பாலையில் பனித்துளி – 14
அத்தியாயம் – 14
“வீடு நல்லா விசாலமா இருக்குங்க தம்பி…” என்று வீட்டை சுற்றி கண்களை ஓட்டிக் கொண்டே சொன்னார் நீலகண்டன்.
“வாடகை வீடுதான்…” என்று சொல்லிக் கொண்டே சமையலறையிருந்து வந்த பிரதாபனின் கையில் காஃபி கப் இருந்தது.
“தம்பி நினைச்சா சொந்த வீடே வாங்குவீங்களே… எதுக்கு வாடகை வீடு எல்லாம்?” என்று நீலகண்டன் கேட்க,
“என் ஒருத்தனுக்கு இது போதும். சொந்த வீடு தேவைப்படும் போது வாங்கலாம்…” என்று சிறு புன்னகையுடன் சொன்னவன், “எடுத்துக்கோங்க…” என்று நீலகண்டனுக்கும், அவரை ஊரிலிருந்து அழைத்து வந்த நபருக்கும் காஃபியைக் கொடுத்துவிட்டு அவர்கள் எதிரே அமர்ந்தான்.
“உங்களுக்குத்தான் சிரமம் தம்பி…” என்று தயக்கத்துடன் எடுத்துக் கொண்டார் நீலகண்டன்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சொல்லுங்க, எப்படி இருக்கீங்க? முன்ன விட இப்ப ரொம்ப தளர்ந்துட்ட மாதிரி இருக்கே?” என்றான்.
“வயசாகுதுல தம்பி…” என்ற நீலகண்டன், “நான் இங்கே ரெண்டு நாள் தங்குவதில் உங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லையே தம்பி?” என்று கேட்டார்.
“இரண்டு நாள் என்ன? எத்தனை நாள் வேணுமானாலும் நீங்க இங்கே தங்கலாம்…” என்று பிரதாபன் சொல்ல, அப்படியே அவர்களுக்குள் பேச்சு சென்றது.
சிறிது நேரத்தில், “சரிங்க பெரியப்பா, நான் கிளம்புறேன். என் வேலையை முடிச்சிட்டு நாளை மறுநாள் காலையில் வர்றேன். கிளம்பி ரெடியா இருங்க…” என்றபடி அவரை விட வந்த நபர் எழுந்து கொள்ள,
“தேங்க்ஸ் மிஸ்டர் சுந்தரேசன்…” என்று அந்நபரின் கையைப் பிடித்து நன்றி தெரிவித்தான் பிரதாபன்.
“இருக்கட்டுங்க பிரதாபன். பெரியப்பா தனியா ரொம்ப தூரம் பிரயாணம் பண்றது இல்லை. உங்களைப் பார்க்கணும்னுதான் பிடிவாதமா என் கூட வர்றேன்னு சொன்னார். சரி, மனுஷன் ஆசைப்படுறாரேன்னுதான் கூட்டிட்டு வந்தேன். பார்த்துக்கோங்க. நான் என் வேலையை முடிச்சுட்டு வந்து அழைச்சுக்கிறேன்…” என்று சொல்லி சுந்தரேசன் விடைபெற்றுக் கொண்டார்.
அவர் சென்றதும் நீலகண்டனின் எதிரே அமர்ந்தான் பிரதாபன்.
“எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டுக்கணும்? பாருங்க, இப்பவே ரொம்ப டயர்டா தெரியுறீங்க…” என்று அவரின் சோர்வை பார்த்து கடிந்து கொண்டான்.
“உங்களைப் பார்த்ததும் உடம்பு வலி கூட தெரியலைங்க தம்பி. என் வயசு கூடுது என்பதை விட, உங்க வயசும் கூடிட்டே போகுதுன்னு தான் என்னோட கவலை எல்லாம். இப்படித் தனியாவே நின்னுட்டீங்களே தம்பி. அந்த ஒன்னுதான் என் நெஞ்சை போட்டு அழுத்திக்கிட்டே இருக்கு…” என்று வருத்தத்துடன் ஆதங்கப்பட்டார் மனிதர்.
