பாலையில் பனித்துளி – 3

அத்தியாயம் – 3

சனிக்கிழமை காலை ஏழு மணி ஆகியும் எழுந்து கொள்ளாமல் நல்ல தூக்கத்தில் இருந்தான் பிரதாபன்.

அவசர அவசரமாக எழுந்து வேலைகளைப் பார்க்கவோ, ‘நேரம் ஆகிவிட்டது எழுந்து கொள்’ என்று விரட்டவோ யாரும் இல்லை எனும் போது விரைந்து எழ வேண்டிய அவசியம் அவனுக்கு வரவில்லை.

ஆனாலும், என்றும் இல்லாமல் அவனை அந்த நேரத்தில் எழுப்புவது போல் அவன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

அந்தக் கடுப்பில் சோம்பலாய்தான் கண்களைத் திறந்தான் பிரதாபன்.

மீண்டும் கதவு தட்டப்பட்டதில், ‘காலிங்பெல் அடிக்காமல் யாரது கதவை தட்டிக் கொண்டிருப்பது?’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்தபடி படுக்கையறையை விட்டு எழுந்து வந்தான்.

அதற்குள் பொறுமையற்று மீண்டும் கதவு தட்டல்! அவனின் பொறுமை போய்க் கொண்டிருந்தது.

விருட்டென்று வந்து கதவை திறந்தவன், கண்களில் விழுந்த உருவத்தைப் புருவத்தைச் சுருக்கிப் பார்த்தான்.

“அங்கிள்… ப்ளீஸ்… ஹெல்ப்…” என்று தேம்பி தேம்பி அழுதபடி, திக்கி திணறி கேட்டு தன் வீட்டின் பக்கம் கையைக் காட்டிக் கொண்டிருந்தாள் ரஞ்சனாவின் மகள் ஹரிணி.

அவர்கள் வீட்டுப்பக்கம் பார்வையை ஓட்டியவன், ஒன்றும் புரியாமல் குழந்தையைப் பார்த்தான். அழுகையுடனே அவள் பேசியது அவனுக்குப் புரிந்திருக்கவில்லை.

“என்னாச்சு பாப்பா? என்ன கேட்குற?” என்று அவன் சாவகாசமாகக் குழந்தையிடம் விசாரிக்க,

“அம்மா… எழுப்பினேன்… எழலை…” என்று அவள் மீண்டும் அழுது கொண்டே சொல்ல, அப்போதும் அவனுக்குப் புரியவில்லை.

அவனுக்குச் சொல்லி புரிய வைக்க முடியாத குழந்தை, அவன் கையைப் பிடித்து இழுத்து, “அம்மா… எழலை… வாங்க… ஹெல்ப்…” என்று கோர்வையாக இல்லாமல் பேசி அவனைத் தங்கள் வீட்டுக்கு அழைத்தாள்.

ஏதோ உதவி தேவை என்று அவனுக்கு இப்போது புரிந்தது. ஆனாலும், குழந்தை பின்னால் செல்ல யோசித்தான்.

அதே நேரம் திறந்திருந்த கதவினூடே பரத்தின் அழுகையும் கேட்டது.

பிள்ளைகளின் அழுகை மனத்தைப் பிசைவது போல் இருக்க, அதற்கு மேல் தாமதிக்காமல் ரஞ்சனாவின் வீட்டிற்குள் சென்றான்.

வரவேற்பறையையும் தாண்டி அவனைப் படுக்கை அறை பக்கம் குழந்தை அழைத்துப் போக, அங்கே செல்ல முடியாமல் தயக்கத்துடன் நின்றான்.

அவனின் சங்கடம் புரியாமல் குழந்தை அவனை உள்ளே அழைக்க, “நீ அம்மாவை கூப்பிடு…” என்று குழந்தையின் கையை விலக்கிவிட்டான்.

அறைக்குள் ஓடிய ஹரிணி, “அம்மா… அம்மா…” என்று அழைப்பதும், ரஞ்சனாவிடமிருந்து அதற்கு எந்த வித எதிர்வினையும் வராமல் இருப்பதையும் கவனித்தாலும், அவனால் தயங்காமல் உள்ளே செல்ல முடியவில்லை.

குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் பெண்ணல்லவா ரஞ்சனா. அந்தத் தயக்கம் அவனுக்கு.

“ஏங்க, ரஞ்சனா… என்னாச்சு உங்களுக்கு?” என்று வெளியே நின்றபடியே குரல் கொடுத்தான்.

