பாலையில் பனித்துளி – 1

அத்தியாயம் – 1

காலை நேர பரபரப்புத் தொற்றிக் கொண்ட சென்னை மாநகரம்.

முந்தைய நாள் வேலையினால் ஏற்பட்ட களைப்பை எல்லாம், இரவு உறக்கத்தில் தொலைக்க முயன்றும் முடியாமல் தோற்றாலும், அடுத்த நாள் அலுவலை பார்க்க, அதிகாலை எழுந்து தயாராகி வாகனங்களில் பரபரப்பாகப் பயணித்துக் கொண்டிருந்தனர் மக்கள்.

பேருந்துகளில் ஜனங்கள் நிரம்பி வழிந்தனர்.

அந்தப் பரபரப்போ ஜன சந்தடியோ தன்னைச் சற்றும் பாதிக்காதது போல், ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்ட சொகுசில் தளர்வாக அமர்ந்து, ஜன்னல் கம்பியின் மீது கையை ஊன்றி, புகையும், தூசியுமாக முகத்தில் வந்து மோதிய காலை நேர காற்றைச் சுவாசிக்கலாமா? வேண்டாமா? என்ற தடுமாற்றம் இல்லாமல், ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான் அவன்.

அவனா? அவரா? எப்படிச் சொல்லலாம்?

காதோரம் மட்டுமில்லாமல், கருத்த மீசைகிடையேயும் எட்டப்பனாய் எட்டிப் பார்த்த வெண்ணிற உரோமங்கள் அந்த ஆடவனை அவன் என்று சொல்வதா? அவர் என்று சொல்வதா? என்ற தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

வெண்ணிற உரோமங்கள் மட்டுமில்லாமல், முதிர்வை நோக்கி அடியெடுத்து வைத்திருந்த அந்த ஆடவனின் முக முதிர்ச்சியும் தடுமாற்றத்திற்குத் துணை நின்றது‌.

இளைஞன் என்றும், முதியவர் என்றும் சொல்ல முடியாமல், இளைஞனுக்கும், முதியவருக்கும் இடைப்பட்ட பருவத்தில் இருந்த அந்த முக முதிர்ச்சியே அந்த ஆடவனுக்கு நாற்பது வயது முடிந்திருக்கலாம் என்ற அனுமானத்தைத் தந்தது.

அந்தத் தடுமாற்றத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இக்கதையின் நாயகனாக வலம் வரப் போகும் அந்த ஆடவனை நாம் அவன் என்றே விளிப்போம்.

அந்த அவனின் பெயர் பிரதாபன்.

பிரதாபன் சென்று கொண்டிருந்த பேருந்து அடுத்தப் பேருந்து நிறுத்தத்தில் நிற்க, ஆட்கள் இன்னும் ஏற ஆரம்பித்தனர்.

அதில் அவளும் ஏறினாள். கூட்டத்தைப் பார்த்து அவள் முகம் லேசாகச் சுருங்கி விரிந்தது. பழக்கமான அதே கூட்ட நெரிசல் பேருந்து பயணம்தான் என்றாலும், அவளையும் மீறி கூட்டத்தைப் பார்த்துச் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கூட்டத்திற்குள் முட்டி மோதி பேருந்தின் நடுப்பகுதியில் பிரதாபன் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே வந்து நின்றாள்.

மடிப்பு குழையாத காட்டன் புடைவையின் விறைப்பு, அவளின் உடலில் மட்டும் இல்லாமல் முகத்திலும் பிரதிபலித்தது. இழுத்து வாரி பின்னல் போட்ட கூந்தல். முகத்தில் ஒற்றி எடுக்கப்பட்ட பவுடர்.

இருக்கோ இல்லையோ என்று சட்டென்று புரியாத அளவில் புருவத்திற்கு மத்தியில் சின்ன ஒட்டு பொட்டு. கழுத்தில் மெல்லிய செயின். ஒரு கையில் கடிகாரம், இன்னொரு கையில் இரண்டு மெல்லிய வளையல்கள். அவ்வளவுதான் அவளின் அலங்காரம்.

அவளின் தோற்றம் அவளுக்கு முப்பது வயதை கடந்திருக்கலாம் என்று அனுமானிக்க வைத்தது.

கூட்டம் தோளில் கிடந்த தோள்பையுடன் அவளையும் போட்டு நெரிக்க முயல, அசவுகரியமாகப் பையை இழுத்து சரி செய்து கொண்டாள்.

