பாலையில் பனித்துளி – 6
அத்தியாயம் – 6
உர்ரென்று தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பரத்தை பார்த்து பிரதாபனுக்கு வாய் விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால், அப்படிச் சிரித்து விடவில்லை அவன்.
உதட்டோரம் அதக்கிய மென்புன்னகை மட்டுமே. அதையும் கூட கூர்ந்து கவனித்தால் மட்டுமே கண்டறிய முடியும்.
பரத்தைப் போல் ஹரிணி அவனை முறைக்கவில்லை என்றாலும், அவளின் முகத்தில் ஒரு வித சோகம் இழைந்தோடிக் கொண்டிருந்தது.
பெரிய மனிதர்கள் போல் அச்சிறு பூஞ்சிட்டுகள் காட்டிய உணர்வு பாவனைகளை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் பிரதாபன்.
குழந்தைகளின் அந்தப் பாவனைகளை ரசித்தது அவன் மனம்.
அதே நேரம் அந்தப் பிள்ளைகளின் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ளவும் முடிந்தது.
தாயின் அருகில் வரை சென்று விட்டு அவளைத் தொட கூட விடாமல், தான் அழைத்துக் கொண்டு வந்த கோபம், சோகத்தைதான் அவர்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தனர்.
பிள்ளைகளின் பாதுகாப்பையும் கருதி தான் அவன் அப்படி அழைத்து வந்தான் என்றாலும், அவனுக்கும் மனத்தை ஏதோ செய்யத்தான் செய்தது.
அதிலும் ரஞ்சனாவை பார்த்துவிட்டு கிளம்பும்போது, பரத் அழுத அழுகை… அப்பப்பா சொல்லி மாளாது.
கையில் இருந்து இறங்க துடித்து, துள்ளி குதித்து கீழே இறக்கி விட சொல்லி பிரதாபனின் முகத்தை நகத்தால் பிராண்டி வைத்து, தலைமுடியை பிடித்து ஆய்ந்து என்று சில நொடிகளிலேயே அத்தனை ஆர்ப்பாட்டம் செய்துவிட்டான்.
அவனின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து ரஞ்சனாவுக்கு அழுகையாக வர, அவள் ஒரு பக்கம் மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
ஹரிணியும் உதட்டை பிதுக்கி அழ தயாராக, “இரண்டு பேரும் இப்படி அழுதால் அப்புறம் அம்மாவை பார்க்க கூட்டிட்டு வர மாட்டேன்…” என்று பிரதாபன் ஒரு மிரட்டல் போட, ஹரிணி உடனே தன் அழுகையை அடக்கிவிட, பரத் மட்டும் தன் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
பிரதாபனின் அதட்டல், மிரட்டல் எல்லாம் பரத்திடம் வேலை காட்டவில்லை.
அவன் அழ அழத்தான் அறைக்கு அழைத்து வந்தான்.
அறைக்கு வந்த பிறகு அவன் மீண்டும் வெளியே போக வேண்டும் என்று குதிக்க, அறை கதவை மூடிவிட்டு பரத்தை கட்டிலில் அமர வைத்தான்.
அழுது, கத்தி, ஓய்ந்து, முடிவாக கட்டிலில் அமர்ந்தவண்ணம் பிரதாபனை முறைக்க ஆரம்பித்தவன்தான். இன்னும் அவ்வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
எவ்வளவு நேரம்தான் நீ முறைப்பாய் என்று பார்க்கிறேன் என்பது போல் பிரதாபன் அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.
தனது கைப்பேசியை எடுத்து வைத்துக் கொண்டு அதில் கவனம் இருப்பது போல் காட்டிக் கொண்டான்.
முறைத்துக் கொண்டிருந்தவனுக்கு அலுத்துப் போனது போலும். காலையில் பிரதாபன் வாங்கிக் கொடுத்த பொம்மையை கையில் வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான்.
அவனை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு, தனக்குள் சிரித்துக் கொண்டான் பிரதாபன்.
ஹரிணி என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவளோ அவனின் முகத்தை பார்ப்பதும், ஏதோ சொல்ல தயங்கியவள் போல் அவஸ்தையுடன் முகத்தை சுளிப்பதுமாக இருந்தாள்.
எதுவாக இருந்தாலும் அவளே கேட்டு வரட்டும் என்று கண்டு கொள்ளா பாவனை காட்டினான்.
