பாலையில் பனித்துளி – 4
அத்தியாயம் – 4
மதியம் ஆகிவிட்டது. இன்னும் ரஞ்சனா கண் விழிக்கவில்லை.
பால் குடித்து மட்டும் தன் வயிற்றை நிரப்பி இருந்த பரத், பிரதாபன் தோளில் சாய்ந்து அப்படியே தூங்கிப் போயிருந்தான்.
நடுவில் ஹரிணி பாத்ரூம் போக வேண்டும் என்று சொல்ல அழைத்துப் போய் வந்திருந்தான்.
தூக்கத்திலேயே பரத் அவன் மீது இரண்டு முறை ஈரமாக்கி இருந்தான்.
எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு தேமே என்று அமர்ந்திருந்தான் பிரதாபன்.
மதியத்தை நெருங்கும் வேளையில் ஹரிணி பசி என்று சொல்ல, அதே நேரத்தில் பரத் விழித்து அழ ஆரம்பித்திருந்தான்.
தூக்கி விழித்ததும் தான் யாரோ ஒருவன் கையில் இருப்பதைக் கண்டு மிரண்டு அழ ஆரம்பித்தவனின் அழுகையைப் பிரதாபனால் அடக்கவே முடியவில்லை.
செத்தால்தான் சுடுகாடு தெரியும் என்பது போல் பிள்ளைகளைப் பற்றி அறிந்திருந்தால் தானே பிள்ளை வளர்ப்பு பற்றித் தெரியும்.
தனக்குத் தெரிந்தவரையில் எப்படி எப்படியோ சமாளித்து, காலையிலிருந்து நீ பார்த்துக் கொண்டிருப்பவன் நான்தான் என்று அவனுக்கு உணர்த்தி எப்படியோ சிறிது சமாளித்தான்.
ஆனாலும், பரத்தின் அழுகை முழுதாக நின்றிருக்கவில்லை.
பசியில் அவன் சிணுங்கிக் கொண்டே இருக்க, உணவகத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் ஒரு போராட்டம்.
ஆனாலும், காலையில் போல் பிடிவாதம் பிடிக்காமல் பரத் இப்போது சிறிது சாப்பிட்டான். பசி அவனைச் சாப்பிட வைத்திருந்தது.
அவனளவு ஹரிணி பெரிதாகத் தொந்தரவு தரவில்லை. தனக்கு ரசம் சாதம் மட்டும் போதும் என்று அதை மட்டும் ஊற்றி அவளே சாப்பிட்டுக் கொண்டாள். அவளே சுத்தமாகக் கையைக் கழுவிக் கொண்டாள்.
அவள் அடிக்கடி கேட்டுத் தொந்தரவு செய்தது அம்மாவை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே.
பரத் சாப்பிடுகிறேன் என்ற பேர்வழியில் முகம் முழுவதும் ஈசிக்கொண்டு, கையை எல்லாம் சாதத்தில் விட்டு குழப்பி என்று பிரதாபனை தலையால் தண்ணி குடிக்க வைத்தான்.
குழந்தைக்கு ஊட்டுவது அவனுக்குப் புதுமையான அனுபவமாக இருந்தது.
பரத் ஓரளவு வயிறு நிரம்பியதும் உணவை வாங்க மறுக்க, அவனைத் தூக்கி சென்று முகம் கை, கால் எல்லாம் கழுவி தூக்கி வந்தான்.
ஏற்கெனவே தூக்கத்தில் அவன் ஈரம் செய்ததில் உடை ஈரமாக இருக்க, இப்போது இன்னும் ஈரமாகி போனது. அதோடுதான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரிந்தான்.
அவர்கள் உண்டதும் கிளம்ப, “அங்கிள் சாப்பிடலை?” எனக் கேட்டாள் ஹரிணி.
ஒரு நொடி குழந்தையைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டான் பிரதாபன்.
அவன் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிட்டிருக்கவில்லை.
காலையில் கண்விழித்ததும் அப்படியே எழுந்து வந்திருந்தான்.
பல் கூடத் துலக்கி இருக்கவில்லை. இங்கே வந்து பரத்தை சமாளிக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
அவன் தூங்கிய நேரத்திலும் கைகளில் வைத்துக்கொண்டே இருந்ததில் எங்கும் அசையவில்லை.
