக கேட்டாள் புனிதா. 

“என்ன நடந்ததுன்னு தெரிந்தும் என்னை கெட்டவளா ஆக்கணும்னு பேசாதே புனிதா. உங்க வீட்டில் எங்க காதலுக்கு சம்மதிக்காமல் போகவும்,உன் அண்ணாதான் என்னைச் சமாதானம் பண்ணி வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டார். அப்பவும் கூட உங்க வீட்டுக்கு நாங்க வந்தபோது அடிச்சு துரத்தாத குறையாக துரத்தி விட்டது உன்னோட அப்பாவும், அம்மாவும்தான். நீயும் கூட அப்ப உன் புருஷன் கூட சேர்ந்து நின்னு கையை கட்டி வேடிக்கை பார்த்ததாகத்தான் எனக்கு ஞாபகம். 

எங்க வீட்டில் நான் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால், என்னை மொத்தமாக என்னோட அப்பா, அம்மா தலை முழுகிட்டாங்க. அதே போல்தான் உங்க வீட்டிலும் நடந்தது. அதுவும் உன் அண்ணா எத்தனை முறை உங்க அப்பா, அம்மாவை சமாதானம் பண்ண முயற்சி பண்ணினார்னு எனக்குத் தெரியும். என்னை விட்டுட்டு வந்தால்தான் உன் அண்ணனை சேர்த்துப்போம்னு உங்க அம்மா, அப்பா தொடர்ந்து சொன்னதால்தான் அவர் உங்க வீட்டுக்கு வருவதையே நிறுத்தினார். 

ஹரிணி பிறந்த போதும் சொல்லிவிட்டோம், பரத் பிறந்த போதும் சொல்லிவிட்டோம். எதுக்குமே யாரும் வரலை. ஆனால், உன் அண்ணா இறந்தபோது வந்து நின்னீங்க… எதுக்கு? உன் அண்ணா சாவுக்கு நான்தான் காரணம்னு என்னைக் குறைச் சொல்லத்தான் வந்தீங்கன்னு அவர் இந்த வீட்டுக்குள் பிணமா கிடந்த போதே நிரூபிச்சிட்டு போனாங்க உங்க அப்பா, அம்மா. 

அதோட விட்டாங்களா? அதுக்குப் பிறகு இந்த வீடு, அவருக்கு வந்த செட்டில்மெண்ட் பணம் எல்லாத்தையும் கேட்டுட்டு வந்து நின்னாங்க. அவர் நல்லா இருக்கும் போது தலை முழுகிட்டு செத்த பிறகு சொத்துல பங்கு கேட்டு வரும் கேடுகெட்ட உன்னோட அப்பா அம்மாவை விட்டு விலகி இருந்தது எவ்வளவு நல்லதுன்னு எனக்கு அதுக்குப் பிறகுதான் புரிஞ்சது. 

இன்னைக்கு வரைக்கும் அவங்க மகனுக்குப் பிறந்த பிள்ளைகளை பற்றி ஒரு வார்த்தை கூட அக்கறையா கேட்டது இல்லை. நாலு நாளைக்கு முன்னாடி நான் ரொம்ப முடியாமல் ஹாஸ்பிட்டலில் இருக்கேன்னு தெரிந்ததும் எனக்காக வந்திருக்க வேண்டாம். அவங்க பேர பிள்ளைகளுக்காகவாவது வந்திருக்கலாமே? ஏன் வரலை? 

மகனும் உயிரோட இல்லை. நானும் கண் விழிக்காமல் ஹாஸ்பிட்டலில் கிடக்கிறேன். அப்போ அவங்க பேர பசங்க எங்க இருப்பாங்க? அவங்களை யார் பார்த்துப்பாங்கன்னு ஏன் அவங்களுக்குத் தோனலை? இப்ப சாவகாசமா வந்து வீட்டை கேட்கிற உனக்கும் கூடத்தானே உன் அண்ணா பசங்க நினைப்பு வரலை. உங்களை மாதிரி சொத்து பைத்தியம் பிடிச்ச ஆளுங்க இன்னும் ஒரு நிமிஷம் கூட என் வீட்டில் நிற்க கூடாது. கெட் அவுட்…” என்று வாயிலை நோக்கி சுட்டிக் காட்டினாள் ரஞ்சனா. 