சில நொடிகளில் மெல்ல தயங்கி அவனருகில் வந்தவள் அவன் கையை மெல்ல சுரண்டினாள்.
அப்போதுதான் கவனிப்பவன் போல் மெல்ல தலையை நிமிர்த்தி, என்ன என்பது போல் புருவத்தை தூக்கிப் பார்த்தான்.
“அங்கிள்…” என்று தயங்கியபடி அழைத்து, ஒரு விரலை தூக்கி காட்டினாள்.
“பாத்ரூம் இங்கே தானே இருக்கு. போ பாப்… ம்ம் ஹரிணி…” என்றான்.
குழந்தைகளின் இயற்கை தேவைக்காகவே தான் அந்த அறையை கேட்டு வாங்கினான். காலையில் ஹரிணி இயற்கை தேவைக்கு சொன்ன போது ஆண்கள் கழிவறைக்குள் அவளை அழைத்துச் செல்ல முடியாமல், பெண்கள் பக்கமும் அவளை தனியாக விட முடியாமல் திண்டாடி இருந்தான்.
பின் அங்கே சுத்தம் செய்யும் பெண்மணி இருக்க, அவரிடம் உதவி கேட்டுதான் ஹரிணியை அழைத்து செல்ல சொன்னான்.
இப்போது அறைக்குள்ளேயே பாத்ரூம் இருக்க, தன்னிடம் ஏன் பர்மிஷன் கேட்கிறாள் என்றுதான் பிரதாபன் நினைத்தான்.
“இருட்டா இருக்கு. பயமா இருக்கு…” என்றாள்.
“லைட் இருக்கே…”. என்றவன் எழுந்து குளியலறை விளக்கை போட்டு விட, அப்போதும் உள்ளே செல்ல தயக்கம் காட்டினாள் குழந்தை.
பிள்ளை இன்னும் ஏதோ மறைக்கிறாள் என்று புரிந்தது.
தன்னிடம் சங்கடப்படுகிறாள் என்பதும் புரிய மனம் உருகிப் போயிற்று.
ஆனாலும் காட்டிக் கொள்ளாமல், “உள்ளே போடா பாப், ம்ம்… ஹரிணி. கதவை தாழ் போடாதே. அங்கிள் இங்கே வெளியே நிற்கிறேன்…” என்றான்.
தலையை வேகமாக அசைத்த ஹரிணி உள்ளே சென்றாள்.
அவளுக்கு காவல் போல் அவன் குளியலறை அருகிலேயே நிற்க, அவளோ சில வினாடிகள் கடந்த பிறகும் வெளியே வரவில்லை.
ஐந்து நிமிடம் ஆகிவிட, “இன்னும் உள்ளே என்ன பண்ற?” என்று குரல் கொடுத்தான்.
“இதோ அங்கிள்…” என்றவள் மேலும் சில நொடிகள் கடந்த பிறகும் வராமல் போக, “ஹரிணி…” என்று அழைத்தான்.
“வந்துட்டேன் அங்கிள்…” என்ற சத்தத்துடன், உள்ளே பாத்ரூம் ப்ளஷ் பண்ணும் சத்தம் கேட்க, அவள் ஒன் பாத்ரூம் போகவில்லை. நம்பர் இரண்டு என்று புரிய, அதற்குத்தான் அவ்வளவு தயக்கம் காட்டியிருக்கிறாள் என்றதும் உதட்டை வளைத்து சிரித்துக் கொண்டான்.
கூடவே வேறு எதுவும் உதவி தேவைப்படுமோ என்று தோன்ற, யோசனையுடன் நெற்றியை விரலால் கீறிக் கொண்டான்.
ஒருவேளை அப்படி எதுவும் கேட்டால் எப்படி செய்வது என்ற தயக்கம் இப்போது அவனை ஆட்கொண்டது.
ஆனால், ஹரிணி அவனுக்கு அந்தச் சங்கடம் நேர விடவில்லை. தன்னை தானே சுத்தம் செய்து கொண்டு விட்டாள்.
ஆனால், அவளுக்கும் சேர்த்து பரத் அவனுக்கு வேலை வைத்தான்.
பிள்ளை வளர்ப்பு என்பது சும்மா பார்த்துக் கொள்வதல்ல. எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது என்று அவனுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தனர் அப்பிள்ளைகள்.