அப்போது அவளின் கைப்பையில் இருந்த அலைபேசி அழைக்க, சற்றுச் சிரமப்பட்டுக் கைப்பேசியை எடுத்தவள் முடிந்த வரை குரலை தழைத்து பேச முயன்றாள்

அப்படியும் கூட அவள் பேசும் சத்தம் பிரதாபனை எட்டியது. திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான்.

ஆனாலும், அவளின் குரல் மட்டும் அவன் செவியை நிறைத்துக் கொண்டுதான் இருந்தது.

“அம்மா வேலைக்குக் கிளம்பி வந்துட்டேன் ஹரிமா. சரி, சரி அழக் கூடாதுடா. என்ன, பூரி வேணுமா? இன்னைக்கு இட்லி சாப்பிட்டுக்கோ. நாளைக்கு அம்மா பூரி செய்து தர்றேன். ஆயாவை படுத்தக் கூடாது. சமத்தா இருக்கணும்‌. தம்பியையும் நீதான் பார்த்துக்கணும். சரி ஹரிமா… சரி… நாளைக்குக் கண்டிப்பா பூரிதான் செய்து தருவேன்…” என்று பேசி முடித்துவிட்டு அலைபேசி தொடர்பை துண்டித்தாள்.

பேசும் போது இருந்த தாயின் தவிப்பும், குழைவும், கனிவும் அவள் பேசி முடிந்தவுடன் காணாமல் போய் மீண்டும் அவள் முகத்தில் இறுக்கம் ஆட்சி செய்தது.

சிறிது நேரத்தில் தான் இறங்க வேண்டிய இடம் வர, இருக்கையிலிருந்து எழுந்து படியின் அருகில் போய் நின்றான் பிரதாபன்.

அவளும் அவன் பின்னால்தான் அப்பொழுது நின்றிருந்தாள்.

இருவரும் ஒரே நிறுத்தத்தில் இறங்கினர்.

அவள் அவனைத் தாண்டி விறுவிறுவென்று நடந்து ஒரு வங்கியின் உள் நுழைந்தாள்.

“என்னபா, இன்னைக்குக் கொஞ்சம் லேட் போல?” அவள் தன் இருக்கையில் சென்று அமர்ந்ததும், பக்கத்து இருக்கை பெண் கேட்க, லேசாக மட்டும் புன்னகைத்துக் கொண்டாள் அவள்.

“இன்னைக்குப் புது மேனேஜர் வருவார்னு நான் அரக்கபறக்க அரைமணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன். சார்தான் இன்னும் வரலை. எப்ப வருவார்னு தெரியலை…” என்று பக்கத்து இருக்கை பெண் தொடர்ந்து பேசிக் கொண்டே போனாள்.

“புது மேனேஜர் வந்துட்டார். வேலை பாதிக்காத மாதிரி ஒவ்வொருத்தரா வந்து அவரை மீட் பண்ண சொன்னார்…” என்று அட்டன்டர் சொல்லிவிட்டு சென்றார்.

மற்றவர்கள் சிறு சிறு இடைவெளியில் ஒவ்வொருவராக உள்ளே சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வெளியே வர, அவளால் மட்டும் உடனே செல்ல முடியவில்லை.

அவளின் கவுண்டரில் சந்தேகம் கேட்டுக் கொண்டு சிலர் நிற்க, அவள் தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். இரண்டு மணி நேரம் கடந்துதான் அவளால் மேனேஜரின் அறைக்குச் செல்ல முடிந்தது.

“வணக்கம் சார், நான் ரஞ்சனா. செக் செக்சனில் இருக்கேன்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை நிமிர்ந்து பார்த்தான் அந்த வங்கிக்குப் புதிதாக மாற்றல் வாங்கி வந்திருக்கும் மேனேஜர் பிரதாபன்.

பேருந்தில் பார்த்த பெண் என்று அவன் மூளையில் ஒரு நொடி மின்னி மறைய, லேசாகத் தலையைச் சாய்த்து அவளின் அறிமுகத்தை ஏற்றுக் கொண்டான்.

வேலையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசியதுடன் அவர்களின் அறிமுகப்படலம் முடிவடைந்தது.

அன்று மாலை வேலை நேரம் முடிந்து பிரதாபன் கிளம்பிய போது அவனின் அலைபேசி அழைக்க, யாரென எடுத்துப் பார்த்தான்.

