பாசமென்னும் பள்ளத்தாக்கில் – 08

டெல்லி பயணம் முடித்து வீடு திரும்பியவன், “மதுகுட்டி! மதுகுட்டி” என்று ஆசையாக அழைத்தபடி வேகமாக வீட்டை வலம்வந்தான்.

சமையலறை வாயிலில் அமைதியாக நின்றுகொண்டிருந்த சாவித்ரி, மகன் கண்களில் மின்னிய தவிப்பை ரசித்தாள்.

“எங்க மா மதுமிதா?” சிடுசிடுத்தான் குணா.

நெற்றி வியர்வையை பொறுமையாக முந்தானையில் துடைத்துக்கொண்டு, “அவ இங்க இருந்தாதானே உன் குரல் கேட்டு ஓடி வருவா!” சொன்னவளின் முகத்தில் பூரிப்பு.

“என்னது வீட்டுல இல்லையா?” மாலை ஆறு மணிக்கு மேலாகிறதே என்று கடிகாரத்தைப் பார்த்துப் பதறினான்.

“உன் பொண்ணு சரியான ஆள்மயக்கி டா! ரெண்டு நாளா சுதாவோட அவங்க வீட்டுல தான் முழுநேரமும் இருக்கா; பாட்டிகிட்ட தூங்க மட்டும்தான் வருவா! பேத்தி புராணம் பாடினாள்.

“சுதா வீட்டுக்குப் போயிருக்காளா? குழந்தையை வெளியாளுங்க கிட்ட விடாதேன்னு சொன்னேன்ல!” எரிந்து விழுந்தான் குணா.

“வெளியாளுங்களா!” ஏளனமாகச் சிரித்தவள், “சுதா நம்ம யமுனா கூடப்பிறந்தவ…கிட்டத்தட்ட மதுமிதாவுக்கு அம்மா மாதிரி!” உறவின் ஆழத்தை மகனுக்குப் புரியவைத்தாள்.

அதற்கெல்லாம் அசராதவன் வாசலை நோக்கி வேகநடையிட,

“நில்லுடா குணா! சுதாவே எட்டு மணிக்குக் குழந்தையை அழைச்சிட்டு வந்திடுவா!” மகன் வேகத்திற்கு ஈடுகொடுத்துப் பின்னால் ஓடினாள் சாவித்ரி.

சுதா இருசக்கர வாகனத்தில் தான் வழக்கமாக வருவாள் என்று அறிந்தவன்,

“டூவீலர்ல அழைச்சிட்டு வந்தா குழந்தைக்கு டஸ்ட் அலர்ஜி ஆகும்னு தெரியாதா உங்களுக்கு!” குறைக்கூற,

மகன் செய்யும் ஆர்ப்பாட்டத்தை கண்டு கழுத்தை நொடித்தவள்,

“ஊர் உலகத்துலேயே நீ மட்டும்தான் அதிசயமா பிள்ளை பெத்தா மாதிரி பேசுற! விழுந்து எழுந்து வளர்ந்தால் தான் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!” நிதானமாக அனுபவப்பாடம் எடுத்தாள் சாவித்ரி.

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நகர்ந்தான் குணா.

சாவித்ரியும் மகனை விடுவதாக இல்லை.

இரண்டு நாட்களாகச் சுதாவிடம் கண்கூடாகப் பார்த்தப் பொறுப்புணர்ச்சியைப் பற்றிப்  பெருமையடித்தவள், 

“சுதாவுக்கும் உனக்கும் வயசு வித்தியாசம் மட்டும் அதிகமா இல்லேன்னா, அவளையே உனக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்து வெச்சிருப்பேன்!” பேச்சோடு பேச்சாக, மனதின் ஆசையை எடுத்துரைத்தாள்.

அம்மாவின் எண்ணோட்டத்தில் திடுக்கிட்டவன்,

“இப்போ எதுக்கு புலம்புற! இனி என் வாழ்க்கையில் எல்லாமே மதுமிதா மட்டும்தான்; அவளுக்கும் அப்படித்தான். எங்களுக்கு நடுவுல யாரும் வர வேண்டாம்.” தீர்மானமாக உரைத்தான்.