அதிலும் இரவு உறங்க வைக்க பெரும் போராட்டம்தான். ஹரிணி பிரதாபனிடம் தன்னுடைய பள்ளியில் நடந்ததை சொல்லிக் கொண்டே தூங்கி விட, பரத் தூங்காமல் அம்மா… அம்மா என்று கேட்டு சிணுங்கிக் கொண்டே இருந்தான்.
கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு, லேசாக தட்டிக் கொடுக்க, போர்வையை உதறி உதைத்து தள்ளி விட்டு சிணுங்கினான்.
“ஷ்ஷ் பரத், சேட்டை செய்யக் கூடாது. பேசாமல் தூங்கணும்…” என்று பிரதாபன் லேசாக மிரட்ட, தன்னை தட்டிக் கொடுக்கும் அவன் கையைத் தட்டிவிட்டு விலகினான்.
“ஓகே… ஓகே உன்னை ஒன்னும் சொல்லலை. பேசாமல் தூங்கு…” என்று சமாதானம் செய்ய, “ம்மா… ம்மா…” என்று அன்னையின் அண்மையைத் தேடி அலைபாய்ந்தான் பிள்ளை.
“அமைதியா தூங்கு பரத். அம்மாகிட்ட நாளைக்குப் போகலாம்…” என்று சமாதானம் கூறியவன், பரத்தை தூக்கி தோளில் போட்டு முதுகை இதமாக தட்டிக் கொடுத்துபடி அறைக்குள்ளேயே மெல்ல நடந்தான் பிரதாபன்.
புது அனுபவம்!
அந்தப் பிள்ளையின் ஸ்பரிசம் அவனை ஏதோ செய்தது.
அந்த நொடி கண்களை மூடி எதையோ நினைத்தவனுக்கு, மூச்சடைப்பது போல் இருக்க, விழிகளை அழுத்தமாக மூடித் திறந்தான்.
நொடியில் அவன் கண்கள் இரத்த நிறம் பூசிக்கொண்டது.
மனத்தின் அலைப்புறுதலை போக்க, தன் கையில் இருந்த பிள்ளையின் மீது கவனத்தை வைத்தான்.
அந்தப் பிள்ளையின் மென்மை அவன் மனத்தை குளிர்வித்தது. கண்களின் சிவப்பு மெல்ல மெல்ல மறைந்தது.
காலையில் கூட பரத் அவனின் தோளில்தான் நித்திரை கொண்டான் என்றாலும், அதை ஆழ்ந்து அனுபவிக்கும் மனநிலையோ, சூழ்நிலையோ அவனுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.
ஆனால், இப்போது அந்த இரவு நேர அமைதியில் பிள்ளையின் மென்மையும், தூங்க மறுத்து சிணுங்கும் மழலை குரலும் அவனுக்கு இதத்தையே தந்திருந்தது.
“ம்மா… ம்மா…” என்று அனத்திக் கொண்டே உறங்க மறுத்த பரத்தை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தே தூங்க வைத்து, அவன் நன்றாக உறங்கியதும் கட்டிலில் படுக்க வைத்து, அருகில் படுத்துக் கொண்டான் பிரதாபன்.
சில நொடிகளிலேயே பரத் அவன் மீது காலை போட்டு கொள்ள, அதை இதமாக வருடிக் கொண்டே யோசனையில் இருந்தான் பிரதாபன்.
இன்று சரி, நாளை எப்படி பிள்ளைகளை இங்கே வைத்திருக்க முடியும்? என்ற சிந்தனை ஓடியது அவனுள். ரஞ்சனாவிற்கு இன்னும் முழுதாக குணமாகாத நிலையில் பிள்ளைகளுக்கும் காய்ச்சல் ஒட்டிக் கொள்ளும் என்று மருத்துவரும் எச்சரித்திருந்தார்.
இப்போது கூட இரண்டு பிள்ளைகளையும் மருத்துவமனையில் வைத்திருக்க யோசனைதான் அவனுக்கு. வீட்டிற்கு அழைத்து சென்று விடலாமா என்று கூட நினைத்தான். ஆனால், இரவில் ரஞ்சனாவிற்கு ஏதாவது தேவை ஏற்பட்டால் ஒருவர் அருகில் இருக்க வேண்டுமே என்று நினைத்து மருத்துவமனை அறையிலே தங்கிக் கொண்டான்.