உள்ளே இருந்து ஹரிணிதான் மீண்டும் அவனிடம் ஓடி வந்தாள்.

“அங்கிள்… அங்கிள்… அம்மா… அம்மா…” என்று அவள் என்ன சொல்வது என்று அறியாமல் அழ ஆரம்பிக்க, தன் தயக்கத்தைச் சற்று உதறிவிட்டு உள்ளே சென்றான்.

அங்கிருந்த சூழ்நிலை அசாதாரணமாக இருந்தது.

கட்டிலுக்குக் கீழ் விழுந்து கிடந்தாள் ரஞ்சனா. அவளின் கால்களும், கைகளும் கோணல்மானலாகக் கிடக்க, முகம் ஒரு பக்கமாகத் திரும்பியிருக்க, உதட்டினோரம் வெள்ளையாய் நுரை போல் இருந்தது.

அவள் அருகில் அமர்ந்திருந்த பரத் அன்னையின் மார்பில் தலையைச் சாய்த்து, தன் பிஞ்சு கையால் அவளின் முகத்தை வருடி எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.

ரஞ்சனாவின் இரவு உடை கீழே கெண்டைக்கால் தெரிய ஏறியிருக்க, அவன் உள்ளே வந்ததும், அந்தச் சூழ்நிலையிலும் பொறுப்பாக அன்னையின் உடையை ஹரிணி கீழே இழுத்து சரி செய்து விட்டதைக் கண்டவன், மனத்துக்குள் மெச்சி கொண்டான்.

மேலும் எதையும் சிந்திக்க முடியாமல் சூழ்நிலை உறைக்க, தண்ணீர் எடுத்து வந்து ரஞ்சனாவின் முகத்தில் தெளித்துப் பார்த்தான்.

அப்போதும் ரஞ்சனாவின் மயக்கம் தெளியாமல் இருக்க, ஹரிணியின் அழுகை கூடியது. பரத் நடப்பது புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான்

“ஓகே… ஓகே… கூல்! அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது…” என்று குழந்தைகளுக்குச் சமாதானம் சொன்னவன், அடுத்து நடக்க வேண்டியதை துரிதகதியில் கவனித்தான்.

தன் போனை எடுத்து வந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொன்னவன், அடுத்து ராமநாதனுக்கு அழைத்தான்.

ஆனால், அவரோ அழைப்பை ஏற்கவே இல்லை. அங்கே அவனுக்குத் தெரிந்தவர் அவர் மட்டும்தான்.

முதல் நாள் வந்து கத்தி விட்டு சென்ற ரஞ்சனாவின் மாமனார், மாமியார் பற்றிய விவரம் கூட அவனுக்குத் தெரியாது.

வங்கியில் மற்ற ஊழியர்களின் பேச்சின் மூலம் ரஞ்சனாவின் கணவன் இல்லை என்ற செய்தி மட்டும் அவன் காதுக்கு வந்திருந்தது.

பகலில் அவளின் குழந்தைகளை ஒரு முதிய பெண்மணி பார்த்துக் கொள்கிறார் என்று அறிந்திருந்தான்.

மாலை ரஞ்சனா வேலை விட்டு வந்ததும், அந்தப் பெண்மணியும் குழந்தைகளை பெற்றவளிடம் விட்டுவிட்டு கிளம்பி சென்று விடுவார் என்பதையும் கண்டிருக்கிறான்.

விடுமுறை தினங்களில் பெரும்பாலும் அவன் வீட்டில் இருக்க மாட்டான் என்பதால் இன்று அவர் வேலைக்கு வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை.

குழந்தைகள் இன்னும் அழுது கொண்டிருக்க, தனக்குத் தெரிந்தவரை ஏதோ சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, ரஞ்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

ரஞ்சனாவிற்கு உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்க, வெளியே குழந்தைகளுடன் அமர்ந்திருந்தான் பிரதாபன்.

அன்னைக்கு என்ன ஆனதோ என்று ஹரிணி பயந்து போய் அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்திருக்க, பரத்தோ அவனை அந்நிய நபராகப் பாவித்து அவன் கையில் நிற்காமல் இறங்கி ஓட துடித்துக் கொண்டிருந்தான்.

அவனைச் சமாளித்துக் கைகளில் வைத்துக்கொண்டிருப்பதே பிரதாபனுக்குப் பெரிய சவாலாக இருந்தது.

