பாலையில் பனித்துளி – 2

அத்தியாயம் – 2

“என்ன ரஞ்சி, சாப்பிட வரலையா?” என்று ரஞ்சனாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் சுவாதி கேட்க,

“வரணும் சுவாதி…” என்ற ரஞ்சனா, சிறு புன்னகையுடன் அமைதியாகி விட,

“அவங்க வீட்டுக்கு போன் பண்ணிட்டு எப்பவும் போல லேட்டாத்தான் வருவாங்க‌. நாம போய்ச் சாப்பிட ஆரம்பிப்போம் சுவாதி…” என்று அவர்களுடன் பணிபுரியும் இன்னொரு பெண்ணான உஷா சொல்ல,

“அதென்னவோ சரிதான். போகலாம்‌…” என்று எழுந்த சுவாதி, உஷாவுடன் சேர்ந்து சாப்பிட சென்றாள்.

சென்றவர்களை நிமிர்ந்து பார்த்த ரஞ்சனாவிற்கு, அவர்கள் மதிய உணவுடன் தன்னையும் சேர்த்து மெல்லுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

ஆனாலும், ரஞ்சனா அதைக் கண்டுகொள்வதே இல்லை.

ஒரே இடத்தில் சேர்ந்து வேலை பார்த்தாலும், ரஞ்சனா அங்கிருந்தவர்களிடம் அளவாகத்தான் பேசுவாள்.

பெரும்பாலும் அவர்கள் அவளிடம் பேச்சுக் கொடுத்தால் மட்டுமே பதில் சொல்வாள். அதைத் தவிரத் தானாக வலியச் சென்று பேசி, ஊர் விஷயங்களையும் சேர்த்து மெல்லுவது என்பது அவளுக்கு அறவே பிடிக்காது.

தன் வாழ்க்கையையே பல பேர் மென்று கொண்டிருக்க, அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பார்க்க அவளுக்கு எங்கே நேரம் இருந்தது?

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளக் கூட நேரமில்லாமல் அவள் ஓடிக்கொண்டிருப்பது அங்கு இருப்பவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

அந்த வங்கியில் வேலை செய்யும் அனைவரும் சாப்பிட சென்று விட, இருக்கையில் தான் மட்டும் அமர்ந்திருந்த ரஞ்சனா, தன் கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்துக் கொண்டு வங்கியின் வெளியே சென்றாள்.

வங்கியின் பக்கவாட்டில் உபயோகப்படுத்தாத மாடிப்படிகள் இருக்கும்.

அந்தப் பக்கம் சென்று நின்று கொண்டவள், லதாவின் அலைபேசிக்கு அழைத்தாள்.

சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட, “பரத் என்ன செய்றான் லதாமா? சாப்பிட்டானா?” என்று விசாரித்தாள்.

“எங்கம்மா? இன்னைக்கு உன் பையன் ரொம்பத்தான் ஆட்டம் காட்டுறான். நானும் ஒரு மணியிலிருந்து போராடுறேன்… இன்னைக்கு என்னவோ வாயே திறக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றான்…” என்று அவளின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பெண்மணியான லதா அலுத்துக் கொள்ள,

“என்னாச்சு அவனுக்கு? ஏன் இப்படிப் பண்றான்?” என்று தாயாக வருந்திய ரஞ்சனா, “அவன்கிட்ட போனை குடுங்க. நான் பேசிப் பார்க்கிறேன்…” என்றாள்.

“பரத், உங்க அம்மா கூப்பிடுறாங்க கண்ணு. இங்க ஓடி வா…” என்று லதா குரல் கொடுப்பதும், “ம்மா, ம்மா…” என்று மகன் அந்தப் பக்கம் பெரிதாகக் கத்தி கொண்டு ஓடி வருவதும் சத்தமாகக் கேட்க, மகனின் குரலை கேட்டதும் தாயின் மனம் பூரித்தது.

“அல்லோ, ம்மா… வீத்துக்கு வா. வீத்துக்கு…” என்று போனை வாங்கியதும் பரத் பெரிதாகக் கத்த,

“வரேன்டா பரத் குட்டி, அம்மா ஈவ்னிங் வர்றேன், சரியா? இப்ப ஏன் சாப்பிடலை? ஆயாகிட்ட சாப்பிட்டு சமத்தா இருந்தால்தான் அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வருவேனாம்…” என்று ரஞ்சனா சொல்ல,

“சீக்கம் வாமா… பதத்து குத்தி சாப்துதேன்…” என்று மழலையில் மிழற்றினான் பிள்ளை.

