பாலையில் பனித்துளி – 12

அத்தியாயம் – 12

வேலை முடிந்து தான் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகத்தில் இருந்த கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய பிரதாபனின் முகம் நொடியில் மலர்ந்து போயிற்று. 

“ஹாய்… அங்கிள்…” அவனைக் கண்டதும் உற்சாக குரல் எழுப்பி கையை அசைத்தாள் ஹரிணி. 

அந்தக் குடியிருப்பில் இருந்த பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்.

பிரதாபனை பார்த்ததும் அத்தனை உற்சாகம் அவள் முகத்தில். 

அன்னை விதித்த கட்டுப்பாடு எல்லாம் அக்கணம் அந்தப் பிள்ளைக்கு மறந்து போயிற்று. 

நான்கு நாள்களாக அந்தக் குழந்தையை அவனால் பார்க்க முடியாமலே போயிருந்தது. வேலைக்கு போகும் போதும், வரும் போதும்தான் ரஞ்சனாவின் குழந்தைகளைப் பார்ப்பான். பரத்தின் பிறந்தநாளுக்கு அவன் கொடுத்த பரிசை ரஞ்சனா திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றதிலிருந்து பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் ஏங்கித்தான் போயிருந்தான் அவன். 

இன்று ஹரிணியைப் பார்த்துவிட்ட மகிழ்வு அவன் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. 

கையசைத்த ஹரிணியை கை நீட்டி அழைத்தான். ஹரிணியும் உற்சாகமாக அவனிடம் ஓடி வந்து அவன் காலை கட்டிக் கொண்டு, “அங்கிள்…” என்று ஆசையாக அழைத்தாள். 

அவளின் தலையில் கைவைத்து தடவிவிட்டவன், “இங்கே என்ன பண்ற பாப்… ம்ம் ஹரிணி?” என்று கேட்டான். 

“விளையாடுறேன்…” என்றவள், தன்னுடன் விளையாடும் பிள்ளைகளைச் சுட்டிக் காட்டினாள். 

“பரத் எங்கே? அவனைக் காணோம்?” 

“வீட்டில் இருக்கான் அங்கிள்…”

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது பேருந்தில் வீடு வந்து சேர்ந்த ரஞ்சனா, மகள் பிரதாபனுடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும் கோபத்தில் முகம் சிவந்து போனாள்.

“ஹரிணி…” என்று அழைத்தவள், “இங்கே என்ன பண்ற?” என்று அதட்டினாள். 

அன்னையின் கோபக் குரலில் பயந்து நடுங்கிப் போன ஹரிணி, பிரதாபனை விட்டு வேகமாக பிரிந்து நின்று, “விளையாடுறேன்மா…” என்றாள். 

“இதுதான் நீ விளையாடுவதா? நீ விளையாடிய வரை போதும். வா இங்கே…” என்று பிள்ளையின் கையைப் பிடித்து கோபமாக இழுத்துப் போனாள் ரஞ்சனா. 

அவளின் அந்தச் செயலில் முகம் கறுத்துப் போன பிரதாபன், மனம் பொறுக்காமல் வீட்டிற்கு கூட செல்லாமல் அப்படியே பூங்காவின் பக்கம் சென்றுவிட்டான். 

வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்த போதுதான் ஹரிணி விழுந்து அடிபட்டிருந்தாள். 

இப்போது தன்னிடம் பேசியதற்காகத்தான் ஹரிணியை அடித்து கை உடையும் அளவிற்கு ரஞ்சனா விட்டிருக்கிறாள் என்று தெரிந்ததும், பிரதாபனுக்கு தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 

“அப்ப குழந்தை என்கிட்ட பேசியதுக்குத்தான் அடிச்சி இந்த நிலைக்கு அவளைத் தள்ளி விட்டீங்களா ரஞ்சனா?” என்று ஆத்திரத்துடன் கேட்டபடி தன் முன் கோபமாக நின்றிருந்தவனை புரியாமல் பார்த்தாள் ரஞ்சனா. 