“ஷ்ஷ், கொஞ்ச நேரம் அமைதியா இரு…” என்று அதட்டிப் பார்த்தான். அந்த அதட்டலில் இன்னும்தான் மிரண்டு அழுதான் பரத்.

“அழாமல் அமைதியா இருக்கணும் கண்ணா. அம்மா வந்திருவாங்க…” என்று கொஞ்சியும் பார்த்துவிட்டான். ஆனாலும், பரத் அவனின் கொஞ்சலுக்கு எல்லாம் மசியவில்லை.

அன்னையை உள்ளே அழைத்துச் சென்றதை பார்த்திருந்தவன் தானும் உள்ளே செல்ல வேண்டும் என்று துடியாகத் துடித்துத் துள்ளிக் கொண்டிருந்தான்.

“நீ உன் தம்பிக்கிட்ட சொல்லி அவனை அமைதியா இருக்கச் சொல்லு பாப்பா…” என்று ஹரிணியைச் சிபாரிசிற்கு அழைத்தான்.

“என் பேரு பாப்பா இல்லை அங்கிள், ஹரிணி…” என்று குழந்தை அவனைத் திருத்த, அழுத்தமாக அவளை ஒரு பார்வை பார்த்தான் பிரதாபன்.

ஹரிணிக்கு அவன் பார்வை பயத்தைக் கொடுத்தது. அவ்வளவு நேரம் அவனின் ஆதரவை நாடி அமர்ந்திருந்தவள் இப்போது சட்டென்று விலகி அமர்ந்தாள்.

குழந்தையின் செயலில் தன் தவறை உணர்ந்தவன், லேசாகச் சிரித்து ‘என்னைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை’ என்ற நம்பிக்கையைக் கொடுத்தான்.

இதுவரை எந்தக் குழந்தைகளுடனும் அவனுக்குப் பேசி பழக்கம் இல்லை என்பதால், இரண்டு குழந்தைகளையும் சமாளிக்கத் தெரியவில்லை

உள்ளே சென்ற மருத்துவர்கள் வெளியே வருவது போல் தெரியவில்லை.

ரஞ்சனாவிற்கு என்ன ஆனது என்று அறிய முடியாதது ஒரு புறம் என்றால், அவளின் உறவினர்கள் யாரை தொடர்பு கொண்டு, விஷயத்தைச் சொல்லி வர சொல்வது என்று புரியாத நிலை ஒரு புறமும், அழுது கொண்டிருக்கும் குழந்தைகளைச் சமாளித்து யாரிடம் ஒப்படைப்பது என்ற திகைப்பு மறுபுறம் என்று குழம்பிப் போய் அமர்ந்திருந்தான் பிரதாபன்.

மருத்துவமனை வந்த பிறகும் ராமநாதனுக்கு அழைத்துப் பார்த்தான். அவர் அப்போதும் எடுக்கவில்லை.

ரஞ்சனா கண் விழித்துவிட்டால் அவளின் உறவினர்களைப் பற்றி அவளிடமே விசாரித்துத் தகவல் சொல்லி வர செய்து, பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டுதான் கிளம்ப முடியும் என்று புரிந்தது.

மருத்துவர் வந்து சொல்ல போகும் தகவலுக்காகக் காத்திருந்தான்.

அதற்குள் அவனின் முழங்கையை மெல்ல சுரண்டினாள் ஹரிணி.

தன்னை இறக்கி விடச் சொல்லி ஏற்கெனவே அவனின் கையை நகத்தால் பிராண்டி கொண்டிருந்தான் பரத்.

இந்த நிலையில் ஹரிணி வேறு சுரண்ட, முதலில் அதைப் பிரதாபன் உணரவே இல்லை.

“அங்கிள்…” என்று மெல்ல அழைத்து மீண்டும் சுரண்டினாள் ஹரிணி.

அதன் பிறகே உணர்ந்தவன், “என்ன பாப்… ம்ம்… ஹரிணி…” என்றான்.

“பசிக்குது அங்கிள்…” என்று வயிற்றைத் தடவி கண்களைச் சுருக்கியவளை கண்டு அவன் மனம் உருகியதோ? கண்களில் மென்மை தெரிந்தது.

ஆனாலும், ரஞ்சனா பற்றித் தகவல் தெரியாமல் எப்படி அங்கிருந்து செல்வது என்று அவன் தயங்கி கொண்டிருந்த நேரத்தில், அறைக்குள் இருந்து ஒரு செவிலி வெளியே வர, அவரை நிறுத்தி விசாரித்தான்.