“வந்துடுறேன்டா குட்டி…” என்று மகனிடம் பேசி சமாதானம் செய்து, லதாவிடம் இப்போது அவனுக்கு உணவு கொடுக்கும்படி பணிந்துவிட்டு, அலைபேசியை வைத்த ரஞ்சனா வங்கிக்குள் நுழைய போக, அப்போது உள்ளே இருந்து வெளியே வந்தான் பிரதாபன்.

எதிர் எதிரே வந்தவர்களின் விழிகள் ஒரு வினாடி சந்தித்து விலகிக் கொள்ள, அவர்கள் கால்களும் அவரவர் வழியில் விலகிச் சென்றன.

பிரதாபன் அங்கே வந்து பத்து நாள்களைக் கடந்து விட்டன. இருவரும் எதிர் எதிர் வீட்டில் இருந்தாலும் ஒரே வங்கியில் வேலை செய்கிறோம் என்று காட்டிக் கொள்ளவும் இல்லை. வேலையாக வங்கியில் பேசிக் கொள்வதைத் தவிர எங்கேயும் பேசிக் கொண்டதும் இல்லை.

உடன் வேலை பார்ப்பவர்களிடம் பிரதாபனின் இருப்பிடம் தன் வீட்டின் அருகில்தான் என்று கூட, ரஞ்சனா சாதாரணமாகப் பேசிக் கொண்டதில்லை.

தன் இருக்கைக்குச் சென்ற ரஞ்சனா தன் உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு சாப்பிடும் இடம் சென்றாள்.

அவள் நினைத்தது போலவே அவர்கள் வாய் அரைத்துக் கொண்டுதான் இருந்தது. அரைப்பட்டவன் புதிய மேனேஜராக வந்திருக்கும் பிரதாபன் தான்.

“ஒரு விஷயம் கவனிச்சியா சுவாதி? நம்ம புது மேனேஜர் சார் ரொம்பச் சைலண்ட் போல. தேவைக்கு மேல அவர் வாயிலிருந்து ஒரு முத்து கூட உதிர மாட்டிங்கிது…” என்றாள் உஷா.

“அவர் அந்த டைப் போல. அதை விட, நீ இன்னொன்னு கவனிச்சியா? இந்தப் பத்து நாளும் மேனேஜர் மதியம் சாப்பாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூரணி ஹோட்டலுக்குத்தான் போறார். அவங்க வொய்ப் என்ன பண்ணுவாங்க? சமைச்சு எல்லாம் கொடுக்க மாட்டாங்களா? மனுஷன் பாவம் ஹோட்டல் சாப்பாடே கதின்னு கிடக்குறார்…” என்றாள் சுவாதி.

“சுவாதிமா உங்களுக்கு விஷயம் தெரியாதா? சார் சம்சாரி இல்லை. ஒண்டிக் கட்டை…” என்று அவர்களை விட்டு தள்ளி அமர்ந்து உண்டு கொண்டிருந்த அட்டன்டர் கதிர் சொல்ல,

“என்ன சொல்ற கதிர்? அவர் வொய்ப் அவரோட இல்லையா?” என்று வாயைப் பிளந்து கேட்டாள் சுவாதி.

உஷாவும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பார்க்க, அங்கே இருந்த இன்னும் இரண்டு ஆடவர்களும், அவர்களை விட இளையவளாக இருந்த ஜனனி என்ற பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டே அவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தனர்.

ரஞ்சனா கேட்க வேண்டும் என்று நினைக்காமலே அனைத்தும் காதில் வந்து விழுந்து கொண்டிருந்தது.

“அட, அவருக்குக் கல்யாணமே ஆகலைன்னு சொல்றேன்…” என்று கதிர் சொல்ல,

“வாட்! கல்யாணம் ஆகலையா? அவருக்கு எப்படியும் நாற்பது வயசு மேல இருக்குமே… இன்னுமா கல்யாணம் ஆகலை?” என்று உஷா அதிர்ச்சியாகக் கேட்க,

“ஒருவேளை நைன்டீன் கிட்ஸா இருக்குமோ?” என்று கேலியாக‌ கேட்டாள் ஜனனி.