இதில் குழந்தை வேறு அவன் மீது ஈரம் செய்து வைத்திருக்க, அதனுடனே இருப்பது அவனுக்கு அவ்வளவு அசவுகரியமாக இருந்தது.
இதில் எங்கிருந்து உணவு இறங்கும்?
ரஞ்சனா இப்படிக் கண்விழிக்காமல் இருக்கும் நிலையில் வீட்டிற்கும் செல்ல முடியவில்லை.
அதனால் பசி இருந்தாலும் உண்ணுவதையே தவிர்த்து வந்தான் பிரதாபன்.
குழந்தை அவன் உண்ணாததைக் கவனித்துக் கேட்டது எங்கோ ஒரு மூலையில் எதையோ தட்டிய உணர்வு.
அந்த உணர்வை ஒரு நொடி கண்கள் வழியே வெளியிட்டவன், குழந்தைக்குப் பதில் எதுவும் சொல்லாமல் மருத்துவமனைக்குள் அழைத்துப் போனான்.
குழந்தைகளுடன் மீண்டும் வந்து மருத்துவமனை வெளியே பிரதாபன் அமர, அவனைக் காலையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த செவிலி ஒருவர் அருகில் வந்து, “பையன் டிரெஸ் ரொம்ப ஈரமா இருக்கே சார். வேற மாத்தலாமே? ரொம்ப நேரம் ஈரத்தில் இருந்தால் சேராமல் போகப் போகுது…” என்றார்.
“வேற ட்ரெஸ் இல்லை சிஸ்டர். இவங்க அம்மா எப்ப கண் விழிப்பாங்கன்னு தெரியாமல் வீட்டுக்கு போகவும் முடியலை…” என்றான் பிரதாபன்.
“வீட்டுக்கு போய்ட்டு வாங்க சார். உங்க போன் நம்பர் கொடுத்துட்டு போங்க. கண்விழித்ததும் தகவல் சொல்றேன். சின்னக் குழந்தை பாருங்க. அதுக்கும் உடம்புக்கு எதுவும்னா சிரமமாகிடும்…” என்றார் செவிலி.
அவனுக்கும் வீட்டிற்குச் செல்ல வேண்டியது இருந்தது. ரஞ்சனாவின் வீட்டில் இருக்கும் அவளின் கைப்பேசியை எடுத்து அதில் அவளின் உறவினர்கள் யார் என்று பார்த்து தகவல் சொல்ல நினைத்தான். காலையில் வரும் போதே அதை எடுத்து வராத தன் முட்டாள்தனத்தை ஏற்கெனவே பல முறை நொந்து கொண்டிருந்தான்.
அவனின் கவனம் முழுவதும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் இருந்ததால், ரஞ்சனாவின் கைப்பேசி பற்றிய நினைவே வரவில்லை.
செவிலி சொன்னது போல் வீட்டிற்குச் சென்று குழந்தைகளுக்குத் தேவையானது எடுத்துக் கொண்டு, அப்படியே அவளின் உறவினர்களுக்கும் தகவல் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடி குழந்தைகளுடன் வீட்டிற்குக் கிளம்பினான்.
அவன் வெளியே அழைத்துச் செல்வதைப் பார்த்து, ஹரிணி அவனின் கால் சட்டையைப் பிடித்து இழுத்து, “அம்மா…” என்று உள்ளே நோக்கி கை காட்டினாள்.
“அம்மா இங்கே பத்திரமா இருப்பாங்க. நாம வீட்டுக்குப் போய், தம்பிக்கு ட்ரெஸ் மாத்திட்டு, சீக்கிரம் வந்திடலாம்…” என்று சமாதானம் சொல்லி அழைத்துச் சென்றான்.
வரும் போது ஆம்புலன்சில் வந்ததால் இப்போது ஆட்டோவில் கிளம்ப, ஆட்டோ என்றால் பரத்திற்குப் பிடிக்கும் போலும். கையைத் தட்டி சிரித்துக் கொண்டே வந்தான்.
அன்னையின் நிலை அறியாது ஒரு சின்ன விஷயத்திற்கே கையைத் தட்டி ஆர்ப்பரிக்கும் அந்த மழலையின் செயலை பிரதாபன் மனம் வலிக்கப் பார்த்தான்.