“ரஞ்சனா எப்படி இருக்காங்க சிஸ்டர்?” என்று கேட்க,

“டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க. வெயிட் பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து விறுவிறுவென்று செல்ல முயல,

“வெயிட் சிஸ்டர், டாக்டர் வர லேட் ஆகுமா? குழந்தைங்க பசியில் அழறாங்க. டாக்டர் வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்று விசாரிக்க,

குழந்தைகளைப் பார்த்த செவிலி, “நீங்க குழந்தைகளைப் பாருங்க. டாக்டர் உங்களைக் கேட்டால் நான் சொல்லிடுறேன்…” என்றார்.

“இங்கே கேண்டின் எங்கே இருக்கு?”

“லெப்ட் போய் ரைட் போனால் வெளியே பார்க்கிங் இருக்கும். அது பக்கத்தில் இருக்கு…” என்று சொல்லிவிட்டு சென்றார்.

“வா பாப்…ம்ம் ஹரிணி…” என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு எழுந்தான்.

அவன் கைகளில் இருந்த பரத்தோ அம்மா இந்தப் பக்கம் இருக்க, அவன் எங்கோ தூக்கி செல்கிறானே? என்பது போல் அரண்டு அலற ஆரம்பித்தான்.

“ஷ்ஷ்! அழக்கூடாது. உனக்குப் பசிக்குதா? ஏதாவது சாப்பிடுறீயா?” என்று கேட்டான் பிரதாபன்.

அவனை ஓட்டி நடந்து வந்து கொண்டிருந்த ஹரிணி, “அழாதேடா பரத். அங்கிள் மம்மம் வாங்கித் தருவார்…” என்றாள்.

பிரதாபன் குரலோ, ஹரிணி குரலோ பரத்தின் செவிகளைத் தீண்டவே இல்லை.

அன்னை இருந்த அறை பக்கம் போகச் சொல்லி கையை நீட்டி அழுதான்.

அவனைச் சமாளித்துக் கொண்டே மருத்துவமனை வெளியே இருந்த கேண்டின் சென்றனர்.

ஹரிணியிடம் என்ன வேண்டும் என்று கேட்டு, அவள் மசால் தோசை என்றதும் அதனை வாங்கிக் கொடுத்தவன், “உன் தம்பி என்ன சாப்பிடுவான்?” என்று கேட்டான்.

தோசையைப் பிய்த்து வேக வேகமாக வாயில் திணித்துக் கொண்ட ஹரிணி, “அவன் இட்லி சாப்பிடுவான். ஆனால், அம்மா இல்லைனா ஆயாதான் ஊட்டி விடுவாங்க. அவனா சாப்பிட மாட்டான்…” என்றாள்.

இதுவேறா? என்று நினைத்தாலும் வயிறு நிறைந்தால் அழுகையை நிறுத்துவானோ என்று தோன்ற, இட்லியை வாங்கி வந்து, பரத்தை தன் மடியில் அமர வைத்து இட்லியை பிய்த்து வாயில் வைக்க, அவனோ உதடுகளை இறுக மூடிக் கொண்டு வாயைத் திறக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தான்.

“அடேய் கண்ணா…” என்று அதட்டலாக ஆரம்பித்தவன் பின் ஏதோ நினைத்துக் கொண்டது போல் நிறுத்தி, “உன் தம்பி பேர் என்ன?” என்று ஹரிணியிடம் கேட்டான்.

“பதத்…” வாயில் தோசையை வைத்துக் கொண்டே ஹரிணி சொல்ல,

“பதத்தா?” இப்படி ஒரு பேரா என்பது போல் அவன் முழிக்க,

“ஹய்யோ அங்கிள், அவன் பேர் பரத்…” என்று தோசையை முழுங்கிவிட்டுத் தலையில் அடித்துக் கொண்டு சொன்னாள் குழந்தை.

அவள் சொன்ன விதம் அழகாக இருந்தது. ஆனால், ரசிக்கக் கூடிய நிலையில்தான் பிரதாபன் இல்லை.

அவனுக்கு அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதும் சற்று அசவுகரியமாக இருந்தது.

அவ்வளவு விரைவில் யாரிடமும் பேசிப் பழகியிறாதவனுக்கு இரண்டு குழந்தைகளுக்கு ஏற்றவாறு இறங்கி பேசி, கொஞ்சி சமாதானம் செய்வதே தன் இயல்பை தொலைப்பதாக உணர்ந்தான்.

