பாலையில் பனித்துளி – 13
அத்தியாயம் – 13
“கடைசியில் நீங்களும் உங்க ஆண்பிள்ளை புத்தியைக் காட்டிட்டீங்க இல்லையா சார்?” ஆத்திரத்துடன் கேட்டாள் ரஞ்சனா.
கோபத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆத்திரம் மிகுதியில் அவளின் குரலும் உயர்ந்திருந்தது.
அந்தச் சத்தத்தில் பயந்து, “அம்மா…” என்று ஹரிணி கத்த,
“ஒன்னுமில்லைடா குட்டிமா. தூங்கு…” என்று விரைந்து வந்து அவளின் தலையைத் தடவிக் கொடுத்தான் பிரதாபன்.
“நீங்க அந்தப் பக்கம் போங்க சார். என் பொண்ணை பார்த்துக்க எனக்குத் தெரியும்…” என்று ரஞ்சனா பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
“ஷ்ஷ்!” என்று வாயில் விரல் வைத்த பிரதாபன், ஹரிணியை சுட்டிக் காட்டினான். அவள் மீண்டும் உறக்கத்திற்குச் சென்று கொண்டிருந்தாள்.
மகளுக்காக உதட்டை பற்களை வைத்துக் கடித்து அடக்கிக் கொண்டாள். ஆனாலும், ரஞ்சனாவின் மனம் தகித்துக் கொண்டிருந்தது.
‘என்ன கேட்டுவிட்டான். அவனை என்னவோ என்று நினைத்திருந்தேன். கடைசியில் அவனும் சராசரி ஆண்மகன் ஆகிப் போனானே?’ என்ற ஆதங்கம் அவளை உள்ளுக்குள் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தது.
அவன் சொன்ன வார்த்தைகளை மீண்டும் அவளின் மனம் ஆத்திரத்துடன் அசைப் போட்டது.
“பணத்துக்கு இல்லை… பாசத்துக்கு கார்டியனா வர விருப்பப்படுறேன். எனக்கு அந்த வாய்ப்பு கொடுப்பீங்களா ரஞ்சனா?” என்று நிதானமாக பிரதாபன் கேட்ட வார்த்தைகள் அவளின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இன்னும் உஷ்ணத்துடன் தகித்துக் கொண்டிருந்தது.
இப்படிக் கேட்கும் சூழ்நிலையைத் தானே கொடுத்து விட்டோமோ? இப்படி அவனிடம் அமர்ந்து பேசியிருக்க கூடாதோ? உதவி செய்தவன் என்று தான் காட்டிய நன்றிவுணர்வுதான் தவறாகிப் போனதோ? அனைவரையும் தன்னை விட்டு விலக்கி வைத்தது போல் இவனையும் விலக்கி வைத்திருக்க வேண்டுமோ?
அவளுக்குள்ளேயே பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டாள்.
தன்னைத் தானே குற்றம் சாட்டியும் கொண்டாள்.
அப்படி கேட்கும் தைரியத்தை தானேதான் அவனுக்குக் கொடுத்து விட்டோம் என்று தன்னையே தாழ்வாக நினைத்து அருவருத்து போனாள் ரஞ்சனா.
ஹரிணியை தூங்க வைத்துக் கொண்டு இருந்தாலும் ரஞ்சனாவின் முகபாவத்தையும் பிரதாபன் கவனித்துக் கொண்டேதான் இருந்தான்.
என்ன நினைத்து கொண்டிருப்பாள் என்று அவள் முகபாவமே ஓரளவு காட்டி கொடுத்து விட்டது அவனுக்கு.
ஆனாலும், ஹரிணி ஆழ்ந்து தூங்கும் வரை அமைதியாக இருந்தவன், மீண்டும் வந்து பரத் அருகில் அமர்ந்து கொண்டான்.
“சார், நீங்க இனியும் இங்க இருக்காதீங்க. கிளம்புங்க…” என்று ரஞ்சனா பதற்றத்துடன் சொல்ல,
“ரிலாக்ஸ் ரஞ்சனா. ஆரம்பிச்ச பேச்சை முழுசா முடிக்கலைன்னா அதுதான் இன்னும் பாரமா மனசை போட்டு அழுத்திக்கிட்டே இருக்கும். பேசி முடிச்சிடலாம்…” என்றான் நிதானமாக.