“சார், நீங்க வீட்டுக்கு கிளம்பல?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“நான் கேட்டதுக்கு பதில்…” என்று கடுமையுடன் கேட்டான். 

“என்ன கேட்டீங்க?” என்று யோசித்தவளுக்கு அவனின் கேள்வி புரிய, “என்ன நடந்ததுன்னு தெரியாமல் பேசாதீங்க சார்…” என்றாள் சிடுசிடுப்புடன். 

“இதுக்கு மேல என்ன தெரியணும்? அதான் நீங்க பேசியதை கேட்டேனே…” 

“நீங்க கேட்டது உண்மைதான். ஆனால், உங்களுக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை சார்…” என்றவளை நம்பாமல் பார்த்தான். 

அதற்குள் அரை உறக்கத்தில் இருந்த ஹரிணி அவர்களின் சத்தத்தில் பயந்து அழ ஆரம்பித்தாள். 

“ஒன்னுமில்லைடா பாப்பா…” என்று அவளின் அருகில் சென்று தலையை தடவி சமாதானம் செய்தான். 

“அம்மா, தூக்கு… தூக்கு…” என்று பிள்ளை அழ ஆரம்பிக்க, கையில் கட்டுடன் இருக்கும் பிள்ளையை அவளுக்கு வலிக்காமல் எப்படித் தூக்குவது என்று அறியாமல் தடுமாறினாள் ரஞ்சனா. 

“நான் தூக்குறேன். வாடா பாப்பா…” என்று பிரதாபன் முன் வர,

மிரண்டு விழித்த ஹரிணி, “அம்மா அடிப்பா…” என்று அவனிடம் வர மாட்டேன் என்று அடம்பிடித்தாள். 

‘பிள்ளையை எப்படிப் பயமுறுத்தி வைத்திருக்கிறாய் பார்!’ என்று ரஞ்சனாவை கடுமையாகப் பார்த்தான் பிரதாபன். 

மகளின் மிரட்சியில் ரஞ்சனாவின் கண்ணில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. 

இப்போது மகளுக்குத் தரக்கூடியது இதமான மனநிலையைத்தான் என்பது புரிய, “அம்மா அடிக்க மாட்டேன் ஹரிமா…” என்றவள், மகளைத் தூக்க சொல்லி பிரதாபனுக்கு தலையை அசைத்தாள். 

“நானும் இனி அம்மா உன்னை அடிக்காமல் பார்த்துப்பேன் குட்டிமா…” என்று சொல்லிக் கொண்டே அவளின் கையை இடித்து விடாமல் மெல்ல தன்னோடு தூக்கி மென்மையாக அணைத்துக் கொண்டான். 

அவன் சொன்னதின் உள் அர்த்தத்தை உணராமல் பிள்ளையை சமாதானம் செய்ய ஏதோ சொல்கிறான் என்று மட்டும் புரிந்து கொண்டாள் ரஞ்சனா. 

“தூங்குடா…” என்று பிள்ளையை மெல்ல தட்டிக் கொடுத்துக் கொண்டே நடந்தான். 

அவனிடம் இருப்பதை பார்த்து அம்மா எதுவும் சொல்லிவிடுவாளோ என்று பயத்துடன் ரஞ்சனாவின் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி. 

பிள்ளையின் தவிப்பில் அன்னையவள் துடித்துப் போனாள். 

குழந்தையை இயல்பாக்க, அவளைப் பார்த்து மென் புன்னகை பூத்தாள். 

அம்மா கோபமாக இல்லை என்று அறிந்ததும் பிரதாபன் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டாள் ஹரிணி. 

சிறிது நேரம் நடந்து கொடுத்ததில் ஹரிணி தூங்கி விட, “கட்டிலில் படுக்க வைங்க சார்…” என்றாள் ரஞ்சனா. 

அவளிடம் பேச வேண்டியது இருந்ததால் அவனும் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு, பரத் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டான். 