முதலில் ரஞ்சனாவின் வீட்டிற்குச் சென்று குழந்தைக்குத் தேவையான இரண்டு மாற்றுடைகள், வீட்டு சோஃபா அருகில் இருந்த ரஞ்சனாவின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குக் குழந்தைகளை அழைத்து வந்துவிட்டான்.
அடுத்தவர்கள் வீட்டிற்குள் சென்று பொருட்களை எடுத்து வருவது அவனுக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், அவனுக்கும் வேறு வழியில்லையே?
அவனின் வீட்டை குழந்தைகள் இருவரும் ஆர்வமாகப் பார்க்க, “முதலில் இரண்டு பேரும் குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்துங்க…” என்றான் பெரியவர்களிடம் சொல்வது போல்.
“நான் ஃபர்ஸ்ட்…” என்று வேகமாகக் கையைத் தூக்கிய ஹரிணி குளிக்கச் சென்றாள்.
“அங்கிள், ஹீட்டர்…” என்று போன வேகத்தில் ஹரிணி குரல் கொடுக்க, சென்று ஹீட்டரை போட்டு விட்டு வந்தான்.
“அங்கிள், தண்ணி கலந்து கொடுங்க…” அடுத்தக் கட்டளை பறந்து வர, அதையும் தான்தான் செய்ய வேண்டுமா? என்ற சலிப்பு பிரதிபலிக்க, சுடுநீரையும், குளிர்ந்த நீரையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தான்.
வந்த வேலை முடிந்து குளியலறை விட்டு வெளியேறும் முன், “அங்கிள், நான் இன்னைக்குப் பிரஸ் பண்ணவே இல்லை…” என்று கண்களைச் சுருக்கி, உதட்டை கோணி அசட்டு சிரிப்புடன் சொல்ல, சலிப்பு மறந்து புன்னகை வந்தது அவன் முகத்தில்.
“இரண்டு நேரம் பிரஸ் பண்ணாமல் சாப்பிட்டாச்சு. இனி பிரஸ் பண்ணினால் என்ன? பண்ணலைனா என்ன பாப்… ம்ம் ஹரிணி…” என்றான்.
“ப்ரஸ் பண்ணலைனா அம்மாவுக்குப் பிடிக்காது…” என்று சொல்லும் போதே அம்மாவின் ஞாபகம் வந்துவிட, முகத்தைச் சுருக்கினாள்.
“ஓகே… ஓகே… கூல்!” என்றவன் பேஸ்ட்டை எடுத்துக் கொடுத்தான்.
“என்னோட பிங்க் பிரஸ்?” அடுத்தக் கோரிக்கை வந்தது.
“அவுச்!” என்று பின்னந்தலையைத் தேய்த்து விட்டவன், “திரும்ப எல்லாம் உங்க வீட்டை திறக்க முடியாது பாப்… ம்ம் ஹரிணி. கையில் தேய். பிரஸ் எல்லாம் நாளைக்குப் பார்க்கலாம்…”
அளவோடு பேசுபவனை அளவுகோலை தாண்டி பேச வைத்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.
அவன் சொன்னதை ஏற்று அரைகுறையாகத் தலையை ஆட்டினாள் பெண்.
அவளுக்கு எல்லாம் செய்துவிட்டு வெளியே வர, இங்கே பரத் டீவி அருகில் இருந்த கண்ணாடி பூ ஜாடியை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.
“ஏய்… ஏய்… உடைஞ்சிரும்…” அதட்டிக் கொண்டே ஓடி வந்து ஜாடியை ஒரு கையில் பிடித்து நேராக வைத்து, இன்னொரு கையால் பரத்தை அப்பால் தூக்கினான்.
அவன் கத்தலில் பரத் மிரண்டு அழ, ‘இவன் ஒருத்தன் ஆ… ஊனா அழ ஆரம்பிச்சிடுறான்’ தனக்குள் புலம்பிக் கொண்டவன், பரத்தின் ஈர உடையை அவிழ்த்தான்.
ஈர உடையை உடலில் இருந்து அகற்றியதும் சுகமாக இருந்தது போலும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்திருந்த அரிசி பற்களைக் காட்டி பளிச்சென்று சிரித்தான் குட்டி.
அச்சிரிப்பு அப்படியே பிரதாபனின் மனத்தைக் கொள்ளை கொண்டு போனது.