அவளுக்கு அந்த நிதானம் எல்லாம் இல்லை.
“இன்னும் பேசுவதற்கு நமக்கிடையே என்ன இருக்கு சார்? எதுவுமே இல்லை. நீங்க முதலில் கிளம்புங்க சார். இவ்வளவு நேரம் உங்ககிட்ட பேசியதே தப்புன்னு நினைக்க வச்சுட்டீங்க. போதும் சார். நீங்க எனக்குச் செய்த எல்லா உதவிக்கும் நன்றி. இடத்தை காலி பண்ணுங்க. ப்ளீஸ்!” என்று கையெடுத்துக் கும்பிட்டு வாசல் பக்கம் கையைக் காட்டினாள்.
உணர்ச்சிவசத்தில் மீண்டும் அவள் குரல் உயர்ந்திருந்தது.
“மெதுவா பேசுங்க ரஞ்சனா. பிள்ளைங்க முழிச்சுக்கப் போறாங்க…” என்று அவன் அப்போதும் வெகு நிதானமாக கூற, அதுவே அவளை கொதி நிலையில் தள்ளியது.
“போதும், நிறுத்துங்க சார். என் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட நான் இருக்கேன். அவங்களைப் பற்றி நீங்க கவலைப்படவும் தேவை இல்லை. அதுக்கு உங்களுக்கு உரிமையும் இல்லை…” என்றாள் சூடாக.
“அந்த உரிமையைத்தான் உங்ககிட்ட கேட்கிறேன் ரஞ்சனா…” அவன் பதற்றமே இல்லாமல் அமைதியாக சொல்ல,
“சார்…” என்று அவள் கத்த,
“உங்க பதற்றம், கோபம், ஆதங்கம் எல்லாம் எனக்குப் புரியுது ரஞ்சனா. நான் கேட்டது உங்களை எவ்வளவு பாதிச்சிருக்கு என்பதும் புரியுது. ஆனால், நான் இதைப் பேசித்தான் ஆகணும் ரஞ்சனா…” என்று அழுத்தமாக ஆரம்பித்தான்.
“இப்ப உங்ககிட்ட கேட்டதை நான் கேட்பேன்னு நான் இந்த ஊருக்கு வரும் வரை நினைத்துக் கூட பார்த்தது இல்லை. ஆனால், அதுக்காக இப்ப நான் எடுத்த முடிவு அவசரப்பட்டு எடுத்ததும் இல்லை. நல்லா யோசித்துத்தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். நான் ஒன்னும் உங்களைத் தொந்தரவு பண்ணவோ டார்ச்சர் பண்ணவோ நினைக்கலை. வறட்சியா இருந்த என் வாழ்க்கை துளிர்விட காரணமே இவங்கதான்…” என்று பிள்ளைகளைச் சுட்டிக் காட்டியவன்,
“நான் அவங்கதான் எனக்கு வேணும்னு சொல்றேன். உங்களை இல்லை. ஆனால், நீங்க என் வாழ்க்கையில் வந்தால்தான் அவங்க எனக்குக் கிடைப்பாங்கனா அதைச் செய்வதற்கும் நான் தயாரா இருக்கேன். எனக்கு இந்தப் பிள்ளைகள் வேணும். அவங்க கூடவே நான் இருக்கணும். என் பாசத்தை அவங்களுக்கு கொடுக்கவும், அவங்க பாசத்தை நான் அனுபவிக்கவும் நினைக்கிறேன்…” என்றான் உருக்கமாக.
“என்ன சார் மிரட்டுறீங்களா?” கோபமாகக் கேட்டாள்.
“மிரட்டலா? நோ…நோ… கோரிக்கை வைக்கிறேன்…” என்றான்.
கோரிக்கை வைக்கும் அழகா இது? எங்கோ ஒரு குரல் எதிரொலித்தது.
“நீங்க பேசுவது உங்களுக்கே நியாயமா இருக்கா சார்?”
