பாலையில் பனித்துளி – 10

அத்தியாயம் – 10 

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்லுவாங்க. 

ஆனால், அளவுகோல் எதுன்னு தெரியாதவங்களுக்கு அமிர்தம் எது? நஞ்சு எதுன்னு எப்படித் தெரியும்?” என்று கேட்ட ரஞ்சனாவை தீர்க்கமாக பார்த்தான் பிரதாபன். 

அவன் தாடைகள் கோபத்தில் இறுகின. 

“அப்ப என்னை நஞ்சுன்னு சொல்றீங்களா?” என்று கேட்டவனின் பார்வை அவளைத் துளைத்தது. 

“இல்லை சார். என் பிள்ளைகளுக்கு அமிர்தம் எது நஞ்சு எதுன்னு தெரியாதுன்னு சொல்றேன். அதைப் புரிந்து கொள்ளும் வயசும் அவங்களுக்கு இல்லைன்னு சொல்றேன் சார்…” என்றாள் ரஞ்சனா. 

அவள் என்னதான் பூசி மொழுகினாலும் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

முதல் நாள் மாலை ‘அவனிடம் பேசக் கூடாது என்று அம்மா சொல்லிவிட்டார்’ என்று சொல்லி ஹரிணி ஓடியதில் இருந்து, அவன் மனம் நிலையில்லாமல் தவித்துப் போனது. 

அப்படி என்ன அவன் தவறு செய்துவிட்டான்? என்ற ஆதங்கமும், கோபமும் கூட‌ வந்தது. 

தன் ஆதங்கத்தை தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ள பார்த்து முடியாமல், மறுநாள் வேலை விஷயமாக ரஞ்சனா ஒருமுறை அவனின் அறைக்குள் வந்தபோது அவளிடமே நேராக கேட்டதற்குத்தான் இப்போது‌ அமிர்தம், நஞ்சு கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவனின் முக மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தவள் திடமாகவே பதில் சொன்னாள். 

“நீங்க எனக்கு பண்ணியது ரொம்ப பெரிய உதவி சார். அதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்தான். ஆனால், அதுக்காக நீங்க என் பிள்ளைகள் கூட குளோஸா பழகுவது எனக்குச் சரியாப்படலை. அந்தப் பழக்கத்தை இப்பவே நிறுத்திவிடுவது நல்லது. அதை வளர விட்டு பின்னால் வருத்தப்படக் கூடாது பாருங்க…” என்றாள். 

அவனின் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் கோடாய் சுருக்கம் விழ, “அப்படி வருத்தப்படும் அளவுக்கு என்ன ஆகும்னு நினைக்கிறீங்க?” என்று கூர்மையாக கேட்டான். 

“சில விஷயங்களை விளக்கம் சொல்லி புரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்க ஒன்னும் சின்ன பையன் இல்லை சார்…” என்ற ரஞ்சனாவை மாறா பார்வையுடன் பார்த்தான். 

‘நீ இன்னும் தெளிவாக பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்பதை அந்தப் பார்வை உணர்த்த, அவளுக்கு லேசான சலிப்பு வந்தது. 

“குழந்தைகளுடன் தனியாக வாழும் விடோ சார் நான். நீங்க தனியாக வாழும் ஒரு நபர். இதுக்கு மேல விளக்கம் சொல்ல என்ன சார் இருக்கு? புரிந்து கொள்ளுங்கள் சார். என் பசங்களை விட்டுருங்க சார். இனி அவங்க கூட பழகாதீங்க…” என்றவள் விருட்டென்று எழுந்து வெளியே சென்றுவிட்டாள். 

எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான் பிரதாபன். 

ரஞ்சனா சொல்லி சென்ற கோணம் எல்லாம் அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. ஆனாலும், அவன் மனத்தில் எந்தக் கல்மிஷமும் இல்லாத போது பிள்ளைகளுடன் சிறிது நேரம் பழகுவதில் அப்படி என்னவாகி விடப்போகிறது என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

எப்போதும் இல்லாத அளவில் அந்தப் பிள்ளைகளுடன் இருக்கும் போது அவன் அவனாக இருக்கின்றான். சிரிக்கிறான். மகிழ்கின்றான். மனம் எந்தச் சஞ்சலமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றது. நிம்மதியாக இருக்கிறான். ஆனால், இனி அதை எல்லாம் அவன் இழந்து விட வேண்டும் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

அன்றைய நாள் முழுவதும் முகம் இறுக தான் வங்கியில் இருந்தான். 

வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல கூட விருப்பமில்லாமல் காரிலேயே வெகு நேரம் சுற்றிக் கொண்டிருந்தான். நன்றாக இருட்டிய பிறகு வீடு வந்தான். 

காரை நிறுத்திவிட்டு மின்தூக்கியில் மேலே வந்துபோது எதிரே வந்தார் ராமநாதன். 

“தம்பி, எப்படி இருக்கீங்க?” என்று அவனைப் பார்த்ததும் பேச பிடித்துக் கொண்டார் மனிதர். 

அவரிடம் அப்போது பேசும் மனநிலை இல்லையென்றாலும் மரியாதை நிமித்தம் நின்றவன், “இருக்கேன். நீங்க? எப்ப ஊரிலிருந்து வந்தீங்க?” என்று விசாரித்தான். 

“நான் சௌக்கியமாக இருக்கேன் தம்பி. பழனி மட்டும் போய்ட்டு வரலாம்னு கிளம்பிய பிளான் அப்படியே திருச்செந்தூர், கன்னியாகுமரின்னு நீண்டு இன்னைக்கு மதியம்தான் வீடு வந்து சேர்ந்தோம் தம்பி. ரஞ்சனாவை விசாரிக்க வந்தேன். நீங்க ரஞ்சனாவுக்கு உடம்பு சரியாகிருச்சுன்னு சொன்னதும்தான் அடுத்த ட்ரிப்பே போனோம். கோவிலுக்கு போயிட்டு வந்த பிரசாதம் கொடுக்க வந்தேன். உங்களுக்கு அப்புறம் எடுத்துட்டு வர்றேன் தம்பி…” என்றார். 

“இருக்கட்டும்…”என்று அவன் முடித்து விட, 

“தம்பி இப்பத்தான் வேலை முடிந்து வர்றீங்க போல?” என்று கேட்டார். 

“சும்மா அப்படியே வெளியே போயிட்டு வர்றேன். சரிங்க, அப்புறம் பார்ப்போம்…” என்று பேச்சை முடித்துக் கொண்டு ரஞ்சனாவின் வீட்டின் பக்கமே திரும்பாமல் கடிவாளம் கட்டிய குதிரை போல், தன் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றான். 

உடையை மாற்றிக் கொண்டு சமையலறை நோக்கி செல்லும் போது அவனின் அலைபேசி அழைக்க, யார் அழைப்பது எனப் பார்த்தான். 

நீலகண்டன் பெயர் ஒளிர்ந்தது. 

அவரின் பெயரை வெறித்தப்படி அப்படியே நின்றான். அவரிடம் இப்போது பேசும் மனநிலை அவனுக்கு இல்லை. அழைப்பை ஏற்காமல் தவிர்த்தான். 

சிறிது நேரம் அடித்து ஓய்ந்தது. 

மீண்டும் அழைப்பு வராமல் போக, நிம்மதியுடன் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டான். 

மீண்டும் ஒருமணி நேரத்திற்கு பின் நீலகண்டனிடமிருந்து அழைப்பு வந்தது. 

காரணம் இல்லாமல் மீண்டும் அழைக்கும் மனிதர் இல்லை என்பதால் இப்போது அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான். 

சில சம்பிரதாய விசாரிப்பிற்கு பிறகு, “தம்பி, அடுத்த வாரம் சென்னை வரலாம்னு இருக்கேன். உங்க வீட்டுக்கு வரலாங்களா?” என்று கேட்டார் நீலகண்டன். 

“எப்ப வேணுமானாலும் வாங்க. என்ன திடீர்னு சென்னை பக்கம்?” என்று கேட்டான்.