சட்டென்று அழுது, சட்டென்று சிரித்து நிமிடத்துக்கு ஒரு பாவனைக் காட்டும் அம்மழலையில் மனம் வசமிழந்ததோ?
தலையைச் சட்டென்று குலுக்கி விட்டுக் கொண்டான் பிரதாபன்.
செய்ய வேண்டிய வேலைகள் இருக்க, அதைப் பார்க்க முனைந்தான். பரத்தின் இடுப்பில் ஒரு துண்டை கட்டிவிட, பெரிய மனித பாவனையில் வேஷ்டி கட்டியது போல் இருக்க, அது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது போலும். குனிந்து குனிந்து தன்னைப் பார்த்துப் பிரதாபனிடம் ஏதோ சொன்னான்.
அவனின் மழலை பேச்சு பிரதாபனுக்குப் புரியவில்லை. வெறுமனே ‘ம்ம்’ கொட்டியவன், அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
தனது உடையைக் களைந்து இலகு உடைக்கு மாறியவன், பழையதை அழுக்குக் கூடையில் போட்டுவிட்டு, பரத்தின் துணிகளைத் தனியாக ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து வைத்தான்.
ஹரிணி இன்னும் குளித்துவிட்டு வராமல் இருக்க, அதற்குள் ரஞ்சனாவின் போனில் உறவினர்கள் எண் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று நினைத்து அவளின் கைப்பேசியைக் கையில் எடுத்தான்.
அதே நேரத்தில் அவனின் அலைபேசியும் அழைக்க, மருத்துவமனையில் இருந்தோ என்று நினைத்துச் சார்ஜில் போட்டிருந்த போனை விரைந்து சென்று எடுத்தான்.
அழைப்பு மருத்துவமனையிலிருந்து அல்ல. ராமநாதன் அழைத்துக் கொண்டிருந்தார்.
விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஆள் கிடைத்து விட்ட பரபரப்பில் வேகமாக அழைப்பை ஏற்றான்.
“தம்பி, காலையில் போன் பண்ணிருந்தீங்களா? நான் ஊரில் இல்லை தம்பி. இங்கே பழனி முருகன் கோவிலுக்குப் போகணும்னு நானும் என் வொய்பும் காலையில் சீக்கிரமே கிளம்பிட்டோம். பஸ்ஸில் டவர் சரியா கிடைக்கலை. இப்பத்தான் உங்ககிட்ட இருந்து போன் வந்ததைப் பார்த்தேன். எதுவும் முக்கியமான விஷயம்ங்களா?” என்று ராமநாதன் கேட்க,
“ஆமாம் மிஸ்டர் ராமநாதன், இங்கே ஒரு எமர்ஜென்சி…” என்றான் பிரதாபன்.
“எமர்ஜென்சியா? என்னாச்சு தம்பி? உங்களுக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா?” அந்தப் பக்கமிருந்து பரபரப்பாகக் கேள்வி வர,
“ஐயம் ஆல் ரைட் மிஸ்டர் ராமநாதன். இங்கே எதிர் வீட்டில் இருக்கும் ரஞ்சனாவிற்கு…” என்று ஆரம்பித்து நடந்ததை எல்லாம் தெரிவித்தான்.
“அடப்பாவமே! இப்ப அந்தப் பொண்ணு எப்படி இருக்கு தம்பி? பிள்ளைங்க இப்ப எங்கே இருக்காங்க? இரண்டும் பச்சை பிள்ளைகளாச்சே. அந்தப் பொண்ணுக்கு இப்படியா நடக்கணும்…” என்று பதறி புலம்பி கேள்வி எழுப்பினார் மனிதர்.
“ரஞ்சனா இன்னும் கண் திறக்கலை. பிள்ளைங்க என்கிட்டதான் இருக்காங்க. என்னால் இவங்களைத் தனியா சமாளிக்க முடியலை. எனக்கு இப்ப ரஞ்சனா ரிலேட்டிவ் நம்பர் வேணும். அவங்க ரிலேட்டிவ் யார், எங்கே இருக்காங்கன்னு தெரியுமா? நேத்து நைட் இங்கே வந்து ஃபைட் பண்ணிட்டுப் போனாங்களே அவங்க போன் நம்பர்?” என்று அவன் கேட்க,
“அவங்களா? ரஞ்சனா மாமனார் கஜேந்திரன் நம்பர் என்கிட்ட இருக்கு. ஆனால், அவங்க இந்த நேரத்திலும் இடக்குப் பண்ணாமல் வருவாங்களா தெரியலை. அந்தப் பொண்ணு மேல அவ்வளவு கோபமா இருக்காங்க…” என்றார்.
