பாலையில் பனித்துளி – 5

அத்தியாயம் – 5

மனிதர்களின் மனம் மரித்ததா? மனிதம் மரித்ததா?

இந்தக் கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் பிரதாபன் தனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தான்

ரஞ்சனாவின் புகுந்த வீட்டு உறவும், பிறந்த வீட்டு உறவும் கொடுத்த பதிலை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

மனிதத்தைத் தின்று மனிதன் என்ன வளர்க்க போகின்றான்?

இந்த உலகத்தையா?

இந்த உலகம் அப்படி அவனுக்கு என்ன திருப்பிக் கொடுத்துவிடும்?

ஆறடி நிலம்! அது மட்டுமே கொடுக்கும்.

மண்ணோடு மண்ணாக மக்கிப் போகப் போகும் மனிதன் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே மனத்தையும் ஏன் மண்ணாக்கி கொள்கின்றான்?

மனிதத்தன்மை துறந்து மண்ணாய் வாழவா கடவுள் தாய், தந்தை, மகன், மகள், பேரன், பேத்தி என்று வழி வழியாக வாரிசை தருகிறார்?

மண்ணுக்குள் அடங்கும் வரை சொந்தம், பந்தம் என்று இருப்பது எல்லாம் ஒருவருக்கு ஒருவர் பிணைந்து இருக்கத் தானே? அதில் வெறுப்பு, துவேசம், வன்மம் வளர்த்து என்ன சாதிக்கப் போகின்றார்கள்?

பெற்றவர்கள் சம்மதம் இல்லாமல் ரஞ்சனா திருமணம் செய்தது தவறாகவே இருக்கட்டும். அதற்காக அவள் உடல்நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையிலும் எப்படி இவ்வளவு வெறுக்க முடிகிறது?

அவள் மீதுதான் கோபம் என்றால், தகப்பனும் இல்லாமல், தாயும் மருத்துவமனையில் படுத்திருக்கும் நிலையில் இந்தச் சிறுபிள்ளைகள் தனியாக என்ன செய்யும் என்ற சிந்தனை கூட ஏன் அந்தப் பெரிய மனிதர்களுக்கு வரவில்லை?

பெரிய மனிதர்களா அவர்கள்? ச்சே!

பிரதாபன் மனம் முழுவதும் வெறுப்பு மண்டிக் கிடந்தது.

காரை மெல்ல மருத்துவமனை நோக்கி செலுத்திக் கொண்டிருந்த பிரதாபனின் பார்வை தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மேல் படிந்தது.

முன் சீட்டில் அமர்ந்தபடி ஹரிணி தூங்கிக் கொண்டிருக்க, அவள் விழுந்து விடாமல் இருக்கச் சீட் பெல்ட்டை போட்டு விட்டிருந்தான்.

பின்னால் இருந்த இருக்கையில் பரத் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன் உருண்டு விழுந்து விடக் கூடாதே என்று காரை மெதுவாகத்தான் செலுத்திக் கொண்டிருந்தான்.

பிள்ளைகள் விழிக்கும் வரை காத்திருக்காமல் தூங்கி கொண்டிருக்கும் போதே காரில் படுக்க வைத்து அழைத்து வந்துவிட்டான்.

அந்தப் பிஞ்சு குழந்தைகளைப் பார்க்க பார்க்க இரக்கம் சுரந்தது.

ரஞ்சனா கண் விழிக்கும் வரை குழந்தைகளைத் தன் பொறுப்பாக்கிக் கொண்டான். அவனுக்கு வேற ஆப்ஷனே இல்லை என்பதுதான் உண்மை.

உறவினர்கள் கையை விரித்ததும், அடுத்தது ரஞ்சனாவின் போனில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பெண்மணியின் எண்ணை தேடினான்.

லதா கேர்டேக்கர் என்ற பெயர் கண்ணில் பட்டது. ரஞ்சனாவின் அலைபேசியிலிருந்து அந்த எண்ணிற்குத்தான் பலமுறை அழைப்பும் சென்றிருந்தது.

வங்கியில் இருக்கும் போது மதிய உணவு இடைவெளியில் கூட லதாவிற்கு அழைப்பு சென்றிருப்பதைப் பார்த்தவனுக்கு, அவர்தான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பெண்மணி என்று உறுதியாகிப் போனது.

அவருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வரச் சொல்ல,

“ஐயோ, என்ன சொல்றீங்க? ரஞ்சனாமாவுக்கு ரொம்ப முடியலையா? நேத்துச் சாயந்தரம் கூட நல்லா இருந்தாங்களே…” என்று பதறிப் போனவர் தொடர்ந்து, “இந்த நேரத்தில் போய் நான் அங்கே இல்லாமல் போனேனே? நான் இப்ப சென்னையில் இல்லைங்கயா. என் பொண்ணு வீடு நெய்வேலி.

அங்கே என் பேரன் பிறந்தநாளுக்குன்னு வந்துட்டேன். நாளைக்கு ஞாயத்துக்கிழமைதான் பிள்ளைக்குப் பிறந்தநாளு. நாளைக்கு நைட் தானே சென்னை திரும்பி போக என் மகள் டிக்கெட் போட்டுருக்கா. இப்ப நான் என்ன பண்ணுவேன்னு தெரியலையே…” என்று புலம்பினார்.

அவரை உடனே கிளம்பி வரச் சொல்லி வற்புறுத்தலாம் என்றுதான் முதலில் நினைத்தான். பின் என்ன நினைத்தானோ, குழந்தைகளை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, அவர் மறுநாள் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டான்.

பிள்ளைகளுடன் மருத்துவமனை சென்று இறங்கிய போது, ஹரிணி விழித்துக் கொள்ள, பரத் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.

தூங்கிக் கொண்டிருந்த பிள்ளையை அலுங்காமல் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

ஹரிணி தூக்கக் கலக்கத்துடன் தள்ளாட, அவளை இன்னொரு கையில் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.

நேராகச் சென்று ரஞ்சனாவின் நிலையைப் பற்றிக் கேட்க, இன்னும் கண் விழிக்கவில்லை என்றனர்.

மீண்டும் மருத்துவரை பார்க்க அனுமதி கேட்டு சென்று பார்த்தான்.

“ரஞ்சனா உடல்நிலை எப்படி இருக்கு டாக்டர்? இன்னும் கண் விழிக்கலையே?” என்று கேட்டான்.

“நாங்க செய்ய வேண்டிய ட்ரீட்மென்ட் எல்லாம் செய்துட்டுதான் இருக்கோம் மிஸ்டர் பிரதாபன். ஆனால், எங்க ட்ரீட்மென்ட்க்கு பேஷண்ட்டும் ஒத்துழைத்து கொடுக்கணும் இல்லையா? நாங்க பார்த்த ட்ரீட்மென்ட்க்கு இந்த நேரம் அவங்க கண் விழித்திருக்கணும். ஆனால், அவங்க எதனாலோ மனதளவில் ரொம்பப் பாதிக்கப்பட்டுருப்பாங்க போலிருக்கு. அது அவங்களை ரெக்கவர் பண்ண விடலை…” என்றார்.

“இதுக்கு வேற வழி இல்லையா டாக்டர்?”

“இன்னும் ஒரு டூ ஹவர்ஸ் பார்ப்போம். அதுக்குப் பிறகும் கண் விழிக்கலைனா வேற ட்ரீட்மென்ட் ட்ரை பண்ணி பார்க்கிறோம்…” என்றவர் ரஞ்சனாவின் உறவினர்களைப் பற்றிக் கேட்டார்.

சுருக்கமாகச் சில விஷயங்களை மட்டும் மருத்துவரிடம் சொல்ல, “ஹோ, காட்! இப்படியும் மனுஷங்க இருக்கத்தான் செய்றாங்க…” என்று சிறிது நேரம் அதைப் பற்றிப் பேசியவர், “அப்புறம் மிஸ்டர் பிரதாபன், பேஷன்ட்டுக்கு வேற ட்ரீட்மென்ட் மாத்தினால் காஸ்ட்லி மெடிசின் எல்லாம் வரவைக்க வேண்டியதாக இருக்கும்…” என்றார்.

புரிந்து கொண்ட பாவனையில் தலையை அசைத்துக் கொண்ட பிரதாபன், “நான் பார்த்துக்கிறேன் டாக்டர். இப்ப கூட நீங்க வேற ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க டாக்டர். என்ன செலவு ஆகுதோ அதை நான் பார்த்துக்கிறேன்…” என்றான்.

