பாலையில் பனித்துளி – 8
அத்தியாயம் – 8
“இவ்வளவு நடந்திருக்கு. எங்களுக்கு சொல்லணும்னு தோனலையா ரஞ்சி?” ஆதங்கமாக கேட்டாள் அவளுடன் பணிபுரியும் உஷா.
“அதானே… நாம எல்லாம் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம். ஒரு இக்கட்டுனா எங்களுக்கு சொல்வது இல்லையா? இல்லை, நாங்க உதவ மாட்டோம்னு நினைச்சிங்களா?” எனக் கேட்டாள் சுவாதி.
இரண்டு மூன்று நாட்களாக ஏன் வேலைக்கு வரவில்லை என்று விசாரித்தவர்களிடம் ரஞ்சனா தான் மருத்துவமனையில் இருந்து வந்ததை சொன்னதிலிருந்து உஷாவும், சுவாதியும் அங்கலாய்த்து தள்ளி விட்டனர்.
அவள் என்னவோ வேண்டுமென்றே மறைத்தது போல் அவர்கள் பேசியதை கேட்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவளே சொல்ல கூடிய நிலையிலா இருந்தாள்? அவள் முடியாமல் மருத்துவமனையில் கிடந்ததே கண் திறந்த பிறகுதான் அறிந்து கொண்டாள். அது புரியாமல் பேசுகிறார்களே என்றுதான் இருந்தது.
அவர்களுக்கு அவள் எந்த விளக்கமும் சொல்ல முற்படவில்லை. நடந்து முடிந்த விஷயத்திற்கு விளக்கம் சொல்லி என்ன ஆகப் போகின்றது? என்றே அமைதியாக இருந்துவிட்டாள்.
“ஆனால், பாரேன்… நம்ம மேனேஜர் ரஞ்சனா வீட்டுக்கு எதிர் வீடுன்னு கூட இத்தனை நாள் இவள் நம்மகிட்ட மூச்சு விடலை. இவ்வளவு விஷயம் நடந்த பிறகு சொல்றாங்க மேடம். இருந்தாலும் நீ இவ்வளவு அமுக்கினியா இருக்க கூடாது ரஞ்சி…” என்று சுவாதியும் உஷாவும் வேறு விஷயத்திற்கு தாவி விட்டனர்.
இதற்கு என்ன சொல்வது? அவள் வேண்டுமென்றே மறைக்கவில்லை. சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை என்பதனால் சொல்லவில்லை.
இதற்கு என்ன பதில் சொன்னாலும் இடக்கான கேள்வி வரும் என்று தோன்றியதால், அதற்கு மேல் ரஞ்சனா அந்தப் பேச்சை வளர்க்கவில்லை.
“நம்ம சார்க்கு நிஜமாகவே கல்யாணம் ஆகலையாக்கா?” அவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த ஜனனி ஆர்வமாக கேட்க,
“எல்லாருக்கும் ஒரு கவலைனா… இவள் கவலையைப் பாரேன். இப்ப அது ரொம்ப முக்கியமா?” என்று உஷா கேட்க,
“இல்லையா பின்ன? இவ்வளவு வயசு வரை கல்யாணம் ஆகாம ஒருத்தரை நேரா இப்பத்தான் பார்க்கிறேன்…” ஏதோ வினோதத்தை கண்டவள் போல் சொன்னவளை வினோதமாகத்தான் பார்த்தனர் அவர்கள்.
“சொல்லுங்கக்கா, ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று அவர்களின் பார்வையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கேட்டாள் ஜனனி.
“கல்யாணம் ஆகிருச்சா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால், அவர் இப்ப இருக்கும் வீட்டில் தனியாகத்தான் தங்கியிருக்கார். சொந்தம் ஃப்ரண்ட்னு கூட யாரும் வந்ததில்லை…” என்று தனக்குத் தெரிந்த தகவலை மட்டும் தெரிவித்தாள் ரஞ்சனா.
“அச்சோ! பாவம்ல க்கா?” என்று உச்சு கொட்டினாள் ஜனனி.
“அம்மாடி, அவருக்கு உன் அப்பா வயசு இருக்கும். அடக்கி வாசி. நீ பாவப்படுவதை பார்த்தால் பக்குன்னு இருக்கு…” என்று கிண்டலுடன் சொன்னாள் உஷா.
