பாலையில் பனித்துளி – 7
அத்தியாயம் – 7
புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தும் பிரதாபனை சிறிதும் அண்டவில்லை உறக்கம்.
ஏதோ ஒன்று குறைவது போலான உணர்வு அவனை ஆட்கொண்டது.
ஒன்று அல்ல இரண்டு என்று சொல்ல வேண்டுமோ?
இரு சின்ன சிட்டுகளின் அண்மையும், ஸ்பரிசமும் தான் குறைகிறது என்பதனை சில நொடிகளிலேயே புரிந்து கொண்டான் அவன்.
புரிந்ததை ஏற்றுக் கொள்ளத்தான் அவன் மனம் தயாராக இருக்கவில்லை.
மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு நாள்கள்… இரண்டே நாள்கள்தான் அந்தக் குழந்தைகள் அவனுடன் இருந்தன.
அந்த இரண்டு நாள்களிலேயே அவர்கள் தன் அருகில் இல்லாததை குறையாக நினைக்கும் அளவிற்கு தான் பலவீனமாகிவிட்டோமா என்ன? தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.
அதுதான் உண்மை என்று இடிந்துரைத்தது மனம். அந்த உண்மை கசந்தது.
இப்படி தான் எந்த ஒரு விஷயத்திற்கும், யாருக்காகவும் ஏங்க கூடாது, எதிர்பார்க்க கூடாது என்று தானே யாரையும் அண்டாமல் தனக்கென ஒரு வளையம் அமைத்துக் கொண்டு அதற்குள் வாழ்ந்து வந்தேன்.
அந்த வளையத்திற்குள் யாரையும் நுழைய விடுவது அவனுக்கு அவனே வைத்துக் கொள்ளும் சோதனை அல்லவா?
எந்தச் சோதனையையும் எதிர் கொள்ளவோ, அனுபவிக்கவோ அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை.
அவன் அவனாக மட்டுமே இருக்க விரும்பினான். அவன் மட்டுமே அவனுக்கு நிரந்தரம்! அவனைத் தவிர அவன் வாழ்வில் எதற்கும், யாருக்கும் இடமில்லை.
எந்தக் குழந்தைகளை நினைத்து இப்போது தூங்க முடியாமல் தவிக்கின்றானோ அந்தக் குழந்தைகள் இப்பொழுது அவனை நினைவில் வைத்துக் கொள்ளாமல், இரண்டு நாள்களாக கிடைக்காமல் ஏங்கியிருந்த அன்னையின் அரவணைப்பில் நிம்மதியாக துயில் கொண்டிருப்பார்கள்.
இந்த நேரம் அவர்கள் அவனை மறந்து கூட போயிருக்கலாம்.
‘நானும் மறந்து விட வேண்டும்’ என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டு மெல்ல மெல்ல நித்திரையைத் தழுவினான் பிரதாபன்.
ரஞ்சனா அன்று காலையில்தான் மருத்துவமனையிலிருந்து வீடு வந்திருந்தாள். அவள் வீடு வரும்வரை பிள்ளைகள் இருவரும் பிரதாபனுடன்தான் இருந்தனர்.
இரண்டு நாள்களும் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால், அவனுக்கு அவர்களுடன் நேரம் செலவழிக்க பிடிக்கவே செய்தது.
தனிமையில் இனிமை கண்டு கொண்டிருந்தவனுக்கு, இரண்டு நாள்களும் தனிமை இல்லாத நிலை பிடித்திருந்தது என்றால் அது அவனுக்கே விந்தையாகத்தான் இருந்தது.
இங்கே அவன் பிள்ளைகளையே பற்றியே நினைத்தபடி நித்திரையில் ஆழ, ரஞ்சனாவின் வீட்டிலோ இரு பிள்ளைகளும் அன்னையை ஒட்டி படுத்து அவளிடம் வளவளத்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு நாள்களாக அன்னையின் அருகில் இல்லாமல் தாங்கள் என்ன செய்தோம்… பிரதாபன் எப்படிப் பார்த்துக் கொண்டான். பரத் அவன் வீட்டில் ஜாடியை உடைத்தது என்று கதை கதையாக சொல்லிக் கொண்டிருந்தாள் ஹரிணி.
பரத்தும் மழலையில் ஏதேதோ சொல்ல, உதட்டில் துளிர்த்த புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.