“அதைப் பற்றி நினைத்து ஏன் டென்ஷன் பண்ணிக்கிறீங்க? விடுங்க…” என்று அந்தப் பேச்சை முடித்துக் கொண்டவன், “இந்த ரூம் யூஸ் பண்ணிக்கோங்க. கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க…” என்று ஒரு அறையைச் சுட்டிக் காட்டினான்.
“ரெஸ்ட் எல்லாம் வேண்டாம் தம்பி. ட்ரைனில் வந்தது கொஞ்சம் கசகசன்னு இருக்கு. நான் போய் குளிச்சிட்டு வர்றேன்…” என்று எழுந்து சென்றார்.
முதல் நாள் இரயிலில் கிளம்பி, காலை விடிந்ததும் வந்திருந்தார். இனிதான் காலை உணவை பார்க்க வேண்டும். அவர் குளித்து வரும்முன் உணவை தயார் செய்யலாம் என்று நினைத்து சமையலறை செல்ல நினைத்தவன், அதற்கு முன் ஹரிணியும், பரத்தும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க ஆசை வர, வீட்டின் கதவை திறந்து எதிர்வீட்டை பார்த்தான்.
கதவு பூட்டியிருந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் லதா வேலைக்கு வந்திருக்க மாட்டார். ரஞ்சனா மட்டுமே பிள்ளைகளுடன் இருப்பாள். இப்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து கதவை மூடிவிட்டு உள்ளே வந்துவிட்டான்.
ரஞ்சனாவிடம் அவன் எண்ணத்தைச் சொல்லி நான்கு நாள்கள் ஆகியிருந்தன.
மருத்துவமனையிலிருந்து வீடு வந்ததிலிருந்து ரஞ்சனா அவனைத் தங்கள் வாழ்க்கையை விட்டு விலக்கத்தான் முயற்சி செய்தாள். ஆனால், அது பிரதாபனிடம் எடுபடவில்லை.
காலையில் குழந்தைகளைப் பார்க்காமல் அவன் வேலைக்கு செல்வதில்லை. வீடு வந்த பிறகு, அவள் வீடு வந்து சேரும் முன்பே பிள்ளைகளை அவன் வீட்டிற்கு அழைத்து வந்து வைத்துக் கொள்வான்.
இருவருக்கும் ஏதாவது சாப்பிட கொடுத்து விளையாட விடுவான். ரஞ்சனா வீட்டிற்கு வந்த பிறகும் அவர்களை உடனே திருப்பி அனுப்பி வைக்க மாட்டான்.
அவள்தான் முசுமுசுவென்று கோபம் பொங்க, லதாவை அனுப்பி அழைத்து வரச் செய்வாள்.
“எதுக்கு அங்கே எல்லாம் பிள்ளைகளை அனுப்புறீங்க லதாமா?” என்று அவரைக் கடிந்து கொள்வாள்.
“அந்த சார் எங்கேமா நான் சொன்னா கேட்கிறார்? ரஞ்சனாகிட்ட நான் பேசிக்கிறேன்னு வம்படியா அழைச்சுட்டு போயிடுறார். உன் பிள்ளைகளும் அங்கே போகணும்னா குதிச்சுட்டு போறாங்க. நீதான்மா இதுக்கு முடிவு கட்டணும். என்னால் முடியலை…” என்று கையை விரித்துவிட்டார்.
ஹரிணிக்கு கை ஒடிந்ததில் இருந்து பிள்ளைகளைக் கண்டிக்கவும் பயமாக இருந்தது.
பிள்ளைகள்தான் அவள் வாழ்வின் ஆதாரமே. அப்படியிருக்க, அவர்களுக்கு ஒன்று என்றால் அவளால் தாங்க முடியாது.
பிள்ளைகளைக் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று அவள் நினைத்தால், அவள் விட்டதை அவன் பிடித்து வைத்துக் கொள்ள நினைக்கிறான் என்பதுதான் அவளுக்குத் தலை வேதனையாக இருந்தது.
அவனிடம் சண்டை பிடிக்க கூட பேச பிடிக்காமல்தான் விலகி இருந்தாள். அதையே அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறானோ என்று தனக்குள் பொருமிக் கொண்டுதான் இருந்தாள்.