வீட்டிற்கு கிளம்பாமல் என்ன இது? என்பது போல் ரஞ்சனாவின் புருவம் உயர்ந்தது. 

“சொல்லுங்க ரஞ்சனா? எதுக்கு இப்படி? குழந்தைக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்னு தெரிந்த பிறகும் என்னால் இனி அமைதியாக போக முடியாது. என்னை என்ன அவ்வளவு மோசமானவன்னு நினைச்சீங்களா? பிள்ளைங்க கிட்ட நான் அப்படி என்ன தப்பா பேசிட்டேன்னு ஹரிணியை இந்த நிலைமைக்கு ஆளாக்கி வச்சிருக்கீங்க?” என்று முகம் இறுக கேள்வி கேட்டான் பிரதாபன்.

“சார், நீங்க தவறா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க…” என்று மறுத்தாள் ரஞ்சனா. 

“இதை என்னை நம்ப சொல்றீங்களா? நான் பரத்துக்கு கிப்ட் கொடுத்தது பிடிக்காம என்கிட்ட திருப்பி கொடுத்தவங்க நீங்க‌. ஈவ்னிங் ஹரிணி என்கிட்ட பேசியது பிடிக்காம அவளைத் தரதரன்னு இழுத்துட்டு போனீங்க. இதுக்கு மேல நீங்க நடந்து கொண்ட முறைக்கு என்ன ஆதாரம் வேணும்? 

இதுவரைக்கும் பிள்ளைகளையோ, உங்களையோ நான் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை. இனியும் அப்படித்தான். பிள்ளைகளோட பாசத்துக்காகத்தான் நான் அவங்க பின்னாடி வந்தேனே தவிர, வேற எந்த உள்நோக்கமும் இல்ல. ஆனா, நீங்க பண்ணி வச்சிருக்கிற காரியம் என்னை ஏதோ பெரிய கொடுமைக்காரன் மாதிரி காட்டுது. அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன்? சொல்லுங்க…” என ஆதங்கமாகக் கேட்டான். 

“ஐயோ! சார், நீங்க தப்பானவர்னு நான் சொல்லவே இல்லை. பிள்ளைகளோட நீங்க பழகுற பழக்கம் மத்தவங்க பார்வைக்கு தப்பா தெரியக் கூடாதுன்னு தான் தடுத்தேனே தவிர, உங்களைத் தப்பானவரா நினைச்சு தடுக்கலை…” என்று வேகமாக மறுத்தவள் மீது அவனுக்கு இன்னும் நம்பிக்கை வர மறுத்தது. 

தன் நம்பிக்கையின்மையை கண்களில் பிரதிபலித்தான் பிரதாபன். 

பிள்ளைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் விழித்து விடக்கூடாது என்று இருவரும் சத்தம் இல்லாமல் மெதுவாகத்தான் பேசிக் கொண்டிருந்தனர். 

அறையில் விளக்கும் எரிந்து கொண்டிருக்க, அவன் பார்வையின் பாவனை அவளுக்குப் புரிந்தது.

“ஈவ்னிங் நான் நடந்துக்கிட்டது வச்சு, நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு புரியுது சார். நீங்க எங்களுக்காக இவ்வளவு உதவி செய்தும், நான் ஏன் பிள்ளைகளை உங்களோட நெருங்க விடாமல் செய்தேன் தெரியுமா சார்?” என்றவள் கேள்விக்கு புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் பார்த்தான். 

“ஒரு ஆண், பிள்ளைகளோட மட்டும் தனியாக வாழ்ந்தால் இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்குமோ தெரியாது… ஆனால், ஒரு பெண் பிள்ளைகளோடு தனியாக வாழ்ந்தால் இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கும்னு எனக்குத் தெரியும் சார். 

அதுவும் உறவுகள் யாரும் பாதுகாப்புக்கு கூட என்னுடன் இல்லை என்பது எத்தனை பேருக்கு வசதி தெரியுமா? நார்மலா பழகிட்டு வந்தவங்க கூட, எனக்கு யாரும் இல்லைன்னு தெரிந்ததும் அவங்க புத்தியைக் காட்டிருவாங்க‌. 