அவனின் நண்பன் சங்கர் பெயரை பார்த்ததும், மீசைக்கடியில் துளிர்த்த புன்னகையுடன் அழைப்பை ஏற்றான்.

“என்ன பிரபா இன்னைக்குப் பேங்க் போனீயா?” என்று சங்கர் விசாரிக்க,

“ம்ம், அங்கேதான் இருக்கேன்…” என்றான் அமைதியான குரலில்.

“சரி பிரபா, நான் சித்தப்பாகிட்ட பேசிட்டேன். அவர் உனக்கு வீடு ரெடி பண்ணி வச்சிட்டார்‌. அட்ரஸ் வாட்ச்அப்பில் அனுப்புறேன். ஆறு மணி போல் போய்ப் பார்…” என்றான் சங்கர்.

“இல்லை சங்கர், மதுரையிலிருந்து வரும் போதே கார் மக்கர் பண்ணுச்சு‌. இங்கே வந்ததும் சர்வீஸ் விட்டுட்டேன். ஆறு மணிக்கு காரை வாங்கிக்கச் சொல்லியிருக்கான். நான் போய் வாங்கிட்டு ஏழு மணி போல் வீட்டை பார்க்க போறேன். நீ உன் சித்தப்பாகிட்ட சொல்லிடு…” என்றான்.

“நான் சித்தப்பா நம்பர் தர்றேன். நீயே சொல்லிடு…” என்று சங்கர் அழைப்பை துண்டிக்க,

சங்கர் கொடுத்த நம்பருக்கு அழைத்துக் கொண்டே, பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.

நிறுத்தத்தில் ஆட்களோடு ரஞ்சனாவும் நின்றிருந்தாள்.

அவனைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அவள் பேருந்தின் வருகையை எதிர் நோக்கி திரும்பி கொள்ள, அவனின் கவனம் எல்லாம் போன் பேசுவதில் இருந்தது.

பேருந்து வர, இருவரும் அதில் ஏறினர். ரஞ்சனா தனது வழக்கமான நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள, அதையும் தாண்டி வேறு நிறுத்தத்தில் இறங்கிய பிரதாபன், தனது காரை விட்டிருந்த மெக்கானிக் கடைக்குச் சென்று காரை வாங்கிக் கொண்டு சங்கரின் சித்தப்பா சொன்ன முகவரிக்குச் சென்றான்.

அது ஒரு அடுக்குமாடி கட்டடமாக இருக்க, தரைதளத்தில் கார் பார்க்கிங் இருந்தது. அதில் காரை நிறுத்திவிட்டு இறங்கி மின்தூக்கியில் இரண்டாம் தளம் சென்றான்.

இரண்டாம் தளத்தில் எதிர் எதிரே இரண்டு பிளாட் இருந்தது. அதில் ஒன்றின் அழைப்பு மணியை அழுத்த, கதவை திறந்து கொண்டு வந்தார் ஒரு முதியவர்.

பிரதாபன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, அவரோ தன்னை ராமநாதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “சங்கர் சொன்னான் தம்பி. மதுரையில் இருந்து இங்கே உள்ள பேங்குக்கு மாற்றல் வாங்கி வந்திருக்கீங்களாமே? இந்தப் பில்டிங்கில் எங்களுக்கு இரண்டு பிளாட் இருக்கு தம்பி. நீங்க பார்க்க வந்த பிளாட் மூனாவது மாடியில் இருக்கு. வாங்க போய்ப் பார்ப்போம்…” என்று அவனை அழைத்துக் கொண்டு மின்தூக்கியில் ஏறினார்.

“தம்பிக்கு பேமிலி எல்லாம்?” என்று பெரியவர் கேட்க,

“சங்கர் சொல்லலையா?” என்று அமைதியாகக் கேட்டான்.

“சொன்னான் தம்பி…” என்று சிரித்து மழுப்பினார்.

அதற்குள் மூன்றாம் தளம் வந்துவிட, மேலேயும் அதே போல் எதிர் எதிரே இரண்டு வீடுகள் இருந்தன.