“ஹோய் ஜனனி, நைன்டீன் கிட்ஸ் இல்ல‌. அவர் வயசுக்கு எயிட்டீன் கிட்ஸா இருப்பார்.‌..” என்றாள் சுவாதி.

“அப்ப தாத்தா…” என்று ஜனனி சிரிக்க,

“அவரைப் பார்த்தால் உனக்குத் தாத்தா போலவா இருக்கு? நாற்பது வயசு மனுஷனா இருந்தாலும் ஹீரோ மாதிரி ஜம்முன்னு இருக்கார்…” என்று உஷா இரசனையுடன் சொல்ல,

“ஜொள்ளாதீங்க உஷாக்கா‌‌. உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சு…” ஜனனி கேலியாக சொல்ல,

“கல்யாணம் ஆனால் இரசிக்கக் கூடாதா என்ன?” என்றாள் சுவாதி.

“அக்கா, நீங்களுமா? உங்களுக்கு ஸ்கூல் படிக்கிற பையனே இருக்கான். இதே என்னைச் சொல்லுங்க‌. யூத்…” என்று ஜனனி போட்டிக்கு வர,

“இதே நாம பொண்ணுங்களை ரசிச்சிருந்தால் நம்மைச் சும்மா விடுவாங்களா?” என்று ஒரு ஆண் ஊழியர் கேட்க,

“பொம்பளை பொறுக்கின்னு முத்திரை குத்திருப்பாங்க…” என்றார் இன்னொருவர்.

“என்னங்க சார், சமயம் பார்த்து எங்களை வாருறீங்களா?” என்று உஷா கேட்க,

அதற்கு ஆண்கள் ஏதோ சொல்லி சமாளிக்க என்று அவர்கள் பேச்சுச் சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்க, எதையும் காதில் வாங்காதவள் போல் தன் உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றாள் ரஞ்சனா.

அன்று இரவு ஏழு மணியளவில் சமையலறையில் இரவு உணவை தயாரித்துக் கொண்டிருந்தான் பிரதாபன்.

முதலில் சப்பாத்தி மாவை பிசைந்து வைத்தவன், அடுத்து குருமா வைக்க வெங்காயம், தக்காளி எடுத்து வெட்ட ஆரம்பித்தான்.

சமையல் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிரைண்டரில் மாவு அரைப்பட்டுக் கொண்டிருந்தது.

அது ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த இரண்டு நாள்கள் விடுமுறை என்பதால், மாவு அரைத்து வைத்து விட்டால் காலை, மாலை சமையல் இலகுவாகிவிடும் என்பதால் மாவு அரைக்கப் போட்டிருந்தான். இப்போது குருமா கூடக் காலைவேளைக்கும் சேர்த்தே வைத்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், வங்கி விடுமுறையாக இருக்க, வேலைக்கு ஓட வேண்டும் என்ற எந்தப் பரபரப்பும் இல்லாமல், நிதானமாக எழுந்துதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பான்.

குருமா தயாரான நேரத்தில் மாவு அரைத்து முடிந்திருந்தது.

அப்படியே சாய்த்து ஊற்றும் கிரைண்டரில் இருந்த மாவை பாத்திரத்தில் மாற்றிவிட்டு, சப்பாத்தி சுட ஆரம்பிக்கும் போது, வெளியே ஏதோ கசகசவென்று சத்தம் கேட்டது.

முதலில் கண்டுகொள்ளாமல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த பிரதாபன், இன்னும் உயர்ந்து சண்டை போடுவது போல் சத்தம் கேட்க, அதைத் தொடர்ந்து குழந்தையின் அழுகை சத்தமும் கேட்க, யோசனையுடன் நெற்றியை சுருக்கியவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு கதவை லேசாகத் திறந்து எட்டிப் பார்த்தான்.

“இப்ப நீயே வீட்டை விட்டு போறியா? இல்லை, நான் சாமானை எல்லாம் வெளியே எடுத்து கடாசவா?” என்று ஒரு முதியவர் கத்த,

“சொல்லாதீங்க, செய்ங்க…” என்று அவரைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார் முதியவர் அருகில் நின்றிருந்த ஒரு முதிய பெண்மணி.