“இல்லை… இல்லை… இன்னும் டூ ஹவர்ஸ் பார்ப்போம். இதுவரைக்கும் பிட்ஸ் வராமல் இருப்பதே நல்ல இம்ப்ரூமென்ட்தான். சோ, டூ ஹவர்ஸில் கண் விழிக்கச் சான்ஸஸ் அதிகம்…” என்றார்.

அதில் சற்று திருப்தியுற்றவன், “டாக்டர், ஒரு சின்ன ரெக்வஸ்ட்…” என்றான்.

“சொல்லுங்க…”

“இங்கே ஒரு ரூம் அலாட் பண்ணித் தர முடியுமா டாக்டர்? இரண்டு பிள்ளைகளோட ஐசியூ வாசலில் ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியலை. அதுக்கு நான் தனியா பே பண்ணிடுறேன்…” என்றான்.

“ரஞ்சனாக்குக் கொஞ்சம் சரியானதும் அவங்களை ஐசியூவில் இருந்து ரூமுக்குத்தான் மாத்துவோம். அவங்க கண் விழிக்கட்டும்னு நினைச்சேன். இப்ப உடனே உங்களுக்கு ரூம் அலாட் பண்ண சொல்றேன். அதில் தங்கிக்கோங்க…” என்று மருத்துவர் சொல்ல, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சிறிது நேரத்திலேயே ஒரு அறை கொடுக்கப்பட்டது. அதற்கு முன் தன் உணவை முடித்துக் கொண்டு, தூங்கி எழுந்திருந்த பரத்திற்கும், ஹரிணிக்கும் குடிக்கப் பால் வாங்கிக் கொடுக்க, அவர்களும் சமத்தாகக் குடித்துவிட்டு அவனுடன் இருந்தனர்.

காலையிலிருந்து அவன் கூடவே இருந்ததால் இப்போது பரத் நொய்நொய்யென்று அழாமல் தன் அழுகையை நிறுத்தியிருந்தான்.

ஆனாலும், ஹரிணியும், பரத்தும் அம்மாவை கேட்டுக் கொண்டே இருக்க, அதற்குப் பதில் சொல்லி சமாளிக்கத்தான் பிரதாபன் திணற வேண்டியதாக இருந்தது.

பிள்ளைகளுடன் சேர்ந்து ரஞ்சனா கண் விழிக்கத்தானே அவனும் காத்திருந்தான்.

அவர்களின் காத்திருப்பிற்குப் பலன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிடைத்தது.

ரஞ்சனா கண் விழித்து விட்டதாகவும், மருத்துவர் அவனை அழைத்ததாகவும் சொல்லிவிட்டு சென்றார் ஒரு செவிலி.

“ஹய்! அம்மாவை பார்க்க போறோமா அங்கிள்?” ஹரிணி மகிழ்ச்சியுடன் கேட்க, சிறு புன்னகையுடன் தலையசைத்து, அவளின் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டான் பிரதாபன்.

“பரத், அம்மா பார்க்க போறோம்டா…” என்று சொல்லி அவள் துள்ளி குதிக்க, அக்கா சொன்னது புரிந்தது போல் பரத்தும் கைத்தட்டி குதித்தான்.

அந்தக் குழந்தைகளின் சந்தோஷத்தை வாஞ்சையுடன் பார்த்தபடி அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான் பிரதாபன்.

ஐசியூவிற்கு வெளியே இருந்த ஒரு அறையில் அவனை எதிர் கொண்ட மருத்துவர், “பேஷண்ட்க்கு பீவர் இப்ப நல்லா குறைஞ்சிருக்கு. ஆனாலும், எதுக்கும் இன்னைக்கு ஒரு நாள் எங்க அப்சர்வேஷனில் இருக்கட்டும். மார்னிங் ஒரு முறை செக் பண்ணிட்டு ரூம் மாத்திடலாம்…” என்றார்.

“ஓகே டாக்டர். ரஞ்சனாவை பார்க்கலாமா? பிள்ளைங்க அம்மாவை பார்க்க தவிச்சு போய் இருக்காங்க…” என்றான்.