“அதுக்காக விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியாதே? பிள்ளைகளைப் பார்த்துக்கவாவது அவங்க வந்துதான் ஆகணும்…” என்றான்.
“நான் போன் நம்பர் தர்றேன் தம்பி. விஷயத்தைச் சொல்லிப் பாருங்க…” என்றார்.
“ரஞ்சனா பேரன்ட்ஸ் எங்கே இருக்காங்க? அவங்க பற்றிய தகவல் உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை இவங்க வரலைனா, நான் அவங்களுக்கு இன்பார்ம் பண்ணி வரச் சொல்லுறேன்…”
“கஜேந்திரனையாவது ஒரு வகையில் சேர்த்துடலாம். ரஞ்சனா அப்பா, அம்மா வருவது கஷ்டம். அந்தப் பொண்ணோட அப்பா, அம்மா எல்லாம் தூத்துக்குடி பக்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டுருக்கேன் தம்பி. ஆனால், நான் அவங்களைப் பார்த்தது கூட இல்லை. அவங்களும் பொண்ணைப் பார்க்க வந்தது இல்லை. இவ்வளவு ஏன் ரஞ்சனா புருஷன் செத்த எழவுக்குக் கூட அவங்க வரலை. என்ன மனுஷங்களோ…” என்றார் ராமநாதன்.
“வாட்! அதெப்படி?” என்று திகைத்து கேட்டான் பிரதாபன்.
“ரஞ்சனாவும் அவள் புருஷன் மனோகரனும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க தம்பி. அவங்க லவ்வை இரண்டு வீட்டு பக்கமுமே ஏத்துக்கலை. வீட்டை எதிர்த்துட்டுதான் கல்யாணம் பண்ணிருக்காங்க.
பெத்தவங்க ஆதரவு இல்லாமல் தனியா வாழ்ந்து காட்டிருக்காங்க. நேத்து வீட்டை கேட்டுச் சண்டை போட்டாங்களே அவங்க இரண்டு பேரும் மகன் உயிரோட இருக்கும் வரை எட்டிப் பார்த்தது இல்லை. அவன் செத்ததுக்குத்தான் வந்தாங்க. அப்படி வந்தவங்கதான் இப்ப அந்தப் பொண்ணை நிம்மதியா வாழ விடாமல் வீட்டை கேட்டு நிக்கிறாங்க. அவங்களா அந்தப் பொண்ணைப் பார்த்துக்கப் போறாங்க?” என்று கேட்டார்.
பிரதாபனுக்கு மனம் கஷ்டமாகிப் போனது.
ஆனாலும், ரஞ்சனாவின் நிலை பற்றி உறவினர்களிடம் மறைக்கவும் முடியாதே?
தான் ஒரு அந்நிய நபர், ஓரளவுதான் உதவி செய்ய முடியும். முதலில் அவளின் உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லலாம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்து கொண்டவன், ரஞ்சனாவின் மாமனார் நம்பரை ராமநாதனிடம் வாங்கிக் கொண்டான்.
அப்படியே ரஞ்சனா வீட்டில் வேலை செய்யும் பெண்மணி பற்றி விசாரிக்க, அவரின் அலைபேசி எண் தன்னிடம் இல்லை என்ற ராமநாதன், ரஞ்சனாவின் விடுமுறை தினமன்று அவர் வேலைக்கு வருவதில்லை என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.
அவன் அவரிடம் பேசி முடித்த போது ஜிலீரென்று சத்தம் கேட்க, பதறி திரும்பிப் பார்த்தான். அவன் சற்று முன் காப்பாற்றி வைத்த பூ ஜாடி தரையில் விழுந்து சில்லு சில்லாக உடைந்திருக்க, ஜாடி உடைந்த அதிர்வில் வீறிட்டு அழுது கொண்டிருந்தான் பரத்.