இரண்டு சிறு பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதொன்றும் சாதாரண விஷயமல்ல.
மிகவும் பொறுமை வேண்டும். சில நேரம் அவளுக்கே பொறுமை போய்விடும். பிள்ளைகளிடம் கத்திவிடுவாள்.
ஆனால், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இரண்டு நாள்கள் தன் பிள்ளைகளை பொறுமையுடன் பார்த்துக் கொண்டது மட்டும் இல்லாமல், அவளின் மருத்துவச் செலவுகளைப் பார்த்து, அவள் நல்லபடியாக வீடு வந்து சேரும் வரை உதவி செய்ததை நினைத்து, பிரதாபனின் மீது ரஞ்சனாவிற்கு நன்மதிப்பு உண்டானது.
தன்னலம் பார்க்காமல் உதவி செய்தவனின் பணத்தை விரைவிலேயே கொடுத்து விட வேண்டும் என்று மனத்திற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள் ரஞ்சனா.
மறுநாள் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, கதவை திறந்தான் பிரதாபன்.
“குட் மார்னிங் அங்கிள்…” மலர்ந்த சிரிப்புடன் காலை வணக்கம் சொல்லியபடி நின்று கொண்டிருந்தாள் ஹரிணி.
அவளைப் பார்த்ததும் அவனின் முகமும் மலர்ந்து போயிற்று.
“குட் மார்னிங் பாப்… ம்ம் ஹரிணி. என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“ஸ்கூல் கிளம்பிட்டேன் அங்கிள். அதை சொல்ல வந்தேன். பை…” என்று கையை அசைத்தாள்.
இந்தப் பிள்ளைகள் தன்னை மறந்து விடும் என்று நினைக்க, அதற்கு மாறாக அவனைத் தேடி வந்து பேசவும் அவன் மனம் நெகிழ்ந்தது.
ஆனால், வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், “குட், கவனமா போயிட்டு வா. நல்லா படிக்கணும்…” என்று சொல்லியவன் கண்கள் பரத் எங்கேயாவது தென்படுகின்றானா என்று தேடின.
ஆனால், அவனின் சத்தம் கூட கேட்கவில்லை. “ஹரிமா, உன் ஸ்கூல் பேக் எங்க வச்ச?” என்ற ரஞ்சனாவின் குரல்தான் கேட்டது.
“அம்மா கூப்பிடுறாங்க பார். ஓடு...” என்று ஹரிணியை அனுப்பி வைத்துவிட்டு கதவை சாற்றினான்.
மனத்தில் இனம் புரியாத உற்சாகம் பரவ, உதட்டின் ஓரம் ஒட்டிக் கொண்ட புன்னகையுடன் வேலையைத் தொடர்ந்தான் பிரதாபன்.
அப்போது அவனின் அலைபேசி ஒலி எழுப்ப, அடுப்பை அமர்த்திவிட்டு, கொதிக்க ஆரம்பித்திருந்த ரசத்தை ஒரு கிண்ணத்தில் தூக்கி ஊற்றி மூடி வைத்துவிட்டு, வரவேற்பறையில் இருந்த கைப்பேசியை சென்று எடுத்தான்.
அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததுமே, அதுவரை அவனின் உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை அப்படியே உறைந்து போயிற்று.
அழைப்பை ஏற்றவன் உடனே பேசாமல் இருக்க, “ஹலோ தம்பி, நான் நீலகண்டன் பேசுறேன். நல்லா இருக்கீங்களா தம்பி?” என்ற குரல் அவனை பேச தூண்டியது.
“ம்க்கும்…” என்று தொண்டையை செருமிக் கொண்டவன், “இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தான்.
“எனக்கென்ன? இருக்கேன் தம்பி. நான் ஒரு வேலையா மதுரை வரை வந்தேன். உங்களை பார்க்க வரட்டுங்களா?” தயக்கத்துடன் கேட்டார் மனிதர்.
“இப்ப நான் மதுரையில் இல்லை. சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்துட்டேன்…” என்றான்.