வயதில்தான் பெரியவர்களாக இருந்தார்களே தவிர, அவர்களின் நடத்தையில் பெரிய மனிதத்தன்மை என்பது கிஞ்சித்தும் இல்லை.

அவர்கள் கத்திக் கொண்டிருக்க, அவர்களின் எதிரே அவள் வீட்டு வாசலை மறைத்தவண்ணம் நின்றிருந்த ரஞ்சனாவின் இடுப்பில் அமர்ந்திருந்த பரத் வீறிட்டு கத்தி அழுது கொண்டிருக்க, அவளின் இடது காலை கட்டிக் கொண்டு கண்களில் கண்ணீர் தேங்க எதிரே இருந்த பெரியவர்களைப் பயப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் குழந்தை ஹரிணி.

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இறுக்கத்துடன் நின்றிருந்த ரஞ்சனாவின் ஒரு கை பரத்தை ஆதரவாகத் தன்னோடு அழுத்தி தட்டிக் கொடுத்து சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்க,  இன்னொரு கை மகளைத் தன்னோடு அணைத்திருந்தது.

“உங்களுக்கு நான் ஏற்கெனவே பதிலை சொல்லிட்டேன். இது என்னோட வீடு. இங்கிருந்து நான் நகர மாட்டேன். முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க…” என்று அந்தப் பெரியவர்களைப் பார்த்து ரஞ்சனா கூற,

“என்ன, உன்னோட வீடா? எங்க மகனோட வீடு இது. இது எங்களுக்குத்தான் சொந்தம். ஏதோ போனா போகுதுன்னு இத்தனை நாளும் விட்டு வெச்சால் இங்கேயே டேரா போட்டுறலாம்னு பிளான் பண்றியா? இனி ஒரு நாள் கூட உன்னை இங்க இருக்க விடமாட்டோம். இடத்தை காலி பண்ணிட்டு ஓடுற வழிய பாரு…” என்று கையை நீட்டி மிரட்டினார் அந்தப் பெரியவர்.

ரஞ்சனா அசையாமல் அப்படியே நிற்க, “ஏங்க, இவள்கிட்ட பேசினா எல்லாம் வேலைக்கு ஆகாது. பல முறை நம்மளும் சொல்லி சொல்லி அலுத்து போய்ட்டோம். அடங்காப்பிடாரி மாதிரி அழுத்தமா நிக்கிறாள். வாங்க, இவளோட சாமானை எல்லாம் தூக்கி வெளியில் எறிவோம். அப்பதான் இவள் இங்கிருந்து வெளியே போவாள்…” என்ற அந்தப் பெண்மணி கணவரையும் அழைத்துக் கொண்டு, வழியில் நின்ற ரஞ்சனாவை இடித்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல முயல, ரஞ்சனா இன்னும் பாதையை நன்றாக மறைத்துக் கொண்டு ஸ்திரமாக நின்றாள்.

இப்போது பரத்துடன், ஹரிணியும் சேர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அந்தப் பெரியவர்களோ பிள்ளைகளின் முன்னே இப்படி நடந்து கொள்வதையோ, அவர்கள் பெரிதாக அழுவதையோ பொருட்படுத்தவே இல்லாமல் தங்கள் காரியத்தில் குறியாக இருந்தனர்.

நடந்து கொண்டிருந்த கலாட்டாவை பார்த்த பிரதாபன், பிள்ளைகளின் அழுகை உயரவும் அதற்கு மேல் பொறுமையாக இல்லாமல் வாயைத் திறந்தான்.

“ஹலோ, இங்கே என்ன கலாட்டா? எதுக்கு இப்படிச் சத்தம் போட்டுட்டு இருக்கீங்க?” என்று வினவினான்.

“கலாட்டா எல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. இது எங்க வீடு. ஆனால், இந்தப் பொண்ணு இங்கிருந்து காலி பண்ண மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாள். அதுதான் சத்தம் போட்டுக்கிட்டு இருக்கோம்…” என்றார் அந்த முதிய பெண்மணி.

“எதுவா வேணுமானாலும் இருந்துட்டு போகட்டும். ஆனால், இங்கிருந்து சத்தம் போடாதீங்க. டிஸ்டர்பா இருக்கு…” என்றான்.