“பார்க்கலாம். பேஷண்ட்டும் கண் விழித்ததும் குழந்தைகளைத்தான் கேட்டாங்க. பட், சின்னக் குழந்தைங்க பாருங்க. சட்டுன்னு இன்ஃபெக்சன் ஆகிடும். சோ, தள்ளி நின்னே பார்க்க வைங்க. கொஞ்ச நேரம்தான் அலோவ்ட். ரொம்ப நேரம் குழந்தைகளை இங்கே வச்சுருக்காதீங்க…” என்று சொல்லிவிட்டு சென்றார்.

மருத்துவர் சொல்லி சென்ற பிறகு ஒரு செவிலி அவர்களை நெருங்கி கையில் எல்லாம் கிருமி நாசினி போட்டுக் கொள்ளச் சொல்லி, கை, கால் எல்லாம் கிளவுஸ் போட சொல்லி அதன் பிறகுதான் உள்ளேயே விட்டனர்.

மருத்துவ உபகரணங்கள் சூழ படுத்திருந்த ரஞ்சனா, உள்ளே வந்த தன் குழந்தைகளைத் தவிப்புடன் பார்த்தாள்.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்த பிரதாபனை கண்டு அவள் விழிகள் விரிந்தன.

முதல் நாள் மாலை மாமனார், மாமியார் வந்து வாசலில் நின்று பிரச்சினை செய்ததில் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகி இரவெல்லாம் உறக்கம் அண்டாமல் தவித்தவளுக்கு நள்ளிரவே உடல் கொதிக்க ஆரம்பித்திருந்தது.

அதிகாலை திடீரென வலிப்பு வந்து தனியாகத் துடித்து, கட்டிலில் இருந்து விழுந்த வரைதான் ஞாபகத்தில் இருந்தது.

சற்று நேரத்திற்கு முன் கண் விழித்த போது, அவள் மனம் முதலில் பரபரப்பாகத் தேடியது குழந்தைகளைத்தான்.

தான் மருத்துவமனையில் இருக்க, தன் பிள்ளைகள் எங்கே? என்று தவித்துப் போனாள் பெண்.

அவளின் நிலை அறிந்து அருகில் வந்த செவிலிதான் பிள்ளைகள் உங்கள் நெய்பரிடம் பத்திரமாக இருப்பதாகச் சொல்ல, அது ராமநாதனாக இருக்கும் என்றுதான் அவள் நினைத்தாள்.

அது பிரதாபனாக இருக்கும் என்று அவள் சிறிதும் யோசிக்கவில்லை.

முதல் நாள் அவனும் தன் மாமியார், மாமனார் பேசியதை கேட்டுவிட்டதில் சற்று தலைகுனிவாகத்தான் உணர்ந்தாள். வெறும் எதிர் வீட்டுக்காரன் என்று இருந்தால் அவ்வளவு இறக்கமாக உணர்ந்திருக்க மாட்டாளோ என்னவோ. அவன் தன் மேனேஜராக வேறு இருக்க, பெரும் சங்கடமாகி போனது.

தன்னைப் பற்றி அவன் என்ன நினைத்திருப்பான் என்று அவளுக்கு அது வேறு கூடுதல் மனவுளைச்சலைத்தான் தந்திருந்தது.

இப்போது அவனைத் தன் குழந்தைகளுடன் பார்த்து அதிர்வுதான் வந்தது.

ஆனால், அவளை அதே மனநிலையில் இருக்கவிடாமல், பிரதாபன் கையில் இருந்த பரத், “அம்மா…” என்று அவள் மீது தாவ முயன்றான்.

பிள்ளையின் புறம் அவளின் கவனம் திரும்ப, “நோ கண்ணா, அம்மாவுக்கு முடியலை. இப்படியே இரு…” என்று பரத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டான் பிரதாபன்.

இன்னொரு பக்கம், “அம்மா…” என்று ஹரிணி அருகில் செல்ல போக, அவளையும் இன்னொரு கையால் பிடித்துக் கொண்டான்.

தன்னிடம் வரத் துடித்த பிள்ளைகளை வாரி அணைக்க ரஞ்சனாவின் கைகள் பரபரத்தன.