“ச்சே, போங்கக்கா. அவருக்கு என் அப்பா வயசு எல்லாம் இருக்காது. அண்ணா வயசு… ம்ம்… சித்தப்பா வயசு வேணுமானால் இருக்கும்…”
அண்ணா என்றதும் உஷாவும், சுவாதியும் அவளை கிண்டலாக பார்க்க, உடனே சித்தப்பா என்று சொல்லி அசடு வழிய சிரித்தாள் ஜனனி.
“சித்…தப்பா… நல்லா ஞாபகம் வச்சுக்கோ கண்ணு…” என்று உஷா நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல,
“ஆமா, ஆமா… அவர் அங்கிள் ஹீரோமா…” என்று சுவாதியும் கிண்டலடிக்க,
“அக்கா, ஆனாலும் நீங்க ரொம்பத்தான் ஓட்டுறீங்க போங்க…” என்று சிணுங்கி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள் ஜனனி.
அவர்கள் பேச்சு காதில் விழுந்தாலும் கலந்து கொள்ளாமல் ஏற்கெனவே தன் வேலையில் ஆழ்ந்திருந்தாள் ரஞ்சனா.
அவர்கள் பேச்சில் சுவாரஸ்யமாக ஈடுபட்டு கொண்டிருந்த போது ஏதோ வேலையாக தன் அறையிலிருந்து வெளியே வந்த பிரதாபனை அவர்கள் கவனிக்கவே இல்லை.
தன்னை வைத்து ஓடிய பேச்சை கேட்டு விட்டு அவன் சிறு தோள் குலுக்கலுடன் உள்ளே சென்றதையும் கவனியாமல் போனார்கள்.
அவனுக்கு, தான் பேசு பொருளாக இருப்பது ஒன்றும் புதிதல்ல.
அவன் தனியாக இருப்பதை பற்றி அவனிடமே கேள்வி எழுப்பியுள்ளனர். அவனின் திருமணம் பற்றியும் கேட்டுள்ளனர்.
அவர்கள் யாருக்கும் அவன் பதில் சொல்ல முனைந்ததே இல்லை.
கேள்வி, பதில் எப்போதும் ஒன்றுடன் முற்றுப் பெறுவதில்லை.
ஒன்றை தொட்டு ஒன்று வந்து கொண்டே இருக்கும். முதலாவதுக்கு பதில் சொன்னால் தானே அதிலிருந்து இன்னொரு கேள்வி பிறக்கும் என்று முதல் கேள்வியையே கிடப்பில் போட்டு விடுவான்.
இந்த விஷயத்தில் மட்டும் பிரதாபனுக்கும், ரஞ்சனாவிற்கும் ஒற்றுமை இருந்தது. அனாவசிய கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்ல விரும்புவதில்லை.
அன்று மதியம் வழக்கம் போல் வங்கியின் வெளியே வந்து லதாவிற்கு அழைத்து மகனை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.
அப்போது உணவகம் செல்ல வெளியே வந்த பிரதாபன், அவள் பரத்திடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நின்றான்.
ரஞ்சனா திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்ததால் முதுகிற்கு பின் நின்றவனை அவள் கவனிக்கவில்லை.
“என்னடா தங்கம், ஏன் அழுதுட்டே இருக்க? அம்மா சீக்கிரம் வந்துடுவேன். அழாமல் சாப்பிட்டு சமத்தா இருக்கணும்…” என்று மகனிடம் சொல்ல,
அந்தப் பக்கம் குழந்தை என்ன சொன்னானோ, “என்னடாமா சொல்ற? சுடுதா? ஏன்? நீ ஆயாகிட்ட கொடு, அம்மா கேட்கிறேன்…” என்றதும் பிள்ளை சிணுங்கிக் கொண்டே லதாவிடம் கொடுத்தான்.
“லதாமா, குட்டி என்ன உடம்பு சுடுதுன்னு சொல்றான். சும்மா சொல்றானா? நிஜமாவா?” என்று பரிதவிப்புடன் கேட்டாள்.