வங்கியிலும் இருவரும் அலுவலக வேலை தவிர எதுவும் பேச முயலவில்லை. அங்கேயும் அவன் தொந்தரவு செய்வானோ என்று பயந்துதான் இருந்தாள்.
ஆனால், அவள் பயந்தது போல் அவனிடம் சிறு வித்தியாசம் கூட இல்லை. மற்ற ஊழியர்களிடம் எப்படி பேசுவானோ… அப்படித்தான் அவளிடமும் நடந்து கொண்டான்.
பிள்ளைகளுடன் பழகுவது தவிர அவனிடமிருந்து அவளுக்கு வேறு எந்தத் தொந்தரவும் இல்லைதான் என்றாலும், அதற்காக அவளால் மகிழ்ந்து விட முடியவில்லை.
பிள்ளைகள் மூலம்தானே தன்னை நெருங்க நினைக்கிறான் என்ற கோபம் இருந்தது.
அதே நேரம் தன் நினைப்பு சரிதானா என்று சந்தேகமும் இருந்தது. ஏனெனில் அவளின் மீதான அவனின் பார்வையில் கண்ணியம் தவறியதே இல்லை.
அவள் ‘எட்டி நில்!’ என்று சொல்வதற்கு முன்பே அவன் எட்டி நின்றான்.
அவனின் பாசம், ஒட்டுதல் எல்லாம் பிள்ளைகளிடம் மட்டுமே.
பின்பு ஏன் தன்னிடம் அப்படிக் கேட்க வேண்டும்?
அந்தக் கேள்வி ரஞ்சனாவிற்குள் இருந்து கொண்டே இருந்தது.
******
“இட்லியும், சாம்பாரும் மட்டும்தான் வச்சிருக்கேன். போதும்ங்களா?” என்று கேட்டுக்கொண்டே இட்லியை எடுத்து தட்டில் வைத்தான் பிரதாபன்.
“போதும் தம்பி, போதும்…” என்று இரண்டு இட்லியை மட்டும் வைத்துக் கொண்டார் நீலகண்டன்.
“இரண்டு எப்படி போதும்? இன்னும் ஒன்னு வச்சுக்கோங்க…” என்று அவன் வைக்க போக, மறுத்துவிட்டார்.
“முன்ன போல சாப்பாடு இறங்குறது இல்லை தம்பி. நடமாட தெம்பு வேணுமேன்னு தான் கட்டாயமா உள்ளே தள்ளுவது…” என்று சொன்னவரை ஆராய்ச்சியாக பார்த்தான்.
நீலகண்டன் ஒரு விவசாயி. அவரின் உடல் திடகாத்திரமாக இருக்கும். ஆனால், இப்பொழுது நன்றாக மெலிந்து எழும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டிருந்தன.
கண்களிலும் ஒளி மங்கியிருந்தது. வயது ஏறிக் கொண்டே போகிறது என்றாலும் கூட, அதை விட மனக்குறை அவர் உடலை உறுக்கி விட்டதோ என்று தோன்றியது.
அதிலும் தன் விஷயத்தைப் பற்றி நினைத்தே மனத்தை குழப்பி கொள்கிறாரோ? என்ற ஆராய்ச்சியுடன் பார்த்தான்.
“நீங்க இங்கே வந்தது வசந்திக்கு தெரியுமா?” இமைகளைச் சுருக்கியபடி கேட்டான்.
“தெரியும் தம்பி. சொல்லிக்காம எங்கேயும் போகக் கூடாதுன்னு சொல்லிருக்கா. இப்ப கூட சுந்தரேசன் கூட போறேன்னு சொன்னதால் விட்டா…” என்றார்.
“காவேரிக்கு?” என்று அவன் கேள்வி கூர்மையுடன் வர, அவர் முகம் அவ்வளவு நேரம் இருந்த இயல்பை தொலைத்தது.
“அவகிட்ட எதுக்கு சொல்லணும் தம்பி? அவள் எனக்கு யாரு?” என்று கோபத்துடன் கேட்டார்.