“நம்ம ஊரு பய ஒருத்தன் நம்ம ஊரிலிருந்து அடுத்த வாரம் ஒரு வேலையா சென்னை வர்றானாம். எனக்கு கொஞ்சம் நடமாட்டம் இருக்கும் போதே உங்களை ஒரு முறை பார்த்துடணும்னு நினைக்கிறேன் தம்பி. அதான் அந்தப் பய கூட வந்து ஒரு எட்டு உங்களை பார்த்துடலாம்னு பார்க்கிறேன். அவ்வளவு தூரம் தனியா வரும் அளவுக்கு என் உடம்பில் சக்தி இல்லை. இது போல் துணைக்கு ஆளுடன் வந்தால்தான் உண்டு…” என்றார். 

“எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு?” என்று மென்மையாக கடிந்து கொண்டான். 

“இல்லை தம்பி, என்னோட கடைசி ஆசைன்னு கூட வச்சுக்கோங்க. என்னால் ஒரு மனுஷன் ஒத்தை மரமா நிற்கிறார்னு நினைச்சு நினைச்சு என் நெஞ்சு எந்த நேரம் வெடிக்குமோ தெரியலை. அந்த மனுஷனுக்கு ஒரு நல்லதைத்தான் பண்ண முடியலை. அந்த மனுஷன் காலடியில் விழுந்து மன்னிப்பாவது கேட்கணும்…” என்று அவர் உருக்கமாக பேச, இவனின் கண்கள் உணர்ச்சி வேகத்தில் ரத்த நிறம் கொண்டது. 

“நீங்க என்னைப் பார்க்க விரும்பும் காரணம் அதுதான்னா… நீங்க வரவே தேவையில்லை…” என்றான் பளிச்சென்று. 

“தம்பி…” என்று அதிர்ந்தவர், “என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க?” என்று வருத்தத்துடன் கேட்டார். 

“என்னை இப்படிப் பேச வைப்பதே நீங்கதான். முதலில் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோங்க. யாராலும் நான் ஒத்தையா நிக்கலை. எனக்கு இந்தத் தனிமை பிடிச்சிருக்கு. அதனால் மட்டுமே தனியா இருக்கேன். நீங்களா ஏதாவது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதீங்க…” என்று சொல்லும் போதே அவனுள் ஏதோ மூர்க்கமாய் முணுமுணுத்தது. 

அதை அந்த நேரத்திற்கு மட்டும் புறம் தள்ளிவிட்டு அவரிடம் பேசினான். 

“சரிங்க தம்பி… சரிங்க தம்பி… ஆனாலும், நான் உங்களைப்  பார்க்கணும் தம்பி…” என்று கேட்டவருக்கு எப்படி மறுப்பு சொல்லுவான்? வீட்டு முகவரி கொடுத்து, அவர் வரும் தேதி கேட்டுக் கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவரிடம் பேசி முடித்துவிட்டதும் அப்போது தனக்குள் உறுத்திய விஷயத்தை தோண்டி எடுத்து சிந்திக்கலானான். 

தனிமை பிடித்திருப்பதால் தனியாக இருப்பதாக சொன்னவன், இவ்வளவு நாள்களும் அதன்படியே வாழ்ந்து வந்தவன், இப்போது மட்டும் ஏன் யாருடைய பிள்ளைகளையோ பார்க்க வேண்டும் என்று தவிக்க வேண்டும்? அவர்களிடம் பழகுவேன் என்று வீம்பு பிடிக்க வேண்டும்? என்று அவன் மனச்சாட்சியே அவனை உலுக்கி எடுத்து கேள்வி எழுப்பியது. 

மனத்தின் கேள்வியும் சரிதானே? தான் ஏன் அந்தப் பிள்ளைகள் மீது இவ்வளவு பாசம் வைத்துவிட்டு தவிக்க வேண்டும்? தான் என்ன சின்ன பிள்ளையா? அடுத்த வீட்டு பிள்ளைகள் தன்னுடன் பழக வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தனக்கு பக்குவம் இல்லையா என்ன? என்று தன்னையே கேட்டுக் கொண்டான். 

ஆனால் பதில்தான் அவனுக்கு கிடைக்கவில்லை பாவம். 

பாச உணர்வுகளுக்கு வயது வரம்புதான் ஏது? 