“லேசா கதங்கதங்குன்னு இருக்கு ரஞ்சனாமா. ரொம்ப எல்லாம் சூடு இல்லை. நீ பயந்துக்குவன்னுதான் சொல்லாமல் இருந்தேன். சாப்பாட்டை கொடுத்துட்டு காய்ச்சல் டானிக் கொடுத்து பார்க்கிறேன்மா. நீ ஒன்னும் பயந்துக்காதே…” என்று ஆறுதலாக சொல்ல,
“பார்த்துக்கோங்கமா. நானே இப்பத்தான் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்திருக்கேன். அவனுக்கும்னா தாங்க மாட்டேன்…” என்று அவள் கரகரத்த குரலில் சொல்ல,
“பரத்துக்கு என்னாச்சு?” என்று திடீரென அவள் முதுகிற்கு பின் இருந்து குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
பிரதாபனை தன் பின்னால் அவள் எதிர்பார்க்கவே இல்லை.
சட்டென்று பதில் சொல்லாமல் அவள் அப்படியே திகைத்து நின்று விட, “குட்டிப் பையனுக்கு என்னாச்சுன்னு கேட்டேன்…” அழுத்தமாய் மீண்டும் வந்து விழுந்தது கேள்வி.
ரஞ்சனாவின் நெற்றி சுருங்கியது. இதென்ன இவ்வளவு உரிமையாய்?
அவள் யோசிக்க நேரம் கொடுக்காமல் மீண்டும் அவன் கேள்வி வந்தது.
“என்னங்க ரஞ்சனா, கேட்டேனே? இல்லனா கொடுங்க, நானே கேர்டேக்கர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிறேன்…” என்று அவள் கைப்பேசியை கேட்டு கையை நீட்டினான்.
“சார்…” என்று மறுப்பு சொல்ல வந்தவளின் தடை எல்லாம் அங்கே எடுபடவில்லை. அதற்குள் எப்போது அவன் கைக்கு தன் கைப்பேசி சென்றது என்று புரியாமல் அவள் திகைக்க, அவன் லதாவிடம் பரத் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.
லதா அவனிடம் விவரம் சொல்லவும், “கவனமா பார்த்துக்கோங்க. ஃபீவர் அதிகமாகுற மாதிரி இருந்தால் யோசிக்க வேண்டாம். உடனே போன் பண்ணுங்க. என் நம்பர் உங்ககிட்ட இருக்குல?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க, ‘என்ன நடக்கிறது எங்கே?’ என்பதாகத்தான் புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.
“நீங்க எதுக்கும் ரெடியா இருங்க ரஞ்சனா. கேர்டேக்கர்கிட்ட இருந்து திரும்ப போன் வந்தால் சட்டுன்னு பர்மிஷன் போட்டு கிளம்பிடுங்க…” என்று சொல்லியபடி அவளின் அலைபேசியை நீட்டினான்.
“என் மகன் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் சார்…” என்று அழுத்தமாக அவள் மறுமொழி கூற,
அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டானா இல்லையா என்றே புரியவில்லை. தீர்க்கமான பார்வையை அவள் மீது வீசிவிட்டு சாலையில் இறங்கி நடந்து சென்றான்.
அவனின் நடவடிக்கையும், பார்வையும் அவளுக்கு சரியாகப்படவில்லை.
தங்களுக்கு உதவி செய்தவன்தான் என்றாலும் அவனின் செயல் அவளுக்கு அதிகப்பிரசங்கித்தனமாகவே இருந்தது.
அவனின் செயல் மனத்திற்கு உவப்பானதாகப்படவில்லை.
அவளின் மனத்தின் உறுத்தலை அதிகரிப்பது போல் அன்று மாலை வேலை முடிந்து அவள் பேருந்திற்காக காத்திருந்த போது அவளின் அருகில் வந்து நின்றது பிரதாபனின் கார்.
நெற்றியை சுருக்கி பார்த்து அவள் விலகி நிற்க, காரின் ஜன்னல் கண்ணாடியைத் திறந்து, தலையை நீட்டிப் பார்த்த பிரதாபன், “ரஞ்சனா, வாங்க… உங்களை ட்ராப் பண்றேன்…” என்றழைத்தான்.
“வேண்டாம் சார். பஸ் இப்ப வந்திடும். நீங்க கிளம்புங்க…” நாகரீகமாக மறுத்தாள்.
“பஸ் வந்தாலும் நீங்க வீட்டுக்கு போக லேட் ஆகும் தானே? பரத்துக்கு வேற உடம்பு சரியில்லையே. காரில் வந்தீங்கனா சீக்கிரம் போயிடலாம்…” என்றான்.