அதீத ஆத்திரத்தில் அவளின் உடலுடன், குரலும் நடுங்கியது. ஆனாலும், நாத்தனாரின் முன் திடமாக காட்டிக் கொண்டு நின்றிருந்தாள் ரஞ்சனா.

முசுமுசுவென்று மூச்சு விட்டு அவளைப் பார்த்த புனிதா, “ரொம்ப திமிர்தான் உங்களுக்குன்னு அம்மா சொன்ன போது கூட நான் நம்பலை. ஆனால், இப்ப நம்புறேன். உங்க பசங்களை நாங்க ஏன் பார்க்கணும்? பெத்து வளர்த்து ஆளாக்கி ஒரு கம்பெனியில் பெரிய வேலை பார்க்கிற அளவுக்கு அண்ணாவை வளர்த்து விட்ட எங்க அப்பா அம்மாவை நிர்கதியா நிக்க வச்சதே நீங்க தானே? 

எங்க குடும்பத்துக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு அவன். அவனை மொத்தமாக இழந்து எங்க அப்பா, அம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா? அவங்க பார்த்துட்டு இருந்த தொழில் நஷ்டமாகி, வீடு, தொழில் எல்லாம் கடன்காரங்களுக்கு தூக்கி கொடுத்துட்டு ஒன்னும் இல்லாமல் நிக்கிறாங்க. அதனால்தான் அவங்க மகனுக்கு சொந்தமான வீட்டை கேட்குறாங்க. அதில் என்ன தவறு இருக்கு?

“இத்தனை வருஷம் என் அண்ணவோட பணத்தை எல்லாம் வச்சு நீங்கதானே சுகமா வாழ்ந்திருக்கீங்க. அவனை வளர்த்து ஆளாக்கி எந்தப் பலனும் இதுவரை அனுபவிக்காத அவனைப் பெத்தவங்களுக்கு இந்த வீட்டை கொடுத்தால் என்ன? அவனையும் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டீங்க. இப்ப அவன் சம்பாதிச்சதும் பறிச்சிட்டீங்க. இவ்வளவு சுயநலவாதியான நீங்க எங்களைச் சுயநலவாதின்னு சொல்வதுதான் காமெடியா இருக்கு. 

இதில் என்னை வீட்டை விட்டு போக சொல்றீங்க? நான் ஏன் போகணும்? இது என்னோட அண்ணா வீடு. இங்கே நான் இருக்க எனக்கு முழு உரிமையும் இருக்கு. என்னை வீட்டை விட்டு போக சொல்ல உங்களுக்கு எந்த ரைட்ஸும் கிடையாது…” என்று அதிகாரமாக உரைத்தாள். 

“எனக்கு ரைட்ஸ் இல்லையா?” என்று அவளை எள்ளலாக பார்த்த ரஞ்சனா, “புனிதா மேடம், நீங்க நினைக்கிற மாதிரி இந்த வீடு ஒன்னும் உங்க அண்ணா வீடு இல்லை. முழுக்க முழுக்க என் வீடு. இந்த வீட்டு பத்திரம் என் பெயரில் இருக்கு…” என்றாள். 

“என்ன?” என்று அதிர்ந்தாள் புனிதா. 

இது அவளுக்குப் புதிய செய்தி. 

அந்த வீட்டை அவளின் அண்ணா மனோகரன் பெயரில் இருப்பதாகத்தான் இத்தனை நாள் நினைத்திருந்தாள். அவளின் பெற்றவர்களுக்கும் அப்படி நினைத்துதான் மகன் சொத்து தங்களுக்கு. மருமகளை விரட்டி விட்டு வீட்டை அமுக்கி கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தனர். 

ஆனால், வீடு ரஞ்சனாவின் பெயரில் இருப்பதை அறியாமல் போனோமே என்று புனிதா முகம் மாறிப் போனாள். 