இந்த வயதில்தான் பாசம் வைக்க வேண்டும். இந்த வயதில் பாசம் எல்லாம் வராது என்று பாசத்திற்கு அளவுகோல் வைக்க முடியுமா என்ன?

சிறு பிள்ளையும் பாசத்திற்கு ஏங்கும். நாள்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஜீவனும் பாசத்திற்கு ஏங்கும். அதற்கு இடைப்பட்ட வயதில் இருக்கும் மனிதனுக்கு மட்டும் மனம் பாச உணர்வுகளை துறந்து விடுமா என்ன? 

பாசம் வைக்க பக்குவம் தேவை இல்லை என்பது நாற்பது வயதை கடந்த அந்த ஆண்மகனுக்குப் புரியவில்லை போலும். 

மனச்சஞ்சலத்தில் இருந்தவனுக்கு பசி என்ற உணர்வு மந்தித்துப் போனது. சாப்பாட்டை துறந்து அமைதியாக சென்று படுத்துக் கொண்டான் பிரதாபன். 

அன்று விடுமுறை நாளாக இருக்க, மாலையளவில் அடுத்த வாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தான் பிரதாபன். 

மசாலா பொருட்கள் இருந்த வரிசையில் வீட்டில் காலியான பொருட்களாக பார்த்துக் கொண்டிருந்தான். 

அப்போது அவனை உரசிக் கொண்டு யாரோ ஓடுவது போல் இருக்க, “ஹேய் பார்த்து…” என்று உரசிவிட்டு ஓடிய உருவம் தடுமாறுவதை பார்த்து பிடித்து நிறுத்தியவன் கண்கள் சட்டென்று மலர்ந்தன. 

“அங்கிள்…” என்று அவன் கைப்பிடியில் சமாளித்து நின்ற ஹரிணியும் மலர்ச்சியுடன் அழைத்தாள். 

“ஓய், நீ எங்கே இங்கே? யார் கூட வந்த?” என்று விசாரித்தான் பிரதாபன். 

“அம்மா கூட அங்கிள். நாளைக்கு பரத் ப்ரத்டே. அதுக்கு பலூன் வாங்க வந்தோம்…” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் தாய் அவனிடம் பேசக் கூடாது என்று சொன்னது நினைவில் வந்தது போலும். நாக்கை கடித்துக் கொண்டு, அவனின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொள்ள முயன்றாள். 

அவனுக்கும் அது புரிந்தது. ஆனாலும், அவளின் கையை விடாமல், “அப்படியா? பரத் எங்கே, வந்திருக்கானா?” என்று விசாரித்தான். 

“ம்ம், அம்மா கூட இருக்கான். விடுங்க அங்கிள். அம்மா திட்டுவாங்க…” என்றாள். 

“விடுறேன். அதுக்கு முன்னாடி ஒன்னு மட்டும் சொல்லு. உனக்கு இந்த அங்கிளை பிடிக்குமா? பிடிக்காதா?” என்று கேட்டான். 

“ம்ம்…” என்று கண்களை உருட்டி முழித்தவள், “பிடிக்கும்…” என்று முனகினாள். 

“அப்புறம் ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற?” என்று கேட்டான். 

“அம்மா… அம்மாதான்…” என்று அவள் தயங்கியபடி சொல்ல, அதற்கு அவன் ஏதோ சொல்ல வர, “ஹரிமா, எங்கே இருக்க?” என்று அழைத்துக் கொண்டே அந்தப் பக்கம் வந்தாள் ரஞ்சனா. 

பிரதாபனுடன் பேசிக் கொண்டிருந்த மகளைப் பார்த்தவள், முகத்தில் சிவப்பு ஏற, “ஹரிமா, அம்மா என்ன சொல்லியிருக்கேன்?” குரலை உயர்த்தவில்லை என்றாலும் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியபடி கேட்டாள். 

பிரதாபனிடமிருந்து வேகமாக தன் கையை உருவிக் கொண்டு அன்னையை நோக்கி ஓடியவள், “நான் இல்லைம்மா. அங்கிள்தான்…” என்று அன்னையின் காலை கட்டிக் கொண்டாள். 