“நான் அநியாயமா எதுவும் பேசலை…”
“உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்…”
“கெட்டது எதுவும் செய்ததா எனக்கு நினைவில்லை…” என்று அலட்சியமாக கையை விரித்தான்.
முறைத்தாள் ரஞ்சனா.
வெகு இயல்பாக இருந்தான் பிரதாபன்.
“என்ன சார் வார்த்தை விளையாட்டு போடுறீங்களா? இதெல்லாம் சரியில்லை சார். நீங்க முதலில் இங்கிருந்து கிளம்புங்க. உங்களைப் பார்க்கவோ உங்ககிட்ட பேசவோ எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏற்கெனவே ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு. அதோட உங்க தலைவலியையும் நான் தூக்கி சுமக்க முடியாது. என்னை நிம்மதியா இருக்க விடுங்க சார்…” என்று சிடுசிடுத்தாள் ரஞ்சனா.
“உங்க எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்னால் தர முடியும் ரஞ்சனா. நிம்மதி இல்லாத வாழ்க்கையை நிம்மதி நிறைந்ததாக என்னால் மாத்தி தர முடியும்…” என்றான் பிரதாபன்.
“என் பிரச்சினைக்குத் தீர்வு தர நீங்க யார் சார்? என் பிரச்சினைக்கு தீர்வு தாங்கன்னு உங்ககிட்ட நான் கேட்டேனா? புருஷன் துணையில்லாமல் ஒரு வருஷமா எனக்கு வந்த பிரச்சினையை எல்லாம் தனி ஒரு மனுஷியா நின்று எதிர்கொண்டு சமாளித்து வந்திருக்கேன் சார். இனியும் என்னால் சமாளிக்க முடியும்…” என்று ரஞ்சனா அழுத்தமாக சொல்ல,
“இப்படியா?” என்று ஹரிணியைச் சுட்டிக் காட்டி தீர்க்கமாகக் கேட்டவன், “ஒரு சின்ன பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் சின்னப் பிள்ளையைப் போட்டு அடிச்சு ஹாஸ்பிடலில் படுக்க வச்சுட்டீங்க. அன்னைக்கு உங்க மாமனார், மாமியார் சண்டை போட்டு போனதுக்கே பிட்ஸ் வந்து பிள்ளைகள் நினைவு கூட இல்லாமல் ஹாஸ்பிடலில் கிடந்தீங்க.
உங்களைப் பற்றிய ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நீங்க வெளியே காட்டும் முகம் வேற. உங்களோட நிஜ முகம் வேற. கணவன் இல்லாமல் தனியாக இருப்பதால் உங்களுக்கு நீங்களே ஒரு இரும்பு வேலியைப் போட்டுக்கிட்டு வெளியே விறைப்பா காட்டிக்கிறீங்களே தவிர அது உங்க உண்மையான முகமே இல்லை.
உங்க உண்மையான முகம் ரொம்ப ரொம்ப மென்மையானது. மன வலிமை இல்லாதது. சின்ன விஷயத்துக்கே உடைந்து விடக் கூடியது. இப்ப கூட என்கிட்ட உங்களைத் தைரியமா காட்டிக்கிறீங்களே தவிர, உங்களுக்குள் பயந்து நடுங்கிட்டு இருக்கீங்க. உங்க இந்த முகத்தை இப்ப இல்லை… அன்னைக்கு உங்க நாத்தனார் வந்து பேசிய போதே புரிஞ்சிக்கிட்டேன்…” என்று அவளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அவன் அப்படியே கணித்துச் சொல்ல, திடுக்கிட்டுப் போனாள் ரஞ்சனா.
எப்படி இப்படித் தன்னைச் சரியாக கணித்தான்? அதுவே அவளுள் இமாலய கேள்வியாய் எழுந்து நின்றது.
தன்னைக் கண்டு கொண்டானே என்று கழிவிரக்கமாகவும் இருந்தது.
ஆனால், அதையே அவன் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வானோ என்ற பயத்தை தர, தன் வழக்கமான கோபச் சாயத்தை முகத்தில் பூசிக் கொண்டாள். முகத் தசைகளையும் இறுக்கமாக்கிக் கொண்டாள்.