என்ன இது தலைவலி? என்றுதான் அவளுக்குத் தோன்றியதே தவிர, அவனின் உதவியை ஏற்கும் மனம் வரவில்லை.
“பத்து நிமிஷம் லேட் ஆகுறதால் ஒன்னும் ஆகிடாது சார். நீங்க கிளம்புங்க, ப்ளீஸ்…” என்றவள் அவனைப் பார்க்காமல் பேருந்து வரும் பாதையைப் பார்த்து திரும்பிக் கொண்டாள்.
ஒரு நொடி அவள் முகத்தை பார்த்தவன், அதன் பிறகு எதுவும் கேட்காமல் வண்டியை கிளப்பி சென்றுவிட்டான்.
“உப்” என்று நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டவள், நல்லவேளை நேற்றே அவன் மருத்துவமனையில் தனக்கு செலவழித்த பணத்தை கொடுத்துவிட்டேன் என்று நிம்மதி பட்டுக் கொண்டாள்.
அவள் பணத்தை திருப்பிக் கொடுத்த போது கூட அவன் போலியாக கூட எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால், இன்று அவன் நடந்து கொள்வது ஏனோ மனத்தை நிரடிக் கொண்டே இருந்தது.
அதே மனநிலையில் அவள் பேருந்து பிடித்து வீடு சேர்ந்த போது, அவளின் வீடு வெகு அமைதியாக இருந்தது.
“பிள்ளைங்க எங்கமா? வீடே அமைதியா இருக்கு. ரூமில் இருக்காங்களா?” தனக்கு கதவை திறந்து விட்ட லதாவிடம் விசாரித்தாள்.
“அவங்க எங்கே இங்கே இருக்காங்க…” லதா சொல்ல,
“ஏன் எங்கே போனாங்க?” அதிர்வுடன் கேட்டாள் அன்னை.
“மேனேஜர் சார் வீட்டில் விளையாடுறாங்கமா…” என்று எதிர் வீட்டை சுட்டிக் காட்ட, அவளுக்கு சுருக்கென்று இருந்தது.
இதென்ன புது பழக்கம்? என்ற கோபம் வர, “அங்கே ஏன்மா விட்டீங்க?” என்று கேட்டாள்.
“நான் எங்கேமா விட்டேன்? அந்த சார் நம்ம வீட்டு கதவை தட்டி பரத் பையன் இப்ப எப்படி இருக்கான்னு விசாரிச்சார். நான் பதில் சொல்லிட்டு இருக்கும் போதே அவரைத் தூக்க சொல்லி அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லி கை காட்டினான் பையன். வீட்டு பாடம் எழுதிட்டு இருந்த ஹரிணி பொண்ணும் அவர் பின்னாடியே ஓடிருச்சு. நான் போய் கூப்பிட்டு பார்த்தால் இரண்டும் வரவே இல்லை…” என்றார்.
“வரலைன்னு அப்படியே விட முடியுமா லதாமா? இப்ப போய் கூட்டிட்டு வாங்க…” என்றாள் கோபமாக.
அவரும் உடனே எதிர் வீட்டு கதவை தட்ட, வீட்டிற்குள் செல்லாமல் தன் வீட்டு வாசலில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.
கதவை திறந்த பிரதாபன் தன் வீட்டு வாசலில் நின்றிருந்த லதாவையும், எதிர் வீட்டில் நின்றிருந்த ரஞ்சனாவையும் புருவத் தூக்கலுடன் பார்த்தான்.
“பிள்ளைகளை கூப்பிடுங்க சார். அவங்க அம்மா கூப்பிடுறாங்க…” லதா சொல்ல,
“ஸ்நாக்ஸ் சாப்பிட்டிட்டு இருக்காங்க. சாப்பிட்டதும் அனுப்பி வைக்கிறேன்…” என்று ரஞ்சனாவின் முகம் பார்த்தே சொன்னவன், மீண்டும் கதவை அடைக்க, மலைத்து நின்றாள் ரஞ்சனா.
அவன் செய்யும் எதுவும் பிடிக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
தானே படபடவென்று கதவை தட்டி, பிள்ளைகளை அழைத்து சென்று விடுவோமா? என்று கூட அவள் சிந்தனை சென்றது.
ஆனால், அதற்கும் தயக்கமாக இருந்தது.