“யாரும் வேண்டாம்னா, என்னை ஏன் ஊருக்கு வர சொல்ற; உன் மகளைப் பார்த்துக்கச் சொல்லற?” தர்க்கம் செய்தவள், ஒரு ஆண்மகன் காலத்திற்கும் பெண் குழந்தையைத் தனியாக வளர்ப்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாக வாதாடினாள்.

“ஒரு பாட்டியா, தாத்தாவா, சித்தியா என் குழந்தைகிட்ட தாராளமா உறவாடுங்க. ஆனா யாரும் என் யமுனா இருந்த இடத்தை நிரப்ப முயற்சி செய்யாதீங்க! அழுத்தமாய் தன் முடிவை சொல்லி புறப்பட்டான்.

மறுபடியும் மாமன் வீட்டிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி நொந்தான். என்ன நடந்தாலும், நிதானம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டான்.

வரவேற்பறையில் யாரும் இல்லாததைக் கவனித்தவனுக்கு மதுமிதாவின் சிணுங்கல்கள் மட்டும் தெள்ளத்தெளிவாகக் காதில் விழுந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு குழந்தையின் முகத்தைத் தரிசிக்கும் ஆவலில், மழலைமொழி கேட்கும் திசை நோக்கி நடந்தான்.

“இப்போ மீன் மெல்ல மெல்ல மதுகுட்டி கை மேல ஏறி கழுத்துல கிச்சுகிச்சு மூட்டுதாம்!”

நீர் நிரம்பிய அகன்ற வாளி ஒன்றில் அமர்ந்திருக்கும் மதுமிதாவிடம் சொல்லிகொண்டே சோப்பை மெதுமெதுவாக நகர்த்தினான் கிஷோர்.

அதில் குதூகலம் அடைந்த குழந்தைக் கலகலவென்று சிரிக்க, கிஷோரின் மென்பேச்சையும் விளையாட்டையும் ரசித்த சுதாவின் முகம் நாணத்தில் சிவந்தது.

தன்னவளை பார்வையால் ஊடுருவியவன், “இப்போ மீன் அப்படியே மதுகுட்டி கழுத்துலேந்து குதிச்சு, சுதா சித்தியை, கிச்சுகிச்சு மூட்டுமாம்!” அவன் கரங்கள் தன்னவளின் கழுத்தில் குறும்புகளைத் தொடர,

அச்சமயத்தில் குணா அறைக்குள் நுழைந்தான்.

அவன் முகமும் சிவந்தது; கோபத்தால்!

“சுதா! என்ன செய்யற?” வீடே அதிரும் அளவிற்குக் குணா சீற்றம் கொள்ள,

அதில் திடுக்கிட்டு எழுந்தவள், “மாமா…மாமா! பீச்சுக்குப் போயிட்டு வந்தோம்…குழந்தை உடம்பு முழுக்க ஒரே மண்ணு…அதான்…” திக்கித் திணறினாள்.

“நீங்க பார்க்கு பீச்சுன்னு ஊர்சுற்றி லவ் பண்ண, என் பொண்ணு என்ன விளையாட்டுப் பொம்மையா!” கடிந்துபேசி கிஷோரை முறைத்தவன், மதுமிதாவை வாளியில் இருந்து தூக்கிக்கொண்டான்.

வலதுபுறத்தில் இருந்த துண்டால், குழந்தையைப் போர்த்தியவனுக்கு, கிஷோர் சற்றுமுன் குழந்தையிடம் செய்த சிலுமிஷங்கள் கண்முன் வர, அவன் மேல் எரிச்சல் அதிகமானது.

குணாவின் மனநிலை அறியாதவள் தாழ்ந்த குரலில், “குழந்தையை விடுங்க மாமா! அவ இன்னும் குளிச்சு முடிக்கல்ல!” என்று கையை நீட்டினாள்.

“நீங்க குளிக்க வெச்ச அழகத்தான் நான் பார்த்தேனே!” ஏளனமாக சுட்டிக்காட்டி, அவர்களை வெளியே போகும்படி கர்ஜித்தான்.