“எங்களுக்கு மட்டும் சத்தம் போடணும்னு ஆசையா தம்பி? எல்லாத்துக்கும் இவள்தான் காரணம். நாங்க இப்படிச் சத்தம் போடும் போதே அசைந்து கொடுக்கிறாளா பாருங்க. இடிச்சப்புளி மாதிரி நிற்கிறாள். அதான் வேற வழி இல்லாம குரலை கொஞ்சம் உயர்த்திட்டோம்…” என்றார் அந்தப் பெரியவர்.

அவனின் பார்வை ரஞ்சனாவின் புறம் திரும்பியது. ஆனால், அவளின் பார்வை அவன் பக்கம் சிறிதும் திரும்பவில்லை. அந்தப் பெரியவர்களையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

பிரதாபன் கதவைத் திறந்த போதே அவனைக் கண்டுவிட்டாலும், அவனைக் கவனிக்காமல் அழுத்தமாகத்தான் நின்றிருந்தாள்.

பிரதாபனின் பார்வை அவள் மீது அழுத்தமாக விழுந்தது. அவளின் வெளித்தோற்றத்தில் அப்பட்டமான விறைப்பு தெரிந்தாலும், பிள்ளைகளை அரவணைத்துப் பிடித்திருந்த அவளின் கைகளில் லேசான நடுக்கம் இருந்ததை அவனின் கண்கள் கண்டன. அவளின் முகத்திலும் வியர்வை முத்து முத்தாக பூத்திருந்தது. பெரியவர்களிடம் அவள் பேசும் போது அவளின் குரல் கோபத்தில் நடுங்கியதையும் கூட உணர்ந்து உள்வாங்கினான். 

பெரியவர்கள் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்க, அப்பொழுது மின்தூக்கி கதவு திறக்க, அதிலிருந்து பரபரப்பாக வந்தார், பிரதாபன் வீட்டு உரிமையாளர் ராமநாதன்.

அங்கிருந்த சூழ்நிலையை ஒரு நொடி கண்ணில் வாங்கியவர், முதிய தம்பதியினரை கண்டு கொள்ளாமல் ரஞ்சனாவின் அருகில் சென்றவர், “ரஞ்சனாமா, இப்பத்தான் விஷயம் தெரிஞ்சி ஓடி வர்றேன். நீ கவலைப்படாதேமா. இவங்ககிட்ட நான் பேசுறேன்…” என்று அவளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, தம்பதியர் பக்கம் திரும்பினார்.

“போன முறையே இந்த மாதிரி வந்து இப்படிக் கலாட்டா பண்ணக்கூடாதுன்னு உங்களுக்குச் சொல்லி இருக்கேனா இல்லையா? இப்ப எதுக்குத் திரும்ப வந்து சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க? மனுச மக்கள் இருக்கிற இடத்துல இப்படித்தான் சத்தம் போட்டுப் பிரச்சினை பண்ணுவிங்களா? பாவம் அந்தப் பொண்ணு ரெண்டு பிள்ளைங்களோட தனியா நிக்குது. அதுகிட்ட வந்து சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க. அந்தப் பொண்ணைக் கொஞ்சம் நிம்மதியாத்தான் வாழ விடுங்களேன்…” என்றார் ராமநாதன்.

“இங்க பாருங்க ராமநாதன், நாங்களும் போனமுறை வந்தபோதே இவளை வீட்டை காலி பண்ண சொன்னோம். ஆனால், இதுநாள் வரை இவள் இங்கிருந்து அசைந்து கொடுக்கலை. எங்களை இப்படி வந்து சத்தம் போடும் நிலையை உருவாக்கியவளே இவள்தான். எங்களுக்குப் புத்தி சொல்றதை விட்டுட்டு முதலில் அவளை இந்த வீட்டை காலி பண்ணி தர சொல்லுங்க…” என்றார் முதியவர்.