“காவேரி யாருன்னு நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?” என்று அவன் இடக்காக கேட்க,
“வேணாம் தம்பி, அவளைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க. அவள் பெயரை உங்க வாயால் சொல்வது கூட பாவம். விட்டுடுங்க…” என்ற மனிதரை உதட்டில் பூத்த புன்னகையுடன் பார்த்தான்.
“எதுக்கு இவ்வளவு கோபம்?” அவன் அதே புன்னகையுடன் கேட்க,
“என்ன தம்பி இப்படிக் கேட்கிறீங்க? அதை நான் தனியா வேற சொல்லணுமா என்ன?” என்று அவர் ஆதங்கத்துடன் கேட்க, அதற்கும் அதே புன்னகையைத்தான் பதிலாக தந்தான்.
“உங்களால் எப்படித் தம்பி சிரிக்க முடியுது?” என்று ஆதங்கமாக கேட்டார் மனிதர்.
“வேற என்ன பண்ண சொல்றீங்க?” என்று கேட்டு அவன் தோளை குலுக்க,
“உங்களுக்கு நிஜமாவே கஷ்டமா இல்லையா தம்பி?” இவனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்ற வியப்பு உள்ளுக்குள் புகைமூட்டமாக சூழ்ந்திருந்தது அவருக்கு.
“அது…” என்று அவன் ஏதோ பதில் சொல்ல முனையும் முன் வீட்டின் கதவு தட்டப்பட்டது.
“நீங்க சாப்பிடுங்க. நான் இதோ வர்றேன்…” என்று எழுந்து சென்று கதவைத் திறந்தவன் முகம் மலர்ந்து போயிற்று.
“ஹோய் பாப்ஸ்… வா… வா…” என்று சிரித்த முகத்துடன் யாரையோ வரவேற்றுக் கொண்டிருந்தவனை, அமர்ந்த இடத்தில் இருந்தே ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தார் நீலகண்டன்.
கை கழுத்தோடு இருந்த தொட்டிலில் ஆட, ஈ என்று சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள் ஹரிணி.
“ஓய், என்ன உன் சிரிப்பே சரியில்லை. என்ன பண்ணிட்டு வந்த?” என்று குறுகுறுப்புடன் கேட்டான்.
“ஒன்னும் பண்ணலையே…” என்று நன்றாக இருந்த கையினை விரித்து உதட்டை பிதுக்கினாள்.
ஆனால், அவள் கண்களோ எதுவோ குறும்பு செய்துவிட்டு வந்ததற்கு அடையாளமாய் நிலையில்லாமல் அலை பாய்ந்தன.
அவளைச் சந்தேகமாகப் பார்த்தவன், எதிர் வீட்டைப் பார்த்தான். கதவு லேசாக திறந்து கிடந்தது. ரஞ்சனா, பரத் சத்தமே கேட்கவில்லை.
“அம்மாவும், தம்பியும் எங்கே?” என்று கேட்டான்.
“அம்மா குளிக்கிறாங்க. தம்பி தூங்குறான். நான் இங்கே விளையாட வந்தேன். தள்ளுங்க அங்கிள்…” என்று அவனை விலக்கி விட்டு உள்ளே வந்தாள்.
எதிர் வீடு திறந்திருந்ததால் தன் வீட்டு கதவையும் லேசாக திறந்து வைத்து விட்டு உள்ளே வந்தான் பிரதாபன்.
எப்போதும் பிரதாபன் மட்டும் இருக்கும் வீட்டில் புதிய நபரை பார்க்கவும், யார் என்பது போல் தன் குட்டிக் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள் ஹரிணி.
நீலகண்டனும் கூட யார் இந்த குட்டிப் பெண் என்பது போல் பார்த்தார்.
“இவர் யார் அங்கிள்?” என்று பிரதாபனின் காலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள் ஹரிணி.
புன்முறுவல் பூக்க, “அவரா? அவர் நீலகண்டன். எனக்குத் தெரிந்தவர்…” என்றான்.
அவனின் அறிமுகத்தில் லேசாக முகம் மாறி பின் சுதாரித்து சமாளித்துக் கொண்டார் நீலகண்டன்.
“அவரை நான் எப்படிப் கூப்பிடணும்?” ஹரிணியிடமிருந்து அடுத்த ரகசிய கேள்வி கிளம்பியது.