இளஞ்ஜோடிகள் அமைதியாக நகர குழந்தையை இறக்கிவிட்டு முத்தமிட்டவன்,

 “மன்னிச்சிரு டா மதுகுட்டி! அப்பா இனிமே உன்னவிட்டு எங்கேயும் போகமாட்டேன் செல்லம்!” என்றான்.

குழாவை திறந்து, வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பினான்.

குழந்தைக்கு உபயோகித்த சோப், குளிர்ந்த தண்ணீர், அசட்டுத்தனமான விளையாட்டு என்று அவர்கள் அலட்சியத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே குழந்தையைக் குளிப்பாட்டினான்.

யார் குளிப்பாட்டினால் என்ன என்பது போல, மது எவ்வித கவலையுமின்றி “மா…மா…மாமா” என்று ஆனந்தமாக நீராடினாள்.

பத்து நிமிடத்தில் குழந்தையுடன் வெளியே வந்தவனுக்குப் பிரச்சனையை வளர்க்க விருப்பமில்லை. அமைதியாக அவன் வாசலை நோக்கி நடக்க,

“உன் மனசுல என்ன டா நெனச்சுகிட்டு இருக்க குணா?” அவனை வழிமறித்த மீனாட்சி, “ஒழுங்கா மாப்பிள்ளைகிட்ட மன்னிப்புக் கேளு!” ஆணையிட்டாள்.

அதில் தன்மான சிங்கம் விழித்துக்கொண்டது.

“மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்க அத்தை! நான் இந்த வீட்டு மூத்த மருமகன்; அதை மறந்துடாதீங்க!”, தன் உரிமையை நிலைநாட்டி,

“உங்க மாப்பிள்ளை யாரு என் மகளைக் குளிப்பாட்ட…அதான் கேள்விகேட்டேன்!” குழந்தையிடம் அவன் நடந்துகொண்டவிதம் அருவருப்பாக இருந்ததாகக் குறைகூறினான்.

கிஷோர் முகத்துக்கு எதிரேயே குணா அவதூறாகப் பேச, அதில் மீனாட்சியின் கோபம் தலைக்கேறியது.

“உலகமகா ராணி இவ!” குழந்தையின் கன்னத்தில் இடித்தவள், “மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையைப் பெத்துட்டு உனக்கு இவ்வளவு தலைக்கனம் ஆகாது டா!” மீனாட்சி கோபத்தில் வார்த்தையை விட்டாள்.

உறைந்து நின்றான் குணா.

“அது…மாமா…மதுமிதா அம்மாவை தெரியாம கடிச்சிட்டா!” சுதா மென்றுவிழுங்க,

மீனாட்சியின் வலது கை மணிக்கட்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மெல்லிய வெள்ளைத் துணியைக் கவனித்தவனின் உதடுகள் கர்வத்தில் வளைந்தது.

“என் பொண்ணு புத்திசாலி அத்தை! அவளுக்கு யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு தெரியும்!” பெருமிதத்துடன் குழந்தையின் கன்னத்தோடு கன்னம் உரசினான்.

“அப்படிச் சொல்லி இன்னும் எத்தனை நாளைக்கு ஊர ஏமாத்தப் போற! சுதா இந்த ரெண்டு நாளுல எல்லாம் கண்டுபிடிச்சிட்டா!” சலிக்காமல் வாதாடி அவனை மடக்கினாள் மீனாட்சி.

“ஓ! எங்களை வேவு பார்க்கத்தான் வீட்டுக்கு வந்தியா!” சுதாவை சுட்டெரிக்கும் பார்வையால் வீழ்த்தி மீனாட்சி பக்கம் திரும்பியவன்,

 “இன்னும் உங்க பொண்ணு கல்யாணம் முடியல! மூணு வாரத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம்!” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான்.

பெண்ணின் திருமணம் என்றதும் மீனாட்சியின் சப்தநாடியும் அடங்கியது.

இறுமாப்புடன் வெளியேறும் மாமன் அருகே ஓடி வந்தாள் சுதா.