“ஆமா, அப்படியே பெரிய உண்மையைக் கண்டுபிடிச்சிட்டீங்க. போங்க சார், உங்க வேலையைப் பார்த்துட்டு…” என்றாள் அலட்சியம் போல்.
“குட் அட்டெம்ட்…” என்று மெச்சியவன் உதட்டில் மென்புன்னகை தவழ்ந்தது.
அவள் கடுமையாக முறைக்க, “ஓகே, கூல்!” என்று இரண்டு கைகளையும் உயர்த்தியவன், “இப்பத்தானே என்னோட கோரிக்கையை உங்ககிட்ட வச்சிருக்கேன். யோசிங்க ரஞ்சனா…” என்றான்.
“அதுக்கு அவசியம் இல்லை சார். உங்க கோரிக்கையை நிராகரிச்சிட்டேன். சோ, எங்க வாழ்க்கையில் குறுக்கிடாமல் உங்க வழியைப் பார்த்துப் போங்க. இனி எங்க கண்ணில் படாமல் இருந்தீங்கனா ரொம்ப நல்லது…” என்றாள்.
“தப்பு பண்றீங்க ரஞ்சனா. என் கண்ணில் காட்டாமல் பிள்ளைகளை மறைச்சு மறைச்சு வச்சித்தான் என்னை இப்படி ஒரு முடிவு எடுக்கவே தூண்டினீங்க. திரும்ப என்னை விரட்ட முயன்றால் என்னோட ரியாக்ஷனே வேற மாதிரி இருக்கும். சோ, யோசிங்க. நிதானமாகவே கூட யோசிங்க. ஆனால், அதுவரைக்கும் என்னை விரட்டலாம்னு நினைக்காதீங்க. பிள்ளைகளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. நீங்க வீட்டுக்குப் போகும் வரை இங்கேதான் இருப்பேன். வீட்டுக்குப் போன பிறகும் பிள்ளைகளைப் பார்ப்பேன்…” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அவன் வெளியே செல்ல, தான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதாக உணர்ந்தாள் ரஞ்சனா.
இவனை எப்படித் தங்கள் பாதையிலிருந்து விலக்குவது? என்ற புரியா திகைப்பு முழு மூச்சாக அவளை ஆட்கொண்டது.
எழுந்து அந்த அறையின் கதவை மூடச் சென்றவள், வெளியே எட்டிப் பார்க்க, வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து, பின்னால் சுவரில் தலையைச் சாய்த்து, கண்களை மூடி அமர்ந்திருந்தான் பிரதாபன்.
சொன்னதை செய்பவனாக அவனின் பிடிவாதத்தை அச்செயலிலேயே அவன் அவளுக்கு உணர்த்தி விட, உண்மையிலேயே மிகவும் பயந்துதான் போனாள் ரஞ்சனா.
இரவில் தூக்கத்திலேயே பயந்து பயந்து எழுந்து அழுதாள் ஹரிணி. அவளைத் தூக்கி சமாதானம் செய்ய ரஞ்சனா எழும்முன், வெளியே அமர்ந்திருந்த பிரதாபன் கதவை தட்டி உள்ளே வந்து தான் ஹரிணியை தூக்கி தோளில் போட்டு சமாதானம் செய்தான். அவனை விரட்டி விடக் கூட சந்தர்ப்பம் கொடுக்காமல் ஆளுமை செய்தவனை கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் நிலையை அறவே வெறுத்தாள் ரஞ்சனா.
“குழந்தை ரொம்பப் பயந்து போயிருக்காள். நீங்க கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம் ரஞ்சனா…” என்று ஹரிணியைத் தூங்க வைத்துக் கொண்டே அவளைக் குற்றம் சொன்னவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள்.
அந்தக் குற்றவுணர்ச்சி ஏற்கெனவே அவளைப் போட்டு அழுத்திக் கொண்டுதான் இருந்தது. இதில் அவன் வேறு குத்திக் காட்ட, அவளின் குற்றவுணர்ச்சியே வீரியத்துடன் அவளைத் தாக்கிய போது, அவனின் மீது எங்கிருந்து கோபத்தை காட்டுவது?
குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு அவன் வெளியே செல்லும் போது பின்னாலே வந்து கதவை மூட முயன்றவளை தடுத்தான்.
“தாழ் போடாதீங்க ரஞ்சனா. குட்டீஸ் அழுதால் நான் பார்த்துக்கிறேன். நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க. ரொம்பச் சோர்வா தெரியுறீங்க. உங்க உடம்புக்கும் இழுத்து விட்டுக்காதீங்க…” என்றவனை கடுப்புடன் பார்த்தாள்.
“கவலைப்படாதீங்க. அனாவசியமா உள்ளே வர மாட்டேன். அவசியத்துக்கு வராமல் இருக்க மாட்டேன்…” என்று அவன் அழுத்தமாக சொல்லிவிட்டு மீண்டும் சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
அவனின் பிடிவாதமும் சேர்ந்து ரஞ்சனாவை வெகுவாக சோர்வாக்கியது. அமைதியாக சென்று படுத்துவிட்டாள்.
அடுத்து இரண்டு முறை ஹரிணி அழுத போதும், ரஞ்சனா படுக்கையை விட்டு எழும்முன்னே ஓடி வந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டான் பிரதாபன்.
அவன் எழுந்து வந்த வேகத்தில் அவன் தூங்கவே இல்லையோ என்று அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.
தன் பிள்ளைகள் மீது அவனுக்கு என்ன அப்படிப் பாசம்? என்று கேள்வியும் அவளுக்குத் தோன்றாமல் இல்லை.
இரவெல்லாம் சரியாக தூங்காமல் ஹரிணியைப் பார்த்துக் கொண்டு, அதிகாலையில் எழுந்து பால் கேட்ட பரத்துக்கும் அலுக்காமல், சலிக்காமல் தூக்கி சென்று பால் வாங்கிக் கொடுத்து, ஹரிணிக்கும், ரஞ்சனாவிற்கும் அப்படியே வாங்கி வந்து கொடுத்தான்.
அவனின் ஒவ்வொரு செயலிலும் கரிசனமும், அக்கறையும் தெரிந்தது. அந்த அக்கறையும் பிள்ளைகள் மீதுதான் இருந்ததே தவிர, ரஞ்சனாவின் பக்கம் அனாவசியமாகக் கூட கண்களைத் திருப்பவில்லை.
அதற்காக இதை இப்படியே வளர விடுவது எப்படிச் சரியாகும்? என்றும் தோன்றியது.
அவளின் மறுப்போ, முறைப்போ, வெறுப்போ, கோபமோ எதுவும் அவனைச் சென்று சேராத போது அடுத்து என்ன செய்து அவனைத் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்குவது என்றுதான் அவள் மூளை சிந்தித்துக் கொண்டே இருந்தது.
அன்று காலை ஒரு முறை ஹரிணியைப் பரிசோதனை செய்துவிட்டு, அடுத்து நான்கு நாள்களுக்குப் பிறகு வரச் சொல்லி டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர்.
“நீங்க பரத்தை தூக்கிக்கோங்க ரஞ்சனா. நான் பாப்பாவை தூக்கிட்டு வர்றேன்…” என்றவன், அவளுக்கு முன் ஹரிணியுடன் நடக்க ஆரம்பித்துவிட, முறைத்துக் கொண்டே மகனைத் தூக்கிக் கொண்டு பின்னால் சென்றாள்.
பிரதாபன் நேராக தன் காரின் அருகில் செல்ல, “சார், நாங்க ஆட்டோ பிடிச்சு போய்க்கிறோம். அவளை இறக்கி விடுங்க…” என்றாள்.
பிரதாபன் திரும்பி அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
‘தனியாக சென்றுவிடுவாயா நீ!’ என்று அவன் சவால் விட்டது போல் இருந்தது ரஞ்சனாவிற்கு.
இத்தனை நாள்களும் எல்லாம்… எல்லாமே தனியாகத் தானே சமாளித்தாள். இப்போது மட்டும் முடியாதா என்ன? நான் என்ன சிறு பெண்ணா? பயந்து கொண்டே முடங்கிக் கிடக்க? பயம் இருந்தாலும் அதையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து காட்டவில்லையா? இனியும் அதுபோல் வாழ்ந்து காட்டுவேன் என்ற உறுதியுடன் அவன் கண்களை எதிர்கொண்டாள்.