அவன் கண்ணாடியை மிதித்து விடக்கூடாதே என்று பதறி ஓடிச் சென்று பிள்ளையைத் தூக்கி சோஃபாவில் விட்டான்.
“அங்கிள்…” என்று குளித்து முடித்திருந்த ஹரிணியும் ஒரு கவுனை மாட்டிக் கொண்டு ஓடி வர, அவளையும் சட்டென்று கைப்பற்றிப் பிடித்து அவளின் தம்பியின் அருகில் அமர வைத்தவன், கையை இடுப்பில் வைத்து உஷ்ணமாய் மூச்சு விட்டான்.
உடைந்து கிடந்திருந்த ஜாடியையும், தம்பியையும், பிரதாபனின் உணர்ச்சியற்ற முகத்தையும் பார்த்து, திட்ட போகின்றானோ என்று பயந்து பார்த்தாள் ஹரிணி.
பிள்ளைகளின் பயத்தின் முன் அவன் உஷ்ணம் எல்லாம் செல்லாக்காசாகி போனது.
ஒரு நொடி கண்ணை மூடி திறந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “உன் தம்பியை கீழே இறங்க விடாமல் பார்த்துக்கோ. நான் சொல்ற வரை நீயும் அந்த இடத்தை விட்டு அசைய கூடாது…” என்று ஹரிணியிடம் சற்று கராராகச் சொல்லிவிட்டு, உடைந்த கண்ணாடித் துண்டுகளைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
பரத் பயத்தில் அதே இடத்தில் ஈரம் செய்திருக்க, அவன் இடையில் கட்டி விட்டிருந்த துணியும் ஈரமாகி கீழே அவிழ்ந்து விழுந்திருந்தது.
அந்தத் துண்டை எடுத்து அழுக்குக் கூடையில் போட்டவன், பாதி உடைந்திருந்த கண்ணாடிக் குடுவை எடுத்து முதலில் ஓரமாக வைத்தான்.
பின் நொறுங்கிப் போயிருந்த கண்ணாடித் துண்டுகளைக் கூட்டி அள்ளி, சிறு துகள் கூடக் கீழே இல்லை என்பதை நன்றாகப் பார்த்துவிட்டு, இன்னும் சிணுங்கி கொண்டிருந்த பரத்திடம் வந்தான்.
அவனைப் பரத் பயத்துடன் பார்க்க, முகத்தை மென்மையாக்கி கொண்டவன், “குளிக்கப் போகலாம், வா…” என்று அவனைத் தூக்கிக் கொண்டு குளியலைறைக்குள் சென்றான்.
தண்ணீரை பார்த்ததும் பரத் குஷியாகிவிட, அவனைக் குளிக்க வைத்து வெளியே அழைத்து வந்து ஈரத்தை துடைத்து உடை மாற்றிவிட்டு, ஹரிணி அருகில் சோஃபாவில் அமர வைத்தான்.
“நான் குளிச்சிட்டு வரும் வரை இரண்டு பேரும் சேட்டை செய்யாமல் அமைதியா இருக்கணும். அப்பத்தான் அம்மாவை பார்க்க சீக்கிரம் போகலாம்…” என்று சொல்ல, ஹரிணி வேகமாகத் தலையை உருட்ட, பரத் அவனின் முகத்தையே ஏதோ கதை கேட்கும் பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னும் நேரமாக்க கூடாது என்று வேகமாகச் சென்று குளித்துத் தயாராகி வந்த போது, சோஃபாவில் கையைச் சப்பியபடி தூங்கிக் கொண்டிருந்தான் பரத். அவன் அருகில் உறக்கம் சொக்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தாள் ஹரிணி.
“அங்கிள், தூக்கம் வருது…” என்று அவனைப் பார்த்ததும் ஹரிணி சொல்ல,
“அப்படியே சோஃபாவில் படுத்துக்கோ…” என்றான்.
குழந்தைகள் தூங்குவதைப் பார்த்துக் கொண்டே கைப்பேசியை எடுத்து முதலில் ராமநாதன் கொடுத்திருந்த ரஞ்சனாவின் மாமனார் எண்ணுக்கு அழைத்தான்.