“இது என்னங்க கஜேந்திரன் அநியாயமா இருக்கு? இது ரஞ்சனாவோட புருஷன் வீடு. அந்தப் பொண்ணு இங்கே இருக்காமல் வேற எங்கே போகும்?” என்று ராமநாதன் நியாயம் கேட்க,

“புருஷன் வீடா? புருஷன் முறையெல்லாம் எங்களோட மகன் செத்துப் போனப்பயே முடிஞ்சு போயிருச்சு. எங்க மகன் படாத பாடுபட்டு வாங்கிய வீடு இது. அதை இவளுக்கு விட்டுக் கொடுக்கச் சொல்றீங்களா? நாங்களே பெத்த பிள்ளையை இழந்துட்டு, இருக்க வீடு இல்லாமல் திண்டாடிக்கிட்டு இருக்கோம். அதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகுது? ஒருத்தி தளதளன்னு ரெண்டு பிள்ளைகளோட தனியா இருந்தால் சப்போட்டுக்கு கிளம்பி வந்துடுவீங்களே…” என்று அந்தப் பெண்மணி நாக்கில் நரம்பில்லாமல் பேச,

“ச்சே ச்சே… நீங்க எல்லாம் பெரிய மனுசங்களா? ரஞ்சனா உங்க மருமக பொண்ணு. அதைப் போய் இப்படிப் போகப் போக்கிடம் இல்லாமல் பேசுறீங்களேன்னு என்னன்னு கேட்க வந்தால், இப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுறீங்க? ஏம்மா, இந்தப் பிள்ளைங்க உங்க பேரன் பேத்திங்கதானே? அதுங்க இப்படிக் கதறுதுங்களே… அதுக்குக் கூட உங்களுக்கு மனசு இரங்கலையா?” என்று ராமநாதன் ஆதங்கமாகக் கேட்க,

“இவங்க எங்க பேரன் பேத்திகளா இருக்கும்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? இவள் யாருக்கு பெத்தாளோ?” என்று அந்தப் பெண்மணி அலட்சியமாகச் சொல்ல, ராமநாதன் வாயடைத்துப் போனார்.

அந்தப் பெண்மணியின் அருவருப்பான பேச்சில் முகத்தைச் சுளித்தான் பிரதாபன்.

அவனின் பார்வை தன்னைப்போல் ரஞ்சனாவின் முகத்தைத் தான் ஆராய்ந்தது.

கண்ணில் வலியுடன் உதட்டை பற்களால் அழுந்த கடித்து அதன் துடிப்பை அடக்கப் போராடியபடி நின்றிருந்தாள் ரஞ்சனா.

அவளின் அந்தப் போராட்டமே தன் அழுகையைப் பெரும்பாடுபட்டு அடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்தியது.

“பார்த்தீங்களா தம்பி? இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா? சொந்த மகனோட மனைவியைப் போய் யாராவது இப்படி அசிங்கமா பேசுவாங்களா? இவங்களோட இந்தக் குணம் தெரிந்துதான் இவங்க மகன் இவங்க கூட சேராமல் இருந்தான் போல. ஆனால், நேரம் காலம் தலைகீழா மாறி காலன் வந்து அந்தப் பையனை மொத்தமா அள்ளிட்டுப் போயிருச்சு. மகன் செத்ததும் இப்ப இந்த வீட்டுக்காக இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்க…” என்று பிரதாபனிடம் ராமநாதன் சொல்ல,

“என்ன ராமநாதன், ரொம்பப் பேசுறீங்க? எங்க மகனா எங்களை அண்டாமல் இருந்தான்? எல்லாம் இந்தக் கைகாரி செய்த வேலை. எங்க பையனுக்கு எங்களைப் பத்தி தப்புத் தப்பா சொல்லிக் கொடுத்து எங்களை இப்படி வரவிடாமல் ஆக்கிட்டாள். அதுக்குத்தான் இப்ப புருஷனை இழந்து மொத்தமா அனுபவிக்கிறாள். அந்த ஆண்டவனுக்குக் கண் இருக்கு…” என்று அந்தப் பெண்மணி இறந்தது தன் மகன் என்ற எண்ணத்தை மறந்து ரஞ்சனாவிற்குத் தண்டனை கிடைத்துவிட்ட மிதப்பில் பேசினார்.

“பெத்த பையனை பேசுறோம் என்ற நினைப்பு இருக்கா பாருங்க தம்பி?” என்ற ராமநாதன் தலையில் அடித்துக் கொள்ள, பிரதாபனுக்கும் அப்படித்தான் அடித்துக் கொள்ளத் தோன்றியது போல. முகத்தைச் சுளித்து, அந்தத் தம்பதியை அருவருப்பாகப் பார்த்தான்.