தான் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் பிள்ளைகளை பார்த்துக் கொண்டதால் வந்த பிரியத்தில் அவன் இப்போதும் கூட இப்படி நடந்து கொண்டிருக்கலாம். அதை தானே பெரிய விஷயம் போல் பாவித்து பிரச்சினை உண்டாக்கியதாக இருக்க வேண்டாம் என்று நினைத்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஆனால், பிள்ளைகளை அங்கு இனி செல்லக் கூடாது என்று சொல்ல வேண்டும் என்ற முடிவை மட்டும் தனக்குகள் உறுதியாக எடுத்துக் கொண்டாள்.
அதைப் பற்றி யோசித்துக் கொண்டே அறைக்குள் சென்று உடையை மாற்றி, அவள் வெளியே வந்தபோது வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
“பிள்ளைங்க வந்துட்டாங்க போல லதாமா. கதவை திறங்க…” என ரஞ்சனா சொன்னதும் லதா சென்று கதவை திறக்க,
“ரஞ்சனா வீட்டில் இருக்காளா?” என்ற குரல் கேட்டது.
சமையலறை நோக்கி சென்று கொண்டிருந்த ரஞ்சனாவின் காதில் அந்த குரல் கேட்டதும் புருவம் சுருங்க வாசல் பக்கம் வந்தாள்.
“இருக்காங்க. நீங்க யாரு?” என்று லதா கேட்க, அதற்கு பதில் வரும்முன் அங்கே வந்திருந்த ரஞ்சனா, வாசலில் நின்றிருந்தவளை பார்த்து திகைத்தாள்.
ஆனால், அது கண நொடிதான். உடனே சமாளித்துக் கொண்டவள், “வாங்க…” என்று சம்பிரதாயமாக வரவேற்றாள் ரஞ்சனா.
“உங்களுக்கு தெரிஞ்சவங்களா ரஞ்சனாமா?” லதா கேட்க,
“ஆமாம்மா. நான் பேசிக்கிறேன். உங்களுக்கு வீட்டுக்கு போக நேரமாச்சு இல்லையா? கிளம்புங்கமா. இங்கே நான் பார்த்துக்கிறேன்…” என்றாள்.
“சரிமா, நான் கிளம்புறேன்…” என்று சொல்லிவிட்டு லதா கிளம்பிவிட, உள்ளே வந்த அந்த விருந்தாளியை சோஃபாவில் அமரச் சொன்னாள் ரஞ்சனா.
“இருக்கட்டும்…” என்றபடி சோஃபாவில் அமர்ந்த புனிதாவின் பார்வை வீட்டை நோட்டமிட்டது.
“ஆமா, உங்களுக்கு இரண்டு பிள்ளைங்க தானே? எங்கே அவங்க காணோம்?” என்று கேட்ட புனிதாவை உணர்வே இல்லாமல் பார்த்தாள் ரஞ்சனா.
சொந்த அண்ணாவிற்கு பிறந்த பிள்ளைகள் எத்தனை என்ற கேள்வியுடன் ஆரம்பித்தவளை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை அவள்.
“பக்கத்து வீட்டில் விளையாடுறாங்க…” என்றாள் அமைதியாக.
“ஓ, அக்கம்பக்கம் எல்லாம் ரொம்ப நல்ல பழக்கமோ?” என்று ஒரு மாதிரியான குரலில் புனிதா கேட்க, ரஞ்சனா பதில் சொல்லாமல் தீர்க்கமாக அவளை பார்த்தாள்.
“இதை போய் உங்ககிட்ட கேட்கிறேன் பாருங்க. ரொம்ப நல்ல பழக்கம்னுதான் தெரியுமே? உங்களுக்கு சப்போர்ட்க்கு ஆள் எல்லாம் வருதாமே? போலீஸ் வரச் சொல்லுவேன்னு மிரட்டும் அளவுக்கு உங்களுக்கு ஆளுங்க இங்கே சப்போர்ட் போலிருக்கு?” என்று இடக்காக கேட்டாள் புனிதா.
இவள் பெற்றவர்களின் பேச்சில் இங்கே வந்துள்ளாள் என்று ரஞ்சனாவுக்கு புரிந்து போனது.
“உங்களுக்கு ஏதோ உடம்பு எல்லாம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேனே?” மேலிருந்து கீழாக ரஞ்சனாவை ஆராய்ந்து கொண்டே கேட்டாள் புனிதா.