அதில் ஒரு பிளாட்டின் கதவை திறந்தவர், “இந்தப் பிளாட்டில் வாடகைக்கு இருந்தவங்க கொஞ்ச நாள் முன்னதான் காலி பண்ணினாங்க. அடுத்து ஒரு நல்ல பேமிலி கிடைக்கத்தான் காத்திருந்தோம். ஆனால், சங்கர் என் பிரண்ட்க்கு வீடு வாடகைக்கு வேணும் சித்தப்பா. கல்யாணம் ஆகாத தனிக்கட்டைன்னு சொல்லவும், எங்களுக்குத் தயக்கம்தான். ஆனால், சங்கர் உங்களுக்காக ரொம்பச் சிபாரிசு பண்ணினான். எந்தப் பிரச்சினையும் வராது. உங்களை நம்பி தங்க வைக்கலாம்னு சொன்னான். அதான் அவனுக்காக நாங்களும் உங்களுக்கு வீடு வாடகைக்கு விட முடிவு பண்ணினோம்…” என்று பெரியவர் வீட்டின் ஒவ்வொரு விளக்காகப் போட்டுக் கொண்டே அவனிடம் விளக்கினார்.

பிரதாபன் எந்தப் பிரதிபலிப்பையும் காட்டவில்லை. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை மட்டும் ஆராய்ந்தான்.

“இந்தப் பில்டிங்கில் மொத்தம் ஆறு மாடி தம்பி. ஒவ்வொரு மாடியிலும் இரண்டு பிளாட் இருக்கு. லிப்ட் வசதி, தண்ணி வசதி, பவர் பேக்கப் எல்லாமே இருக்கு. கடைகளும் பக்கத்திலேயே இருக்கு. பஸ் வசதியும் உண்டு. ரொம்பத் தூரம் நடந்து போய்ப் பஸ் பிடிக்க வேண்டிய சிரமம் எல்லாம் நம்ம ஏரியாவில் இல்லை. வீட்டு வேலைக்கு ஆள் எதுவும் தேவைன்னா என்கிட்ட சொன்னால் ஏற்பாடு பண்ணிடுவேன்…” என்று பெரியவர் அடுக்கிக் கொண்டே போனார்.

“அட்வான்ஸ், வாடகை எல்லாம் எவ்வளவுன்னு சொல்றீங்களா?” என்று பிரதாபன் கேட்க, பெரியவர் விவரம் தெரிவித்தார்.

“தம்பி எப்போ இங்கே வர்றீங்க? சாமான் எல்லாம்?” என்று கேட்டார்.

“இப்ப ஹோட்டலில் தங்கியிருக்கேன். சாமான் எல்லாம் பெருசா இல்லை. இனிதான் வாங்கணும். உங்களுக்குப் பிரச்சினை இல்லைனா, நாளைக்கே நான் இங்கே வர்றேன்…” என்றான்.

“வீடு காலியாத்தானே இருக்கு. வாங்க தம்பி…” என்ற பெரியவர், “சமையல், வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் வேணுமா தம்பி? இப்ப சொல்லி வச்சால்தான் ஒரு பத்து நாளைக்குள் கிடைப்பாங்க…” என்றார்.

“வேண்டாம். என் வேலையை நானே பார்த்தால்தான் எனக்குப் பிடிக்கும்…” என்று முடித்துக் கொண்டான் பிரதாபன்.

“தம்பி தனிக்காட்டு ராசாவா வாழ விரும்புறீங்க போலிருக்கு…” என்று சிரித்தார் பெரியவர்.

பிரதாபனின் உதட்டின் ஓரம் ஒரு மெல்லிய அலட்சிய புன்னகை தவழ்ந்தது.

“நாளைக்கு ஈவ்னிங் வர்றேன்…” என்றான்.

“வாங்க தம்பி. அதுக்குள்ள நான் ஆள் விட்டு வீட்டை துடைச்சு வைக்கிறேன்…” என்று பேசிக் கொண்டே வெளியே வந்து கதவை மூடினார்.

இருவரும் மின்தூக்கியை நோக்கி நடக்க, மின்தூக்கியின் அருகில் இருந்த படியில் ஒரு பெண் குழந்தை அமர்ந்திருந்தாள்.

“என்ன பாப்பா இங்கே உட்கார்ந்திருக்க?” என்று பெரியவர் கேட்க, பிரதாபனும் அந்தக் குழந்தையைப் பார்த்தான்.

ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம்.

பெரியவருக்குப் பதில் சொல்லாமல் அந்தக் குழந்தை முகத்தைத் திருப்ப, “அட, பாப்பாவுக்குக் கோபமா?” என்று கேட்டார்.

அவள் மேலும் கீழும் தலையை ஆட்ட, “பாப்பாக்கு யார் மேல கோபம்?” எனக் கேட்டார்.

“அம்மா…” என்றாள் குழந்தை.