இரவு உணவை முடித்துவிட்டு ஒரு முறை ரஞ்சனாவின் உடல்நிலையை பற்றி விசாரித்துவிட்டு வந்திருந்தான். இனி பின்னடைவு இல்லை என்று சொன்ன பிறகுதான் அவனுக்கு நிம்மதியானது.
நாளை எப்படி ரஞ்சனாவையும் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும்? என்ற யோசனையுடனே தூங்கிப் போனான்.
அதிகாலையிலேயே பரத் எழுந்து விட்டான். அவனின் அழுகையில் பிரதாபன் எழுந்து பார்க்க, பரத்தின் உடை ஈரமாக இருந்தது. வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த மாற்று உடையை போட்டு விடவும் அமைதியானவன், பால் கேட்டான்.
காலை ஐந்து மணிதான் ஆகியிருந்தது. இந்த நேரம் பால் இருக்குமா என்ற சந்தேகத்துடன் தூங்கிக் கொண்டிருந்த ஹரிணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பரத்தை மட்டும் தூக்கி சென்று கேண்டினில் கேட்க, பால் இருந்தது.
பரத்திற்கு சிப்பரிலும் இன்னொரு டம்ளரில் ஹரிணிக்கும் வாங்கி கொண்டு அறைக்கு வந்தான்.
பாலை குடித்து முடித்த பரத் வேகமாக ஹரிணியிடம் சென்று அவளை எழுப்ப ஆரம்பித்தான்.
“பரத், வேண்டாம்…” என்று பிரதாபன் அதட்டும் முன், அவன் ஹரிணியை எழுப்பியிருக்க, கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
“ஓவர் சேட்டைடா பையா நீ. உன்னை எப்படித்தான் உன்னோட அம்மா சமாளிக்கிறாங்களோ…” என்று பரத்தை தலைக்கு மேல் தூக்கி போட்டு விளையாட, கிங்கிணி நாதமாய் சிரித்தான் பிள்ளை.
“அங்கிள், நானு… நானு…” என்று ஹரிணி கையை விரிக்க, பரத்தை இறங்கி விட்டு மென்புன்னகையுடன் ஹரிணியையும் தூக்கி போட்டு பிடித்தவன், அப்படியே குளியலறை வாயிலில் இறக்கி விட்டான்.
“ஓன், டூ பாத்ரூம் எல்லாம் போயிட்டு முகம் கழுவிட்டு வா. பால் வாங்கி வச்சுருக்கேன். குடிக்கலாம்…” என்று சொல்ல, வெட்க புன்னகையுடன் உள்ளே சென்றாள் ஹரிணி.
பிள்ளைகளை கவனித்து, ஐசியூ வார்டுக்கு அழைத்துச் சென்று ரஞ்சனா பற்றி விசாரித்தான்.
ஏழு மணி போல் அவளை அறைக்கு மாற்றி விடுவதாக தகவல் தெரிவித்தனர்.
அதே போல் ஏழு மணிக்கு எல்லாம் ரஞ்சனா அறைக்கு வந்துவிட, அன்னையை பார்த்ததும் பிள்ளைகளுக்கு கொண்டாட்டமானது.
ரஞ்சனாவிற்கும் பிள்ளைகளைப் பார்த்து நிம்மதியாக இருந்தது.
ரஞ்சனாவின் உடல் இன்னும் முழுதாக தேறியிருக்கவில்லை. காய்ச்சல் விட்டு விட்டு வந்து கொண்டுதான் இருந்தது.
பிரதாபன் இப்போதும் பிள்ளைகளை அவளின் வெகு அருகில் செல்லவிடவில்லை.
“இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க ரஞ்சனா?” என்று நலம் விசாரித்தான்.
“இப்ப ஓகேதான் சார். பெட்டரா ஃபீல் பண்றேன். பிள்ளைங்க உங்களை தொந்தரவு செய்தாங்களா?” என்று கேட்டாள்.
“தொந்தரவா? அப்படியெல்லாம் எதுமில்லை ரஞ்சனா. சமத்தா இருந்தாங்க. உங்களை பார்க்க முடியலைங்கிற ஏக்கம் மட்டும்தான்…” என்றான் புன்சிரிப்புடன்.