“அவர்கிட்ட நீயே கேளேன் வா…” என்று அவளை அழைத்துக் கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தவன், அவளைத் தூக்கி ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு, “சாப்பிட்டியா?” என்று விசாரித்தான்.
“ம்ம்ம்… பூரி சாப்பிட்டேன்…” என்று நாவை நீட்டி உதட்டை தடவி ரசனையுடன் கூறியவளை மலர்ந்த புன்னகையுடன் பார்த்தான் பிரதாபன்.
அவன் முகத்தையே அதிசயமாகப் பார்த்தார் நீலகண்டன்.
சற்று நேரத்திற்கு முன் கூட அவனிடம் பேசும் போது சிரித்தவன்தான். ஆனால், அது ஒரு அலட்சிய சிரிப்பு மட்டுமே. ஆனால், இப்பொழுது அவன் சிரிக்கும் சிரிப்பில் உயிர்ப்பு இருந்தது. அச்சிரிப்பு கண்களையும் எட்டியிருந்ததுதான் அவரின் அதீத வியப்பிற்கு காரணமாக இருந்தது.
“இந்தக் குட்டி மேடமுக்கு பூரிதான் ரொம்பப் பிடிக்கும்…” என்று சிறு புன்னகையுடன் நீலகண்டனிடம் சொன்னான்.
அவனின் அந்தப் புன்னகை அவரின் மனத்திற்கு அவ்வளவு இதமாக இருந்தது.
“அப்படியா? பாப்பா யாருங்க தம்பி?” என்று தானும் குழந்தையைப் பார்த்து சிரித்தபடி விசாரித்தார்.
“பாப்பா இல்லை… பாப்ஸ்ன்னு சொல்லுங்க. இல்லைனா மேடத்துக்கு கோபம் வந்திடும். குட்டி மேடம் பெயர் ஹரிணி. எதிர் வீட்டில் இருக்காள்…” என்றான்.
“ஓ, அப்படியா? ஆனா பாப்ஸ்னா? புரியலையே தம்பி…”
“நான் இவளைப் பாப்பான்னு கூப்பிடுவேன். ஆனால், அது அவளுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா. அவளுக்குப் பாப்பா வேண்டாமாம். பாப்ஸ்னா ஓகேவாம். அப்படித்தானே மேடம்?” என்று அருகில் அமர்ந்திருந்த ஹரிணியின் தலையில் கைவைத்து ஆட்டினான்.
அவளும் ஆமாம் என்பது போல் அவன் கைக்குள் அடங்கியிருந்த தலையை எல்லாப் பக்கமும் உருட்டினாள்.
“பாப்ஸ்னா… இப்ப பேக்கிரி கடையில் எல்லாம் சுருள் சுருளா ஒரு தீனி விக்கிறானே… அதுவா?” என்று அவர் அப்பாவியாக கேட்க,
கையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த ஹரிணி, “அய்யோ, அது பப்ஸ், நான் பாப்ஸ்…” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“அப்படியா தங்கம்?” என்று அவர் சிரித்தபடி கேட்க,
“தங்கம்னா?” என்று அர்த்தம் கேட்டாள் பெண்.
“தங்கம் மீன்ஸ் கோல்ட். நீ கோல்ட் பொண்ணுன்னு சொல்றார்…” என்று பிரதாபன் விளக்கம் சொல்ல, இவன் இவ்வளவு பேசுவானா? என்றுதான் இருந்தது நீலகண்டனுக்கு.
அவன் பேச்சு அவரிடம் எப்போதும் அளந்துதான் இருக்கும். இந்தப் பிள்ளையிடம் நன்றாக பேசுகிறானே… என்று வாயைப் பிளந்துதான் பார்த்தார் மனிதர்.
அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிரதாபனும், ஹரிணியும் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தனர்.
அதில் ஹரிணியின் பார்வை பெரியவர் பக்கமே போய் போய் வந்து கொண்டிருந்தது. தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசுகிறார்கள் என்று புரிந்தது.
“பாப்புஸு என்ன சொல்லுது தம்பி?” என்று ஆவலுடன் கேட்டார்.