ரஞ்சனாவின் பார்வை அவன் மீது கோபமாக பதிய, அவளின் இடையில் அமர்ந்திருந்த பரத்தோ பிரதாபனை அங்கே பார்த்ததும் சிரிப்புடன் தன்னை தூக்க சொல்லி கையை நீட்டினான். 

பிள்ளையை அப்படியே அள்ளிக்கொள்ள மனம் பரபரத்தது. ஆனால், ரஞ்சனாவின் பார்வையில் இருந்த சூடு அவனை எட்டவே நிற்க வைத்தது. 

“என்னைத் திரும்பத் திரும்ப சொல்ல வச்சு, என்னை மோசமானவளா மாத்திடாதீங்க சார்…” என்று சூடாக சொல்லிவிட்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். 

அவன் தன்னைத் தூக்கவில்லை என்று பரத் அழுது கொண்டே செல்வது பிரதாபனின் காதில் விழ, தான் கையாலாகாதவனாக நிற்க வேண்டிய நிலையை அறவே வெறுத்துப் போனான். 

மறுநாள் திங்கள்கிழமை வேலைக்குத் தயாராகிய பிரதாபன் வெளியே செல்லாமல் சோஃபாவிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அவன் காதுகள் வீட்டிற்கு வெளியே கேட்ட சத்தத்தில் கூர்மையாக படிந்தது. 

“முடிந்தவரை சீக்கிரம் வீட்டுக்கு வரப் பார்க்கிறேன் லதாமா. பரத்துக்கு நான் கிண்டி வச்சிருக்கிற கேசரியை ஊட்டி விடுங்க. பார்த்துக்கோங்க…” என்ற ரஞ்சனாவின் குரலுடன், சிலர் நொடிகளில் அவள் கிளம்பி செல்வதையும் உணர்ந்தவன் சோஃபாவை விட்டு எழுந்தான். 

அவன் கையில் ஒரு மினுமினுக்கும் கவர் சுற்றப்பட்ட ஒரு பரிசு பெட்டி இருந்தது. 

கதவை மூடிவிட்டு எதிர் வீட்டு கதவை தட்டினான். 

கதவை திறந்த லதா அவனை கேள்வியுடன் பார்க்க, அவனோ அவர் கையில் இருந்த பரத்தையே பார்த்தான். 

அவனோ உடனே இவனிடம் தாவ, ஆசையாக ஒற்றை கையில் அள்ளிக் கொண்ட பிரதாபன், பரத்தின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு, “ஹேப்பி ப்ரத்டே குட்டி பையா. இந்தா உனக்கு என்னோட ப்ரத்டே கிப்ட்…” என்று பரிசு பெட்டியை நீட்ட, கண்கள் விரிய இரு கைகளுக்கும் கொள்ளாமல் தன்னுடன் சேர்ந்து அந்தப் பெட்டியை அணைத்துக் கொண்டான் பரத். 

“சார், இதெல்லாம் எதுக்கு? அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சால் திட்டுவாங்க…” என்று லதா தயங்கியபடி சொன்னார். 

அவரிடமும் பிள்ளைகளை இனி பிரதாபன் வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று ரஞ்சனா சொல்லி வைத்திருந்தாளே. அப்படியிருக்க, அவள் இல்லாத நேரத்தில் இப்படி வந்து பிள்ளையை கொஞ்சி பரிசு கொடுத்தால் அவரல்லவா பதில் சொல்ல வேண்டும். 

அவரின் பயம் புரிய, “பயப்படாதீங்க. ரஞ்சனாகிட்ட என்னைக் கை காட்டி விட்டுருங்க. நான் பேசிக்கிறேன்…” என்றான். 

“நீங்க அவங்க இருக்கும் போதே கொடுங்களேன் சார்…” என்று லதா அப்போதும் தயங்கினார். 

“நான் பார்த்துக்கிறேன்ங்க…” என்று மட்டும் சொன்னவன், மீண்டும் பரத் கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க, அவனும் பதிலுக்கு எச்சில் தெறிக்க பிரதாபனின் கன்னத்தை நனைத்தான். 

கண்களை மூடி ஒரு நொடி அந்த இனிய நிகழ்வை உள்வாங்கி ரசித்த பிரதாபன், பரத்தை லதாவிடம் கொடுத்துவிட்டு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினான். 