புன்னகையில் மிளிர்ந்து அவன் முகம் மிருதுவாக மாறியிருந்ததை வியப்புடன் கண்டாள் ரஞ்சனா.
“நான் பக்கத்தில் இல்லனா பரத் நைட் தூங்க மாட்டானே?” என்று கேட்க,
“கொஞ்ச நேரம் அழுதான். தோளில் போட்டு கொஞ்ச நேரம் நடந்ததுமே தூங்கிட்டான்…” என்றான்.
“தம்பி என்னை காலையில் சீக்கிரம் எழுப்பி விட்டுட்டான்மா. அங்கிள் பால் வாங்கி கொடுத்தாங்க. நாங்க குடிச்சோம்…” என்று ஹரிணி அன்னையிடம் சொல்ல, பிள்ளைகளின் வயிறு நிறைந்ததில் தாயின் மனம் குளிர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் சார். எனக்கு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கவே இல்லை. இந்த நேரத்தில் எனக்கு பார்க்க கூட யாருமில்லை…” என்று அவள் சொல்லிக் கொண்டே செல்ல,
“தெரியும்…” என்றான் மெல்ல.
“சார்?”
“உங்க ரிலேட்டிவ்ஸ்க்கு நீங்க இப்படி இருக்கும் விஷயத்தை கன்வே பண்ணணுமே ரஞ்சனா? பண்ணினேன்…” என்றான்.
பாவமோ, பரிதாபமோ எந்தப் பாவனையும் அவன் காட்டவில்லை. தகவல் சொல்லும் தாக்கம் மட்டுமே!
“சார்!” என்றவளுக்கு அடுத்து என்ன கேட்பது என்று கூட தெரியவில்லை.
தன் உறவினர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று அவன் சொல்லாமலே தெரிந்து போனது. எதிர்பார்த்ததுதான் என்றாலும் கண்கலங்குவதை தவிர்க்க முடியவில்லை.
“உறவோட அர்த்தம் தெரியாதவங்களை நினைச்சு கண்ணீரை வேஸ்ட் பண்ண கூடாது ரஞ்சனா…” என்றான் அழுத்தமாக.
தன் கண்ணீர் முகத்தை அவனுக்கு காட்டாமல் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீங்க யாருக்கும் சொல்லாமலே இருந்திருக்கலாம் சார்…” என்று கரகரப்பான குரலில் சொல்லி கண்களை துடைத்துக் கொண்டாள்.
“எதார்த்தத்தை பேசுங்க ரஞ்சனா. உங்க பிள்ளைங்க தனியா நிக்கிது. அவங்களை பார்த்துக்க ஆள் வேண்டாமா? உங்களுக்கு கூட டாக்டர் என்னவெல்லாம் சொல்லி பயமுறுத்தினார்னு எனக்குத்தான் தெரியும்…” என்று அவன் கடிந்து கொள்ள,
“எனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் என் பிள்ளைங்க என்ன பண்ணியிருப்பாங்க?” என்று கேட்டவளுக்கு கற்பனையில் காட்சிகள் விரிய, உடல் விதிர்த்துப் போனது.
“இந்த நினைப்பு உங்களுக்கு இப்படி ஆவதற்கு முன் இருந்திருக்கணும் ரஞ்சனா. கண்விழிக்காமல் கிடந்த உங்களை பார்த்து பிள்ளைங்க கதறின கதறல் இன்னும் என் காதில் கேட்குது. இப்ப இப்படி யோசிக்கிற நீங்க, முன்னாடியே உங்க பிள்ளைகளை பற்றி ஏன் யோசிக்காமல் போனீங்க?” என்று கடுமையுடன்தான் கேட்டான்.
பிள்ளைகளின் தவிப்பை ஒரு நாள் முழுவதும் கூடவே இருந்து பார்த்தவன் அல்லவா?
பார்த்துக் கொள்ள அவனும் இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? என்ற நினைப்பை அவனால் உதறி தள்ளிவிட முடியவில்லை.
“என் பிள்ளைகளை பற்றி நான் யோசிக்காமல் இருப்பேனா சார்?” என்று வலியுடன் கேட்டாள்.
“அவங்களை விட, உங்க வலி, வேதனைகளை அதிகம் யோசித்துட்டீங்க. அதோட பலன்தான் இது?” என்று அவள் படுக்கையில் கிடக்கும் நிலையை சுட்டிக் காட்டி குற்றம் சாட்டினான்.