“உங்களை எப்படி கூப்பிடணும்னு கேட்கிறாள்…” என்றான் பிரதாபன்.
“அப்படியா தங்கம்?” என்றதும் மேலும் கீழும் தலையை அசைத்தாள்.
“இந்தக் கிழவனை எங்க ஊரில் எல்லாரும் தாத்தான்னுதான் கூப்பிடுவாங்க. நீயும் அப்படியே கூப்பிடு தங்கம்…” என்றதும், சம்மதமாக தலையை அசைத்தாள்.
“உன் கைக்கு என்னாச்சு தங்கம்? பிள்ளை கையில் பெரிய கட்டா இருக்கே?” என்று விசாரித்தார்.
“படியில் விழுந்துட்டேன்…” என்றாள் உதட்டை பிதுக்கி.
“ஓ, பார்த்துப் போறது இல்லையா தங்கம்? பிள்ளைக்கு வலிக்குமே…” என்று அவர் பாசத்துடன் பேச, அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்து, அவர் சாப்பிட்ட தட்டையும் எடுத்தான்.
“தம்பி… தம்பி… நான் கழுவுறேன்…” என்று தடுத்தார்.
“நீங்க பேசிட்டு இருங்க…” என்று சொல்லிவிட்டு தானே எடுத்துச் சென்று கழுவி வைத்தான். நீலகண்டன் தவிப்புடன் அவனையே பார்த்தார்.
பிரதாபன் சாதாரணமாக அந்த வேலைகளைச் செய்தான்.
சமைத்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த பிரதாபன் காதில் வெளியே ஏதோ சத்தம் கேட்பது போல் இருந்தது.
ஆனால், அது என்ன சத்தம் என்று சட்டென்று பிடிபடவில்லை. அதனால் கூர்ந்து கேட்டவன் செவிகளில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. யார் வீட்டு கதவு தட்டப்படுகிறது என்று புரியவில்லை.
சில நொடிகளில் பரத் அழும் சத்தம் கேட்க, எதிர் வீட்டில்தான் என்னவோ என்று நினைத்து பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே விரைந்தான்.
அவன் வேகத்தைப் பார்த்து என்னவோ என்று நீலகண்டனும், ஹரிணியும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.
ரஞ்சனாவின் வீட்டு கதவு திறந்து கிடக்க, உள் அறையிலிருந்து கதவு தட்டும் சத்தம் கேட்டதும், அங்கே விரைந்த பிரதாபன் என்னவென்று பார்க்க, குளியலறைக்குள் இருந்து ரஞ்சனா கதவை தட்டிக் கொண்டிருக்க, வெளிய தாழ் போட்டிருந்தது.
“ஹரிணி, ஹரிமா… கதவைத் திற…” என்று ரஞ்சனா கோபத்துடன் கதவை தட்ட, அதுவே ஹரிணியின் வேலைதான் அது என்று பிரதாபனுக்குப் புரிந்து போனது.
கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பரத் கதவு தட்டும் ஒலியில் பயந்து எழுந்திருப்பான் போலும். கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.
முதலில் பரத்தை தூக்கிக் கொண்டவன், பின் போய் கதவு தாழை திறந்து விட்டான்.
“உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்… நான் உள்ளே இருக்கும் போது வெளியே இருந்து கதவை பூட்டக் கூடாதுன்னு…” என்று சொல்லிக் கொண்டே கோபத்துடன் வெளியே வந்த ரஞ்சனா அங்கே இருப்பது மகள் அல்ல, பிரதாபன் என்று தெரிந்ததும் திகைத்து நின்று போனாள்.
பிரதாபனுக்கும் அதே திகைப்புத்தான். பட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டவன், “சாரி… சாரிங்க…” என்றபடி பரத்தை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான்.
அவன் தன்னை இப்படிப் பார்ப்பான் என்று எதிர்பாராத ரஞ்சனா திகைத்து தடுமாறி, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டவளோ வெறும் பாவாடையை மட்டும் மார்பில் ஏற்றி கட்டியிருந்தாள்.