ஆனாலும், பிள்ளைகளின் மற்ற உறவினர்கள் வரும் வரை அவர்களின் பொறுப்பு அவனுடையதாக இருக்க, பின்வாங்கிச் செல்ல நினைத்தாலும் முடியாதே என்ற அலுப்பு பெருமூச்சுடன் பரத்தை உண்ண வைக்கப் போராடினான்.

“சாப்பிடு பரத். சாப்பிட்டால்தான் அம்மாவை பார்க்க போகலாம்…” என்றவனின் பேச்சை பரத் கவனித்தால் தானே?

அந்த ஆறடி ஆண்மகன் அவனுக்கு அசுரனாய் அல்லவா தெரிந்தான்.

அதற்குள் உண்டு முடித்திருந்த ஹரிணி, தம்பியையும், அவனையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

ஒரு வாய் உணவு கூட வாங்க மாட்டேன் என்று அடம் பிடித்தவனைச் சமாளிக்க முடியாமல் பிரதாபன் தடுமாறினான்.

வம்படியாக ஊட்டி விட்டாலும் அதை அப்படியே துப்பினான் பரத். நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர, அவன் சாப்பிடுவான் என்ற நம்பிக்கை இல்லை அவனுக்கு.

இங்கேயே இப்படியே அமர்ந்திருக்க முடியாது. மருத்துவரையும் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தவன், அதற்கு மேல் முடியாமல் ஊட்டும் முயற்சியைக் கை விட்டான்.

“இந்தப் பாலை மட்டுமாவது குடிச்சிடு தருண். கொஞ்ச நேரம் பசி தாங்கும்…” பக்கத்து மேஜை அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், தன் குழந்தையிடம் கெஞ்சி பாலை குடிக்க வைப்பது பிரதாபன் கண்ணில் விழுந்தது.

“உன் தம்பி பால் குடிப்பானா?” என்று ஹரிணியிடம் விசாரித்தான்.

“ம்ம் அங்கிள்…” என்று பெரிதாகத் தலையை ஆட்டினாள் குழந்தை.

பாலை வாங்கி வந்தவன், பக்கத்து மேஜை பெண் செய்தது போல் பாலை நன்றாக ஆற்றி டம்ளரை பரத்தின் வாயில் வைத்து சிறிது சிறிதாக ஊட்ட முயன்றான்.

பரத்தோ தலையைத் திருப்பித் திருப்பி ஆட்டி மறுத்தவன், அவன் கையில் இருந்த பால் டம்ளரை தட்டிவிட முயன்றான்.

“ஏய்!” குரலை உயர்த்திப் பிரதாபன் அதட்டிவிட, மிரண்டு விழித்த பரத் வீறிட்டு அழ ஆரம்பித்தான்.

ஹரிணியும் பயந்து அழுவது போல் அவனைப் பார்த்தவள், “சிப்… சிப்பரில்தான் அவன் குடிப்பான் அங்கிள்…” என்று தேம்பியபடி சொன்னாள்.

குழந்தைகளை அழ வைத்து விட்டோமே என்று ஒரு மாதிரி ஆனவன், நெற்றியை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டான்.

மேஜையில் மேல் அமர வைத்திருந்த பரத்தை தூக்கி தோளோடு அணைத்து, “ஓகே… ஓகே…” என்று முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டே, சிப்பர் எங்கே வாங்கலாம் என்று யோசித்தபடி சுற்றுமுற்றும் பார்த்தான்.

கேண்டின் எதிரே சற்று தள்ளி பிறந்த குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடை ஒன்று கண்ணில்பட, “நீ இங்கேயே இரு பாப்…ம்ம்… ஹரிணி… அங்கிள் போய்ச் சிப்பர் வாங்கிட்டு வர்றேன்…” என்று அவளிடம் சொல்லி விட்டு, பரத்தை தூக்கிக் கொண்டே கடைக்குச் சென்றான்.

கடையைப் பார்த்ததும் சற்று அழுகையை அடக்கி பரத் வேடிக்கை பார்க்க, அவன் அங்கே இருந்த ஒரு பொம்மையையே பார்ப்பதை கவனித்து, சிப்பருடன் பொம்மை ஒன்றையும் வாங்கிப் பரத் கையில் கொடுத்தான்.