எதுக்கு எங்கயோ போகணும்? இப்ப நீங்க இருக்கீங்களே… அந்த வீட்டில் நீங்க வருவதுக்கு முன்னாடி ஒரு குடும்பம் இருந்தது. 

ஒரு வருஷத்துக்கு முன்னால் என் ஹஸ்பெண்ட் இறந்த போது, எனக்கு ஆறுதலா இருந்து ஹெல்ப் எல்லாம் பண்ணினாங்க. அவரோட ஃபைனல் செட்டில்மென்ட் வாங்க போக, ஏதாவது வெளி வேலைகளுக்கு உதவன்னு அத்தனை ஹெல்ப் பண்ணினார் அந்த ஆள். அடுத்து ஒரு இரண்டு மூன்று மாசம்தான் பிரச்சினை எதுவும் இல்லாமல் இருந்தேன். அதுக்குப் பிறகு அந்த ஆளோட பார்வையே மாறிடுச்சு‌. ஏதாவது உதவி தேவையான்னு கேட்குற சாக்கில் என் வீடு வருவதும், பிள்ளைகளைக் கொஞ்சுவது போல் உரச வருவதும்னு எனக்கு அத்தனை டார்ச்சர் கொடுத்தான். 

ரொம்பப் பயமா இருக்கும். இரண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு எப்படி இந்த இக்கட்டை எல்லாம் சமாளிக்க போறேன்னு நைட் எல்லாம் தூங்க முடியாமல் நிறைய மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருக்கேன்…” என்று சொன்னவளின் குரலில் மட்டும் அல்ல, உடலிலும் கூட நடுக்கம் தெரிந்தது. 

அதிலேயே ரஞ்சனா இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை என்று புரிய, பிரதாபனின் பார்வை அவள் மீது ஆதரவுடன் படிந்தது.

இத்தனை நாள்கள் வெளியே அவள் தைரியமாக காட்டிக் கொண்டதற்கும், இன்றைக்கு உள்ள அதீத நடுக்கத்திற்கும் இடையே அவளின் மனநிலையில் நிறைய வித்தியாசம் தெரிந்தது அவனுக்கு. 

தாயாக உருகி இருக்கிறாள். தாயாக கோபம் கொண்டிருக்கிறாள். அந்நிய நபர்களை பார்வையிலே விலக்க வைத்திருக்கிறாள். 

ஆனால், முகத்தில் எப்போதும் இருக்கும் கடினத் தன்மை மறைந்து, இப்பொழுது அவளுக்குள் ஒரு பெண்ணாக இருக்கும் பயத்தையும், பலவீனத்தையும் வெளிப்படுத்தும் போது இருக்கும் அவளின் இன்னொரு முகத்தை கண்டான் பிரதாபன்.

“என்னோட பயத்தை அவன் தனக்கு சாதகமா எடுத்துக் கொள்ள பார்த்தான். அப்பத்தான் பயந்துட்டே இருந்தால் அவன் தனக்கு சாதகமாக எடுத்துப்பான்னு சுதாரித்து ‘உங்க ஹஸ்பண்ட் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்’னு அந்த ஆளோட ஒய்ஃப் கிட்டயே போய் சொல்லிட்டேன். அப்புறம் கொஞ்ச நாளிலேயே அவங்க அந்த வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்க. அதிலிருந்து யாரு கூடவும் நானும் அவ்வளவாக பழகுவதில்லை. பிள்ளைகளையும் பழக விடுவதில்லை. 