“மாமா! நான் வேவு பார்க்க எல்லாம் வரல்ல; அத்தை, மதுமிதாவிற்கு மருந்து கொடுக்கும் போது சொன்னதை, அம்மாகிட்ட சாதாரணமா சொன்னேன். கோபத்துல அம்மா அதை மிகைப்படுத்திப் பேசுறாங்க!” என்றவள்,

அவன் கைகளை இறுகப் பிடித்து, “யமுனா அக்கா இல்லாத குறை தீர்த்து, நீங்கதான் எங்களோட கல்யாணத்த முன்ன நின்னு நடத்தணும் மாமா!” கெஞ்சலாகக் கேட்டாள்.

கிஷோரும் அமைதியாக, சுதா சொல்வதற்கு எல்லாம் மௌனமாக தலையசைத்தான்.

‘இப்படியொரு தலையாட்டி பொம்மையா!’ கிஷோரை பார்த்து நக்கலாக சிரித்தவன், சுதாவின் கன்னத்தில் மிருதுவாகத்  தட்டிக்கொடுத்து, சம்மதம் என்று கண்சிமிட்டினான்.

பெண்மானின் வஞ்சகப் பேச்சை நம்பி தலையாட்டிவிட்டுப் போகும் இவனுக்கு, கடல் உள்வாங்குவது சுனாமியாகப் பொங்குவதற்கு என்பதை யார் சொல்லி புரியவைப்பது.

காரில் ஏறி அமர்ந்தவனுக்கு அஷ்வின் நியாபகம் வந்தது. நண்பனிடம் பேசினால் மனபாரங்கள் குறையும் என்று நினைத்தான்.

“பாட்டிய கடிக்கற! இரு! அஷ்வின் மாமாகிட்ட சொல்றேன்!” அருகில் அமர்ந்து கைத்தட்டும் மதுமிதாவிடம் கண்சிமிட்டி, அஷ்வினை அழைத்தான்.

“அஷ்வின்! இன்னைக்கு மாமா வீட்டுல….” குணா தொடங்கிய மறுகணமே,

“டேய்! உன்ன பேஷண்ட்டா(பொறுமயா) இருக்கச் சொன்னா, இப்படிப் பேஷண்ட்(நோயாளி) மாதிரி நடுஜாமத்துல போன் செஞ்சு தொல்லை செய்யறியே!

‘மாமன் வீடு’ என்ற வார்த்தையிலேயே நண்பனின் மனதை துல்லியமாகக் கணித்தான் அஷ்வின்.

அமெரிக்காவில் அதிகாலை என்று உணர்ந்தவன் அசடு வழிந்தானே தவிர, தொந்தரவு செய்கிறோம் என்ற தயக்கம் சிறிதுமின்றி மனதிலிருந்த அத்தனையும் கொட்டித் தீர்த்தான். குறிப்பாகக் கிஷோரைப் பற்றி புலம்பினான்.

“டேய்! அமெரிக்காவில் தான்டா மற்றவங்களோட குழந்தையை யாரும் அனாவசியமா தொட மாட்டாங்க…நம்ம ஊருல இதெல்லாம் சகஜம் நண்பா!” அஷ்வின் சலித்துக்கொள்ள,

“நீதானே டா மதுமிதாவை யாரும் தேவையில்லாம தொட்டுப்பேச அனுமதிக்காதன்னு சொல்லுவ…வெவ்வேறு ஊரா இருந்தாலும் மனுஷங்க, மனசுல என்ன நெனச்சுகிட்டு பழகுறாங்கன்னு தெரியாதுல!” பெண் குழந்தை, அதுவும் வாய்பேச இயலாத நிலையில் என்று குணா வருந்த,

“புரியுது டா குணா! மனச போட்டு குழப்பிக்காத! இன்னும் கொஞ்சம் நாள் தானே!”

ஊருக்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று, நண்பனின் உண்மை உணர்வுகளை மதித்துப் பேசினான்.

குழந்தை மீனாட்சியை கடித்ததுப் பற்றியும் விளக்கினான்.

அதுவும் அவள் மூன்று நாட்களாகக் குணாவைப் பிரிந்திருந்த ஏக்கத்தில் செய்திருப்பாள் என்று மருத்துவரீதியாக விவரித்தான்.