“அங்கிள், விடுங்க… அம்மா… அம்மா…” என்று ஹரிணி கத்த,

“ஷ்ஷ், பாப்.. ம்ம், ஹரிணி… அம்மாவுக்கு ஃபீவர் இன்னும் விடலை. டாக்டர் அம்மாவோட பக்கத்தில் போனால் ஃபீவர் உங்களுக்கும் வந்திடும்னு சொல்லிருக்காங்க. இங்கே நின்னே அம்மாவை பார். இல்லனா அந்தச் சிஸ்டர் வெளியே துரத்தி விட்டுருவாங்க…” என்று பிள்ளைகளின் சத்தம் கேட்டு அங்கே விறுவிறுவென அருகில் வந்து கொண்டிருந்த செவிலியை சுட்டிக் காட்டி மெல்லிய குரலில் அதட்டினான் பிரதாபன்.

அதில் மிரண்டு தவிப்பும் அழுகையுமாக உதட்டை பிதுக்கி ஹரிணி பார்த்தாலும் அடம் செய்வதை நிறுத்தி தன் அம்மாவை தள்ளி நின்று ஏக்கத்துடன் பார்த்தாள்.

அவளுக்குப் புரிந்தது பரத்துக்குப் புரியவில்லை. அவன் அம்மாவிடம் போக வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.

“சார், ப்ளீஸ்… பரத்தை என்கிட்ட கொடுங்க…” என்று ரஞ்சனாவும் கெஞ்ச,

“இந்த அக்கறை உடம்புக்கு இவ்வளவு இழுத்து விட்டு இங்கே வந்து படுக்குறதுக்கு முன்னாடி இருந்திருக்கணும்…” என்று குரலை உயர்த்தாமல் பிரதாபன் ரஞ்சனாவை கடிந்து கொண்டான்.

“சார்…” என்று குற்றவுணர்ச்சியுடன் அவள் விக்கித்து அழைக்க,

“குழந்தைங்க அம்மாவை பார்க்காமல் ஏங்கி போயிருக்காங்கன்னு தான் உள்ளே அழைச்சுட்டு வந்தேன். டாக்டர் கூட எச்சரிக்கை பண்ணித்தான் அனுப்பினார். ஒரு நாளில் பாதி நாள் பிள்ளைகள் நினைப்பு இல்லாமல் மயக்கமாக இருக்க முடிந்தது தானே? இன்னும் கொஞ்ச நேரம் பிள்ளைகளை விட்டு விலகி இருக்கலாம், தப்பில்லை…” என்றான் இரக்கம் இல்லாமல்.

ரஞ்சனாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.

ஆனாலும், அவன் அசையவே இல்லை. பிள்ளைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான்.

ஏதோ மனதளவில் பாதிப்பினால்தான் அவள் கண்விழிக்கத் தாமதம் ஆகிறது என்று மருத்துவர் சொன்னது அவனுக்குள் கோபத்தைக் கனன்ற வைத்திருந்தது.

இரண்டு சிறு பிள்ளைகளைத் தனி ஒருத்தியாய் வைத்துக்கொண்டு, அவர்களைப் பற்றி நினைவில்லாமல் இப்படி இழுத்து விட்டுக் கொண்டது ஏதோ அவள் குற்றம் போலவே பார்த்தான்.

தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டதால் ஆயிற்று. இல்லையென்றால் உறவுகள் நெருங்கா இப்பிள்ளைகள் என்ன செய்திருப்பார்கள்? என்ற கேள்வி அவனுக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ரஞ்சனாவின் கண்களுக்கு அந்த நேரம் இரக்கமில்லாத அரக்கனாகவே தெரிந்தான் அவன். தன் பிள்ளைகளைத் தன்னிடமே வர விடாத தாயின் கோபம் அது.

ஆனால், அந்த அரக்கன்தான் அவள் பிள்ளைகளுக்கு அரணாக இருந்து காத்திருக்கிறான் என்பது தன் இரு பிள்ளைகளும் அவன் கைகளுக்குள் பாந்தமாய் அடங்கியிருப்பதிலிருந்தே புரிந்தது. ஆனாலும், அவன் தன் பிள்ளைகளைத் தொட்டு உணர கூட விட மாட்டேன் என்கிறானே என்று ஆதங்கப்பட்டாள் ரஞ்சனா.