“அடடா! அம்மா மேலயா கோபம்? அம்மா மேல எல்லாம் கோபப்படலாமா? நீங்கதான் சமத்து பொண்ணாச்சே? ஓடு… ஓடு… அம்மாகிட்ட பழம் விட்டுக்கோ…” என்றார்.

“மாட்டேன்…” என்று அவள் தலையைச் சிலுப்பிக் கொள்ள,

“இந்த நேரம் இங்கே தனியா உட்காரக் கூடாது பாப்பா…” என்றார்.

“நான் போக மாட்டேன்…” என்று இரண்டு கன்னத்திலும் கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

குழந்தையின் செயலும், பேச்சும் சுவாரசியத்தைத் தர, கண்ணில் இரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரதாபன்.

“இந்தப் பாப்பாவுக்கு எப்பவும் கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்திதான் தம்பி. நான் அவங்க அம்மாகிட்ட சொல்லி விட்டுட்டு வர்றேன். நீங்க கிளம்புங்க…” என்று பெரியவர் சொல்லவும், குழந்தை அப்போதுதான் இன்னொருவரும் அங்கே இருக்கிறார் என்பதைப் பார்த்தவள், பிரதாபனை யார் அது புதிதாக என்பது போல் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

அந்தப் பார்வையும் கூட அவனைக் கவர, உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் அவளைப் பார்த்து தலையசைத்துவிட்டு மின்தூக்கி பக்கம் சென்றான்.

பெரியவர் அந்த எதிர் வீட்டு காலிங்பெல்லை அழுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே மின்தூக்கியின் பட்டனை அழுத்தினான்.

மறுநாள் அலுங்காமல் காரில் வந்து வங்கியில் இறங்கினான் பிரதாபன்.

ஊழியர்கள் அவனைப் பார்த்து காலை வணக்கம் வைக்க, தலையசைத்து ஏற்றுக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.

ஒருவர் லோன் விஷயமாக அவனைப் பார்க்க வர, அது சம்பந்தமாகப் பேசினான்.

அவர் பேசி விட்டுச் சென்றதும் கணினியில் சில விவரங்களைப் பார்க்க ஆரம்பித்தான். அப்போது அறைக்கு வெளியே சத்தம் கேட்க, அட்டன்டரை அழைத்தான்.

ஆனால், அட்டன்டர் வராததுடன் சத்தமும் சற்று உயர்ந்து கேட்க, நெற்றியை சுருக்கியபடி வெளியே வந்து பார்த்தான். செக் செக்சன் பக்கம் ஏதோ கூட்டம் போல் இருக்க, விறுவிறுவென்று அங்கே சென்றவன், “இங்கே என்ன பிரச்சினை?” என்று ரஞ்சனாவிடம் கேட்டான்.

“சார், இவர் ஒரு த்ரீ லேக்ஸ்க்கு செக் கொண்டு வந்து கொடுத்துப் பணம் கொடுக்கச் சொன்னார். ஆனால், அவர் கொண்டு வந்த செக் அக்கவுண்ட்டில் பணம் இல்லை. அதைச் சொன்னால், புரிந்து கொள்ளாமல் நாமதான் ஏமாத்துறோம்னு சொல்றார்…” என்று ரஞ்சனா விவரம் தெரிவிக்க, அவள் சுட்டிக்காட்டிய ஆளைப் பார்த்தான்.

தொள தொள பேண்ட் சட்டையில் இருந்த அந்த மனிதனை பார்த்தவன், “அவரையும் அழைச்சுட்டு என் ரூமுக்கு வாங்க…” என்று ரஞ்சனாவிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

சில நொடிகளில் ரஞ்சனாவும், அந்த மனிதனும் வர, ரஞ்சனாவிடமிருந்து அந்தச் செக்கை வாங்கியவன், அந்த மனிதனை அமரச் சொன்னான்.

“உங்க பெயர் என்ன?” பிரதாபன் கேட்க,

“என் பேரு டேவிட்டு…” என்றான் அவன்.

“மிஸ்டர் டேவிட், இந்தச் செக் உங்களுக்கு யார் கொடுத்தது?” என்று விசாரித்தான்.