நண்பனிடம் பேசியதில் லேசான மனதுடன் வீடு திரும்பினான் குணா.

சாவித்ரி நித்தியம் சுதாவைப் பற்றி பறைசாற்றினாலும் பொறுமையாகச் செவிசாய்த்தான் குணா. அவன் கல்லூரி வேலையாக வெளியே சென்ற போதெல்லாம், சுதா வீட்டிற்கு வந்து மதுமிதாவை அக்கறையாகக் கவனித்துக்கொண்டாள்.

சுதாவின் வேண்டுகோளுக்கு இணங்கி கிஷோர் குணாவிடமிருந்து தள்ளியே இருந்தான்.

அன்று குணா முழுநேரமும் வீட்டில் இருந்தான். நற்பகல் பன்னிரண்டு மணி என்று சுவர் கடிகாரத்தில் பார்த்தவன், மதுமிதாவை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக சாவித்ரியிடம் கூறிப் புறப்பட்டான்.

“இப்போதான் மதுமிதா முழுநேரம் பள்ளிக்குப் போறாளே டா! மூணு மணிக்குத் தானே வருவா!” அலட்டலே இல்லாமல் சாவித்ரி நினைவூட்ட,

“மூணு மணி வரைக்குமா! என்னம்மா சொல்ற?” குழம்பினான் குணா.

சுதா உன்கிட்ட எல்லாம் விளக்கமா சொல்றேன்னு சொன்னாளே டா!” சாவித்ரி மென்றுவிழுங்க, அவளைப் புதிராகப் பார்த்தான் குணா.

பொறுமை ரேகைகள் மகன் முகத்திலிருந்து மெல்ல மெல்ல மறைய, சுதா அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்று புரிந்துகொண்டாள்.

“அது…குணா…பதட்டப்படாம கேளுடா!” பீடிகையுடன் தொடங்கினாள்.

“பள்ளிக்கூடத்தில் மதுமிதா ஒரு குழந்தையோட கையை கடிச்சிட்டா…”, என்றதும்,

மறுபடியுமா’ என்று மனதில் யோசித்தான்.

மகனின் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கி, அனைத்தையும் விளக்கினாள் சாவித்ரி.

அந்தக் குழந்தையின் அம்மா, மதுமிதா மனநலம் சரியில்லாதவள் என்று குறைக்கூறி, இப்படிப்பட்ட குழந்தைகளை, அவர்களுக்கென்று பிரத்யேகமான பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறினாள்.

அதைக்கேட்டும் மகன் முகத்தில் மரண அமைதி.

ஆழ்ந்து சுவாசித்து, சாவித்ரி மிச்சத்தையும் சொன்னாள்.

சுதாவும், சாவித்ரியும் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்க, அங்கு வந்த வேறொரு குழந்தையின் தாய் இவர்களுக்காகப் பரிந்துப் பேசியதை விளக்கினாள்.

அப்பெண் மதுமிதாவின் நிலைமையை மருத்துவரீதியாக விளக்கி, குழந்தை அப்பள்ளியிலேயே தொடர்ந்து பயில வேண்டும் என்றும், மற்ற குழந்தகளுடன் சகஜமாகப் பழகவிடுவது மிக அவசியம் என்றும் வாதாடி, தங்களை முழுநேரமும் குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் விடச்சொன்னதையும் குறிப்பிட்டவள்,

“சுதா! இதைப் பற்றி உன்கிட்ட ஒண்ணுமே சொல்லலியா!” வினவினாள்.

அச்சமயம் சுதா வீட்டிற்குள் நுழைய,

“என்னடி சுதா! குணாகிட்ட பள்ளியில் நடந்த எதுவுமே சொல்லலியா?” அதிகாரமாகக் கேட்டுத் தப்பித்துக்கொள்ள முயன்றாள் சாவித்ரி.

குணாவின் பார்வை சுதாவின் பக்கம் திரும்பியது.