“ஓ! எப்பங்க தம்பி? நீங்க இன்னும் மதுரையில் இருக்கீங்கன்னு நினைச்சுட்டு இருக்கேன். ஒரு வார்த்தை சொல்லலையே தம்பி…” என்று ஆதங்கமாக கேட்டவருக்கு, அவன் மறுமொழி சொல்லாமல் அமைதியாக இருக்க,
“புரியுது தம்பி. நீங்க இப்படி ஊர் ஊராக சுத்த காரணமாகி போனவன்கிட்டயே எப்படி சொல்விங்க? நான்தான் மடத்தனமா பேசிட்டு இருக்கேன். எல்லாம் என்னோட தப்புதான் தம்பி. மன்னிச்சுடுங்க…” என்று தழுதழுப்புடன் மன்னிப்பு கேட்டார்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்காக மட்டும்தான் நான் ஊர் ஊராக மாறி போறேன். நீங்களோ வேற யாருமோ காரணம் இல்லை…” என்றான் தெளிவாக.
“அப்படி சொல்வது உங்க பெருந்தன்மை தம்பி. அது சுட்டு போட்டாலும் எங்களுக்கு வராது. நீங்க இவ்வளவு நல்ல மனுஷரா இருக்கப் போய்தான் அன்னைக்கு…”
“அது எதுக்கு இப்ப? விடுங்க. முடிஞ்சு போனதை பத்தி பேசி எதுவும் ஆகப் போவதில்லை. பழைய விஷயத்தையே நினைத்து மனசை குழப்பிக் கொள்ளாமல் நிம்மதியா இருங்க. சென்னை வந்தால் சொல்லுங்க. அட்ரஸ் தர்றேன். மீட் பண்ணலாம்…” என்று அவரின் பேச்சை கத்தரித்து விட்டு, பேச்சை முடித்துக் கொள்ள முயன்றான்.
“வருஷம் கடந்தாலும் மனசு ஆற மாட்டிங்குதே தம்பி. என்ன பண்ண? நான் கட்டையில் போற வரை என் மனசு ஆறாதுதான்…” என்றார் பெருமூச்சுடன்.
பிரதாபன் எந்தச் சமாதானமும் சொல்லவில்லை. சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் அதேதான் புலம்புவார் எனும் போது சொல்லி என்ன ஆகப் போகிறது? என்ற எண்ணமே காரணமாகிப் போனது.
அவன் எதுவும் பேசப் பிரியப்பட வில்லை என்று புரிந்து விட, “சரிங்க தம்பி, மெட்ராஸ் பக்கம் வர முடியுமா தெரியலை. உடம்பு முன்ன போல இல்ல. வயசாகிருச்சு பாருங்க. கடவுள் சித்தம் இருந்தால் நான் கண்ணை மூடுவதற்கு முன்னால் உங்களை ஒரு முறை பார்த்துடணும் தம்பி…” என்றார் மனிதர்.
“கட்டாயம் பார்க்கலாம். கவலைப்படாதீங்க…” என்று மட்டும் சமாதானம் செய்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரதாபன்.
நீலகண்டனிடம் பேசிவிட்டு வைத்ததும் அவன் மனம் எங்கெங்கோ சென்றது. அப்படியே சில நொடிகள் சோஃபாவில் தளர்ந்து அமர்ந்துவிட்டான்.
அப்போது வெளியே பரத்தின் அழுகை சத்தம் கேட்க, நினைவுகளை உதறிவிட்டு நிகழ்காலத்திற்கு வந்தவன், காதை தீட்டிக் கொண்டு வெளியே கேட்ட சத்தத்தில் கவனத்தை வைத்தான்.
“நானு… நானு… போதேன்…” என்று அழுகையுடன் பரத் மழலையில் சொன்னது முதலில் புரியவில்லை என்றாலும், மீண்டும் மீண்டும் அவன் சொன்னதையே சொன்னதை வைத்து புரிந்து கொண்டவன் அதரங்களில் புன்னகை ஒட்டிக் கொண்டது.
‘எங்கே போகணுமாம் இவனுக்கு?’ என்று நினைத்தபடி ஆர்வம் தாங்காமல் எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தான்.
பள்ளி செல்ல கிளம்பிய ஹரிணி லதாவுடன் மின்தூக்கியுனுள் நுழைய, “நானு… நானு… கா…” என்று தானும் செல்ல வேண்டும் என்று பின்னாலேயே ஓடினான் பரத்.
“நீ அடுத்த வருஷம் ஸ்கூல் போகலாம். இப்ப அக்கா ஸ்கூல் போய்ட்டு சீக்கிரம் வந்திடுவா…” என்று மகனை இழுத்துப் பிடித்து சமாதானம் சொல்லிக் கொண்டு இருந்தாள் ரஞ்சனா.