நீங்க அந்த வீட்டில் வந்து தங்கிய போது கூட எனக்குள் பயம் இருந்தது. ஆனால், நீங்க கண்ணியமா விலகிப் போனீங்க. மேனேஜராவும் நல்லவிதமா தெரிஞ்சீங்க‌. ஆனால், எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் நீங்க ஹெல்ப் செய்து, பிள்ளைகளோட பழகி, அந்தப் பழக்கத்தை நீங்க நீடிக்கவும், எங்க பழைய சம்பவம் மாதிரி எதுவும் நடந்துடுமோன்னு பயந்துதான் நீங்க ஹெல்ப் செய்தும், சுயநலமா நான் கொஞ்சம் கடுமையா நடக்க வேண்டியதாக போயிருச்சு. தனி ஒரு பொண்ணா‌‌… ஒரு பெண் பிள்ளைக்குத் தாயா நான் நடந்துக்கிட்டது எனக்குத் தப்பா தெரியலை…” 

“அதுக்குன்னு இப்படியா?” என்று ஹரிணியைச் சுட்டிக் காட்டி ஆத்திரத்துடன் கேட்டான்.

“நான் இன்னும் பேசி முடிக்கலைங்க சார். இந்த விளக்கம் கூட உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லைதான். உங்க இடத்தில் வேற யாரும் இருந்திருந்தால் கண்டிப்பா இப்படி விளக்கம் சொல்லிக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டேன். என் உறவினர்கள் கூட செய்ய மறுத்த ஹெல்ப்பை எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நீங்க செய்திருக்கீங்க‌. அந்த நன்றிக்காகத்தான் இப்ப உட்கார்ந்து உங்களுக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்கேன். சோ, கொஞ்சம் பொறுமையா கேளுங்க சார்…” என்றவளை நெற்றி சுருங்கப் பார்த்தான். 

“ஹரிணி என் பொண்ணு சார். அவளை கை உடையும் அளவுக்கு நானே எப்படி விடுவேன்? அது எதிர்பாராமல் நடந்தது. அவளைக் கண்டிக்க நினைச்சு கை நீட்டினேன். அவள் பயந்து கதவை திறந்து ஓடி படியில் விழுந்துட்டாள்…” என்றாள்.

“கை ஓங்குற அளவுக்கு அவள் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டாள்? அப்படியே பண்ணியிருந்தாலும் எடுத்து சொல்ல வேண்டியது தானே? அதென்ன கை ஓங்குவது?” என்று ஆதங்கமாகக் கேட்டான். 

ஹரிணியின் கையைப் பார்க்க பார்க்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

“நடந்தது தெரியாமல் பேசாதீங்க சார்…” என்று சிடுசிடுத்த ரஞ்சனா, “என் மாமியார் வீடு பற்றி உங்களுக்கே இப்ப ஓரளவு புரிந்திருக்கும்…” என்று நிறுத்தி அவனைப் பார்த்தான். 

‘இப்போ எதற்கு அது?’ என்பது போல் பார்த்தாலும் இசைவாக தலையை அசைத்தான். 

“என் வீட்டுக்காரர் விபத்தில் இறந்தப்போ வந்து போன, என் மாமியார் வீட்டில் கொஞ்ச நாளிலேயே தொழிலில் நஷ்டம் ஆகிருச்சு. வீடு, தொழில், கார்னு வசதியா இருந்த போது, காதலித்து வீட்டை விட்டு வந்த என்னை ஏத்துக்காமல் விரட்டிவிட்டவங்க, தொழிலில் நஷ்டம் ஏற்படவும் என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. நான் கூட என் பிள்ளைகள் மீதான பாசத்தில் தான் வர்றாங்கன்னு முதலில் நினைச்சேன். ஆனால், என் நினைப்பு பொய்ன்னு கொஞ்ச நாளிலேயே தெரிஞ்சிருச்சு. 

இப்ப அவங்க வாடகை வீட்டில் இருப்பதாக கேள்விப்பட்டேன். சொந்த வீட்டில் வாழ்ந்தவங்களுக்கு இப்ப வாடகை வீட்டில் இருப்பது கௌரவ குறைச்சலா இருக்கு. அதனால் எங்க வீடு அவங்க கண்ணை உறுத்த ஆரம்பிச்சிருச்சு. தங்கள் மகனோட வீடு தானே அது. 