ரொம்ப சீக்கிரம் கேட்டுவிட்டாள். எனது உடல்நிலையை பற்றி தெரிந்த பிறகும் எட்டி கூட பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது நிதானமாக வந்து நலம் விசாரிக்கிறாளாக்கும்? இப்போது கூட தான் இன்னும் உயிரோடு இருக்கிறோமா? இல்லையா என்று நோட்டம் விட வந்திருப்பாளோ? என்ற சந்தேகம் வந்தது ரஞ்சனாவிற்கு.
அவளின் எண்ணம் சரிதான் என்பது போல்தான் அடுத்து புனிதா பேசியது இருந்தது.
“என்னவோ ரொம்ப முடியலை. இப்பவோ அப்பவோ இருக்குன்னு தகவல் வந்ததா அப்பா சொன்னார். பார்த்தால் அப்படி தெரியலையே? நல்லாத்தானே இருக்கீங்க? அப்புறம் அதெல்லாம் என்ன நாடகம்?” என்று புனிதா கேட்க,
“நாடகம் போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்ப எதுக்கு நீ வந்திருக்க? என்ன விஷயம்? அதைச் சொல்லு முதலில்…” அவ்வளவு நேரம் இருந்த பொறுமை போய் கடினமாக கேட்டாள் ரஞ்சனா.
முகம் மாறிய புனிதா, “நாடகம் போட வேண்டிய அவசியம் இல்லையா? போன் வந்தது. அதனால்தான் கேட்டேன். அது என்ன பொய்யா?” என்று இளக்காரமாக கேட்டாள்.
“அது உண்மையா பொய்யான்னு எப்ப கேட்டுருக்கணும்? ரொம்ப நிதானமாக நாலு நாள் பிறகு வந்தா?” என்று இடக்காக கேட்டாள் ரஞ்சனா.
“அது… அது…” என்று தடுமாறிய புனிதா, “அதான் நல்லாத்தானே இருக்கீங்க. அது பத்தி இப்ப என்ன? நான் பேச வந்ததை பேசிட்டு கிளம்புறேன்…” என்றவளின் பார்வை மீண்டும் வீட்டை சுற்றி வலம் வந்தது. அதிலேயே அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்று ரஞ்சனாவிற்கு புரிந்து போனது.
“இதோ பாருங்க. இந்த பிளாட் வாங்கியது என்னோட அண்ணன். ஆனால், அதில் வாழ அவனுக்கு கொடுத்து வைக்கலை அல்பாய்ஸில் போய் சேர்ந்துட்டான். இப்ப என்னோட அம்மா, அப்பா தங்க சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு தங்க ஒரு வீடு வேணும். இதை அவங்களுக்கு கொடுத்துருங்க…” என்று அதிகாரமாக கேட்டவளை கடுமையாக பார்த்தாள் ரஞ்சனா.
“அவங்களுக்கு கொடுத்துட்டு நான் எங்கே போறது?” என்று கோபமாக கேட்க,
“அது… நீங்க வேலை பார்க்கிறீங்க. என் அண்ணா இல்லைனாலும் ஒரு குறையும் இல்லை உங்களுக்கு. அவன் செத்தப்ப உங்களுக்கு செட்டில்மென்ட் பணம் எல்லாம் வந்தது தானே? அதையும் வாங்கி அவனோட பெத்தவங்க கண்ணில் கூட காட்டாமல் கமுக்கமாக நீங்க தானே வச்சுக்கிட்டீங்க. பணம் வீடுன்னு எல்லாத்தையும் நீங்களே அமுக்கிக்கிட்டால் எப்படி? பணத்தை கூட நீங்க வச்சுக்கோங்க. அதை நாங்க கேட்கலை. ஆனால் இந்த வீட்டை கொடுத்துடுங்க. அந்த பணத்தை வச்சு நீங்க வேற வீடு பார்த்துட்டு போங்க…”
“ஏய், எழுந்திருடி…”
புனிதா பேசிக் கொண்டே போக, ஆங்காரமாக கத்தினாள் ரஞ்சனா.
பிள்ளைகளை விட வந்த பிரதாபனின் செவிகளில் லேசாக மட்டும் சாற்றி வைத்திருந்த கதவின் இடைவெளியில் அந்த குரல் அவனை வந்து சேர, அப்படியே நின்றான் அவன்.