பரத் விடாமல் அழ, “சார், போதும்! குழந்தைகளைக் கூட்டிட்டு போங்க. இங்கே சத்தம் போடக்கூடாது. அவங்களுக்கும் இன்பெக்சன் ஆயிரும்…” என்று செவிலி வந்து சொல்ல,

‘கேட்டது தானே?’ என்பது போல் ரஞ்சனாவை ஒரு பார்வை பார்த்தவன், “ஹாஸ்பிட்டல் ரூமில்தான் குழந்தைகளோட இருக்கேன். இனி பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்பட்டு உடம்புக்கு இன்னும் இழுத்து விடாமல், குழந்தைகளுக்கு நீங்க வேணும்னு நினைச்சுட்டுச் சீக்கிரம் குணமாகி வரும் வழியைப் பாருங்க…” என்றான் அழுத்தமாக.

அவன் குத்திக் காட்டியது உள்ளுக்குள் சென்று குத்தியது.

ரஞ்சனாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிய, “சிஸ்டர், எனக்குச் சரியாகிடுச்சு தானே… இங்கே இருந்து நான் போகணும்…” என்றாள்.

அழுத்தமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரதாபனின் பார்வையைத் தவிர்த்தாள்.

“டாக்டர் உங்களைக் காலையில்தான் ரூமுக்கு மாத்தணும்னு சொல்லிருக்காங்க மேடம். வேற எதுவும் கேட்கணும்னா டாக்டர் வரும்போது கேளுங்க…” என்றார் செவிலி.

“பாப்… ம்ம்…ஹரிணி, அம்மாகிட்ட சொல்லிட்டு வாங்க. நாம ரூம் போகலாம். அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்…” ரஞ்சனா எதுவுமே பேசவில்லை என்ற பாவனையில் சொன்னவனை வெறித்தாள் அவள்.

“அம்மா, சீக்கிரம் வாமா. நாம வீட்டுக்கு போகலாம்…” என்று ஹரிணி சொல்ல,

“சீக்கிரம் வந்துடுவேன் ஹரிமா. தம்பியைப் பார்த்துக்கோ. ” என்று வெடித்து வரத் துடித்த அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னவள், “இரண்டு பேரும் ஏதாவது சாப்பிட்டீங்களா?” என்று தவிப்புடன் கேட்டாள்.

“அங்கிள் நல்லா பார்த்துக்கிறார்மா. தம்பிக்கு சோறு ஊட்டி விட்டார். எனக்கு ரசம் சோறு வாங்கிக் கொடுத்தார். பால் கூடக் குடிச்சோம்மா…” ஹரிணி கண்களை விரித்துச் சொல்ல, ‘இவரா?’ என்பது போல் பிரதாபன் மீது ரஞ்சனாவின் பார்வை பதிந்தது.

இன்னும் அழுது கொண்டிருந்த பரத்தின் கண்களைத் துடைத்துவிட்டு, நீர் ஒழுகிய குழந்தையின் மூக்கை கைக்குட்டையால் துடைத்துவிட்டு, முதுகை தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் பிரதாபன்.

ரஞ்சனாவிற்குச் சுருக்கென்று இருந்தது.

அவன் யார் தங்களுக்கு? தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தலையெழுத்தா என்ன? காரணமே இல்லாமல் அவன் மீது ஏன் கோபம் கொண்டு அரக்கன் என்றெல்லாம் நினைத்தோம். அவன் தன் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? எப்படி அதை யோசிக்காமல் போனேன் என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

அவன் தன்னிடம் கோபம் காட்டியது கூட நியாயம் தானே? பிள்ளைகளைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு ஒரு நாள் முழுவதும் இங்கே வந்து படுத்துக் கிடக்கிறாள்.

தான் இல்லையென்றால் தனது பிள்ளைகளைப் பார்க்க யார் இருக்கிறார்கள்? உறவினர்கள் இருந்தும் இல்லாத நிலை தானே தங்களுக்கு.

அப்படி இருக்க, அவன் மீது கோபம் கொள்ள அவளுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆபத்துக்கு ஓடி வந்து உதவி செய்திருக்கிறானே என்ற நன்றி தானே வர வேண்டும் என்று நினைத்தவள், “நன்றி சார்…” என்றாள் உடனே.

பிரதாபன் கேள்வியுடன் அவளைப் பார்க்க, “என் குழந்தைகளைப் பார்த்து, பாதுகாத்ததுக்கு ரொம்ப நன்றி சார்…” என்றாள் மீண்டும்.

அவள் நன்றியை ஏற்றுக் கொண்ட பாவனையில் தலையை அசைத்தான் பிரதாபன்.