அழைப்பு ஏற்கப்பட்டதும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விவரத்தை சொல்ல, “அட! ரொம்பச் சந்தோஷமான விஷயத்தைச் சொல்றீங்களே…” என்று அந்தப் பக்கம் உற்சாகமாக சொல்ல, தான் சரியான ஆளிடம்தான் பேசிக் கொண்டிருக்கின்றோமா என்ற சந்தேகமே வந்துவிட்டது அவனுக்கு.
அலைபேசியைக் காதிலிருந்து எடுத்து நம்பர் சரிதானா என்று அவன் பார்க்க நினைத்த போது, “பரிமளம், அந்த மினுக்கிக்கு ரொம்ப உடம்பு முடியலையாம். இப்பவோ அப்பவோன்னு இருக்காளாம். அந்த ஃப்ளாட் சீக்கிரம் நம்ம கைக்கு வந்திடும்…” என்று அவர் தன் மனைவியிடம் சந்தோஷமாகச் சொல்ல, ‘என்ன மனிதர்கள் இவர்கள்?’ என்று அருவருத்துப் போனான் பிரதாபன்.
அதற்கு மேல் அந்த மனிதத்தன்மை இல்லாத மனிதரிடம் பேச விருப்பமற்று அழைப்பை துண்டித்தான்.
ஒரு மனுசி, அதுவும் அவர்களின் மருமகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சந்தோஷப்படும் மனிதர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்? என்று வெறுப்புடன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
ஒரு உயிரை விட, கல்லும், மண்ணும் கலந்த ஒரு வீடுதான் பெரிதாகிப் போனதா? பிள்ளைகள் எங்கே? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மூன்றாம் மனிதரான ராமநாதன் கேட்ட கேள்வியைக் கூடச் சொந்த பேரன், பேத்தியை பற்றிக் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் அவனை விட்டு போகவே இல்லை.
சில நொடிகள் அவனால் வேறு யோசிக்கவே முடியவில்லை. பின் சுதாரித்து வேறு உறவினர்கள் எண் எதுவும் ரஞ்சனாவின் கைப்பேசியில் கிடைக்குமா என்று பார்க்க நினைத்தான்.
போன் லாக் போடப்பட்டிருந்தது. இதுவேறா என்று அலுத்துக் கொண்டவன், ரஞ்சனாவின் முதல் எழுத்தான ‘R’ என்பதைத் தொடு திரையில் இழுக்க, தவறு என்று வந்தது.
பின் ஏதோ ஞாபகம் வந்தது போல் அவளின் கணவனின் பெயரான மனோகரன் என்பதில் முதல் எழுத்தான ‘M’ என்று போட்டு பார்க்க, போன் திறந்து கொண்டது.
சிறு நிம்மதியுடன் கால் ஹிஸ்ட்ரி சென்று வேகமாக ஆராய்ந்தான்.
அதில் முதல் எண்ணே ‘அம்மா’ என்று பதிவு செய்யப்பட்டிருக்க, சிறு திருப்தியுடன் அந்த எண்ணுக்கு அழைத்தான்.
“ஹலோ யாருங்க…” என்று குரல் கேட்க,
“ஹலோ, நீங்க ரஞ்சனாவோட அம்மாவா?” என்று கேட்டான்.
“ரஞ்சனாவா? அப்படி யாரையும் எனக்குத் தெரியாதுங்க…” என்று கோபமாக மறுப்பு வர, அந்தக் கோபமே அவர்தான் ரஞ்சனாவின் தாயார் என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது.
“இங்கே பாருங்கமா, உங்க கோபத்தை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு கொஞ்ச நேரம் கேளுங்க…” என்றவன் அவர் அழைப்பை துண்டிக்கும் முன் ரஞ்சனாவின் உடல்நிலை பற்றி வேகமாக சொன்னான்.
“கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என்று பட்டென்று இடைபுகுந்த அந்தப் பெண்மணி, “ரஞ்சனான்னு ஒருத்தி செத்து எங்களைப் பொறுத்தவரை ஏழு வருஷம் ஆச்சு. இனி அவளைப் பற்றிய தகவல் எதுவும் எங்களுக்குச் சொல்லாதீங்க. உண்மையிலேயே இழுத்துக்கிட்டு செத்தால் கூட…” என்று சொல்லிவிட்டு பட்டென்று அழைப்பை துண்டித்துவிட, அயர்ந்து போனான் பிரதாபன்.