அழுகையை நிறுத்தவில்லை என்றாலும், அவன் கொடுத்த பொம்மையை மறுக்காமல் வாங்கி நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் பரத்.

மீண்டும் கேண்டின் வந்து சிப்பரை கழுவி, அதில் பால் ஊற்றி, பரத்திற்குக் கொடுக்க, கையில் வைத்திருந்த பொம்மையை உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டே பாலை குடிக்க ஆரம்பித்தான்.

இதையாவது குடிக்கிறானே என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான் பிரதாபன்.

ஹரிணி என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவளோ தம்பியின் கையில் இருந்த பொம்மையை விழிகளில் ஆசை பொங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் அவளுக்கும் ஒன்று வாங்கி வந்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

ஆனாலும், பரத்திற்கு வாங்கியதே இன்னும் சிறு குழந்தைக்களுக்கான பொம்மை அது. பரத் வயது பிள்ளைகளுக்கானது கூட இல்லை. அப்படியிருக்க ஹரிணி எல்லாம் வைத்து விளையாட அது சரிவராது. ஆனாலும், அவளும் குழந்தை தானே? பொம்மை மீதான ஆசைக்கு வயது வரம்புதான் ஏது?

பரத் பாலை குடித்து முடித்ததும், இருவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றான்.

வயிறு சற்று நிரம்பியதாலோ என்னவோ, பரத் முன் போல் அழவில்லை.

ரஞ்சனா இருந்த அறைக்கு அருகில் சென்ற போதே எதிரே வந்த செவிலி, “டாக்டர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார் சார். அவர் ரூமில் இருக்கார். போய்ப் பாருங்க…” என்றார்.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேராக மருத்துவரை பார்க்கச் சென்றான்.

“குழந்தைகளை யார்கிட்டயாவது வெளியே விட்டுட்டு வரலாமே?” என்று மருத்துவர் சொல்ல,

“வேற யாரும் குழந்தைகளைப் பார்த்துக்க இல்லை டாக்டர். நானே இவங்க நெய்பர்தான்…” என்றான் பிரதாபன்.

“ஓ, அப்போ பேஷண்டோட ரிலேஷனுக்குத் தகவல் சொல்லிட்டீங்களா?”

“அவங்க ரிலேஷன் யாருன்னு எல்லாம் எனக்குத் தெரியாது டாக்டர். ரஞ்சனா கண்விழித்து யாரையாவது சொன்னால்தான் அவங்களுக்குத் தகவலே கொடுக்க முடியும். ரஞ்சனா எப்படி இருக்காங்க டாக்டர்? அவங்களுக்கு என்ன பிரச்சினை?”

“அவங்களுக்குப் பிட்ஸ் வந்திருக்கு. பிட்ஸ் வந்து ரொம்ப நேரம் ஆகியிருக்கு. அதுவரை யாரும் கவனிக்காமல் அப்படியே மயக்கமாகியிருக்காங்க. இப்ப அவங்களுக்கு ஃபீவரும் இருக்கு. நாங்க ட்ரீட்மெண்ட் பார்த்திருக்கோம். ஆனால், இன்னும் மயக்கத்தில்தான் இருக்காங்க…”

“ஓ, மயக்கம் தெளிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்? வேற எதுவும் பிராப்ளம் இல்லையே?”

“ஃபீவர் குறையணும். குறையலைனா திரும்பப் பிட்ஸ் வர சான்ஸ் இருக்கு. பிட்ஸ் வந்தால் இன்னும் கிர்ட்டிக்கல் ஆகும். நாங்க அப்படி ஆகாமல் பார்த்துக் கொள்ளத்தான் முயற்சி எடுத்துட்டு இருக்கோம். நீங்க நெய்பர்னு சொல்றீங்க. அவங்க ரிலேட்டிவ் பற்றி, யார்கிட்டயாவது விசாரிச்சி அவங்களை வரச் சொல்லுங்க… என்றார் மருத்துவர்.

“பார்க்கிறேன் டாக்டர்…” என்று எழுந்து வந்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.

“அம்மாகிட்ட போகலாமா அங்கிள்?” என்று கேட்டு யோசனையுடன் நின்றிருந்தவனைக் கலைத்தாள் குழந்தை ஹரிணி.

தமக்கை ‘அம்மா’ என்றதும் பரத் ஆர்வத்துடன் அவன் முகம் பார்க்க, அந்தக் குழந்தைகளைக் கண்டு அந்த ஆண்மகனின் மனம் கலங்கித்தான் போனது.