“டாட்டா பரத்…” என்று மின்தூக்கியில் இருந்தபடி ஹரிணி சொல்ல,
“டாடா வேணா. நானு…” என்று தானும் வருவதாக கையை விரித்தான் பிள்ளை.
“இவன் இப்படியேதான் குதிச்சிட்டு இருப்பான். நீங்க அவளை அழைச்சிட்டு போய் வேனில் ஏத்தி விட்டு வாங்க லதாமா. இவனை நான் பார்த்துக்கிறேன்…” என்று ரஞ்சனா சொன்னதும், லதாவும் மின்தூக்கி கதவை மூடினார்.
கதவு மூடப்பட்டதும், விட்டுவிட்டு செல்கிறார்களே… என ரஞ்சனாவின் கைகளில் நிற்காமல் ஆர்ப்பாட்டம் செய்தான் பரத்.
மருத்துவமனையில் இருந்து வந்த உடம்பு பலவீனமாக இருக்க, மகனுடன் அப்படியே தடுமாறிய ரஞ்சனா சட்டென்று சுவரை பிடித்துக் கொண்டு நின்றாள்.
“ஹேய் பையா, என்ன பண்ற?” என்று பிரதாபன் குரல் கொடுக்க, அவனைக் கண்டதும் சட்டென்று அமைதியாகி வெட்க புன்னகை பூத்தான் பரத்.
பிரதாபனை ரஞ்சனா சங்கடமாக பார்க்க, “எப்படி இருக்கீங்க ரஞ்சனா? அதுக்குப் பிறகு பீவர் இல்லையே?” என்று இலகுவாக பேச்சுக் கொடுத்தான்.
“இல்லை சார். லேசா சோர்வு மட்டும் இருக்கு. மத்தபடி நல்லா இருக்கேன்…” என்று அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து இறங்கி பிரதாபனிடம் வந்து அவனைத் தூக்கச் சொன்னான் பரத்.
உள்ளுக்குள் லேசாக வியந்தாலும், ஆசையாக அவனைத் தூக்கிக் கொண்டான் பிரதாபன்.
பரத் பிரதாபனின் வீட்டிற்கு போக சொல்லி கை காட்ட, “பரத், சாரை தொந்தரவு பண்ணாதே. அம்மாகிட்ட வா. சாப்பிட போகலாம்…” என்றழைத்தாள்.
“தொந்தரவு எல்லாம் எதுவும் இல்லை. இருக்கட்டும்…” என்றவன், “இன்னும் சாப்பிடலையா குட்டி நீ?” என்று பரத்திடம் கேட்டான்.
அவன் தன் குட்டி உதடுகளை அழகாக விரித்து இல்லை என்று தலையை அசைக்க, அந்த அழகு அவனை மயக்கியது.
“அங்கிள் ரசம் சாதம் வச்சிருக்கேன். சாப்புடுறியா?” என்று கேட்டதும், யோசனையுடன் அவன் முகம் பார்த்த பரத், சம்மதமாக தலையை அசைக்க,
“அச்சோ! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார். வீட்டில் லதாமா இட்லி செய்துட்டாங்க. அவனுக்கு அதைக் கொடுக்கிறேன்…” என்றாள் ரஞ்சனா.
“பரத்துக்கு இட்லி வேணுமா? ரசம் சாதம் வேணுமா?” பிள்ளையிடமே சாய்ஸை விட்டுவிட,
“அசம்…” என்றான் பிள்ளை.
பிரதாபன் பிள்ளையின் விருப்பத்தை சுட்டிக் காட்டி தோளை குலுக்க, அவனைச் சங்கடமாக பார்த்த ரஞ்சனா, “பரத்” என்று மகனை அதட்டினாள்.
“ஏன் என் வீட்டில் அவன் சாப்பிட கூடாதா?” பிரதாபன் ஒரு மாதிரியாக கேட்க,
“அப்படி இல்லை சார்! அவன் சரியா சாப்பிடவே மாட்டான். நானே மல்லுக்கட்டிதான் அவனை சாப்பிட வைக்கணும். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?” என்றாள்.