பாவாடையை மட்டும் குளியலறையில் கட்டிவிட்டு வெளியே வந்து ஜாக்கெட் புடைவையை அணிவது அவளின் வழக்கம். குழந்தைகள்தான் வீட்டில் இருப்பார்கள் என்பதால் இதுவரை வித்தியாசமாக இருந்ததில்லை. இன்றோ, ஹரிணி செய்த வேலையில் அவன் இப்படித் தன்னை பார்த்துவிட்டானே என்று அவமானமாக இருந்தது. அவன் சென்றதும் அறையின் கதவை தாளிட்டுவிட்டு வேகமாக உடையை மாற்ற ஆரம்பித்தாள்.
மகள் மேல் கோபமாக வந்தது.
அழுது கொண்டிருந்த பரத்தை தூக்கிக் கொண்டு தன் வீடு வந்த பிரதாபனும் மிரண்டு விழித்தபடி இருந்த ஹரிணியைக் கண்களை உருட்டி கோபமாகப் பார்த்தான்.
“என்ன பண்ணிட்டு வந்திருக்க ஹரிணி? இப்படித்தான் அம்மா உள்ளே இருக்கும் போது கதவை மூடுவாங்களா?” என்று அதட்டினான்.
“அது அங்கிள்… அது…” என்று அவள் பயத்துடன் திணற,
அவளின் பயத்தைப் பார்த்து தன் கோபத்தை தணித்துக் கொண்டவன், “இது ரொம்ப கெட்ட பழக்கம் பாப்ஸ். இனி இப்படி எல்லாம் செய்யக் கூடாது…” என்றான்.
அவள் வேகமாக தலையை உருட்ட, “என்னாச்சு தம்பி?” எனக் கேட்டார் நீலகண்டன்.
அவள் கதவை தாழ் போட்டு விட்டு வந்ததை மட்டும் அவன் சொல்ல, “இது சேட்டைக்கார தங்கமா இருக்கும் போலவே? இந்தப் பையனும் அந்த வீட்டு பையன் தானா? பெரியவங்க வேற யாரும் வீட்டில் இல்லையா?” என்று கேட்டார்.
ரஞ்சனா குழந்தைகளுடன் தனியா இருப்பதை பற்றி பிரதாபன் சுருக்கமாக சொல்ல, “ஓ!” என்று ரஞ்சனாவிற்காக பரிதாபப்பட்டார்.
அப்போது வீட்டின் வெளியே இருந்து, “ஹரிணி… ஹரிணி… இங்கே வாடி…” என்று மகளை அதட்டி அழைத்தாள் ரஞ்சனா.
“ம்கூம், நான் போக மாட்டேன்…” என்று வேகமாக பிரதாபன் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
“நீ பண்ணியது தப்புதானே? அம்மாகிட்ட போய் ஒரு சாரி சொல்லு…” பிரதாபன் சொல்ல,
“ம்கூம், அம்மா அடிப்பா…” என்று ஒரு கையால் அவன் காலை கட்டிக் கொண்டாள்.
“தப்பு பண்ணினா சாரி கேட்கணும். அம்மா அடிக்காமல் நான் பார்த்துக்கிறேன்…” என்று பரத்தை ஒரு கையிலும், தன் காலை கட்டிக் கொண்டிருந்தவளை இன்னொரு கையாளும் அணைவாக பிடித்துக் கொண்டு வீட்டு வாயிலுக்கு வந்தான்.
“இங்கே வா…” என்று மகளை ரஞ்சனா அழைக்க, அவள் இன்னும் இறுக்கமாக பிரதாபனின் காலை கட்டிக் கொண்டு மறுப்பாக தலையை அசைத்தாள்.
“என் கோபத்தை கிளப்பாமல் வந்திடு. இல்லைனா அடிப்பேன்…” என்று ரஞ்சனா கண்களை உருட்ட, அதில் இன்னும்தான் பயந்தாள் பிள்ளை.
“கோபப்படாதீங்க ரஞ்சனா. அவள் தெரியாமல் விளையாட்டா செய்துட்டாள்…” என்று பிரதாபன் சொல்ல,
“அவள் என் மகள் சார். அவளுக்கு என்ன நீங்க சப்போர்ட்டா? முதலில் என் பிள்ளைகளை என்கிட்ட விடுங்க சார்…” என்றாள் கோபமாக.