அவள் பார்வை புரிந்தது போல் கண்களை எட்டா புன்னகையுடன் அவளைப் பார்த்தவன், “ஏறுங்க ரஞ்சனா. ஒரே இடத்துக்குப் போறதுக்கு எதுக்கு ஆட்டோ?” என்றவன் அதற்கு மேல் நிற்காமல், முன் இருக்கையில் ஹரிணியை அமர வைத்துவிட்டு, பின் கதவை ரஞ்சனாவிற்காக திறந்துவிட்டான்.
“சார்…” அவள் மறுப்பாக அழைக்க,
“உங்களை வீட்டில் விட்டுட்டு நான் பேங்க் கிளம்பி போகணும் ரஞ்சனா. ப்ளீஸ்…” என்று ஏறச் சொல்லி கையைக் காட்டினான்.
அவளுக்குத்தான் ஆத்திரம், கோபம் எல்லாம் வந்தது. ஆனால், அவள் எந்த முகத்தைக் காட்டினாலும் நிதானமும், பொறுமையாகவும் எதிர்கொண்டான் அவன்.
“கார்… ம்மா… கார்…” என்று பரத் காரில் ஏறச் சொல்லி ஆர்ப்பரித்தான். அம்மா ஏறுவது போல் இல்லை என்றதும் பிரதாபனிடம் தாவி, அக்காவை போல் தன்னையும் காரில் அமர வைக்க சொன்னான்.
“ஓகே ஓகே பையா, காரில் போகலாம்…” என்று தன்னிடம் தாவியவனை தூக்கிக் கொண்டு, பரத்தை மடியில் அமர வைத்து ட்ரைவர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
பிள்ளைகள் இருவரும் காரில் இருக்க, இப்போது ரஞ்சனா காரில் ஏறியே ஆக வேண்டிய கட்டாயம்.
பல்லைக் கடித்துக் கொண்டு ஏறி அமர்ந்தவள், “பரத், அம்மாகிட்ட வா…” என்று மகனை அதட்டி அழைத்தாள்.
“அம்மாகிட்ட போடா குட்டி. உன்னை நான் அப்புறம் தூக்குறேன்…” என்று பரத்தின் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சிவிட்டு தூக்கி பின்னால் அமர்ந்திருந்த ரஞ்சனாவிடம் நீட்டினான்.
மகனை வாங்க முயன்ற போது பிரதாபனின் கை அவளின் கையில் பட்டுவிட, முகத்தை சுளித்தாள்.
அந்தத் தொடுகையை உணர்ந்தாலும் பிரதாபன் இயல்பாக இருக்க, அவளால் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மகனை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு சேலை முந்தானையை எடுத்து அவன் கை பட்ட இடத்தை வேகமாக துடைத்துக் கொண்டாள்.
அப்படியே அவன் முத்தமிட்ட மகனின் கன்னத்தையும் அவள் துடைக்க ஆரம்பிக்க, முன் கண்ணாடி வழியாக அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டே காரை எடுத்தான் பிரதாபன்.
அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டவன், அவர்களிடம் விடைபெறும் முன், பரத்தை தூக்கி ரஞ்சனாவை பார்த்துக் கொண்டே பிள்ளையின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் பிரதாபன்.
ரஞ்சனாவின் முகம் சட்டென்று மாறிப் போனது.
“அங்கிள்… எனக்கு… எனக்கு…” என்று ஹரிணியும் தன் கன்னத்தைக் காட்டினாள்.
‘ஹரிமா…’ என்று ரஞ்சனா கண்டிக்க வாயைத் திறக்கும் போதே கண்களால் கண்டித்து மறுத்த பிரதாபன்,
ஹரிணியின் கன்னத்தில் மென்மையாகத் தட்டி, “நீ பெண் குழந்தையா போயிட்டடா. இப்ப வேணாம். இன்னொரு நாள் சொந்தமா உரிமையோட கொடுக்கிறேன்…” என்று ரஞ்சனாவை பார்த்துக் கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் ரஞ்சனா.