“அப்படிப் பார்க்காதீங்க மாமா! சொல்லக்கூடாதூன்னு இல்ல!” இமைகளை தாழ்த்தி,

“அன்னைக்கே அம்மா மதுகுட்டியைப் பற்றி பேசியதற்குக் கோபப்பட்டீங்க…” அவள் இழுக்க,

மீனாட்சி பெயர் அடிப்பட்டால், மற்ற விஷயங்களும் வெளியே வருமே என்று பதறியவன்,

“சரி! சரி! விடு! இன்னும் பத்து நாட்கள் தானே!” தழைந்து போனான்.

பெண்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு நகர்ந்தனர்.

சுதாவின் திருமண நாளும் வந்தது. மெஹந்தி விழாவிற்கு அக்கா தைத்த மஞ்சள் நிற பாவாடை தாவணியில் ஜொலித்தாள் திருமகள்.

அம்மாவின் ஸ்பரிசம் அதில் உணர்ந்தாற் போல, மதுமிதா அன்று சுதாவின் மடியைவிட்டு இறங்கவே இல்லை. தாவணியின் தலப்பை இறுகப் பற்றிக்கொண்டு அவளுடனே ஐக்கியமானாள்.

அதைப் பார்த்தவன் குற்றவுணர்ச்சியில் குமுறினான். யமுனாவின் நினைவுகளைத் தந்து வாட்டியெடுத்தது அந்தப் புத்தாடை.

நடந்து முடிந்ததைப் பற்றி வருந்தி பிரயோஜனம் இல்லை என்று ஆசுவாசப்படுத்தி கொள்ள முயற்சித்தான் குணா. ஆனால் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் யமுனாவைப் பற்றி பரிதாபமாக விசாரிக்க, அவர்களுக்குப் பதில் சொல்லியே சலித்துப் போனான்.

சாவித்ரி பேத்தியை இடுப்பில் சுமந்து கம்பீரமாக மண்டபத்தை வலம் வர, மீனாட்சி பேத்தி இருக்கும் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை; வாங்கிய கடி அப்படி.

ஆண்கள் இருவரும் குணாவிடமிருந்து விலகியே இருந்தனர். அந்தப் பட்டியலில் கிஷோரும் சேர்ந்துகொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

சுதா பாசமாக அழைத்த ஒரே காரணத்திற்காகத் திருமண வைபோகத்தில் கலந்து கொண்டான் குணா. விழா செவ்வனே முடிந்து தம்பதிகள் புது வாழ்க்கையை நோக்கி நகர, குணாவும் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாரானான்.

மதுமிதாவை தக்க சமயத்தில் அனுமதித்து, தேவையான பயிற்சிகளைக் கொடுத்தப் பள்ளி மேலாளரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தான்.

மதுமிதாவை மடியில் அமர்த்தியபடி முன்சீட்டில் சாவித்ரி உட்கார்ந்ததும், காரை உயிர்ப்பித்தான் குணா.

“டேய் குணா! அங்க பாரு டா!” கூக்குரலிட்டவள்,

“அதோ! அந்தப் பொண்ணு தான் நம்ம மதுகுட்டிக்காக அன்னைக்கு அப்படி வாதாடினா!” என்று பள்ளி வாசலை நோக்கி கைகாட்டினாள்.

ஏறக்குறைய மதுமிதா வயதில் இருக்கும் குழந்தையின் கைப்பிடித்து பள்ளியை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ப காட்டன் சுடிதார், கூலிங்க் க்லாஸ் அணிந்து நிமிர்வாக நடந்தவளைப் பார்த்தாலே தைரியமான பெண் என்று கணிக்க முடிந்தது அவனுக்கு.

குணா அவளையே இமைக்காமல் பார்க்க, சாவித்ரி பேசினாள்.

“வா டா! உனக்கு அறிமுகம் செய்து வைக்கறேன். நீயும் ஒரு வார்த்தை நன்றி சொல்லு! அவ பேரு…பேரு…” யோசித்தவள்,

பவின்னு நினைக்கறேன்!” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் மா! நேரமாகது கிளம்பலாம்!” மறுத்தான் குணா.