“எனக்கு ஒரு சிரமமும் இல்லை. வயிறு பசியா இருந்தால் அதெல்லாம் சமத்தா சாப்பிடுறான். நான் பார்த்துக்கிறேன்…” என்று பிரதாபன் பரத்தை தன் வீட்டிற்குள் தூக்கிச் சென்றுவிட, ‘இதென்னடா வம்பு?’ என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றாள் ரஞ்சனா.
அவனிடம் அழுத்தியும் மறுப்பு சொல்ல முடியாமல் அவன் தங்களுக்கு செய்த உதவி குறுக்கே நின்றது.
பிரதாபனும் வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும், பரத்தே வருவதாக சொன்ன பிறகு, அவனை விட்டுவிட அவனுக்கு விருப்பமிருக்கவில்லை.
அவனுடன் இருந்த இரண்டு நாள்களும் முறைத்துக் கொண்டும், அழுது கொண்டும் இருந்த பிள்ளை, இப்போது தானாக வந்து தூக்க சொல்லி உணவு கேட்கும் போது எப்படி விடுவான்?
மாவு இருந்தாலும் சில நேரம் காலையில் சாதம் சாப்பிட வேண்டும் போல் இருந்தால் சாதம் வடித்துவிடுவான். இன்றும் அதே போல் சாதம் வடித்து, ரசம் வைத்து, உருளைக்கிழங்கு பொரியலும் வைத்திருந்தான்.
நீலகண்டனிடமிருந்து போன் வருவதற்கு முன்பே உணவை தயார் செய்திருந்தால் இப்போது சின்ன டைனிங் டேபிள் மேல் உணவை கொண்டு வந்து வைத்து, நாற்காலியில் அமர்ந்து பரத்தை மடியில் அமர வைத்துக் கொண்டான்.
தட்டில் சிறிது சாதத்தை போட்டு, ரசம் ஊற்றி நொறுங்க பிசைந்தான்.
“நானு…” என்று பரத்தும் தட்டில் கை வைக்க முயல, “ஷ்ஷ்… சூடுடா கண்ணா. இந்தக் குட்டி கையில் சுடும்…” என்று அவன் கையை எடுத்து உதட்டில் வைத்து முத்தம் கொடுக்க, அவனின் மீசை குறுகுறுப்பூட்டியதில் கையை இழுத்துக் கொண்டு சிரித்தான் பிள்ளை.
“ஹாஹா… மீசை குத்திருச்சா?” என்று மனம் விட்டு சிரித்தான் பிரதாபன்.
கூடவே தானா இப்படி சிரித்தோம்? என்று வியப்பாய் தோன்ற, அவன் சிரிப்பு அப்படியே உறைந்து போனது.
தான் இப்படி வாய்விட்டு சிரித்து எவ்வளவு நாள் இருக்கும்? இல்லை… இல்லை வருடம் இருக்கும் என்று நினைக்க வேண்டுமோ?
ஆம்! அவன் மனம் விட்டு சிரித்து சில வருடங்கள் இருக்கும். தேவைக்கு செயற்கையாக ஒட்ட வைத்த புன்னகைதான் அவனின் பெரும்பாலான நேரங்களில் அவனுடன் வந்திருக்கிறது.
ஆனால், ஹரிணி, பரத்துடன் இருக்கும் போது இயல்பாக புன்னகை வந்தது. செயற்கை சாயம் பூசாத புன்னகை! அவனே அவனின் புன்னகை நினைத்து வியக்கும் புன்னகை!
இப்போதும் அதே புன்னகை அவனின் உதட்டில் உறைந்து கிடக்க, ரசம் சாதத்தை கையில் எடுத்து ஊதி ஊதி ஆற வைத்து பரத்திற்கு ஊட்டி விட, அவனும் தனது குட்டி வாயை திறந்து சமர்த்தாக வாங்கிக் கொண்டான்.
கூடவே உருளைக் கிழங்கு பொரியலையும் கேட்க, “அதில் காரம் போட்டுட்டேனே. இந்தச் சின்ன குட்டிக்கு உறைக்குமே?” என்று பிரதாபன் சொல்ல, பரத் அது புரியாமல் வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்தான்.
ஒரே ஒரு சின்ன துண்டை எடுத்து பரத் வாயில் வைக்க, அதன் சுவையை உள்வாங்கி கண்ணை சுருக்கி, முகம் சுளித்தவன், நாக்கை நீட்டி சப்பு கொட்டினான்.