“என்ன புனிதா ஷாக் ஆகிட்ட. நம்ப முடியலையோ? இந்த வீடு ஒன்னும் முழுக்க முழுக்க உன் அண்ணா உழைப்பால் வந்தது இல்லை. அவர் பாதி லோன் போட்டால், நானும் பாதி லோன் போட்டுருக்கேன். உங்க அண்ணா என் மேல் இருந்த லவ்வில் என் பெயரில்தான் வீட்டை ரிஜிஸ்டர் பண்ணினார். என்னவோ அவர் செட்டில்மென்ட் பணம் வந்தது சொன்னியே… அதை அப்படியே அவரோட பிள்ளைகள் பெயரில் போட்டுருக்கேன். அது அவங்க எதிர்காலத்துக்கு. வீட்டுக்கு லோன் இன்னும் நான் கட்டிட்டு இருக்கேன். இதெல்லாம் தெரியாமல் முட்டாள்தனமா வீட்டை கேட்டு நீயும், உன் பெத்தவங்களும் படை எடுத்துட்டு வர்றீங்க…” என்றாள் ரஞ்சனா. 

“ஆங்… அப்போ என் அண்ணா பங்கும் இந்த வீட்டில் இருக்குத்தானே…” என்று உரிமை போர்க்கொடி தூக்கினாள் புனிதா. 

“இருந்தால்… அதை ஏன் உங்களுக்கு நான் விட்டுக் கொடுக்கணும்?” என்று ரஞ்சனா கேட்க, அவளை ஆத்திரத்துடன் பார்த்தாள் புனிதா. 

“அப்போ கஷ்டப்படும் எங்க அப்பா, அம்மாவுக்கு என்ன பதில்?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள். 

“அதை ஏன் என்கிட்ட வந்து கேட்குற? அவங்களை பொறுத்தவரை நான் யாரோ ஒருத்தி தானே? யாரோ ஒருத்தருக்காக நான் எதுக்குப் பார்க்கணும்? நீ அவங்க மகள்தானே… நீ பார்…” என்றாள் அலட்சியமாக. 

“எவ்வளவு திமிர் உங்களுக்கு?” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆவேசப்பட்டாள் புனிதா. 

“நீயோ, உங்க அப்பா, அம்மாவோ என்னை உட்கார வச்சு சோறு போட்டு எனக்கு ஒன்னும் திமிர் வரலை புனிதா. நானே சம்பாதித்து சொந்த காசில் சாப்பிடுறேன். உன்னை மாதிரி அண்ணன் எப்ப சாவான். அவன் பொண்டாட்டியை விரட்டி விட்டு வீட்டை அமுக்கிக்கணும்னு நினைக்கிற உன்னை விட எனக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே திமிர் இருக்கலாம். தப்பில்லை…” என்றாள் ரஞ்சனா. 

அவளின் பதிலில் மூக்குடைபட்டது போல அவமானமாக உணர்ந்தாள் புனிதா. அதற்கு மேல் ரஞ்சனாவிடம் என்ன பேசினாலும் தன் மூக்குதான் உடைந்து போகும் என்று உணர்ந்து கொண்டவள், அடுத்த நொடி அங்கிருந்து வெளியேறினாள். 

வெளியே அவன் வீட்டு வாயிலில் சாய்ந்து நின்றிருந்த பிரதாபனை கண்டதும் அவள் நடை நின்றது. 

எதிர்வீட்டுகாரன் போலீஸை அழைப்பதாக சொல்லி மிரட்டியது பற்றி அவளின் தாயார் சொன்னது நினைவில் வந்தது. 

அவளின் பார்வை அவனின் மீது கூர்மையுடன் படிய, அதை விட அழுத்தமாக அவள் மீது பதிந்தது பிரதாபனின் பார்வை. அவனின் பார்வை அவளை குற்றம் சாட்டுவது போல் இருக்க, சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டாலும், அவன் வீட்டிலிருந்து வரும் குழந்தைகளின் சத்தம் அவள் நெற்றியை சுருங்க வைத்தது.

ஆனால், அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அங்கிருந்து சென்றாள். சென்றவளையே தன் வீட்டு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் பிரதாபன். 

புனிதா தன் வீட்டில் இருந்து வெளியேறியதுமே பிள்ளைகள் நினைவு வர, அவர்களை அழைக்க வெளியே வந்தாள் ரஞ்சனா. 