அன்று மாலை அவன் வீட்டிற்கு வந்த போது ரஞ்சனாவின் வீட்டுக் கதவு லேசாக திறந்திருக்க, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சில குழந்தைகள் அவளின் வீட்டிற்குள் விளையாடும் சத்தம் கேட்டது. 

‘கேக் வெட்ட போகிறார்கள் போல’ என்று நினைத்துக் கொண்டே தன் வீட்டிற்குள் சென்றான். 

சிறிது நேரத்தில் பிறந்தநாள் பாடல் ஒலித்தது அவன் வீடு வரை கேட்டது. 

‘குட்டி இந்த நேரம் கேக் வெட்டியிருப்பான்’ என்று சிறு முறுவலுடன் நினைத்துக் கொண்டான். இந்த நேரம் பிள்ளை எவ்வளவு சந்தோஷமாக இருப்பான் என்று பார்க்க அவனுக்கு ஆவலாக இருந்தது. ஆனால், அழைப்பில்லாமல் அங்கே செல்ல முடியாதே. 

பிள்ளைகளின் கூச்சலும், கும்மாளமுமான சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. 

அரைமணி நேரம் கடந்த நிலையில், அவன் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, கதவை திறந்து பார்க்க, ரஞ்சனா நின்றிருந்தாள். அவள் கையில் அவன் காலையில் பரத்திற்கு கொடுத்த பரிசு பொருள் இருந்தது. 

“இதைப் பிடிங்க சார்…” என்று நேரடியாக அவனை நோக்கி அந்த விளையாட்டு பொருளை நீட்டினாள். 

“ரஞ்சனா, சொல்வதை கேளுங்க. பரத் ப்ரத்டேகாக ஆசையா வாங்கி கொடுத்தேன். அதை திருப்பி கொடுத்து என்னைக் காயப்படுத்தாதீங்க…” பிரதாபன் சொல்ல, 

“சார், உங்ககிட்ட நான் சண்டை பிடிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனால், நீங்க என்னை அதைச் செய்ய வச்சுடுவீங்க போல. என் பிள்ளைக்கு ப்ரத்டே. அவனை வாழ்த்த வாங்க. கிஃப்ட் வாங்கி கொடுங்கன்னு நான் உங்ககிட்ட வந்து கேட்கவே இல்லை. அப்படியிருக்க, எனக்குத் தெரியாமல் நீங்க என் பிள்ளைக்கு கிஃப்ட் கொடுத்திருக்கீங்க. எதுக்கு சார் இந்தத் திருட்டுத்தனம்?” என்று கடுமையாக கேட்டாள். 

அவ்வார்த்தை அவனை காயப்படுத்த, “ரஞ்சனா…” என்று குரலை உயர்த்தினான். 

கையை நீட்டி அவனை நிறுத்தச் சொன்னவள், “உங்களை விட என்னாலும் குரலை உயர்த்த முடியும் சார். ஆனால், மான அவமானத்துக்கு அஞ்சி அமைதியா இருக்கேன். அதையே நீங்க அட்வான்டேஜா எடுத்துக்காதீங்க…” என்றாள் சூடாக. 

“என் மேல் உங்களுக்கு ஏன்ங்க இவ்வளவு கோபம்? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்? பிள்ளைங்ககிட்ட கொஞ்சம் அன்பா இருக்கேன். அதைத் தவிர எந்தத் தவறான எண்ணமும் எனக்கு இல்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் ஏன் ஓவரா ரியாக்ட் பண்றீங்க?” என்று அழுத்தமாக கேட்டான். 

“என் பிள்ளைகள் மேல் அன்பு வைக்க நீங்க யார் சார்? அவங்களுக்கு அன்பு வைக்க, பாசம் வைக்க எல்லாத்துக்கும் நான் இருக்கேன். உங்க அன்பை தேவைப்படுபவர்களுக்கு கொடுங்க. என் பிள்ளைகளுக்கு வேண்டாம்…” என்று அவள் முகத்தில் அடித்தது போல் சொல்ல, பிரதாபனின் முகம் அவமானத்தில் கன்றிப் போனது.