அவனின் பாவனையை இரசித்துப் பார்த்தான் பிரதாபன்.
உறைத்தாலும் அதன் சுவை அவனுக்கு பிடித்திருக்கிறது என்று புரிந்தது.
“பரத் குட்டிக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்க,
தலையை ஆட்டி ஆமாம் போட்டவன், இன்னும் கேட்டான். சாதம் ஒரு வாய், கிழங்கு ஒரு வாய் என்று ஊட்டி விட, பரத் சேட்டை செய்யாமல் சாப்பிட்டான்.
“பரத்து…” என்று அப்போது வாசல் பக்கமிருந்து லதாவின் சத்தம் வர,
“கதவு திறந்துதான் இருக்கு. உள்ளே வாங்க…” என்று பிரதாபன் குரல் கொடுக்க, வெறுமனே சாற்றி வைத்திருந்த கதவை திறந்து உள்ளே வந்தார் லதா.
“ஆயா…” அவரை பார்த்ததும் பரத் கைத் தட்டி குதூகலிக்க, “பரத்தை அழைச்சிட்டு போகலாம்னு வந்தேனுங்க சார். அவங்க அம்மா இவன் இங்கே என்ன செய்றானோனு புலம்பிட்டு இருக்காங்க…” என்றார் லதா.
“அவன் இன்னும் சாப்பிட்டு முடிக்கலை. சாப்பிட்டதும் நானே கொண்டு வந்து விடுறேன்…” என்று சொல்லிக் கொண்டே பரத்திற்கு கொடுக்க, அவனும் வாங்கி சாப்பிடுவதை அதிசயித்து பார்த்தார் லதா.
“பரத்தா இது? ஆச்சரியமா இருக்கேங்க சார். நானும், அவன் அம்மாவும் இவனைச் சாப்பிட வைக்கணும்னா குட்டிக்கரணமே அடிக்க வைப்பான். வீடு எல்லாம் ஓடி ஓடி வருவான். விரட்டி பிடிச்சு ஊட்டி விடுறதுக்குள்ள எங்களுக்குப் பசிக்க ஆரம்பிச்சுடும். உங்ககிட்ட அடம் பிடிக்காமல் சாப்பிடுறானே…” என்றார் வியப்பாக.
“அப்படியா? பரத் பையா அவ்வளவு சேட்டை செய்வானா?” என்று அறியாதவன் போல் கேட்டான் பிரதாபன். முதல் நாள் அவனுடன் இருந்த போது சாப்பிட ஆரம்பத்தில் அவன் அடம் பிடித்ததை கண்டிருக்கின்றானே…
அவர்கள் ஏதோ பாராட்டுவது போல், வெட்கத்துடன் சிரித்தான் பிள்ளை.
அவனின் வெட்கச் சிரிப்பு அப்படியே மனத்தை அள்ளிக் கொண்டு போனது.
தன் மனம் தன்னை அறியாமலே கொஞ்ச கொஞ்சமா அந்த பிள்ளையின் புறம் சாய்வதை உணரவே செய்தான் பிரதாபன். அது நல்லதிற்கா கெட்டதற்கா என்ற வாதத்திற்குள்ளேயே அவன் போக விரும்பவில்லை.
இந்தப் பிள்ளைகளிடம் பழகுவதால் அப்படி என்ன ஆகிவிடப் போகிறது? என்று அலட்சியமாக நினைத்தான் என்று கூட சொல்லலாம்.
ஆனால், லதா இங்கே நடந்ததை ரஞ்சனாவிடம் போய் சொல்ல, ‘இது எங்கே போய் முடிய போகின்றதோ?’ என்ற பயம்தான் அவளின் மனத்தை முதலில் கவ்வியது.
அவளின் பயத்திற்கு ஏற்றார் போல், அந்த பிள்ளைகள் மேல் பிரதாபன் வைக்கும் பாசமே, பல உணர்வு போராட்டங்கள் புயலாக கிளம்பி அவள் வாழ்க்கையை புரட்டிப் போடப் போவதை அறியவில்லை அவள்.
இவ்வளவு ஏன்? அந்த உணர்வு போராட்டங்களை உண்டாக்க போகின்றவனே அப்போது அறியவில்லை என்பதுதான் உண்மை.
சந்தரப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை எப்படியும் மாற்றும் வல்லமை கொண்டது. பிரதாபனும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்பதே நிதர்சனம்!