வெளியே நின்று கொண்டிருந்த பிரதாபனை கண்டதும் ஒரு நொடி திடுக்கிட்டுத்தான் போனாள். 

இவர் எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறார்? என்று சந்தேகமாக அவனைப் பார்த்தாள். 

தான் வெகுநேரமாக இங்கேதான் நிற்பதாக அவளுக்குச் சுட்டிக்காட்டுவது போல்தான் அவன் அடுத்து பேசியது இருந்தது. 

“வெரிகுட்! உங்களுக்கு இவ்வளவு பேசத் தெரியும்னு இன்னைக்குத்தான் பார்க்கிறேன். நல்லா பேசுறீங்க…” என்றான் மெச்சுதலாய். 

“சார்…?” என்று அழைத்தவள் மெச்சுகின்றானா? கிண்டல் செய்கின்றானா? என்பது போல் ரஞ்சனா பார்க்க, 

“இன்னைக்கு பேசிய மாதிரியே அன்னைக்கு உங்க மாமனார், மாமியார் வந்த போதும் பேசியிருக்கலாம். அதை விட்டு அமைதியா இருந்து உங்களுக்குள்ளயே அழுத்தி வச்சு, உடம்புக்கு முடியாதளவு இழுத்து விட்டிருக்க தேவையில்லை…” என்று வார்த்தையில் கொட்டும் வைத்தான். 

அது புரிந்தவள் போல் தலையை அசைத்தவள், “அன்னைக்கும் எனக்குப் பேச தெரியாமல் இல்லை சார். பேசக்கூடாதுன்னு தான் எதிர்த்து பேசாமல் நின்னேன். இன்னைக்கு என் பிள்ளைங்க பக்கத்தில் இல்லை. இருந்திருந்தால் நானும் இவ்வளவு பேசிருப்பனா தெரியாது. அவங்கதான் அன்னைக்கு என் பிள்ளைங்க இரண்டும் கதறுவதை கூட கண்டுக்காமல் கத்தினாங்கனா…. நானும் இரக்கம் இல்லாமல் திரும்ப கத்த முடியாது. 

அந்த நேரம் என் பிள்ளைங்கதான் எனக்கு முக்கியமாக தெரிந்தாங்க. அதான் அன்னைக்கு அமைதியா இருந்தேன். நானும் குரலை உயர்த்தியிருந்தால் என் மாமனார், மாமியார் குரல் இன்னும் உயருமே தவிர குறையாது. குலைக்கிறதை கண்டுக்காமல் விட்டால் தானா அடங்கிடும்…” என்றவளைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான் பிரதாபன்.

அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.

வயதில் மூத்தவர்களை ஜீவராசியுடன் ஒப்பிட்டதால் வந்த பார்வை அது என்று புரிந்தது. அந்தப் பார்வைக்காக அவள் கவலைப்படவில்லை. 

தான் மரியாதை கொடுக்குமளவிற்கு அவர்களின் செயலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதைக்கும் மதிப்பில்லை. அதற்கு அவர்கள் தகுதியானவர்களும் இல்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள். 

“பிள்ளைகளை வரச் சொல்றீங்களா சார்?” என்று பேச்சை மாறினாள் ரஞ்சனா. 

“பாப்… ம்ம்… ஹரிணி, பரத் ஓடிவாங்க அம்மா கூப்பிடுறாங்க…” என்று பிரதாபன் குரல் கொடுக்க, இருவரும் குடுகுடுவென அங்கே ஓடி வந்தனர். 

“அம்மா…” என்று ஓடி வந்த பரத்தை ரஞ்சனா தூக்கி கொள்ள, ஹரிணி அம்மாவின் காலை கட்டிக் கொண்டாள்.

“அம்மா, இந்த அங்கிளுக்கு என் பேரே சொல்ல தெரியலை. ஒவ்வொரு முறையும்… பாப்-ன்னு ஆரம்பிச்சுட்டு அப்புறம் ஹரிணின்னு சொல்றார்…” என்று பிரதாபனை மாட்டிவிட்ட பாவனையில் சொல்லிவிட்டு கிளுக்கி சிரித்தாள் ஹரிணி. 