மகள் கதவை மூடிய கோபத்தை விட, அவன் தன்னைப் பார்த்த கோலம் அவளின் கோபத்தை கூட்டியிருந்தது. இப்போது தன் மகன் அவன் தோளில் சாய்ந்திருக்க, மகள் அவன் காலை கட்டிக் கொண்டிருக்க, தாயானவளுக்கு எப்படி இருக்குமாம்?
தன் மகளுக்காக அவன் ஆதரவாக பேச, அவளின் கோபம் அவனின் புறம் திரும்பியது.
“அவங்களை என் பக்கம் அனுப்புங்க…” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“அனுப்புறேன். பட், ஹரிணியை நீங்க அடிக்கக் கூடாது…” என்று கண்டிஷன் போட்டு அவளின் கோபத்திற்கு தூபம் போட்டுவிட்டான்.
“என் மகளை அடிக்க கூடாதுன்னு ஆடர் போட நீங்க யார் சார்? நீங்க ஏன் எப்பவும் எங்க சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கிறீங்க? என் பிள்ளைகளை உங்க வீட்டில் கூப்பிட்டு வச்சிக்கிறதும், அவளுக்காக நீங்க சப்போர்ட் பண்ணுவதும்… என்னங்க சார் இது? ஒருவேளை நீங்கதான் என் மகளுக்கு கதவை பூட்ட சொல்லி ஐடியா கொடுத்ததா? என்ன பிளான் சார் உங்களோடது?” என்று சற்றுமுன் நடந்ததை வைத்து கோபமாக கேட்க,
“எம்மா, எம்மா… சின்ன குழந்தை ஏதோ தெரியாமல் செய்ததுக்கு தம்பியை ஏன்மா திட்டுற? அவரெல்லாம் அப்படி பண்றவர் இல்லைமா. வார்த்தையைப் பார்த்து பேசு…” பிரதாபனை சொன்னதும் நீலகண்டன் சண்டைக்கு கிளம்ப,
புது நபரை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவளுக்கு ‘யார் இவர்?’ என்ற கேள்வி உள்ளுக்குள் ஓடினாலும், அதைவிட சற்றுமுன் நடந்த நிகழ்வு மின்னலாய் வந்து போக, “அவர் அப்படியெல்லாம் இல்லையா? நீங்க இவருக்கு சப்போர்ட்டா? இவரெல்லாம் திட்டம் போட்டு காய் நகர்த்தும் ஆள். அது புரியாம சப்போர்ட்டுக்கு வந்துட்டீங்க…” என்று ஆத்திரப்பட்டாள். அவன் தன்னை அப்படிப் பார்த்துவிட்ட கோபம் கண்ணை மறைக்க, அவன் அப்படி இல்லை என்று புத்திக்குத் தெரிந்தாலும் தன்னையும் மீறி வார்த்தையை விட்டாள் அவள்.
“திட்டம் போட்டு காய் நகர்த்துவதா? தம்பி அப்படி எல்லாம் செய்றவர் இல்லை. அவரைப் பத்தி தெரியாம அபாண்டமா பழி சொல்லாதேமா…”
“ஓகோ, உங்களுக்கு இவரைப் பத்தி ரொம்பத் தெரியுமோ?” என்று இகழ்ச்சியாக கேட்டாள்.
“ரொம்ப நல்லாவே தெரியும். என் மருமகனை பத்தி எனக்குத் தெரியாதா? அவரைப் பத்தி தப்பா சொன்னா சொன்னவங்க நாக்கு அழுகிடும்…” என்று நீலகண்டன் சொல்லி முடிக்கும் முன்,
“மாமா…” என்று பிரதாபன் அதட்ட,
“நீங்க அமைதியா இருங்க மாப்பிள்ளை. இந்தப் பொண்ணு உங்களையே பேசுது. கேட்டுட்டு சும்மா இருக்கச் சொல்றீங்களா?” என்று குதித்தார் மனிதர்.
மாமா, மருமகனா? என்று இருவரையும் அதிர்வுடன் பார்த்தாள் ரஞ்சனா.