அவள் கண்கள் கசிந்தன.
“மூனாவது மனுஷனா வெளியே இருந்து பார்க்கிற உங்களுக்கு என்னோட வலி, வேதனைகள் புரியாது சார்…” என்று முனகியவள் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.
பிரதாபன் ஏதோ சொல்ல நினைத்து பின் வாயை மூடிக் கொண்டான்.
தன் அன்னையிடம் சண்டையிடுபனை பிள்ளைகள் இருவரும் வில்லன் போலல்லவா பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்காகத்தான் அவன் பேசுகின்றான் என்பது புரியாமல் முறைக்கிறார்களே என்று அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.
“சரி, அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம். பிள்ளைகளை பேஷண்ட் கூடவே வச்சுருக்க வேண்டாம்னு ஏற்கெனவே டாக்டர் சொல்லிட்டார். நான் வீட்டுக்கு பிள்ளைகளை கூட்டிட்டு போயிருவேன். ஆனால், இங்கே உங்களை பார்த்துக்க ஆள் இல்லை. அதான் என்ன செய்வதுன்னு யோசிக்கிறேன்?” என்றான்.
“நான் வீட்டுக்கு போக ஏற்பாடு பண்ண முடியாதா சார்?” என்று கேட்டாள்.
“நான் மார்னிங்கே போய் டாக்டர்கிட்ட விசாரிச்சுட்டேன். நாளை காலை வரை நீங்க இங்கேதான் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. காலையில் ஒரு முறை செக்கப் பண்ணிட்டு நீங்க ஓகேனா அனுப்புவாங்க…” என்றான்.
அவள் தளர்ந்து போய் பார்க்க, “பிள்ளைகளை பற்றி கவலைப்படாதீங்க ரஞ்சனா. நான் பார்த்துக்கிறேன்…” என்றான்.
“உங்களுக்குத்தான் கஷ்டம்…”
“நோ, எனக்கு அவங்களை பார்த்துக்கொள்வதில் எந்தக் கஷ்டமும் இல்லை. இப்ப உங்களுக்குத்தான் என்ன பண்றதுன்னு பார்க்கணும்…” என்றான்.
“நான் இருந்துக்கிறேன் சார். இங்கேதான் நர்ஸ் எல்லாம் பக்கத்தில் தானே இருக்காங்க…” என்றாள் ரஞ்சனா.
அவர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே அவனின் கைப்பேசி அழைத்தது. எடுத்து பார்த்தவன், யோசனையுடன் பேச ஆரம்பித்தான்.
“சார், ரஞ்சனாமா எந்த ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. அட்ரஸ் சொல்லுங்க…” என்று ரஞ்சனா வீட்டில் வேலை செய்யும் பெண்மணி லதா கேட்டார்.
முகவரியை சொன்னவன், எதற்கு என்று விசாரிக்க, தான் அங்கே இன்னும் சிறிது நேரத்தில் வருவதாக சொன்னார்.
சொன்னபடி சிறிது நேரத்தில் வந்தும் விட்டார். ரஞ்சனாவிடம் நலம் விசாரித்தார்.
“உங்க பேரன் பர்த்டே இருக்குன்னு இன்னைக்கு நைட்தான் வர முடியும்னு சொன்னீங்க?” என்று பிரதாபன் கேட்க,
“ரஞ்சனாமாக்கு இப்படின்னு தெரிந்த பிறகு எனக்கு அங்கே இருப்பு கொள்ளலை சார். அதான் நைட்டே கிளம்பிட்டேன். என்னோட வீட்டுக்கு கூட போகாமல் நேரா இங்கேதான் வர்றேன்…” என்றார்.
சொந்தங்கள் கூட செய்யாத செயலை தனக்காக செய்தவரை ரஞ்சனா நன்றியுடன் பார்க்க, பிரதாபனுக்கும் வியப்புதான்.
அவர் வந்ததால் ரஞ்சனாவை யார் பார்த்துக் கொள்வது என்ற பிரச்சினை தீர, லதாவை மருத்துவமனையில் அவளுக்கு துணையாக இருக்க சொல்லிவிட்டு, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொண்டான் பிரதாபன்.
அன்றைய நாளும் அவனின் பொழுது பிள்ளைகளுடன் கோலாகலமாக சென்றது.