“அதுக்கில்ல டா! அவ பேசினத பார்த்தா, பெரிய டாக்டரா இருப்பான்னு தோணுது…நம்ம மதுகுட்டிக்கு என்னன்னு நீயும் ஒரு வார்த்தை கேட்கலாமே!” ஆலோசனை சொன்னவளை அனல்பார்வை பார்த்தான்.

“மதுகுட்டிக்கு ஒண்ணுமில்ல!” தீர்கமாகச் சொல்லி வண்டியை செலுத்தினான்.

அம்மா சொற்படி ஒரு முறை அவளை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால், பிற்காலத்தில் அவளிடம் தன் வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதோ என்னமோ.

நாட்கள் நாழிகைகளாக, ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது. ஆறு மாதம் தனியாக இருக்கப்போகும் கணவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள் சாவித்ரி.

மாணிக்கம், மனைவி, மகள், மாப்பிள்ளை என அங்கு வர அண்ணன் குடும்பத்தை உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.

தங்களை வழியனுப்ப வந்திருப்பதாக நினைத்து சாவித்ரி அளவளாவிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்த குணாவின் முகம் தான் வியர்த்தது.

“மாமா! எனக்கு சீர் கொடுக்காமலேயே ஊருக்குக் கிளம்புறியே!” சுதா ஒரு தினுசாய் குழைய, குணா திகைத்துப் போனான்.

“உனக்கில்லாத சீரா! நீ என்ன கேட்டாலும் குணா கொடுப்பான் டா ராசாத்தி!” அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தவள், மகனின் நிலைமை புரியாமல் குந்திதேவி போல வாக்கு கொடுத்தாள்.

“ஓ அப்படியா அத்தை!” ஏளனமாக உரைத்தவள்,

“மதுமிதாவை என்கிட்ட விட்டுட்டுப் போக சொல்லுங்க!” நேரடியாக கேட்டாள்.

“என்னடி சொல்ற?” உறுமினான் குணா.

“ஆமாம்! குழந்தையைத் தத்தெடுக்கத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துட்டு தான் வந்திருக்கோம்!” என்று கிஷோர் ஆவணங்களை நீட்டினான்.

“என்ன மாப்பிள்ளை இது. மனவளர்ச்சி இல்லாத குழந்தையைத் தத்தெடுத்துக்க உங்களுக்கு என்ன தலையெழுத்தா?” அவர்கள் ரகசிய திட்டம் அறியாத மீனாட்சி பதற,

“நீங்க சும்மா இருங்க அத்தை! நாங்க தெளிவாக யோசிச்சிட்டு வந்திருக்கோம்!” கிஷோர் தீவிரக்குரலில் கூறி தடுத்தான்.

குணாவின் பதிலுக்காக அனைவரும் காத்திருந்தனர்.

 ‘இந்தத் தலையாட்டிப் பொம்மை இவ்வளவு வேலை செய்வானா!’ மனதில் அசைப்போட்டவன், நிதானம் கடைப்பிடி என தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டு,

“மதுமிதா என் குழந்தை; அப்பா நான் அவளுக்கு இருக்கேன் சுதா!” மென்மையாகப் பேசி அவள் கன்னத்தை வருடினான்.

“கையை எடுங்க மாமா! குழந்தைக்கு உங்ககிட்ட பாதுகாப்பு இல்ல! அதை நிரூபிக்கத் தேவையான எல்லா ஆதாரமும் வெச்சிருக்கேன்!” எகிறினாள் அவள்.

சித்தியின் குரல் கேட்டு பல்லாங்குழி பலகையோடு வெளியே வந்தாள் மதுமிதா.

ஆனால் அவள் அவளாக இல்லை. குழந்தை எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும், முகம், கை, கால் என வேகமாக சிவப்பு கொப்பளங்கள் பரவ,

“மா…மா…மாமா!” என்று குணாவின் மடியில் விழுந்து சரிந்தாள், அவர்களின் தேவதை.

உலகமே நீ தான் என்று உருகும் அவன்பின்,

மா…மா…மாமா என்று செல்வாளா–தமக்கை

உதிரத்தில் உதித்தவளே என்று உறவாடும் அவளிடம்,

மறந்த அன்னை முகம் காண்பாளா-தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…

Please Click Here to Comment!