“இது பாலு கொடுத்தான் சார். நான் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவேன். இந்தப் பாலு என்கிட்ட மூனு லட்சம் கடன் வாங்கிட்டு அதைத் தராமல் இழுத்தடிச்சான். நான் ஒரு சவுண்ட் விட்டு கேட்கவும், இந்தச் செக்கை நீட்டினான். நானும் இங்கே வந்து கொடுத்துப் பணம் கேட்டால் இல்லைன்னு சொல்றாங்க. எனக்குச் செக் எல்லாம் பழக்கம் இல்லை. எனக்கு ஒரு விவரமும் புரியலை. இதைக் கொஞ்சம் என்னன்னு பார்த்துப் பணத்தைக் கொடுங்க சார்…” என்றான் டேவிட்.

பிரதாபன் ரஞ்சனாவை பார்க்க, “அந்தப் பாலு அக்கவுண்ட் செக் பண்ணிட்டேன் சார். அக்கவுண்டில் ஐம்பதாயிரம்தான் இருக்கு. ஆனால், மூனு லட்சத்துக்கு இவருக்குச் செக் கொடுத்திருக்கார்…” என்றாள்.

அந்தச் செக்கில் இருந்த விவரங்களை வைத்து தனக்கு முன் இருந்த கணினியிலும் பரிசோதித்துப் பார்த்தவன், உதட்டை பிதுங்கியபடி டேவிட்டின் புறம் திரும்பினான்.

“இங்கே பாருங்க டேவிட், அந்தப் பாலு அக்கவுண்டில் மூனு லட்சம் பணம் இல்லை. அவ்வளவு பணம் இல்லாமல் செக் கொடுப்பது சட்டப்படி குற்றம், ஏமாற்று வேலை. இப்ப நீங்க போலீசில் தகவல் கொடுங்க. அவங்க வந்து அந்தப் பாலுவை விசாரிப்பாங்க…” என்றான் பிரதாபன்.

“அடேய் பாலு, என்னை ஏமாத்திட்டியா?” என்று கோபப்பட்டான் டேவிட்.

அவனுக்குத் தேவையான விவரங்களைச் சொல்லி அனுப்பி வைத்த பிரதாபன், “எதுவும் பிரச்சினைனா கஸ்டமரை என் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க ரஞ்சனா. வெளியே இருந்து கத்த விடாதீங்க…” என்று கடிந்து கொண்டான்.

“சாரி சார், நான் இங்கே வர முயற்சி பண்ணினேன். ஆனால், என்னைத் தடுத்து அவர் பாட்டுக்கு கத்த ஆரம்பிச்சுட்டார்…” என்று வருத்தம் தெரிவித்து விட்டு வெளியே சென்றாள்.

அன்று மாலை தான் பார்த்திருந்த வாடகை வீட்டிற்கு வந்தான் பிரதாபன். காலையிலேயே வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்திருக்க, அதை மதியமே டெலிவரி செய்திருந்தனர்.

பெரியவரை அவர்களுக்குச் சாவியை மட்டும் கொடுக்கச் சொல்லியிருந்தான்.

அனைத்து பொருட்களும் சரியாக வந்துவிட்டதா என்று பார்த்து அடுக்கி வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே மின்தூக்கியில் அவன் ஏறிய போது, ரஞ்சனாவும் அதற்குள் நுழைந்தாள்.

இருவருமே அடுத்தவரை அங்கே எதிர்பார்க்காமல் “நீங்க இங்க?” என்று ஒன்று போல் கேட்டனர்.

“இங்கேதான் என்னோட வீடு…” என்று பதிலும் ஒன்று போல் சொல்ல, அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் தலையசைத்துப் பேச்சை முடித்துக் கொண்டனர்.

பிரதாபன் இரண்டாம் தளம் சென்று பெரியவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு மூன்றாம் தளம் சென்ற போது, எதிர் வீட்டிலிருந்து வெளியேறிய ஒரு முதிய பெண்மணி, “நான் கிளம்புறேன் ரஞ்சனாமா. சின்னவனுக்கு இப்பத்தான் பால் காய்ச்சி கொடுத்தேன். பெரியவள் மட்டும் நீ வந்த பிறகுதான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டா…” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

“நான் பார்த்துக்கிறேன் லதாமா…” என்ற ரஞ்சனாவின் குரலில் பிரதாபன் அவளைப் பார்த்தான்.

இடையில் ஒரு ஆண் குழந்தையை இடுக்கிக் கொண்டு, முந்தானையைப் பிடித்துக் கொண்டிருந்த பெண் குழந்தையின் தலையை தடவி விட்டபடி நின்று கொண்டிருந்தாள் ரஞ்சனா.