ரஞ்சனா புரியாமல் பிரதாபனை பார்க்க, அவன் உதட்டிலோ புன்னகை பூத்தது. 

“ஹேய் வாலு. உன்னை எனக்கு பாப்பான்னு கூப்பிடத்தான் சட்டுன்னு வருது. நீதான் அப்படிக் கூப்பிட கூடாதுன்னு சொல்லிட்டியே. அதான் அப்படித் தடுமாறுது. இதைப் பெரிய விஷயமா உங்க அம்மாகிட்ட கோல் மூட்டுறீயா?” என்று கண்களைப் பயமுறுத்துவது போல் உருட்டினான். 

கேக்கே பெக்கே என்று ஹரிணி சிரிக்க, பிரதாபனும் அதரங்களை பிரிக்காமல் சிரித்தான். அவர்களின் பேச்சு புரிந்தது போல் பரத்தும் சிரித்தான். 

அதற்கு மாறாக ரஞ்சனாவின் முகம் இறுகியது. 

“ஹரிமா, வா உள்ளே போகலாம்…” என்று மகளை கடின குரலில் அழைத்தாள். 

பிரதாபனின் சிரிப்பு அப்படியே உறைய, ரஞ்சனாவை பார்த்தான். அவள் பார்வையில் இருந்த கடினம் அவனின் நெற்றியை சுருங்க வைத்தது. 

அதை எல்லாம் நின்று கவனிக்கும் நிலையில் ரஞ்சனா இல்லை. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

மறுநாளும் வேலை முடிந்து வந்தவுடன் அவனை அறியாமலேயே எதிர் வீட்டை நோக்கி பிரதாபனின் பார்வை சென்றது. 

முதல் நாள் பள்ளி செல்லும் முன் அவனிடம் சொல்லிக் கொள்ள வந்த ஹரிணி அன்று காலையில் வரவில்லை. 

வீட்டிற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதும் செவிகளைத் தீட்டிக் கொண்டு ஹரிணி தன்னிடம் சொல்லிக் கொள்ள வரும் நேரத்திற்கு காத்திருந்து ஏமாந்துதான் போயிருந்தான்.

வேலைக்கு கிளம்பி ரஞ்சனாவின் வீட்டை தாண்டி சென்ற போது, பரத்தின் சத்தம் கூட வெளியே கேட்கவில்லை. 

முதல் நாள் மாலையே பரத்தின் காய்ச்சல் சரியாகியிருந்தாலும் ‘இப்போது எப்படி இருக்கின்றானோ பிள்ளை?: என்று அறிய அவன் மனம் தவித்தது.

மாலை வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்து தவித்த மனத்தை அடக்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். 

மாலை வேலை முடிந்து ரஞ்சனாவிற்கு முன் வீட்டிற்கு வந்துவிட்டவன், அவளின் வீட்டின் அருகே நெருங்கியதும் பிள்ளைகளை தேடி அவன் மனம் அலைபாய்ந்தது. 

வீட்டின் கதவை தட்டலாமா என்று ஒரு நொடி யோசித்தவன், பின் அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு தனது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றவன், நேராக குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இலகு உடைக்கு மாறி வெளியே வந்தான். 

குளிர்சாதன பெட்டியிலிருந்த பாலை எடுத்து சுட வைத்து, காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து, சோஃபாவில் அமர்ந்து நிதானமாகப் பருகினான்.

இரவு சமையலுக்கு மாவும், காலையில் வைத்த சாம்பாரும் இருந்ததால் உணவு தயாரிக்கும் வேலை எதுவும் இருக்கவில்லை. சாப்பிடும் நேரத்தில் தோசை மட்டும் ஊற்றிக் கொண்டால் போதும். 

அடுத்து செய்ய ஒரு வேலையும் இல்லாமல் அவன் எண்ணம் எதிர் வீட்டு பிள்ளைகளைத் தேடி‌ ஓடியது. 

முதல் நாள் அவனிடம் நேரடியாக காட்டாத ரஞ்சனாவின் கோபம் ஏனென்று ஓரளவு ஊகித்தே இருந்திருந்தான்.