“எங்க பையன் எங்க பேச்சை கேட்டிருந்தால் இப்ப நல்லா இருந்திருப்பான். இவள் பேச்சை கேட்டு, இப்ப மொத்தமா போய்ச் சேர்ந்துட்டான். சரி, அதைப் பேசினா போனவன் வந்திடவா போறான்? எங்களுக்கு எங்க வீடு வேணும். இவளை ஒழுங்கா காலி பண்ண சொல்லுங்க. இல்லைனா எல்லாச் சாமானையும் வெளியே எடுத்துக் போட்டு அவளை விரட்டி விடுவோம்…” என்றார் அந்தப் பெண்மணி.

“ஏம்மா…” என்று ராமநாதன் சண்டைக்குக் கிளம்ப, “நீங்க கொஞ்சம் இருங்க மிஸ்டர் ராமநாதன்…” என்று அவரை நிறுத்தினான் பிரதாபன்.

அவர் கேள்வியுடன் பார்க்க, கால்சட்டையில் இருந்த தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டே, “ஐ வில் கால் போலீஸ். அநாகரீகமா கத்தி கூச்சல் போட்டு இவங்க ஆர்ப்பாட்டம் பண்ணுவது எனக்கு டிஸ்டர்பென்ஸா இருக்குன்னு சொன்ன பிறகும் விடாமல் இங்கே நின்னு கத்திட்டு இருக்காங்க. இதுக்கு மேலும் என்னால் பொறுமையா இருக்க முடியாது. நான் போலீஸ்க்கு போன் பண்ண போறேன். இனி எதுவாக இருந்தாலும் அவங்க வந்து பேசிப்பாங்க. நீங்க அமைதியா இருங்க…” என்று ராமநாதனிடம் சொல்லிக் கொண்டே பிரதாபன் காவல்துறைக்கு அழைக்கப் போக, திருதிருவென முழித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் அந்த முதிய தம்பதியர்.

“ஐயோ தம்பி, நாங்க எங்க மருமகள்கிட்டதான் சத்தம் போட்டோம். அதுவும் அவள் எங்களை வீட்டுக்குள் விடலைன்னுதான். இல்லைனா எங்களுக்கு இப்படி வெளியே நின்னு கத்தணும்னு என்ன இருக்கு? போலீஸ் எல்லாம் வேண்டாம் தம்பி. நாங்க கிளம்புறோம்…” என்று பதறிய அந்தப் பெண்மணி, “நாம கிளம்பலாம்ங்க…” என்று கணவரின் கையைப் பிடித்துக் கொண்டவர், ஏதோ நினைத்துக் கொண்டவர் போல் நின்று திரும்பி, “இப்ப அந்தத் தம்பிக்கு இடைஞ்சா இருக்குன்னு தான் கிளம்பி போறோம். அடுத்த வாரம் திரும்பி வருவோம். அதுக்குள்ள மூட்டை முடிச்சை எல்லாம் கட்டி தயாரா இரு…” என்று மருமகளைப் பார்த்து எச்சரிக்கை விடுத்துவிட்டே அங்கிருந்து கிளம்பினார்.

“நல்ல ஐடியா பண்ணீங்க தம்பி. போலீஸுன்னு சொன்னதும் ஓடிட்டாங்க பாருங்க. ஆனாலும் அந்த அம்மாவுக்கு ஏத்தம்தான் எப்படி மிரட்டிட்டு போகுது…” என்று அங்கலாய்த்த ராமநாதன், “நீ ஒன்னும் கவலைப்படாதேமா. அடுத்த வாரம் அவங்க வந்தால் தம்பி இப்ப பயமுறுத்த சொன்னதை நிஜமாக்கிருவோம். போலீஸ்கிட்ட போனால்தான் அவங்க அடங்குவாங்க. பிள்ளைகளை அழைச்சுட்டு உள்ளே போமா ரஞ்சனா. பிள்ளைகளைச் சமாதானம் பண்ணு…” என்றார்.

ரஞ்சனா பிள்ளைகளுடன் உள்ளே செல்ல, அன்னையுடன் சென்று கொண்டே பிரதாபனை திரும்பி பார்த்துவிட்டே சென்றாள் குழந்தை ஹரிணி.

இந்தக் கதையின் எபி திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை 5 மணிக்கு வரும் மக்களே…