பிடிக்காத மருமகள், அவள் வீட்டிலும் ஆதரவு இல்லை. அவளை விரட்டி விட்டு வீட்டை அபகரிச்சுக்கலாம்னு முதலில் அடிக்கடி வீட்டு பக்கம் வந்து ஜாடை மாடையா பேசிட்டு இருந்தவங்க, அப்புறம் அடாவடியா கேட்டு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாங்க‌. அப்படி ஒருநாள் அவங்க வந்து ஆர்ப்பாட்டம் பண்ணிய போதுதான் போலீஸை கூப்பிடுவேன்னு சொல்லி நீங்க விரட்டி விட்டீங்க…” 

“அதுக்குப் பிறகு உங்க‌ நாத்தனார் வந்து பேசியது கூட கேட்டேன்…” என்று அவன் சொல்ல, 

“ம்ம், அங்கதான் ஆரம்பிச்சது புதுவிதமான பிரச்சினை…” என்று கசப்புடன் சொன்னாள் ரஞ்சனா. 

“என்ன பிரச்சினை? வேற எதுவும் தொந்தரவு பண்றாங்களா?” பிரதாபன் கேட்க, 

“என்கிட்ட பிரச்சினை பண்ணியிருந்தால் கூட நான் அதை நேருக்கு நேரா சமாளித்திருப்பேன். ஆனால், அவங்க பண்ணியது…”

“என்ன பண்ணினாங்க?”

“வீடு என் பெயரில் இருக்குன்னு தெரியாமல் இத்தனை நாளும் வந்து சண்டை பிடித்து என்னை விரட்ட நினைத்தவங்க, வீடு என் பெயரில் இருக்குன்னு தெரிந்ததும், என்னை விரட்ட முடியாதுன்னு நினைச்சு, என்னை விட்டுட்டு பிள்ளைகள் பக்கம் அவங்க பார்வையைத் திருப்பிட்டாங்க‌…” 

“வாட்! என்ன சொல்றீங்க?” 

“அவர் விபத்தில் இறந்த பிறகு வந்த காப்பீடு பணம், ஆபிஸ் செட்டில்மென்ட் பணம் எல்லாத்தையும் நான் ஹரிணி, பரத் பெயரில் போட்டு வச்சிருக்கேன். அதை அன்னைக்கு நான் என் நாத்தனார்கிட்ட சொன்னதுதான் தவறா போனது‌. என்னை ஒன்னும் செய்ய முடியாமல் பிள்ளைகள்கிட்ட பழகி, அவங்க பக்கம் இழுத்து, அந்தப் பணத்தை என் மாமியார், மாமனார் அமுக்க பிளான் பண்ணியிருக்காங்க…” 

“அது எப்படி? பிள்ளைகளை எங்க பார்த்து இப்படி பண்ணினாங்க?” திகைப்புடன் கேட்டான். 

“ஹரிணி ஸ்கூலுக்கு இரண்டு மூனு நாளாவே போய் பார்த்து நாங்க உன் தாத்தா பாட்டின்னு கொஞ்சி பிள்ளைக்கு சாப்பிட எல்லாம் வாங்கி கொடுத்திருக்காங்க. ஆனால், ஹரிணி இப்படி ஒரு விஷயம் நடந்ததுனே என்கிட்ட சொல்லலை…” என்று வருந்தினாள் ரஞ்சனா. 

“ஓ, அப்புறம் எப்படி தெரிந்தது?” 

“இன்னைக்கு அவளோட ஸ்கூல் டீச்சர் கால் பண்ணினாங்க. இப்படி புதுசா இரண்டு பெரியவங்க வந்து ஹரிணியைப் பார்க்குறாங்க. அவங்க யார் என்னன்னு விசாரிச்சா ஹரிணியோட தாத்தா பாட்டின்னு சொல்றாங்க. அது உண்மையா? அப்படியே இருந்தாலும் அவங்க ஏன் ஸ்கூலில் வந்து பார்க்கிறாங்கன்னு டீச்சர் போன் பண்ணி கேட்கவும்தான் இப்படி ஒரு விஷயம் நடந்துட்டு இருப்பதே எனக்குத் தெரியும். 