ஆனாலும், அதை அவனால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. 

அவன் அப்படி என்ன செய்துவிடுவான் என்று அவ்வளவு கோபம்? என்று ஆதங்கப்படாமல் இருக்க முடியவில்லை. 

இப்போது கூட அந்தப் பிள்ளைகளைக் காண உள்ளம் துடிக்கிறது. ஆனாலும், வீணாக எந்தச் சஞ்சலமும் நேர வேண்டாம் என்றுதான் அமைதியாக இருக்கின்றான். அது புரியாமல்… என்று ரஞ்சனாவின் மீது கோபமும் வந்தது. 

இப்படியே தனியாக அமர்ந்து கொண்டு அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது தனது மனநிலைக்கு நல்லதல்ல‌ என்று நினைத்தவன் சட்டென்று முடிவு செய்து வெளியே கிளம்பிவிட்டான். 

அந்தக் குடியிருப்பு வளாகத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு சின்ன பூங்கா இருந்தது. அதனை நோக்கி நடந்தான். பூங்கா வாயிலை ஒட்டியேதான் அந்த ஏரியாவிற்கு உரிய பேருந்து நிறுத்தம் இருந்தது. 

பிரதாபன் பூங்காவை நெருங்கிய போது, வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கி வந்தாள் ரஞ்சனா. 

வரும் வழியில் எங்கோ கடைக்கு சென்று விட்டு வந்ததற்கு அடையாளமாக கையில் பொருட்கள் அடங்கிய ஒரு பை இருந்தது.

எதிரே வந்தவளை கவனித்தாலும் கண்டுகொள்ளாமல்‌ பூங்காவிற்குள் சென்றுவிட்டான் பிரதாபன். 

மாலை நேர நடைபயிற்சிக்கு செல்பவர்கள் பூங்காவிற்குள் பரவலாக நடந்து கொண்டிருந்தனர்.

சிலர் தங்கள் பிள்ளைகளை விளையாட விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர். 

அமர்ந்து எதையும் வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இல்லாத பிரதாபன் நடைபயிற்சியில் இறங்கினான். 

ஓட்டமாகவும் இல்லாமல் நிதானமாகவும் இல்லாமல் சீரான வேகத்தில் ஒரு மணிநேரம் நடந்து முடித்த போது உடலோடு மனமும் புத்துணர்ச்சியுடன் இருந்தது. 

அதே புத்துணர்ச்சியுடன் வீட்டிற்கு கிளம்பினான். தனது தளத்திற்கு வந்து மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தவன் கண்ணில் படிக்கட்டில் அமர்ந்திருந்த ஹரிணி விழ, அவன் முகம் சட்டென்று மலர்ந்து தான் போனது.

அதே நேரம் இந்த நேரத்தில் இவள் என்ன இங்கே வந்து அமர்ந்திருக்கிறாள் என்ற கேள்வியும் எழ, அவளை நெருங்கினான்.

முதலில் அவனைப் பார்த்ததும் சிரித்த ஹரிணி பின் ஏதோ தப்பு செய்துவிட்ட பாவனையில் திருதிருவென முழித்தாள்‌. 

“பாப்… ம்ம்… ஹரிணிமா இங்கே என்ன பண்ற?” பிள்ளையின் பாவனையைக் கவனித்துக் கொண்டேதான் கேள்வியைத் தொடுத்தான்.

“அது… அது…” என்று ஆரம்பித்தவள் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள். 

“என்னடா? சொல்லு…” அவளின் தயக்கத்தை கவனியாதது போல் மீண்டும் கேட்டான்.

“ம்கூம்…” என்று மறுப்பாக தலையை அசைத்தவள், “அம்மா உங்ககிட்ட பேச கூடாதுன்னு சொல்லியிருக்காங்க…” என்ற‌ ஹரிணி படியிலிருந்து எழுந்து குடுகுடுவென ஓடி தன் வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.

அவள் சொல்லி சென்ற வார்த்தைகளின் வீரியத்தை தாங்க முடியாமல் முகம் கன்ற அதே இடத்தில் நின்றுபோன பிரதாபனை அவள் பொருட்படுத்தவே இல்லை.