அது மட்டும் இல்லாமல் குழந்தையைப் பார்த்துட்டு கிளம்பும் போது, எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் நம்ம பக்கம் கொண்டு வந்து பிள்ளைக்கு நாமதான் கார்டியன்னு சொல்லி பணத்தை நம்ம பக்கம் மாத்தணும்னு ஏதோ பேசிட்டு போனாங்க‌. அதையும் என்ன ஏதுன்னு விசாரிங்கன்னு டீச்சர் சொல்லவும், என் மாமியார், மாமனார் திட்டம் என்னன்னு எனக்கு அப்பத்தான் புரிந்தது. பணத்துக்காக இந்த மனுஷங்க இப்படியும் நடந்துப்பாங்களான்னு நான் அதே டென்ஷனில் வீடு வந்தால், ஹரிணி உங்ககிட்ட‌ பேசிட்டு இருந்தாள்‌. 

வீட்டுக்கு அழைச்சிட்டு போய் விசாரிச்சால், முதலில் அவள் சொல்லவே இல்லை. அப்புறம் நான் கோபமா கேட்கவும், ஆமா, தாத்தா பாட்டி வந்தாங்க. எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கி கொடுத்தாங்கன்னு சொல்றாள். அதை ஏன் என்கிட்ட சொல்லாமல் மறச்சன்னு கேட்டால், அவங்கதான் சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்க‌ன்னு சொல்றாள். எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? எனக்கு இருக்குறதே என் பிள்ளைங்கதான் அவங்களையும் என்கிட்ட இருந்து பிரிக்க பிளான் பண்ணியிருக்காங்க. 

ஹரிணியும் அதுக்கு உடந்தை போல என்கிட்ட அவங்க வந்து பார்த்ததை மறைச்சுட்டாளேனு கோபம்‌. அதான் அவளை அடிச்சேன். அவள் பயந்து போய் வீட்டுக்கு வெளியே ஓடிட்டா. எப்பவும் அவள் சேட்டை செய்யும் போது நான் கண்டிச்சா கோவிச்சிட்டு படியில் போய் உட்கார்ந்துப்பா. அதுவும் கொஞ்ச நேரத்தில் வந்து என்னையே கொஞ்சி ஐஸ் வைப்பாள். அந்தப் படியைத்‌ தாண்டி அவள் என்னைக்கும் போக மாட்டாள். கொஞ்ச நேரம் விடுற போல விட்டு நானே சில நேரம் உள்ளே அழைச்சிட்டு போயிடுவேன். 

இன்னைக்கும் அப்படித்தான் நான் அடிக்கவும் படியில் உட்காருவாள்னு நினைச்சு வெளியே வந்து பார்த்தால், பயத்தில் படியில் உருண்டுட்டா. அவளை அப்படிப் பார்த்து என் உயிரே போயிருச்சு…” என்று சொல்லிக்கொண்டே ரஞ்சனா கண்ணீர் வடித்தாள். 

என்ன இருந்தாலும் அவள் குழந்தையின் மீது கை வைத்தது தவறு என்றுதான் பிரதாபனுக்குத் தோன்றியது. 

அழும் ரஞ்சனாவை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அப்போது தூக்கத்தில் அருகில் படுத்திருந்த பரத் சிணுங்க, அவனைத்‌ தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்‌. 

ஹரிணியும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். 

சில நொடிகள் பிள்ளைகளையும், ரஞ்சனாவையும் மாறி மாறிப் பார்த்த பிரதாபன் ஒரு முடிவுடன் வெகுநேரம் அவளிடம் சொல்ல நினைத்ததை சொல்லியே விட்டான்.

அவனிடமிருந்து அப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பாராத ரஞ்சனா கண்ணீர் நிறைந்த கண்களுடன் உறைந்து போனாள்.